வெள்ளி, 20 ஜூன், 2014

மார்கழி மகிமையும் கோதை நோன்பும் - மும்பை ராமகிருஷ்ணன்

கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் கூறுவார் : மாஸானாம் மார்கசீர்ஷோஹம் - மாதங்களில் மார்கழி என்று. ஏன்? அவர் பிறந்த ஆவணி மாதத்தைக் கூறவில்லை. அவரது பிரியமான ராதை பிறந்த புரட்டாசியைக் கூறவில்லை. திருப்பதி வெங்கடாசலபதி என்று பிரசித்த கோவிந்தனின் முக்கிய திருவோணம் – புரட்டாசியைக் கூறவில்லை. ராமர் பிறந்த சித்திரையைக் கூறவில்லை. ஏன்?
நமது நாட்டில் கோயில்களைப் பார்த்தால், பொதுவாகச் சிறிது நேரம் கழித்துத்தான் திறக்கும். ஆனால் பெருமாள் கோயிலையோ, சிவன் கோயிலையோ, கணபதி, முருகன், தேவி, சாஸ்தா என்ற பிரத்யேகக் கோயில்களையோ எதைப் பார்த்தாலும், விடியற்காலையிலேயே திறந்து அபிஷேக பூஜை ஆராதனைகள் நடக்கும் மாதம் மார்கழி.

ஆஸ்திக மக்களும் பரவலாக மார்கழி மாதம் விடியற்காலை எழுந்து நீராடி ஆன்மிக வழிபாட்டில் ஈடுபடுவர். தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி என்று துதிகள் கேட்டு, துதி செய்து மகிழ்வர். காரணம் என்ன?

பிரதோஷக் காலத்தில் மாலைவேளையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறோம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். நமது மார்கழி மாதமே, தேவர்களின் விடியற்காலை. படிக்கும் சிறுவர்களிடம் சொல்வதில்லையா – விடியற்காலை எழுந்து படி, மனதில் நன்கு பதியும், புரியும், மனது தெளிவாக இருக்கும் என்று.

நமது விடியற்காலையும் தேவர்களின் விடியற்காலையும் சேர்வது மார்கழி மாதமே! சிவராத்திரி, நவராத்திரி, பௌர்ணமி என்றெல்லாம் இரவுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் துதி, பூசைகள் செய்வதுடன், மார்கழி மாத விடியற்காலம், தேவ விடியற்காலை சேர்ந்த நேரம், Sound Theory-இல் Resonance என்று சொல்வார்கள். அப்போது ஆன்மிக அதிர்வுகள் (Spritual Vibrations) உன்னதமாகும். மிகுந்த பலனைத் தரும்.

இராணுவச் சிப்பாய்கள் லெப்ட் – ரைட் என்று ஒருவிதமான அதிர்வுகளுடன் நடப்பார்கள். ஏதேனும் பாலம் வந்தால், அவர்கள் சாதாரணமாகத்தான் நடக்க வேண்டும். பாலத்தில் லெப்ட்-ரைட் போட்டால், பாலத்தின் அதிர்வுகளும் சேர்ந்து (Resonance) பாலமே உடைந்து போகலாம்.

ஆன்மிக அதிர்வுகள் ஒன்றி இணையும் மாதம் மார்கழி. ஆகவே மாதங்களில் உன்னதமானது மார்கழி.
ஏகாதசி மகாவிஷ்ணுவை வணங்கிட உகந்த நாள். சிவனுக்குப் பிரதோஷம் சிறந்தது. தேவி உபாசகர்களுக்குப் பௌர்ணமி உகந்தது. நடராஜ அபிஷேகம் ஆண்டுக்கு 6 நாட்கள் நடைபெறுகிறது.

என்றாலும் மார்கழி மாத ஏகாதசி மகா உன்னத ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி என்று எல்லாப் பெருமாள் கோயில்களிலும் விடியற்காலையில் தரிசனமாக வெளியே வருதலும், மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திரப் பௌர்ணமியில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் விடியற்காலை வெளியே உலவி வருதலும் மிகமிக விசேஷமானது.

தொண்டரடிப் பொடியாழ்வார் மகாவிஷ்ணுவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடினார். ஆண்டாள் வில்லிப்புத்தூர் ரங்கனைக் குறித்துத் திருப்பாவை பாடினாள். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைச் சிவனைக் குறித்துத் திருப்பள்ளி எழுச்சி பாடினார். அவரே திருவண்ணாமலைச் சிவனைக் குறித்து திருவெம்பாவை பாடி நெகிழ்ந்தார்.

இவற்றைப் பாடி ஆன்மிகப் பக்தர்கள் மனம் நெகிழ்கின்றனர். மார்கழியில் திருவில்லிப்புத்தூரில் துளசிமாடத்தின் அடியில் பூமியில் கோதை உதித்தாள். அரங்கனுக்கு மலர்க் கைங்கரியம் செய்யும் பெரியாழ்வார் கோதையைக் கண்டெடுத்து வளர்த்தார். நாரதர் கூற, ருக்மணி தேவி துவராகைக் கண்ணனே தன் கணவன் என்று மனதில் ஒன்றினாள். கண்ணனே அவளது ஊருக்கு வந்து அவளை மணந்து மகிழ்வித்தார்.


அதே நாரதர் கூற, கந்தனே வேடனாக, கிழவனாக எனப் பல லீலைகள் புரிந்து வள்ளிதேவியை மணம் புரிந்தார்.

பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுத்த மாலையைக் கோதை தான் அணிந்து பெருமாளுக்குத் தான் உகந்த மனைவியா என்று அழகு பார்த்தாளாம். ஒரு நாள் இதனைக் கண்டுவிட்ட பெரியாழ்வார் அம்மாலையை, மாசுபட்டது என்று அணிவிக்கவில்லையாம். அரங்கனோ, ஆண்டாள் அணிந்து அழகு பார்த்த மாலைதான் தனக்கு வேண்டுமென்றார். அவ்வாறே நடந்திட, கோதை விடியற்காலை மற்ற தோழிகளையும் எழுப்பி ஊர்வலம் வந்து திருப்பாவையைப் பாடினாள்.

வாரணம் ஆயிரம் என்று அரங்கனுடன் தான் மணம் புரிந்ததாகக் கனாக் கண்டேன் தோழீ நான் என்று பாடினாள். மகாவிஷ்ணுவுக்குப் பல்லாண்டு பாடினாள். பெரியாழ்வார் திகைத்தார். அரங்கனோ, கோதையை மணமகளாக அலங்கரித்துத் திருவரங்கக் கோயிலுக்கு அழைத்து வாரும் என்க, அவரும் அவ்வாறே செய்ய, மணமாலையுடன் திருவரங்கக் கருவறைக்குள் சென்ற ஆண்டாள், அரங்கனுள் மறைந்தாள். என்னே அதிசயம்!

திருவெம்பாவை, திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் நடராஜருள் மறைந்தது போல், மீராபாய் துவாரகாதீசனுள் ஒன்றியதுபோல் ஆண்டாள் அரங்கனுள் மறைந்தாள். பக்தனின் ஆழ்ந்த பக்தி பரமனுடன் இணைத்திட துவைதம் (ஜீவாத்மா – பரமாத்மா என்கிற இரண்டு) அத்வைதமாக – ஒன்றாக ஒன்றிவிடுகிறது. அதுவே மார்கழி மாதக் கோதை நோன்புத் தத்துவம்.

நாமெல்லாம் – ஆணோ, பெண்ணோ – யாவரும் பெண்தான். ஆண்டவன்தான் ஆண்! ஜீவன் பரமனுடன் இணைவதையே நாம் முக்தி, கல்யாணம், அனுபூதி நிலை என்கிறோம். மலர்சூடி, பாமாலைப் பாடி ஆண்டாள் அரங்கனுடன் ஒன்றினாள். திருப்பாவை மகிமை அத்தகையதல்லவா!

ஸ்ரீதேவி, பூதேவி அர்ச்சாவதாரமாக, கருவறையிலோ, பஞ்சலோக விக்கிரகமாகவோ இருக்கலாம். தனியே மகாலட்சுமி – ஸ்ரீதேவியாக அமர்ந்த கோலத்தில் இருக்கலாம். ஆனால், தனிக் கருவறையில் பூதேவியைக் காண்பது அரிது. நின்று கொண்டிருக்கும் ஆண்டாளைக் காணலாம். அத்தகைய மகா உன்னத நிலையைப் பெற்றவள் கோதை என்னும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். தனது பக்தியில் ஆண்டவனையே தனதாக்கியதால் அவள், ஆண்டாள். ஆண்டவனை, பெருமாளை ஆள வரவில்லை. மணம்புரிய ஒன்று சேர்ந்திட விரும்பினாள். ஆகவே அவள் ஆண்டாள்.


ஆண்டாள் கூறும் சில திருப்பாவை மகிமைகளை ரசிப்போம்.

நாராயணனே நமக்கே பறை தருவான் (பறை – வாரி வழங்கும் அருள்).

நோன்பு எவ்வாறு செய்ய வேண்டும்? பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி, மலரிட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், …. உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி – தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து – வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித் தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம், பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


ஆக சரணாகதித்துவ ஆண்டாளின் திருப்பாவையைப் பாடிட நாம் என்றும், எங்கும், ஆண்டவன் திருவருள் பெற்று இன்பமாய் வாழ்வோம் என்பதில் ஐயமுண்டோ?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக