"ராம ராம' எனும் இனிய சொல்லை வலிமையாகக் கூவிக்கொண்டு, கவிதையாகிற கிளையில் ஏறி அமர்ந்திருக்கும் குயிலைப் போன்றவர் வால்மீகி. ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி முனிவர் என்பது யாவரும் அறிந்ததே. நாம் எல்லாரும் உன்னத நிலையை அடையவேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்துடன் அற்புதமான இந்த இதிகாசத்தை இயற்றித்தந்த வால்மீகி முனிவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கும் மேலே ஸ்ரீவால்மீகி முனிவர், தாரக பிரும்மமாகிய ஸ்ரீராமன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிரந்தரமாக வாழவேண்டும் என்று பதித்து வைத்துள்ளார். இப்படி ஒரு அரிய பெரிய சாதனையை வால்மீகி முனிவர் நமக்கு அனுக்கிரகம் செய்துள்ளார் என்பதற்காகவே அவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
ஸ்ரீமத் அத்யாத்ம ராமாயணத்தில், ஸ்ரீராமபிரானுக்கும் வால்மீகி முனிவருக்குமிடையே நடந்த ஒரு உரையாடல் நெஞ்சை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
ஸ்ரீராமர் வனவாசம் தொடங்கும் காலம். நிஷாத அதிபதியான வேடன் குகனுக்கு கங்கைக்கரையில் அனுக்கிரகம் செய்துவிட்டு, பரத்வாஜருடைய ஆசிரமம் சென்று அங்கு ஒரு இரவைக் கழித்துவிட்டு மறுநாள் அருகிலுள்ள வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்குப் போகிறார் ராமபிரான்.
ராமன், சீதா பிராட்டி, இளையபெருமானாகிய லட்சுமணன் ஆகிய மூவரையும் பார்த்து வால்மீகி முனிவருக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது.
அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து, ராமன் திருவாய் மலர்ந்தருள வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்.
ராமன் முனிவரை வணங்கி, "முனிபுங்கவரே, நான் இதுநாள் வரை அரண்மனையிலேயே கழித்துவிட்டேன். தந்தை சொல் காக்கும் பொருட்டு வனவாசம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனக்கு இந்த வனப்பிரதேசம் அவ்வளவு பழக்கமில்லை. தாங்கள் மகாதபஸ்வி. தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. நாங்கள் மூவரும் வாழ்க்கை நடத்துவதற்கு, ஒரு வாசஸ்தானத்தை தாங்கள்தான் கூறியருள வேண்டும்'' என்றான்.
வால்மீகி மகாஞானியல்லவா? ராமன் என்ற நாமத்துடன் தன் முன்னே பிரசன்னமாகியிருப்பது எங்கும் நிறைந்த பரிபூரண பரப்பிரும்மம் என்று அறியாதவரா?
சீதாபிராட்டி யோகமாயை என்றும்; இளைய பெருமான் ஆதிசேஷன் என்றும் அறியாதவரா?
எல்லா அறிவுக்கும் மூல அறிவான பரப்பிரும்மம், தான் வசிப்பதற்கு ஏற்ற இடம் எதுவென்று தன்னிடம் கேட்கிறாரே! பகவான் இல்லாத இடம் ஒன்று உண்டா? என்றெண்ணி வால்மீகி முனிவர் சிரித்தார்.
"என் அப்பனே ராமா! நல்ல கேள்வி கேட்டாய். நீங்கள் வசிப்பதற்கு ஒரு இடத்தை நான் கூறவேண்டுமா? இது என்ன விளையாட்டு. சகல லோகங்களுக்கும் நீயல்லவா நிவாசஸ்தானம். சகல பிராணிகளும் உன்னை அடையவேண்டும் என்றல்லவா விரும்புகிறார்கள்.
உனக்கு அடைக்கலம் புகும்படியான பிரதேசத்தை நான் கூறவேண்டும் என்று கேட்கி றாயா? அதிலும் ஒரு விசேஷம் இருக்கத்தான் செய்கிறது. எல்லாருடைய உள்ளங்களும், சகல பூதங்களும் நீ வாசம் செய்யும் சாதாரணமான ஸ்தானங்கள்தான். பிராட்டியுடன் நீ வாசம் செய்வதற்கு இந்த சாதாரணமான ஸ்தானங்கள் போதாது. நிரந்தரமாக வாசம் செய்ய விசேஷமான ஸ்தானம் வேண்டுமென்று கேட்கி றாய் போலும்.
தத் வக்ஷ்யாமி ரகுஸ்ரேஷ்ட
யத்தே நியதமந்திரம்
தாங்கள் நிரந்தர வாசம் செய்வதற்கு விசேஷமான கோவில்களை நான் தீர்மானம் செய்து வைத்திருக்கிறேன். அவற்றைக் கூறுகிறேன்; கேளுங்கள்'' என்று சொன்ன வால்மீகி, பெருமாள் நிரந்தரமாக வாசம் செய்யும் அதி அற்புதமான ஸ்தலங்களைப் பற்றிக் கூறுகிறார். அவர் கூறிய அமுத மொழிகளைக் கேட்போமா?
"ராகத்துவேஷங்கள் அற்றவர்களாகவும்; நட்பு, பகை இல்லாமல் யாரையும் சமமாகப் பார்ப்பவர்களாயும்; எந்த உயிரிடத்தும் பகைமை இல்லாமல் அன்பு செலுத்திக் கொண்டு எப்பொழுதும் உன்னையே பஜனை செய்பவர்களாயும் உள்ளவர்களின் இதயத்தை ஒரு ஒப்பற்ற க்ஷேத்திரமாக தாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் எப்போதும் உனது மந்திரத்தை ஜெபம் செய்த வண்ணமாக- உன்னை சரணாகதி அடைந்தவனாய்; விருப்பு- வெறுப்பு, சுகம்- துக்கம், குளிர்ச்சி- வெப்பம் என்ற இருமை மயக்கம் நீங்கியவனாய் பற்றற்று வாழ்ந்து வருகின்றானோ, அவனுடைய இதயப் பிரதேசம் தாங்கள் புனிதமான ஆலயம் அமைத்துக்கொள்ள ஏற்ற பிரதேசமாகும்.
அகம்பாவத்தை உதறிவிட்டு, பரமசாந்த சுபாவத்துடன், ராகத்துவேஷங்கள் அற்றவனாய், மண், பொன் ஆகியவற்றை சமமாகக் கருதுகிற வனாய், யார் இருக்கிறானோ, அவனது உள்ளம் தாங்கள் தேவாலயம் அமைத்துக்கொள்ள பரமபவித்ரமான பிரதேசமாகும்.
தனது மனதையும் புத்தியையும் உனக்கு அர்ப்பணம் செய்தவனாய், என்றும் திருப்தியுள்ளவனாய் எல்லா செயல்களையும் ஈசுவரார்ப்பணமாகச் செய்கிறவனாய் யார் இருக்கிறானோ, அவனது நெஞ்சில் ஓர் ஆலயத்தை தாங்கள் சுபமாக அமைத்துக்கொள்ளலாமே.
யாவும் மாயை என்று திட நம்பிக்கை கொண்டு, எவன் ஒருவன் துன்பத்தில் கலக்கமடையாமலும், இன்பத்தில் மயக்கமடையாமலும் இருக்கின் றானோ, அவனுடைய பரிசுத்தமான மனப் பிரதேசத்தில் தாங்கள் தங்கள் வாசஸ்தானத்தை பவித்ரமுள்ளதாக அமைத்துக்கொள்ளுங்கள்'' என்று அற்புதமாக பகவானிடம் கேட்டுக் கொள்கிறார்.
வால்மீகி முனியின் வாய்மொழி மூலம், பகவான் எங்கெல்லாம் நிரந்தரமாக வாசம் செய்வார் என்று அறிந்து கொண்டு, பகவானுக்கு நாம் நெஞ்சில் ஆலயம் அமைக்கலாமே.
"மனத்துள்ளான் வேங்கடத்தான்' என்று பூதத்தாழ்வார் பாடுகிறார். ஸர்வ வியாபியாக எங்கும் பரந்து நிறைந்திருப்பவர் நம் உள்ளத்திலேயும் நுழைந்து அமர்ந்திருக்கிறார் என்று அனுபவிப்பதைப் பார்க்கிறோம்.
இதையே திருமூலர் "உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்' என்று சொல்லிவிட்டு, வேடிக்கையாக இன்னொரு செய்தியையும் சொல்கிறார். இறைவன் ஏன் மனதிற்குள் புகுந்து தனது வாசத்தை ஏற்படுத்திக் கொண்டார்? பகவானின் செயல்கள் அனைத்திற்கும் ஏதாவது ஒரு தத்துவம் இருக்க வேண்டுமே? எனவே அவர் உள்ளே புகுந்துகொண்டதற்கு காரணம் என்னவென்றால் மனிதனுக்கு ஆசை மிகவும் அதிகம். ஆசை என்பது வளர்ந்து கொண்டே இருக்கும். ஆசை என்ற பசி அடங்குவதே இல்லை. வள்ளலாகிய இறைவனைக் கண்டால் கறந்து எடுத்துவிடுவார்கள். எனவே எல்லாம் அளிக்கும் அந்த இறைவன் கொள்ளையடிக்கும் இந்த கள்ளப் பெருமக்களைக் கண்டு அஞ்சி அந்த மனிதர்களின் மனத்திலேயே ஓடி ஒளிந்துவிடுகிறார்
என்கிறார்.
முனிவர்களும், மகான்களும் பரப்பிரும்மத்தை எப்படி எல்லாம் அனுபவித்து, நம்மைப் போன்ற சாதாரணமானவர்களும் இறையின்பத்தை அனுபவித்து ஆனந்தம் அடையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிகாட்டுகிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்வார்- "தெய்வீகத் தன்மை பெற்ற முனிவர்களும், மகான்களும் பகவானின் நெருங்கிய உறவினர்கள். நம்மைப்போல சாதாரண மக்கள் ஈசுவரனுடைய தூரத்து உறவினர்கள். பகவத் தத்துவத்தை அறிந்துகொள்ளவும், பகவானுடைய அனுக்கிரகத்தை அடையவும் நாம் இறைவனின் நெருங்கிய உறவினர்களாகிய மகான்களை நாடவேண்டும்.'
பரப்பிரும்மமாகிய ஸ்ரீராமபிரானின் நெருங்கிய உறவினரான வால்மீகி முனியின் அற்புதமான விவரணையைக் கேட்டு, நாமும் நம் மனதில் இறைவனை இருத்த முயற்சிக்க வேண்டும். இதயத்தில் வைத்து வழிபட வேண்டும்.
நன்றி - ஓம் சரவணபவ 2013