வெள்ளி, 20 ஜூன், 2014

ஆழ்வாரைப் போற்றிய ஆழ்வார் - எஸ். ஸ்ரீதுரை

இந்திய ஆன்மிக மரபில் ஆண்டவனுக்குச் சமமான மதிப்பு ஆச்சாரியன் எனப்படும் குருவிற்கும் வழங்கப்படுகிறது.

வைணவ அடியார்களான ஆழ்வார்கள் பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் குண விசேடங்களில் ஆழ்ந்து தமிழ்ப் பாசுரங்களைப் பாடி வழிபட்டமையால் ஆழ்வார்கள் என்று போற்றப்பட்டனர்.
அந்தப் பன்னிரண்டு ஆழ்வார்களுள் மதுரகவி ஆழ்வார் என்பவர் மட்டும் ஆண்டவனைப் பாடாமல் தம் ஆச்சாரியரான நம்மாழ்வாரைப் போற்றிக் கொண்டாடி ஒரேயொரு பதிகம் பாடித் தாமும் ஆழ்வாராகவே ஆகிவிட்டார்.

அவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

தென்தமிழ் நாட்டில் ஸ்ரீவைகுண்டத்தின் அருகே விளங்கும் திருத்தலம் ஆழ்வார் திருநகரி ஆகும். ஆழ்வார் பாடல் பெற்றதால் இது திவ்வியதேசமும் ஆகும். இவ்வூருக்குள் அவதரித்து அசையாப் பிண்டமாய் இருந்து பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் நினைவிலேயே நிறைந்திருந்தவரே நம்மாழ்வார். பிறந்தவுடனே இப்பிறவி பற்றிய தொடர்பையும் சிந்தனையையும் கொடுத்துப் பிறப்பு- இறப்புச் சுழலில் நம்மைத் தள்ளுவது சடம் என்னும் வாயு. அந்த வாயுவைக் கோபித்து விலக்கியவர் நம்மாழ்வார். அதனால் சடகோபர் என்றும் போற்றப்படுகிறார்.

இந்த நம்மாழ்வாருக்குச் சீடராகி, இவரது புகழை மட்டுமே பாடித் தாமும் ஓர் ஆழ்வாராக ஏற்றம் பெற்றவரே மதுரகவியாழ்வார் ஆவார். மதுரகவியாழ்வார் காலத்தால் நம்மாழ்வாருக்கு மூத்தவர். ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள திருக்கோளூரில் அவதரித்தவர்.

வைணவர்களின் விக்கினம் போக்கும் தெய்வம் விஷ்வக்சேனர் எனப்படுகிறார். பெருமாள் கோயில் பிரம்மோற்சவங்களின் போது வெவ்வேறு வாகனங்களில் எம்பெருமான் வீதிவலம் வருவதற்கு முன்பாக விஷ்வக்சேனர் திருவுருவம் வீதியுலா எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

விஷ்வக்சேனர், சேனை முதலியார் என்று அழகுத்தமிழில் அழைக்கப்படுகிறார். எம்பெருமான் சேனைகளின் தலைவராகிய விஷ்வக்சேனரே பூவுலகில் நம்மாழ்வாராக அவதரித்தார். நம்மாழ்வார் ஓர் அசைவுமின்றி நீண்டகாலம் இறைச்சிந்தனையிலேயே லயித்திருந்திட இடமளித்த புளியமரம் ஆதிசேசனின் அவதாரமாகும்.

ஆழ்வார் திருநகரியில் இன்று காட்சிதரும் இம்மரம் திருப்புளி ஆழ்வார் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. எம்பெருமானின் கணங்களில் ஒருவராக விளங்கிய குமுதர் என்பவரே மதுரகவியாழ்வாராக அவதரித்தார்.

அந்தணர் குலத்தில் தோன்றிய மதுரகவியாழ்வார், வேதசாஸ்திரங்களைக் கற்று இறைபக்தி மேலிட்ட நிலையில் ஸ்ரீகிருஷ்ண பகவானை நேரில் தரிசிக்க விரும்பி வடதேச யாத்திரை சென்றபோது, தேற்குத் திசையில் ஒரு ஜோதிப்பிழம்பு தென்பட்டது. பல நாட்கள் அவ்வாறு தென்பட்டதால், தமது வடதேச யாத்திரையைக் கைவிட்டு, அச்சோதியை அருகில் சென்று பார்க்கும் ஆவலில் மீண்டும் தென்திசையில் நடக்கத் தொடங்கினார்.

அச்சோதியானது ஆழ்வார் திருநகரியில் மறைந்து விடவும், அவ்வூரில் ஏதேனும் விஷயம் உள்ளதா என்று அவ்வூராரிடம் கேட்டார். அவ்வூர்த் திருக்கோயிலின்கண் உள்ள புளியமரத்துப் பொந்தில் யோக நிலையில் வீற்றிருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி அறிந்தார். ஆர்வமுடன் சென்று நம்மாழ்வாரை வணங்கினார்.

எதுவும் பேசாதிருந்த நம்மாழ்வாரின் அருகில் சென்று, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று வினவ, யோக நிலையிலிருந்த நம்மாழ்வார் அது அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று பதில் கூறிவிட்டு மீண்டும் யோக நிலைக்குச் சென்று விட்டாராம்.

இக்கேள்வி பதில் சாரம் இது:

இவ்வுலகில் பிறக்கும் ஜீவாத்மாக்கள் அனுபவிப்பது என்ன? என்பது மதுரகவியாழ்வாரின் கேள்வி.
ஜீவாத்மாக்கள் இப்பிரபஞ்சத்திலுள்ள பொருள்களின் போகத்திலேயே திளைத்து இந்தச் சம்சார வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் என்பதே நம்மாழ்வாரின் பதில்.

மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக விளக்கிக் கூறிய நம்மாழ்வாரையே அதுமுதல் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவியாழ்வார்.

நமது ஆன்மிக மரபில் சாதி வித்தியாசங்களுக்குச் சற்றும் இடம் இல்லை என்பதற்கு நம்மாழ்வார்-  மதுரகவியாழ்வார் ஆகிய இருவருமே எடுத்துக் காட்டுகள் ஆவார்கள்.

குருவாகிய நம்மாழ்வார் வேளாள இனத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரையே தெய்வமாகப் போற்றிய மதுரகவியாழ்வார் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என்பதும் நம் மனத்தில் குறித்துக் கொள்ள வேண்டியதாகும்.

நம்மாழ்வாரைத் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்ட மதுரகவியாழ்வார், தம் குருநாதர் யோக நிலையிலிருந்து மீண்ட நேரங்களில் எல்லாம் உதிர்க்கும் திருவாய்மொழிப் பாசுரங்களைப் பட்டோலையிட்டுப் பாதுகாத்து வந்தார்.

மேலும், தம் குருவாகிய நம்மாழ்வாரைப் போற்றி, கண்ணி நுண் சிறுத்தாம்பினால்… என்று தொடங்கும் பதிகத்தைப் பாடித் தமது குருபக்தியை வெளிப்படுத்தினார். அப்பதிகத்தின் இரண்டாவது பாசுரத்தில்-

தேவும் மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே! என்று கூறியிருப்பதன் மூலம், தமக்கு நம்மாழ்வாரைத் தவிர வேறொரு தெய்வம் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இவ்வாறு தெய்வபக்தியின் எல்லை நிலமே குருபக்தி என்று வைணவம் கூறுவதற்கு எடுத்துக்காட்டாக இவர் விளங்கினார். தமது குருவைப் போற்றி ஒரேயொரு பதிகம் பாடிய மதுரகவியாழ்வாரும் ஆழ்வார்கள் வரிசையில் போற்றப்படுவது நமது இந்திய ஆன்மிக மரபின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

மதுரகவியாழ்வார் தமது பதிகத்தின் கடைசிப்பாட்டில் (பலசுருதிப் பாசுரம்) நம்மாழ்வார் பெருமையைப் பேசும் தமது பாடல்களை நம்புகின்ற நல்லோர் வாழும் இடமே வைகுந்தம் ஆகும் என்றும் கூறுகிறார்.

… … தென்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே!

இத்தனைப் பெரும் சிறப்புகளுக்கு இருப்பிடமான மதுரகவியாழ்வாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பினால் பதிகம் நாலாயிரம் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களையும் நமக்குக் கொடுத்தருளிய வரலாறு இன்னும் அற்புதமானதாகும்.

ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் தோன்றிய முதல் வைணவ ஆச்சாரியாரான நாதமுனிகள் (ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்டவர்) ஒரு சமயம் கும்பகோணம் நகரில் அமைந்த ஸ்ரீ ஆராவமுதப் பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்தபோது பக்தர்கள் சிலர் நம்மாழ்வார் திருவாய்மொழிப்பதிகம் ஒன்றை ஓதியதைக் கேட்டார். அப்பதிகத்தின் இறுதியில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று அமைந்ததைக் கேட்டு, மீதியுள்ள 990 பாசுரங்களை அறிவீரா என்று வினவ, அந்த பக்தர்களோ இந்த ஒரு பதிகத்தை மட்டுமே செவிவழியாக அறிந்து ஓதி வருகிறோம் என்று பதில் கொடுத்தனர்.

நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார் திருநகரிக்கே சென்று அறிந்து வர எண்ணி, அங்கு சென்றார் நாதமுனிகள்.

அந்தத்தலத்து வைணவர்களோ, நம்மாழ்வாரின் சீடராகிய மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணி நுண் சிறுத்தாம்புப் பதிகத்தின் பெருமையைக் கூற, நாதமுனிகளும் அந்தப் பதிகத்தை இடைவிடாது பன்னீராயிரம் முறை ஓதினார்.

இதனால் மகிழ்ந்து காட்சியளித்த நம்மாழ்வார், தமது திருவாய்மொழிப்பாசுரங்கள் ஆயிரம் மட்டுமின்றி, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குப் போதிக்க, அவர் மூலமே திவ்வியப் பிரபந்தம் தமிழ் மக்களைச் சென்றடைந்தது.


இவ்வாறு மதுரகவியாழ்வாரின் குருபக்தி, அவரையும் ஆழ்வார் ஆக்கி, நம் அனைவரையும் ஆழ்வார் பாசுரங்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த திறம் பெருமையிலும் பெருமை மிக்கதாகும்.

நன்றி - ஓம் சக்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக