ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்*
வேறு வேறு ஞானம் ஆகி, மெய்யினோடு பொய்யுமாய்*
ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய ஆய மாயனே! ”
திருமழிசையாழ்வார் அருளிய திருச்சந்த விருத்தத்தில் இந்தப் பாசுரம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்தது. வேதங்கள் எத்தனையோ ஸ்லோகங்களில் விரிவாகச் சொன்னதை — கர்மங்கள், யாகங்கள், யோக நெறிகள், இறைவனின் குணங்கள் என எல்லாவற்றையும் — வெறும் நான்கு அடிகளில் எண்களின் வழியாக அமைத்து, "இவை எல்லாமே நாராயணன் ஒருவனே" என்று தீர்மானமாக நிறுவுகிறார் ஆழ்வார். ஆறு, ஐந்து, இரண்டு, மூன்று, ஏழு, எட்டு என்ற எண்கள் வெறும் கணக்கல்ல — ஒவ்வொன்றும் ஒரு தத்துவத்தின் வாசல். இவை அனைத்தும் முழுக்க தெரிந்தவனல்ல நான். கற்றுக் கொள்ளும் ஒரு சாதாரன மாணவன். வியாக்யானங்களை இரண்டு மூன்று தடவைக்கும் மேல் படித்து ஓரளவிற்கு புரிந்தவற்றை இங்கு தருகிறேன்.
முதல் பகுதி — "ஆறும் ஆறும் ஆறுமாய்”
முதல் ஆறு - வாழ்வின் நெறிமுறைகள்.
வேதங்கள், அந்தணர்களுக்கு ஆறு கடமைகளை விதிக்கின்றன. வேதம் ஓதுதல், மற்றவர்களுக்கு வேதம் கற்பித்தல், தான் வேள்வி செய்தல், மற்றவர்களுக்கு வேள்வி செய்வித்தல், தான் தானம் செய்தல், மற்றவர் தரும் தானத்தை ஏற்றல் — இந்த ஆறும் ஒரு அந்தனனின் ஆன்மிக வாழ்வின் அச்சாணிகள். இந்த ஆறு கர்மங்களிலும் உள்ளிருந்து உயிர்களையும் எல்லாவற்றையும் இயக்குபவன் நாராயணன் தான் என்கிறார் ஆழ்வார்.
இரண்டாவது ஆறு - இயற்கையின் சுழற்சி
வசந்தம், கிரீஷ்மம், வர்ஷம், சரத், ஹேமந்தம், சிசிரம் என்று ஆறு பருவகாலங்கள். தமிழிலும் இதனை கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம் மற்றும் முதுவேனில்காலம் என்று வகுத்துள்ளனர். இந்தக் காலச் சுழற்சி தானாக நடப்பதல்ல — அதன் பின்னே நிற்பவன் அவனே தான் என்பது ஆழ்வாரின் தீர்ப்பு.
மூன்றாவது ஆறு - வழிபாட்டின் வடிவங்கள்
ஆக்நேயம் முதல் ஐந்த்ராக்கம் வரை ஆறு யாகங்கள். இந்த யாகங்கள் எந்தெந்த தேவதைகளை முன்வைத்து எந்த சமயத்தில் செய்யப்பட்டாலும், அவற்றில் வழிபடப்படுவது நாராயணனையே தான் என்பது வேதாந்தத்தின் முடிவு.
இரண்டாம் பகுதி — "ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய்”
முதல் ஐந்து - வாழ்நாள் முழுதும் செய்யும் வேள்விகள்
தேவர்களுக்கு, முன்னோர்களுக்கு, உயிரினங்களுக்கு, மனிதர்களுக்கு, வேதத்திற்கு என்று ஐந்து மஹாயஜ்ஞங்கள் அதாவது வேள்விகள். இவை யாகசாலையில் மட்டுமல்ல — தினசரி வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் இந்த ஐந்து உணர்வுகளோடு வாழ்வதே ஒரு ஆன்மிக வாழ்க்கை. இந்த ஐந்தின் மூலப்பொருளே நாராயணன் தான்.
இரண்டாவது ஐந்து - உடலுக்குள்ளேயே கோயில்
உடலில் இயங்கும் பிராண, அபான, வ்யான, உதான, சமான என்ற ஐந்து வாயுக்கள். "பிராணாய ஸ்வாஹா" என்று உணவு உண்பதற்கு முன் உச்சரிப்பது வெறும் சொல்லல்ல — உடலுக்குள்ளேயே அந்தர்யாமியாக இருக்கும் நாராயணனுக்கு சமர்ப்பனம் செய்வதாகும் என்கிறது வேதாந்தம். அவனே தான் உள்ளிருந்து இயக்குகிறான். இதைத்தான் ஆழ்வார் கோடிட்டு காட்டுகிறார்.
மூன்றாவது ஐந்து - அக்னியில் அவன் வடிவம்
கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்னி, சப்யம், ஆவசத்யம் என்று ஐந்து அக்னிகள். இந்தப் பஞ்சாக்னிகளையும் உடலாகக் கொண்டவன் அவன். தீ வெறும் நெருப்பல்ல — அது தான் அவன் வடிவம் என்று அறுதியிட்டு கூறுகிறார் ஆழ்வார்.
மூன்றாம் பகுதி — "ஏறு சீர் இரண்டும் மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய்”
அவனை அடையும் வழியில் தேவையான இரண்டு குணங்கள்.
"ஏறு சீர்" — மிகவும் சிறந்த, உயர்ந்த என்று பொருள். அந்த இரண்டு குணங்கள் என்னவென்றால், ஒன்று ஞானம் — நாராயணனையே நினைக்கும் தெளிந்த அறிவு. இரண்டாவது வைராக்யம் — மற்ற எல்லாவற்றிலும் இருக்கும் பற்று விலகுதல். "மாற்பால் மனம் சுழிப்ப, மங்கையர்தோள் கைவிட்டு" என்று பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதியில் சொல்வது இதையே.
அவனை அடையும் மூன்று படிகள்.
பரபக்தி, பரஞானம், பரமபக்தி — இந்த மூன்றும் ஶ்ரீ வைஷ்ணவ தத்துவத்தில் பக்தி யோகத்தின் மூன்று நிலைகள். முதலில் அவன்மீது அன்பு பிறக்கும். அந்த அன்பு பின்னர் அவனையும் தன்னையும் பற்றிய ஆழமான அறிவாக மலரும். இறுதியில் "காண வாராய்" என்று ஏங்கும் உயர் நிலைக்கு உயரும். இந்த மூன்றும் தானாக வருவதல்ல — உள்ளிருந்து அவனே தான் தருகிறான்.
மனத்தூய்மைக்கான ஏழு குணங்கள்
இந்த ஏழும் வெறும் நடத்தை விதிகளல்ல — மனசை இறைவனிடம் செலுத்த தகுதியாக்கும் படிக்கட்டுகள். தூய்மையான வாழ்வு (விவேகம்), பற்றின்மை (விமோகம்), தொடர்ந்த பயிற்சி (அப்யாசம்), கடமைகளைச் செய்தல் (கிரியை), நல்லொழுக்கம் (கல்யாணம்), துக்கத்தில் மனம் தளராமல் இருத்தல் (அநவசாதம்), மகிழ்ச்சியில் அளவுக்கு மேல் மிதவாமல் இருத்தல் (அநுத்தர்ஷம்) — இந்த ஏழும் சேர்ந்தே மனதை இறைவனை நோக்கி நிறுத்தும்.
அவனிடம் உள்ள ஆறு திவ்ய குணங்கள்
ஞானம், பலம், ஐஸ்வரியம், வீரியம், சக்தி, தேஜஸ் — இந்த ஆறும் நாராயணனின் இயல்பான குணங்கள். இவை அவனுக்கு வேளா வேளைக்கு வருவனவல்ல, என்றும் எப்போதும் நிறைந்து நிற்பவை.
முக்தர்களின் எட்டு பேறுகள்
பாவம் இல்லாதவன், கிழத்தனம் இல்லாதவன், மரணம் இல்லாதவன், சோகம் இல்லாதவன், பசி இல்லாதவன், தாகம் இல்லாதவன், விரும்பியது கிட்டுபவன், நினைத்தது நிறைவேறுவான் — இந்த எட்டும் நாராயணனிடம் இயல்பாக உள்ளவை, மேலும் தம்மை அடைந்த முக்தர்களுக்கும் அருள்வான்.
நான்காம் பகுதி — "வேறு வேறு ஞானமாகி மெய்யினோடு பொய்யுமாய்”
இந்த வரி ஒரு ஆழமான தத்துவத்தை மிக எளிதாகச் சொல்கிறது.
உண்மையான பக்தர்களுக்கு அவன் என்றும் நீங்காத மெய்யனாக இருக்கிறான். ஆனால் வெறும் உலகப் பலன்களை விரும்புவோருக்கு அந்தப் பலன்களை மட்டும் கொடுத்துவிட்டு விலகி நிற்கிறான் — அவர்களுக்கு அவன் எட்டாதவனாகவே தெரிகிறான்.
“மெய்யர்க்கே மெய்யன் ஆகும், விதி இலா என்னைப் போல*
பொய்யர்க்கே பொய்யன்ஆகும் புட்கொடி உடைய கோமான்*”
என்று தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையில் இதனைத் தான் தெளிவாக சொல்கிறார்.
இதன் பொருள் — அவன் யாரையும் ஏமாற்றுவதில்லை. ஒவ்வொருவரும் எந்த மனநிலையோடு அவனை அணுகுகிறார்களோ, அந்த அனுபவமே அவர்களுக்குக் கிட்டுகிறது.
இறுதிப் பகுதி — "ஊறொடு ஓசையாய ஐந்தும் ஆய மாயனே”
காண்பது, கேட்பது, தொடுவது, மோப்பது, சுவைப்பது — ஐந்து புலன்களால் அனுபவிக்கும் இன்பம் எல்லாம் அவனே தான் என்கிறார் ஆழ்வார். "கண்டு கேட்டு உற்று மோந்து உண்டு உழலும் ஐங்கருவி கண்ட இன்பம் எம்பெருமான் ஆயிரே" என்று நம்மாழ்வாரும் இதையே சொல்கிறார்.
"மாயனே" என்று ஆழ்வார் முடிப்பதற்குக் காரணம், இத்தனை தத்துவங்களுக்கும் அப்பால், அவன் எளிய இடைக்குல சிறுவனாக (கிருஷ்ணனாக) வந்து நின்ற அந்த "சௌலப்யம்" (எளிமை) தான் மிகப்பெரிய ஆச்சரியம் (மாயம்).
பாசுரத்தின் மையக் கருத்து
வேதங்கள் ஏன் இவ்வளவு சடங்குகளையும் நெறிகளையும் சொல்கின்றன என்று கேட்டால், அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு வழியில் நாராயணனையே தான் காட்டுகின்றன என்பதே விடை.
கர்மம் செய்கிறோம் — அவனே ஏவுகிறான்.
காலம் கடக்கிறது — அவனே நடத்துகிறான்.
உடல் இயங்குகிறது — அவனே உள்ளே இருக்கிறான்.
அறிவு வருகிறது — அவனே தருகிறான்.
இன்பம் கிட்டுகிறது — அவனே ஆகிறான்.
திருமழிசை ஆழ்வார் இந்தப் பாசுரத்தில் சொல்வது என்னவென்றால், வேதங்கள் பல நூறு பக்கங்களில் விவரிக்கும் நாராயண தத்துவத்தை நான்கே அடிகளில் — எண்களின் வழியாக — கோத்துக் காட்டியிருக்கிறார். இதுவே ஆழ்வாரின் மாபெரும் தமிழ் திறம்.
திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.
07-04-2026

கருத்துரையிடுக