ஶ்ரீமத் பாகவதம் - 173

 எட்டாவது ஸ்கந்தம் - ஐந்தாவது அத்தியாயம்

(ஐந்தாவது மனு, ஆறாவது மனு இவர்களையும், துர்வாஸருடைய சாபத்தினால் ஐச்வர்யத்தை இழந்த தேவதைகள் பகவானை ஸ்தோத்ரம் செய்ததையும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! இந்தக் கஜேந்த்ர மோக்ஷமென்னும் பகவானுடைய சரித்ரம், மிகவும் புண்யமானது; பாபங்களையெல்லாம் போக்கும். இதை உனக்கு மொழிந்தேன். இனி, ஐந்தாவதான ரைவத மன்வந்தரத்தைச் சொல்லுகிறேன். கேட்பாயாக. 

ரைவதனென்பவன், ஐந்தாவது மனுவாயிருந்தான். அவன் தாமஸ மனுவுக்கு உடன் பிறந்தவன். பலி, விந்த்யன் முதலானவர்கள், அவனுடைய பிள்ளைகள். அவர்களில், அர்ஜுனனென்பவன் ப்ரதானன் (முக்யமானவன்). அம்மனுவின் அந்தரத்தில் விபுவென்பவன் இந்த்ரனாயிருந்தான். பூததயன் முதலியவர்கள் தேவதைகளாயிருந்தார்கள். ஹிரண்யரோமர், வேதசிரர், ஊர்த்வபாஹு முதலியவர்கள் ஸப்த ரிஷிகளாயிருந்தார்கள். சுப்ரரென்பவருடைய பத்னி, விகுண்டையென்பவள். பகவான் வைகுண்டனென்று பேர் பூண்டு, வைகுண்டரென்னும் தேவ ச்ரேஷ்டர்களுடன் தன்னுடைய அம்சத்தினால், அவர்களுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். தேவியாகிய ஸ்ரீமஹாலக்ஷ்மியின், வேண்டுகோளின்மேல் அவளுடைய இஷ்டத்தை நிறைவேற்றும் பொருட்டு, அந்த வைகுண்டன், லோகாலோக பர்வதத்தின் (மலையின்) மேல், வைகுண்டமென்னும் லோகத்தைப் படைத்தான். அதை, லோகாலோக பர்வதத்திலுள்ள (மலையிலுள்ள) ஜனங்கள் நமஸ்கரிக்கிறார்கள். அந்த வைகுண்ட பகவானுடைய ப்ரபாவமும், குணங்களும், மஹத்தான ஸ்ம்ருதிகளும், என்னால் கூடுமானவளவு சொல்லப்பட்டன. 

அவனுடைய மஹிமைகளையெல்லாம் ஒருவராலும் சொல்ல முடியாது. எவன் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் குணங்களையெல்லாம் சொல்லுகிறானோ, அவன் பூமியிலுள்ள தூள்களையெல்லாம் கணக்கிட்டவனாவான். சக்ஷுவின் புதல்வன், சாக்ஷுஷனென்று ப்ரஸித்தி பெற்றவன். அவன் ஆறாவது மனுவாயிருந்தான். பூரு, புருஷன், ஸுத்யும்னன் முதலியவர்கள் சாக்ஷுஷ மனுவின் புதல்வர்கள். அப்பொழுது மந்த்ரத்ருமன் என்பவன், இந்த்ரனாயிருந்தான். ஆப்யர் முதலியவர்கள் தேவகணங்களாய் இருந்தார்கள். ஹவிஷ்மான், வீரகர் முதலியவர்கள் ஸப்தரிஷிகளாய் இருந்தார்கள். அந்த ஆறாவது மன்வந்தரத்திலும், பகவான் வைராஜருடைய பார்யையாகிய (மனைவியாகிய) ஸம்பூதியிடத்தில், தன்னுடைய அம்சத்தினால் அஜிதனென்று ப்ரஸித்தனாய் அவதரித்தான். அவன், க்ஷீரஸமுத்ரத்தைக் (பாற்கடலைக்) கடைந்து, தேவதைகளுக்கு அம்ருதத்தைத் திரட்டிக்கொடுத்தான். க்ஷீரஸமுத்ரத்தைக் கடையும்பொழுது, மந்தர பர்வதம் (மலை) அசைகையில், அப்பகவான் கூர்மரூபியாய் அம்மந்தர பர்வதத்தைத் (மலையைத்) தன் முதுகில் தரித்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்ம ரிஷி! பகவான் க்ஷீரஸமுத்ரத்தைக் (பாற்கடலைக்) கடைந்த விதத்தையும், எதற்காகக் கடைந்தானோ அதையும், கூர்மரூபியாய் மந்தர பர்வதத்தைத் (மலையைத்) தாங்கினதின் காரணத்தையும், தேவதைகளுக்கு அம்ருதம் கிடைத்த வண்ணத்தையும், அம்ருதம் தவிர இன்னம் ஏதேது உண்டாயிற்றோ அதையும் விவரித்துச் சொல்வீராக. பகவானுடைய இச்செயல், மிகவும் ஆச்சர்யமல்லவா! ஆகையால், இதை விரித்து மொழிவீராக. நெடுநாளாக ஆத்யாத்மிகம் முதலிய ஸம்ஸார தாபங்களால் {ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன) ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான துன்பங்களால்} தபிக்கப்பட்ட (எரிக்கப்பட்ட) என் மனம், தாங்கள் வர்ணிக்கிற பகவானுடைய மஹிமையை எவ்வளவு கேட்கினும் திருப்தியடையாமல் மேன்மேலும் கேட்க வேண்டுமென்று விரும்புகின்றது.

ஸூதபௌராணிகர் சொல்லுகிறார்:- ஒ, அந்தணர்களே! இவ்வாறு வினவப்பெற்ற மஹானுபாவரான சுகர், அவனுடைய கேள்விகளைப் புகழ்ந்து, பகவானுடைய வீரச்செயல்களைச் சொல்லத் தொடங்கினார்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– முன்பு, தேவதைகள் கூரான ஆயுதங்களை ஏந்தின அஸுரர்களால், யுத்தத்தில் அடியுண்டு விழுந்து, ப்ராணன்களை (உயிர்களை) இழந்து, மீளவும் எழுந்திருக்கவில்லை. மற்றும், ஒரு காலத்தில் இந்த்ரன் ஐராவதத்தின் மேல் ஏறிக்கொண்டு போகும் பொழுது, துர்வாஸ  முனிவர் தன் கழுத்திலிருந்த பூமாலையைக் கழற்றி இந்த்ரனுக்குப் பரிசாக அளித்தார். அவ்விந்த்ரன், அதை ஐச்வர்ய  மதத்தினால் (செல்வச் செருக்கால்) ஆதரிக்காமல், ஐராவதத்தின் கும்ப ஸ்தலத்தில் (தலையில்) வைத்தான். அந்த ஐராவதம் மதித்திருக்கையால் (மதம் கொண்டு இருக்கும்போது), அதையெடுத்துக் காலால் மிதித்துத் துவைத்து விட்டது. அப்பொழுது, அம்முனிவர் இந்த்ரன் மேல் கோபித்து, அவனை நோக்கி “இந்திரனே! நீ மூன்று லோகங்களுடன் ஐச்வர்யங்களெல்லாம் அழியப் பெறுவாயாக” என்று சபித்தார். 

மன்னவனே! அந்தச் சாபத்தினால், இந்த்ரனுடன் கூடின மூன்று லோகங்களும் சோபை (அழகு) அழியப்பெற்றன. அப்பொழுது, யாகாதி கர்மங்கள் எவையும் ஐச்வர்யத்தை வளர்க்க வல்லவையாகவில்லை. இந்திரன், வருணன் முதலிய தேவதைகள் அனைவரும், உலகங்களெல்லாம் சோபையற்று (அழகற்று) இருப்பதையும், யுத்தத்தில் அடியுண்டு விழுந்த தேவதைகள் பிழைத்தெழுந்திராமல் அப்படியே மாண்டு போவதையும் கண்டு, எவ்வளவு ஆலோசித்துங்கூட அதை மாற்றுவதற்குரிய உபாயம் தோன்றப்பெறாதிருந்தார்கள். பிறகு, தேவதைகள் அனைவரும் மேரு பர்வதத்தின் சிரத்திலிருக்கிற ப்ரஹ்மாவின் ஸபைக்குச் சென்று, எல்லாரும் தண்டனிட்டு ப்ரஹ்மாவுக்கு விண்ணப்பம் செய்தார்கள். அப்பால், அப்பரமேஷ்டி இந்த்ரன், வாயு முதலிய தேவதைகள் ஒளி மழுங்கிப் பலமற்றிருப்பதையும், மூன்று லோகங்களும் அமங்களமாயிருப்பதையும், அஸுரர்கள் தேஜோபலங்கள் அமைந்திருப்பதையும் கண்டு மனவூக்கத்துடன், பரமபுருஷனை த்யானித்து ஸந்தோஷத்தினால் முகம் மலரப்பெற்று, இந்த்ராதி தேவதைகளை நோக்கி “நான், ருத்ரன், நீங்கள், அஸுராதிகள், மனுஷ்யர்கள், திர்யக்குகள் (விலங்குகள்), வ்ருக்ஷங்கள் (மரங்கள்), ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து உண்டானவை), உத்பிஜ்ஜம் (முளையிலிருந்து உண்டானவை) முதலியவைகள் ஆகிய அனைவரும் பகவானுடைய அவதாரமான அநிருத்தனுடைய ஜ்ஞானாதி குணங்களின் பதினாயிரத்தில் ஒரு பாகத்தினால் படைக்கப்பட்டிருக்கிறோம். நாமெல்லாரும், அவனையே சரணம் அடைவோமாக. நம்மை எவன் படைத்தானோ, அவனே நம்மைக் காப்பவன். இதைக் காட்டிலும் மற்றொரு உபாயமும் இல்லை. 

அப்பரமபுருஷனுக்கு வதிக்கத் தகுந்தவனாவது, ரக்ஷிக்கத் தகுந்தவனாவது, உபேக்ஷிக்கத் தகுந்தவனாவது, ஆதரிக்கத் தகுந்தவனாவது, எவனுமே இல்லை. ஆயினும், ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹார (அழித்தல்) காலங்களில், ரஜஸ்ஸு, ஸத்வம், தமஸ்ஸு என்னும் மூன்று குணங்களின் தோற்றங்களுக்குக் காரணமான ஜீவாத்மாக்களின் புண்யபாப கர்மங்களுக்குத் தகுந்தபடி நடக்கிறான். ப்ராணிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸத்வ குணத்தின் தோற்றத்திற்குக் காரணமான கர்மத்திற்குத் தகுந்தபடி நடக்கும் தன்மையுள்ள அப்பகவான், ஸத்வகுணம் தலையெடுத்த தேவாதிகளைப் பாதுகாக்கும் ஸமயம் இதுவாகையால், நாமெல்லோரும் ஜகத்திற்கு ஹிதம் செய்பவனாகிய அப்பரமபுருஷனைச் சரணம் அடைவோமாக. அவன் நமக்கு ஸுகத்தை விளைப்பான். அவன், இயற்கையாகவே தேவதைகளிடத்தில் ப்ரீதியுடையவன். (ஆனால் அது பக்ஷபாதம் (ஓரவஞ்சனை) ஆகுமோவென்றால் ஆகாது. அரசன், நல்லொழுக்கமுடையவர்களிடத்தில் ப்ரீதி செய்வது அவனுக்குக் குணமேயன்றிப் பக்ஷபாதமாகாதல்லவா? அவ்வாறே, ஸத்வ குணம் தலையெடுத்த தேவதைகளிடத்தில் ப்ரீதி செய்வது, அவனுக்குக் குணமாகுமேயன்றித் தோஷமாகாது).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சத்ருக்களை அழிக்குந் தன்மையனே! ப்ரஹ்மதேவன் இவ்வாறு தேவதைகளுக்கு மொழிந்து, அவர்களோடு கூடவே தன்னுடைய லோகத்தினின்றும் புறப்பட்டு, அலோகமென்று சொல்லப்படுகின்ற இருளடர்ந்த பூமிக்கு அப்புறத்திலிருப்பதாகிய அஜிதனுடைய லோகமான வைகுண்டத்திற்குப் போனான். ப்ரஹ்மாதி தேவதைகள், பகவான் அஜிதனென்னும் பெயர் பூண்டு அவதரித்திருக்கிறானென்று கேட்டவர்களேயன்றி, பார்த்தவர்களல்லர். அத்தகைய ப்ரஹ்மதேவன், அந்த வைகுண்டலோகத்தில் என்றும் கண்ணால் காண முடியாத உருவமுடையவனும், இங்கு இருக்கிறானென்று கேள்விக்கு மாத்திரம் விஷயமான பகவானுக்கு நமஸ்காரம் செய்து, இந்திரியங்களையெல்லாம் ஸ்தோத்ரம் செய்வதற்குரியவாறு ஊக்கத்துடன் அடக்கிக்கொண்டு, உபநிஷத்தின் பொருள்களை உட்கொண்ட (உள் அடக்கிய) உரைகளால் ஸர்வஸ்மாத்பரனான (எல்லோரையும் விட மேலானவனான) அப்பகவானை ஸ்தோத்ரம் செய்தான்.

ப்ரஹ்மதேவன் சொல்லுகிறான்:- ஓ தேவனே! உன்னை நமஸ்கரிக்கிறோம். நீ எல்லோரிலும் மேற்பட்டவன். உனக்கு இணையாவது, எதிராவது, எதுவுமே இல்லை. நீயே அனைவர்க்கும் சரணம் அடையத்தகுந்தவன். நீ, மனத்திற்கு எட்டாமல் வெகு தூரத்தில் இருப்பவன். உன்னை, வாக்கினால் நிரூபிக்க முடியாது. யோகிகள், உன்னை மனத்தினால் ஸாக்ஷாத்கரிக்கினும், வேதாந்த வாக்குக்கள் உன்னை நிரூபிக்கினும், உன் ஸ்வரூப (இயற்கைத் தன்மை) ரூப (திருமேனி, திவ்ய மங்கள விக்ரஹம்), குண (கல்யாண குணங்கள்) விபூதிகளை (சொத்தான இந்த லீலா விபூதி மற்றும் நித்ய விபூதியான ஸ்ரீவைகுண்டம்) அவர்களாலும் இவ்வளவென்று அளவிடமுடியாது. ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்கள்) புருஷர்களைக் (ஜீவாத்மாக்கள்) காட்டிலும் விலக்ஷணனாகையால் (வேறானவனாகையால்), இத்தகையனென்று உன்னை ஊஹிக்க முடியாது. நீ, கர்மத்தினால் விளையும் ப்ராக்ருத சரீரமற்றவன். நீ, ப்ராணிகளுடைய ஹ்ருதயமாகிற குஹையில் வாஸம் செய்பவன். அந்த ஹ்ருதயத்திலிருக்கிற ஜீவாத்மாக்களுக்கும், முற்பட்டவன். அவர்களுக்கு அந்தந்த சரீரங்களை விளைத்தவன் நீயே. உன்னைப் பணிகிறவர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டும், அந்தராத்மாவாய் நியமிக்கும் பொருட்டும், ஹ்ருதயத்தில் அமைந்திருப்பினும், நீ இயற்கையில் தேச, கால, வஸ்து பரிச்சேதமற்றவன் (வரையறை அற்றவன்). நீ ஜகத்திற்கெல்லாம் (குடத்திற்கு மண் போல) உபாதான காரணமாயிருப்பினும், ப்ரக்ருதியைப் போல ஒன்று மற்றொன்றாக மாறுகையாவது, ஜீவனைப்போல ஸ்வபாவம் (அறிவு) மாறுகையாவது (ஏற்றத்தாழ்வு உண்டாவது), உனக்குக் கிடையாது. நீ, எவ்வகை விகாரங்களும் (மாறுபாடுகளும்) தீண்டப்பெறாதவன். நீ, ஸூக்ஷ்ம (பெயர், உருவம் இல்லாத நுட்பமான) சேதனாசேதனங்களைச் சரீரமாகக் கொண்டு, ஸ்தூல (பெயர், உருவம் உடைய) சேதனாசேதன ரூபமான இந்த ப்ரபஞ்சத்திற்குக் காரணமாகின்றாயாகையால், ஸ்வரூபம் (தன் இயற்கை நிலையே) மாறப்பெறுகையாகிற விகாரம் (மாற்றம்) உன் சரீரமான ப்ரக்ருதிக்கும், ஸ்வபாவம் மாறப் பெறுகையாகிற (அறிவில் ஏற்றத்தாழ்வு என்கிற) விகாரம் (மாற்றம்) சேதனர்களுக்குமேயன்றி, உனக்கு அவை கிடையாது. ப்ராணன், மனம், புத்தி, ஆத்மாக்கள் இவர்களையெல்லாம் நீயே ஸாக்ஷாத்கரிப்பவன். சப்தாதி விஷயங்களையும் கண், காது முதலிய இந்த்ரியங்களையும் ஜீவாத்மாக்களுக்கு நீயே விளங்கச் செய்கின்றாய். நீ, விழித்தல், ஸ்வப்னம் (கனவு) காணுதல், உறங்குதல் என்கிற மூன்று அவஸ்தைகளும் (நிலைகளும்) அற்றவன். கர்மத்தினால் விளைகிற சரீர ஸம்பந்தம் அற்றவன். அஞ்ஜானமும், அதனுடன் கலந்த ஜ்ஞானமுமாகிற நிழல், வெயில்கள் ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களையுடைய ஜீவாத்மாக்களுக்கு விளையக்கூடியவை. அவை, உனக்குக் கிடையாது. நீ, ஆகாயம் போல எங்கும் நிறைந்திருப்பவன். ஷாட்குண்யபூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); க்ருதயுகம் முதலிய மூன்று யுகங்களிலும் அவதரிப்பவன். இத்தகைய உன்னை, நாங்கள் சரணமடைகிறோம். மனத்தினால் நினைத்துச் செய்யப்படுகிற புண்ய பாப கர்மங்களால் விளைகிற ஸம்ஸாரமாகிற சக்ரம், பகவானுடைய மாயையினால் தூண்டப்பட்டுச் சுழல்கின்றது. பத்து இந்திரியங்களும், ஐந்து ப்ராணன்களும் ஆகிய இப்பதினைந்தும், அந்த ஸம்ஸாரமாகிற சக்ரத்திற்கு ஆரங்கள் (spokes). அது, வெகு சீக்ரமாகத் திரியுந்தன்மையுடையது. ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்கள் என்கிற மூன்று குணங்களும், அதற்கு மூன்று நாபிகள் (சக்கரத்தின் நடு இடம், குடம்). பூமி, ஜலம், அக்னி, வாயு, ஆகாசம், மனம் புத்தி அஹங்காரம் என்னும் இவ்வெட்டு ப்ரக்ருதிகளும் அதற்கு நேமிகள் (சக்கரத்தின் வட்டம்). அது, மின்னல் போல நிலையற்ற தோற்றமுடையது. இப்படிப்பட்ட ஸம்ஸார சக்ரம், உன்னுடைய ஸங்கல்பமாகிற இருசைப் (அச்சைப்) பற்றியே நடக்கிறதென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள். நீ, என்றும் மாறாமல் ஒரே விதமாயிருப்பவன். நீ ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் அந்தராத்மாவாகையால், பரமாத்மாவென்று கூறப்படுகின்றாய். அத்தகைய உன்னை, சரணம் அடைகிறோம். 

நீ வீற்றிருக்குமிடமான பரமபதம், கேவல சுத்தஸத்வமயமாகையால், என்றும் ஒருவாறாயிருக்கும். அது, இந்த ப்ரக்ருதி மண்டலத்திற்கு வெளிப்பட்டது. ஸம்ஸாரிகள் கண்ணுக்குப் புலப்படாதது. ராகாதி (விருப்பு, வெறுப்பு முதலிய) தோஷங்களுக்குச் சிறிதும் இடமில்லாதது. பரிசுத்தர்களான நித்ய ஸித்தர்கள் நித்யவாஸம் செய்யப்பெற்றது. அதற்கு எல்லையே கிடையாது. அந்தப் பரமபதம் பெறுதற்குப் பண்டிதர்கள், உன்னை யோக மார்க்கத்தினால் உபாஸிக்கிறார்கள். அத்தகைய உன்னைச் சரணம் அடைகிறோம். இந்த ப்ரபஞ்சத்திலுள்ள ப்ராணிகளில் ஒருவனும் உன்னுடைய மாயையைக் கடக்க வல்லவனல்லன். அனைவரும், அம்மாயையால் மதி (புத்தி) மயங்கிக் கிடக்கிறார்கள். நீ ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும் ஸமமாகவே உட்புகுந்து, நியமித்துக் கொண்டிருக்கின்றாய். ஆசைப்படத் தகுந்த பரமபுருஷார்த்தம் உன்னைவிட மற்றொன்றும் இல்லை. அத்தகையை உன்னை, ஒருவரும் அறிகிறதில்லை. உன்னுடைய அனுக்ரஹம் இருக்குமாயின், உன் மாயையால் மதி (புத்தி) மயங்காமல் அதைக் கடந்து, அந்தராத்மாவான உன்னையும் அறியலாம். 

நீ சேதனாசேதனங்களில் அமைந்திருப்பினும், அவற்றின் குணங்கள் தீண்டப்பெறாதவன். உலகத்தில் மேன்மையுடைய எங்களுக்கும் நீ மேலாயிருப்பவன். அத்தகைய உன்னை வணங்குகிறோம். இதோ இருக்கின்ற தேவதைகளும், ரிஷிகளுமாகிய நாங்கள், உனக்கு ப்ரியமான சரீரமான ஸத்வ குணத்தினால் ஸ்ருஷ்டிக்கப் பட்டவர்களாயினும் உள்ளும், புறமும் திகழ்கின்ற ஜ்ஞானப்ரகாசம் உடையவர்களாயினும், உன்னுடைய ஸூக்ஷ்மமான கதியை அறிய வல்லமையற்றிருக்கிறோம். இனி, ரஜஸ் தமோகுணங்களே தலையெடுக்கப் பெற்று, அஜ்ஞான மூடர்களான (அறிவற்றவர்களான) அஸுராதிகள் உன் கதியை எவ்வாறு அறிவார்கள்? 

ஜராயுஜம் (கருவறையில் உண்டாகும்), அண்டஜம் (முட்டையிலிருந்து உண்டாகும்), ஸ்வேதஜம் (வியர்வையிலிருந்து உண்டாகும்), உத்பிஜ்ஜம்  (முளையிலிருந்து உண்டாகும்) என்று நான்கு வகைப்பட்ட பூதங்கள் அமைந்த இப்பூமண்டலம் முழுவதும் எவனால் படைக்கப்பட்டு எவனுக்குப் பாதங்களாயிருக்கின்றதோ, அவன் அளவற்ற ஐச்வர்யமுடையவன்; ஸ்வதந்த்ரன். அவனையே பரப்ரஹ்மமென்று கூறுகிறார்கள். புருஷஸூக்தத்தில் ஓதப்பட்ட மஹாபுருஷன் அவனே. அவன் எங்களுக்கு அருள் புரிவானாக. மஹா வீர்யமுடைய ஜலம், அப்பரமபுருஷனுடைய ரேதஸ்ஸு. மூன்று லோகங்களும், லோகபாலர்களும் அவனிடத்தினின்றே உண்டாகின்றனர்; அவனால் ஜீவிக்கின்றனர்; அவனிடத்திலேயே வளர்கின்றனர். அவனே பரப்ரஹ்மமென்று கூறப்படுகிறான்; அளவற்ற ஐச்வர்யமுடையவன். அத்தகைய அப்பரமபுருஷன், எங்களுக்கு அருள் புரிவானாக. தேவதைகளுக்கு அம்ருதம் கொடுப்பவனாகையால், ஆஹாரம், பலம், ஆயுள், இவற்றை விளைப்பவனும் வ்ருக்ஷங்கள் (மரங்கள்) முதலிய ஸ்தாவரங்களையும், ஜங்கமங்களையும் (அசைவனவற்றையும்) அம்ருத கிரணங்களால் வளர்த்து, அவற்றிற்கு ப்ரபுவாயிருப்பவனுமாகிய சந்திரனைப் பரமபுருஷனுடைய மனத்தினின்று உண்டானவனென்றும், அந்தச் சந்த்ரனே அவனுடைய மனமென்றும் சொல்லுகிறார்கள். பரப்ரஹ்மமும், மஹா விபூதியுமாகிய அப்பரமபுருஷன், எங்களுக்கு அருள் புரிவானாக. 

தன்னிடத்தில் ஹோமம் செய்த சரு (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற த்ரவ்யம்), புரோடாசாதிகளை (அக்னியில் ஹோமம் செய்யப்படும் மாவினால் ஆன பண்டம்) இந்த்ரன் முதலிய தேவதைகளுக்குக் கொண்டு சேர்ப்பவனும், யஜ்ஞாதி கர்மங்களின் அனுஷ்டானத்திற்காகவே தோன்றினவனும், தேஹத்தினிடையில் ஜாடராக்னியென்னும் (வயிற்றில் இருந்துகொண்டு நாம் உண்ணும் பொருட்களை ஜீரணம் செய்யும் நெருப்பு) பெயருடன் இருந்து உணவைப் பக்வம் செய்கின்றவனுமாகிய அக்னியை அப்பரமபுருஷனுடைய முகத்தினின்று உண்டானவனென்றும், அவனே அவனுடைய முகமென்றும் சொல்லுகிறார்கள். மஹா வீபூதியுடைய அப்பரமபுருஷன், எங்களுக்கு அருள்புரிவானாக. ஸூர்யன் அர்ச்சிராதி மார்க்கத்தில் உட்பட்டவன்; (அர்ச்சிஸ் = அக்னி; மோக்ஷத்தை அடையும் ஜீவன் இந்த சரீரத்தை விட்டு வெளியேறி, நம் கண்ணால் பார்க்க முடியாத நுட்பமான சரீரத்துடன் அக்னி தேவதை, பகலின் தேவதை, சுக்ல பக்ஷ தேவதை, உத்தராயண தேவதை, மழை தேவதை, வாயு தேவதை, ஸூர்யன், சந்திரன், மின்னல் தேவதை, வருணன், இந்த்ரன், ப்ரஜாபதி ஆகிய ஆதிவாஹிகர்கள் வழிகாட்டி உபசாரம் செய்ய,  ஸ்ரீவைகுண்டத்தை அடைவான். இப்படி அக்னி முதல் ப்ரஜாபதி வரையான வழி அர்ச்சிராதி மார்க்கம் எனப்படும்) ருக்கு, யஜுஸ், ஸாமம் என்கிற மூன்று வேதஸ்வரூபன்; பரமபுருஷனுக்கு வாஸஸ்தானமாயிருப்பவன்; மோக்ஷத்திற்கு த்வாரம் (வாசல்) போன்றவன்; மோக்ஷத்தை விளைக்கவல்ல புண்யகர்மங்களை அனுஷ்டிப்பதற்குரிய காலத்தை அறிவிப்பவன்; உதய அஸ்தமயங்களால், ப்ராணிகளின் ஆயுஸ்ஸைப் பறிப்பவனாகையால், ம்ருத்யுவைப் போன்றவன். இத்தகைய ஸூர்யனை அப்பரம புருஷனுடைய நேத்ரம் (கண்) என்று சொல்லுகிறார்கள். மஹா விபூதியுடைய அப்பரமபுருஷன், எங்களுக்கு அருள்புரிவானாக. வாயு, ஜங்கம (அசையும்), ஸ்தாவர (அசையாத) ரூபமான ஸமஸ்த பூதங்களுக்கும் மனோபலம், தேஹபலம், இந்த்ரியபலம் இவற்றை விளைக்கிறான். மற்றும் அவர்களுடைய தேஹங்களில் ப்ராணாதி நாமங்களால் ஐந்து வகையாகப் பிரிந்திருக்கிறான். ப்ராணிகளின் புத்தி முதலியவற்றிற்கு அதிஷ்டான தேவதைகளாகிய நாங்கள், மஹாராஜனை ப்ருத்யர்கள் (வேலைக்காரர்கள்) அனுஸரிப்பதுபோல, அந்தப் பஞ்சவ்ருத்தி ப்ராணனை அனுஸரித்திருக்கிறோம். அத்தகைய வாயு அப்பரமபுருஷனுடைய ப்ராணனிடத்தினின்று உண்டானான். மஹாவிபூதியுடைய அப்பரமபுருஷன், எங்களுக்கு அருள்புரிவானாக. அவனுடைய காதிலிருந்து திசைகள் உண்டாயின. தேஹத்திலுள்ள ரந்த்ரங்கள் (த்வாரங்கள், ஓட்டைகள்), அவனுடைய ஹ்ருதயத்தினின்றும் உண்டாயின. கர்மேந்திரியங்கள், ஜ்ஞானேந்த்ரியங்கள், மனம், ப்ராணன், சரீரம் இவற்றிற்கு ஆதாரமான ஆகாயம் அப்பரமபுருஷனுடைய நாபியினின்றும் உண்டாயிற்று. மஹாவிபூதியுடைய அப்பரம புருஷன், எங்களுக்கு அருள்புரிவானாக. அவனுடைய பலத்தினின்று மஹேந்த்ரனும், அனுக்ரஹத்தினின்று தேவதைகளும், கோபத்தினின்று ருத்ரனும், ஸந்தோஷத்தினின்று ப்ரஹ்மாவாகிய நானும், விவரங்களினின்று காயத்ரி முதலிய சந்தங்களும், ரிஷிகளும், ஆண் குறியினின்று ப்ரஜாபதியும் உண்டானோம். மஹாவிபூதியுடைய அப்பரமபுருஷன் எங்களுக்கு அருள்புரிவானாக. 

அவனுடைய மார்பினின்று, ஸ்ரீமஹாலக்ஷ்மியும், சாயையினின்று (நிழலிலிருந்து) பித்ருக்களும், ஸ்தனத்தினின்று (மார்பகத்திலிருந்து) தர்மமும், முதுகினின்று அதர்மமும், சிரத்தினின்று (தலையிலிருந்து) த்யுலோகமும், சிரிப்பினின்று அப்ஸரஸ்த்ரீகளும் உண்டானார்கள். மஹா விபூதியுடைய அப்பரமபுருஷன் எங்களுக்கு அருள்புரிவானாக. 

அவனுடைய முகத்தினின்று ப்ராஹ்மண குலமும், இந்திரியங்களுக்கு விஷயமாகாத பொருளை அறிவிக்குந் திறமையுடைய வேதமும், புஜங்களினின்று க்ஷத்ரியனும் பலமும், துடைகளினின்று வைச்யனும் வர்த்தகம் செய்யுந் திறமையும், பாதங்களினின்று நான்காம் வர்ணத்தவரும் சுச்ரூஷையும் உண்டானார்கள். மஹாவிபூதியுடைய அப்பரம புருஷன் எங்களுக்கு அருள்புரிவானாக. 

அவனுடைய கீழுதட்டினின்று லோபமும், மேலுதட்டினின்று ப்ரீதியும், மூக்கினின்று காந்தியும், ஸ்பர்சத்தினின்று பசுக்களுக்கு ஹிதமான காமமும், புருவங்களினின்று யமனும், இமை மயிர்களினின்று காலமும் உண்டானார்கள். மஹா விபூதியுடைய அப்பரமபுருஷன், எங்களுக்கு அருள்புரிவானாக. பூமி, ஜலம் முதலிய பஞ்சபூதங்கள் காலம், கர்மம், ஸத்வாதி குணங்கள், ப்ரஹ்மாண்டம், அதிலுள்ள கார்யவர்க்கம் இவையெல்லாம் அவனுடைய ஸங்கல்பத்தினால் நிர்மிக்கப்பட்டனவென்று சொல்லுகிறார்கள். அவன், சேதன அசேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணனாகையால் (வேறுபட்டவனாகையால்), அவனுடைய ஸ்வரூபம் பெரிய வித்வான்களுக்கு மாத்ரமே அறியக் கூடியதன்றி, ஸாதாரணமாய் மற்ற எவர்க்கும் அறிய முடியாது. மஹாவிபூதியுடைய அப்பரமபுருஷன் எங்களுக்கு அருள்புரிவானாக. 

அவன், ப்ரளயகாலத்தில் சேதனர் (ஜீவாத்மாக்கள்), அசேதனம் (அறிவற்ற ஜடப்பொருட்கள்), காலம் முதலிய சக்திகள் ஓய்ந்திருக்கப் பெற்றவன்; ஸ்வதந்தரமான (வேறு எவர்க்கும் உட்படாது தன் இஷ்டப்படியான) ஆத்ம ஸ்வரூபத்தின் உண்மையை அனுபவிக்கையால் நிறைவாளனாயிருப்பவன்; ப்ரக்ருதியின் பரிணாமங்களான சப்தாதி விஷயங்களில் பற்றற்றவன்; ஸ்வபாவ ஸித்தமான (இயற்கையாக ஏற்பட்ட) ஐச்வர்யமுடையவன். அத்தகைய அப்பரமபுருஷனுக்கு அடிக்கடி நமஸ்காரம். உன் திவ்யமங்கள விக்ரஹத்தைக் காண விரும்பி உன்னைச் சரணம் அடைந்த எங்களுக்குப் புன்னகையோடு கூடினதும், தாமரை மலர் போன்றதுமாகிய உன் முகத்தைக் காட்டுவாயாக. நாங்கள் உன்னைக் கண்ணால் காண ஆசைப்படுகிறோம். தர்மம் தலை சாய்ந்து, அதர்மம் தலையெடுக்கும் காலங்கள் தோறும், ஸங்கல்பத்தினால் அவதாரங்களைக் கொண்டு எங்களால் செய்யமுடியாத கார்யங்களைச் செய்கிறாயல்லவா? அப்படிப்பட்ட உனக்கு, உன் திவ்யமங்கள விக்ரஹத்தைக் காட்டுவது சேராததன்று. 

ப்ராணிகள் தாங்கள் ஆசைப்படுகிற சப்தாதி விஷயங்கள் கிடைக்காமையால் வருந்தி மீளவும் அவற்றைப் பெறுதற்காக, வருத்தம் அதிகமாயும் ஸுகம் அற்பமாயும், இருக்கப்பெற்ற கர்மங்களைச் செய்கிறார்கள். அவையெல்லாம் வீணாகின்றன. உன்னிடத்தில் அர்ப்பணம் செய்த கர்மம் எதுவும் வீணாகிறதில்லை. இவ்வுலக வாழ்வின் செயல்களும், மிகவும் அல்பமானதாய் இருப்பினும், ஸர்வேச்வரனான உன்னிடத்தில் அர்ப்பணம் செய்யப்படுமாயின், அது பயனற்றதாகாது. நீ ஸமஸ்த ப்ராணிகளுக்கும் அந்தராத்மாவாயிருப்பவன். ஆனது பற்றியே ப்ரீதிக்கிடமானவன். ஹிதம் செய்பவனும் நீயேயாகையால், உன்னிடத்தில் அர்ப்பணம் செய்த கர்மம் எதுவும் வீணாகாது. 

வ்ருக்ஷத்தின் (மரத்தின்) வேரில் ஜலம் கொட்டினோமானால், அதன் அடிப்பாகமும், அதினின்று பிரிந்த கிளைகளும், மற்றும் இலை, தளிர், பூ, காய் முதலியவைகளும் திருப்தியடைகின்றன. இவ்வாறே பரமாத்மாவான உனக்குச் செய்த ஆராதனம், ஸமஸ்த புருஷார்த்தங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும். உன் செயல்கள் விலக்ஷணமாகையால், இப்படிப்பட்டவை என்று நிரூபிக்க முடியாதவை. நீ எல்லாவிதத்திலும் அளவற்றவன். கெட்ட குணங்கள் எவையும் தீண்டப்பெறாதவன். நீ ஸத்வாதி குணங்களை அடக்கியாள்கின்றாய். ப்ராணிகளின் புண்ய, பாப, கர்மங்களுக்குத் தகுந்தபடி, அவர்களுக்கு ஸத்வாதி குணங்களின் தோற்றங்களை விளைக்கின்றாய். இத்தகைய உனக்கு, நாங்கள் இப்பொழுது நமஸ்காரம் செய்கிறோம். உன்னை அருள் புரிவிப்பதற்குரிய உபாயம் நமஸ்காரமேயன்றி மற்றொன்றுமில்லை. 

ஐந்தாவது அத்தியாயம் முற்றிற்று.

கருத்துரையிடுக (0)
புதியது பழையவை