செவ்வாய், 24 செப்டம்பர், 2019

கிருஷ்ணஜாலம் - 11 - இந்திரா சௌந்தர்ராஜன்

நளகூபரனையும், மணிக்ரீவனையும் மரமாகும்படி சபித்த நாரதர் அவர்களுக்கு விமோசனம் பெறும் வழியையும் கூறினார். இதன் பின்னணியில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பல உள்ளன. 
மரங்கள் இருக்கும் இடத்தை விட்டு நகராதவை. பஞ்ச பூதங்களோடு சம அளவு தொடர்பு கொண்டவை. பாதி மண்ணில் மறைந்தும், பாதி தெரிந்தும் வாழ்பவை. பிறருக்குத் தீங்கு தராதவை. 
பறவைகள் வாழ இடம் தருபவை. இலை, பூ, காய், கனி என்று சகலமும் தருபவை. உதிரும் சருகுகள் கூட உரமாகும் சக்தி கொண்டவை. வெட்டுப்பட்டாலும் விறகாக எரிபவை. கதவு, நிலை என வீடு கட்ட உதவுபவை. சிற்பமாகி காலம் கடந்து நிற்பவை. இதற்கெல்லாம் மேலாக இருளும், ஒளியும் சம அளவில் கலந்த கலவையாக இதமான நிழல் தருபவை. மழை வளத்திற்கு மறைமுகமான காரணமாக இருப்பவை. எந்தப் பக்கத்தில் தொட்டாலும் தித்திக்கும் வெல்லம் போல மரங்களாலும் எல்லா விதத்திலும் நன்மை மட்டுமே உண்டாகும்.
மரங்களுக்கு குண விசேஷம் உண்டு. அதனால் தான் கோவில்களில் தல விருட்சங்களாக உள்ளன. இதன் காரணமாகவே, பாற்கடலில் அமுதம் கடைந்த போது கற்பக மரம் தோன்றி தேவர்களை அடைந்தது.
மோகம் என்னும் மாயையில் சிக்கி, மானமற்ற நிலையைக் கூட உணராத குபேர புத்திரர் இருவருக்கும் சரியான பரிகாரமாக, மரமாக மாறும் வாழ்வு அமைந்தது.
இன்று நாம் காணும் ஒவ்வொரு விருட்சத்திற்குப் பின்னும் இப்படி ஒரு காரண, காரியம் இருக்குமா என்று கூட கேட்கத் தோன்றலாம். ஒரு தெருப்புழுதியின் பின்புலத்தில் கூட, அது அவ்வாறு இருப்பதற்கான காரண காரியம் இருக்கிறது என்கிறது பிரபஞ்ச இயக்க விதி.
காரணமில்லாத காரியமில்லை. இதை மேம்போக்காக அறிவது அறிவு. நுட்பமாக உணர்வதே ஞானம். 
ஒரு ஞானி பெரும் குப்பை கூளங்களைப் பார்த்துச் சிரித்தார். அவரது சீடன் அதற்கான காரணத்தை அறிய விரும்பினான்.
'இவ்வளவு குப்பையும் ஒரு இடத்தை சுத்தப்படுத்தி விட்டே இப்படி ஆகியுள்ளது. சுத்தம் தான் நமக்கும் பிடிக்கிறது. ஆனால் ஒரு அசுத்தமே அதைத் தருகிறது என்பது எத்தனை பெரிய விந்தை?' என்று கேட்டார். 
'எது அசுத்தம்?' அந்த சீடன் புரியாமல் கேட்டான். 
“இதோ இந்த குப்பை கூளம் அசுத்தமில்லையா?” அவர் திருப்பிக் கேட்டார்.
“ஒன்று அசுத்தமானால் மட்டுமே இன்னொன்று சுத்தமாக முடியும் என்பதும் விந்தையல்லவா...” அவரே விளக்க முற்பட்டார். 
“அப்படியானால் ஒரு தீயதற்கு காரணம் ஒரு நல்லது தானா?”
“கூர்ந்து பார்த்தால் அது தானே நிஜம்?” அந்த ஞானியின் பதிலின் ஆழம் சீடனுக்கு கொஞ்சம் புரிந்தது.
குபேர புத்திரர்களின் தவறான செயல்பாடுகள் இறுதியில் அவர்களை சரியான செயல்பாடு கொண்ட மரங்களாக ஆக்கி விட்டன. எப்போதும் சாபம் என்ற ஒன்று வந்தால் விமோசனம் என்பதும் இருந்தே தீர வேண்டும். அதன்படி கிருஷ்ணரின் திருமேனி ஒரே சமயம் அவர்களின் மீது படும்போது விமோசனம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார் நாரதர்.
அப்போதே கிருஷ்ணாவதாரம் நிகழப்போவது தீர்மானமாகி விட்டது. ஞானிகளால் நிகழ்காலம் மட்டுமில்லாமல், வருங்காலத்தில் நடக்கப் போவதையும் நன்றாக உணர முடியும் என்பது தெளிவாகிறது.
இதெல்லாம் கூட ஒரு கணக்கு தான்!
எண்ணம் என்பதில் முதல் இரு எழுத்தாக 'எண்' உள்ளது. எண்ணே முதலானது என்பதை இது சொல்லாமல் சொல்கிறது. இந்த எண்ணை வைத்து நுட்பமான கேள்வியும், பதிலும் கூட உண்டு.
கிருஷ்ணன் தேவகி வயிற்றில் எட்டாவது பிள்ளையாக பிறந்தே தன் அவதாரத்தை தொடங்கினான். ஏன் அவன் முதல் பிள்ளையாகப் பிறக்கவில்லை...? அது என்ன எட்டு என்றொரு கணக்கு? என்ற கேள்வி உண்டாகிறது.
அடுத்து முதல் குழந்தையில் இருந்தே கம்சன் அந்தக் குழந்தைகளை கொல்வது என்று முடிவு செய்திருந்தான். அப்படி இருக்க எந்த பெற்றோராவது அடுத்தடுத்த பிள்ளைகளை பெற்று அவை கொலையாவதை விரும்புவார்களா? அதிலும் தேவகியும், வசுதேவரும் கருணையே வடிவானவர்கள். அவர்கள் எந்த வகையில் இப்படி ஒரு நிலையில் இல்லற வாழ்வு நடத்துவர்?
பாகவத புராணத்தில் இது நுட்பமான கேள்வியும் கூட....
பிரபஞ்சத்தின் மாயா லீலையில் தேவம், அசுரம் என்னும் இரு குணங்கள் மனிதர்களை ஒட்டிக் கொண்டுள்ளன. அடக்க குணம் தேவர் என்றால் அதற்கான எதிர்மறை செயல் அசுரம் என்றானது. ஒன்றின் சிறப்பை அதற்கு நேர்மாறான மற்றொன்று இருந்தால் தான் நம்மால் உணர முடியும்.
இவ்வாறு இரண்டு இருந்தால் மட்டுமே ஒன்றின் சிறப்பை உலகம் உணரும்.
ஒன்று புலனாக வேண்டுமானால், அது இரண்டாக இருத்தல் அவசியம். இந்த இரண்டு தான் பின் மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது என்று விரிவடைகிறது. உயிர் ஒன்று. இனம் இரண்டு. குணம் மூன்று, வேதம் நான்கு, புலன் ஐந்து, சுவை ஆறு, சுரம் ஏழு, திசை எட்டு, இவைகளின் முடிவான நிலை ஒன்பது. ஒன்பது என்பது எந்த நிலையிலும் மாறாதது. கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நிலைகளில் அது தன் நிலை இழப்பதில்லை. இதன் பின் பூஜ்யம் தோன்றி, இந்த எண்களின் விருத்தியான நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்றானது.
எண்ணைத் தொட்டால் இப்படி சிந்திக்க நிறைய உள்ளது. இதில் கிருஷ்ணன், தேவகி வயிற்றில் எட்டாவதாக பிறக்க காரணம், அதுவே தன்னிலை மாறாத ஒன்பதுக்கு முன் உள்ள நிலை. அது மட்டுமல்ல! தேவகிக்கு அவள் முற்பிறப்பில் சாபம் ஒன்று இருந்தது. அவள் புத்திர சோகத்திற்கு ஆளானால் மட்டுமே கர்மவினை தீரும். அதனாலேயே தேவகியை கொன்று விட கம்சன் முயன்ற போது, தேவகியின் கணவர் வசுதேவர், 'இவளைக் கொல்லாதே... பிள்ளைகள் பிறந்தால் அவர்களை உன்னிடம் தந்து விடுகிறோம். நீ உன் விருப்பப்படி நடந்து கொள்' என்று சத்தியம் செய்து கொடுத்தார். அடுத்து கிருஷ்ணன் பிறந்தால் மட்டுமே கம்சன் அழிய முடியும். எனவே எட்டாவது பிள்ளையாக கிருஷ்ணன் பிறக்கும் வரை, முன் பிறக்கும் பிள்ளைகள் கொல்லப்படுவதை ஒரு தியாகச் செயலாக கருதி சகித்துக் கொண்டார். 
அது மட்டுமல்ல! கிருஷ்ணன் பிறந்து விட்டால் எல்லாப் பிழைகளும் நேர் செய்யப்படும் என்றும் நம்பினார். இறுதியில் இவ்வாறே ஆனது. தன் வயிற்றில் பிறந்து கம்சனால் கொல்லப்பட்ட பிள்ளைகளை தேவகி கிருஷ்ணனின் உதவியால் சொர்க்கத்தில் கண்டு மகிழ்ந்தாள். 
கிருஷ்ணன் தேவகி வயிற்றில் எட்டாவதாக பிறந்ததன் பின்னணியில் இப்படி காரண காரியங்கள் ஒளிந்துள்ளன. எல்லாமே ஒரு திட்டமிட்ட, துளியும் பிசகில்லாத கணக்கு. இதன்படியே தான் எல்லாம் நடந்தன. நடக்கின்றன. இனியும் நடக்கப் போகின்றன.
யசோதையிடம் வளர்ந்த கண்ணன் குறும்புக்காரனாக இருந்தான். ஒருநாள் யசோதை அவனை உரலில் கட்டிப் போட்டாள்.
உரலையும் இழுத்துக் கொண்டு கண்ணன் தவழ்ந்தான். அங்கு ஒட்டிப் பிறந்த மரங்களாக நின்றிருந்த நளகூபரன், மணிக்ரீவன் இருவருக்கும் இடையே உரல் மாட்டிக் கொண்டது. அதை இழுக்க முயன்ற போது, மரங்கள் கீழே விழுந்து சாப விமோசனம் உண்டானது. குபேர புத்திரர்கள் சுயவடிவம் பெற்று கிருஷ்ணனை வணங்கி தங்களின் இருப்பிடம் திரும்பினர்.
கிருஷ்ணனும் அவதார நோக்கத்திற்கு ஏற்ப ஜாலம் புரிவதற்கு அப்போதே தயாராகி விட்டான்.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக