ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 2 - கோமடம் மாதவாச்சார்யார்

வசை மலர்க் கருவதனில் வந்த மைந்தன்


எம்பெருமான் உகந்து, உவகை கொண்டு தான் கழுத்தில் அணியக் கூடிய ஆபரணங்களையும் தான் ஏந்தியிருந்த ஆயுதங்களையுமே பூவுலகிற்கு ஆழ்வார்களாகவும் ஆச்சார்யார்களாகவும் அனுப்பினான். பெரியாழ்வார் கருடனின் அம்சமாகத் தோன்றினார். ஆண்டாள் பூமி தேவியின் அம்சமாக மலர்ந்தாள். ஸ்ரீகௌஸ்துபம் என்ற, பரந்தாமனின் மார்பை அணி செய்த ஆபரணமே குலசேகராழ்வாராக அவதரித்தது. சக்கரமே திருமழிசையாழ்வாராக திகழ்ந்தது. வைஜெயந்தி எனும் மாலையே தொண்டரடிப் பொடியாழ்வாராக ஜொலித்தது.


ஸ்ரீவத்ஸம் என்கிற மணிமாலையே திருப்பாணாழ்வாராக மிளிர்ந்தது. குமுதன் எனும் நித்யஸூரி கணங்களுக்கு தலைவனின் அம்சாவதாரமாக மதுரகவியாழ்வார் அவதரித்தார். சார்ங்கம் எனும் வில்லின் அம்சமாக திருமங்கையாழ்வார் கம்பீரமாகத் தோன்றினார். சங்கத்தின் அம்சமாக பொய்கையாழ்வார் உதித்தார். கதையின் அம்சமாக பூதத்தாழ்வார் பொலிந் தார். நந்தகம் எனும் கத்தி, பேயாழ்வாராக அவதரித்தது. சேனை முதலியார் எனும் விஷ்வக்ஷேனரே நம்மாழ்வாரானார். 


இப்படியாக தன் ஆயுதங்களையும் சேனை முதலிகளையும் பார்த்து, ‘‘நீங்கள் போய் லீலா விபூதி எனப்படும் பூமியில் வேறு வேறு வர்ணத்தில் அவதரியுங்கள். அகில உலகத்தையும் காப்பாற்றி மோட்சம் கிடைக்கும்படி செய்யுங்கள்’’ என நியமித்து அருளினான். அவர்களும் அப்படியே கலியில் நாராயண தாசர்களாக, தமிழ்நாட்டில் தாமிரபரணி, வைகை, காவிரி, பாலாறு ஆகிய நதி தீரங்களில் அமைந்திருந்த கிராமங்களில் தோன்றினர். சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள மனிதர்களை கரையேற்ற வந்ததால் பகவான் அவர்களுக்கு அதிகமான ஞானநிதியை அருளினான். ‘‘மயர்வற மதிநலம் அருளி’’ என்பதும் இதுதான். அப்படி அவர்கள் மூலமாக, திவ்ய பிரபந்தங்களை பிரகாசிக்கச் செய்தான். 


திருமகளின் கணவனான பகவான் நமக்கு முதல் குருவாகத்  திகழ்கிறார் என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அவரே மனிதனாகவும் நாராயணனாகவும் இப்பூவுலகில் பத்ரிநாத் என்கிற தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தானே சீடனாகவும் உயர்ந்த குருவாகவும் ஆகி, உலகோர்க்கு நல் உபதேசங்களை வழங்கி வாழ வைக்கும் பிரானனாகத் திகழ்பவர். பகவானே குருவாகத் திகழ்கிறார் என்றால் அது உலகோர்க்கு புரியும். ஆனால், தானே சீடனாகவும் ஆகிறான் என்றால் அது என்ன? 


இதைத்தான், ‘‘சீடனாயிருக்கும் இருப்பு நாட்டார் அறியாமையாலே அத்தை அறிவிக்கைக்காக’’ எனப் பகர்வர் பெரியோர். அதாவது ஒரு சீடன் குருவின் சந்நதியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என சாதாரண மனிதன் பெரும்பாலும் தெரிந்து கொள்வதில்லை. அதைப் புரிய வைப்பதற்காக தானே சீடனாக ஆகி வழிகாட்டுகிறார். அது மட்டுமல்லாது வாழும் தெய்வமாக விளங்கக்கூடிய நல் குருவை நமக்கு காட்டிக் கொடுத்து பகவானின் திருவடியை அடையக் காரணமாகவும் திகழ்கிறார். 


பரந்தாமனின் அத்தகைய அம்சங்களில் முதலாவதாக பொய்கையாழ்வார் வைபவத்தை காண்போம்.


காஞ்ச்யாம் ஸரஸி ஹேமாப்ஜே ஜாதஸ்காஸாரயோகினம்

கலயே யச்சரிய: பத்யே ரலிம் தீப மகல்பயத்

இந்த ஸ்லோகத்திற்கு என்ன பொருள்? காஞ்சி மாநகரின் பொய்கை ஒன்றில் பொற்றாமரையில் பிறந்தவரான, பகவானுக்கு வெய்ய சுடரோனை விளக்காக ஏற்றியவரான பொய்கையாழ்வாரை தியானிக்கிறேன் என்பதாகும்.


முகுந்தஸ்ய முகோல்லாஸ மூலவாக்ஜால மூர்ச்சித்தம்

முநிமுக்யம் ஸரோஜாதம் முக்தி மூலமுபாஸ்மஹே

பொருள்: முகுந்தன் என்ற அழகான பெயரை உடையவனின் முக மலர்த்தியடியாக உண்டான பாசுரங்களை பாடி மயங்கி நிற்பவரும் முனிவர்களில் முதல்வரும் முக்திக்கு மூலமாக இருப்பவருமான பொய்கையாழ்வாரை உபாஸிக்கிறோம்.


பொய்கையாழ்வார் அத்தனை பெருமைகளை உடையவர். முதலாழ்வார்கள் மூவர் என்பார்கள். இவர்கள் துவாபர யுகத்திலே தோன்றி தமிழ்ப் பற்றை நன்கு விதைத்து வளர்த்தவர்கள். தமிழ் மொழியானது கிருதயுகத்திலேயே செழித்து வளர்ந்திருந்த மிகமிகத் தொன்மையான, இனிமையான மொழி. தமிழில் பக்தி மார்க்கத்தை வளர்த்த பெரியோர் அநேகம் உளர். அவர்களில் ஆழ்வார்களின் பங்களிப்பு அதிமுக்கியமானது. ஆழ்வார் எனும் சொல்லுக்கே ஆழ்ந்த பக்தியைக் கொண்டவர் என்றும் ஆழ்ந்த பக்தியை மக்களிடையே உண்டாகச் செய்பவர் என்றும் பொருள். 


மேலே கூறியபடி முதலாழ்வார்கள் மூவரிலும் பொய்கையாழ்வாரே முதலாமவர். இவர் அவதரித்த தலம் காஞ்சி மாநகரம். முக்தி தரும் முக்கிய ஏழு தலங்களில் இதுவும் ஒன்றாகும். ‘நகரேஷு காஞ்சி’ என்று பெரியோர் சொல்வர். அதாவது நகரங்களுள் காஞ்சிபுரம் முக்கியமானது என்று அர்த்தம். புண்ணியத்தை வளர்க்கக் கூடியதுமான, ‘கல்லுயர்ந்த நெடுமதில் சூழ்’ கச்சி மாநகரிலே ‘கால் நிலம் தோய்ந்து விண்ணோர் தொழுங் கண்ணன்’ என்கிற வாக்குப்படி திருவெஃகா எனும் தலத்தில் அழகியதான பொற்றாமரைப் பொய்கையிலுள்ள தங்கத் தாமரையில் தோன்றினார், பொய்கையாழ்வார். ஐப்பசி மாதம், திருவோண நட்சத்திரத்தன்று பகவானின் ஐந்து ஆயுதங்களில் ஒன்றான பாஞ்சஜன்யம், இவரது திருவுரு கொண்டு அவதரித்தது.


இவர் அருளிய பாசுரங்கள், பசுந்தமிழாக விளங்கக் காணலாம். நினைக்கும் போதெல்லாம், படிக்கும் போதெல்லாம், நெஞ்சும் கண்ணும் நீர்ப் பண்டமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை. இவருடைய பாசுரங்கள் ‘அர்த்த பஞ்சகம்’ என்று சொல்லும்படியான ஐந்து ரகசியம் பொதிந்துள்ளவை. அதாவது, அடைய வேண்டிய பொருளான பகவான், அடைபவனான தன் ஆத்மா, அடைவதற்கான வழி, அதை அடையவிடாமல் தடுக்கும் தடை, இந்தத் தடையை போக்கும் வழி என்று விவரமாக காணலாம். மேலும் பாசுரம் தோறும் தத்துவமும் உபதேசமுமாக நதிபோல நகர்ந்து கொண்டேயிருக்கும்.


பகவானை எப்படி கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்கிற முறையை உணர்த்தினார் பொய்கையாழ்வார். சென்ற யுகத்திலேயே தமிழிலேயே பாடி கடவுளை மகிழ்வித்து நமக்கும் பகவானுக்கும் பாலமாகத் திகழ்ந்தவர். எல்லோரும் பகவானின் திருவடியை அடைய வேண்டும் என்கிற ஈர நெஞ்சம் கொண்டவர். உயர்ந்த யோகியாகத் திகழ்ந்தவர். பதஞ்சலி என்கிற யோகியைப்போல் தமிழ்நாட்டில் வாழ்ந்த மாமுனிவரும் இவர்தான். தியானம் செய்து பகவானை கண்ணெதிரே கண்ட பின்பும் கூட இறுதி மூச்சு உள்ளவரை தியானம் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று ப்ரம்ம சூத்திரம் கூறுகிறது. அதன்படி அப்படியே வாழ்ந்து காட்டியவர். இந்த ஆழ்வாரைப்பற்றி, கோதையென்னும் ஆண்டாள், தன் திருப்பாவையின் 12ம் பாசுரத்திலே மிக, மிக நேர்த்தியாக, உள்ளம் உருகும் வகையில் அருளியிருக்கிறாள்:


‘கனைத்திளம் கற்றெருமை...’ என்கிற 12ம் திருப்பாவை பாசுரத்தில், ‘தங்காய்’ என்ற விளி இவருக்கு நன்கு பொருந்தும். அதாவது உலகில் தங்கையென்று மகாலட்சுமியையும் அக்கா என்று மூதேவியையும் வழங்குவார்கள். சமஸ்கிருதத்தில் ஜ்யேஷ்ட்டா என்றும் மலையாள மொழியில் சேட்டா என்றும் மூதேவியை சொல்வார்கள். தொண்டரடிப் பொடியாழ்வாரும் திருமாலை என்கிற பாசுரத்தில் ‘சேட்டை தன் மடியகத்து செல்வம் பார்த்திருக்கின்றீரே’ என்று தமக்கைக்கு வாசகமான ஜ்யேஷ்ட்டா என்ற சொல்லால் மூதேவியைக் குறிப்பிடுகிறார். மகாலட்சுமியானவள் தாமரை மலரில் தோன்றியவள். அதனாலேயே பத்மஜா என்று பெயரிட்டு போற்றி வணங்குவர். ‘வசை மலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே’ என்கிற வாழித் திருநாமப்படி பொய்கையாழ்வார் தாமரை மலரில் தோன்றினார். இந்த ஒற்றுமையை ஒட்டி ‘தங்காய்’ என விளிக்கத் தகுதியுடையவர் இந்த ஆழ்வார். அடுத்ததாக ‘நனைத்தில்லம் சேறாக்கும்’ என்கிற விசேஷமும் இவருக்கு வெகு நேர்த்தியாகப் பொருந்தும்.


இதன் பொருளை சற்றே விளக்கமாகக் காணலாம்:


ராவண வதம் முடிந்ததும் அயோத்தி மாநகருக்கு எழுந்தருளும் பெருமாளை நோக்கி ‘பங்க திக்தஸ்து ஐடிலோ பரதஸ்த்லாம் ப்ரதீக்ஷதே’ என்று பரத்வாஜ மஹரிஷி கூறினார். அதாவது ‘தன் உடம்பு முழுவதும் சேறு பூசிக்கொண்டு பரதன் உன்னை எதிர்பார்க்கிறான். உடனே வேகமாகச் செல்’ என்றார். இங்கு பரதன் சேறு பூசிக்கொண்டதாக சொல்லப்பட்டதன் கருத்து யாதெனில், இரவும் பகலும் ராமனைப் பிரிந்த பிரிவாற்றாமையாலே, அழுது அழுது நனைந்து, அழுத கண்ணீரே ஒரு ஆறாக மாறி, தன்னைச் சுற்றியுள்ள இடமெல்லாம் சேறாக ஆக்க, அச்சேற்றை பூசிக்கொண்டு பரதன் விரதத்தோடு உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறானாம். 


அதுபோலவே, இந்த ஆழ்வாரும் பகவானைக் காணாது, உருக்கம் மிகுந்து, ‘பழுதே பலபகலும் போயினவென்று அஞ்சியழுதேன்’ என்று தம் பாசுரத்தில் அழுதிருக்கிறார். அதைத்தான் இங்கு ஆண்டாள் ‘நனைத்தில்லம் சேறாக்கினபடியை’ என்கிறாள். 


பாசுரத்தின் முதல்வரியில் ‘கனைத்திளம் கற்றெருமை....’ என்கிறாள் ஆண்டாள். முதன் முதலாக பேசத் தொடங்கும்போது கனைத்துக் கொள்வது இயல்பு அல்லவா? எனவே, பொய்கையார்க்கு முன்னால் பேசினவர்கள் யாருமில்லை. ஏனெனில் இவர்தான் முதலாமவர் என்பதை பார்த்தோம். எனவே கனைத்து என்கிற வினையெச்சத்தினால் சொல்லப்படுகிறது. அடுத்து பொதுவாகவே எருமை என்றால் வடமொழியில் மஹிஷீ என்பது பொருள். ஆனால், நியாய சாஸ்திரப்படி, ‘‘தேவ தேவ திவ்ய மஹிஷீ’’ என்பதாக பகவானின் திவ்ய மஹிஷீயான ஸ்ரீதேவி பிராட்டிக்கு ஒப்பானவரே பொய்கையாழ்வார் என்று சூசகமாக தெரிவிக்கிறாள். ஆகவே, ஸ்ரீதேவி நமக்கு தாயார் எனில் இவரும் நமக்கெல்லாம் தாயாரைப்போலதானே!


நன்றி - தினகரன் ஆன்மிகம் மார்ச் 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக