புதன், 25 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 17 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணாவதாரத்தின் பிரதான காரணங்கள் என்று பலவற்றைச் சொல்வார்கள். முதல் காரணம் கம்சனும், அவன் சார்ந்த அசுர சக்திகளும் அழிக்கப்படுவது என்பதே. ஆனால், கிருஷ்ண லீலை குறித்து சிந்திக்கும் போது இந்த வீராவேசம் பெரிதாகத் தோன்றாது. கிருஷ்ணன் அழித்த மற்ற அசுர சக்திகளை நினைத்தால் நமக்கு பிரமிப்பு உண்டாகும். பூதனை என்னும் அரக்கியிடம் தொடங்கி திருணாவர்த்தன், பகன், அகன், தேனுகன், காளிங்கன், சங்கசூடன், அரிஷ்டன், கேசி, வியோமன் என்று அசுரப் பிறப்புகளையும், சாணூரன், முஷ்டிகன் என்னும் மனித வடிவில் இருந்த மல்லர்களையும் வீழ்த்தினான் கிருஷ்ணன். இறுதியில் கம்சனையும், அவனோடு பிறந்த எட்டு சகோதரர்களையும் வீழ்த்தி அழித்தான். 
கிட்டத்தட்ட கிருஷ்ணாவதார நோக்கம் சரிபாதி இங்கேயே பூர்த்தியாகி விட்டது. இந்த சமயத்தில் கிருஷ்ணன், மனிதக் கணக்கின்படி இருபது வயதைக் கடந்த அழகிய இளைஞன்!
ஆனால் கிருஷ்ணனை எண்ணும் போது அவனது வீரதீரம் எதுவும் நம் மனதில் முந்தாது. அவன் செய்த குறும்புகளே நம்மை முதலில் எண்ணிப் பார்க்க வைக்கும். வெண்ணெய் திருடியது, மண் தின்றது, கோபியர்களின் ஆடை, அணிகளை ஒளித்து வைத்தது என்ற லீலைகளே அபாரமாக பேசப்படும். ஒரு அசுர வதம் கூட ஞாபகத்திற்கு வராது. அதற்குப் பெயரே கிருஷ்ண மாயா!
இந்த வதங்களை அவன் செய்த போது, ஆயர்பாடி ஆடித்தான் போனது. ஒரு பாலகனுக்கு எப்படி இது சாத்தியமானது?
மனிதனின் சக்திக்கு ஓர் எல்லை இருக்க, அதைக் கடந்த இந்த வீரம் மாயாசக்தியாகவோ அல்லது தெய்வீக சக்தியாகவோ தான் இருக்க வேண்டும். இந்த இரண்டில் இவன் எதைச் சார்ந்தவன் என்ற கேள்வியை கிருஷ்ணன் யாரிடமும் எழுப்ப விடவேயில்லை. தன்னை ஒரு மாயாவியாக நினைக்க வைத்தான் கிருஷ்ணன்.
கோபியர் தவிர்த்த யாருக்கும், தான் ஒரு தெய்வீகசக்தி படைத்தவன் என்றோ, அவதார புருஷன் என்றோ அவன் உணர விடவில்லை. கம்ச வதத்தைக் கூட சீக்கிரம் நிகழ்த்தி விட்டான். உண்மையில் கம்சன் ஒரு கோழை. தன்னை பின்நிறுத்திச் கொண்டு, தன் துணை சக்திகளான அசுர சக்திகளை முன்நிறுத்தியே அவன் தன்னைப் பாதுகாக்க முயன்றான். இதனால் கிருஷ்ணன் கம்சனுக்கு துணையாக நின்றவர்களை அழித்த பிறகு இறுதியில் அவனையும் கொன்றான்.
கம்சனும், அவனின் சகோதரர்களும் வீழ்ந்த நிலையில் ஜராசந்தன், சிசுபாலன் போன்ற சிலர் மிச்சமிருந்தாலும், மதுரா மாநகரைப் பொறுத்தவரை அசுரசக்தி அனைத்தும் ஒழிக்கப்பட்டது. கம்சனால் பாதிக்கப்பட்ட மதுரா, கிருஷ்ணனின் அருள்மழையில் நனையத் தொடங்கியது.
மேடுபள்ளமாக கிடக்கும் நிலத்தைப் பண்படுத்தி உழுது, அதில் விதைகளைத் தூவி, பிறகு ஒரு சோலையாக மாற்றுவது போல மதுரா நகரும் கிருஷ்ணனால் மாறிப் போனது. மதுராவின் ஆட்சிக்கட்டிலில் ஆட்சி செலுத்தவும் அவன் விரும்பவில்லை. 
கம்சனின் தந்தையான உக்ரசேனனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். துஷ்ட சம்ஹாரம், தர்ம பரிபாலனம் என்னும் கிருஷ்ணரின் நல்ல நோக்கம் இனிதாக நிறைவேறியது. இதனிடையே பல முற்பிறவிக் கணக்குகளை நேர் செய்தான். குறிப்பாக ரிஷிகளே கோபியர்களாக இருக்க, முற்பிறவியில் ராமராக இருந்த போது, அவர்களை ஏற்க முடியாது போனதால், இப்பிறவியில் அவர்களை ஏற்று ஆடிப்பாடி மகிழ்ந்தான்.
இத்தனைக்கும் பிறகு, இந்த உலகில் மனிதர்கள் உணர வேண்டிய சங்கதிகள் பல உள்ளன. அவைகளை உணர்த்துவதாக கிருஷ்ணரின் வாழ்வு உள்ளது. இதில் முதலில் இடம் பெறுவது குரு பக்தி!
ஆம்...மனிதனை மனிதனாக்கி அவனை கடைத்தேற்ற பரம்பொருள் தேவையில்லை. குருவே போதும் என்பதை உணர்த்த உஜ்ஜையினி நகரில் சாந்தீபனி முனிவர் ஆஸ்ரமத்தில் குருகுலவாசம் செய்தது பெரும் லீலா வினோதம்.
முனிவர் மூலமாக வேதம் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் கிருஷ்ணரும், பலராமரும் கற்றுத் தெளிந்தனர்.
எழுதியவன் தான் எழுத்தை மீண்டும் வாசிப்பது போன்றது இது. அதை கிருஷ்ண, பலராமர் அழகாகச் செய்து முடித்தனர். தெய்வத்துக்கே தான் குருவாக திகழ்ந்ததை எண்ணி, சாந்தீபனி முனிவர் நெகிழ்ந்தார். தன் திருவடிகளைப் பணிந்த தெய்வச் சீடர்களைக் கண்டு விக்கித்துப் போனார்.
“குருவே.... தங்களுக்கான தட்சணையை தர தயாராக உள்ளோம். தங்களின் தேவையறிந்து தந்திட விரும்புகிறோம்” என்றான் கிருஷ்ணன்.
தெய்வமே முன் வந்து, 'என்ன வரம் வேண்டுமோ கேள்' என்று சொல்லும் நிலை இது.
அற்ப காணிக்கைகளை கேட்டுப் பெறுவதால் பயனேதும் இல்லை. முனிவர் மிகுந்த பற்று வைத்திருந்தது தன் புதல்வன் மீது தான்.
முனிவர்கள் பிள்ளைகள் பெறுவதே பிதுர் சாபத்திற்கு ஆளாகி விடக் கூடாது என்பதற்காகத் தான். இறப்புக்குப் பின் ஈமக்கடன் செய்ய ஒரு புத்திரன் வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.
அதனாலேயே வசிஷ்டர் ஒன்றுக்கு நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார். அகத்தியர் தனக்கேற்ற பெண்ணைத் தானே படைத்து மணந்தும் கொண்டு, பின் பிள்ளையையும் பெற்றார்.
பிள்ளைப்பேறு அத்தனை சிறப்பு கொண்டது.
சாந்தீபனி முனிவருக்கு ஒரு மகன் இருந்தான். ஆனால், பிரபாச க்ஷேத்திரத்தை ஒட்டிய கடற்கரைப் பகுதியில் நீராடிய போது நீருக்குள் மூழ்கி இறந்து போனான். 
உண்மையில் நீரில் மூழ்கி இறந்தானா இல்லை நீர் வாழ் அசுரசக்தி ஏதாவது கவர்ந்து சென்றதா என்பது தெரியவில்லை.
மகனை இழந்து வருந்தும் நிலையில், குருகாணிக்கையாக என்ன வேண்டும் என்று கேட்கவும், தன் மகனின் முகம் நினைவுக்கு வந்தது.
“கிருஷ்ணா... பலராமா.... நான் எதைக் கேட்டாலும் கொடுப்பீர்களா?” என்று கேட்டார்.
“எங்களால் இயன்ற எதையும் தருவோம்,” என்று சற்று எச்சரிக்கையாகப் பதிலளித்தான் பலராமன்.
“அப்படியானால் கடல் கொண்ட என் புதல்வன் மீண்டும் என் வசம் வர வேண்டும்... வருவானா? அதாவது இறந்து விட்டவன் உயிரோடு வந்தாக வேண்டும்!” என்று கேட்டார் சாந்தீபனி முனிவர்.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக