அதிகப் பார்வை

மிண்டர்களை சாடும் ஆழ்வார் - கோமான் ஸ்ரீ பாலாஜி


தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருமாலையின் 14-வது பாசுரமான "வண்டினம் முரலும் சோலை" என்னும் பாசுரத்திற்கு வியாக்யானத்தின் படி எளிய விளக்கம்.
இந்த பாசுரத்தின் மூலம், பகவத் அனுபவமே இல்லாத "மிண்டர்களை" (கடவுள் பக்தி இல்லாமல் உலக விஷயங்களில் உழல்பவர்களை) ஆழ்வார் எவ்வளவு கடுமையாகச் சாடுகிறார் என்று பார்க்கலாம்.
வண்டினம் முரலும் சோலை - வண்டுகள் மதுவை உண்டு களித்து ரீங்காரமிடுவது, பாகவதர்கள் எம்பெருமானின் திருக்குணங்களை பாடி மகிழ்வதற்கு ஒப்பானது.
மயிலினம் ஆலும் சோலை - மேகத்தைக் கண்டு மயில்கள் ஆடுவது போல, கார்மேக வண்ணனை கண்டு அடியவர்கள் ஆனந்தக் கூத்தாடுகிறார்கள்.
கொண்டல் மீதணவும் சோலை - ஆகாயத்தில் உள்ள மேகங்கள் வந்து சோலையைத் தடவிச் செல்வது, நித்யசூரிகள் பரமபதத்திலிருந்து இறங்கி வந்து அந்த சோலையைத் தொழுவதைக் காட்டுகிறது.
குயிலினம் கூவும் சோலை - குயில்கள் இன்னிசை பாடுவது போல, எம்பெருமானைப் போற்றும் வேத வேதாந்த, ஆழ்வார் பாசுரங்கள் அங்கே எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். எங்கே?
அண்டர்கோன் அமரும் சோலை - தேவாதி தேவனான அந்தப் பரவாசுதேவனே (அண்டர்கோன்), தனது பரமபதத்தை விட்டுவிட்டு, இந்தச் சோலைகளின் அழகில் ஈடுபட்டு, ஆழ்வார் பாசுரங்களில் உள்ளம் குழைந்து "இங்கேயே இருக்கலாம்" என்று விரும்பி வந்து வாசம் செய்யும் இடம் திருவரங்கம்.
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோறு - இவ்வளவு சிறப்பான திருவரங்கத்தின் பெருமையை உணராதவர்களை ஆழ்வார் "மிண்டர்" என்கிறார்.
மிண்டர் - அறிவு இல்லாதவர்கள், அகங்காரம் கொண்டவர்கள். எம்பெருமானைப் பற்றி நினைக்காமல், "உண்ணும் சோறும் பருகும் நீரும்" தான் வாழ்க்கை என்று இருப்பவர்கள். ஒரே வரியில் சொல்வதென்றால் கடவுள் பக்தி இல்லாதவர்கள்.
"திருவரங்கம்" என்ற திருநாமத்தைச் சொன்னால் போதும், மோட்சம் கிடைக்கும். ஆனால், அந்தப் பெயரைச் சொல்லாதவர்கள், நினைக்காதவர்கள். அவர்கள் உண்ணும் உணவானது, ஊசிப்போன கெட்டுப்போன உணவுக்கும் கீழானது என்கிறார் வியாக்யானத்தில்.
விலக்கி நாய்க்கு இடுமினீரே - பகவானை நினைக்காத மிண்டர்கள் உண்ணும் உணவை அவர்களிடமிருந்து பிடுங்கி, நாய்களுக்குப் போடும்படி ஆழ்வார் கட்டளையிடுகிறார்.
ஏன் நாய்க்கு? நாய் நன்றியுள்ள மிருகம். ஒருவேளைச் சோறு போட்டால் சோறு போட்டவனை மறக்காது. ஆனால், இத்தனை நன்மைகளைச் செய்யும் எம்பெருமானை மறந்தவர்கள், நினைக்காதவர்கள் நன்றியுள்ள நாயை விடக் கீழானவர்கள்.
எனவே, நன்றியற்ற மனிதர்கள் உண்பதை விட, நன்றியுள்ள நாய் அந்த உணவை உண்பதே மேலானது என்பது ஆழ்வாரின் கடும் சீற்றம்.

06-04-2026

Post a Comment

புதியது பழையவை