கிருஷ்ணஜாலம் - 12 - இந்திரா சௌந்தர்ராஜன்

கிருஷ்ணஜாலம் - 12 - இந்திரா சௌந்தர்ராஜன்

ஆயர்பாடியிலும், பிருந்தாவனத்திலும் கண்ணன் பல அற்புதங்களை நிகழ்த்தினான். அவன் குழந்தையாகப் பிறந்தது முதலே, கிருஷ்ணமாயை தன் கண்ணாமூச்சி விளையாட்டைத் தொடங்கி விட்டது. கொட்டும் மழையில் நந்தகோபர் குழந்தைக் கண்ணனை கூடையில் வைத்து சுமந்து சென்ற போது, எங்கும் மழையும், காற்றுமாக வீசத் தொடங்கியது. ஆதிசேஷனே குடையாகக் கண்ணனைப் பின்தொடர்ந்தான். பொங்கியோடி யமுனை நதியும் கூட விலகி நின்று வழி விட்டது. பஞ்சபூத கட்டுப்பாட்டின்றி விதி விலக்காக நடந்த இந்த செயல்கள் எல்லாமே கிருஷ்ண மாயையின் ஒரு அங்கம் தான்!
“வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வர நான் படைத்த விதிகளில் இடமில்லை. அதை நான் மீறுவதும் சரியில்லை. எனவே, யோனி வழியாகப் பிறப்பெடுத்து வந்துள்ளேன். இருந்தாலும் மனித வரம்புக்கு கட்டுப்பட்டும், கட்டுப்படாமலும் என் செயல்பாட்டை இந்த அவதாரத்தில் வகுத்துக் கொண்டுள்ளேன்” என்பதே கிருஷ்ணர் தன் பிறப்பின் மூலம் மறைமுகமாக உணர்த்தும் விஷயம்.
இந்த யோனி வழிப் பிறப்புக்குப் பின் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சம்பவம் ஒன்று உண்டு.
அசுரர்களை விட தேவர்கள் அதிக சக்தி படைத்தவர்களாக இருந்தனர். அமுதம் சாப்பிட்டு சாகாவரம் பெற்றிருந்தனர். இதனால் அசுரர்கள் தேவர்களைப் பரம விரோதிகளாக கருதினர். இதுபற்றி அசுரர்கள் தங்களின் குருவான சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டனர். அமுதத்திற்கு இணையான சஞ்ஜீவினி மந்திரத்தை பெற்று விட்டால் அழியாத தன்மை அடைவதோடு, அசுர இனத்தையும் பாதுகாக்க முடியும் என்று சுக்கிராச்சாரியார் முடிவு செய்தார். சிவனை நோக்கித் தலைகீழாக தொங்கிக் கொண்டும், வேள்விப் புகையை நுகர்ந்தபடியும் 3000 ஆண்டுகள் தவத்தில் ஆழ்ந்தார். முன்னதாக அசுரர்களுக்கு ஒரு நிபந்தனையும் விதித்தார்.
'தன் தவம் முடியும் வரை அசுரர்கள் சிறு தவறும் செய்து விடக் கூடாது. தேவர்களையும் விஞ்சும் விதத்தில் அமைதி காக்க வேண்டும். தேவர்களின் தந்திரம் எதற்கும் பலியாகி விடக் கூடாது' என்பதே அது. ஆனால் தேவர்கள் எப்படியாவது அசுரர்களைக் கோபப்பட வைத்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தனர்.
பிருகு முனிவரின் புதல்வர் சுக்கிராச்சாரியார். எனவே, பிருகுவைச் சீண்டினால் சுக்கிராச்சாரியாரின் தவத்தைக் கலைக்கலாம் என்று கருதினர். 
பிருகுவின் தவச்சாலைக்கு சென்றனர். அந்த சமயத்தில் பிருகு முனிவர் அங்கில்லை. அவரது மனைவி புலோமை மட்டும் இருந்தாள். 
ரிஷி பத்தினியான அவள் பதிவிரதையும் கூட. எனவே, அவள் தன் தவசக்தியால் அசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்தாள். அவளை அடக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதை தேவர்கள் உணர்ந்திருந்தனர். இதனால் மகாவிஷ்ணுவின் உதவியை அவர்கள் நாடினர். அவரும் புலோமையிடம், அசுரர்களுக்கு அடைக்கலம் தர வேண்டாம் என எடுத்துச் சொன்னார். அவளோ, “தஞ்சம் புகுந்த அசுரர்களை காப்பாற்றியே தீருவேன்” என்று உறுதியாகச் சொல்லி விட்டாள். 
உடனே விஷ்ணு தன் சக்கராயுதத்தை கையில் எடுத்து சுழற்றினார். உடனே புலோமை, தன் பதிவிரதா தன்மை தந்திருந்த சக்தியைப் பயன்படுத்தி விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அனைவரையும் செயலற்று தூக்கத்தில் ஆழ்ந்து விட சபித்தாள். அதே சமயம், விஷ்ணுவின் சக்ராயுதம் புலோமையின் தலையை அறுத்தது. புலோமை இறந்து கிடக்க, அங்கு வந்த பிருகு முனிவருக்கு நடந்த விஷயம் அனைத்தும் தெரிய வந்தது.
கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர், விஷ்ணுவைச் சபித்தார்.
“ஹே... விஷ்ணுவே! காக்கும் கடவுளான நீயே என் மனைவியைக் கொல்லலாமா? அவள் எவ்வளவு வேதனை பட்டிருப்பாள். அவள் பட்ட வேதனையை நீயும் படவேண்டும். மனிதனாக யோனி வழியாகப் பலமுறை பிறந்து துன்பங்களை அனுபவிக்க வேண்டும்,” என்றார். பின் தன் தவசக்தியால் புலோமைக்கு உயிரும் கொடுத்தார்.
இதற்கிடையில், சுக்கிராச்சாரியாரும் தவத்தை முடித்து சிவபெருமானிடம் சஞ்ஜீவினி மந்திரத்தை வரமாகப் பெற்றார். ஆனால் அந்த மந்திரத்தை யாருக்கும் உபதேசிக்கக் கூடாது என்று சிவன் நிபந்தனை விதித்து விட்டார்.
சுக்கிராச்சாரியார் அழிவே இல்லாதவராக மாறினார். அசுரர்களுக்கு துன்பம் ஏற்படும் போது அவர்களைக் காப்பதைக் கடமையாகக் கொண்டார். கிருஷ்ணன் தேவகி வயிற்றில் பிறந்ததற்கு பின்னால், இப்படி ஒரு சாபமும் ஒளிந்திருக்கிறது.
மனிதர்கள் படும் துன்பங்களையும் அனுபவிக்கவும் வேண்டும். அதே நேரத்தில் தன் அவதார நோக்கத்தையும் செயல்படுத்த வேண்டும். பிருகு சபிக்காமல் போயிருந்தால் விஷ்ணு அவதாரம் நிகழ்த்துவதற்கு வழியில்லை. அசுரர்களைக் கட்டுப்படுத்தவும், அழிக்கவும் கூட இடமில்லாமல் போயிருக்கும். 
விஷ்ணுவாக நேரில் வந்து அசுரர்களைச் சம்ஹாரம் செய்வதில், அவருக்கு நிறைய சங்கடங்களும், அதற்கு வழியே இல்லாத சூழ்நிலையும் இருந்தன. எனவே மானிடப் பிறப்பெடுக்க இத்தகைய ஜாலங்களைச் செய்ய வேண்டிதாயிற்று.
உதாரணமாக ஒரு அசுரன் மும்மூர்த்திகளாலும் தனக்கு அழிவே வரக் கூடாது என்று வரம் பெற்று விட்ட நிலையில், அவனை விஷ்ணுவாக இருக்கும் நிலையில் ஏதும் செய்ய இயலாது. ஆனால், யோனி வழியாகப் பிறப்பெடுத்து அவதாரமாகி செயல்படலாம். இதெல்லாம் மகா சூட்சுமமான விஷயங்கள்! 
கிருஷ்ணாவதாரம் பல செயல்களை சாதிக்க எண்ணம் கொண்டு எடுக்கப்பட்ட அவதாரம். அதில் மாயம் பாதி; மனிதம் பாதி. கருணை பாதி; கடமை பாதி என்று கூறலாம். 
கூடுதலாக ஒன்றையும் இங்கு சொல்ல வேண்டும். 
மனிதர்களுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்தது இந்த அவதாரத்தில் தான். எது கர்மா? எது பயன்? எது விடுதலை? எது மோட்சம்? என்பதையும் கீதை வடிவில் அவன் அருள் புரிந்தான்! 
கீதை ஒட்டுமொத்த வேதத்தின் சாரமாக உள்ளது. தான் படைத்த உயிர்களுக்கு தானே வகுத்து தந்த நெறிமுறை! இதைப் பின்பற்றி வாழும் உயிர்கள் கிருஷ்ணனை அடையும் என்பதே இதன் அடிக்கருத்து.
பரமாத்மாவின் குணபேதம் கடந்த தன்மை எப்படிப்பட்டது என்பதை உணர்த்த, கிருஷ்ணாவதாரத்தில் கோபியர்களை ஆட்கொண்ட படலம் ஒரு உதாரணம். மிக நுட்பமாக அணுக வேண்டிய, ஞானச் செறிவு மிக்க விஷயம் இது. 'கோபிகா ஜீவன ஸ்மரணம்' என்னும் அவன் மீதுள்ள மேலான காதல். இதில் உடல் சார்ந்த உணர்வுகளுக்கு சிறிதும் இடமில்லை. கோபியர்களும் போகிற போக்கில் மானிடப் பிறவி எடுத்தவர்கள் இல்லை.
ஆயர்பாடியில் கண்ணன் அவதாரம் செய்த நாளில் வாழ்ந்த சகல உயிர்களும் முற்பிறவியின் புண்ணியத்தால் முடிவான நிலையை அடையத் தோன்றியவர்களே.
கண்ணன் உலாவிய அந்நாளில் ஒரு வண்ணத்துப்பூச்சி தோட்டத்தில் திரிந்து கொண்டிருந்தது என்றால் கூட, கண்ணன் விட்ட மூச்சுக்காற்றின் சம்பந்தம் உருவாகி, அதுவும் முக்தியடைய வாய்ப்பு உண்டானது.
ஜாலம் தொடரும்...
நன்றி - தினமலர்
கருத்துரையிடுக (0)
புதியது பழையவை