ஶ்ரீமத் பாகவதம் - 174

 எட்டாவது ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்

(தேவதைகளுக்குப் பகவான் ஸேவை ஸாதித்தலும், தேவதைகள் அவனை ஸ்தோத்ரம் செய்தலும், அவனுடைய ஆஜ்ஞையின் (கட்டளையின்) மேல் அம்ருதத்திற்காக க்ஷீரஸமுத்ரத்தைக் கடைய ப்ரயத்னம் (முயற்சி) செய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! தன்னைப் பற்றினாருடைய தாபங்களைப் (துன்பங்களைப்) போக்கும் தன்மையனும், ஸர்வேச்வரனுமாகிய பகவான், ஆயிரம் ஸூர்யர்கள் உதித்தாற்போலத் திகழ்கின்ற பேரொளியுடையவனாகி, அந்த ப்ரஹ்மாதி தேவதைகளுக்கெதிரே வந்து தோன்றினான். பிரமன் முதலிய அத்தேவர்கள் அனைவரும், பகவானுடைய ஒளிப்பெருக்கினால் கண்கள் தடைபட்டு, ஆகாயத்தையாவது, திசைகளையாவது, பூமியையாவது, தம்மையாவது காணப்பெறவில்லை. இனி எதிரே தோற்றியிருக்கும் ப்ரபுவை எவ்வாறு காண்பார்கள்? 

பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹம், மரகத ரத்னம்போல் நிர்மலமாய் (அழுக்கற்றதாய்) இருந்தது. அவனுடைய திருக்கண்கள், தாமரை மலரின் உட்புறம்போல் சிவந்திருந்தன. அவன், உருக்கி அழுக்கு நீக்கப்பட்ட பொன் போலத் திகழ்கின்ற பீதாம்பரத்தை உடுத்திருந்தான். அவனுடைய அங்கங்களெல்லாம் தெளிந்து அழகாயிருந்தன. அவன், அழகான முகமும் அழகிய புருவங்களும் அமைந்து, பெரிய ரத்னங்கள் இழைக்கப்பெற்ற கிரீடமும், தோள்வளைகளும், அணிந்திருந்தான். தாமரை மலர் போன்ற அவனது முகம், குண்டலங்களால் திகழ்கின்ற கபோலங்களின் (கன்னங்களின்) காந்தியால் மிகவும் அழகாயிருந்தது. மற்றும், அவன் அரைஞாண்மாலை, கைவளை, முத்துமாலை, சிலம்பு, தண்டை, கௌஸ்துபமணி, வனமாலை இவைகளை அணிந்து, மார்பில் வீற்றிருக்கின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியால் மிகவும் விளக்கமுற்றிருந்தான். ஸுதர்சனம் முதலிய அவனுடைய அஸ்த்ரங்கள், புருஷ உருவத்துடன் அவனைப் பணிந்திருந்தன. தேவர்களில் தலைவனாகிய ப்ரஹ்மதேவன், அத்தகைய பரமபுருஷனுடைய திருவுருவத்தைக்கண்டு, ருத்ரனும் மற்றுமுள்ள தேவதைகளும் தானுமாக, அவனுக்கு ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம்செய்து, அவனை ஸ்தோத்ரம் பண்ணினான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- உனக்கு ஸ்ருஷ்டி (படைக்கப்படுதல்), ஸ்திதி (காக்கப்படுதல்), ஸம்ஹாரங்கள் (அழிக்கப்படுதல்) கிடையாது. நீ ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸூகளென்கிற ப்ராக்ருத (ப்ரக்ருதியின்) குணங்களற்றவன்; துக்கத்தின் ஸம்பந்தமற்ற மஹா ஆனந்த ஸ்வரூபன்; அணு ஸ்வரூபனான (அளவில் மிகச்சிறியதான) ஜீவனைக் காட்டிலும் ஸூக்ஷ்மன் (நுட்பமானவன்); அப்படிப்பட்ட ஜீவனுக்கும் உட்புகுந்து நியமிக்குந் தன்மையுடையவன். உன் ஸ்வரூபத்தை அளவிடமுடியாது. நீ மிகுந்த ப்ரபாவமுடையவன். அத்தகைய உனக்கு நமஸ்காரம். புருஷச்ரேஷ்டனே (புருஷர்களில் சிறந்தவனே)! உன்னுடைய இவ்வுருவம், வேதத்தினாலும், அதைப்பின் சென்ற பாஞ்சராத்ரம் முதலிய சாஸ்த்ரங்களாலும், அறிவிக்கப்பட்ட வழிகளில் இறங்கி, நன்மையை விரும்புவோர்களால் ஆராதிக்கத் தகுந்தது. மூன்று லோகங்களும், நாங்களும் உன்னுடைய இவ்வுருவத்தில் புலப்படுகின்றோம். ஜகத்காரணனே (இந்த உலகிற்குக் காரணமானவனே)! உன்னுருவம் இந்த ப்ரபஞ்சத்திற்கெல்லாம் ஆதாரமாயிருக்கின்றது. இந்த ப்ரபஞ்சம், முதலிலும், நடுவிலும், கடைசியிலும் உன்னிடத்திலேயே இருக்கின்றது. உனக்கு நீயே ஆதாரமன்றி, மற்றொரு ஆதாரம் கிடையாது. இந்த ப்ரபஞ்சத்தினுடைய ஆதி (முதல்), நடு (இடைப்பகுதி), அந்தங்கள் (முடிவு) என்கிற மூன்று அவஸ்தைகளும் நீயே. ஆகையால், இந்த ப்ரபஞ்சமெல்லாம் நீயே. மண்ணால் செய்யப்பட்ட குடம் அதைக்காட்டிலும் எவ்வாறு வேறுபட்டதன்றோ அவ்வாறே உன்னிடத்தினின்றும் உண்டான இந்த ப்ரபஞ்சம் உன்னைவிட வேறானதன்று – அசேதனமான ஜடப் பொருட்களும், ஜீவர்களும், உனக்கு சரீரமாய் உனது அம்சமாக இருக்கிறார்கள். உயர்ந்தவர்கள் என்று பிறரால் எண்ணப்படும் பிரமன், சிவன், இந்த்ரன் ஆகிய எங்களை விட நீ மிகவும் உயர்ந்தவன். நீ உனது மாயையைக் (ஆச்சர்ய சக்தியான ப்ரக்ருதியைக்) கொண்டு இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டித்தாய். பின் அதனுள் அந்தர்யாமி ஆத்மாவாய் புகுந்து அவற்றை நியமிக்கிறாய். ஆனாலும் நீ எந்த மாற்றத்தையும் அடைவதில்லை. ச்ருதி, ஸ்ம்ருதிகளைக் கற்றறிந்த, மனதை அடக்கிய சான்றோர்கள், நீ ஸத்வ, ரஜஸ், தமஸ் என்கிற ப்ரக்ருதியின் குணங்களோடு சேர்ந்து இருந்தாலும் அந்த குணங்களால் தீண்டப்படுவதில்லை என்று தங்கள் மனத்தில் உன்னை அறிகிறார்கள். ஸாதாரண பாமர மக்கள் எப்படி அரணிக்கட்டையிலிருந்து நெருப்பையும், பசுவிடமிருந்து பாலையும், பூமியிடமிருந்து உணவு தான்யங்கள், தண்ணீர் இவற்றையும், உழைப்பிலிருந்து ஜீவனத்தையும் பெறுகிறார்களோ, அது போன்றே, தீர்க தரிசிகளான யோகிகள் உன்னை ப்ரக்ருதியின் குணங்களில் இருப்பதாகத்  தங்களது அழுக்கற்ற கூர்மையான புத்தியினால் அறிகிறார்கள். 

ஹே நாத! உன்னை நேரில் காண வேண்டும் என்ற எங்களது நெடுநாளைய ஆசை இன்று உன்னை நேரில் கண்டதால் நிறைவேறியது. ஓ மலர்ந்த நாபிக் கமலத்தை உடையவனே! காட்டுத் தீயினால் அலைப்புண்டு வருந்திய யானைக்கூட்டமானது குளிர்ச்சியான கங்கையின் ப்ரவாஹத்தைக் கண்டால் எப்படி ஆனந்தப்படுமோ, அது போன்று அஸுரர்களிடம் தோல்வி அடைந்து, அவர்களால் துன்புறுத்தப்பட்டு வருந்தும் நாங்கள் உன்னைக் கண்டு மஹானந்தம் அடைந்தோம். 

ஹே அந்தராத்மா! நீ எல்லாவற்றிலும் அந்தராத்மாவாக இருந்து நியமிப்பதால், நீ அனைத்தையும் அறிவாய்; நீ அறியாதது ஒன்றும் இல்லை; உனக்கு நாங்கள் எதையும் தெரியப்படுத்த வேண்டியதில்லை. லோகபாலர்களான நாங்கள், எதை வேண்டி உன்னைத் தேடி வந்து உன் திருவடித் தாமரைகளைப் பணிந்தோமோ, அதை நிறைவேற்றி அருள வேண்டும். சதுர்முக ப்ரஹ்மாவாகிய நான், மலைகளுக்கு அரசனான சிவன், தேவர்கள், தக்ஷன் முதலியோர் (நீயாகிய) அக்னியிலிருந்து தோன்றும் சிறு ஒளிக் கற்றைகளே; உன்னை விட வேறானவர்களாய் தோன்றுகிறோம்; உண்மையில் உனது சரீரமே. நாங்கள் எங்களது ஹிதத்தை (நன்மையை) எவ்வாறு அறிவோம்? ஆகையால், ஹே ஈசனே! தேவர்களுக்கும் ப்ராஹ்மணர்களுக்கும் நன்மையைத் தரும் உபாயத்தை எங்களுக்கு அருளிச்செய்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இப்படி ப்ரஹ்மா முதலியவர்களால் துதிக்கப்பட்ட பகவான், அவர்களின் உள்ளக்கருத்தை நன்கு அறிந்தவனாகையால், மேகங்களின் இடி முழக்கம் போன்ற தனது குரலில், தனக்கு எதிரே, தன்னுடைய கட்டளையைப் பெறுவதற்கு, இந்த்ரியங்களை அடக்கி, கூப்பிய கையுடன் நிற்கும் தேவர்களிடம் கூறினான். தேவர்கள் விரும்பியதைத் தான் ஒருவனே நிறைவேற்ற வல்லனாகிலும், பாற்கடலைக் கடைதல் முதலிய லீலைகளில் விருப்பமுள்ள பகவான், பின் வருமாறு மொழிந்தான்:  

ஸ்ரீபகவான் கூறினான்:- ஹே ப்ரஹ்மா! சம்போ! தேவர்களே! உங்களுக்கு நன்மை உண்டாகும் விதத்தைச் சொல்லுகிறேன். மனவூக்கத்துடன் கேட்பீர்களாக. நீங்கள் இப்பொழுது தானவர்களோடும், தைத்யர்களோடும், ஸ்நேஹம் (நட்பு) செய்வீர்களாக. அவர்கள் கால வசத்தினால் அனுகூலர்களாய் (உங்களுக்கு ஆதரவாக) இருப்பார்கள். ஆகையால், அவர்கள் ஸ்நேஹம் (நட்பு) செய்ய ஒப்புக்கொள்வார்களோ, மாட்டார்களோ என்று சங்கிக்க (ஸந்தேஹிக்க) வேண்டாம். அவர்களால் உங்களுடைய நன்மை நிறைவேறும்வரையில், அவர்களை அனுஸரித்து, ஸ்நேஹத்துடன் (நட்புடன்) இருப்பீர்களாக. நம்முடைய ப்ரயோஜனம் (பயன்) பெரிதாயிருக்குமாயின், அதை நிறைவேற்றும் பொருட்டு, சத்ருக்களாயினும் அவர்களோடு ஸந்தி செய்யவேண்டும் (சேர்ந்து இருக்க வேண்டும்). தேவதைகளே! ப்ரயோஜனம் (பயன்) கைகூடினபின்பு, எலியும், பாம்பும் போல த்வேஷத்தைப் (வெறுப்பை) பாராட்டலாம். நீங்கள் அம்ருதத்தைப் பெறும் விஷயத்தில் விரைந்து யத்னம் (முயற்சி) செய்வீர்களாக. 

எப்படிப்பட்ட ஜந்துவாயினும் (பிராணியாயினும்) அந்த அம்ருதத்தைப் பானம் செய்யுமாயின், ம்ருத்யுவின் வாயில் அகப்பட்டிருப்பினும், அதினின்று விடுபட்டு மரணமற்றதாகும். புதர்கள், புற்கள், கொடிகள் ஓளஷதிகள் இவையெல்லாவற்றையும் கொண்டு வந்து க்ஷீரஸமுத்ரத்தில் போட்டு, மந்தரபர்வதத்தை மத்தாகவும், வாஸுகியைக் கயிறாகவும் கொண்டு, நான் ஸஹாயமாயிருக்கப்பெற்று, சோம்பலின்றிக் கடைவீர்களாக. 

உங்களுடன் ஸமுத்ரத்தைக் கடைந்த அஸுரர்கள், கேவலம் வருத்தத்தோடு மீண்டு போவார்கள். நீங்கள் மாத்ரமே அம்ருதபானம் செய்து பலன்பெறுவீர்கள். தேவதைகளே! அஸுரர்கள் எதை விரும்புகிறார்களோ அதை நீங்கள் ஒப்புக்கொள்ளுங்கள். எல்லா ப்ரயோஜனங்களும் நல்ல வார்த்தையால் ஸித்திப்பது (நிறைவேறுவது) போலக் கோபத்தினால் ஸித்திக்காது (நிறைவேறாது). ஸமுத்ரத்தில் காலகூட விஷம் உண்டாகும். அதினின்று நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. அதை, ருத்ரன் விழுங்கிவிடுவான். மற்றும், ஸமுத்ரத்தைக் கடையும்பொழுது, அதினின்று உண்டாகும் வஸ்துக்களில் எதிலும் லோபத்தையும் (பேராசையும்), காமத்தையும் (விருப்பமும்) செய்யலாகாது. கோபமென்பது சிறிதும்கூடாது. இப்படியிருந்து ஸமுத்ரத்தைக் கடைவீர்களாயின், அம்ருதம் பெறலாம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தான் ஸங்கல்பித்தபடி நடத்தும் திறமையுடையவனும், ஸர்வேச்வரனுமாகிய, அப்பரமபுருஷன், தேவதைகளுக்கு இவ்வாறு ஆஜ்ஞை (கட்டளை) செய்து, அவர்கள் பார்த்துக் கொண்டேயிருக்கையில், அந்தர்த்தானமடைந்தான் (மறைந்தான்). மன்னவனே! மறைந்த பகவானுக்கு நமஸ்காரஞ்செய்து, தேவர்களும் ப்ரம்ஹதேவனும், ருத்ரனும், தங்கள் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள். தேவதைகள், பலி சக்ரவர்த்தியிடம் போனார்கள். துதிக்கத்தகுந்த குணசாலியாகிய பலி சக்ரவர்த்தி, தேவதைகள் சத்ருக்களாயினும் (எதிரிகளாயினும்), அவர்கள் யுத்த முயற்சியின்றி வந்திருப்பதைக்கண்டு, ஸந்தி (ஸமாதானம்) செய்ய வேண்டியகாலம் இன்னதென்றும், யுத்தம்செய்ய வேண்டியகாலம் இன்னதென்றும், அவன் நன்கு உணர்ந்தவனாகையால் அந்தத் தேவர்களை வதிக்கமுயன்று, கோலாஹலம் (கூச்சல்) செய்கின்ற அஸுர ஸேனாதிபதிகளைத் தடுத்தான். அவனை அஸுர ச்ரேஷ்டர்கள் பலரும் பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். அவன், பெரிய செல்வப் பெருக்குடன் திகழ்வுற்றிருந்தான். தேவர் முதலிய அனைவரையும் அவன் வென்றவன். அத்தகைய பலியினிடம், அந்தத் தேவர்கள் சென்றார்கள். பிறகு, மிகுந்த மதியுடைய தேவேந்திரன், நல்லவார்த்தைகளால் அவ்வஸுராதி ராஜனை அருள்புரியச் செய்துகொண்டு, அம்ருதம் கடையும் விஷயத்தைப் பற்றிப் பரமபுருஷனிடத்தில் தான் கற்ற உபாயத்தைச் சொன்னான். அது, பலிசக்ரவர்த்திக்கும், சம்பரன், அரிஷ்டநேமி முதலிய மற்ற அஸூர ச்ரேஷ்டர்களுக்கும் த்ரிபுரவாஸிகளுக்கும் ருசித்தது. 

சத்ருக்களைத் தஹிக்கும் தன்மையுள்ள மஹாவீரனே! பிறகு தேவர்களும், அஸுரர்களும் ஆகிய அவர்கள் அனைவரும் ஒருவரோடொருவர் நட்புடையவர்களாகி, ஸங்கேதம் (ஒப்பந்தம்) செய்துகொண்டு, அம்ருதத்திற்காக மிகுந்த யத்னம் (முயற்சி) செய்தார்கள். 

கொடிய மதமுடையவர்களும், உழல் தடி போன்ற புஜம் (தோள்) உடையவர்களுமாகிய அந்தத் தேவாஸுரர்கள், மந்தரபர்வதத்தைத் தங்கள் பலத்தினால் பிடுங்கிக் கர்ஜித்துக்கொண்டு, பாரம் தாங்கும் திறமை உடையவர்களாகையால், அதை க்ஷீர ஸமுத்ரத்திற்குக் கொண்டுபோகத் தொடங்கினார்கள். இந்த்ரன், பலி முதலியவர்கள் அனைவரும் வெகுதூரம் பளுவைத் தூக்கிக்கொண்டு வந்தமையால் இளைப்புற்று, அப்பர்வதத்தைக் கொண்டுபோக வல்லமை (சக்தி) அற்று, ஸ்வாதீனமின்றி (தங்கள் வசம் இன்றி) நடுவழியில் அதைக் கைவிட்டார்கள். அப்பர்வதம், மேருபர்வதம் போலப் பெரும் பாரமுடையது. ஆகையால், அது கீழ்விழும்பொழுது, பல தேவதைகளையும் பல அஸுரர்களையும் சூர்ணம் (தூள்) செய்துவிட்டது. அப்பொழுது, தேவதைகளும், அஸுரர்களும் உத்ஸாஹம் குலைந்து, சிலர் கை முறிந்தவர்களும், சிலர் துடை முறிந்தவர்களுமாய் இருக்கக்கண்டு, பகவான் கருடன் மேல் ஏறிக்கொண்டு அவ்விடம் வந்து தோன்றினான். பிறகு, பர்வதத்தின்கீழ் அகப்பட்டு உடம்பெல்லாம் முறிந்து வருந்துகிற தேவதைகளையும் அஸுரர்களையும் கண்டு, அம்ருதப் பெருக்குடைய தன் கண்ணோக்கத்தினால் தேவதைகளை மாத்ரம் புண்களெல்லாம் தீர்ந்து முன்போலவே பிழைப்பித்தானன்றி, அஸுரர்களை  பிழைப்பிக்கவில்லை. பிறகு, ஒற்றைக் கையால் அவலீலையாகவே (விளையாட்டாகவே) அந்த மந்தர பர்வதத்தை எடுத்துக் கருடன்மேல் வைத்து, தானும் ஏறிக்கொண்டு, தேவ கணங்களாலும் அஸுர கணங்களாலும் சூழப்பட்டு, க்ஷீர ஸமுத்ரம் போய்ச் சேர்ந்தான். பிறகு, பக்ஷி (பறவைகளில்) ச்ரேஷ்டனாகிய (உயர்ந்தவனாகிய) கருடன், கழுத்தினின்று மந்தர பர்வதத்தை இறக்கி, ஜலத்தின் அருகாமையில் விட்டு, பகவானால் விடை கொடுக்கப் பெற்றுப் போனான்.

ஆறாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை