உலகின் மூலமுதற்காரணம் ஸ்ரீமந்நாராயணன். கருணையே வடிவான ஸ்ரீதேவி நாச்சியாரோடு சேர்ந்தே எப்போதும் இருப்பவன் அவன். குருபரம்பரை வைபவத்தைப் பற்றிச் சொல்லும்போது, பிரதம ஆச்சார்யனாக இருப்பவன் விஷ்ணு.
இரண்டாவது ஆச்சார்ய ஸ்தானம் பிராட்டிக்கு, மூன்றாவது விஷ்வக்சேனர், நம்மாழ்வார் இப்படியே குருபரம்பரை தொடர்கிறது.
லோகமாதாவான லட்சுமி தாயாருக்கு எத்தனையோ சூக்த மந்திரங்கள் இருந்தாலும், சிறப்பாக அவளின் பெயரிலேயே இருப்பது "ஸ்ரீ'சூக்தம். (ஸ்ரீஎன்றால் லட்சுமி) மனதிற்கும், வாக்கிற்கும் எட்டாத அவளின் திருவடிப் பெருமையை யாராலும் வரையறுக்க முடியாது.
திருமாலின் வலது மார்பிலுள்ள ஸ்ரீவத்சம் என்னும் மருவை, தன் இருப்பிடமாகக் கொண்டு சேவை சாதிப்பவள் அவள். பிராட்டி சம்பந்தம் இருப்பதால் பகவானுக்கு சிறப்பு. பகவானிடம் நித்யமாக குடியிருப்பதால் பிராட்டிக்கு சிறப்பு. இருவரும் ஒருவரால் மற்றொருவருக்கு ஏற்றம் பெறுகிறார்கள். யார் நல்லவன் என்று கேட்டால், வேதஅத்யயனம்(ஓதுபவன்) செய்பவனே நல்லவன். வேத அத்யயனம் செய்பவன் யார் என்று கேட்டால் நல்லவனே வேதம் ஓதுபவன். இதை பிரபந்தத்தில், ""நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்' என்று குறிப்பிடுவர்.
ஸ்ரீரங்கத்தில் பெரிய பிராட்டி வெள்ளிக்கிழமையில் புறப்பாடு என்றால், பெண்கள் கூட்டம் அலை மோதும். தாயாரை சேவிக்க ஆண்கள் கூடினாலும், அதை விட பெண்கள் அதிகமாக வருவதற்குக் காரணம், நம் குலத்திற்கு தலைவியான பிராட்டியை ஆராதிக்க வேண்டும் என்பது தான். அதுபோல, பிராட்டியின் திருவாக்கான ஸ்ரீசூக்த மந்திரத்தை பெண்கள் சொல்லி ஆராதிக்க விரும்பலாம். ஆனால், வேதத்தின் பாதமான இந்த மந்திரத்தை பெண்கள் ஜபிக்க சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஸ்ரீசூக்தத்தின் விளக்கமாக பின்னாளில் உண்டான கூரத்தாழ்வானின் ஸ்ரீஸ்தவம், வேதாந்த தேசிகனின் ஸ்ரீஸ்துதி, ஆளவந்தாரின் சதுஸ்லோகி, பராசர பட்டரின் ஸ்ரீகுணரத்ன கோசம் போன்றவற்றை ஜபிக்கலாம்.
ஸ்ரீசூக்தத்திற்கு வியாக்யானம்(உரை) எழுதியவர் நலந்திகழ் நாராயண ஜீயர். இவருக்கு நாராயண முனி என்றும் பெயருண்டு. மந்தமதி படைத்தவர்களும் தெளிவாக புரிந்து கொள்ள நீரோடை போல விளக்கம் எழுதியுள்ளார்.
பராசர பட்டர்களின் சீடர்களில் ஒருவராக இவரைக் கருதுவர். "மாத்ரு தேவோபவ, பித்ரு தேவோபவ, ஆச்சார்ய தேவோபவ, அதிதி தேவோபவ' என்னும் தைத்ரிய உபநிஷத வரிகள்
எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பெற்ற தாய், தந்தை, ஆசிரியர், விருந்தினர் இந்த நான்கு பேரும் தெய்வத்திற்குச் சமமானவர்கள் என்பது இதன் பொருள்.
மற்றொரு ஆழமான பொருளும் இதற்குண்டு. இந்த உலகத்திற்கு அன்னையான ஜகன்மாதா ஸ்ரீதேவி, உயிர்களைக் காக்கும் தந்தையான திருமால், நமக்கு வழிகாட்டும் ஆச்சாரியார்கள், அதிதியான பாகவத உத்தமர்கள், ஸ்ரீ வைஷ்ணவர்களே நமக்கு தெய்வங்கள். ஆழ்வார்கள் தங்களின் பாசுரங்களின் வாயிலாக தாய், தந்தையான பிராட்டியையும், பெருமாளையும் தெய்வமாகப் போற்றியுள்ளனர். ஆச்சார்யனையே தெய்வமாக கொண்டு வாழ்ந்து காட்டியவர் மதுரகவியாழ்வார். குருவான நம்மாழ்வாரைத் தவிர வேறு யாரையும் அவர் வணங்கவில்லை. பாகவத உத்தமர்களைத் தெய்வமாக வணங்கியவர் திருமங்கைஆழ்வார். அவர் திருக்கடல்மல்லை என்னும் திவ்ய தேசத்தில் தலசயனப் பெருமாளாக வீற்றிருக்கிறார். அங்கு பாடிய பாசுரத்தில் "அடியவர்களே எனக்கு குலதெய்வம்' என்று பாடியுள்ளார். இந்த நான்கில் முதன்மையாக இருப்பவள் பிராட்டியே.
பரீட்சை எழுதும்போது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை சொல்வார்கள். நன்கு தெரிந்த வினாக்களை முதலில் எழுதிவிட்டு, கஷ்டமானதை பிறகு எழுதும்படி அறிவுறுத்துவர். அதுபோல, பற்றிக் கொள்வதற்கு எளியவளான பிராட்டியை முதலில் சரணடைவது சுலபம்.
பெருமாளுக்கு மூன்று விதமான குற்றங்கள் உண்டு என்பார்கள் பெரியவர்கள். அவர் சர்வ சுதந்திரமானவர். யாரும் எதற்காகவும் எந்த கேள்வியும் அவரிடத்தில் கேட்க முடியாது. இரண்டாவது அவர் உயிர்களுக்கு பாவபுண்ணியம் அடிப்படையில் கர்மவினைப்படி பலன்களைத் தருபவர். அவர் பரமாத்மா, உயிர்கள் ஜீவாத்மா. அதனால், அவர் நாம் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார். ஆனால், பிராட்டி அப்படிப்பட்டவள் அல்ல. பெண்ணாக இருப்பதால் அவள் உயிர்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவள்.
பெற்றவர்கள் தான் பிள்ளைகளுக்கு நாமகரணம் (பெயர்) சூட்டுவது வழக்கம். ஆனால், கண்ணனுக்கு மனைவியான ஆண்டாள், அவனுக்கு அழகாக ஒரு நாமம் சூட்டுகிறாள். "பெண்ணின் வருத்தம் அறியாப் பெருமான்' என்பது அந்தப்பெயர்.
பெண்ணாக பிறந்தவர் களுக்கு தான், வாழ்வின் கஷ்ட நஷ்டம் தெரிந்திருக்கும். ராமன், கண்ணன் என எத்தனையோ அவதாரங்களை எடுத்த பெருமாள், பெண்ணாக ஒருமுறை கூட அவதரிக்கவில்லை. சிலர் மோகினி அவதாரம் எடுத்திருக்கிறாரே என நினைக்கலாம். அது அசுரர்களை ஏமாற்ற போட்ட வேஷம் தான். இப்போது இன்னும் ஒரு சந்தேகமும் நமக்கு உண்டாகும். பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கும் உயிர்களுக்கு தானே கஷ்டம். ஆண்களாகப் பிறந்தால் கஷ்டமில்லையோ என்ற எண்ணம் உண்டாகும். ஆண், பெண் என நாம் சொல்வதெல்லாம் உருவத்தால் மட்டுமே. வைஷ்ணவ சம்பிராதயத்தில் புருஷோத்தம னான பெருமாள் மட்டுமே ஆண். ஜீவாத்மாவாக இருக்கும் நாமெல்லாம் பெண்கள் தான். பெண் கோஷ்டியான நாம், பெண்ணாக இருக்கும் பிராட்டியைப் பற்றுவதே தர்மம்.
பெருமாள் கர்மாவின் அடிப்படையில் பாவபுண்ணியத்தைப் பார்த்து பலன் தருகிறார். அவருக்கு ஒருகண் சூரியனாகவும், ஒருகண் சந்திரனாகவும் இருக்கிறது. அந்த கண்கள் உஷ்ணமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால், பிராட்டிக்கோ இரு கண்களுமே சந்திரனைப் போல குளிர்ச்சி கொண்டவை. அவளிடத்தில் உஷ்ணமே கிடையாது. அவள் நம் பாவ, புண்ணியத்தை ஒருபோதும் பார்ப்பதில்லை. தாயைப் போல பிள்ளைகள் மீது அன்பு கொண்டவள். பரமாத்மாவாக பெருமாள் இருப்பதால், அவர் நமக்கு எளிதில் எட்டுவதில்லை. பிராட்டியோ ஜீவாத்மாவாக நம்முள் ஒருத்தியாக இருந்து கடைத்தேற்றம் செய்கிறாள். அவளின் திருவடிகளை சரணடைவோம். கோலத் திருமார்பில் குடியிருக்கும் அவள் எம்பெருமானையே நமக்கு கொடுத்து மகிழ்வாள்.
முற்றும்
நன்றி - தினமலர்