ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 10 - இந்திரா சௌந்தர்ராஜன்

வியக்க வைக்கும் கிருஷ்ணனின் ஜாலங்களில் சாப விமோசனங்களும் சில உண்டு. இதற்கு முன்னதாக சாபம் என்றால் என்ன என்பதை நுட்பமாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் இன்னொருவரைப் பார்த்து கோபித்தும், பகைத்தும், வருந்தியும் எதைச் சொன்னாலும் சாபம் என எண்ணிக் கொண்டிருக்கிறோம். இதில் ஒரு பாதி தான் உண்மை.
உண்மையில் சாபம் என்பது அருளின் ஒரு ஆவேச நிலை. இதன் முடிவில் பெரும் நன்மை உண்டாகும்.
சற்று விளக்கமாகப் பார்ப்போமே...
குபேரனை நமக்கெல்லாம் தெரியும்.
நவநிதிகளுக்கும் அதிபதி. சிவனின் அருளால் வடக்கு திசைக்கு அதிபதியாக திகழ்ந்தவன். இப்படி இவன் அதிபதியான பின்னணி சுவாரசியமானது.
முற்பிறவியில் குபேரனின் பெயர் குணநிதி என்பது. காம்பிலி என்னும் நாட்டு அரசனான வேள்விதத்தன் என்பவனின் மகன். ராஜாவின் மகன் என்பதால் வசதி வாய்ப்புக்கு பஞ்சமில்லை. அதனால் மது, மாது, சூது என்னும் மூன்று 'து' என்னும் துய்ப்புகளுக்கு ஆளாகி வாழ்க்கை என்பது இன்பத்தை அனுபவிக்க மட்டுமே என்றிருந்தான்.
மகனுடைய இந்த உல்லாசப் போக்கு தந்தையான வேள்விதத்தனுக்கு சிறிதளவும் தெரியாது. தந்தை அறியாதபடி குணநிதியின் தாய் பார்த்துக் கொண்டாள். 
அதே சமயம் அவள், “குணநிதி... நீ இப்படி பொறுப்பு இல்லாமல் இருப்பது சரியில்லை. புலனின்பமே வாழ்க்கை இல்லை. பிறர் மகிழ்ச்சிக்கான நற்செயலையும் நீ செய்ய வேண்டும்,” என்று புத்தி சொன்னாள்.
“பிறர் மகிழ்ச்சிக்காக நான் எதற்கு நற்செயல் செய்ய வேண்டும்? அவரவர் இன்பங்களை அவரவர் பார்த்துக் கொள்வது தானே சரி...” என்று தாயிடம் தத்துவம் பேசினான் குணநிதி.
ஒருநாள் வேள்விதத்தனுக்கு மகனுடைய நிலை தெரிய வந்தது. “ராஜா வீட்டுப் பிள்ளையாக இருப்பதால் தானே ஆட்டம் போடுகிறாய்.... இனி என் ராஜ்யத்தில் உனக்கு இடமில்லை. நீ யாரோ... நான் யாரோ? போ வெளியே...!” என்று அரண்மனையில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளி விட்டான். இதை தடுக்க வந்த மனைவியையும் புறக்கணித்தான்.
அது மட்டுமல்ல... புதிதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். முதல் மனைவி, மகன் இருவரையும் நாடு கடத்தவும் செய்தான். 
வாழ்வின் கஷ்டம் குணநிதிக்கு தெரியத் தொடங்கியது. புலனின்பமே வாழ்வு என்று இருந்தவன் துன்பத்தில் சிக்கித் தவித்தான். அவனது தாய் பசி தாளாமல் இறந்தாள்.
“ஐயோ... பெற்ற தாய்க்கும் பாவியாக பாதகம் செய்து விட்டனே...” என்று கதறியவன், ஒரு சிவன் கோவிலுக்குள் நுழைந்தான்.
குணநிதி இப்படி நுழைந்தது மகாசிவராத்திரி நாளாக இருந்தது. நள்ளிரவில் பசி மயக்கத்தோடு கண் விழித்தான். அவன் எதிரில் சன்னிதி திறந்திருக்க, பூஜை முடிந்து பிரசாதங்கள் வைக்கப்பட்டிருந்தன.
விரதமிருந்த பக்தர்கள் கண்களை மூடி தியானத்தில் இருந்தனர். குணநிதியைப் பசியானது திருடத் தூண்டியது. அந்த நேரத்தில் சன்னிதியில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணைய இருந்தது.
குணநிதி அதைக் கண்டதும், அங்கிருந்த நெய்யை விளக்கில் விட்டான். திரியையும் தூண்டினான். பளிச்சென ஒளி பிரகாசித்தது. யாருக்கும் தெரியாமல் பிரசாதம் இருக்கும் பாத்திரத்தை எடுத்து, ஓரத்தில் அமர்ந்து உண்ண முடிவு செய்தான். அப்போது பக்தர் ஒருவர் தியானம் கலைந்து கண்களைத் திறந்தார். 
குணநிதியைக் கண்டு அந்த பக்தர், 'திருடன்... திருடன்' என்று குரல் கொடுத்தார். அங்கிருந்த அனைவரும் தியானம் கலைந்து எழுந்தனர். குணநிதியைப் பிடித்து நையப் புடைத்தனர். அடித்த அடியில் குணநிதியின் உயிர் பிரிந்தது.
ஆனாலும், சிவராத்திரி நாளில் கருவறையில் எரிந்த விளக்கைத் தூண்டியதாலும், சிவதரிசனம் செய்ததாலும் அவனுடைய பாவம் மறைந்தது. குணநிதி மறுபிறவியில் கலிங்க நாட்டு அரசனின் மகனாக தமன் என்னும் பெயரில் பிறந்து, சிவபக்தனாக உருவெடுத்தான். புலன்களை அடக்கி தவம் செய்யும் மனநிலை அவனுக்கு இருந்தது. இதன் பயனாக சிவனே அவன் முன் தோன்றினார்.
அவரிடம், “நான் உம் தோழனாக திகழ வேண்டும். வடதிசைக்கு அதிபதியாகி வற்றாத நவநிதிகளோடு வாழ வேண்டும்,” என்ற வரம் பெற்று குபேரனாக மாறினான். யாரிடமும் இல்லாத புஷ்பக விமானத்தை தனக்கென வைத்துக் கொண்டான். இதையே பிற்காலத்தில் ராவணன் குபேரனிடம் இருந்து அபகரித்தான்.
இப்படிப்பட்ட குபேரனுக்கு இரு புதல்வர்கள்! ஒருவன் நளகூபரன், மற்றொருவன் மணிக்ரீவன். இவர்களையும் சிவபக்தர்களாக குபேரன் வளர்த்தான். ஆனாலும் மது, மாது, சூது என்னும் விஷயங்கள் முற்பிறவியில் குபேரனுக்கு இருந்தது போல பிள்ளைகளையும் தொடர்ந்தன. இதில் பிள்ளைகள் தந்தையை விஞ்சும் அளவுக்குச் சென்றனர்.
மந்தாகினி என்றொரு நதி!
ஒருநாள் அந்நதியில் சேடிப் பெண்களோடு கூத்தடிக்கத் தொடங்கினர். அந்தப் பெண்களைப் பாடாய் படுத்தினர். நிர்வாணமாக ஆடத் தொடங்கினர். இந்த நேரத்தில் திரிலோக சஞ்சாரியான நாரதர் அங்கு நீராட வந்தார். குபேரனின் புத்திரர் நிலை கண்டு மனம் கலங்கினார். நாரதரைக் கண்டதும் சேடிப் பெண்கள் நாணத்தால் கூசினர். ஆடையை எடுத்துக் கொண்டு ஓடினர். ஆனால், நளகூபரனும் மணிக்ரீவனும் சற்றும் பொருட்படுத்தவில்லை. மரம் போல நின்று, நாரதரைப் பார்த்துச் சிரித்தனர். அதைக் கண்ட நாரதர் கோபத்திற்கு ஆளானார்.
நாணம் என்னும் பண்பு மனிதனுக்கு அவசியம். உயிருக்கு நிகரான இந்த உணர்வை இழந்து நிற்பது நாரதரின் மனதைப் பாதித்தது. ஞான திருஷ்டியில், முற்பிறவியில் இருந்தே மோகம் சார்ந்த விஷயங்கள் குபேரனுக்கு இருந்ததும், இப்போது அவனது பிள்ளைகளுக்கு அவை தொடர்வதும் புரிந்தது. 
இதற்கு அவர்களது செல்வச் செழிப்பும் ஒரு காரணம். இதைச் சற்று மாற்றியும் சொல்லலாம். செல்வம் அடக்கத்தை தருவதில்லை. இந்த கோணத்தில் பார்த்தால் ஏழ்மை மனிதனுக்கு கிடைத்த வரம் என்பது புரியும்.
இந்த இருவரது செயல்பாடும் மனித சமூகத்திற்கு பாடமாக அமைய வேண்டும் என்று நாரதர் கருதினார். நாணம் இன்றி நிர்வாணமாக மரம் போல நின்ற இருவரையும் மரங்களாக மாறும்படி சபித்தார்.
அதுவும் எங்கு தெரியுமா? கிருஷ்ணர் விளையாடிக் களிக்கும் பிருந்தாவனத்தில்... 
நந்தகோபரின் வீட்டுக்குப் பின்புறத்தில்....!
இருவரும் ஒட்டிக் கொண்ட இரு மரங்களாக மாறி நின்றனர். மரம் பிறருக்கு நன்மை தருவதைத் தவிர வேறு வழியில்லை. பறவைகளுக்கு அது வீடு! அதன் அடிப்பரப்பு அனைவருக்கும் நிழல் கொடுக்கும். வெட்டினாலும் விறகாக பயன் தரும். இப்படி இரு மரங்களும் நன்மை செய்வது கட்டாயமாகி விட்டது.
இந்த மரங்களுக்கு கிருஷ்ணரால் விமோசனம் கிடைத்தது கிருஷ்ண லீலையின் நுட்பமான அம்சம்! எப்படி தெரியுமா?
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக