ஞாயிறு, 15 ஜூன், 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 25

பெருமாளிடம் பூமிபிராட்டி, ""நம் குழந்தைகளாகிய பூலோகத்து உயிர்கள் வாழ்வில் உய்வடைய ஏதாவது வழிகாட்டுங்கள்,'' என்று வேண்டினாள். பெருமாளும் அவளுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.

மனம், வாக்கு, காயம் என்று மூன்றாலும் கடவுளைச் சிந்திக்க வேண்டும். இதையே எண்ணம், சொல், செயல் என்றும் குறிப்பிடுவர். மனதால் கடவுளின் திருவடிகளைச் சரணாகதியாக பற்றிக் கொள்ள வேண்டும். வாக்கால் அவன் திருநாமத்தை பாட வேண்டும். கையால் பூக்களை அவன் திருவடியில் வைத்து வணங்க வேண்டும். இந்த மூன்றையும் செய்யும் உயிர்கள் சம்சாரக்கடலில் இருந்து கரையேறி மோட்சத்தை அடையலாம் என்று பூமிபிராட்டிக்கு வராகப்பெருமான் உபதேசம் செய்தார். இதனை "சூகரம் சொன்ன சுகர உபாயம்' என்பர்.

சூகரம் என்றால் "பன்றிமுகம் கொண்ட வராகப்பெருமான்'. "சுகரஉபாயம்' என்றால் "எளிமையான வழி'. 

இந்த மூன்றையும் செய்வதற்கு ஏற்றது இளமைக்காலம். "கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயன் வீற்றிருக்கும் அழகர்கோவிலுக்கு வாருங்கள்' என நம்மை அழைக்கிறார் நம்மாழ்வார்.
திருமாலிருஞ்சோலை மலையில் இளமையில் ஏறி சேவியுங்கள். 

தவறினால் முதுமையில் இரண்டு கால்களால் ஏற முடியாமல் அல்லல்படுவோம். அப்போது மூன்றாவது காலாக தடி (ஊன்றுகோல்) தேவைப்படும். முதுமையில் மரணப்படுக்கையில் ஞாபகம் தப்பிவிடும். என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரியாது. கடைசி நிமிஷம் வரை எம்பெருமானின் திருநாமத்தை சொல்ல முடியாது என்பதால், "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயண நாமம்' என்று பெரியாழ்வார் நமக்கு வழிகாட்டுகிறார்.

""மனம், வாக்கு, காயத்தால் தன்னிடம் சரணடைந்தவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் சொல்வது என் பொறுப்பு,'' என்று பூமிபிராட்டியிடம் வாக்கு கொடுத்தவர் பூவராகர். ஆனால், அதை செயல்படுத்துவர் திருமோகூரில் வீற்றிருக்கும் காளமேகப்பெருமாள் தான். வழித்துணையாக நமக்கு வந்து கைகொடுப்பவர் என்பதால் அவரை "ஆப்தன்' என்கிறார்கள். இதற்கு "நல்ல நண்பன்' என்று பொருள்.

வராகமூர்த்தி சொன்ன உபதேசத்தை நமக்கு எடுத்துச் சொல்ல பூமிபிராட்டி எண்ணம் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திவ்யதேசத்தில் கோதை ஆண்டாளாக அவதரித்து நமக்காக வாழ்ந்து காட்டினாள். "திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே' என்று அவளின் ஏற்றத்தைப் போற்றுவர். பிரணவம் என்பது அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்று அக்ஷரங்களின் சேர்க்கை. இந்த மூன்றும் ஓரே கருவறையில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே. அகாரமாக ரங்கமன்னாரும், உகாரமாக ஆண்டாளும், மகாரமாக கருடாழ்வாரும் ஏக சிம்மாசனத்தில் இங்கு வீற்றிருக்கின்றனர். சீதை, ருக்மணி, பாமா என தேவியர் பூமியில் அவதரித்தபோது, பிறந்த வீடும், புகுந்த வீடும் வேறுவேறாகவே இருந்தது. ஆனால், பூமிபிராட்டியான ஆண்டாளுக்கு பிறந்ததும், புகுந்ததும் பெரியாழ்வாரின் வீடு தான்.

கல்யாணம் முடிந்து, "வீட்டோடு மாப்பிள்ளை' என்ற சம்பிரதாயத்தை உலகில் முதன் முதலில் ஏற்படுத்தி வைத்தவர் பெருமாள் தான். பெரியாழ்வார் வாழ்ந்த இல்லமே இப்போது கோயிலாக விளங்குகிறது. இதற்கு "நாச்சியார் திருமாளிகை' என்று பெயர். பெரிய வீட்டில் இருப்பதைப் போன்ற ஜன்னல்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பார்க்கலாம். 

மாயனை மன்னுவட மதுரை மைந்தனை ....என்று தொடங்கும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரத்தில், "தூயோமாய் வந்து தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க' என்று வராகமூர்த்தி சொன்ன உபாயத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். 

இப்படி யார் பக்தி செய்தாலும், செய்த பாவம் அத்தனையும் தீயில் தூசு போலாகி விடும். கிடந்து, இருந்து, நின்று, அளந்து, இடந்து, உண்டு, உமிழ்ந்து என எத்தனையோ விதங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார். பாம்பணையில் கிடப்பதும், அமர்ந்து இருப்பதும், தனித்து நிற்பதும், திரிவிக்ரமனாய் உலகை அளப்பதும், வராகராக வந்து பூமியை இடப்பதும்(தாங்குவது), பிரளய காலத்தில் பூமியை உண்பதும்(விழுங்குவதும்), மீண்டும் சிருஷ்டிக் காலத்தில் உமிழ்வதும்(பூமியை வெளிப்படுத்துவது) பூமிபிராட்டியை முன்னிட்டு தான். முதல் மனைவி இருக்க, இரண்டாவது திருமணம் செய்தால் மூத்த மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பது வழக்கம். அதுபோல, ஸ்ரீதேவிக்கு மார்பில் மட்டும் சின்ன இடத்தைக் கொடுத்து விட்டு, பூமிதேவிக்கு தன்னையே கொடுத்து விட்டார். 

இதுவும் பெருமாள் பூமிபிராட்டிக்கு கொடுத்த ஏற்றம்தான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பொய்கையாழ்வாரின், முதல் திருவந்தாதி என்னும் பாசுரத்தில், பூமிதேவி திருமாலைப் பிரிந்ததால் அழுவதாகப் பாடியுள்ளார். இதற்கு ஸ்ரீரங்க நிர்வாகத்தில் ஈடுபட்ட ஆளவந்தார் காலத்திற்கு முந்தியவர்களும், ஆளவந்தாரும், பராசரபட்டரும் ஒவ்வொரு விதமான காரணத்தைச் சொல்வார்கள். காலத்தால் முந்திய நிர்வாகத்தினர், நிலையான பூமியை விட்டு, ஸ்ரீதேவி பாற்கடலுக்கு பெருமாளை அழைத்துச் சென்ற வருத்தத்தால் பூமிதேவி அழுவதாகக் குறிப்பிடுவர்.

ஆனால், ஆளவந்தாரோ, ""பூமி எப்போதும் ஆடாமல் அசையாமல் நிலையாக இருக்கிறது. ஆனால், கடலோ எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும். அதனால், ஸ்ரீதேவியோடு இருப்பதில் பெருமாளுக்கு சிரமமே,'' என அன்பின் காரணமாக பூமிதேவி அழுவதாக விளக்கம் அளித்தார்.

ஆனால், பராசரபட்டரோ வேறுவகையில் விளக்கம் அளித்தார். ஒரு காதலன் பொருள் தேடி விட்டு மழைக்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டான். ஆனால், வரவில்லை. மழை பெய்யத் தொடங்கியது. காதலி பிரிவுத்துயரம் தாங்காமல் அழுதாள். அவளுடைய தோழி, "இதுநிஜமான மழையில்லை. பாற்கடலில் திருமால் திருமகளோடு தங்கியிருப்பதால், பூமிதேவி அன்பால் விடும் கண்ணீர் துளிகளே' என்று சொன்னதாக விளக்கம் கொடுத்தார்.


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் சொன்னாலும், ரங்கநாதர் என்னும் குளத்தைச் சுற்றி வரும் அன்னம் போல, ஸ்ரீதேவி பெருமாளையே வலம் வந்து கொண்டிருக்கிறாள். அவளின் நிழல் போல பூமிதேவி எப்போதும் இருந்து கொண்டிருக்கிறாள். நிழலோடு யாரும் சண்டை போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், நிஜத்தை விட நிழல் வளர்ந்து கொண்டே போவதை பார்க்கலாம். அதனால், தேவியருக்குள் ஒருபோதும் சண்டை உண்டாவதில்லை.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக