ஞானச்சுடர் என்ற விளக்கேற்றியவர்
ஞானியரை ஞானியரே அறிய முடியும். அதிலும் ஒரு ஆச்சார்யாரை மற்றொரு ஆச்சார்யாரால்தான் புரிந்து கொள்ள முடியும். அப்படித்தான் ஆண்டாள் பொய்கையாழ்வாரைப் பற்றி பாசுரங்களில் கூறுகிறாள்.
‘இளங் கன்றுக்கிரங்கி’ என்கிறாள், ஆண்டாள். பொய்கையார்க்கு நாமெல்லாம் குழந்தைகளைப் போலவும் நம் எல்லோருக்கும் பொய்கையார் தாயைப் போலவும் உள்ள ஒரு நித்யமான உறவை குறிப்பிடுகிறாள். ‘கன்றுக்கிரங்கி’ என்பதால் நம்மைப்போல் இருப்பவரின் மீதுள்ள பரம கருணையின் மிகுதியையே குறிக்கிறது. பொய்கையார் பகவானின் குணங்களை நினைத்தவாரே இருப்பதால் இடையறாத பகவானைப் பற்றிய நினைவே, ஊற்றாக, பால் போன்ற பாசுரங்கள் பெருக்கியது. இதையே ஆண்டாள் ‘நினைத்து முலைவழியே நின்று பால் சோர’ என்கிறாள்.
இந்த ஆழ்வார்க்கு மேலும் மூன்று ஆழ்வார்களோடு சம்பந்தம் உண்டு. அவர்கள் முறையே பூதத்தாழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆவார்கள். இவர்கள் பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார், திருமழிசையார் என்றே அறிந்து கொள்ளப்பட்டார்கள். இவர்களை அயோநிஜர்கள் என்பார்கள். அதாவது, சாதாரண மனிதர்களைப்போல் கருவிலிருந்து உருவானவர்கள் அல்ல. தாமாகத் தோன்றியவர்கள். இந்த ஆழ்வார் பொய்கையில் தோன்றியதால், அவர் பொய்கையாழ்வார் என்றானார்.
இந்த ஆழ்வாருடைய வாழித் திருநாமத்தை நாம் தினமும் மனமுருகிப் பாட ஞானம், பக்தி, வைராக்கியம் நமக்கும் வாய்க்கும். இதோ அந்த வாழித் திருநாமம்:
செய்யதுலா வோணத்திர் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்க வந்தோன் வாழியே
வையந்தகளிலூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனச மலர்க்கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையே விரும்புபவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே
அடுத்து, பூதத்தாழ்வாரின் வைபவத்தை காண்போம்.
மனதுக்கு இனிமையான இடம். ஒருபுறம் ‘டண்... டண்...’ என உளியின் ஓசை. மறுபுறம் தவழ்ந்து வரும் அலைகளின் ஆரவாரம். எப்பொழுதும் வீசும் சில்லென்ற காற்று. இடையிடையே நனைக்கும் கடலின் குளிர்ச் சாரல். இப்படி ரம்மியமான அழகோடு வரலாற்றுப் பெருமையும் கொண்டது தான் மாமல்லபுரம். இங்குள்ள பாண்டவர்களின் சிற்பம் உலகப் புகழ் பெற்றது. 108 வைணவத் தலங்களில் முக்கியமானதும், அன்பே வடிவான பூதத்தாழ்வார் என்ற மாமுனிவரை பெற்றெடுத்ததும் இந்த மாமல்லபுரம்தான். அங்கு கோயில் கொண்ட பிரானை, கடல்மல்லைத் தலசயனத்தான் என்பார்கள் பெரியோர்கள். வடமொழியில் தல சயனம். தலம் என்றால் பூமி, சயனம் என்றால் உறங்கும் திருக்கோலம். ஆக, இப்பூமியில் அடியார்களின் துயர் துடைக்க சயனத் திருக்கோலத்தில் பகவான் கோயில் கொண்டுள்ளான் என்பதே முழுப்பொருள்.
பொதுவாகவே பூதம் என்கிற வடமொழிச் சொல்லுக்கு அடியார் என்றுதான் பொருள். ‘மாதவன் பூதங்கள் மண்மேல்’ என்று ஸ்வாமி நம்மாழ்வாரும் கடவுளின் அடியார்களின் தோற்றம் பற்றிச் சொல்கிறார். இங்கு பூதத்தாழ்வார் என்ற சொல்லுக்கு அடியார்களையே தெய்வமாகக் கொண்டவர் என்றும் அடியார்களிடத்தில் ஆழ்ந்த பக்தியுடையவர் என்றும் அடியார்களுக்காகவே வாழ்ந்தவர் என்று தான் அர்த்தம்.
உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை என்று எல்லாவற்றையுமே கண்ணனாகப் பார்த்தவர் பூதத்தாழ்வார். மறைகள் சொன்னபடி வாழ்ந்தவர். தேன் தமிழில் பாசுரங்கள் பாடி பக்திப் பரவசத்தில் ஈடுபட்டவர். இவர் துவாபரயுகத்தில், ஸித்தார்த்தி வருடத்தில், ஐப்பசி மாத அவிட்ட நட்சத்திரத்தில் திருக்கடல்மல்லையில் நீலோத்பலம் என்கிற குருக்கத்திப் பூவில், கதையின் அம்சமாக அவதரித்தார். இவரைப்பற்றி வடமொழி சுலோகம் பின்வருமாறு கூறுகிறது.
‘மல்லாபுரவராதீசம், மாதவீகுஸுமோத்பவம்
பூதம் நமாமி யோ விஷ்ணோ: ஜ்ஞானதீபமகல்பயத்’
அதாவது, எவரொருவர் பரம புருஷனுக்கு ஞானச்சுடர் எனும் விளக்கை ஏற்றினாரோ, கடல்மல்லையின் தலைவராய், குருக்கத்திப்பூவில் அவதரித்தருளினவரான அந்த பூதத்தாழ்வாரை வணங்குகிறேன் என்கிறது. ஆழ்வார்கள் மயர்வற மதிநலம் என்கிற மாயைக் கலப்பே இல்லாத ஞானத்தை அருளப் பெற்றவர்கள். அதிலும் இந்த ஆழ்வார் கடவுளின் முழு அன்புக்கு பாத்திரமாகத் திகழ்ந்தவர். பகவானுக்கு ஞானச்சுடர் எனும் விளக்கை ஏற்றி கண்ணாரக் கண்டவர். இவருக்கு, பகவானை நினைக்கும்தோறும், உடல் உருகி விடும். ஆர்வத்தால் அழுது புலம்பி பக்தி வெள்ளமே ஊற்றாக மாறி ஆனந்தக் கூத்தாடுவார். அதனால்தான் விளக்கு எனும் பொருளைக்கூட வெளியில் தேடாமல், அன்பு எனும் தகளி கொண்டு, அதில் தன் ஆர்வத்தையே நெய்யாக ஊற்றி, பக்தியினால் உருகக்கூடிய சிந்தையையே இடுதிரியாக மாற்றி, அதில் இட்டு நாரணற்கு விளக்கேற்றினார். பகவானும் இவருக்கு காட்சி கொடுத்தருள, மேலும் மேலும் பரவசத்தில் ஆழ்ந்தார்.
அப்படி ஒரு சமயம் பக்தி பரவசத்தில் இருந்தபோது பகவானை நோக்கி, ‘‘திருமாலே, நீர் ஒரு சமயம் வாமன மூர்த்தியாக அவதரித்து, மூன்றடியில் உலகை அளந்தாயே! உலகனைத்தையும் அளக்கும் தருவாயில் பிரம்மாவால் நின் பாதம் கழுவப்பெற்று அது கங்கையாக பொங்கியதே. எப்பேற்பட்ட ஆச்சரியம் அது! வேதத்தை ஓதியவர்கள் கூட நின் திருவடியின் பெருமையை அறிய மாட்டார்கள். ஆனால், எனக்கு உன்னை விளங்கச் செய்தாயே என்னே உன் கருணை’’ என வியப்பால் தழுதழுத்து கேட்கிறார்.
எல்லோருக்கும் வேதம் என்னதான் சொல்கிறது என்கிற ஐயம் எழுகிறது. வேதமறிந்தவர்களும் வெவ்வேறு விஷயங்களை கூறிச் செல்கின்றனர். அதனாலேயே, இந்த வேதத்தின் சாரத்தை அழகாக ஒரு பாசுரத்தில் தெரிவிக்கிறார். பகவானின் ஆயிரம் நாமங்களில் மாதவன் என்கிற பேர் சொல்வதே மறையின் சாரமாகும் என்கிறார்.
‘ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே
உத்தமன் பேர் ஏத்தும் திறமறிமின் ஏழைகள்
ஒத்ததனை வல்லீரேல் நன்று, அதனை மாட்டீரேல்
மாதவன்பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு’
அதாவது ஓதுதலையே கடமையாகக் கொண்ட அந்தணர்களுக்கு தெரிவிப்பது யாதெனில், மாதவன் பேர் சொல்லுவதே மறையின் நோக்கமாகும். மாதவன் என்றால் ‘சுவையன் திருவின் மணாளன்’ என்று பொருள். இன்னும் இதன் அர்த்தத்தை ஆழ நோக்கினால் திரு என்கிற திருமகளின் மணாளனாகிய நாராயணன் நாமத்தை பாடியாடி மகிழ்வதே வேதத்தின் சாரமாகும் என்கிறார். அதாவது வேதம் என்ன சொல்கிறது என்று கேட்டால் மாதவன் என்கிற அவனின் நாமத்தை சொல் என்கிறது என்று அறுதியிட்டு கூறுகிறார்.
ஞானச்சுடர் ஏற்றிய இந்த ஆழ்வார் மனம், சிந்தை, ஊண் உருகி கண்ணால் நீர் பெருக்கி உவகை கொண்டு பேசுவார். அப்போது ‘பகல் கண்டேன், நாரணனைக் கண்டேன், கனவில் மிகக் கண்டேன். மீண்டு அவனை மெய்யே மிகக் கண்டேன்’ என நனவிலும் கனவிலும் இருப்பது அவன்தான் என்று ஆனந்தக் கூத்தாடுகிறார். பகவானை எப்படி அனுபவிக்கிறார் பாருங்கள்.
திருமலை - திருப்பதியில் நிகழ்ந்த சுவையான சம்பவம் இது: ஒருசமயம் பெரிய திருமலை நம்பிகள் என்கிற மகான் திருமலையில் எழுந்தருளியிருந்தபோது ஸ்ரீராமானுஜர் வெங்கடாஜலபதியை தரிசிக்க வந்தார். அந்த சமயத்தில் பல சிஷ்யர்கள் கூடி விட்டனர். உடனே திருமலை நம்பிகள் ஸ்ரீராமானுஜரை நோக்கி, ‘‘நீங்கள் சொல்லும் த்வயம் என்பதற்கான பொருளை உரைக்க வேண்டும்’’ என மன்றாடி கேட்டுக் கொண்டார். உடனே ஸ்ரீராமானுஜரும் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றினார்.
மோட்சத்தில் ஆசையுடையவர்கள் மூன்று ரகசியங்களை புரிந்து அறிந்து கொள்ள வேண்டும். அதில் முதலில் நாராயணின் நாமமாகிய திருமந்திரம், இரண்டாவது த்வயம் என்கிற இரு வரிகளை உடைய ஸ்லோகம்; இதில் முதல் வரியினாலே நாராயணனின் பெருமையும், இரண்டாவது வரியினாலே மகாலட்சுமியின் பெருமையும் கூறப்படுகிறது. மூன்றாவது சரம ஸ்லோகம். அதாவது சகல தர்மங்களையும் பரிபூரணமாக விட்டு விட்டு என்னையே சரணடைவாயாக எனும் கண்ணனின் கீதை வாக்கியமாகும். இந்த மூன்றையும் குருவை அண்டி கற்றுத் தெளிய வேண்டும். த்வயம் என்பதற்கு முன் ஏன் திருமந்திரம் உள்ளது, த்வயம் என்பதற்கு அடுத்து சரம ஸ்லோகம் ஏன் வந்தது என்றெல்லாம் விவரித்தார்.
அப்போது நடந்த ஆச்சரியம் என்ன தெரியுமா? ராமானுஜரின் இந்த உபநியாசத்தைக் கேட்ட பின்பு மனமுருகி கண்ணீர் பெருக்கினார் திருமலை நம்பிகள். அழுதுகொண்டே, ‘‘அடியேனுக்கு இப்போது பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதியின் முக்கிய பாசுரம் நினைவிற்கு வருகிறது’’ என்று சொல்லி, விவரித்தார்.
பெருகுமதவேழம் மாப்பிடிக்கு முன் நின்று
இருகணிளமூங்கில் வாங்கி - அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான்கலந்த வண்ணன்வரை மத நீர் பெருகுகிற வேழம் என்கிற யானையானது தன் பெண் யானையோடு காட்டில் இருக்கும். இள மூங்கிலை ஒடிக்கும்போது மூங்கிலின் இரு கணுகளிடையே உள்ள தேனை பேடை யானைக்கு உணவாகக் கொடுக்கும். அவ்வளவு வளம் பெற்றது இந்த திருமலை என்பது நேரடியான பொருள்.
இந்த பாசுரத்தை, பெரிய திருமலை நம்பிகள் வேறு விதமாக அனுபவிக்கிறார். வேழம் என்பது இங்கு ஸ்ரீராமானுஜரை குறிக்கிறது. ஏனெனில் திருவரங்கத்தமுதனார் என்கிற சீடர் ராமானுஜரை எங்களின் ராமானுஜ முனிவேழம் என்கிறார். இங்கு பெண் யானை என்பது நம்போல் உள்ள சீடர்களே. நமக்கு ‘இருகணிள மூங்கில் வாங்கி’ ஆதாவது மூங்கிலின் இரு கணுக்களான கண்கள் போல உள்ள நாராயண திருமந்திரத்தையும் வேறொரு கண்ணான சரம ஸ்லோகத்தையும் நடுவேயுள்ள தேனெனும் த்வயத்தோடு கொடுக்கிறார். பெருமாளின் பெருமையையும் தாயாரின் கருணையையும் தேன்போல நமக்குள் கலந்து கொடுக்கிறார் என்கிறார். இதில் இன்னொரு விசேஷம் தேன் கலந்து நீட்டும் எனும்போது இந்த உபந்நியாசமே நீண்டு போயிற்று என்று அழகாக அனுபவிக்கிறார். ராமானுஜரின் சொற்பொழிவானது பூதத்தாழ்வாரின் பாசுரத்திற்கு இணையானது என்று வியக்கிறார். மேலும், இவரை ஸ்ரீஆண்டாளும் வியக்கிறாள். எப்படி?
நன்றி - தினகரன் ஆன்மிகம் ஏப்ரல் 2012