அதிகப் பார்வை


நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் முதல் பாசுரம் இது. மிக ஆழமான தத்துவத்தைக் கொண்ட இந்தப் பாடலை, எளிமையாக மேலோட்டமான விளக்கத்தை பார்ப்போம்.
உயர்வற உயர்நலம் உடையவன் - தனக்கு மேல் எந்த ஒரு உயர்வு இல்லாதபடி மிக உயர்ந்த நற்பண்புகளை (கல்யாண குணங்களை) உடையவன் எவனோ.
மயர்வற மதிநலம் அருளினன் - அஞ்ஞானம் அல்லது அறியாமை நீங்கும் படி எனக்குத் தெளிந்த அறிவையும் (பக்தியையும்) அருளியவன் எவனோ.
அயர்வறும் அமரர்கள் அதிபதி - என்றும் சோர்வில்லாத நித்யசூரிகளான இமைக்காத தேவர்களின் தலைவன் எவனோ.
துயரறு சுடரடி தொழுதெழு - அத்தகைய நாராயணனுடைய திருவடிகளைத் தொழுது வணங்குவாயாக என்று நம்மாழ்வார் தன் மனதிற்கு அறிவுறுத்துகிறார்.
இதில் எனக்கு ஒரு பக்தியோடு கூடிய இலக்கிய நயம் இருப்பதாக பட்டது. இந்தப் பாசுரத்தில் ஆழ்வார் ஒரு கேள்வி பதிலை அடக்கியுள்ளார்.
முதலில் ஒரு கேள்வியை தன் மனதை பார்த்துக் கேட்கிறார் ‘உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்?’ என்று அதற்கு விடையாக அடுத்த வரியிலேயே ‘மயர்வற மதி நலம் அருளினன்’ என்று பதிலையும் தந்து அடுத்து அவ்வாறு ‘மதி நலம் அருளினன் எவன் அவன்?’ என்ற கேள்வியையும் உதிக்கிறார் அதற்கு அடுத்த வரியிலேயே ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி அவன்’ என்று பதிலையும் தந்து திரும்ப கேள்வியாய் ‘எவன் அவன்?’ என்கிறார் உடன் அவர் மனதிற்கு இப்படி சந்தேகமெல்லாம் படாதே எவன் ‘துயரறு சுடரடி கொண்டவன்’ ஆக இருக்கிறானோ எவன் திருவடி நமக்கு வீடுபேறு அளிக்கின்றதோ, அவன் தான் அந்த ‘நாராயண பரம்பொருள் தான்’ என்ற ஒரு பதிலையும் சொல்லிவிட்டு அவனைத் தவிர வேறு யாரையும் தொழாதே அவனை மட்டுமே ‘தொழுது எழு என் மனமே’ என்று தன் மனதிற்கு பதிலாகத் தருகிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம். கடைசி கேள்விக்கு முதல் கேள்வியை பதிலாக கொடுத்து இதனை ஒரு சுற்றலாகவே விடலாம்.

31-03-2026

Post a Comment

புதியது பழையவை