செவ்வாய், 23 நவம்பர், 2004

சீதக்கடல்

பெரியாழ்வார் திருமொழி - முதற் பத்து

சீதக்கடல்

திருப்பாதாதிகேச வண்ணம்
முதல் திருமொழியை படித்திருப்பீர்கள். ஆழ்வாரின் தாய்மை உணர்வை நன்கு உணர்ந்திருப்பீர்கள். அடுத்த திருமொழியைப் பாருங்கள், பிள்ளைத்தமிழின் அடுத்தகட்டமாக குழந்தையின் அங்கங்களை வர்ணிக்கும் விதத்தைப் பார்ப்போம் இந்த இரண்டாம் திருமொழியில்சீதக் கடலுள் ளமுதன்ன தேவகி

கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த

பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்

பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்துகாணீரேசீதக்கடல் - திருப்பாற்கடல், அமுதன்ன - அமுதத்தைப் போன்ற, கோதைக்குழலாள் - மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடையவள், போத்ததந்த - அவளுக்கென்று கொடுக்கப்பட்ட, பேதைக்குழவி - சின்னஞ்சிறு குழந்தை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய அமுதத்தைப் போன்று காணப்படும் தேவகியிடமிருந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலையுடைய யசோதைக்கு என்று அனுப்பபட்ட குழந்தைக் கண்ணன் தனது தாமரையையொத்த பாதங்களை சுவைக்கின்ற காட்சியைப் பார்க்கவாருங்கள். பவளத்தைப் போன்று சிவப்பான வாயுடையவர்களே வாருங்கள் வந்து குழந்தைக் கண்ணன் பாதத்தை சுவைக்கும் அழகைப் பாருங்கள்.முத்தும்மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்

பத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்

ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்துகாணீரேஇந்தப் பாடலை நாம் சற்றே மாற்றிபத்துவிரலும் மணிவண்ணன் பாதங்கள்

முத்தும்மணியும் வயிரமும் நன்பொன்னும்

தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்

ஒத்திட்டிருந்தவா காணீரே ஒண்ணுதலீர் வந்துகாணீரேதானாகவே புரிந்திருக்கும் மணிவண்ணனின் பத்துவிரலும் எப்படியிருந்தது தெரியுமா? முத்துக்கள், மணியும், வைரமும் நல்ல சுத்தமான தங்கத்தில் பதித்துப் பார்த்தால் எப்படியிருக்கும் அதுபோன்று கண்ணனின் பாதங்கள் ஒவ்வொன்றும் போட்டியிட்டுக் கொண்டிருந்தது. நல்ல ஒளிவீசக்கூடிய நெற்றியை உடையவர்களே வாருங்கள் வந்து கண்ணனின் பத்துவிரலும் போட்டியிடுவதைப் பாருங்கள்.............பணைத்தோளிள வாய்ச்சிபால் பாய்ந்த கொங்கை

அணைத்தார உண்டுகிடந்தவிப் பிள்ளை

இணைக்காலில் வெள்ளித் தளைநின்றிலங்கும்

கனைக்காலிருந்தவா காணீரே காரிகையீர் வந்துகாணீரேபனைத்தோளை போன்று மென்மையான தோள்களையுடைய ஆய்ச்சி யசோதையிடத்தில் பால் குடித்துக்கொண்டிருக்கும் கண்ணனின் கனுக்கால்களில் வெள்ளி தண்டையோடு இருக்கும் அழகைக் காணுங்கள் காரிகையர்களே வாருங்கள் வந்து குழந்தைக் கண்ணனின் கனுக்கால் அழகைக் காணுங்கள்.தொடர்ந்துக் காண்போம்................வியாழன், 18 நவம்பர், 2004

முதல் திருமொழி - வண்ண மாடங்கள்

முதல் திருமொழி - வண்ண மாடங்கள்

(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)17

கொண்டதாளுறி கோலக்கொடுமழு

தண்டினர் பறியோலைச்சயனத்தர்

விண்டமுல்லை அரும்பன்னபல்லினர்

அண்டர்மிண்டிப்புகுந்து நெய்யாடினார்.
கொண்டதாளுரி கோலக்கொடுமழு - ஆயர்கள் தங்கள் கைகளில் வைத்திருக்கும் உறி (தயிர் கடைய வைத்திருக்கும்), கோலக்கொடுமழு என்பது அவர்கள் மாடுகளை மேய்க்கும்போது எந்த விலங்கினமும் தாக்காமல் இருப்பதற்காக ஒரு கூர்மையான ஆயதம் வைத்திருப்பார்கள், தண்டினர் - தண்டு வைத்திருப்பவர்கள். பறிஓலை சயனத்தர் - ஓலையை பாயாகக்கொண்டு தூங்குபவர்கள். விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர் - பறித்த முல்லையைப் போன்று பற்களை உடைய ஆயப் பெண்டிர், மிண்டிப் புகுந்து நெய்யாடினர் - மிண்டி என்பது ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு நெய்யாடினர். நெய்யாடல் என்பது திருநாள்களில் மங்கலமாக ஆடும் எண்ணெய் முழுக்கு.18

கையும்காலும்நிமிர்த்துக் கடாரநீர்

பையவாட்டிப் பசுஞ்சிறுமஞ்சளால்

ஐயநாவழித்தாளுக்கு அங்காந்திட

வையமேழும்கண்டாள் பிள்ளைவாயுளே.ஆகா என்ன பாடல் பார்த்தீரா, கையுங்காலும் நிமிர்த்துக் கடாரநீர் - குழந்தை கண்ணனை தாய் யசோதை குளிப்பாட்டுகிறாள் எவ்வாறு காலும் கையும் நன்றாக பலமாக இருக்கவேண்டும் என்பதற்காக நன்கு நீட்டி நல்ல வென்னீர் கொண்டு குளிப்பாட்டுகிறாள். பையவாட்டி பசுஞ்சிறுமஞ்சளால் - நல்ல வென்னீர் கொண்டு மெதுவாக பசுமையான மஞ்சளைப் பூசி குளிப்பாட்டுகிறாள் யசோதை. ஐய நாவழித்தாளுக்கு அங்காந்திட - குழந்தைகளை குளிப்பாட்டும்போது நாக்கு வழிப்பார்கள் அப்படி யசோதை கண்ணனுக்கு நாவழிக்க வாயைத்திறப்பா என்றதும், வையமேழுங்கண்டாள் பிள்ளைவாயுளே - அவ்வாறு நாவழிக்கக் குழந்தைக் கண்ணன் வாயை திறக்க ஏழு உலகத்தையும் கண்டாளே அந்த யசோதை சிறுபிள்ளை வாயினுள்ளே. ஆகா ஆழ்வாரின் அற்புதத்தைக் கண்டீர்களா அடுத்தப் பாடலிலும் பார்ப்போம்.19

வாயுள்வையகம்கண்ட மடநல்லார்

ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம்

பாயசீருடைப் பண்புடைப்பாலகன்

மாயனென்று மகிழ்ந்தனர்மாதரே.
வாயுள் வையகங் கண்ட மடநல்லார் - வாயினுள் வையகம் ஏழையும் கண்ட யசோதை, ஆயர்புத்திரனல்லன் அருந்தெய்வம் - ஐயோ இவன் சிறுபிள்ளையல்லவே, ஆயர் குலத்தில் அந்த தெய்வமே குழந்தையாக பிறந்துவிட்டதோ பாயச்சீருடைப் பண்படைப் பாலகன் மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே - வையம் ஏழும் கண்டதும் திடுக்கிட்ட யசோதையிடத்தில் அங்குள்ள ஆயப்பெண்டிர் அடி யசோதா இவன் சாதாரண குழந்தையல்ல அந்த மாயன் மாதவனே அந்த நாராயணனே குழந்தையாக பிறந்துள்ளான்........ என்று கூறி ஆயப்பெண்டிர் மகிழ்ந்தனர்.20

பத்துநாளும்கடந்த இரண்டாநாள்

எத்திசையும் சயமரம்கோடித்து

மத்தமாமலை தாங்கியமைந்தனை

உத்தானம்செய்து உகந்தனர்ஆயரே.பத்துநாளுங்கடந்த இரண்டாநாள் - குழந்தை கண்ணன் பிறந்து பன்னிரெண்டாம் நாளன்று, எத்திசையும் சயமரங்கோடித்து - எல்லா திசைகளிலும் சயமரம் நட்டு (வெற்றிக்கொடிக் கட்டி), மந்தமாமலை தாங்கிய மைந்தனை - மதம் பிடித்த யானைகள் அதிகம் கொண்ட கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்து ஆயர்களை காத்த அந்த மாயவன் கண்ணனுக்கு, உத்தானம் செய்து உகந்தனர் - குழந்தை கண்ணன் பிறந்த பன்னீரெண்டாம் நாளன்று அவனுக்கு பெயர் சூட்டி ஆடிப்பாடி அகமகிழ்ந்தனர் அந்த ஆயர்களே.....21

கிடக்கில் தொட்டில்கிழியஉதைத்திடும்

எடுத்துக்கொள்ளiல் மருங்கையிறுத்திடும்

ஒடுக்கிப்புல்கில் உதரத்தேபாய்ந்திடும்

மிடுக்கிலாமையால் நான்மெலிந்தேன்நங்காய்.
கிடக்கில் தொட்டில் கிழியவுதைத்திடும் - அந்த பொல்லாத குழந்தை கண்ணனை தொட்டிலில் போட்டால் உதைத்தே கிழித்திடுவான். எடுத்துக் கொள்ளில் மருங்கையிருத்திடும் - சரி தொட்டில் கிழிக்கிறானே என்று கையில் எடுத்து இடுப்பில் வைத்துக்கொள்வேமென்றால் இடுப்பையே ஒடித்திடுவான். ஒடுக்கி பல்கில் உதரத்தே பாய்ந்திடும் - கைகளை ஒடுக்கி மார்பில் அணைத்து வைத்திப்போமென்றால் அந்தப் பொல்லாதவன் வயிற்றில் உதைப்பான். மிடுக்கில்லாமையால் நான்மெலிந்தேன்நங்காய் - ஐயோ இந்தப் பொல்லாதவனை அடக்கி வைத்திருக்க முடியாமல் நான் உடல் மெலிந்து போய்விட்டேன் என்று யசோதை தன்னுடைய தோழியிடம் கூறுகிறாள், யசோதையா கூறுகிறாள் இல்லை நம் பெரியாழ்வாரே கூறுகிறார். என்ன அவரின் தாய்மை பார்த்தீரா22

செந்நெலார்வயல்சூழ் திருக்கோட்டியூர்

மன்னுநாரணன் நம்பிபிறந்தமை

மின்னுநூல் விட்டுசித்தன்விரித்த இப்

பன்னுபாடல்வல்லார்க்கு இல்லைபாவமே.செந்நெலார் வயல்சூழ் திருக்கோட்டியூர் - செந்நெல் வயல் சூழ்ந்துக் காணப்படும் திருக்கோட்டியூரிலே, மன்னுநாரணன் நம்பி பிறந்தமை - அந்த திருக்கோட்டியூரிலே இருக்கும் நாராயணனே குழந்தையாக பிறந்ததை, மின்னுநூல் விட்டு சித்தன் விரித்த பன்னுபாடல் வல்லார்க்கு இல்லைபாவமே - விட்டு சித்தன் இதுவரை கூறிய கண்ணன் அவதாரத்தை அர்த்தமோடு பாடுபவர்களுக்கு இல்லை பாவமே...........தொடர்ந்து பெரியாழ்வாரின் பாடல்களை பார்ப்போம்.......


செவ்வாய், 16 நவம்பர், 2004

முதல் திருமொழி - வண்ண மாடங்கள்

அடுத்து நாம் காணவிருப்பது பெரியாழ்வாரின் கண்ணன் பற்றிய பிள்ளைத் தமிழ். என்ன இது திவ்விய பிரபந்தம் என்று கூறி பிள்ளைத் தமிழ் என கூறுவதில் சந்தேகமா? ஆம்

முதன்முதலில் தமிழுக்கு பிள்ளைத்தமிழை அறிமுகப்படுத்தியவர் பெரியாழ்வார்தான். கண்ணனின் அவதாரப்பெருமைகளை ஒரு தாய் எவ்வாறெல்லாம் விவரிப்பாளோ அவ்வாறெல்லாம் ஆழ்வார் விவரிப்பார். தன்னை கண்ணனின் தாயாக பாவித்து அவர் கூறும் ஒவ்வொரு திருமொழியும் இனிமையானவை.....இந்தப் பாடல்களை நாம் பாடும்போது நம்முள் அந்த தாய்மையுணர்வு பொங்குவது தெரியும்.......நமக்கே இப்படியென்றால் பெரியாழ்வாருக்கு எப்படியிருக்கும்.... சரி பாடலைப் பார்ப்போம்.............முதல் திருமொழி - வண்ண மாடங்கள்

(கண்ணன் திருவவதாரச் சிறப்பு)கலிவிருத்தம்13

வண்ணமாடங்கள்சூழ் திருக்கோட்டியூர்

கண்ணன்கேசவன் நம்பிபிறந்தினில்

எண்ணெய்சுண்ணம் எதிரெதிர்தூவிடக்

கண்ணன்முற்றம் கலந்தளராயிற்றே.முதல் பாடலை நாம் மாற்றிக் கூறுவோமானால் அர்த்தம் தானாக புரியும்., எப்படியென்றால், கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிட, கண்ணன்

முற்றம் களந்தளறாயிற்றே வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர். கேசவன் என்ற திருநாமத்தையுடைய கண்ணன் பிறந்துவிட்டான் எங்கே அந்த ஆய்ப்பாடியில் செல்வசெழிப்பான நந்தகோபன் இல்லத்தில், அந்த சந்தோஷத்தைக் கொண்டாடும் ஆயர்கள் எதிரெதிர் சந்திக்கும்போது எண்ணெய்யுடன் சந்தனம் கலந்து ஒருவர்மேல் ஒருவர் தூவி,அந்த இடமே சேறு போல் ஆயிற்று (கண்நல் முற்றம் கலந்து அளறு ஆயிற்று) கண்நல் என்றால் அகன்ற பரந்திருக்கும், அளறு என்றால் சேறு, அதாவது அகன்று பரந்திருக்கும் முற்றம் எண்ணெயுடன் சந்தனம் கலந்து சேறாயிற்றே என்கிறார் இதெல்லாம் எங்கே என்றால் ஆய்ப்பாடியில் அன்றோ என்றால் அதுதான் இல்லை எங்கேயென்றால் வண்ண மாடங்கள் சூழ்ந்த திருக்கோட்டியூர் என்னும் திருத்தலமாம். ஆகா ஆழ்வாரின் தாய்மையுணர்வை பார்த்தீர்களா? கண்ணன் எங்கள் ஊரில் பிறந்துள்ளான் தனது மகனாக பிறந்துள்ளான் அதுவும் திருக்கோட்டியூர் என்னும் திருத்தலத்தில் என்கிறார்........

14

ஓடுவார்விழுவார் உகந்தாலிப்பார்

நாடுவார்நம்பிரான் எங்குத்தானென்பார்

பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று

ஆடுவார்களும் ஆயிற்றாய்ப்பாடியே.கண்ணன் பிறந்துவிட்டான் எங்கள் கவலைகள் தீர்ந்துவிட்டன என்று ஆயர்கள் ஓடுவார், இடறி விழுவார்கள் உகந்தாலிப்பார் - ஆரவாரம் கொள்வார்., நாடுவார் நம்பிரான் எங்குதானென்பார், அட கண்ணன் எங்கேயுள்ளான் என்று நாடிச் செல்வார், பாடுவார்களும் பல்பறைகொட்டநின்று, கண்ணன் பிறந்துவிட்டான் என்று பாடுவோரும், பலதரப்பட்ட மேளங்களை வாசிப்போரும், ஆடுவார்களும் ஆயிற்றாய்ப்பாடியே., இப்படி ஆடிப்பாடி மேளம் கொட்டி ஒரே ஆரவாரமாகவிருந்தது ஆயர்ப்பாடியே என்கிறார். இங்கே ஆயர்ப்பாடியில் தான் இந்த ஆரவாரம் என்கிறார் ஆழ்வார்......15

பேணிச்சீருடைப் பிள்ளைபிறந்தினில்

காணத்தாம்புகுவார் புக்குப்போதுவார்

ஆணொப்பார் இவன்நேரில்லைகாண் திரு

வோணத்தான் உலகாளுமென்பார்களே.பேணிச்சீருடைப் பிள்ளை பிறந்தினில்., பேணி - பாதுகாக்கப்பட்ட, அந்த கம்சனிடத்திலிருந்து பாதுகாக்கப்பட்ட எட்டாவது குழந்தையாம் கண்ணன், சீருடையப்பிள்ளைதான் இவன் என்று பிறந்த அன்று, காணத்தாம் புகுவார் புக்குப் போதுவார் - அந்த சீருடையப்பிள்ளையை காண்பதற்காகவே நந்தகோபன் அரண்மனைக்கு போவோரும் குழந்தையை கண்டுகளித்து வெளிவருபவரும், ஆணொப்பார் இவன் நேரில்லைகாண் - அட இவன்போல ஒரு ஆண் குழந்தை எங்குமே இல்லையப்பா என்று கூறுவோறும்...., திருவோணத்தான் உலகாளுமென்பார்களே - இங்கே ஒரு நிகழ்வைப் பாருங்கள் கண்ணன் பிறந்தது ரோகிணி நட்சத்திரத்தில், ஆனால் அவனைக் கண்டவர்கள் அவனை தங்களைக் காக்கும் பெருமானாக நினைத்து எம்பெருமானின் திருநட்சத்திரமான திருவோணத்தை மையப்படுத்தி, கண்ணனை திருவோணத்தான் உலக ஆள்வானே என்கிறார்கள் ஆயர்கள்.... ஆயர்களா இவ்வாறு உரைத்தார்கள் இல்லை நமது பெரியாழ்வார்........16

உறியைமுற்றத்து உருட்டிநின்றாடுவார்

நறுநெய்பால்தயிர் நன்றாகத்தூவுவார்

செறிமென்கூந்தல் அவிழத்திளைத்து எங்கும்

அறிவழிந்தனர் ஆய்ப்பாடியரே.கண்ணன் பிறந்துவிட்டான் என்ற நற்செய்தியைக் கேட்டவுடன் ஆயர்கள் தாங்கள் வைத்திருந்த உறியை (அதாவது தயிர் வெண்ணெய் போன்றவற்றை வைக்கும் பொருள்) முற்றத்திற்கு உருட்டி தங்களது சந்தோஷத்தைக் கொண்டாடுவார்கள் வருகின்றவர்களுக்கெல்லாம் நறுநெய், பால் தயிர் எல்லாவற்றையும் மிச்சம் வைக்காமல் வருகின்றவர்களுக்கெல்லாம் கொடுப்பார்கள், செறிமென்கூந்தல் - நன்றாக செறிவாக கட்டப்பட்ட கூந்தல், அவிழதிளைத்து - அப்படி செறிவாகக் கட்டபட்ட கூந்தலை களைத்தனர் - எங்கும் அறவழிந்தனர் ஆயர்பாடியாரே - அவ்வாறு தாங்கள் அறிவிழந்து செயல்பட்டதை அறியாமல் ஆயர்பாடியில் உள்ள ஆயர்கள் கண்ணனின் திருஅவதாரச்சிறப்பினை பலரும் அறியும் வண்ணம் பாடினர், பாடி மகிழ்ந்தனர்.............


ஞாயிறு, 7 நவம்பர், 2004

திருப்பல்லாண்டு 10,11,12

பெரியாழ்வார் அருளிச்செய்த

திருப்பல்லாண்டு

முதற்பத்து10

எந்நாள்எம்பெருமான் உன்தனக்கடியோமென்றெழுத்துப்பட்ட

அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்ததுகாண்

செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து ஐந்தலைய

பைந்நாகத்தலைபாய்ந்தவனே. உன்னைப்பல்லாண்டுகூறுதுமே.
எந்நாளெம் பெருமான் உன்றனக்கடியோ மென்றெழுத்துப் பட்ட - எம்பெருமானே உனக்கு நான் அடிமையாக எழுதப்பட்ட நாள் எந்தநாளோ?, அந்நாளே அடியோங்களடிக்குடில் வீடுபெற்றுய்ந்தது காண் - அந்த நாளே நாங்கள் எங்கள் குழுவான உனக்கு தொண்டு செய்யும் குழுவானது வீடுபெற்றோம் - நல்ல உயர்வான இடத்தினை அடைந்தோம். செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலைகுணித்து ஐந்தலைய பை நாகத்தலைப்பாய்ந்தவனே - அன்று நீ அந்த வடமதுரையில் உனது மாமனாம் கம்சன் செய்த சதியை முறியடித்து, அந்த காளிங்கன் என்ற ஐந்துதலை பாம்பினை அடக்கி அவன் தலையில் நர்த்தனம் செய்தவனே நீ பல்லாண்டு இரும்..........

11

அல்வழக்கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்

செல்வனைப்போலத் திருமாலே. நானும்உனக்குப்பழவடியேன்

நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி

பல்வகையாலும்பவித்திரனே. உன்னைப்பல்லாண்டுகூறுவனே.அல்வழக்கொன்று மில்லா அணிகோட்டியர்கோன் அபிமானதுங்கன்- அல்வழக்கொன்றுமில்லா, எந்தவிதமான தீய பழக்கங்களும் இன்றி இருக்கும் திருகோட்டியூர் மன்னன், செல்வனைப்போலத்திருமாலேநானு முனக்கு பழவடியேன் - நல்ல செல்வ செழிப்புடன் திருக்கோட்டியூர் தலைவனே உனக்கு நாங்கள் அடிமைகள்., மிகவும் பழமையான அடியவர்கள். நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி - நல்லவிதமாக எம்பெருமானின் திருநாமமான நாராயணாவென்று, பல்வகையாலும் பவித்திரனே.... பல வகையிலும் பரிசுத்தமான உந்தன் நாமங்களை பாடி பாராயணம் செய்வோம்.........12

பல்லாண்டென்றுபவித்திரனைப்பரமேட்டியை சார்ங்கமென்னும்

வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன்விரும்பியசொல்

நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாயவென்று

பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்பல்லாண்டே.
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும் - பரிசுத்தமான, சார்ங்கமென்னும் வில்லினையுடைய, வில்லாண்டான்தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல் - அவ்வாறு சார்ங்கமென்னும் வில்லினை கையில் உடைய, திருவில்லிபுத்தூரிலே எழுந்தருளியிருக்கும் பெருமாளே உன்னை விட்டுச்சித்தன் எனப்படும் பெரியாழ்வார், நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய வென்று - அந்த பெரியாழ்வார் உன்னை பல்லாண்டிரும் என்று உரைப்பார்., பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே - இவ்வாறு விட்டுச்சித்தன் சொன்ன திருப்பல்லாண்டை அனைவரும் எம்பெருமானை சூழ்ந்திருந்து பல்லாண்டை உரைப்பார்கள்.... பல்லாண்டு ஆயிரம் பல்லாண்டே...............இத்துடன் திருப்பல்லாண்டு நிறைவுப் பெற்றது. தொடர்ந்து பெரியாழ்வாரின் திருமொழிகளைக் காண்போம்.........தொடர்ந்து பாருங்கள்.......


சனி, 6 நவம்பர், 2004

திருப்பல்லாண்டு 8,9

பெரியாழ்வார் அருளிச்செய்த

திருப்பல்லாண்டு

முதற்பத்து8

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும்அத்தாணிச்சேவகமும்

கையடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும்

மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னைவெள்ளுயிராக்கவல்ல

பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டுகூறுவனே.


நெய்யெடை நல்லதோர்சோறும் நியதமுமத்தாணிச் சேவகமும் - நெய்யெடை நெய்க்கு சரிநிகரான எடையுடன், நல்லதோர்சோறும் நெய்க்கு சரியான எடையில் நல்ல சோறும் கலந்து, நியதமுமத்தாணிச் சேவகமும், நியதமும் - நித்தமும், அத்தாணிச் சேவகமும் - எம்பெருமானுக்கு அருகிலேயே இருந்து சேவைச் செய்வதை... கையடைக்காயும் - அடைக்காய் என்றால் தாம்பூலம், கையடைக்காய் என்றால் கை முழுவதும் தாம்பூலத்தை வைத்துக்கொண்டு. இறைவனுக்கு சரிநிகர் நெய்யும் சாதமுங்கொடுத்து அவை முடிந்தவுடன் தாம்பூலத்தையும் கொடுத்து. உடன் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் - கழுத்துக்கு ஏற்ற அணிகலன்கள் (நகைகள்) காதுக்குக் குண்டலத்தையும் மாட்டி, மெய்யிட நல்லது ஓர் சந்தமும் - உடல் முழுவதும் நல்ல மணம் வீசும் சந்தனத்தைத்தடவி, என்னை வெள்ளுயிராக்க வல்ல பையுடை நாகப்பகைக் கொடியோனுக்கு....இவ்வாறெல்லாம் இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் தூய உள்ளத்தோடு இருக்கச் செய்த, பையுடை என்றால் படம் எடுக்கக்கூடிய உடலினைக் கொண்ட என்றும் நாகப்பகைக் கொடியோன் என்றால் அவ்வாறு படையெடுக்கக்கூடிய நாகப்பாம்பினை பகையாகக் கொண்ட கருடனைக் கொடியாக்கொண்ட எம்பெருமானுக்கு பல்லாண்டு கூறுவோமே வாருங்கள்.............9

உடுத்துக்களைந்த நின்பீதகவாடையுடுத்துக் கலத்ததுண்டு

தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம்

விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில்

படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
எடுத்துக் களைந்த நின் பீதக வாடையுடுத்துக் கலத்ததுண்டு - உன்னுடைய ஆடையாம் பீதக ஆடை (பீதாம்பரம்) உனக்கு சாற்றிவிட்டு பின்னர் அதை களைந்தவடன் உனக்கு திருத்தொண்டு செய்யும் நாங்கள் மாற்றிக்கொள்வோம். எங்களுக்கென்று தனியாக ஆடை ஏதும் இல்லை உன்னுடைய ஆடையைத் தவிர, கலத்ததுண்டு என்றால் இறைவனுக்கு அமுது செய்யும் பாத்திரத்தில் இறைவனுக்கு அமுது செய்த பின்னர் இருக்கும் உணவினையே நாங்கள் உண்போம். தொடுத்ததுழாய் மலர்சூடிக் களைந்தன குடுமித் தொண்டர்களோம் - எம்பெருமானுக்கு சூடிக் களைந்த திருத்துழாய் மாலையை சூட்டிக் கொள்ளும் தொண்டர்களாம் எங்களை, விடுத்த திசைக்கருமந்திருத்தித் திருவோணத் திருவிழாவில் - எம்பெருமானே நீ விடுத்த ஆணைகள் எல்லாவற்றையும் எந்த திசையாயினும் அவற்றை செய்து முடித்து, திருவோணத்திருவிழாவில் அந்த இறைவனின் திருநட்சத்திரமான திருவோணத்தில், படுத்தபைந் நாகனைப் பள்ளி கொண்டானுக்கு... - படம் எடுத்த நாகனைப் பாயாகக் கொண்டு பள்ளிக்கொண்டிருக்கும் எம்பெருமானை பல்லாண்டு பல்லாண்டென்று கூறுவோமே.........


திருப்பல்லாண்டு 5,6,7

பெரியாழ்வார் அருளிச்செய்த

திருப்பல்லாண்டு

முதற்பத்து5

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை

இண்டைக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன்தனக்கு

தொண்டக்குலத்திலுள்ளார். வந்தடிதொழுது ஆயிரநாமம்சொல்லி

பண்டைக்குலத்தைத்தவிர்த்து பல்லாண்டுபல்லாயிரத்தாண்டென்மினே
அண்டக்குலத்துக்கதி பதியாகி அசுரரிகாத்தரை - அண்டத்திற்கே அதிபதியாகவும், அசுரர்கள், இராட்சதர்கள் ஆகியோரை....இண்டை குலத்தை எடுத்துக் களைந்து இருடீகேசன்றனுக்கு - மிகவும் நெருக்கமாக வாழ்கின்ற அரக்கர்கள் அசுரர்கள் அவர்களின் குலத்தை வேரொடு அழித்த இருடீகேசனை போற்றுபவராகிய நீங்கள், தொண்டைக் குலத்திலுள்ளீர் வந்தடிதொழுது ஆயிரநாமஞ்சொல்லி - தொண்டைகுலம் தொண்மையான குலம் தொண்டர் குலம் என்றும் சொல்லலாம், அப்படி தொண்மையான குலத்தில் உள்ள நீங்கள் அரக்கர்களை அழித்த இருடீகேசனை ஆயிரம் நாமம் சொல்லி , பண்டைக் குலத்தைத் தவிர்த்து பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே - பண்டைக்குலம் பழமையான குலம், பழையவற்றில் விருப்பம் உள்ள, இங்கே ஆழ்வார் மற்ற சமயத்தை சார்ந்துள்ளவர்களை அதை விட்டுவிட்டு இங்கே நம் பெருமான் இருடீகேசனுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு இரும் என்று போற்றிப் பாடுவோம் வாருங்கள்.....6

எந்தை தந்தை தந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி

வந்துவழிவழிஆட்செய்கின்றோம் திருவோணத்திருவிழவில்

அந்தியம்போதிலரியுருவாகி அரியையழித்தவனை

பந்தனைதீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றுபாடுதமே.எந்தை தந்தை தந்தைதந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால்தொடங்கி - நான் என்னுடைய தந்தை, அவருடைய தந்தை, அவருடைய தாத்தா இப்படி ஏழு தலைமுறைகளாய், வந்துவழி வழியாட் செய்கின்றோம் திருவோணத் திருவிழவில் - இவ்வாறு நாங்கள் ஏழேழ் பிறவிக்கும் உன்னையே வழிபடுகின்றோம் அன்று அந்த திருவோண நட்சத்திரத்திலே, அந்தியம் போதிலரியுருவாகி யரியை யழத்தவனை - அந்த திருவோண நட்சத்திரத்துதித்த பெருமான், காலையும் இல்லாமல் மாலையும் இல்லாமல், அரியுருவாகி - அரி என்றால் இங்கே சிங்கம் என்று கொள்ளவேண்டும், சிங்க உருவெடுத்து, அரியை அழித்தவனை - அந்த அரியை பழித்த இரணியனை ( பிரகலாதனின் தந்தை ) அழித்த நரசிம்மனை, பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்றே பாடுதமே. - பந்தனை தீர -அந்த இரணியனை அழித்த களைப்புத் தீர, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பாடுவோம் வாருங்கள்......

7

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ்திருச்சக்கரத்தின்

கோயிற்பொறியாலேஒற்றுண்டுநின்று குடிகுடிஆட்செய்கின்றோம்

மாயப்பொருபடைவாணனை ஆயிரந்தோளும்பொழிகுருதி

பாய சுழற்றியஆழிவல்லானுக்குப் பல்லாண்டுகூறுதுமே.
இந்தப் பாடலை நாம், மாயப்பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய சுழற்றியவாழி வல்லாணுக்கும் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின் கோயிற் பொறியாலே ஒற்றுண்டு குடிகுடியாட் செய்கின்றோம், பல்லாண்டு கூறுதமே. என்று மாற்றிப் பார்த்தால் பொருள் தானாக விளங்கும். மாயப்பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழிகுருதி பாய - மாயப்போர்புரிந்த பாணாசுரனுடைய ஆயிரம் தோளையும் குருதிபாய, சுழற்றியவாழி வல்லாணுக்கும் தீயிற் பொலிகின்ற செஞ்சுடராழி - அவனின் ஆயிரம்தோளையும் குருதிபாய அழித்த தீயை விட மிகுந்த ஒளிவீசுகின்ற செஞ்சுடராழி வல்லானுக்கு கோயிற்பொறியாலே என்றால் அந்த திருவாழி ஆழ்வானை தன் கையிலே ஏந்தியிருக்கும் நம் பெருமான், இங்கே பொறி என்பது முத்திரை என்ற அர்த்தத்தில் வரும். ஒற்றுண்டு குடிகுடியாட் செய்கின்றோம் - ஒற்றுண்டு என்றால் ஒற்றுமையாக எம்பெருமானின் திருவடிகளில் ஏழேழ் பிறவிக்கும் நாங்கள் ஆட்செய்வோம். பல்லாண்டு கூறுவோமே...........வெள்ளி, 5 நவம்பர், 2004

திருப்பல்லாண்டு 3,4

பெரியாழ்வார் அருளிச்செய்த

திருப்பல்லாண்டு

முதற்பத்து3

வாழாட்பட்டுநின்றீருள்ளீரேல் வந்துமண்ணும்மணமும்கொண்மின்

கூழாட்பட்டுநின்றீர்களை எங்கள்குழுவினில்புகுதலொட்டோம்

ஏழாட்காலும்பழிப்பிலோம்நாங்கள் இராக்கதர்வாழ்இலங்கை

பாழாளாகப்படைபொருதானுக்குப் பல்லாண்டுகூறுதமே.

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல், எம்பெருமானுக்கு சேவை செய்வதையே கருத்தாகக் கொண்டு வாழும் நீங்கள். வந்து மண்ணும் மணமுங் கொண்மின், அவ்வாறு பெருமாளுக்கு

சேவை செய்யும் நீங்கள் இந்த மண்ணையும் மண்ணில் விளைகின்ற அனைத்தையும் உமதாக்கிக்கொள்ளுங்கள். கூழாட்பட்டு நின்றீர்களை, கூழுக்கு (உணவுக்கு) ஆசைப்பட்டு மற்றவர்களிடத்தில் அடிமையாக தொழில் செய்துக் கொண்டிருப்பீர்களானால். எங்கள் குழுவினில் புகுதலொட்டோம், அவ்வாறு இருக்கும் உங்களை எங்கள் குழுவான பெருமானுக்கு தொண்டு செய்யும் குழுவில் உங்களை சேர்க்கமாட்டோம். ஏழாட்காலும் பழிப்பிலோம், ஏழு பிறவியிலும் எந்தவிதமான பாவ காரியங்களை செய்யாமலும் எந்தவிதமான பழிக்கு ஆளகாமாலும் இருக்கும் நாங்கள். நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை, அப்படி எந்த பழிபாவத்திற்கும் ஆளாகாமல இருக்கும் நாங்கள் இராட்சதர்கள் வாழ்ந்த இலங்கை மாநகரிலே. பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே, அப்படி இராட்சதர்கள் வாழ்ந்த இலங்கையை பெரும் போர்கொண்டு அழித்த அந்த சக்கரவர்த்தித் திருமகனாம் இராமனுக்கு பல்லாண்டு கூறுவோம் வாருங்கள்...

4

ஏடுநிலத்தில்இடுவதன்முன்னம்வந்து எங்கள்குழாம்புகுந்து

கூடுமனமுடையீர்கள் வரம்பொழிவந்துஒல்லைக்கூடுமினோ

நாடும்நகரமும்நன்கறிய நமோநாராயணாயவென்று

பாடுமனமுடைப்பத்தருள்ளீர். வந்துபல்லாண்டுகூறுமினே.ஏடுநிலத்திடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து, ஏடுநிலத்திடுவதன் - இந்த உடல் மண்ணுக்குப் போகுமுன் எங்கள் குழுவாம் இறைத்தொண்டு செய்யும் குழுவுக்கு வாருங்கள். கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லை கூடுமினோ, அவ்வாறு உடல் மண்ணுக்கு போகுமுன் எங்கள் குழுவில் வந்து சேர மனமுள்ளவர்கள் நீங்கள் இதுவரை எந்த

கடவுளை நினைத்திருந்தாலும் எங்கள் இறைவனாம் கண்ணனை தொண்டு செய்தீர்களானால் உங்கள் தொல்லைகள் ஒழியுமன்றோ.நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாவென்று, நாடு நகரம் எங்கும் ஓம் நமோ நாராயணா வென்று பாடுவோம் வாருங்கள். பாடுமனமுடைப்பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே., பெருமானின் நாமத்தை பாடும் மனமுடையவர்களே வாருங்கள் நம் பெருமாளாம் கண்ணனை பல்லாண்டுப் பாடுவோம் வாருங்கள்....


புதன், 3 நவம்பர், 2004

திருப்பல்லாண்டு 1,2

நீண்ட நாளாகிவிட்டது பல அலுவல்கள் அதோடுமட்டுமல்லாமல் பலவித வலைப்பூக்களை ஆரம்பித்துவிட்டேன் அவற்றையும் பூர்த்தி செய்ய சிறிது நேரம் தேவைப்பட்டது. இனி தொடருவோம்.........

பெரியாழ்வார் திருமொழிமுதற்பத்து1. திருப்பல்லாண்டுகாப்புகுறள்வெண்செந்துறை1

பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு


பலகோடிநூறாயிரம்

மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்

செவ்வடிசெவ்விதிருக்காப்பு.


பல்லாண்டு பல்லாண்டு பல ஆயிரம் ஆண்டுகள் பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் எல்லாம் கால எல்லையற்ற, எப்பொழுதும் அருள் பாலித்துக்கொண்டிருக்கின்ற மணிவண்ணா, மல்லாண்ட தின்தோள் மணிவண்ணா, நீ அன்று கிருஷ்ணவதாரத்திலே உனது மாமன் கம்சனின் சதியாம் மல்லர்களை (மற்போர் புரிபவர்கள்) திண்மையான தோளுடைய நீ வெற்றிக் கண்டாய். உன் சேவடி செவ்வி திருக்காப்பு, உன்னுடைய சிவந்த கமல மலர் போன்ற பாதங்களுக்கு என்றென்றும் பல்லாயிரம் ஆண்டுகள் திருக்காப்பு தொடர்வதாகுக..... என்று பெரியாழ்வார் இந்த பாடலிலே ஆரம்பிக்கின்றார். வைணவர்கள் தங்களின் பூஜையின்போது கடைசியாக இந்த திருப்பல்லாண்டை கூறுவர்.

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்2

அடியோமோடும்நின்னோடும் பிரிவின்றிஆயிரம்பல்லாண்டு

வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும்பல்லாண்டு

வடிவார்சோதிவலத்துறையும் சுடராழியும்பல்லாண்டு

படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும்பல்லாண்டே.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றியாயிரம் பல்லாண்டு, உனது அடியார்களாகிய நாங்கள் உன்னுடனும் நீ எங்களுடனும் பிரிவென்பதே இல்லாமல் இருக்க உனக்கு நாங்கள் ஆயிரம் பல்லாண்டு கூறினோம். வடிவாய் நின்மலர் மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டே, அழகான உன்னுடைய மலர் போன்ற வலமார்பினிலே நித்தம் வீற்றிருக்கும் தாயாரும் பல்லாண்டே. வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு, அழகிய ஒளிவெள்ளமான உன் வலக்கையிலே வீற்றிருக்கும் சுடராழி (சக்கரத்தாழ்வார்)யும் பல்லாண்டே. படைபோர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே, அன்று பாரதப்போரிலே போரினை தொடங்க எடுத்துக்கொண்ட பாஞ்ச சன்னிய (சங்கு) மும் பல்லாண்டே. இங்கே எல்லாவற்றையும் பல்லாண்டே என்று கூறுவதன் அர்த்தம், பல்லாண்டு என்பது போற்றியாகவும், பல ஆயிரம் ஆண்டுகள் இருந்து எங்களுக்கு அருள் பாலிக்கவேண்டும் என்றும் அதற்காக நீ பல்லாண்டு இரும் என்று கூறுதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது மக்களாகிய நாம் இறைவனை நினைக்காது அவனை போற்றாது பல அலுவல்களை செய்கிறோம் இதையெல்லாம் மறந்து வாருங்கள் எல்லோரும் பல்லாண்டு கூறுவோம் என்று அழைக்கிறார். வாருங்கள் பல்லாண்டு கூறுவோம்........மீண்டும் சந்திப்போம்.