ஶ்ரீமத் பாகவதம் - 298

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து இரண்டாவது அத்தியாயம்

(ஸூர்ய க்ரஹணத்தின் பொழுது, ஸ்ரீக்ருஷ்ணாதிகள் குருக்ஷேத்ரத்திற்குப் போன வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனந்தரம் பலராமனும், ஸ்ரீக்ருஷ்ணனும், த்வாரகையில் வஸித்துக் கொண்டிருக்கையில் ஒருகால், ப்ரளய காலத்தில் போலப் பெரிய ஸூர்ய க்ரஹணம் உண்டாயிற்று. ஸத்புருஷர்கள் அனைவரும், ஜ்யோதிடர் (க்ரஹங்களின் நிலையை கணித்துப் பலன் சொல்லும் நிபுணர்) மூலமாய் முன்னதாகவே அந்த ஸூர்ய க்ரஹணத்தைத் தெரிந்து கொண்டு, தங்கள் தங்களுக்கு நன்மையைச் செய்து கொள்ள விரும்பி, ஆயுதம் ஏந்தினவர்களில் சிறந்த பரசுராமன், பூமியில் க்ஷத்ரியப் பூண்டுகளே இல்லாதபடி செய்ய முயன்று, ராஜர்களைக் கொன்று, அவர்களின் ரக்த ப்ரவாஹத்தினால் (வெள்ளத்தினால்) எவ்விடத்தில் ஐந்து மடுக்களை (குளங்களை) நிர்மித்தானோ, மற்றும் மஹானுபாவனான அந்தப் பரசுராமன், புண்ய, பாப ரூபமான கர்மத்தினால் தீண்டப்படாதவனாயினும், உலகத்தவர் இவ்வாறு செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்க முயன்றும், பிறருடைய பாபங்கள் நீங்க விரும்பியும், புண்ய பாபங்களுக்கு உட்பட்ட ஸாதாரண புருஷன் செய்வது போல, எவ்விடத்தில் யாகங்களைச் செய்தானோ, அத்தகைய ஸமந்த பஞ்சகமென்னும் க்ஷேத்ரத்திற்குச் சென்றார்கள். 

பரத வம்சாலங்காரனே! மிகவும் புண்யமான அந்தத் தீர்த்த யாத்ரையைப் பற்றி, பாரத வர்ஷத்திலுள்ள ப்ரஜைகள் அனைவரும் அவ்விடம் வந்தார்கள். வ்ருஷ்ணிகளும், அக்ரூரன், வஸுதேவன், ஆஹுகன் முதலியவர்களும், தங்கள் பாபத்தைப் போக்கிக்கொள்ள விரும்பி, அந்த ஸமந்த பஞ்சக க்ஷேத்ரத்திற்குச் சென்றார்கள். 

கதன், ப்ரத்யும்னன், ஸாம்பன் இவர்களோடும், ஸுசந்திரன், சுகன், ஸாரணன் இவர்களோடும் கூட அநிருத்தனும், ஸேனாதிபதியான க்ருதவர்மனும், த்வாரகையைக் காக்கும் பொருட்டு, அங்கேயே இருந்தார்கள். மிகுந்த பாக்யமுடைய அந்த அக்ரூராதிகள், தேவ விமானங்கள் போன்ற ரதங்களின் மேலும், அலைகளோடொத்த நடையுடைய குதிரைகளின் மேலும், மேகங்கள் போன்று கர்ஜிக்கின்ற யானைகளின் மேலும் ஏறிக் கொண்டு, வித்யாதரர்களை நிகர்த்த ஒளியுடைய மனுஷ்யர்களால் சூழப்பட்டு, பொன் மாலைகளையும் திவ்யமான பூமாலைகளையும், சிறந்த ஆடைகளையும், அத்தகைய கவசங்களையும் அணிந்து, தத்தம் பார்யைகளோடு (மனைவிகளோடு) கூடி, வழியில் போகும் பொழுது, தேவதைகள் போல் விளங்கினார்கள். 

மிகவும் பாக்யசாலிகளான அவ்வக்ரூராதிகள், மிகுந்த மனவூக்கத்துடன் அவ்விடத்தில் ஸ்னானம் செய்து, உபவாஸமிருந்து, புதிய வஸ்த்ரங்களாலும், பூமாலைகளாலும், பொன்மாலைகளாலும் அலங்காரம் செய்யப் பெற்ற பசுக்களை ப்ராஹ்மணர்களுக்குக் கொடுத்தார்கள். 

அந்த வ்ருஷ்ணிகள், பரசுராமனால் நிர்மிக்கப்பட்ட மடுக்களில் விதிப்படி மீளவும் ஸ்னானம் செய்து, “எங்களுக்கு ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் பக்தி விளைய வேண்டும்” என்னும் வேண்டுகோளுடன், ப்ராஹ்மண ச்ரேஷ்டர்களுக்கு ஸ்வர்ணங்களைக் கொடுத்தார்கள். 

ஸ்ரீக்ருஷ்ண பகவான், தானும் ஸ்னானம் செய்து, தானமும் செய்தான். ஸ்ரீக்ருஷ்ணனையே தெய்வமாகவுடைய வ்ருஷ்ணிகள், அந்த ஸ்ரீக்ருஷ்ணனால் அனுமதி கொடுக்கப் பெற்று, யதேஷ்டமாகப் (விரும்பியபடி) புசித்து, இடைவெளியின்றி நிறைந்த நிழலுடைய வ்ருக்ஷங்களின் (மரங்களின்) அடிகளில் உட்கார்ந்தார்கள். அவர்கள், அவ்விடத்தில் நண்பர்களும், ஸம்பந்திகளுமான மத்ஸ்யம், உசீனரம், கோஸலம், விதர்ப்பம், குரு, ஸ்ருஞ்சயம், கம்போஜம், கேகயம், மத்ரம், குந்தி, ஆரட்டம், கேரளம் முதலிய தேசங்களின் அரசர்களையும், தங்கள் பக்ஷத்தில் சேர்ந்த மற்றும் பல மன்னவர்களையும், பிறர் பக்ஷத்தில் சேர்ந்த பற்பல மன்னவர்களையும், நண்பர்களான நந்தன் முதலிய கோபர்களையும், நெடுநாளாகக் காண வேணுமென்னும் பேராவலுடைய கோபிகைகளையும் கண்டார்கள். 

அவர்கள், ஒருவரையொருவர் கண்ட ஸந்தோஷத்தின் மிகுதியால், ஹ்ருதயங்களும் தாமரை மலர் போன்ற முகங்களும் மலர்ந்து, மிகுந்த ஒளியுடையவராகி, ஒருவரையொருவர் அழுந்தக் கட்டியணைத்து, கண்களினின்று நீர் பெருகவும், உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் உண்டாகவும், பேச்சு தடைபடவும் பெற்று, ஸந்தோஷம் அடைந்தார்கள். 

மடந்தையர்களும் ஒருவரையொருவர் கண்டு, ஸ்னேஹத்தின் மிகுதியால், புன்னகையோடு கூடி, பரிசுத்தமான கண்ணோக்கமுடையவர்களாகி, ப்ரீதியினால் கண்களில் நீர் பெருகப் பெற்று, குங்குமக்குழம்பு நிரம்பவும் பூசப் பெற்ற கொங்கைகளால் அத்தகைய கொங்கைகளை நெருக்கி, புஜங்களால் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டார்கள். 

பிறகு, அந்த யதுக்களும், மற்றவர்களும், பெரியோர்களை நமஸ்கரித்து, சிறியவர்களால் நமஸ்காரம் செய்யப் பெற்று, நல்வரவையும் க்ஷேமத்தையும் விசாரித்து, ஒருவர்க்கொருவர் ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதைகளைப் பேசிக்கொண்டிருந்தார்கள். 

அப்பொழுது, குந்தியென்னும் ப்ருதை, தன் ப்ராதாக்களையும் (ஸஹோதரர்களையும்), பகினிகளையும் (ஸஹோதரிகளையும்), அவரவர் பிள்ளைகளையும், தாய், தந்தைகளையும், ப்ராதாக்களின் பத்னிகளையும் (ஸஹோதரர்களின் மனைவிகளையும்), ஸ்ரீக்ருஷ்ணனையும் கண்டு, ஒருவருக்கொருவர் ப்ரீதியுடன் பேசி, வருத்தங்களையெல்லாம் துறந்தாள். மற்றும், வஸுதேவனைக் குறித்து இவ்வாறு மொழிந்தாள்.

குந்தி சொல்லுகிறாள்:- அய்யா! ப்ராதாவே (ஸஹோதரனே)! நான் என்னை மனோரதங்களெல்லாம் நிறைவேறப் பெறாதவளென்றே நினைக்கிறேன். (என் மனோரதங்கள் நிறைவேறவில்லை). ஏனென்றால், ஸத்புருஷர்களில் சிறந்தவர்களே! ஆபத்காலங்களில் நீங்கள் என் வார்த்தையை நினைக்கவே இல்லையல்லவா? (இதுவும் யுக்தம் என்றே எனக்குத் தோற்றுகிறது) ஏனென்றால், எவனுக்குத் தெய்வம் ப்ரதிகூலமாய் (எதிராய்) இருக்கிறதோ, அவனை நண்பர்களாவது, பிள்ளைகளாவது, ப்ராதாக்களாவது, தந்தைகளாவது நினைக்கவே மாட்டார்கள். (எனக்கு தெய்வம் ப்ரதிகூலமாகையால் (எதிரிடையாகையால்) நீங்கள் நினைக்கவில்லையே அன்றி, உங்கள் மேல் ஒரு பிசகும் (தவறும்) இல்லை.)

வஸுதேவன் சொல்லுகிறான்:- அம்மே! தெய்வத்திற்குப் பொம்மைகள் போல், மானிட உருவம் பூண்ட விளையாட்டுக் கருவிகளான எங்கள் மேல் நீ கோபம் கொள்ளலாகாது. ஈச்வரன், உலகத்திலுள்ள ஜனங்களையெல்லாம் தன்வசமாக்கிக் கொண்டு, தன்னிஷ்டப்படி செயல்களில் தூண்டுகின்றான். நாங்கள் அனைவரும் கம்ஸனால் பீடிக்கப்பட்டு, திசைகள் தோறும் ஓடிப் போனோம். உடன்பிறந்தவளே! இப்பொழுது தான் நாங்கள் தெய்வ அனுகூலத்தால் (தெய்வத்தின் அருளால்) எங்களிருப்பிடம் சேர்ந்தோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த மாத்ஸ்யர் முதலிய மன்னவர்கள், வஸுதேவன், உக்ரஸேனன் முதலிய யாதவர்களால் பூஜிக்கப்பட்டு, ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்ட மஹாநந்தத்தினால் ஸுகித்து (இன்புற்று) இருந்தார்கள். பீஷ்மர், த்ரோணர், திருதராஷ்ட்ரன், காந்தாரி, அவள் பிள்ளைகளான துர்யோதனாதிகள், பாண்டவர்கள், அவரது பத்னிகள், குந்தி, ஸஞ்சயன், விதுரர், க்ருபர், குந்திபோஜன், விராடன், பீஷ்மகன், நக்னஜித்து, புருஜித்து, த்ருபதன், சைப்யன், த்ருஷ்டகேது, காசிராஜன், தமகோஷன், விசாலாக்ஷன், மைதிலன், மத்ரராஜன், கேகயராஜன், யுதாமன்யு, ஸுசர்மா, பாஹலிகன் முதலியவர் அவரது புதல்வர்கள், மற்றும் யுதிஷ்டிரனைத் தொடர்ந்த மன்னவர்கள், அவரது மடந்தையர்கள் ஆகிய அனைவரும் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய திவ்ய மங்கள விக்ரஹத்தைக் கண்டு வியப்புற்றார்கள். அப்பால், அப்பீஷ்மாதிகள், ஸ்ரீக்ருஷ்ணனாலும், பலராமனாலும் நன்கு பூஜிக்கப்பெற்று, மனக்களிப்புற்று, ஸ்ரீக்ருஷ்ணனால் பரிக்ரஹிக்கப்பட்ட (ஏற்கப்பட்ட) வ்ருஷ்ணிகளைப் புகழ்ந்தார்கள்.

பீஷ்மாதிகள் சொல்லுகிறார்கள்:- உக்ரஸேன மன்னவனே! இவ்வுலகில் மனுஷ்யர்களுக்குள் நீங்களே பயன் பெற்ற பிறவியுடையவர்கள். (உங்கள் பிறவியே பிறவியன்றி, மற்றவர் பிறவி, பிறவியேயன்று). ஏனென்றால், யோகிகளுக்கும்கூடக் காண அரியனான ஸ்ரீக்ருஷ்ணனை இடைவிடாமல் கண்டு அனுபவிக்கிறீர்களல்லவா? எவனுடைய புகழ், வேதங்களால் கொண்டாடப்படுகின்றதோ, எவனுடைய புகழ், தன்னை நினைக்கிற இவ்வுலகத்தையெல்லாம் மிகவும் பரிசுத்தமாக்குகின்றதோ, எவனுடைய ஸ்ரீபாதத்தீர்த்தம், ஜகத்தையெல்லாம் புனிதம் செய்கின்றதோ, எவனுடைய வாக்கு சாஸ்த்ரமோ, பூமி, காலக் கெடுதியால் பகவானுடைய மஹிமைகள் நடையாடப் பெறுகையாகிற தன் குணங்களெல்லாம் அழிந்திருப்பினும், எவனுடைய பாதார விந்தங்களின் ஸ்பர்சத்தினால் (தொடுதலால்) மீளவும் தன் சக்திகளெல்லாம் தலையெடுத்து எங்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுகின்றதோ, அத்தகையனான ஸ்ரீக்ருஷ்ணனைக் காணுதல், தொடுதல், பின் தொடர்ந்து செல்லுதல், அவனோடு பேசுதல், படுத்தல், உட்காருதல், புசித்தல், பெண் கொடுத்தல், கொள்ளுதல், ஸாபிண்ட்யம் (பங்காளி) முதலிய ஸம்பந்தங்கள் உங்களுக்கு என்றும் உண்டாயிருக்கின்றனவல்லவா? மற்றும், ஸ்ரீ க்ருஷ்ணன், உங்கள் க்ருஹத்தில் அவதரித்தானல்லவா? அன்றியும், நீங்கள் ஸம்ஸாரமாகிற நரகத்திற்கு மேன்மேலும் வழி காட்டக்கூடிய ப்ரவ்ருத்தி மார்க்கங்களில் (உலகியல் வழிகளில்) இருப்பினும், அந்த ஸ்ரீக்ருஷ்ணன் தன்னுடைய அனுக்ரஹத்தினால், உங்களுக்கு ஸ்வர்க்க மோக்ஷங்களில் உள்ள ஆசையையும் அழித்துத் தன் திருவடி நிழலை அளித்துக் கொண்டிருக்கிறானே! (இத்தகையர்களான உங்கள் பிறவியே பிறவியன்றி, மற்றவர் பிறவி பிறவியாமோ?)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- நந்தன், அங்கு ஸ்ரீக்ருஷ்ணன் முதலிய யாதவர்கள் வந்திருப்பதை அறிந்து, அவர்களைப் பார்க்க விரும்பி, கோபர்களால் சூழப்பட்டு, வண்டிகள் வரிசை வரிசையாய்த் தொடரப் பெற்று, அவ்விடம் வந்து சேர்ந்தான். நெடுநாளாகக் காண வேண்டுமென்று விருப்பமுற்றிருக்கிற வ்ருஷ்ணிகள் அனைவரும் அந்த நந்தனைக் கண்டு, ஸந்தோஷமுற்று, ப்ராணனைப் பெற்ற சரீரங்கள் போல எழுந்து, அவனை அழுந்தக் கட்டியணைத்தார்கள்.

வஸுதேவன், அந்த நந்தனை அணைத்து, மிகவும் ஸந்தோஷம் அடைந்து, ப்ரீதியினால் தழதழத்து, தனக்குக் கம்ஸனால் நேர்ந்த வருத்தங்களையும், தன் பிள்ளைகளைக் கோகுலத்தில் வைத்ததையும் நினைத்துப் பேசாதிருந்தான். அப்பொழுது, ஸ்ரீக்ருஷ்ணன் பலராமன் இவ்விருவரும், தாய், தந்தைகளான யசோதா, நந்தர்களை வணங்கி அணைத்து, ப்ரீதியினால் கண்களில் நீர் தளும்பப் பெற்று, ஒன்றும் பேசாதிருந்தார்கள். யசோதையும், நந்தகோபனும், பிள்ளைகளான அந்த ராம, க்ருஷ்ணர்களை மடியில் உட்கார வைத்து, புஜங்களால் அணைத்து, நெடுநாள் பிரிந்திருந்த வருத்தங்களைத் துறந்தார்கள். அப்பால், ரோஹிணியும், தேவகியும் இடைச்சேரிக்குத் தலைவியாகிய யசோதையை அணைத்து, அவள் செய்த ஸ்னேஹத்தை நினைத்துக் கண்ணீரால் கண்டம் தடைபடப் பெற்று, இவ்வாறு மொழிந்தார்கள்.

ரோஹிணி, தேவகிகள் சொல்லுகிறார்கள்:- இடைச்சேரிக்குத் தலைவியான யசோதே! தேஹம் உள்ள வரையில் தொடர்ந்து வருவதாகிய உங்கள் ஸ்னேஹத்தை, எவள் தான் மறப்பாள்? தேவேந்திரனுடைய ஐச்வர்யத்தைப் பெறினும், அதற்கு இவ்வுலகில் பதில் செய்ய முடியாதல்லவா? யசோதே! பிறந்த நாள் முதல் தாய், தந்தைகளைக் காணாத இந்த ராம, க்ருஷ்ணர்கள், உங்களையே தாய், தந்தைகளாக ஏற்படுத்தி, உங்களிடத்தில் விடப்பட்டு, உங்களால் ஸந்தோஷத்திற்கிடமான கார்யங்களும், பற்பல நன்மைகளும், போஷித்தலும், பாதுகாத்தலும் செய்யப் பெற்று, எவ்விதத்திலும் பயமின்றி, உங்களிடத்தில் வஸித்துக் கொண்டிருந்தார்கள். இமை கண்களைக் காப்பது போல, நீங்களும் அவர்களைப் பெரிய ஆவலுடன் பாதுகாத்து வந்தீர்கள். பெரியோர்களுக்குத் தன்னுடையவனென்றும், பிறனென்றும், பேதபுத்தி கிடையாது. (அவர்களுக்கு ஜகத்தெல்லாம் தங்கள் குடும்பமாகவே தோன்றும்).

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கோபிகைகளும், மிகவும் அன்பிற்கிடமான ஸ்ரீக்ருஷ்ணனை நெடுநாள் கழித்துக் கண்டு, காண்பதற்குத் தடையாக இமையைப் படைத்த ப்ரஹ்ம தேவனைப் பழித்து, என்றும் இடைவிடாமல் த்யானம் செய்கிற யோகிகளுக்கும் பெற அரியனான அந்த ஸ்ரீக்ருஷ்ணனைக் கண்வழியால் ஹ்ருதயத்தில் நுழைத்துக் கொண்டு, அவனை நிரம்பவும் அனுபவித்தார்கள். ஷாட்குண்யபூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீக்ருஷ்ணன், அவ்வாறு தன்னிடத்தில் ஆழ்ந்த மனவிருப்பமுடைய கோபிகைகளுடன் ஏகாந்தத்தில் (தனிமையில்) கலந்து, ஆலிங்கனம் செய்து (அணைத்து), ஆரோக்யம் விசாரித்து, புன்னகை செய்து கொண்டு, மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தோழிகளே! என்னை மறவாமல் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? என்னுடையவர்களான ஸத் புருஷர்களின் ப்ரயோஜனத்தை நிறைவேற்றும் பொருட்டு, நான் போய் நெடுங்காலம் கழித்து விட்டேன். என் மனம், சத்ரு பக்ஷங்களை (எதிரிகளைச் சார்ந்தவர்களை) அழிப்பதில் ஊக்கமுற்றிருந்தமையால், எனக்குத் திரும்பிவர முடியவில்லை. “இவன் க்ருதஜ்ஞனல்லன் (நன்றி மறவாதவன் அல்லன்) ; க்ருதக்னனே (செய்நன்றி கொன்றவனே)” என்று நினைத்து, என்னை அவமதியாதிருக்கிறீர்களா?

பகவான், ப்ராணிகளைச் சேர்ப்பதும், பிரிப்பதுமாயிருக்கிறான். இது நிச்சயம். ஆகையால், ஒருவன் மற்றொருவனோடு சேர்ந்திருக்கையாவது, பிரிந்திருக்கையாவது, அவனுடைய இஷ்டப்படி நடக்கிறதன்று. காற்று, மேகக்கூட்டத்தையும், புற்களையும், பஞ்சுகளையும், தூட்களையும், ஒன்றோடொன்று சேர்ப்பதும், பிரிப்பதும் செய்வதுபோல, ப்ராணிகளைப் படைக்கிற பகவான், ஒருகால் அந்த ப்ராணிகளைச் சேர்த்து, மீளவும் பிரிக்கின்றான். 

ப்ராணிகளுக்கு என்னிடத்தில் பக்தி உண்டாகுமாயின், அது மோக்ஷத்தை விளைக்கும். அத்தகைய என்னிடத்தில் உங்களுக்கு ஸ்னேஹம் உண்டாயிற்றல்லவா! இது மிகவும் க்ஷேமத்திற்காகவே. ஏனென்றால், அது சீக்ரத்தில் உங்களை என்னிடம் சேர்க்கும். 

பெண்மணிகளே! ஸமஸ்த பூதங்களுக்கும், ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களை (அழிவை) நடத்துகிறவன் நானே. மற்றும், பஞ்ச பூதங்களின் பரிணாமமான தேவ, மனுஷ்யாதி சரீரங்களில், ஆகாசம், வாயு, அக்னி, ஜலம், பூமி, ஆகிய இவ்வைந்து பூதங்களும் உள்ளும் புறமும் வியாபித்திருப்பது போல, நான் ஸமஸ்த பூதங்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருப்பவன். இவ்வாறு இந்த ஆகாயம் முதலிய பஞ்ச பூதங்களும், அவற்றின் கார்யங்களான தேவ, மனுஷ்யாதி சரீரங்களும், அந்தச் சரீரங்களில் இருக்கிற ஜீவாத்மாவும், என்னால் உள்ளும் புறமும் வ்யாபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், அந்தச் சேதனா சேதன ரூபமான வஸ்துக்களெல்லாம் அவற்றில் வியாபித்திருப்பினும், அவற்றின் விகாரங்கள் தீண்டப்பெறாமல் என்றும் ஒருவாறாயிருப்பவனும், அவற்றைக் காட்டிலும் விலக்ஷணனுமாகிய (வேறான) என்னிடத்தில் தோற்றக் காண்பீர்களாக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு ஸ்ரீ க்ருஷ்ணனால் ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையைப்பற்றி உபதேசம் செய்து சிக்ஷிக்கப்பெற்ற (கற்பிக்கப்பட்ட) கோபிகைகள், அவன் உபதேசித்த அந்த ஆத்ம ஜ்ஞானத்தை நன்றாக ஆராய்ந்து, அவனை த்யானம் செய்து, ஆத்ம ஸ்வரூபத்தை மறைக்கிற கர்ம (முன் வினை) மூலமான (அடியான) அஜ்ஞானம் தொலையப் பெற்று, அந்தப் பகவானை அடைந்தார்கள். அப்பொழுது அந்தக் கோபிகைகள், ஸ்ரீக்ருஷ்ணனைக் குறித்துத் தாமரை உந்தியனே! ஆழ்ந்த அறிவுடைய யோகீச்வரர்களாலும் ஹ்ருதயத்தில் த்யானிக்கத் தக்கதேயன்றிக் கண்களால் ஸாக்ஷாத்கரிக்க முடியாததும், ஸம்ஸாரமாகிற கிணற்றில் விழுந்து அலையும் ப்ராணிகளுக்கு அதினின்று கரையேற அவலம்பமாயிருப்பதுமாகிய உன் பாதார விந்தம், நாங்கள் இல்லற வாழ்க்கையில் அழுந்தி அலைந்து கொண்டிருப்பினும், எங்கள் மனத்தில் ஸர்வகாலமும் உள்ளபடி ப்ரகாசித்துக் கொண்டிருக்குமாக. 

எண்பத்திரண்டாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துரையிடுக (0)
புதியது பழையவை