ஶ்ரீமத் பாகவதம் - 301

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்தைந்தாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் கம்ஸனால் கொல்லப்பட்ட தேவகியின் பிள்ளைகளைக் கொண்டு வருதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, வஸுதேவன் ஒருகால் தன் புதல்வர்களான ராம, க்ருஷ்ணர்கள் வந்து தன் பாதங்களில் விழுந்து, வந்தனம் செய்து நிற்க, அவர்களை ப்ரீதியுடன் புகழ்ந்து மொழிந்தான். அவ்வஸுதேவன் தன் பிள்ளைகளான ராம, க்ருஷ்ணர்களின் ப்ரபாவத்தை வெளியிடுகின்ற முனிவர்களின் வசனத்தைக் கேட்டு, அவர்களின் வீரச் செயல்களையும் கண்டு, இவர்கள் ஜகதீச்வரர்களேயென்று நம்பிக்கை உண்டாகப் பெற்று, அவர்களை அழைத்து இவ்வாறு மொழிந்தான்.

வஸுதேவன் சொல்லுகிறான்:- க்ருஷ்ண! க்ருஷ்ண! மிகுந்த ஆச்சர்ய சக்தியுடையவனே! பலராம! புராண புருஷனே! நீங்கள் இந்த ஜகத்திற்கெல்லாம் காரணர்களும், ப்ரக்ருதி (அசேதனம்) புருஷர்களைக் (ஜீவாத்மா) காட்டிலும் விலக்ஷணர்களுமான (வேறான) ஒன்றான பரமபுருஷர்களென்று நான் அறிவேன். நீங்கள் ப்ரக்ருதி புருஷர்களைச் சரீரமாக உடையவர்கள். இந்த உலகம் எங்கு, யாரால், எதிலிருந்து, எதனைக் கொண்டு, எதற்காக, எது எதுவாக, எப்பொழுது, எவ்வாறு உண்டாகிறதோ அவ்வனைத்துமான ப்ரக்ருதியையும் (அறிவற்ற ஜடப்பொருட்களின் முலமான மூலப்ரக்ருதிக்கும்), புருஷர்களையும் (ஜீவாத்மாக்களுக்கும்) நேரே நியமிக்கிற மஹானுபாவனாகிய நீயே. 

இந்திரியங்களின் அறிவுக்கு எட்டாதவனே! உன்னிடத்தில் உன்னால் படைக்கப்பட்டதும், தேவர், மனுஷ்யர், பசுக்கள், வ்ருக்ஷங்களென்று (மரங்கள்) பலவாறாயிருப்பதுமாகிய இந்த ஜகத்தில், உன் சரீரமாகிய ஜீவன் மூலமாய் ப்ரவேசித்து, ப்ராணனையும், ஜீவனையும் சரீரமாக உடையவனாகி, அவற்றின் ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதியான தோஷங்கள் எவையும் தீண்டப்பெறாமல் அதைப் பறிக்கின்றன. இந்த ப்ரபஞ்சத்திலுள்ள தேவ, மனுஷ்யாதி சரீரங்களின் ஸ்ருஷ்டிக்குக் (பிறப்பிற்குக்) காரணங்களான ப்ராணாதிகளின் சக்திகள் எவ்வெவை உண்டு; அவற்றிற்கெல்லாம் நீயே நிர்வாஹகனாகையால் (நியமிப்பவனாகையால்) அவை பரமாத்மாவான உன்னுடையவைகளே. சக்திகளையுடைய அந்த ப்ராணாதிகள் உனக்குப் பரதந்த்ரங்களேயன்றி (உட்பட்டவை) ஸ்வதந்த்ரங்களன்று (தன்னிச்சையாக செயல்படவல்லவை அன்று). இனி அவற்றின் சக்திகள் உன்னதீனங்களென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

அந்த ப்ராணாதிகளின் சக்திகளுக்கு அவற்றுள் ஒன்றுக்கொன்று நிர்வாஹகங்களாய் (நியமிப்பவைகளாய்) இருக்கலாகாதோ என்றால், நிர்வாஹகங்களாக மாட்டாது. ஏனென்றால், அவற்றில் ஒவ்வொன்றுக்கு ஒவ்வொரு சக்தியே உள்ளது. ஒன்றின் சக்தி மற்றொன்றுக்குக் கிடையாது. ஒன்றை விட மற்றொன்று விலக்ஷணமாகையால் (வேறாகையால்), ஒன்றின் சக்திக்கு மற்றொன்று நிர்வாஹகமென்று (நியமிப்பவையென்று) சொல்ல முடியாது. இங்குமங்கும் உலாவுகின்ற தேஹங்களின் சேஷ்டை (செயல்), ஜீவன், பரமாத்மா இவ்விருவருடைய சேஷ்டையேயன்றி, கேவல ஜீவனுடைய சேஷ்டையன்று. அந்த சேஷ்டையை ஜீவனே ஸ்வதந்த்ரனாயிருந்து (தன்னிச்சையாக செயல்பட்டு) நடத்துகிறதில்லை. பரமாத்மாவினால் அனுமதி கொடுக்கப் பெற்றே நடத்துகிறானன்றி ஸ்வதந்த்ரனல்லன். சேதனர்களே இவ்வாறு பரதந்த்ரர்களாயிருக்க (பரமாத்மாவிற்கு உட்பட்டவை), அசேதனங்களான ப்ராணாதிகள், பரதந்த்ரங்கள் (பரமாத்மாவிற்கு உட்பட்டவை) என்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ? 

சந்த்ரனுடைய காந்தி, அக்னியின் தேஜஸ்ஸு, ஸூர்யனுடைய ஒளி, நக்ஷத்ரங்கள், மின்னல் இவற்றின் ப்ரகாசம், பர்வதங்களின் நிலைமை, பூமியின் குணமான கந்தம் (வாசணை), பூமி ஸமஸ்த ப்ராணிகளுக்கும் ஆதாரமாயிருக்கை ஆகிய இவையெல்லாம் உண்மையை ஆராய்ந்து பார்க்கையில், நீயேயென்று சொல்லக்கூடியவைகளாய் இருக்கின்றன. (எல்லாம் உன்னால் நிர்வஹிக்கப்படுபவைகளே). ப்ராணிகளுக்கு த்ருப்தியை விளைக்கை, அவற்றின் ஜீவனத்திற்கு ஹேதுவாயிருக்கை, நனையச்செய்கை, மாதுர்ய குணம் (மன நிறைவு தரும் தன்மை) இவையும் இவற்றிற்கு ஆதாரமான ஜலமும் நீயே. (இவற்றிற்கெல்லாம் நீயே நியமிப்பவன்). ப்ரவ்ருத்தி (செயலில் ஈடுபடுவது), ஸாமர்த்யம் (திறமை), வேகம், தாரண (தாங்கும்) ஸாமர்த்யம் (திறன்), வியாபாரம், நடை ஆகிய வாயுவின் சக்திகள் யாவும் ஸர்வேச்வரனான நீயே. (அவற்றிற்கும் நீயே நியமிப்பவன்). திசைகளின் இடைவெளியும், திசைகளும் நீயே. சப்தமும் அதற்கு ஆதாரமான ஆகாசமும் நீயே. நாதம், வர்ணம், ஓங்காரம் ஆகிய வாக்கின் பேதங்களும், அவற்றால் அறியப்படுகிற பொருள்களின் பேதங்களும் நீயே. (ஸ்போடம் (ஒரு சொல்லைக் கேட்டவுடன் மனதில் ஏற்படும் அர்த்தம்), நாதம், ஓங்காரமென்றும், பரை (மூல ஒலி) பஸ்யந்தி (அந்த நுட்பமான ஒலியின் விரிவு) மத்யமை (ஓங்கார வடிவான எழுத்து) என்றும் வழங்கி வருகிற வாக்கின் பேதங்களும், வைகரி (பொருள்களைப் பிரித்து விளக்குதலான) என்று வழங்குகிற வர்ணங்களும், பதங்களும் நீயே). விஷயங்களை அறிவிக்கும் திறமைகளாகிற இந்த்ரியங்களின் சக்திகளும், அவற்றிற்கு அத்திறமைகளை விளைக்கிற அபிமானி தேவதைகளும் நீயே. புத்தியின் அத்யவஸாயமும் (நிச்சயத்தன்மையும்), ஜீவனுடைய உண்மையான நினைவும் நீயே. ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்களுக்குக் காரணமான பூதாதியென்கிற தாமஸ அஹங்காரமும், இந்திரியங்களுக்கு உதவி செய்கிற ராஜஸ அஹங்காரமும், இந்த்ரியங்களுக்குக் காரணமான ஸாத்விக அஹங்காரமும் அனுபவித்து மிகுந்த கர்மத்தையுடைய ஜீவாத்மாக்களுக்குப் பலனைக்கொடுக்கிற காமமும் (ஆசையும்) நீயே. 

குறிப்பு (ஸாத்விக அஹங்காரமும், ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம், இதனைப்பற்றிய விளக்கம் 5வது ஸ்கந்தம் 7வது அத்யாயத்தில் படைப்பின் முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது)

பொன், மண் முதலியவற்றிற்குப் பற்பல உருவங்கள் உண்டாகி மாறிப் போயினும், அவற்றிற்கு ஆதாரமான அந்தப் பொன், மண் முதலியவை அழியாதிருப்பது போல, அவஸ்தைகள் (நிலைகள்) வருவதும் போவதுமாயிருப்பினும், அவற்றிற்கு ஆதாரமாய் அழியாதிருக்கின்ற வஸ்துக்களும் நீயே. ஸத்வம், ரஜஸ்ஸு, தமஸ்ஸென்கிற மூன்று குணங்களும் அவற்றின் பரிணாமங்களான மஹத்து முதலியவைகளும், ஸூக்ஷ்ம (கண்ணுக்குத் தெரியாத நுட்பமான) சேதனங்களைச் (ஜீவாத்மாக்களை) சரீரமாகவுடைய பரப்ரஹ்மமாகிய உன்னிடத்திலேயே உன் ஸங்கல்ப ஜ்ஞானத்தினால் கற்பிக்கப்பட்டவை. உன் ஸங்கல்பத்தினால் படைக்கப்பட்ட மஹத்து முதலிய இந்தத் தத்வங்களெல்லாம் உண்மையில் உன்னிடத்தில் இல்லை. அவை ப்ரக்ருதி முதலியவற்றில் இருக்கின்றன. 

நீ சேதனா சேதனங்களைக் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்). அவை ப்ரக்ருதி முதலியவற்றின் மூலமாய் உன்னிடத்தில் இருப்பவையன்றி, நேரே இருப்பவையன்று. (பரிணாமங்கள் (மாற்றங்கள்) எல்லாம் ப்ரக்ருதி முதலியவற்றைச் சேர்ந்தவையன்றி, உன்னைச் சேர்ந்தவைகளன்று. நீ என்றும் விகாரம் (மாறுதல்) அற்றவன்). நீ அந்த ப்ரக்ருதி பரிணாமங்களில் (மூலப்ரக்ருதியின் மாற்றங்களில்) புகுந்து ஸர்வகாலமும் அமைந்திருக்கின்றாயென்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. (நான் சொன்ன விஷயங்களுக்கெல்லாம் சாஸ்த்ரமே ப்ரமாணம்). ஸத்வாதி குணங்களின் ப்ரவாஹ ரூபமான (தொடர்ந்து இயங்குகிற) இந்த ஸம்ஸாரத்தில் விழுந்திருக்கிற ஜீவாத்மாக்கள், வருந்தியும் அறிய முடியாத ஸர்வாந்தராத்மாவான உன்னுடைய உண்மையை அறியாமல், அஜ்ஞானத்தினால் புண்ய, பாப கர்மங்களை விளைத்துக்கொண்டு, ஜன்ம (பிறப்பு), ஜரா(கிழத்தனம்), மரணாதி துக்கங்களை அனுபவிக்கிறார்கள். 

ஜகதீச! இவ்வுலகத்தில் ப்ராணிகள் வருந்தியும் கிடைக்க அரியதும், நல்ல திறமையுள்ள இந்திரியங்கள் அமைந்திருப்பதுமாகிய மனுஷ்ய ஜன்மத்தைத் தெய்வாதீனமாய்ப் பெற்றும், உன் மாயையினால் தங்கள் நன்மையில் மனவூக்கமற்றுத் திரிகையில், அவர்களுடைய வயதெல்லாம் வீணாகவே கழிகின்றது. தேஹத்திலும் அதைத் தொடர்ந்த பிள்ளை, பெண்டிர் முதலியவற்றிலும் “இது என்னுடைய தேஹம். இவர்கள் என் புதல்வர்கள். இவள் என் பார்யை (மனைவி). இது என் வீடு” என்னும் ஸ்னேஹமாகிற பாசங்களால் ப்ரஹ்மதேவன் முதல், பசு, பக்ஷி வரையிலுள்ள இந்த ப்ரபஞ்சத்தையெல்லாம் நீ பந்தனம் செய்கின்றாய் (கட்டுகின்றாய்). நீங்கள் எங்கள் புதல்வர்களன்று; ப்ரக்ருதி புருஷர்களுக்கு நியாமகர்களும் (நியமிப்பவர்களும்), அவற்றைக்காட்டிலும் விலக்ஷணர்களுமாகிய (வேறான) ஒன்றான பரமபுருஷர்களே.

நீங்கள் பூமிக்குப் பாரமாயிருக்கிற க்ஷத்ரியர்களை அழிக்கும் பொருட்டு, இங்கு அவதரித்தீர்கள். இவ்வாறு முன்பு ஸூதிகாக்ருஹத்தில் (குழந்தை பிரசவிக்கும் இடம்) நீயே மொழிந்தனையல்லவா? வருந்தினவர்களுக்கு பந்துவே! ஆகையால், மற்றொரு உபாயமுமில்லாத நான், சரணமடைந்தவர்களின் ஸம்ஸார பயத்தைப் போக்க வல்லவைகளான உன் பாதார விந்தங்களைச் சரணம் அடைந்தேன். “ஸுகமாயிருக்கிற நீ ஏன் இப்படி ஸம்ஸாரத்தை வெறுக்கின்றாய்?” என்கிறாயோ? சொல்லுகிறேன், கேள். 

இந்த்ரியங்களின் திருப்திக்காகச் சப்தாதி விஷயங்களில் விழுந்து இதுவரையில் அனுபவித்தது போதும் போதும். இனி வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த சப்தாதி விஷயங்களில் (உலக இன்ப விஷயங்களில்) அபிநிவேசத்தினால் (தீவிர ஈடுபாட்டால்) அல்லவோ நான் அறிவு கெட்டு, மரணமடையும் தன்மையதான தேஹத்தை ஆத்மாவாகவும், ப்ரக்ருதி புருஷர்களுக்கு நியாமகனும் (நியமிப்பவனும்), அவற்றைக் காட்டிலும் விலக்ஷணனுமாகிய (வேறானவனுமாகிய) உன்னை என் பிள்ளையாகவும் ப்ரமிக்கின்றேன். (ஆகையால் சப்தாதி விஷயங்களை (உலக இன்ப விஷயங்களை) விரும்பி அனுபவித்தது போதும்). “நான் காமத்தினால் விளையும் பிறவியற்றவனாயினும், நான் ஏற்படுத்தின தர்ம மர்யாதைகளை நிலைநிறுத்திப் பாதுகாக்கும் பொருட்டு, யுகங்கள் தோறும் அவதரிக்கின்றேன்” என்று நீ ஸுதீகாக்ருஹத்தில் (குழந்தை பிரசவிக்கும் இடம்) எனக்கு மொழிந்தாயல்லவா? “சதுர்ப்புஜனான (நான்கு கைகள் கொண்ட) அத்தேவன் வேறு. நான் வேறு” என்கிறாயோ? அப்படியன்று. நீ பலவகை உருவங்களை ஏற்றுக் கொள்வதும்,  விடுவதுமாயிருக்கின்றனை. அப்பொழுது சதுர்ப்புஜ (நான்கு கைகள் கொண்ட) உருவத்துடன் தோன்றி, உடனே அவ்வுருவத்தை மறைத்து, இவ்வுருவத்தை எடுத்துக்கொண்டாய். ஆகையால், நீ அப்பரம புருஷனே. 

ஆகாயம் எல்லா இடங்களிலும் வ்யாபித்திருப்பினும் தன் ஸ்வரூபம் மாறாதிருப்பது போல, நீ பற்பல உருவங்களை ஏற்றுக் கொள்ளினும், உன் ஸ்வபாவத்தைக் கைவிடாமல் என்றும் ஒருவாறாகவே இருக்கும் தன்மையன். மிகுந்த புகழுடையவனே! அளவற்ற மஹிமையுடையவனும் எங்கும் நிறைந்தவனுமாகிய உன்னுடைய விபூதிகளையும், ஆச்சர்ய சக்திகளையும் எவன் தான் அறியவல்லவன்? எவனும் அறியமாட்டான். 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), ஸாத்வத (யாதவ) ச்ரேஷ்டனுமாகிய (சிறந்தவனுமான) ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு மொழிந்த தந்தையின் வார்த்தையைக் கேட்டு, வணக்கமுற்றுச் சிரித்துக் கொண்டே, இனிய உரையுடன் மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- புதல்வர்களான எங்களைக் குறித்துத் தத்வங்களை விரித்து மொழிந்தீர்களே. இந்த உங்கள் வார்த்தை மிகவும் பொருள் அமைந்திருக்கின்றது. எல்லாம் பரப்ரஹ்ம ஸ்வரூபமேயென்று எங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு எங்களையே உத்தேசித்து மொழிந்தீர்கள். யாதவ ச்ரேஷ்டனே! நான், நீங்கள், என் தமையனாகிய இந்தப் பலராமன், த்வாரகையிலுள்ள மற்றவர்கள் ஆகிய அனைவரும், பலபடச் சொல்லியென். ஜங்கம (அசைபவை), ஸ்தாவரங்கள் (அசையாதவை) அடங்கின இந்த ஜகத்தெல்லாம் இவ்வாறே பரமாத்மாவைக் காரணமாக உடையதும், அவனுக்குச் சரீரமாகி அவனை அந்தராத்மாவாகவுடையதும், அவனால் நிர்வஹிக்கப்படுவதுமாய் இருக்குமாகையால், எல்லாம் அவனேயன்றி வேறில்லை. 

பரமாத்மா ஸ்வயம்ப்ரகாசன். தேவாதி சரீரங்களைக் காட்டிலும், அவற்றிற்கு அபிமானிகளான ஜீவாத்மாக்களைக் காட்டிலும் வேறுபட்டவன். அவன் தானே ப்ரக்ருதியின் குணங்களான ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களால் மஹத்து முதலிய தத்வங்களையும், அவற்றைக் கொண்டு தேவ, மனுஷ்யாதி சரீரங்களையும் படைத்து, அவற்றுள் பலவாறு நிறைந்திருக்கிறானென்று ப்ரமாணங்கள் முறையிடத் தெரிகின்றது. ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், பூமி ஆகிய பஞ்சபூதங்கள் தம்மால் படைக்கப்பட்ட வஸ்துக்களில் அந்தந்த வஸ்துக்களுக்கு உரியபடி சில இடங்களில் வெளித் தோற்றத்தையும், சில இடங்களில் சிறுமையையும், சில இடங்களில் பெருமையையும், சில இடங்களில் ஒருமையையும் சில இடங்களில் பன்மையையும் பெறுவதுபோல, இப்பரமாத்மாவும் சில இடங்களில் வெளித்தோற்றத்தையும், சில இடங்களில் சிறுமையையும், சில இடங்களில் பெருமையையும், இயற்கையில் ஒருமையையும், தன்னால் வியாபிக்கப்படும் வஸ்துக்கள் பலவாகையால், பன்மையையும் பெறுகின்றான்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வஸுதேவன் இவ்வாறு பகவான் மொழிந்த வார்த்தையைக் கேட்டு, பரப்ரஹ்ம ஸ்வரூபமல்லாத வஸ்து எதுவுமே இல்லையென்று தெரிந்து கொண்டு, பேத (வேற்றுமை) புத்தி தொலையப்பெற்று, மனக்களிப்புற்றுப் பேசாதிருந்தான். குரு ச்ரேஷ்டனே! பிறகு, ஸமஸ்த தேவதா ஸ்வரூபனான (எல்லா தேவதைகளின் வடிவான) பகவானுக்கு அவதரிக்குமிடமாகையால், ஸமஸ்த தேவதா ஸ்வரூபமான (எல்லா தேவதைகளின் வடிவான) தேவகி, புதல்வர்களான ராம, க்ருஷணர்கள் மரணம் அடைந்த குருபுத்ரனை மீட்டுக் கொண்டு வந்து, கொடுத்தார்களென்று கேள்விப்பட்டு, மிகவும் வியப்புற்று, அவர்களை அழைத்து, தன் பிள்ளைகள் கம்ஸனால் ஹிம்ஸிக்கப்பட்டு மரணம் அடைந்ததை நினைத்துக்கொண்டு, மனம் தழதழத்துக் கண்ணும் கண்ணீருமாய்க் கேட்போர்களுக்கு மன இரக்கம் உண்டாகும்படி இவ்வாறு மொழிந்தாள்.

தேவகி சொல்லுகிறாள்:- ராம ராம! அளவிட முடியாத ஸ்வரூபமுடையவனே! க்ருஷ்ண! ஆச்சர்ய சக்தியுடைய யோகிஸ்வரர்களுக்கும் ஈஸ்வரனே! நீங்கள் உலகங்களைப் படைக்கின்ற ப்ரஹ்மாதிகளுக்கும், நியாமகர்களான (நியமிப்பவர்களான) ஜகத்காரண புருஷர்களென்று நான் அறிவேன். அத்தகைய நீங்கள், கால வசத்தினால் ஸத்வகுணம் சிறிதுமின்றி அழிந்து, சாஸ்த்ர மர்யாதைகளைக் கடந்து நடப்பவர்களும், பூமிக்குப் பாரமாயிருப்பவர்களுமாகிய மன்னவர்களை அழிக்கும் பொருட்டு, என்னிடத்தினின்று அவதரித்தீர்கள். உன்னுடைய அனேகமாயிர அம்சங்களில் ஓர் அம்சத்தின் அனேகமாயிர அம்சங்களில் ஓரம்சத்தினால் இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாராதிகள் (அழித்தல்) நடக்கின்றன. ஸமஸ்த ப்ரபஞ்சத்திற்கும் (முழு உலகிற்கும்) அந்தராத்மாவாகி அந்த ப்ரபஞ்சமெல்லாம் தானேயாயிருப்பவனே! அத்தகைய பூர்ண ப்ரஹ்மஸ்வரூபனான உன்னை, நான் இப்பொழுது சரணம் அடைந்தேன். 

நீங்கள், உங்கள் குருவான ஸாந்தீபினியால் நெடுநாளைக்கு முன்பு மரணம் அடைந்த தன் புதல்வனைக் கொண்டு வந்து கொடுக்கும்படி தூண்டப்பட்டு, யமன் வீட்டினின்று அவரது புதல்வனை மீட்டுக்கொண்டு வந்து குரு தக்ஷிணையாகக் கொடுத்தீர்களாமே. ஆச்சர்ய சக்தியுடையவர்களில் சிறந்த நீங்கள், அவ்வாறே என் மனோரதத்தையும் (மன விருப்பத்தையும்) நிறைவேற்ற வேண்டும். கம்ஸனால் கொல்லப்பட்ட என் பிள்ளைகளைப் பார்க்க விரும்புகிறேன். அவர்களை வரவழைத்துக் காட்டுவீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குருகுலத்தை வளர்ப்பவனே! இவ்வாறு தாயால் தூண்டப்பட்ட ராம, க்ருஷ்ணர்கள் யோகமாயையைக் கைப்பற்றி, பலிசக்ரவர்த்தியின் உலகமாகிய ஸூதலத்திற்குப் (கீழ் உலகத்திற்குப்) போனார்கள். தைத்ய ராஜனான (அஸுர அரசனான) பலி, ஸமஸ்த ஆத்மாக்களுக்கும் தெய்வமும், தனக்கு மிகவும் இஷ்டதெய்வமுமாகிய அந்த ராம, க்ருஷ்ணர்கள் அந்த ஸுதலமென்கிற தன்னுலகத்தில் வந்திருக்கக் கண்டு, ஸந்தோஷ ஸாகரத்தில் மூழ்கின மனமுடையவனாகி, தன் குடும்பத்துடன் அப்படியே எழுந்து நமஸ்கரித்தான். 

அப்பலிசக்ரவர்த்தி, அவர்களுக்குச் சிறந்த ஆஸனங்களை அளித்து, அதில் உட்கார்ந்த அம்மஹானுபாவர்களின் பாதார விந்தங்களை அலம்பி, ப்ரஹ்மதேவன் வரையிலுள்ள ஸமஸ்த லோகங்களையும் புனிதஞ் செய்யவல்ல அந்த ஜலத்தைத் தான் பரிவாரத்துடன் சிரஸ்ஸில் தரித்தான். அவன், விலையுயர்ந்த ஆடைகள் ஆபரணங்கள், அங்கராகங்கள் (திருமேனியில் பூசும் வாசணை பொருட்கள்), பூமாலை, தூபம், தீபம், அம்ருதம் போன்ற பக்ஷயங்கள் (உணவுப்பொருட்கள்) இவை முதலிய அளவற்ற பொருட்களையும், தன் குலம், பணம் இவற்றையும், தன்னையும் ஸமர்ப்பித்து, அவர்களைப் பூஜித்தான். 

மன்னவனே! அவ்விந்த்ரஸேனன், (பலிக்கு இந்த்ரஸேனனென்று மற்றொரு பெயர்) ப்ரேமத்தினால் உருகின மனத்தில் அந்தப் பகவானுடைய பாதார விந்தங்களைத் தரித்து, ஆநந்த நீர்களால் கண்கள் நிரம்பவும் உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகவும் பெற்று, தழதழத்த உரையுடன் மொழிந்தான்.

பலி சொல்லுகிறான்:- தன் படங்களின் ஒரு பாகத்தில் ஜகத்தையெல்லாம் தரிக்கின்ற மஹானுபாவனான ஆதிசேஷனுக்கு நமஸ்காரம். உலகங்களையெல்லாம் படைப்பவனும், கர்ம ஜ்ஞான பக்தியோகங்களை வெளியிட்டு, அவற்றால் ஆராதிக்கப்படுகின்றவனும் அளவிட முடியாத ஸ்வரூப, ரூப, குண, விபூதிகளை உடையவனும், மூன்று லோகங்களிலும் உள்ளே புகுந்து, நியமித்துத் தரித்துக்கொண்டிருக்கும் பரமாத்மனும், எங்கும் வியாபித்திருப்பினும், அவ்வவற்றின் தோஷங்கள் தீண்டப்பெறாதவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நமஸ்காரம். 

உங்கள் தர்சனம் சிலபேர்களுக்கு வருந்திப் பெறக்கூடியதும், சிலர்க்கு வருந்தியும் பெறக்கூடாததுமாயிருப்பினும், உன் கருணைக்குப் பாத்ரமாகிய சிலர்க்கு, அனாயாஸமாகக் கிடைக்கும். ரஜஸ், தமோ குணங்கள் நிறைந்த ஸ்வபாவமுடையவர்களாயினும், உங்கள் தர்சனம் எங்களுக்கு அனாயாஸமாகக் கிடைத்தது. இதற்கு உன் க்ருபையே காரணமன்றி, மற்ற எதுவும் காரணமன்று. தைத்யர், தானவர், கந்தர்வர், சித்தர், வித்யாதரர், யக்ஷர், ராக்ஷஸர், பிசாசர், பூதர், ப்ரமதராயகர் (சிவனின் சேவகர்கள்) இவர்கள் அனைவரும் சுத்த ஸத்வத்திற்கு முக்யாதாரமாயிருப்பவனும், நேரே சாஸ்த்ரத்தினால் அறியத்தகுந்த ஸ்வரூபமுடையவனுமாகிய உன்னிடத்தில் என்றும் வேரூன்றின வைரம் (பகைமை) உடையவர்கள். 

நாங்களும் அந்தத் தைத்ய வர்க்கத்தில் சேர்ந்தவராகையால், அத்தன்மையர்களே. மற்றுமுள்ள கம்ஸாதிகளும் அத்தகையர்களே. செந்தாமரைக்கண்ணனே! அவர்கள் அனைவரும் ஸாலோக்யம், ஸாமீப்யம், ஸாரூப்யம், ஸாத்மதை முதலிய முக்திகளை அடைந்தார்கள். 

(ஸாலோக்யம் - பரம புருஷனனான பகவானை உபாஸனம் செய்தவர்களில் சிலர் எம்பெருமானின் லோகத்தில் வஸிக்கின்றனர்

ஸாமீப்யம் - சிலர் எம்பெருமானுக்குச் சமீபத்தில் வஸிக்கின்றனர்.

ஸாரூப்யம் - சிலர் எம்பெருமானுக்குச் சமமான ரூபத்தை அடைகின்றனர் 

ஸாயுஜ்யம்  - சிலர் எம்பெருமானுக்குச் சமமான போகத்தை அனுபவிக்கின்றனர்.

ஸாயுஜ்யம் என்பது ஜீவாத்மா மற்றும் பரமாத்மா இருவருக்கும் அனுபவிக்கும் பொருள் வேறுபாடு இன்றி இருப்பது. 

ஸார்ஷ்டிதா என்பது அவ்விருவரின் அனுபவத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமை.)

உன்னிடத்தில் இடைவிடாமல் மனப்பற்று விளையுமாயின், அது பலனை விளைத்துவிடும். பக்தி இருந்தால் தான் முக்தி உண்டாகுமென்கிற நிர்ப்பந்தம் இல்லை. த்வேஷமாயினும் (வெறுப்பு) உன்னை எப்பொழுதும் நினைவு மூட்டிக்கொண்டிருக்குமாயின், அவன் பாபங்களெல்லாம் தீர்ந்து முக்தியைப் பெறுவான். ஆகையால், உன்னிடத்தில் எவ்விதத்திலாயினும் மாறாமல் மனப்பற்று நேரப்பெறுகையே முக்திக்குக் காரணம்.

கம்ஸன் முதலிய சிலர், உன்னிடத்தில் நிலைநின்ற வைரம் (பகைமை) செய்து, அதனால் உன்னையே மாறாமல் நினைத்துக் கொண்டிருந்து, முக்தியை அடைந்தார்கள். சிலர், பக்தியினால் முக்தியை அடைந்தார்கள். சிலர் (கோபிகைகள்) உன்னிடத்தில் காமத்தினால் முக்தியை அடைந்தார்கள் . (கம்ஸாதிகள் வைரத்தினால் உன்னை அணுகாமல் ஒதுங்கியிருப்பினும், முக்தியை அடைந்தார்கள். தேவாதிகள், உன்னிடத்தில் ப்ரீதியுடையவராகி, உன்னை அணுகியிருப்பினும், ஸத்வகுணம் தலையெடுத்திருப்பினும், அவர்களைப் போல் முக்தியை அடையவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றால், தேவாதிகள் பெரும்பாலும் அஹங்கார (நான்), மமகாரங்களால் (எனது) உன்னை மறந்து, ஸத்வகுணம் தலையெடுத்த போது மாத்ரம் நினைப்பார்கள், கம்ஸாதிகள் த்வேதஷத்தின் (வெறுப்பின்) மிகுதியால், உன்னை ஓயாமல் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆகையால், உன்னிடத்தில் எவ்விதத்திலாயினும் மாறாத மனப்பற்று நேரப் பெறுகையே முக்திக்குக் காரணமன்றி, மற்றொன்றும் அன்று. தேவாதிகள் அத்தகைய மனப்பற்று நேராமையால், முக்தியை அடையவில்லை. கம்ஸாதிகள் அது நேர்ந்தமையால், முக்தியை அடைந்தார்கள்.

யோகேச்வரர்களுக்கும் ஈச்வரனே! யோகீச்வரர்களுங்கூட உன்னுடைய யோகமாயையை இன்னது இத்தகையதென்று அறிய முடிகிறதில்லை. நாங்கள் அதை எப்படி அறிவோம். (அதன் ஸ்வரூபத்தை அறியாத நாங்கள் அதை எப்படி தாண்டுவோம்?) ஆகையால் மற்ற எதிலும் விருப்பமில்லாத பெரியோர்களால் தேடத் தகுந்த உன் பாதார விந்தங்களில் நிலைநின்ற மதியுடையவனாகி, பாபங்களுக்கிடமான இல்லற வாழ்க்கையாகிற பாழுங்கிணற்றினின்று கரையேறி, ஜகத்திற்கெல்லாம் ரக்ஷகங்களான வ்ருக்ஷங்களின் (மரங்களின்) அடிகளில் தானே உதிர்ந்த பழம் முதலியவற்றைப் புசித்து ஜீவித்துக்கொண்டு, இந்த்ரியங்களெல்லாம் அடங்கி, தனியனாகவாவது, எல்லோர்க்கும் நண்பர்களான பெரியோர்களுடன் கலந்தாவது திரியும்படி, என்னிடத்தில் நீ அருள்புரிவாயாக. 

நியமிக்கத்தகுந்தவர்களுக்கு நியாமகனே (நியமிப்பவனே)! சேதனா சேதனங்களெல்லாம் (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களெல்லாம்) உன்னுடைய நியமனத்திற்கு உட்பட்டவையேயன்றி, அதற்கு உட்படாதது எதுவுமே இல்லை. எங்களுக்குக் கட்டளை அளிப்பாயாக. ப்ரபூ! எங்களைப் பாபமற்றவர்களாகச் செய்வாயாக. உனது கட்டளையை ச்ரத்தையுடன் அனுஷ்டிக்கிறவன், கர்ம பந்தத்தினின்று விடுபடுவானல்லவா?

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- முதல் அந்தரமாகிய ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில், மரீசியென்னும் ப்ரஜாபதிக்கு ஊர்ணையென்னும் பார்யை (மனைவி) இடத்தில் ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். அத்தேவர்கள், ப்ரஹ்மதேவன் தன் புதல்வியான ஸரஸ்வதியைப் புணர விரும்பக் கண்டு சிரித்தார்கள். அவர்கள், அந்தக் கொடும் செயலால் அஸுர யோனியை (பிறவியை) அடைந்து, ஹிரண்யகசிபுவுக்குப் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அவர்கள் யோகமாயையினால் பறியுண்டு, தேவகியின் உதரத்தில் பிறந்தார்கள். 

ராஜனே! அவர்களைக் கம்ஸன், ஹிம்ஸித்தான். அந்தத் தேவகி, அவர்களைத் தன் புதல்வர்களாக நினைத்துச் சோகிக்கிறாள். அவர்கள், உன்னருகில் இதோ இருக்கின்றனர். தாயான தேவகியின் சோகத்தைப் போக்கும் பொருட்டு, இவர்களை இவ்விடத்தினின்றும் கொண்டு போகின்றோம். அப்பால், ப்ரஹ்ம தேவனைச் சிரித்த பாபத்தினின்று விடுபட்டு, மனவருத்தமற்றுப் புண்ய லோகத்தைப் பெறுவார்கள். ஸ்மரன், உத்கீதன், பரிஷவங்கன், பதங்கன், க்ஷத்ரபுக்கு, க்ருணி ஆகிய இவ்வறுவரும் பிறகு, என் அனுக்ரஹத்தினால் பெரியோர்கள் பெறும் கதியான முக்தியைப் பெறுவார்கள்.

ஸ்ரீசுதர் சொல்லுகிறார்:- அந்த ராம, க்ருஷ்ணர்கள் இவ்வாறு மொழிந்து, இந்த்ரஸேனனால் (பலியினால்) பூஜிக்கப்பட்டு, அவர்களை அழைத்துக் கொண்டு, மீண்டு த்வாரகைக்கு வந்து, தாயான தேவகியிடம் புதல்வர்களைக் கொடுத்தார்கள். தேவகியும் அப்புதல்வர்களைக் கண்டு, புத்ர ஸ்னேஹத்தினால் ஸ்தனங்களில் பால் பெருகப் பெற்று, அவர்களை மடியில் ஏற்றி அணைத்து, அடிக்கடி உச்சி முகர்ந்தாள். ஜகத்தின் ஸ்ருஷ்டியை நடத்துகிற ஸ்ரீவிஷ்ணுவின் மாயையினால் மதிமயங்கப் பெற்ற அந்தத் தேவகி, பிள்ளைகளின் ஸ்பர்சத்தினால் பால் பெருகப் பெற்ற ஸ்தனத்தை ப்ரீதியுடன் அவர்களுக்குப் பானம் செய்வித்தாள். அவர்கள், கதாதரனான ஸ்ரீக்ருஷ்ணன் பானம் செய்து மிகுந்திருப்பதும், அம்ருதம் போன்றதுமாகிய அந்தத் தேவகியின் ஸ்தன்யத்தைப் பானம் செய்து, ஸ்ரீமந் நாராயணனான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருமேனியின் ஸ்பர்சத்தினால் ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின அறிவு நேரப் பெற்று, ஸ்ரீக்ருஷ்ணன், தேவகி, தந்தையாகிய வஸுதேவன், பலராமன் இவர்களை நமஸ்கரித்து, ஸமஸ்த பூதங்களும் பார்த்துக்கொண்டிருக்கையில் கிளம்பி ஆகாய மார்க்கத்தினால் தேவலோகம் போய்ச் சேர்ந்தார்கள். 

மன்னவனே! தேவகி, மரணம் அடைந்த பிள்ளைகள் அவ்வாறு மீண்டு வந்து புறப்பட்டுப் போனதைக் கண்டு, மிகவும் வியப்புற்று, எல்லாம் ஸ்ரீக்ருஷ்ணனுடைய மாயையினால் (ஆச்சர்ய சக்தியினால்) நடந்ததென்று நினைத்தாள். பாரதனே! ஸ்ரீக்ருஷ்ணன் அளவற்ற வீர்யமுடையவன்; ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); பரமாத்மன். அவனுடைய வீர்யங்கள் அற்புதமானவை. இத்தகைய அவனுடைய வீரச்செயல்கள் பற்பலவும் உண்டு. அவற்றிற்கு முடிவே கிடையாது.

ஸ்ரீஸுதர் சொல்லுகிறார்:- ஜகத்தின் பாபங்களை அடியோடு போக்குவதும், வ்யாஸ புத்ரராகிய சுக முனிவர் விரித்துரைத்ததும், ஸ்ரீக்ருஷ்ண பக்தர்களின் செவிக்கு ஆபரணம் போன்றதும், தூய புகழனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய சரித்ரமுமாகிய இந்த வ்ருத்தாந்தத்தை எவன் தான் கேட்கிறானோ, அல்லது பிறரைக் கேட்பிக்கிறானோ, அவன் பகவானிடத்தில் மனவூக்கமுற்று, எவ்விதத்திலும் பயமின்றி, க்ஷேயமாயிருப்பதாகிய அப்பகவானுடைய லோகத்தைப் பெறுவான். 

எண்பத்தைந்தாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை