கிருஷ்ண ஜாலத்தில் மிக நுட்பமானது ராசக்கிரீடை எனப்படும் ஜலகிரீடை தான்! ஆயிரமாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த முனிவர்களுக்கே பெரும் ஞான ஒளியை அள்ளித் தந்தது இந்நிகழ்வில் தான்!
யமுனா நதிக்கரை மிக எழில் மிக்கது. கரையோரத்தில் வளர்ந்த மரங்களின் கிளைகள் வளைந்து நதியை உரசியபடி நிற்கும். அக்கிளைகளைப் பற்றிக் கொண்டு அதன் மீதேறி ஆற்றில் குதித்து நீராடுவது கோபர்களின் வழக்கம்.
கோபியர்கள் யமுனைக் கரையோரப் பொய்கைகளில் கூட்டமாக நீராடுவர்.
அப்போது அவர்களின் ஆடைகள் கரைகளில் தான் கிடக்கும். மறந்தும் இந்த பகுதிக்கு ஆயர்கள் யாரும் செல்ல மாட்டார்கள்.
இந்த ஆடை, அணிகலன்களை எல்லாம் தன் வசப்படுத்திக் கொண்ட கிருஷ்ணன் கோபியரைப் பார்த்து கை கொட்டிச் சிரிப்பான். பின் அந்த ஆடைகளை ஒன்றன் மீது ஒன்றாக அணிந்து கொண்டு, தன் புல்லாங்குழலை எடுத்து வாசிக்கத் தொடங்குவான். அதுவரை அவனிடம் ஆடைகளைத் தந்து விடும்படி கெஞ்சும் கோபியர், அதன் பின் தங்களை மறந்து இசையில் கரைந்து விடுவர். பின் இசைப்பதை நிறுத்தி விட்டு, அவர்களை அப்படியே கரையேறி வந்து தன்னிடமுள்ள ஆடைகளை எடுத்துக் கொள்ளச் சொல்வான். அவர்களோ வெட்கத்தால் வர மறுப்பர்.
“கண்ணா... இது நியாயமா? பெண்களுக்கு வெட்கம் தானே மேலாடை.... நூலாடை அதன் பின் தானே! எங்களின் மானத்தோடு இப்படி விளையாடலாமா!” என்று நீருக்குள் நின்றபடியே கழுத்தை நீட்டியபடி புலம்புவார்கள்.
இந்த புலம்பல் ஒரு முறை உச்சத்திற்குப் போனது. எப்போது தெரியுமா? கம்சனின் தூதுவராக அக்ரூரர் ஆயர்பாடிக்கு வந்து கிருஷ்ணனை மதுரா நகருக்கு அழைத்த போது...
கிருஷ்ணனும், அண்ணன் பலராமனுடன் மதுராவுக்குச் செல்ல சம்மதித்து விட்டான். கிருஷ்ணனை கம்சன் உயிரோடு விட்டு விடுவானா? சிங்கத்தை அதன் குகைக்குள் சந்திப்பதைப் போன்றதல்லவா இது. தன் தந்தை உக்ரசேன மகாராஜாவையே, இருட்டறையில் சிறை வைத்தவன் கம்சன். கிருஷ்ணனைக் கொல்லும் நோக்கில் சின்னஞ்சிறு குழந்தைகளை எல்லாம் கொன்று குவித்தவன் அவன். நெஞ்சில் இரக்கம் என்பது சிறிதுமில்லாத கம்சனைக் கிருஷ்ணனே தேடிக் கொண்டு போவது முறையா?
கிருஷ்ணன் கம்சனோடு மோத நேரும் பட்சத்தில், கம்சன் நிச்சயம் வதம் செய்யப்படுவது உறுதி. இருந்தாலும், ஒருவேளை இந்த யுத்தத்தில் கிருஷ்ணனுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் ஆயர்பாடி கோபியருக்கு எழுந்தது. தங்களின் மனதிற்குள் கிருஷ்ணனையே பரமபுருஷனாக வரித்துக் கொண்டு வாழ்ந்ததே இதற்குக் காரணம்.
கோபியர்களில் பலர் 'கார்த்தியாயினி விரதம்' மேற்கொள்ள முடிவெடுத்தனர்.
துர்க்காதேவியின் உருவத்தை மூலிகைச் சாறினால் வரைந்து அதற்கு பூஜை நடத்த தொடங்கினர். கிருஷ்ணனே தங்களின் பரமபுருஷன். அவனை அடைவதே தங்கள் பிறப்பின் நோக்கம் என்றும் பிரார்த்தனை செய்தனர்.
கார்த்தியாயினி விரதம் என்பது பெண்களுக்கு அவர்கள் விரும்பும் நல்ல துணையை அடைவதற்காகச் செய்வதாகும். பொருத்தமான அந்த துணையே ஏழேழு பிறவிக்கும் அவளைத் தொடர்ந்திடும்.
பெண்களைப் பொறுத்தவரை ஐம்புலன்களை அடக்கி தவம் செய்யத் தேவையில்லை. கணவனைக் கடவுளாக மனதில் வரித்துக் கொண்டாலே போதும். அந்த பதிவிரதா சக்திக்கு இணையேதும் இல்லை. இந்த சக்தியின் முன்னால் மும்மூர்த்திகள் கூட சிறு குழந்தைகளாகி விடும் அதிசயம் கூட நிகழ்ந்திருக்கிறது. எனவே, கிருஷ்ணனை அடைவதை லட்சியமாகக் கொண்டு விரதமிருந்தனர்.
இந்நிலையில் இந்த கோபியர், கிருஷ்ணன் மதுரா செல்வதை அறிந்து மனம் வருந்தினர். அவனைப் பிரிவதோடு மட்டுமில்லாமல், கம்சனால் அவனுக்கு கெடுதல் நேரக்கூடாது என்றும் கவலைப்பட்டனர். இப்படிப்பட்ட எண்ணங்கள் அனைத்தும் மாயை. பற்று, பாசம், அச்சம், இரக்கம் என்னும் உணர்வு நிலையில் தோன்றுபவை. இந்த கோபியரில் ராதை என்பவளும் ஒருத்தி. இவள் கற்பனை பாத்திரம் என்று சொல்பவர்களும் உண்டு. இந்த ராதையே கோபியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவள். இவள் மற்ற கோபியர் போல கார்த்தியாயினி விரதம் மேற்கொள்ளவோ, ராசக்கிரீடையில் கண்ணன் அழைத்த போது, தன் நிர்வாணத்தை எண்ணி வெட்கப்பட்டதோ இல்லை.
ஸ்ரீ கிருஷ்ணனே சர்வக்ஞன்! அவனே பரம்பொருள். அவனுள் இருந்தே அண்ட சராசரம் முதல் புல் பூண்டு வரை சலகமும் தோன்றின. அவனாலேயே நானும் தோன்றினேன். 'நான்' என்பதே கூட விலகி நின்று பார்க்கும் பார்வை தான்! நான் வேறு; அவன் வேறு இல்லை. அவனை மனதிற்குள் எண்ணும் போதே என் உடல், பொருள், ஆவி என்னும் அவ்வளவும் அவனாகி விடுகிறது. அப்படியிருக்க நிர்வாணமும் சரி, அதன் எதிர் நிலையான அலங்காரமும் சரி.... இரண்டும் ஒன்றே என்பதல்லவா ஞானநிலை.
ஒரு விஷயத்தைப் பகுத்துப் பார்க்கும் போது வெவ்வேறு நிலைகள் தோன்றுவது எல்லாம் மாயை. அவனே எல்லாம் என்பதே மாயை கடந்த வெற்றி நிலை. உடல், அதன் நிர்வாணம், வெட்கம் என்பதெல்லாம் பிரபஞ்சப் பற்றை விடாத நிலையைக் காட்டுகிறது. கிருஷ்ணன் கோபியரின் ஆடைகளை எடுத்து மறைப்பதன் உண்மைப் பொருள் என்ன தெரியுமா?
“என்னைப் பூவுலக ஆணாகவும், உன்னை ஒரு வெட்கமுள்ள பெண்ணாகவும் கருதிக் கொண்டிருக்கும் வரை மாயத்திரை விலகாது. நான் பரமாத்மா. நீ ஜீவாத்மா என்னும் பாவனையும் தோன்றாது. நானே பரமாத்மா என்பது புலனாகி விட்டால், நீ ஒரு ஜீவாத்மா என்பதைக் கூட உணரத் தேவையில்லை. கடல் நீர் ஆவியாகி பின் மேகமாகி, அதன் பின் மழையாகப் பொழிந்து ஆறாக வழிந்தோடி திரும்பவும் கடலில் கலப்பது கூட பரமாத்மா, ஜீவாத்மா சேர்க்கை தான். முக்திக்கான நிகழ்வு தான்.
பற்று தான் கடவுளை அடையும் முக்தியை தடுக்கிறது. பற்று என்றால் பொன், பொருள், புகழ், பெண் என்று அதன் பட்டியல் நீளும். உடம்பில் தோலோடு தோலாக ஒட்டிக் கிடக்கும் வெட்கமும் பற்று தான். நான், எனது என்னும் உணர்வுகளை இதுவே உருவாக்குகிறது. சகலத்தையும் துறந்தவர் கூட இதைத் துறக்க முடியாது.
கிருஷ்ணன் ராசக்கிரீடை மூலம் கோபியரிடம் இருந்த பிறவிப் பற்றை அறுத்தெறிந்து தன்னோடு சேர்த்துக் கொள்கிறான். இதற்கு ஒரு பெயர் வைக்கலாம் என்றால் 'கிருஷ்ண சங்கமம்' எனலாம். ஆம்... ராசக்கிரீடையின் முடிவான முடிவு கிருஷ்ண சங்கமம் தான்!
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்