தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து நான்காவது அத்தியாயம்
(ரிஷிகள் ஸ்ரீக்ருஷ்ண, ராமர்களைப் பார்க்க வருதலும், வஸுதேவனுக்கும், ரிஷிகளுக்கும் ஸம்பாஷணமும் (உரையாடலும்), ரிஷிகள், வஸுதேவனுக்கு யாகம் செய்வித்தலும், அவரவர் திரும்பிப் போதலும்.)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குந்தி, காந்தாரி, த்ரௌபதி, ஸுபத்ரை இவர்களும், மற்றுமுள்ள ராஜபத்னிகளும், ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் மிகுந்த பக்தியுடைய கோபிகைகளும், ஸர்வாந்தராத்மாவும், ஷாட்குண்ய பூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்குபவனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் கபடமற்ற (சூது இல்லாத) ஸ்னேஹம் நிறைந்த ருக்மிணி முதலியவர்களின் வசனத்தைக் கேட்டு, அனைவரும் ஆனந்த நீர் நிரம்பின கண்களுடையவராகி, வியப்புற்றார்கள்.
இவ்வாறு பெண்கள் பெண்களோடும், புருஷர் புருஷர்களோடும், பேசிக் கொண்டிருக்கையில், வ்யாஸர் நாரதர், ச்யவனர், தேவலர், அஸிதர், விச்வாமித்ரர், சதாநந்தர், பரத்வாஜர், கௌதமர், பரசுராமர், அவருடைய சிஷ்யர்கள், மஹானுபாவரான வஸிஷ்டர், காலவர், ப்ருகு, புலஸ்த்யர், கச்யபர், அத்ரி, மார்க்கண்டேயர், ப்ருஹஸ்பதி, த்விதர், தரிதர், ஏகதர், ப்ரஹ்மபுத்ரரான அங்கிரஸ்ஸு, அகஸ்த்யர், யாஜ்ஞவல்க்யர் இம்முனிவர்களும், வாமதேவர் முதலிய மற்றும் பல முனிவர்களும், ராம, க்ருஷ்ணர்களைப் பார்க்க விரும்பி, அவ்விடம் வந்தார்கள்.
முன்னதாகவே அங்கு உட்கார்ந்திருக்கிற மன்னவர் முதலியவர்களும், பாண்டவர்களும், ஸ்ரீக்ருஷ்ண - ராமர்களும் உலகங்களால் பூஜிக்கப்பட்ட மஹானுபாவர்களான அம்முனிவர்களைக் கண்டு, விரைந்தெழுந்து நமஸ்கரித்தார்கள். அனைவரும் அம்முனிவர்களைப் பூஜித்தார்கள். ஸ்ரீக்ருஷ்ணனும், பலராமனும் தானுமாக, “நல்வரவாகுக?” என்று விசாரித்து, ஆஸனம் அளித்து, பாத்யம், அர்க்யம், பூமாலை, தூபம், சந்தனம், குங்குமம் முதலிய பூச்சு இவைகளால் அவர்களைப் பூஜித்தான். தர்மத்தைக் காக்கும் பொருட்டு ஏற்றுக் கொண்ட திருவுருவமுடைய ஸ்ரீக்ருஷ்ண பகவான், அப்பெருஞ்சபை முழுவதும் பேசாமல் கேட்டுக் கொண்டிருக்கையில், ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற அம்முனிவர்களைக் குறித்து இவ்வாறு மொழிந்தான்.
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஓ முனிவர்களே! இவ்வுலகத்தில் நாங்களே ஜன்மம் படைத்தவர்கள். ஜன்மத்தின் பலன் முழுவதும் எங்களுக்குக் கை கூடிற்று. ஏனென்றால், தேவதைகளுக்கும் கிடைக்க அரிதான யோகீச்வரர்களாகிய உங்கள் தர்சனம் எங்களுக்குக் கிடைத்ததல்லவா? அல்ப (குறைந்த) புண்யர்களும் (புண்யம் செய்தவர்களும்), ப்ரதிமைகளையே (பொம்மைகளையே) தேவதையென்று நினைத்துக் கொண்டிருப்பவர்களுமான ஸாதாரண மனுஷ்யர்களாகிய எங்களுக்கு உங்களை தரிசித்தல், ஸ்பர்சித்தல், வினவுதல், வணங்குதல், பாதங்களைப் பூஜித்தல் முதலிய இந்நன்மைகள் எப்படி நேர்ந்தன? இது ஆச்சர்யமாயிருக்கின்றது.
ஜலமயமான புண்ய தீர்த்தங்களும், மண்ணாலும் சிலையாலும் இயற்றப்பட்ட தேவதா ப்ரதிமைகளும் (பொம்மைகளும்), கண்ட மாத்ரத்தில் ப்ராணிகளைப் புனிதம் செய்ய வல்லவையாக மாட்டாது. பின்னையோவென்றால், நெடுங்காலம் ஆராதித்தால் தான் புனிதம் செய்யும். ஸத் புருஷர்களோவென்றால், கண்டவுடனே புனிதம் செய்வார்கள். தேஹத்தைக் காட்டிலும் ஆத்மா வேறுபட்டவன் என்னும் அறிவு உடையவன், அக்னி, ஸூர்யன், சந்த்ரன், நக்ஷத்ரங்கள், பூமி, ஜலம், ஆகாயம், காற்று, வாக்கு, மனம் இவற்றின் அபிமானி தேவதைகளைப் பணிவானாயின், அவைகள் அவனுடைய பாபத்தைச் சீக்கிரத்தில் போக்க வல்லவையாக மாட்டாது. ஸத்புருஷர்களோவென்றால், ஒரு முஹூர்த்த காலம் பணிந்த மாத்ரத்தில், ப்ராணிகளின் பாபங்களை எல்லாம் போக்குவார்கள். வாத (உடலில் உள்ள வாயு), பித்தம் (கணைய நீர்) ச்லேஷ்மங்கள் (சளி) என்கிற மூன்று தாதுக்களின் ஸமுதாயமும் (கூட்டமும்), சவம் (பிணம்) போன்றதுமாகிய தேஹத்தில் ஆத்மாவென்னும் அபிமானமும், பார்யா (மனைவி), புத்ராதிகள் (பிள்ளை) இடத்தில் தன்னுடையவரென்னும் அபிமானமும் (எண்ணமும்), மண், சிலை முதலியவற்றால் இயற்றின் ப்ரதிமைகளில் (பொம்மைகளில்) மாத்ரம் தேவதையென்னும் அபிமானமும் (எண்ணமும்), கங்காதி ஜலத்தில் மாத்ரம் புண்ய தீர்த்தமென்னும் அபிமானமும் (எண்ணமும்), எவனுக்கு உள்ளதோ, அவன் பசுவும், கழுதையும் போல ஒன்றுமறியாத மூடனே.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- எங்கும் தடைப்படாத மதியுடைய மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தனக்குத் தகாத வசனத்தை இவ்வாறு மொழியக் கேட்ட அவ்வந்தணர்கள், மயங்கின மதியுடையவர்களாகி, ஒன்றும் பேசாதிருந்தார்கள். (ஆ! இதென்ன? தன்னைப் பணிவதனாலுண்டான மஹிமையுடைய நம்மை, இவன் தன்னைக்காட்டிலும் மேலானவர்களாக வைத்துச் சொல்லுகிறான். ஆகையால், இவன் சொல்லுவது விபரீதமாயிருக்கிறதே என்று மதிமயங்கிப் பேசாதிருந்தார்கள்.) ஸ்ரீக்ருஷ்ணன், உலகத்திலுள்ள ஜனங்கள் பெரியோர்களை இவ்வாறு பணியவேண்டுமென்று தெரிவிக்கும் பொருட்டு, தான் ஸர்வேச்வரனாயிருந்தும், தன்னை நியமிக்கத் தகுந்தவனாக அபிநயிக்கிறான் (நடிக்கிறான்) என்று அம்முனிவர்கள் நன்றாக நெடுநேரம் ஆலோசித்தறிந்து, புன்னகை செய்து கொண்டு, ஜகத்குருவான அந்தப் பகவானைக் குறித்து இவ்வாறு மொழிந்தார்கள்.
முனிவர்கள் சொல்லுகிறார்கள்:- உலகங்களைப் படைக்கின்ற ப்ரஹ்மாதிகளுக்கும் நியாமகனே (நியமிப்பவனே)! நாங்கள் தத்வ வித்துக்களில் (ஆத்ம, பரமாத்ம தத்வங்களை அறிந்தவர்களில்) சிறந்தவராயினும், உன்னுடைய மாயையினால் மிகவும் மதிமயக்கமுற்றோம். நீ ஸர்வ நியாமகனாயிருந்தும் (எல்லாவற்றையும் நியமிப்பவனாயிருந்தும்), நியமிக்கத் தகுந்த கர்ம வச்யன் (பாப, புண்ய வினைகளுக்கு உட்பட்டவன்) போல் அபிநயிப்பதைக் (நடிப்பதைக்) கண்டு, உலகத்தவர்களுக்குப் பெரியோர்களிடத்தில் அவர்கள் இருக்க வேண்டிய நிலைமையை அறிவிக்கும் பொருட்டு, இவ்வாறு அபிநயம் செய்கிறாய் (நடிக்கிறாய்) என்று தெரிந்து கொள்ள முடியாமல் ப்ரமித்தோம் (கலங்கினோம்) அல்லவா? ஆ! ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸர்வேச்வரனுடைய செயல் மிகவும் ஆச்சர்யமானது.
நாங்கள், தத்வவித்துக்களில் (ஆத்ம, பரமாத்ம தத்வங்களை அறிந்தவர்களில்) சிறந்தவர்களாயிருந்தும், உன் மாயையினால் மதிமயங்கினமை ஆச்சர்யம். நீ ஸர்வ நியாமகனாயிருந்தும் (எல்லாவற்றையும் நியமிப்பவனாயிருந்தும்), மனுஷ்ய சேஷ்டையினால் தன்னுடைய மேன்மையை மறைத்துக் கொண்டு, கர்மவச்யன் (பாப, புண்ய வினைகளுக்கு உட்பட்டவன்) போல் பிறர் நியமிக்கும்படி நடக்கையாகிற உன் செயல், மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது. தத்வங்களை உணர்ந்தவர்களில் சிறந்த நாங்கள், எவனுக்கு இஷ்டப்படி நியமிக்கத் தகுந்தவர்களோ, அப்படிப்பட்ட ஸர்வேச்வரன், மனுஷ்ய சேஷ்டையினால் மறைந்து, பிறர்க்கு நியமிக்கத் தகுந்த கர்ம வச்யனான (பாப, புண்ய வினைகளுக்கு உட்பட்ட) ஸாதாரண ஜீவன் போல் அபிநயிப்பது (நடிப்பது), மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது. புண்ய பாபகர்மங்களால் விளையும் செயலற்ற நீ, காரண அவஸ்தையில் (நிலையில்) ஒருவனாகவேயிருந்து, தானே இந்த ஜகத்தையெல்லாம் பலவாறு படைக்கின்றாய்; பிறகு, பாதுகாக்கின்றாய்; பிறகு, ஸம்ஹரிக்கின்றாய். ஆயினும், ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) இடமான சேதனா சேதனங்களின் (அறிவுடைய ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களின்) தோஷங்களால் நீ தீண்டப்படுகிறதில்லை.
மண்ணுருண்டை ஒன்றே குடம், மடக்கு, சால் முதலிய பல உருவங்களையும், பல பெயர்களையும் பெற்று, எவ்வாறு பலவாறு விளங்குகின்றதோ, அவ்வாறே ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) முன்பு நாம (பெயர்) ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) இடமல்லாத ஸூக்ஷ்ம (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான) சேதனா சேதனங்களைச் சரீரமாகக் கொண்டு ஒருவனாயிருந்த நீ, நாம ரூபங்களுக்கிடமான ஸ்தூல (கண்ணுக்குப் புலப்படக்கூடிய, பெயர் உருவங்களுடன் கூடிய), சேதனா சேதன ரூபமான இந்த ப்ரபஞ்சமாய் விரிந்து, பலவாறாகத் தோற்றுகின்றாய். அவ்வாறு அளவற்ற மஹிமையுடைய நீ, இவ்வாறு மனுஷ்ய சேஷ்டையால் மறைந்து, கர்ம வச்யனான (பாப, புண்ய வினைகளுக்கு உட்பட்ட) ஒரு ஜீவன் போல் அபிநயிப்பது (நடிப்பது), மிகவும் ஆச்சர்யமாயிருக்கின்றது.
நீ, ப்ரக்ருதி, புருஷர்களைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஸர்வேச்வரனாயினும், உன் பக்தர்களைக் காப்பதற்கும், துஷ்டர்களை நிக்ரஹிப்பதற்கும், வர்ணாச்ரம தர்மங்களுக்கு உட்பட்ட கர்மவச்யனான (பாப, புண்ய வினைகளுக்கு உட்பட்ட) ஜீவன் போன்று, ப்ராக்ருத (ஸத்வ, ரஜஸ், தமஸ் வடிவமான) உருவம் போன்ற சுத்த ஸத்வமயமான உருவத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றாய். மற்றும், உன்னுடைய லீலா ரூபமான ஆசாரத்தினால், வர்ணாச்ரம தர்மங்களை நிலை நிறுத்தி, அனாதியான வேத மார்க்கத்தை வளர்க்கின்றனை. நீ கர்மவச்யனான (பாப, புண்ய வினைகளுக்கு உட்பட்ட) ஜீவன் போல் அபிநயிக்கினும் (நடிக்கினும்), உண்மையில் பரம புருஷனே.
புருஷர்களுக்கு நேரக்கூடிய ப்ரமம் முதலிய தோஷங்கள் தீண்டப் பெறாததும், உபவாஸம் முதலிய தவம், வேதாத்யயனம், வர்ணாச்ரம தர்மங்கள், பரமார்த்தமான சேதனா சேதனங்கள், அவற்றைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) பரமபுருஷன் ஆகிய இவற்றின் ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவிப்பதுமாகிய வேதம், உனக்கு ஹ்ருதயம் போன்றது.
வேத சாஸ்த்ரத்தையே தன்னை உள்ளபடி அறிவதற்குக் காரணமாகவுடையவனும், ஸர்வாந்தராத்மாவுமாகிய உனக்கு, ப்ராஹ்மண குலம் ஸ்தானமாயிருக்கின்றது. (உன்னுடைய உண்மையை அறிவிக்கிற வேதத்திற்கு ஆதாரமாகையால், ப்ராஹ்மண குலம் உனக்கு ஆதாரமாயிருக்கின்றது). மற்றும், நீ ப்ராஹ்மணர்களை வெகுமதிப்பவர்களில் சிறந்தவன். ஆகையால், நீ ப்ராஹ்மண குலத்தை மேன்மைப்படுத்துகின்றாய். ஸத்புருஷர்களுக்கு ப்ராப்யனும் (அடையப்படும் பொருளாயும்), ப்ராபகனுமாய் (அடைவதற்கு வழியுமாய்) இருக்கிற உன்னோடு ஸமாகமம் (சந்திப்பு) நேர்ந்தமையால், எங்களுக்கு இப்பொழுது ஜன்ம ஸாபல்யம் (பிறவிப்பயன்) உண்டாயிற்று. எங்கள் வித்யையும், தவமும், கண்களும் இப்பொழுது பயன்பெற்றன. உன்னுடைய ஸமாகமம் (சந்திப்பு), நன்மைகளெல்லாவற்றிலும் சிறந்த நன்மையல்லவா? ஆகையால், உன்னுடைய ஸமாகமம் (சந்திப்பு) நேரப்பெற்ற எங்கள் பிறவி, முதலியவையெல்லாம் பயன்பெற்றன. அத்தகைய நீ, உன்னை உன்னுடைய ஆச்சர்ய சக்தியினால் மறைத்துக் கொண்டிருக்கின்றாய்.
நீ பரமாத்மா; ஷாட்குண்ய பூர்ணன் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவன்); உலகங்களுக்கு ஸுகம் விளைப்பதற்காக அவதரித்தவன்; எங்கும், எவ்விதத்திலும், எக்காலத்திலும் தடைபடாத ஸங்கல்பமுடையவன். இத்தகைய உனக்கு நமஸ்காரம். தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணமான (வேறான) ஆத்ம ஸ்வரூபத்தை ஆராய்ந்தறிந்து, அவ்வாத்மானுபவத்தில் ஆழ்ந்திருக்கிற இந்த வ்ருஷ்ணி (யாதவ) ராஜர்களும்கூட உன்னை உள்ளபடி அறிய மாட்டார்கள்.
ஏனென்றால், நீ ஸமஸ்த ஜீவாத்மாக்களையும் மயக்கச் செய்கிற மாயையாகிற திரையினால் உன்னைப் பிறர் அறியாதபடி மறைத்துக் கொண்டிருக்கின்றனை. ஆகையால், இவர்கள் எப்பொழுதும் உன்னை விட்டுப் பிரியாதிருப்பினும், ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவராயினும், உன்னை உள்ளபடி அறிய வல்லரல்லர். ஸத்வாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ் முதலிய) குணங்களின் பரிணாமமான சப்தாதி விஷயங்களைப் புருஷார்த்தமாகவும், ஸத்வாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ் முதலிய) குணங்களின் பரிணாமமான தேஹத்தை ஆத்மாவாகவும் ப்ரமிக்கும் புருஷன், படுத்துறங்கி ஸ்வப்னம் (கனவு) காண்பானாயின், அவன் ஆத்மாவை ஸ்வப்னத்தில் (கனவில்) ஏற்படுகிற நாமரூபங்களும், இந்த்ரியங்களும் உடையவனாக அறிவானன்றி, இயற்கையில் நாம ரூபாதிகளற்றவனாகவும், தேஹத்தைக் (உடலை) காட்டிலும் விலக்ஷணனாகவும் (வேறானவனாகவும்) அறிய மாட்டான்.
பரப்ரஹ்மனே! இவ்வாறே விழித்துக் கொண்டிருக்கும் புருஷனும், உன் மாயையினால் ஏற்பட்ட நாமரூபங்கள், இந்திரியங்கள் இவற்றிற்கு உரிய சேஷ்டையினால் (செயலினால்), ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையைப் பற்றின அறிவு மறையப் பெற்று, ஆத்மாவல்லாத தேஹத்தை ஆத்மாவாகவும், ஸ்வதந்த்ரனல்லாத ஆத்மாவை ஸ்வதந்த்ரனாகவும், ப்ரமிக்கின்ற (நாம் பகவானுக்கு உட்படாது, தாமே தம் விருப்பப்படி செயல்பட வல்லவர்கள் என்ற மனக்கலக்கம் உடைய), மனமுடையவனாகி, உன்னை ஆச்ரயித்திருக்கிற ஜீவாத்மாவை அறிகிறதில்லை. ஜீவாத்மாவுக்கு அந்தராத்மாவான உன்னை அறியவே மாட்டானென்பதைப் பற்றிச் சொல்ல வேண்டுமோ?
பாபராசிகளையெல்லாம் பறக்கடித்துச் சுத்தி செய்வதும், நன்கு நிறைவேறின பக்தியோகமுடைய பெரியோர்களால் மனத்தில் ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதுமாகிய உன் பாதார விந்தத்தை, இப்பொழுது நாங்கள் கண்டோம். பல பெரியோர்கள், மிகவும் தலையெடுத்த பக்தியினால், கர்ம வாஸனையும், அஜ்ஞானமாகிற (அறியாமையாகிற) மறைவும் தீரப்பெற்று, உன் கதியைப் பெற்றார்கள். ஆகையால், தன் பக்தர்களான எங்களை அனுக்ரஹிப்பாயாக.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜர்ஷீ! அம்முனிவர்கள் ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்து இவ்வாறு மொழிந்து, த்ருதராஷ்ட்ரன், யுதிஷ்டிரன் இவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, தங்கள் ஆச்ரமங்களுக்குப் போக மனம் கொண்டார்கள். அப்பொழுது, பெரும் புகழ்கள் பெற்ற வஸுதேவன், அவர்கள் அவ்வாறு புறப்பட்டுப் போக மனம் கொண்டிருப்பதைக் கண்டு, அவர்களிடம் சென்று வணங்கி, தன் கைகளால் அவர்களுடைய பாதங்களைப் பிடித்துக் கொண்டு, மிக்க மனவூக்கத்துடன் இவ்வாறு மொழிந்தான்.
வஸுதேவன் சொல்லுகிறான்:- ஸமஸ்த தேவதைகளும் தம்மிடத்தில் வாஸம் செய்யப்பெற்ற உங்களுக்கு நமஸ்காரம். ஓ ரிஷிகளே! என் வசனத்தைக் கேட்பீர்களாக. வர்ணாச்ரம தர்மங்களை எப்படி அனுஷ்டித்தால் பகவானிடத்தில் பக்தியோகம் உண்டாவதற்குத் தடையான பழைய புண்ய பாபகர்மங்கள் தீருமோ, அவ்வண்ணத்தை எனக்கு மொழிவீர்களாக.
ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:– ஓ அந்தணர்களே! வஸுதேவன், தன்னுடைய நன்மைக்கு எது ஸாதனமென்பதை அறிய விரும்பி, ஸ்ரீக்ருஷ்ணனைக் குழந்தையாக நினைத்து, நம்மை வினவுகிறான். இது பெரிய ஆச்சர்யமன்று. மனுஷ்யர்களுக்கு, என்றும் ஸமீபத்திலிருக்கை அனாதரம் (அவமரியாதை, பொருட்படுத்தாமை) செய்வதற்குக் காரணமாகின்றது. ஆகையால், இவன் ஸ்ரீக்ருஷ்ணனை ஒன்றுமறியாத குழந்தையாக நினைத்து, நம்மை வினவுகிறான்.
கங்கையின் கரையிலிருப்பவன், தன் சுத்திக்காக அந்த கங்கா ஜலத்தைத் துறந்து, வேறொரு புண்ய தீர்த்தத்தைத் தேடிக்கொண்டு செல்வது வழக்கமே. (அவ்வாறே, இவன் ஸர்வஜ்ஞனான (எல்லாம் அறிந்தவனான) ஸ்ரீக்ருஷ்ணனைத் துறந்து, நம்மிடத்தில் தர்ம ஸந்தேஹம் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான்) இந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய ஜ்ஞானம், காலத்தினாலாவது, இந்த ப்ரபஞ்சத்தின் ஸ்ருஷ்டி (படைத்தல்), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களை (அழித்தல்) நடத்துவதனாலாவது, பிறராலாவது, ஸத்வாதி (ஸத்வ, ரஜஸ், தமஸ் முதலிய) குணங்களாலாவது, மற்ற எந்தக் காரணத்தினாலாவது, என்றும் அழிகிறதில்லை. (நமக்குக் காலாதிகளால், ஜ்ஞானம் அழிந்து போவதுண்டு. இவனுக்கு அது கிடையாது). ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி வருத்தங்கள், புண்ய, பாப கர்மங்கள் அவற்றின் பலனான ஸுக, துக்கங்கள், ஸத்வாதி குணங்களின் ப்ரவாஹம் (பெருக்கு) இவைகளால் தடைபடாத அறிவுடையவனும், இணையெதிரில்லாதவனும், ஸர்வேச்வரனுமாகிய, ஸ்ரீக்ருஷ்ணனை அறியாத மூட ஜனங்கள், அவன் தன்னால் படைக்கப்பட்ட ப்ராக்ருதமான (ப்ரக்ருதியின் மாற்றமான) இந்திரியம் முதலியவைகளால் மறைக்கப்பட்ட அறிவுடையனாக நினைக்கிறார்கள். அது, ஸூர்யனை மேகம், பனி, க்ரஹணம் இவைகளால் மறைக்கப்பட்டவனென்று நினைப்பது போலவே.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! அம்முனிவர்கள் இவ்வாறு மொழிந்து, மீளவும் வஸுதேவனை அழைத்து, ஸமஸ்த ராஜர்களும், பலராம, க்ருஷ்ணர்களும் கேட்டுக்கொண்டிருக்கையில், இவ்வாறு மொழிந்தார்கள்.
முனிவர்கள் சொல்லுகிறார்கள்:– ஸமஸ்த யாகங்களுக்கும் நிர்வாஹகனான (நியமிப்பவனான) ஸ்ரீமஹாவிஷ்ணுவை யாகங்களால் ச்ரத்தையுடன் ஆராதிக்கையாகிற இதுவே வர்ணாச்ரமங்களுக்குரிய கர்மத்தினால் புண்ய பாப கர்மங்களைப் போக்கிக் கொள்ளுகையாமென்று பெரியோர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதிக்கையாகிற இந்தத் தர்மமே, மனத்தில் ஸம்ஸார துக்கங்கள் தீண்டப் பெறாமையாகிற சாந்தியையும், அளவற்ற மோக்ஷ ஸுகத்தையும் விளைக்கும். இதுவே ஸுகமான உபாயமென்று அறிவுள்ள முனிவர்கள் சாஸ்த்ரமாகிற நேத்ரத்தினால் (கண்ணால்) கண்டறிந்தார்கள்.
பரபீடை (பிறர்க்குத் தீங்கு செய்தல்) முதலிய கெடுதிகளின்றி நல்ல வழியில் ஸம்பாதித்த பரிசுத்தமான பணத்தைக் கொண்டு, பரம புருஷனை ச்ரத்தையுடன் ஆராதிக்கையாகிற இதுவே க்ருஹஸ்தாச்ரமத்திலிருக்கும் ப்ராஹ்மணனுக்கு மோக்ஷ ஸுகத்தை விளைக்கும் மார்க்கமாம். யாகங்களாலும், தானங்களாலும், பணத்தாசையையும், க்ருஹஸ்தாச்ரமத்திற்குரிய போகங்களால் பெண்டிர், பிள்ளை முதலியவற்றிலுண்டான ஆசையையும், அந்த ஸ்வர்க்காதி போகங்களெல்லாம் காலக்கழிவில் அழியுந்தன்மையுடையவையென்று நிரூபிக்கவல்ல விவேகத்தினால், தேஹம் கழிந்த பின்பு, ஸ்வர்க்காதி போகங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் ஆசையையும் துறக்க வேண்டும்.
இவ்வாறே பல பண்டிதர்கள் க்ராமத்தில் இருக்கும்பொழுதே பொருளாசை, பெண், புதல்வராசை, பரலோக போகங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் ஆசை ஆகிய மூன்று வகை ஆசைகளையும் துறந்து, தபோவனத்திற்குச் சென்றார்கள்.
ப்ரபூ! ப்ராஹ்மண, க்ஷத்ரிய, வைச்யர்களென்கிற மூன்று வர்ணத்தவர்களும், பிறக்கும் பொழுது, தேவதைகள், ரிஷிகள், பித்ருக்கள் இம்மூவரைப்பற்றின மூன்று ருணங்களுடன் (கடன்களுடன் பிறக்கிறார்கள். ஆகையால், அம்மூன்று ருணங்களையும் (கடன்களையும்), யாகங்களைச் செய்தல், வேதங்களை ஓதுதல், பிள்ளைகளைப் பெறுதல் ஆகிய இம்மூன்றுகளால் தீர்த்துக் கொள்ளாமல், வெறுமனே திரிவார்களாயின், நரகத்தில் விழுவார்கள்.
ஆழ்ந்த மதியுடையவனே! நீ, இப்பொழுது ரிஷி ருணம் (ரிஷிகளுக்குப் பட்ட கடன்), பித்ரு ருணம் (பித்ருக்களுக்குப் பட்ட கடன்) ஆகிய இவ்விரண்டு ருணங்களினின்று (கடன்களிலிருந்து) விடுபட்டாய். இனி, யஜ்ஞங்களால் தேவதேவனான பரம புருஷனை ஆராதித்து, தேவ ருணத்தையும் (தேவதைகளுக்குப் பட்ட கடனையும்) தீர்த்துக் கொண்டு, மூன்று ருணங்களினின்றும் (கடன்களிலிருந்தும்) விடுபட்டு இல்லற வாழ்க்கையில் பற்றற்றிருப்பாயாக.
ஓ வஸுதேவனே! நீ தன்னைப் பற்றினவர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனும் ஜகதீச்வரனுமாகிய பகவானைச் சிறந்த பக்தியுடன் ஆராதித்தாய். இது நிச்சயம். ஏனென்றால், அவன் தானே உனக்குப் பிள்ளையாக வந்து பிறந்தானல்லவா?
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஆழ்ந்த மனமுடைய வஸுதேவன் இவ்வாறு அம்முனிவர்கள் மொழிந்த வசனத்தைக் கேட்டு, அவர்களைத் தலையால் வணங்கி, அருள் புரிவித்து, தனக்கு ருத்விக்குக்களாக இருக்கும்படி வேண்டினான். இவ்வாறு வஸுதேவனால் விதிப்படி வேண்டப்பட்ட அம்முனிவர்கள், தர்மிஷ்டனாகிய (தர்ம நடத்தை உடைய) அவ்வஸூதேவனைக் கொண்டு அந்த ஸமந்த பஞ்சக க்ஷேத்ரத்தில், மந்த்ரம், தந்த்ரம், த்ரவ்யம் முதலியவற்றில் சிறிதும் லோபமில்லாத (குறைவில்லாத) முக்ய கல்பமான யாகங்களை நடத்தினார்கள்.
ராஜனே! அந்த யாக தீக்ஷை ஆரம்பிக்கையில், வ்ருஷ்ணி மன்னவர்கள் ஸ்னானம் செய்து, நல்ல வஸ்த்ரங்களை உடுத்து, நன்கு அலங்கரித்து, தாமரைப் பூமாலைகள் அணிந்து விளங்கினார்கள். அவ்வஸுதேவனுடைய பத்னிகள், குங்குமம், சந்தனாதிகளைப் பூசி, விலையுயர்ந்த வஸ்த்ரங்களை உடுத்து, கழுத்தில் பொற் பதக்கங்களை அணிந்து, கைகளில் உபஹாரங்களை (பூஜா பொருட்களை) ஏந்திக் கொண்டு, மனக்களிப்புடன் தீக்ஷாசாலைக்கு வந்தார்கள்.
ம்ருதங்கம், படலம், சங்கம், பேரி, ஆனகம் முதலிய வாத்யங்கள் பலவும் முழங்கின. நடர்களும், நர்த்தகிகளும் (நடனம் ஆடுபவர்கள்) ஆட்டம் ஆடினார்கள். ஸுதர்களும் (புராணக்கதை கூறுபவர்களும்), மாகதர்களும் (வம்சப் பெருமை கூறுபவர்களும்), வந்திகளும் (சமயத்திற்கேற்ப நல்வாழ்த்து கூறுபவர்களும்) துதித்தார்கள். அழகிய கண்டமுடைய (கழுத்து உடைய) கந்தர்வப் பெண்கள், தத்தம் கணவர்களுடன் ஸங்கீதம் பாடினார்கள். கண்ணில் மையிட்டு உடம்பெல்லாம் வெண்ணெய் பூசிக் கொண்டு பதினெட்டு பத்னிகளோடு கூடின அவ்வஸுதேவனுக்கு, ருத்விக்குக்கள் நக்ஷத்ரங்களோடு கூடின சந்த்ரனுக்கு அபிஷேகம் செய்வது போல, அபிஷேகம் செய்தார்கள். வெண்பட்டு வஸ்த்ரங்களை உடுத்து, கைவளை, முத்துமாலை, சிலம்பு, தண்டை, குண்டலம் இவைகளையும் மற்றும் பல அலங்காரங்களையும் அணிந்து, நன்கு விளங்குகின்ற அப்பத்னிகளோடு கூடி, மான் தோலை உடுத்துத் தீக்ஷையிலிருக்கிற அவ்வஸுதேவ மன்னவன், ப்ரகாசித்தான்.
மஹாராஜனே! அவனுடைய ருத்விக்குக்களும், ஸதஸ்யர்களும் (ஸபையோர்களும்) புதிய பட்டு வஸ்த்ரங்களைத் தரித்து, இந்த்ரனுடைய யாகத்திற்போல மிகவும் விளங்கினார்கள். ப்ரஹ்மாதி தேவதைகளுக்கும் ப்ரபுக்களாகிய ராம க்ருஷ்ணர்கள் மிகுந்த விபவங்களோடு (பெருமைகளோடு) கூடின தத்தம் பந்துக்களோடும், தேவச்ரேஷ்டர்களின் அம்சங்களான பிள்ளைகளோடும், பார்யைகளோடும் (மனைவிகளோடும்) விளங்கினார்கள்.
அம்மன்னவன், இவ்வாறு பல யாகங்கள் செய்தான். அவன், ஒவ்வொரு யாகத்திலும் ப்ராக்ருதங்களென்று சொல்லப்படுகிற ஜ்யோதிஷ்டோம, தர்ச பூர்ணமாஸாதி யாகங்களாலும், வைக்ருதங்களென்று சொல்லப்படுகிற ஸௌர்ய ஸத்ராதி யாகங்களாலும், அக்னிஹோத்ரம் முதலிய ஹோமங்களாலும், பஞ்ச பூதங்கள், ஜ்ஞானேந்திரிய, கர்மேந்தரியங்கள் இவற்றிற்கு நிர்வாஹகனும் (நியமிப்பவனும்), புரோடாசம் (ஹோமத்தில் தேவதைகளுக்காக அக்னியில் கொடுக்கப்படும் மாவினால் ஆன பண்டம்), முதலிய த்ரவ்யங்கள், கர்மங்களைப் பற்றின அறிவு, அவற்றின் அனுஷ்டானம் இவற்றிற்கு ப்ரபுவுமாகிய, பரமபுருஷனை விதிப்படி ஆராதித்தான்.
பிறகு, அவ்வஸுதேவன், தான் நன்கு அலங்கரித்துக்கொண்டு, நன்கு அலங்காரங்களை அணிந்து, விளங்குகிற ருத்விக்குக்களுக்கு, உரிய காலத்தில் சாஸ்த்ரங்களில் சொல்லியபடி தக்ஷிணைகளைக் கொடுத்தான்; மற்றும், அவர்களுக்கு விலையுயர்ந்த பசுக்களையும் பூமிகளையும் சிறந்த கன்னிகைகளையும் கொடுத்தான். அம்மஹர்ஷிகள் பத்னீஸம்யாஜம் ஆவப்ருத்யம் என்கிற யாக விசேஷங்களை நடத்தி யஜமானனை முன்னிட்டுக்கொண்டு பரசுராமனால் நிர்மிக்கப்பட்ட ஸமந்த பஞ்சகமென்னும் மடுவில் ஸ்னானம் செய்தார்கள். அம்மன்னவன் அவப்ருதஸ்னானம் (யாகத்தின் முடிவில் நீரில் அமிழ்ந்து நீராடுதல்) செய்து வந்திகளுக்கு (சமயத்திற்கேற்ப நல்வாழ்த்து கூறுபவர்கள்) ஆபரணங்களையும் ஆடைகளையும் கொடுத்தான். ஸ்த்ரீகளும் ஸ்னானம் செய்து நன்கு அலங்கரித்துக் கொண்டார்கள். அம்மன்னவன் நாய் வரையில் ஸமஸ்த வர்ணங்களையும் அன்னத்தினால் பூஜித்தான். மற்றும், அவன் பிள்ளை பெண்டிர்களோடு கூடிய பந்துக்களுக்கும் விதர்ப்பர், கோஸலர், குருக்கள், காசியர் (காசிப்பட்டணத்தார்), கேகயர், ஸ்ருஞ்சயர் இவர்களுக்கும் அளவற்ற பரிசுகளை அளித்தான்.
ஸதஸ்யர்கள் (ஸபையோர்கள்), ருத்விக்குக்கள், தேவ கணங்கள், மனுஷ்யர், பூதர், பித்ருக்கள், சாரணர் இவர்கள் அனைவரும் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு ஸ்தானமாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடம் அனுமதி பெற்று யாகத்தைப் புகழ்ந்து கொண்டு சென்றார்கள். த்ருதராஷ்ட்ரன், அவன் தம்பி விதுரன், அர்ஜுனன், பீஷ்மர், த்ரோணர், குந்தி, நகுல ஸஹதேவர்கள், நாரதர், மஹானுபாவராகிய வ்யாஸர், நண்பர்கள் ஸம்பந்திகள் பந்துக்கள் இவர்கள் அனைவரும் பந்துக்களான யாதவர்களை அணைத்து ஸ்னேஹத்தினால் மனம் உருகப்பெற்றுப் பிரிய வேண்டுமேயென்னும் வருத்தத்துடன் தத்தம் தேசங்களுக்குச் சென்றார்கள்.
யாகத்திற்கு வந்த மற்ற ஜனங்களும் திரும்பிச் சென்றார்கள். நந்தனோவென்றால் ஸ்ரீக்ருஷ்ணன் ராமன் உக்ரஸேனன் முதலியவர்களால் மிகுந்த பூஜை செய்து வெகுமதிக்கப்பட்டுப் பந்துக்களிடத்தில் வாத்ஸல்யமுடையவனாகையால் கோபர்களுடன் அங்கேயே வஸித்திருந்தான். வஸுதேவன் தன் மனோரதமாகிற மஹாஸமுத்ரத்தை அனாயாஸமாகக் கடந்து நண்பர்களால் சூழப்பட்டு மனக்களிப்புடன் நந்தனைக் கையில் பிடித்துக் கொண்டு இவ்வாறு மொழிந்தான்.
வஸுதேவன் சொல்லுகிறான்:- அப்பனே! ஈச்வரன் ப்ராணிகளுக்கு ஸ்னேஹமென்னும் பாசத்தை ஏற்படுத்தியிருக்கிறான். தேவதைகள் தங்கள் வலிவினாலாவது (சக்தி, திறமை), யோகிகள் தங்கள் ஜ்ஞானத்தினாலாவது அதை விடுவித்துக்கொள்ள வல்லரல்லரென்று நினைக்கின்றேன். செய்த நன்றியை அறிந்து மறவாதிருக்கும் தன்மையற்ற எங்களிடத்தில் மிகவும் மேன்மையுடைய நீங்கள் நிகரற்றதான இத்தகைய நட்பை வைத்தீர்கள். அதற்கு இதுவரையில் எவ்வித ப்ரத்யுபகாரம் இல்லாமற் போயினும் அந்நட்பு இன்றும் மாறாமல் அப்படியே இருக்கின்றது.
ப்ராதாவே! முன்பு கம்ஸனால் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் பொழுது திறமையில்லாமையால் உங்களுக்கு எவ்வகை ப்ரியத்தையும் செய்யவில்லை. இப்பொழுது நாங்கள் ஐச்வர்யத்தினால் மதித்துக் கண் தெரியாதவர்களாகி முன்பு நீங்கள் செய்த உபகாரத்தை நினைக்கவும் கூட முடியாதிருக்கின்றோம்.
நண்பர்களுக்கு வெகுமதியளிப்பவனே! சத்ருக்களின் கர்வத்தை அழிப்பவனே! நன்மையை விரும்பும் புருஷனுக்கு ராஜ்ய ஸம்பத்து நேரிடாதிருக்க வேண்டுமென்று நான் ப்ரார்த்திக்கிறேன். ஏனென்றால், ராஜ்ய ஸம்பத்து நேரிடப் பெற்ற புருஷன் ஐச்வர்ய மதத்தினால் கண்கெட்டு ஸாதுக்களையாவது பந்துக்களையாவது கண்ணெடுத்துப் பார்க்கமாட்டான்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வஸுதேவன் இவ்வாறு ஸ்னேஹத்தினால் மனம் தழதழத்து நந்தனுடைய நட்பை நினைத்துக் கண்ணும் கண்ணீருமாய்ப் புலம்பினான். நந்தனோவென்றால் நண்பனாகிய வஸுதேவனுக்கும், ராம க்ருஷ்ணர்களுக்கும் ப்ரேமத்தினால் ப்ரியம் செய்ய விரும்பிக் காலையில் புறப்பட்டால் ஸாயங்காலம் போகலாமென்றும் ஸாயங்காலம் புறப்பட்டால் நாளைக்குப் போகலாமென்றும் யாதவர்களால் தடுத்து வெகுமதிக்கப்பட்டு மூன்று மாதங்கள் அவ்விடத்திலேயே வஸித்திருந்தான்.
பிறகு நந்தன் பந்துக்களோடும் மற்ற கோகுலத்து இடையர்களோடும் கூடிச் சிறந்த ஆபரணங்களாலும் வெண்பட்டுக்களாலும் பலவகை ரத்னங்களாலும் யானை, குதிரை முதலிய பரிவாரங்களாலும் மற்றும் பல விருப்பங்களாலும் நிறைக்கப்பட்டு வஸுதேவன், உக்ரஸேனன், ஸ்ரீக்ருஷ்ணன், உத்தவன், பலராமன் முதலியவர்களால் விடைகொடுக்கப் பெற்று அந்தப் பரிசுகளையெல்லாம் எடுத்துக் கொண்டு யாதவர்களால் ப்ரயாணம் செய்விக்கப்பெற்றுப் புறப்பட்டுப் போனான். பந்துக்கள் அனைவரும் புறப்பட்டுப் போகையில் ஸ்ரீக்ருஷ்ணனையே தெய்வமாகவுடைய வ்ருஷ்ணிகள் (யாதவர்கள்) வர்ஷாகாலம் (மழைக்காலம்) ஸமீபித்திருப்பதைக் கண்டு மீண்டு த்வாரகைக்கு வந்தார்கள். அவர்கள் யாதவர்களுக்குத் தேவனான வஸுதேவனுடைய யாக மஹோத்ஸவத்தையும் தீர்த்தயாத்ரையில் நண்பர்களைக் கண்டது முதலிய மற்ற விசேஷங்களையும் த்வாரகையிலுள்ள ஜனங்களுக்குச் சொன்னார்கள்.
எண்பத்து நான்காவது அத்தியாயம் முற்றிற்று.