கிருஷ்ணஜாலம் - 9 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணஜாலம் - 9 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ண லீலைகளில் நுட்பமான லீலை வெண்ணெய் திருடி உண்டது தான்! அதுவோ ஆயர்பாடி. ஆவினங்கள் தான் ஆயர்பாடியின் பெரும் செல்வங்கள். தங்கம், வைரம் கூட யாதவர்கள் வளர்க்கும் பசுவுக்கு முன்னால் இரண்டாம்பட்சம் தான்!
தேவர்கள் முப்பத்து முக்கோடி என்பது ஒரு கணக்கு. ஒரு பசுவை பராமரித்தால் போதும். முப்பத்து முக்கோடி தேவர்களையும் பூஜித்த புண்ணியம் உண்டாகும்.
திலீபன் என்றொரு அரசன்...!
இவன் யாரோ அல்ல... சூரிய வம்சத்தில் வந்தவன். ராமச்சந்திர மூர்த்தியின் பாட்டன்மார்களில் ஒருவன். பிள்ளைப் பேறில்லாமல் இவன் வருந்திய போது, பசு ஒன்றை மேய்த்து அதைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தால் தோஷம் நீங்கி புத்திரப்பேறு உண்டாகும் என்று ஞானியர் சிலர் கூறவும், இந்த பேரரசன் தினமும் மாடு மேய்த்தான். இவன் பத்தினியும் மாட்டின் குளம்படிகளைப் பின் தொடர்வாள்.
மாட்டின் குளம்படிகளுக்கும், அதன் தூசுக்கும் தோஷம் போக்கும் சக்தி உண்டு.
இதன் பின்னர் திலீபன் மனைவி கருவுற்றாள். அந்த பரம்பரையில் விஷ்ணுவே ராமனாக அவதரித்தார்.
ஒரு தாய் தன் பிள்ளைக்கு மட்டுமே பால் கொடுப்பாள். ஆனால் பசுவோ ஊரிலுள்ள பிள்ளைகளுக்கு எல்லாம் பால் தருகிறது. பாலை ஒருவர் நமக்கு தன் கைப்பட தந்து, நாமும் அதைக் குடித்தால், பாலைக் கொடுத்தவரிடம் பகை கொள்ளக் கூடாது என்கிறது சாஸ்திரம். யாதவர்கள் அப்படித் தான் பசுக்களிடம் அன்பு காட்டினார்கள்!
பாலைக் காய்ச்சி உறை சேர்த்து தயிராக்கி, அதைக் கடைவதை ஆயர்குலப் பெண்கள் தவமாகக் கருதினர். அமுதமாய் இதம் சேர்க்கும் மோர் வீட்டுக்கு வீடு பானைகளில் வழிந்தபடி இருக்க, அதில் இருந்து விடுவிக்கப்பட்ட வெண்ணெய் மட்டும் கூரையில் தொங்கும் உரிப்பானைகளில் பூனை தின்று விடாத படிக்கு பாதுகாப்பாக இருக்கும்.
உரிப்பானைகள் ஒன்றின் மேல் ஒன்றாக இருப்பதே தனி அழகு! அதில் நடுப்பானையில் தான் வெண்ணெய் இருக்கும். அதை திருடுவதில் கண்ணன் சமர்த்தன்! தன் நண்பர்களை குனியச் செய்து அவர்களின் முதுகின் மேல் ஏறி உரிப்பானையை பற்றி வெண்ணெய்யை லாவகமாக எடுத்து வாயில் போட்டுக் கொள்வான். அதன் துணுக்குகள் வாயில் ஒட்டிக் கிடக்க சுவைத்து மகிழ்வான் கண்ணன்.
''கிருஷ்ணா... எனக்குடா...'' என்று குனிந்த நிலையில் கழுத்தை வளைத்துப் பார்த்துக் கேட்கும் நண்பனை லட்சியம் செய்யாமல் தின்பான். அந்த வெண்ணெய் சட்டியைத் தூக்கிப் போட்டு உடைக்கவும் செய்வான்.
வீட்டில் எவ்வளவோ தின்பண்டம் இருந்தாலும், வெண்ணெய்யைத் திருடித் தின்பதும் அதிலும் குறிப்பாக அந்த பானையை போட்டு உடைப்பதுமான இந்த லீலை அசாதாரணமானது.
ஈரேழு பதினான்கு புவனங்களையும், சூரிய, சந்திர, நட்சத்திர மண்டலங்களையும் படைத்த கண்ணனுக்கு, இந்த வெண்ணெய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆசை?
இந்த வெண்ணெய் அறுசுவையில் ஒன்றோடும் சேராதது. சுவையற்ற ஒரு பண்டம் அது. அப்படியே உண்ணவும் முடியாது.
வழவழவென்று கையில் ஒட்டும்.... அப்படியிருந்தும் இதன் மேல் இத்தனை பற்று கண்ணனுக்கு ஏன்?
''அடியே யசோதை! எங்கடி இருக்கே...? உன் பிள்ளையை அடக்கி வை...! பூனை போல வீடு புகுந்து உரிப்பானையைக் காலி செய்து, பானையைச் சுக்கு நூறாக போட்டு உடைத்தும் விட்டான். கேட்டால் வாய் நிறைந்த வெண்ணெய்யோடு 'நானில்லை' என்று பொய் சொல்கிறான்.
'உன் வாயில் இருப்பது என்னடா?' என்று கேட்டால் 'அது என் எச்சில்' என்று கூசாமல் கூறுகிறான்.
''இவன் பிள்ளை இல்லை. பெரும் தொல்லை,'' என்று பெண்கள் யசோதையிடம் புகார் சொல்லும் போது, யசோதைக்கு கோபம் கொப்பளிக்கும்.
''ஏன்டா கண்ணா இப்படி பண்றே?'' என்று அவள் கேட்டதும், குமிழ்ச்சிரிப்போடு உடம்பை வளைத்து நெளிப்பான் கண்ணன். அந்த அபிநயத்தைக் கண்டதும் காய்ந்த மலைப்பாறை மீது பட்ட மழைத்துளி போல கோபம் காணாமல் போகும்.
இந்தக் குறும்பு பெரிய செய்தியை மறைத்துக் கொண்டுள்ளது. இதைப் பெரிதும் ரசித்தவர் கர்கர் என்பவர் தான்.
ஆயர்களின் குலகுருவான இவரிடம், கண்ணனின் குறும்புகளைக் கூறி, கண்ணனின் தந்தை நந்தகோபன் கூறும் போது, சிரித்தார் அந்த ஞானி!
''கர்கரே! இது என்ன சிரிப்பு? கண்ணன் என் வீட்டில் குறும்பு செய்தாலும் பாதகமில்லை. வீட்டுக்கு வீடு போய் அவன் செய்யும் இந்த திருட்டுத்தனம் எத்தனை இழிவானது?
கிருஷ்ணனுக்கும், பலராமனுக்கும் பெயர் சூட்டிய குலகுரு நீங்கள்... என்னை விட நீங்கள் அல்லவா அதிகம் வருத்தப்பட வேண்டும்?'' என்று கேட்டார் நந்தகோபர்.
கர்கரும் திருவாய் மலர்ந்தார்.
''அப்பனே! கிருஷ்ணனுடைய மாயை உன்னைச் சராசரி அப்பனாகவே ஆக்கி விட்டது. கிருஷ்ணன் உன் வீட்டில் எப்படி நடந்து கொண்டாலும் பாதகமில்லை. மற்ற வீடுகளில் போய் திருடுகிறான் என்றாய். அதுவும் வெண்ணெய்யை! அது என்ன இனிப்பு பண்டமா... திருடித் தின்ன? கண்ணனைக் கடந்து வேறு எந்தக் குழந்தையாவது இப்படித் தின்னுகிறதா?'' என்று கேட்டார்.
நந்தகோபருக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் ஞானியான கர்கர் கேட்கிறார் என்றால் நிச்சயம் ஆழ்ந்த பொருள் இருக்கும் என்பதால் மவுனம் காத்தார்.
கர்கரும் தொடர்ந்தார்!
''அப்பனே...! வெண்ணெய் எப்படி உருவாகிறது என்பதை எண்ணிப்பார். முப்பத்து முக்கோடி தேவர்களின் உறைவிடமான பசுவின் உடம்பில் ஓடும் குருதி பாலாக வெளிப்படுகிறது. இது தான் உயிர்களுக்கெல்லாம் முதல் உணவு. இதைக் காய்ச்சுதல் முதல் நிலை. பின் குளிரச் செய்தல். மூன்றாவதாக உறை சேர்த்தல். தயிரான பின் கடைதல் நான்காம் நிலை. வெண்ணெய் திரட்டுதல் ஐந்தாம்நிலை. அதை நெய்யாக உருக்குதல் ஆறாம் நிலை. இதை யாகவேள்வியில் பயன்படுத்துதல் ஏழாம்நிலை. பசுவின் உடம்புக்குள் தேவர்களின் சம்பந்தத்தோடு வரும் பாலானது, யாகவேள்வியில் நெருப்பாகி மேல் நோக்கி எரிந்து தேவர்களை அடைந்து விடுகிறது. ஆக இது ஒரு வட்ட சுழற்சி.
இதில் வெண்ணெய் என்பது நெய்க்கு முன்னதாக உள்ள நிலை. இதையே கண்ணன் திருடினான். உருக்கி நெய்யாக்கி வேள்வியின் போது என்னை அடைவது அதன் போக்கு. நானே வந்து ஆட்கொள்வது என் போக்கு என்பதே இதன் மறைவான விளக்கம்.
அடுத்து வெண்ணெய்யைக் கவனி... பாலோடு கலந்திருந்த வெண்ணெய் கடைந்த பின், அதிலிருந்து விடுபட்டு நீரில் மிதக்கிறது. இதன் பின் இது பாலோடு திரும்பக் கலப்பதில்லை. விடுபட்ட பின்... அதாவது பற்றில் இருந்து விடுபட்டால் பாரம் நீங்கி விடும். அதனால் தான் நீரில் மிதக்க முடிகிறது.
மனித வாழ்வும் இப்படித்தான்! பிறக்கும் போது பற்று, பாசம் என்னும் இணைப்பில் தான் உள்ளோம். வாழ்வில் துன்பங்களால் ஒரு சமயம் காய்ச்சப் படுகிறோம். ஒரு சமயம் இன்பங்களால் குளிர்கிறோம். ஒரு சமயம் வலி மிகுந்த அடைசலுக்கும் ஆளாகிறோம். பாடாய்ப் பட்டு உண்மைகளை உணர்ந்து ஞானம் அடைந்து விட்டால் உலகப்பற்றை துறந்து உலகில் இருந்து கொண்டே இல்லாதவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
இங்கே வெண்ணெய் என்பது ஞானத்தின் குறியீடு - ஞானநிலை அது!
ஒருவன் ஞானியாகி விட்டால் அவன் என்னைத் தேடி வரத் தேவையில்லை. நானே தேடி வந்து அவனை ஆட்கொள்வேன் என்பதே இந்த திருடுதலுக்குப் பின்னால் உள்ள செய்தி.
கருணை மிகுந்த ஆட்கொள்ளும் செயலை திருட்டாக எண்ணுகிறாயே? ஊனக்கண்களுக்கு அப்படித் தான் தெரியும். ஞானக்கண்ணால் பார். கிருஷ்ணன் கள்வனாகத் தான் தெரிவான். எப்படிப்பட்ட கள்வனாகத் தெரியுமா? உள்ளம் கவர் கள்வனாக...'' என்றார் கர்கர்.
நந்தகோபரிடம் சிலிர்ப்பு. அவரிடம் மட்டுமா? நமக்கும் தானே...!
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை