எட்டாவது ஸ்கந்தம் - ஏழாவது அத்தியாயம்
(தேவாஸுரர்கள் க்ஷீரஸமுத்ரத்தை கடைகையில் அதினின்று உண்டான விஷத்தை ருத்ரன் பருகுதல்)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தத் தேவதைகளும், அஸுரர்களும், வாஸுகியிடம் சென்று, ஸமுத்ரம் கடைவதன் பலனான அம்ருதத்தில் உனக்கும் பாகம் கொடுக்கிறோமென்று ப்ரார்த்தித்து, அதற்கு ஒப்புக்கொண்டுவந்த அந்த ஸர்ப்பராஜனை, மந்தர பர்வதத்தில் கயிறாகச்சுற்றி, ஸந்தோஷத்துடன் அம்ருதத்தைக் கடைய ஆரம்பித்தார்கள்.
குருகுலாலங்காரனே! பகவான் விஷ ஜ்வாலைகளால் (நெருப்புக் கொழுந்துகளால்) தீவரமாயிருக்கின்ற வாஸுகியின் முகத்தை அஸுரர்கள் பிடித்துக்கொள்ளும்படி செய்ய விரும்பி, முதலில் தான் முகத்தைப் பிடித்துக்கொண்டான். பிறகு, தேவதைகளும் முகத்தையே பிடித்துக்கொண்டார்கள். பகவானும், தேவதைகளும், முகத்தைப் பிடித்துக்கொண்டதை அஸுர ச்ரேஷ்டர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. “நாங்கள் நன்கு வேதாத்யயனம் செய்தவர்கள்; சாஸ்த்ரங்களைக் கற்றவர்கள்; பிறவியாலும், நற்செயல்களாலும், ப்ரஸித்தி பெற்றவர்கள். இத்தகைய நாங்கள், அமங்களமான (சுபம் இல்லாத) ஸர்ப்பத்தின் வாலைப் பிடிக்கமாட்டோம்” என்று சொல்லி அஸுரர்கள் வெறுமனேயிருந்தார்கள். பரமபுருஷன் அதைக்கண்டு, புன்னகை செய்துகொண்டே, முகத்தைவிட்டுத் தேவதைகளும் தானுமாக வாலைப் பிடித்துக்கொண்டான். இவ்வாறு அந்தத் தேவாஸுரர்கள் இன்னபாகத்தை இன்னவர் பிடித்துக்கொள்ள வேண்டியதென்று ஏற்பாடு செய்துகொண்டு, பெரிய முயற்ச்சியுடன் க்ஷீரஸமுத்ரத்தைக் கடைந்தார்கள். அவ்வாறு கடையும் பொழுது, வெறும் ஜலத்தில் ஆதாரமில்லாதிருந்த மந்தரபர்வதம், ஜலத்தில் அமிழ்ந்து போய்விட்டது.
கௌரவ ச்ரேஷ்டனே! மஹாபலிஷ்டர்களான தேவாஸுரர்கள், அந்த மந்தர பர்வதத்தை (மலையை) எவ்வளவு ப்ரயத்னப்பட்டு (முயற்சி செய்து) எடுக்கப்பார்த்தும், அது பெரும்பாரமாகையால் அவர்களுக்கு சாத்யப்படவில்லை (இயலவில்லை). ஜலத்தில் முழுகியே போய்விட்டது. அந்தத் தேவாஸுரர்கள், மிகுந்த பலமுடைய தெய்வத்தினால் தங்கள் பௌருஷம் (ஆண்மை, வீரம், வலிமை) வீணாகப்பெற்று, மன வருத்தமுற்று, முக ஒளி மழுங்கி, நின்றார்கள். வீணாகாத ஸங்கல்பமுடையவனும், அளவற்ற வீர்யமுடையவனும், ஸர்வேச்வரனுமாகிய அந்த அஜித பகவான், அவ்வாறு விக்னம் (தடை) நேர்ந்ததைக் கண்டு, அற்புதமான பெரிய ஆமையின் உருவம் தரித்து, ஜலத்தில் முழுகி, அப்பர்வதத்தை (அம்மலையை) மேலுக்கெடுத்தான். அக்குலபர்வதம் (மலை) மேலெழுந்து வரக்கண்டு, தேவாஸுரர்கள் அனைவரும் மீளவும் கடையத் தொடங்கினார்கள். லக்ஷ யோஜனை விஸ்தாரமுடைய கூர்மரூபியான அந்த பகவான், மற்றொரு ஜம்பூ த்வீபம் (ஜம்பூ தீவு) போலப் பேருருவம் உடையவனாகி, மந்தர பர்வதத்தைத் (மலையைத்) தன் முதுகினால் தாங்கிக் கொண்டிருந்தான்.
மன்னவனே! தேவச்ரேஷ்டர்களும், அஸுரச்ரேஷ்டர்களும் தமக்குள்ள புஜ பலத்தை (தோள் வலிமை) எல்லாம் கொண்டு, சுழற்றுகின்ற அம்மந்தர பர்வதத்தை (மலையை) முதுகில் தாங்குகிற ஆதி கூர்மரூபியான பகவான், அந்தப் பர்வதம் (மலை) சுழலுவதைத் தினவு (அரிக்கும் போது) சொரிவது போல ஸுகமாகவே நினைத்தான். அளவற்ற பலமுடையவனாகையால், அவனுக்கு அது ஒரு பொருளேயன்று. அம்மஹாவிஷ்ணு, இவ்வாறு ஜலத்தில் கூர்ம ரூபியாய்ப் பர்வதத்தைத் (மலையை) தரித்துக்கொண்டே, அஸுர ஸ்வபாவத்தினால் அஸுரர்களிடத்திலும், தெய்வ ஸ்வபாவத்தினால் தேவதைகளிடத்திலும், ஆவேசித்து அவரவர்களுக்குத் தேஹ (உடல்) மனோ பலங்களை வளர்த்திக் கொண்டிருந்தான். வாஸுகியிடத்திலும், நித்ராரூபமாய் ப்ரவேசித்தான். மற்றும், அப்பர்வதம் (மலை) அசையாதிருக்குமாறு அதன்மேல் மற்றொரு குலபர்வதம் போன்று ஆயிரம் புஜங்கள் (தோள்கள்) உடையவனாகி ஒரு புஜத்தினால் (கையால்) அப்பர்வதத்தை (மலையை) அமுக்கிக்கொண்டிருந்தான்.
ஆகாயத்தில் ப்ரஹ்மதேவன், ருத்ரன், இந்தரன் முதலியவர்கள் அவனைத் துதித்து, அவன்மேல் புஷ்ப வர்ஷங்களைப் பொழிந்தார்கள். பர்வதத்தின் (மலையின்) மேலும், கீழும், பர்வதத்திலும் (மலையிலும்), தம்மிடத்திலும் அமைந்திருக்கின்ற பரமபுருஷனால் உதவி செய்யப்பெற்ற அந்தத் தேவாஸுரர்கள், மதித்து, மிகுந்த பலத்துடன், மந்தரபர்வதத்தினால் முதலை முதலிய ஜல ஜந்துக்களெல்லாம் (நீர் பிராணிகளெல்லாம்) பயந்தோடும்படி க்ஷீரஸமுத்ரத்தைக் கடைந்தார்கள். வாஸுகியின் முன்பாகத்தைப் பிடித்துக்கொள்ள வேண்டுமென்று மேல்விழுந்து பிடித்துக்கொண்ட பௌலோமன், காலேயன், பலி, இல்வலல் முதலிய அஸுரர்கள் அந்த ஸர்ப்பராஜனுடைய கடுமையான அனேகமாயிரம் கண்களினின்றும், முகங்களினின்றும், மூச்சுக் காற்றுக்களினின்றும் வெளிக்கிளம்புகின்ற அக்னிகளாலும், புகைகளாலும், பலமெல்லாம் ஒடுங்கப்பெற்று, காட்டுத்தீயினால் கொளுத்தப்பட்ட ஸரல வ்ருக்ஷங்கள் (மரங்கள்) போன்றிருந்தார்கள்.
தேவதைகளும், அந்த வாஸுகியின் உஷ்ணமான மூச்சுக் காற்றின் ஜ்வாலையால் (தீக்கொழுந்தால்) ஒளி மழுங்கி, மூச்சுக்காற்றின் புகைகளால் ஆடைகளும், பூமாலைகளும், கவசங்களும் அழுக்கடைந்து மழுங்கப்பெற்று, வருத்தமுற்றிருக்கையில், இந்த்ரனுடைய ஆஜ்ஞையின்படி நடக்கும் தன்மையுள்ள மேகங்கள், அந்தத் தேவதைகளின் மேல் மழை பெய்தன. மற்றும், ஸமுத்ரத்தின் அலைகளைத் தழுவிக் குளிர்ந்த காற்றும் அவர்கள் மேல் வீசின. அவ்வாறு தேவகூட்டத் தலைவர்களும், அஸுரர் கூட்டத் தலைவர்களும் நெடுங்காலம் வருந்திக் கடலைக் கடைந்து கொண்டிருப்பினும், அம்ருதம் தோன்றாதிருக்கையினால், அஜித பகவான் தானே கடையத் தொடங்கினான். காளமேகம் போலக் கறுத்து, அரையில் பீதாம்பரம் தரித்து, கழுத்தில் மின்னல் போலத் திகழ்கின்ற ஆபரணங்களை அணிந்து, கிரீடத்துடன் கூடி, சிரத்தினால் ஆகாயத்தை அளாவி, மார்பில் வனமாலையென்னும் பூமாலை அசையப் பெற்ற செந்தாமரைக் கண்ணனாகிய அப்பகவான், உலகங்களுக்கு அபயம் கொடுக்கவல்ல புஜங்களால், ஸர்ப்பத்தைப் பிடித்து மந்தாரமென்னும் மத்தினால் ஸமுத்ரத்தைக் கடைந்து கொண்டு, மற்றொரு பர்வதம் (மலை) போல விளங்கினான். அப்பொழுது, ஸமுத்ரத்திலுள்ள ஸாதாரண மீன்களும், மகரமீன்களும் ஸர்ப்பங்களும் ஆமைகளும் பயந்தோடின. திமிகளும் (திமிங்கிலம்), நீர் யானைகளும் முதலைகளும் கலக்கமுற்றன. அத்தகைய அந்த ஸமுத்ரத்தினின்றும், முதலில் மிகவும் பொறுக்க முடியாத ஹாலாஹலமென்னும் விஷம் உண்டாயிற்று. அதற்கு ஒருவராலும் எவ்விதத்திலும் பரிஹாரம் செய்ய முடியவில்லை. அது அதிக வேகமுடையது. ஆகையால், அது எல்லா திசைகளிலும் மேலும், கீழும், பரவிக் கிளம்பி நிரம்பிப் பொறுக்க முடியாதிருந்தது.
மன்னவனே! மூன்று லோகங்களிலுமுள்ள ஸமஸ்த ப்ரஜைகளும் (மக்களும்), இந்த்ரன் முதலிய அவர்களின் ப்ரபுக்களும் (தலைவர்களும்), அவ்விஷத்தைக் கண்டு பயந்து, அதற்குப் பரிஹாரம் செய்ய முடியாமல், எவரும் காப்பவரின்றிச் சிவனைச் சரணம் அடைந்தார்கள். தன் பத்னியான பார்வதியுடன். மூன்று லோகங்களுக்கும் க்ஷேமத்தை விரும்பிக் கைலாஸ பர்வதத்தில் தவம் செய்து கொண்டிருக்கின்ற, முனிவர்களால் புகழப் பெற்றவனும், தேவதைகளில் சிறந்தவனுமாகிய, அந்தச் சிவபெருமானிடம் சென்று அவனைக் கண்டு நமஸ்கரித்து ஸ்தோத்ரம் செய்தார்கள்.
ப்ரஜாபதிகள் சொல்லுகிறார்கள்:- (ருத்ர அந்தர்யாமியான பரமபுருஷனைத் துதிக்கிறார்களென்றாவது, பரமபுருஷனுடைய அஸாதாரண தர்மங்களை ருத்ரனிடத்தில் ஏறிட்டுத் துதிக்கிறார்களென்றாவது கருத்துக் கொள்ளவேண்டும்.)
நீ தேவர்களுக்கெல்லாம் தேவன். நீயே உலகங்களையெல்லாம் படைக்கின்றாய். ஸமஸ்த பூதங்களுக்கும் அந்தராத்மாவாயிருக்கின்றாய். நாங்கள் உன்னைச் சரணம் அடைந்தோம். மூன்று லோகங்களையும் தஹிக்கின்ற (எரிக்கின்ற) இந்த விஷத்தினின்று எங்களைப் பாதுகாப்பாயாக. ஸமஸ்த லோகங்களுடைய ஸம்ஸார பந்தத்தையும், மோக்ஷத்தையும் நீயே நடத்துகின்றாய். மற்றும், நீ உன்னைப் பற்றினாருடைய துக்கங்களைப் போக்கும் தன்மையுடையவன். அத்தகைய உன்னையே மதியுள்ள பண்டிதர்கள் ஆராதிக்கிறார்கள். நீ ப்ராணிகளுக்கு உபாயத்தை உபதேசித்து, அஜ்ஞானமாகிற அந்தகாரத்தைப் போக்குகின்றாய். ப்ரபூ! ஸ்வயம் ப்ரகாசனே (தானே தோன்றுபவனே)! மஹானுபாவா! நீ ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் அமைந்திருப்பதும், உன் சக்திபோல் உன்னைவிட்டுப் பிரியாததுமாகிய மாயையினால் இந்தப் ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி(படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்த முயன்று, ப்ரஹ்மன், விஷ்ணு, சிவன் என்னும் பெயர்களையும் உருவங்களையும் தரிக்கின்றாய். உபநிஷத்துக்களில் ஓதப்படுகிற ரஹஸ்யப் பொருளும் இணையெதிரில்லாததும், சேதனா சேதன ரூபமுமான ஸமஸ்த வஸ்துக்களையும் படைத்து, அவற்றுள் புகுந்து நியமிப்பதுமாகிய பரப்ரஹ்மம் நீயே. சேதனர் (ஜீவாத்மாக்கள்), அசேதனர் (அறிவற்ற ஜடப்பொருட்கள்), காலம் முதலிய சக்திகளுடன் தோற்றுகின்ற இந்த ப்ரபஞ்சமெல்லாம் நீயே. உன்னை அறிவிக்கும் ப்ரமாணம் (அறிவின் அடிப்படை) சாஸ்த்ரம் ஒன்று மாத்ரமேயொழிய, மற்றொன்றுமன்று. நீயே ஜகத்காரணன் (இவ்வுலகிற்கு காரணம்). பண்டிதர்கள், உன்னையே பரமாத்மனென்று கூறுகிறார்கள். ப்ராணன்கள், இந்த்ரியங்கள், பூமி முதலிய பஞ்சபூதங்கள், ஸத்வாதி குணங்கள் இவையெல்லாம் உன்னால் தரிக்கப்பட்டு, தத்தம் செயல்களில் வல்லவையாகின்றன. காலமும், யாகாதி கர்மங்களும், உன்னுடைய சரீரங்களே. நீ என்றும் ஒரேவிதமாய் இருப்பவன். ஸமஸ்த வஸ்துக்களிலும் உட்புகுந்து நிறைந்திருக்கும் ப்ரஹ்மம் நீயே. நீ தர்மத்தைச் சரீரமாகவுடையவன். மற்றும், தர்மங்களால் நீயே ஆராதிக்கப்படுகின்றாய். மூன்று அக்ஷரங்கள் அடங்கின ப்ரணவம் உன்னையே குறிக்கின்றது. ஸமஸ்த தேவஸ்வரூபனாகிய அக்னி, உன்னுடைய முகம்.
லோகநாதனே! பூமியை உன் பாதாரவிந்தங்களாகச் சொல்லுகிறார்கள். காலத்தை ஸகல தேவ ஸ்வரூபனான உன்னுடைய கதியாகவும், திசைகளை உன் காதுகளாகவும், வருணனை உன் நாக்காகவும், த்யானிக்கிறார்கள். ஆகாயம் உன்னுடைய நாபி; காற்று உன் மூச்சுக்காற்று; ஸூர்யன் உன் கண்கள்; ஜலம் உன்னுடைய ரேதஸ்ஸு; உன் ஸ்வரூபம், மேன்மை தாழ்மைகளுக்கிடமான ஸமஸ்த ஜீவாத்மாக்களுக்கும் ஆதாரமாயிருக்கின்றது. சந்திரன், உன்னுடைய மனம். த்யுலோகம் (தேவ லோகம், ஸ்வர்க்க லோகம்) உன்னுடைய சிரஸ்ஸு (தலை). ஸமுத்ரங்கள் உன் வயிறு. பர்வதங்கள் (மலைகள்) உன் எலும்புக் குவியல்கள். ஸமஸ்த (எல்லா) ஓஷதிகளும் (ஸ்தாவரங்களும்) கொடிகளும் உன் ரோமங்கள் (மயிர்கால்கள்). காயத்ரி முதலிய சந்தங்கள் (விருத்தங்கள்) உன்னுடைய ஸப்த தாதுக்கள் (நிணநீர் (Lymph Nodes), இரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை, விந்து என்கிற உடலின் ஏழு மூல தத்வங்கள்). வேத ஸ்வரூபமான மூர்த்தியுடையவனே! வேதங்களில் சொல்லப்பட்ட அவ்வவ்வகைப்பட்ட தர்மங்களெல்லாம், உன் ஹ்ருதயம். தத்புருஷ, அகோர, ஸத்யோஜாத, வாமதேவ, ஈசானங்களென்கிற ஐந்து அனுவாகங்களும் (வேத மந்த்ரத்தின் பிரிவுகள்) உன்னுடைய வசனங்கள். அவற்றுள் நூற்று முப்பத்தெட்டு மந்திரங்கள் அடங்கியிருக்கின்றன.
ஓ, தேவனே! ஸ்வயம் ப்ரகாசமும், சிவமென்று கூறப்படுவதுமாகிய பரமாத்ம தத்வம் உன்னுடைய நிலைமை. நீ, பரமாத்மாவுக்குச் சரீரமாகி, அவனை விட்டுப் பிரியாது நிலை பெற்றிருப்பவன். அதர்மத்தின் இலைகளாகிய தம்பம் (செருக்கு), லோபம் (பேராசை) முதலியவை உன்னுடைய நிழல். ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்குக் (அழித்தல்) காரணமான ஸத்வ, ரஜஸ், தமோ குணங்கள் உன்னுடைய முக்கண்கள்.
தேவனே! காயத்ரி முதலிய சந்தங்கள் அடங்கின பழையதாகிய வேதம் உன்னுடைய ஸங்கல்பம் (எண்ணம், மன வலிமை). நீ எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரித்தவன் (அறிந்தவன்). நீ, அனைவர்க்கும் அந்தராத்மாவாய் (உள்ளே ஆத்மாவாய்) இருப்பவன். நீயே சாஸ்த்ரங்களை பிரசாரம் செய்கின்றாய். கைலாஸ பர்வதத்தைக் காப்பவனே! ஸமஸ்த லோகங்களையும் பாதுகாப்பவனே! ப்ரஹ்மதேவன், விஷ்ணு, இந்த்ரன் இவர்களும், ஸ்வயம்ப்ரகாசமான உன் ஸ்வரூபத்தை அறியவல்லரல்லர்.
உன் ஸ்வரூபத்தில், ரஜஸ்ஸு, தமஸ்ஸு, மிச்ரஸத்வம் (ரஜஸ்ஸு, தமஸ்ஸு இவைகளுடன் கலந்த ஸத்வ குணம்) என்கிற ப்ராக்ருத குணங்களின் ஸம்பந்தமே கிடையாது. அத்தகைய உன் ஸ்வரூபத்தையே பரப்ரஹ்மம் என்று கூறுகிறார்கள். தேவ, மனுஷ்யாதி பேதங்கள் தீண்டப்பெறாதது. ப்ராணி த்ரோஹிகளான (கெடுதல் செய்பவர்களான) அத்வரன், தக்ஷன், த்ரிபுரன் முதலிய பலரையும் நீ அழித்தாய். ஆயினும், அது உனக்கு ஒரு புகழன்று. உன் பெருமையாகிற ஸமுத்ரத்திற்கு, அது ஒரு திவலை போன்றது. நீ உன்னால் படைக்கப்பட்ட இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் ப்ரளயகாலத்தில் உன் நெற்றிக்கண்ணில் விளங்கும் அக்னியின் பொரியால் பஸ்மம் (சாம்பல்) ஆவதை அறியாதிருக்கின்றாய். நீ, பார்வதியுடன் கலந்து திரிவதைக் கண்டு, மிகவும் காமக்கலவியில் கால் தாழ்ந்தவனென்றும், மசான பூமியில் (பிணம் எரிக்கும் இடத்தில்) ஸஞ்சரிப்பதைப் பற்றிக் கொடியவனென்றும், ஹிம்ஸையில் ருசியுடையவனென்றும், சில அறிவு கேடர்கள் (அறிவு அற்றவர்கள்) பிதற்றுவார்கள். அவர்கள் உன்னுடைய உண்மையை அறிந்தவர்களல்லர்.
ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்து அதன் அனுபவத்தினால், ஸந்தோஷமுற்றிருப்பவர்களும், ப்ரபஞ்சத்திற்கெல்லாம் ஹிதம் உபதேசிப்பவர்களுமாகிய பெரியோர்கள், உன்னுடைய இணையடிகளை ஹ்ருதயத்தில் த்யானிக்கிறார்கள். நீ ப்ரபஞ்சத்தின் க்ஷேமத்திற்காக என்றும் கொடிய தவம் செய்கின்றனை. இத்தகைய உன் கருத்தை அறியாமல் சிலர் வெட்கமின்றிப் பிதற்றுகிறார்கள். கார்யதசையில் (படைப்பு நிலையில்) ஸ்தூலமாயும் (பெயர் உருவங்களுடன் கூடியதாயும்), காரண தசையில் (ப்ரளய நிலையில்) ஸூக்ஷ்மமாயும் (பெயர் உருவங்கள் இல்லாததாயும்) உள்ள, சேதனா சேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறுபட்டவனும்) எங்கும் நிறைந்தவனுமாகிய உன் ஸ்வரூபத்தை ப்ரஹ்மாதிகளும் அறியவல்லரல்லர். இனி அவர்கள் உன் மஹிமையை எவ்வாறு துதிக்கவல்லராவார்கள்?
அந்த ப்ரஹ்மாதிகளால் படைக்கப்பட்டவர்களால், படைக்கப்பட்ட நாங்கள், உன் ஸ்வரூபத்தை அறியவாவது, அதைத் துதிக்கவாவது எவ்வாறு வல்லவராவோம்? ஆயினும், நாங்கள் எங்கள் சக்திக்குத் தகுந்தபடி ஸ்தோத்ரம் செய்தோம். உன் பெருமைக்குத் தகுந்தவாறு துதி செய்ய எவரும் வல்லவராக மாட்டார்கள். பரமேச்வரனே! உன்னைக் காட்டிலும் மேற்பட்ட வஸ்துவாவது, ஒத்த வஸ்துவாவது, எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. உன் செயலை ஒருவராலும் அறியமுடியாது. நீ உலகங்களின் க்ஷேமத்திற்காக இவ்வாறு தோற்றுகின்றாய் என்பது மாத்ரமே எங்களுக்குத் தெரியும்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தன்னிடத்தில் இல்லாதவைகளும், பரமபுருஷனுக்கே அஸாதாரணமாய் இருப்பவைகளுமான குணங்களை, இவ்வாறு ஏற்றி அதிகமாகத் துதிசெய்யப் பெற்ற தேவனாகிய ருத்ரன், காலகூட விஷத்தினின்றும் ப்ரஜைகளுக்கு (மக்களுக்கு) நேர்ந்த வ்யஸனத்தைக் (துக்கத்தைக்) கண்டு, ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனாகையால், தன் அன்பான சதிதேவியைப் பார்த்து, இவ்வாறு மொழிந்தான்.
ருத்ரன் சொல்லுகிறான்:- பார்வதீ! ப்ரஜைகளுக்கு (மக்களுக்கு) இப்படி மஹத்தான வருத்தம் நேர்ந்திருக்கின்றதைக் கண்டாயா? க்ஷீரஸமுத்ரத்தைக் கடையும் பொழுது, அதினின்றும் காலகூடமென்னும் விஷம் உண்டாயிற்று. அதனால் ப்ரஜைகள் (மக்கள்) வருந்துகின்றனர்.ஜீவிக்க வேண்டுமென்று விரும்புகிற இந்த ப்ரஜைகளுக்கு (மக்களுக்கு), நான் அபயம் கொடுக்க வேண்டும். வல்லமையுடையவன் தீனர்களைப் (புகல் அற்றவர்களைப்) பாதுகாக்க வேண்டுமல்லவா? அவன் செய்யவேண்டிய ப்ரயோஜனம் அவ்வளவேயன்றி வேறில்லை. ஆகையால், வல்லமையுடைய நான், ப்ரஜைகளை (மக்களை) இந்த வ்யஸனத்தினின்றும் (துக்கத்தினின்றும்) பாதுகாக்க வேண்டியவனாயிருக்கிறேன். வல்லமையுடைய பெரியோர்கள், ஒரு க்ஷணத்திற்குள் அழியுந்தன்மையுள்ள தம் ப்ராணன்களாலும், ப்ரஜைகளைப் பாதுகாப்பார்கள்.
மங்கள ஸ்வபாவமுடையவளே! பகவானுடைய மாயையினால் மதிமயங்கி, ஒருவர் மேலொருவர் வைரத்தை (பகைமையை) ஏற்றுக்கொண்டிருக்கும் ப்ராணிகளிடத்தில் எவன் தயை செய்கிறானோ, அவனிடத்தில் ஸர்வாந்தராத்மாவான பகவான் ப்ரீதியடைகிறான். ஷாட்குண்யபூர்ணனாகிய (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பகவான், ஸந்தோஷம் அடைவானாயின், ஜங்கம (அசையும்) ஸ்தாவரங்களோடு (அசையாதவைகளோடு) கூடின நான், மிகுந்த ஸந்தோஷம் அடைவேன். பகவானுக்கு ஸந்தோஷத்தை விளைப்பதைவிட வேறொரு ப்ரயோஜனம் எதுவுமேயில்லை. ஆகையால், நான் இந்த விஷத்தைப் புசிக்கிறேன். என்னால் ப்ரஜைகளுக்கு (மக்களுக்கு) ஸுகம் உண்டாகுமாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு ருத்ரன், தன் பத்னியாகிய பார்வதியை அனுமதி கொடுக்குமாறு வேண்டிக்கொண்டு, அவ்விஷத்தைப் புசிக்க ஆரம்பித்தான். அவனுடைய வைபவத்தை அறிந்த பார்வதியும், அப்படியே ஒப்புக்கொண்டாள். அப்பால், அச்சிவபெருமான், எங்கும் நிறைந்திருப்பதாகிய அந்த விஷத்தைத் தன் உள்ளங்கைக்குள் அடக்கிக்கொண்டு, அம்மஹாதேவன் மன இரக்கமுற்று, ப்ராணிகளுக்கு ஸுகத்தை விளைப்பதற்காக அதைப் பக்ஷித்தான் (பருகினான்).
ஜலத்தின் மலமாகிய அவ்விஷம், மஹானுபாவனாகிய அந்த ருத்ரனிடத்திலும் தன் வீர்யத்தை வெளியிட்டது. அது, அவனைக் கழுத்தில் கறுப்பு நிறமுடையவனாகச் செய்தது. ஸாதுவாகிய ருத்ரனுக்கு, அதுவும் அலங்காரமாகவே ஆயிற்று. தம் ப்ரயோஜனத்தை எதிர்பாராமல் பிறர் கார்யத்தை நிறைவேற்றும் தன்மையுடைய பெரியோர்கள், பெரும்பாலும் உலகங்களின் மனவருத்தங்களைக் கண்டு பொறுக்க முடியாமல் தாங்களும் வருந்துவார்கள். அது அனைவர்க்கும் அந்தராத்மாவான பரமபுருஷனுக்குச் சிறந்த ஆராதனமாம். தன்னைப் பற்றினாருடைய மனவிருப்பங்களை நிறைவேற்றும் தன்மையுடைய சிவபெருமான், அவ்வாறு விஷம் பருகின வ்ருத்தாந்தத்தைக் கேட்டு, ப்ரஜைகளும், பார்வதியும், ப்ரஹ்மதேவனும், பகவானும் புகழ்ந்தார்கள். ருத்ரன் விஷத்தைப் பானம் செய்யும் பொழுது சிந்தின அதன் துளிகளை, தேள் முதலிய விஷப்பூச்சிகளும், ஸர்ப்பங்களும், விஷச் செடி கொடிகளும், கடிக்குந் தன்மையுள்ள மற்றுமுள்ள ஜந்துக்களும், தம் ப்ராணன்களால் ஏற்றுக்கொண்டன.
ஏழாவது அத்தியாயம் முற்றிற்று.