புதன், 25 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 18 - இந்திரா சௌந்தர்ராஜன்

சாந்தீபனி முனிவரின் கோரிக்கை பலராமனுக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால் கிருஷ்ணன் அதிரவில்லை.
“குருவே! உங்கள் புதல்வன் திரும்பவும் வருவான். நீங்கள் கேட்ட குரு தட்சணையைத் தர நான் முயல்வேன்,” என்றான் கிருஷ்ணன்.
உயிர் என்பது ஒரு பிறப்பில் போவதும் ஒருமுறை தான், வருவதும் ஒரு முறை தான். 'ஒரே ஒரு முறை' என்னும் இந்தக் கட்டுப்பாடு தான் உலகையே ஒரு கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கிறது. அசுரர்கள் கூட உயிர் குறித்த அச்சத்தால் தான், கடவுளை நோக்கித் தவம் செய்து சாகாவரத்தைக் கேட்கிறார்கள்.
ஆனாலும் சாகாவரத்தை நேரடியாக எந்தக் கடவுளும் ஒருவருக்கும் வழங்கியது இல்லை. இப்படி ஒரு நிலை இருக்க, சாந்தீபனி முனிவரின் இறந்த பிள்ளைக்கு மட்டும் எப்படி உயிர் வரும்? கிருஷ்ணன் இதை எப்படி சாதிக்கப் போகிறான்....?
பலராமருக்குள் இப்படி எல்லாம் பல கேள்விகள் எழத் தொடங்கின. சாந்தீபனி முனிவரோ பெரிதும் மகிழ்ந்தார். கிருஷ்ணன் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவான். அவன் எப்போதும் வெற்றுப் பேச்சு பேசியதில்லை. பேசப் போவதுமில்லை.
அப்படித் தான் நடக்கவும் செய்தது.
கிருஷ்ணன் பிரபாச தீர்த்தக்கரைக்கு புறப்பட்டான். எதிரில் விரிந்து கிடந்த சமுத்திரத்தைக் கண்டான்.
“கிருஷ்ணா.. நீ எந்த நம்பிக்கையில் இறந்தவன் உயிரை மீட்டுத் தருவதாக கூறினாய்? இது இயற்கை நியதிக்கு ஏற்புடையதா?” என்று பலராமர் அவனிடம் கேட்டார்.
“அண்ணா... இந்த தீர்த்தத்தில் மூழ்கிய ஒருவன் இறந்து போயிருக்கத் தான் வேண்டுமா... சமுத்திரராஜனால் அபகரிக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?” என்று கிருஷ்ணன் திருப்பிக் கேட்டான்.
“இதை உன் திருஷ்டியால் கண்டாயா?”
“ஆம்...”
“அப்படியானால் அவன் உயிரோடு தான் இருக்கிறானா?”
“சமுத்திரராஜனைக் கேட்டால் உண்மை தெரிந்து விடும்” என்ற கிருஷ்ணன், அவனை நினைக்கவும், அவனும் வணங்கியபடி முன் வந்தான்.
கிருஷ்ணனும் முனிவரின் மகன் பற்றிக் கேட்க, “பிரபோ அவன் என் வசமில்லை. என்னுள் சங்கின் வடிவு கொண்டு வசிக்கும் பஞ்சஜனன் என்னும் அசுரன் அவனைக் கவர்ந்து சென்று விட்டான்,” என்றான்.
இதைக் கேட்ட கண்ணன் கடலுக்குள் சென்று அசுரனின் முன் நின்றான்.
“பஞ்சஜனா... எங்கே முனிபுத்திரன்?”
“என் பசிக்கு உணவாக்கிக் கொண்டேன்”
“எத்தனை கல் நெஞ்சம் உனக்கு”
“என் இயல்பு அது. தன்னில் விழும் உயிர்களுக்காக, நெருப்பு கவலை கொள்ளுமா? நானும் அப்படியே!”
“இது என்ன விளக்கம்... உன்னை இப்படியே விட்டால், நீ இது போல நல்ல உயிர்களை எல்லாம் கொன்று கொண்டே இருப்பாய். நீ இருக்கும் வரை அவர்களால் சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாது. என் அவதார நோக்கமே அசுரர்களை அழிப்பது தான். நான் அழித்து வரும் அசுர கூட்டத்தில் நீயும் சென்று சேர். நானே படைத்தேன். நானே அழிக்கிறேன். இடைப்பட்ட உங்களைப் பற்றிய சங்கதிகள் அவ்வளவும், வருங்கால மனித உயிர்களுக்கு என்னைப் பற்றிய செய்தியாய் போய் சேரட்டும்...” என்று சொல்லிக்கொண்டே, பஞ்சஜனைக் கொன்ற கிருஷ்ணனை பலராமர் வினோதமாக பார்த்தார்.
“கிருஷ்ணா... இது என்ன விளையாட்டு?” என்று கேட்டார்.
“இதுவே கிருஷ்ண லீலை...”
“இதன் மூலம் நீ எதை உணர்த்துகிறாய்?”
“உங்களுக்கும் சொன்னால் தான் புரியுமா அண்ணா?”
“நீயாக சொல்லும் போது அது சாசன எழுத்துக்கள் போலாகி விடுமே. அதனால் உன் வாயாலேயே சொல்...”
“குரு கேட்கும் காணிக்கை ஒரு உயிர் என்ற போதிலும் குருவின் முன் அது பெரிதில்லை. குருவே பெரியவர். மாண்டவர் மீளப் போவதில்லை என்பதை நம் குரு அறியாதவரா? இருந்தும் அவர் தன் இறந்த மகனை திரும்பக் கேட்கிறார் என்றால் அதன் நுட்பமான பொருள் என்ன? உன்னுள் தோன்றிய ஒரு உயிரை, உன்னாலேயே விதிமுறைகளை மீறியும் தர இயலும். மீறாமலும் தர இயலும் என்பது தானே அது...!
இன்னமும் நுட்பமாக கூட இந்த விஷயத்தைப் பார்க்கலாம். 
புத்திரன் இல்லாத நிலையில் சாந்தீபனி முனிவரால் பிறவிப் பேற்றினை எப்படி அடைய இயலும்? முனிவரின் முக்தி என்பது பிள்ளை செய்யப் போகும் பித்ரு காரியங்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே தான் ஒரு வரம் போல நம்மிடம் பிள்ளையைக் கேட்டிருக்கிறார். எப்போது அவருக்கு நாம் சிஷ்யர்களாகும் அமைப்பு வந்து விட்டதோ, அப்போதே அவருக்கு விமோசனமும் ஏற்பட்டு விட்டது.
ஒவ்வொரு உயிரின் இறுதி விருப்பமும் நம்மை அடைவது தானே அண்ணா... அந்த வகையில் சாந்தீபனி முனிவரும் நம்மை அடைந்து விட்டார். அதை நியாயப்படுத்தவே நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்று சொன்ன கிருஷ்ணன் அடுத்து சந்தித்தது எமதர்மனைத் தான்.
“எமதர்மா... சாந்தீபனி முனிவரின் மகன் பஞ்சஜனனால் விழுங்கப்பட்டு அவன் பசிக்கு உணவாகி உன்னை அடைந்து விட்டான். அவனைத் திருப்பித் தந்து விடு...”
“உத்தரவு பிரபோ... தங்களைச் சரணடைந்தவருக்கு எமதர்மனும் கட்டுப்படுவான் என்பது தான் செய்தியோ?” என்று கேட்டான் எமன்.
“சரியாகச் சொன்னாய்... இதைச் சற்று மாற்றி நான் சொல்கிறேன். குருதேவர் விருப்பத்துக்காக விதியும் விலக்காகும் என்றும் சொல்லலாம். அதே சமயம் விதிவிலக்குகள் கோடியில் ஒன்று என்பதை மறந்து விடக் கூடாது...” என்றான் கிருஷ்ணன்.
பின் அந்த முனிவரின் மகனுடன் ஆஸ்ரமம் திரும்பிய கிருஷ்ணன், சாந்தீபனி முனிவரிடம் அவனை ஒப்படைத்தான். முனிவர் உள்ளம் பூரித்துப் போனார். 
“கிருஷ்ணா... கடலில் மூழ்கி அசுரனால் விழுங்கப்பட்டு, இறுதியில் எமன் வாய்ப்பட்ட உயிரைக்கூட உன்னால் மீட்க முடியும் என்பதோடு, குரு தட்சணைக்காக ஒரு விதிவிலக்கையும் உருவாக்கிய உன்னை நான் எப்படி போற்றுவேன்” என்று உணர்ச்சிவசப்பட்டார்.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக