தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்து மூன்றாவது அத்தியாயம்
(ஸ்ரீக்ருஷ்ணன் தர்மபுத்ராதிகளை க்ஷேமம் விசாரிக்க, அவர்கள் மறுமொழி கூறுதலும், த்ரௌபதியால் வினவப் பெற்ற ருக்மிணி முதலிய ஸ்ரீக்ருஷ்ண பத்னிகள், தங்களை ஸ்ரீக்ருஷ்ணன் மணம்புரிந்த வ்ருத்தாந்தத்தை விசதமாகக் (விரிவாகக்) கூறுதலும்.)
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பிறகு, தத்வோபதேசம் செய்பவனாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவான், கோபிகைகளுக்கு அவர்கள் விரும்பின வண்ணமே தன் பாதார விந்தங்களில் விருப்பம் மாறாமல் மேன்மேலும் வளர்ந்து வருகையாகிற அனுக்ரஹத்தைச் செய்து, யுதிஷ்டிரனையும் மற்றுமுள்ள நண்பர்களனைவரையும் குறித்து ஆரோக்யம் விசாரித்தான். இவ்வாறு லோகநாதனாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் நன்கு ஸத்கரித்து (வெகுமதித்து) வினவப் பெற்ற அந்த யுதிஷ்டிராதிகள், அப்பகவானுடைய பாதார விந்தங்களின் தர்சனத்தினால் பாபங்களெல்லாம் தொலையப் பெற்று, மனக்களிப்புற்று, மொழிந்தார்கள்.
யுதிஷ்டிராதிகள் சொல்லுகிறார்கள்:- ப்ரபூ! கம்பீர மனமுடைய பெரியோர்களின் அழகிய முகார விந்தத்தினின்று (திருமுகத் தாமரையிலிருந்து) பெருகி வருவதும், தேவ மனுஷ்யாதியான பற்பல தேஹ ஸம்பந்தமுடைய ஜீவாத்மாக்களுக்கு அத்தகைய தேஹ ஸம்பந்தத்திற்குக் காரணமும், அனாதியுமான அஜ்ஞானத்தை வேரோடறுப்பதுமாகிய உன் பாதார விந்தங்களின் வைபவமாகிற அம்ருதத்தைக் காதுகளாகிற பானபாத்ரங்களால் நன்கு பருகுபவர்க்கு, அமங்களம் (தீமை) எப்படி உண்டாகும்? (அம்ருதம் போல் மதுரமாகிச் சப்தாதி விஷயங்களில் விருப்பத்தை மறக்கடிப்பதுமான உன் பாதார விந்தங்களின் ப்ரபாவத்தைப் (பெருமையை) பெரியோர்கள் மூலமாய் உள்ளபடி அறிந்து, அவற்றை த்யானம் செய்பவர்க்கு, ஒருகாலும் அமங்களம் (தீமை) உண்டாகாது.) நீ பரமஹம்ஸர்களுக்கு ப்ராப்ய (அடையப்படும் பொருள்), ப்ராபகம் (அடையும் வழி) இரண்டும் தானேயாயிருப்பவன். மற்றும் நீ, காலத்தின் கொடுமையால் அழிந்த வைதிக தர்மங்களின் மர்யாதையை நிலை நிறுத்தும் பொருட்டு, தன் யோகமாயையினால் திவ்யமங்கள விக்ரஹத்தை ஏற்றுக்கொண்டிருப்பவன். (நீ, தன் ஸங்கல்பத்தினாலேயே வேத விரோதிகளை அழித்து விடுவாய்.) ஆயினும், உன் பக்தர்களிடத்தில் வாத்ஸல்யத்தினாலும், அவர்களோடு கலந்து பரிமாற வேண்டுமென்கிற ஸௌசீல்யத்தினாலும் (உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு இரண்டறக் கலந்து பழகும் தன்மையாலும்), இத்தகைய திருவுருவங்களை ஏற்றுக்கொள்கின்றாய். மற்றும், நீ தன்னைப்பற்றினவர்களின் அனிஷ்டங்களைப் (தீமைகளைப்) போக்கி, இஷ்டங்களை நிறைவேற்றிக் கொடுப்பது முதலியன செய்வதற்குரிய அளவற்ற நீண்ட அறிவுடையவன்; ஆநந்த வெள்ளம் போன்றவன்; தான் நடத்துகிற ஸ்ருஷ்டி (படைப்பு), ஸ்திதி (காத்தல்), ஸம்ஹாரங்களுக்கு (அழித்தல்) என்கிற மூன்று அவஸ்தைகளையும் தன் தேஜஸ்ஸினால் உதறியிருப்பவன். (நீ, மற்றவர்க்கு ஸ்ருஷ்டி முதலியவற்றை நடத்துபவனேயன்றி, உனக்கு அந்த ஸ்ருஷ்ட்யாதிகள் கிடையாது.) இத்தகையனான உன்னை நாங்கள் வணங்குகிறோம்.
ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜனங்கள் இவ்வாறு உத்தம ச்லோகர்களில் தலைவனாகிய ஸ்ரீக்ருஷ்ணனை நாற்புறத்திலும் துதித்துக்கொண்டிருக்கையில், அந்தகர்களின் (யாதவர்களின்) மடந்தையர்களும், கௌரவர்களின் மடந்தையர்களும் ஒன்று சேர்ந்து, ஸ்ரீக்ருஷ்ணனுடைய கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மூன்று லோகங்களிலும் பாடப்பட்ட அந்தக் கதைகளை உனக்குச் சொல்லுகிறேன், கேள். (அவர்களில் த்ரௌபதி, ஸ்ரீக்ருஷ்ண பத்னிகளை இவ்வாறு வினவினாள்.)
த்ரௌபதி சொல்லுகிறாள்:- ஸ்ரீக்ருஷ்ணனை என்றும் பிரியாத ருக்மிணி! பத்ரே! ஜாம்பவதி! கௌஸல்யே! ஸத்யபாமே! காளிந்தி! மித்ரவிந்தே! ரோஹிணி! லக்ஷ்மணே! மற்றுமுள்ள ஸ்ரீக்ருஷ்ண பத்னிகளே! மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன் ஸங்கல்பத்தினால் உலக ரீதியை (உலக வழக்கை) அனுஸரித்து, உங்களை எவ்வாறு மணம் புரிந்தானோ, இதை எங்களுக்குச் சொல்வீர்களாக.
ருக்மிணி சொல்லுகிறாள்:- சிசுபாலனுடைய பக்ஷத்தில் சேர்ந்த மன்னவர்கள், என்னை அந்தச் சிசுபாலனுக்குக் கொடுப்பிக்க முயன்று, கையும், வில்லுமாய் நின்றிருக்கையில், ஒருவராலும் வெல்ல முடியாத போர் வீரர்களுக்குச் சிரோபூஷணமான (தலைக்கு ஆபரணமான) பாதார விந்தங்களின் பராகத்தையுடைய (தூளை உடைய) ஸ்ரீக்ருஷ்ண பகவான், ஸிம்ஹம் ஆட்டு மந்தையினின்று தன் பாகத்தைப் பறித்துக் கொண்டு வருவது போல, என்னைப் பறித்துக் கொண்டு வந்தான். செல்வக் கிளர்த்தி (செல்வச் செழிப்பு) உடையதாகிய அந்தப் பகவானுடைய பாதார விந்தம், என் பணிவிடைக்கு இடம் கொடுக்குமாக. (அவனுடைய பாதார விந்தங்களையே நான் எப்பொழுதும் பணிந்து வருவேனாக.)
ஸத்யபாமை சொல்லுகிறாள்:- என் தந்தை, வேட்டைக்குச் சென்ற தன் ப்ராதாவான ப்ரஸேனன் ஸிம்ஹத்தினால் அடியுண்டு மாண்டு மீண்டு வராதிருக்கையில், மனவருத்தமுற்று, “ரத்னத்திலாசையால் ஸ்ரீக்ருஷ்ணனே என் ப்ராதாவை வதித்தான்” என்று அபவாதம் (பழி) கிளப்பிவிட, ஸ்ரீக்ருஷ்ணன் அந்த அபகீர்த்தியைப் (பழியைப்) போக்க விரும்பி, ப்ரஸேனனைக் கொன்று, ரத்னத்தைப் பறித்துக் கொண்ட ஸிம்ஹத்தை வதித்து, அதினிடத்தினின்று அந்த ரத்னத்தை எடுத்துக்கொண்ட ருக்ஷ (கரடிகளின்) ராஜனாகிய (அரசனகிய) ஜாம்பவானை ஜயித்து, ரத்னத்தை மீட்டுக்கொண்டு வந்து, அதை என் தந்தையிடம் கொடுத்தான். என் தந்தை, “நாம் உண்மையை ஆராயாமல் பழி சொன்னோமே” என்று தன் அபராதத்தினால் பயந்து, பிறருக்குக் கொடுப்பதாக வாக்தானம் செய்த (வாக்களிக்கப்பட்ட) என்னையும், அந்த ரத்னத்தையும், ஸ்ரீக்ருஷ்ணனுக்குக் கொடுத்தான்.
ஜாம்பவதி சொல்லுகிறாள்:- என் தந்தையாகிய ஜாம்பவான், இந்த ஸ்ரீக்ருஷ்ணனைத் தன் ஸ்வாமியும் குல தெய்வமுமான ஸீதாதிபதியென்று தெரிந்து கொள்ளாமல், இவனோடு இருபத்தேழு நாள் யுத்தம் செய்தான். பிறகு, “ஸீதாபதியான ராமனே இப்பொழுது யதுகுலத்தில் அவதரித்திருக்கிறான்” என்று தெரிந்து கொண்டு, பாதார விந்தங்களைப் பிடித்து, அருள் புரிவித்து, ரத்னத்துடன் என்னை உபஹாரமாகக் (காணிக்கையாகக்) கொடுத்தான். நான், இந்தப் பகவானுக்கு தாஸியாயிருப்பேனாக. (ஆத்ம ஸ்வரூபமுள்ளவரையும் நான் இவனுக்குப் பணிவிடை செய்து வருவேனாக).
காளிந்தி சொல்லுகிறாள்:- ஸ்ரீக்ருஷ்ணன், நான் தன் பாதார விந்தங்களில் பரிசர்யை (பணிவிடை) செய்ய விரும்பி தவம் செய்வதை அறிந்து, தன் ஸ்னேஹிதனான அர்ஜுனனுடன் வந்து, என்னை மணம் புரிந்தான். அத்தகைய நான், அவன் க்ருஹத்தை விளக்கும் தாஸியாயிருப்பேனாக.
பத்ரை சொல்லுகிறாள்:- ஸிம்ஹம் நாய்க் கூட்டத்தினிடையிலிருக்கிற தன் பலியைப் பெறுவது போல, எவன் ஸ்வயம்வரத்தில் வந்து, ராஜர்களையும் விரோதம் செய்கிற என் ப்ராதாக்களையும் ஜயித்து, என்னை செல்வம் நிரம்பின தன் பட்டணத்திற்குக் கொண்டு போனானோ, அத்தகையனான ஸ்ரீக்ருஷ்ணனுக்கு நான் ஜன்மங்கள் தோறும் பாதங்களை விளக்கும் தாஸியாயிருப்பேனாக.
ஸத்யை சொல்லுகிறாள்:- ராஜர்களின் வீர்யத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டு என் தந்தையால் ஏற்படுத்தப்பட்டவைகளும், மிகுந்த பலவீர்யங்கள் அமைந்து மிகவும் கூரான கொம்புடையவைகளும், கொடிய மதம் உடையவர்களைக் கொல்லுபவைகளுமான ஏழு எருதுகளைக் கண்டு, சிறு பிள்ளைகள் ஆட்டுக் குட்டிகளை அடக்குவது போலத் தன் பலத்தினால் சீக்ரமாகவே அடக்கி, அனாயாஸமாகப் பந்தித்து (கட்டி), யுத்தத்திற்கு வந்த ராஜர்கள் அனைவரையும் ஜயித்து, இவ்வாறு வீர்யத்தையே பந்தயமாகவுடைய என்னைத் தாஸிகளோடும், சதுரங்க ஸேனைகளோடும் எவன் அழைத்துக் கொண்டு போனானோ, அத்தகையனான ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களில் என்றும் பணிவிடை செய்து வருவேனாக.
மித்ரவிந்தை சொல்லுகிறாள்:- த்ரௌபதி! என் தந்தை, எனது அம்மான் பிள்ளையாகிய ஸ்ரீக்ருஷ்ணனைத் தானே அழைத்து, அவனிடத்திலேயே நிலைநின்ற மனமுடைய என்னை, அக்ஷௌஹிணி ஸேனையுடனும் (தேர் 21870; குதிரை 65610; யானை 21870; காலாட் படை 109350 கொண்ட பெரும் படை அக்ஷௌஹிணி ஸைன்யம் எனப்படும்) ஸகஜனங்களுடனும் அவனுக்குக் கொடுத்தான். புண்ய, பாபகர்மங்களால் சுழலும்படி தூண்டப்படுகிற எனக்கு, நன்மையை விளைக்க வல்லதாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களின் பரிசர்யை (பணிவிடை) ஜன்மங்கள் தோறும் மாறாமல் தொடர்ந்து வருமாக.
லக்ஷ்மணை சொல்லுகிறாள்:- ராஜபத்னி! ஸ்ரீக்ருஷ்ணனுடைய பிறவியையும், செயலையும், நாரதர் அடிக்கடி பாடக் கேட்டும், கையில் தாமரை மலரேந்தின ஸ்ரீமஹாலக்ஷ்மியின் அம்சமாகிய ருக்மிணி ஸ்ரீக்ருஷ்ணனை மேல் விழுந்து மணம் புரிந்ததை நன்கு ஆராய்ந்தும், என் மனமும் லோக பாலர்களையும் துறந்து, அந்த ஸ்ரீக்ருஷ்ணனிடத்திலேயே மிகவும் விருப்பமுற்றிருந்தது. நல்லொழுக்கமுடையவளே! என் தந்தையாகிய ப்ருஹத்ஸேனனென்பவன், என் அபிப்ராயத்தை அறிந்து, பெண்ணிடத்தில் ப்ரீதியுடையவனாகையால், அந்த ஸ்ரீ க்ருஷ்ணனைப் பெறுதற்கு உபாயம் செய்தான்.
ராஜபத்னி! உன்னுடைய ஸ்வயம்வரத்தில், அர்ஜுனனைப் பெறுதற்காக உன் தந்தை மத்ஸ்யத்தை (மீனை) லக்ஷ்யமாக ஏற்படுத்தினாற்போல், என் தந்தையும் மத்ஸ்யத்தையே (மீனையே) லக்ஷ்யமாக ஏற்படுத்தினான். ஆனால், உன் தந்தை ஏற்படுத்திய அந்த மத்ஸ்யம் (மீன்) வெளியில் மாத்ரம் மறைக்கப்பட்டிருந்ததே அன்றி, ஸ்தம்பத்தின் (தூணின்) ஓரத்தில் கண் விட்டு, மேல் நோக்கினால் காணக்கூடியதாயிருந்தது. இந்த மத்ஸ்யமோ என்றால், அப்படியன்று. ஸ்தம்பத்தின் கீழே அமைக்கப்பட்ட கலச ஜலத்தில் (பாத்திரத்தில் உள்ள தண்ணீரில்) மாத்ரம் காணக்கூடியதாயிருந்தது. ஆகையால், பார்வை கீழேயும், லக்ஷ்யம் மேலேயுமாயிருந்தது. (ஜலத்தில் தெரிகிற ப்ரதிபிம்பத்தைப் பார்த்து, மத்ஸ்யத்தின் (மீனின்) இருப்பிடத்தை அறிந்து, அடிக்க வேண்டியதாயிருந்தபடியால், ஸ்ரீக்ருஷ்ணனைத் தவிர மற்ற எவர்க்கும் முடியாதிருந்தது). ஸமஸ்த அஸ்த்ர, சஸ்த்ரங்களின் உண்மையை அறிந்த அனேகமாயிரம் ராஜர்கள், இவ்வாறு மத்ஸ்ய யந்தர (மீன் இயந்திர) நிர்மாணம் செய்திருப்பதைக் கேட்டு, உபாத்யாயர்களுடன் (ஆசார்யர்களுடன்) நாற்புறத்தினின்றும் என் தந்தையின் பட்டணத்திற்குப் புறப்பட்டு வந்தார்கள். அம்மன்னவர்கள் அனைவரும், தங்கள் வீர்யத்திற்கும், வயதிற்கும் தகுந்தபடி என் தந்தையால் பூஜிக்கப்பட்டு, என்னிடத்தில் விருப்பமுற்று, சபையில் மத்ஸ்யத்தை (மீனை) அடிக்கும் பொருட்டு பாணத்தோடு கூடின தனுஸ்ஸை (வில்லை) எடுத்துக்கொண்டார்கள்.
சிலர், தனுஸ்ஸை (வில்லை) எடுத்து நாணேற்ற முடியாமல், உடனே தனுஸ்ஸை (வில்லை) விட்டுப் போனார்கள். சிலர், தனுஸ்ஸின் (வில்லின்) நுனிவரையில் நாணை இழுத்தும், கடைசியில் நாணேற்ற முடியாமல், அந்தத் தனுஸ்ஸினால் (வில்லினால்) அடியுண்டு, விழுந்தார்கள். வீரர்களான மாகதன், அம்பஷ்டன், சேதிராஜன், பீமன், துர்யோதனன், கர்ணன் முதலிய மற்ற மன்னவர்கள் தனுஸ்ஸை நாணேற்றியும், குறியிருக்குமிடம் தெரிந்து கொள்ளவில்லை. அர்ஜுனனோவென்றால், கலச ஜலத்தில் மத்ஸ்யத்தின் ப்ரதிபிம்பத்தைக் கண்டு, குறியினிருப்பிடம் அறிந்து, ப்ரயத்னப்பட்டு பாணத்தை (அம்பை) ப்ரயோகித்தான். அந்த பாணம் (அம்பு) அந்த மத்ஸ்யத்தை ஸ்பர்சித்ததே (தொட்டதே) அன்றி, அதை அறுத்துத்தள்ள வல்லதாகவில்லை. நாம் வீரர்களென்னும் அபிமானமுடைய (தன்மானம் உடைய) ராஜர்கள் அனைவரும், தங்கள் அபிமானம் (தன்மானம்) அழிந்து மீளுகையில், ஸூர்யன் அபிஜித்தில் (பகல் 11.36 மணி முதல் 12.24 மணி வரையான 48 நிமிடங்கள்) இருக்கும்பொழுது (ஸமஸ்த ப்ரயோஜனங்களையும் ஸாதிக்கவல்ல மத்யாஹ்ன ஸமயத்தில்) மஹானுபாவனான ஸ்ரீக்ருஷ்ணன், தனுஸ்ஸை (வில்லை) எடுத்து, அதில் அனாயாஸமாக நாணையேற்றிப் பாணத்தைத் (அம்பைத்) தொடுத்து, ஜலத்தில் ஒருதரம் ப்ரதி பிம்பத்தைப் பார்த்து, பாணத்தினால் (அம்பினால்) அந்த மத்ஸ்ய யந்த்ரத்தை (மீன் இயந்திரத்தை) அறுத்துத் தள்ளினான்.
அப்பொழுது, ஆகாயத்தில் துந்துபி வாத்யங்கள் முழங்கின. பூமியில் “ஜய விஜயீ பவ” என்னும் சப்தங்கள் முழங்கின. தேவதைகள் ஸந்தோஷத்தினால் தழதழத்து, ஓயாமல் பூமழை பொழிந்தனர். அப்பொழுது, நான் விலையுயர்ந்த புதிய பட்டு வஸ்த்ரங்களை உடுத்து, தலைச் சொருக்கில் புஷ்பங்களைச் சூடி, வெட்கம் வழிகின்ற புன்னகையோடு கூடின முகமுடையவளாகி, ஸ்வர்ணத்தினால் திகழ்கின்ற ரத்னமாலையை எடுத்துக் கொண்டு, இனிய ஒலியுடைய சிலம்பு, தண்டைகளை அணிந்த பாதங்களால் நடந்து, அரங்கத்திற்குள் நுழைந்தேன். சுருண்டு அழகிய முன்னெற்றி மயிர்களும், குண்டலங்களின் காந்தியால் திகழ்கின்ற கபோலங்களும் உடைய முகத்தை உயரத் தூக்கி, குளிர்ந்த புன்னகை அமைந்த கடைக்கண்ணோக்கங்களால் மெல்ல மெல்ல நாற்புறத்திலும் நிறைந்திருக்கிற மன்னவர்களைக் கண்டு, ஸ்ரீக்ருஷ்ணனிடத்தில் அனுராகமுற்ற (ஆசையுடைய) மனமுடைய நான், அவன் கழுத்தில் அந்த மாலையைப் போட்டேன்.
அப்பொழுது, ம்ருதங்கம், படஹம், சங்கம், பேரி, ஆனகம் முதலிய வாத்யங்கள் முழங்கின. நடர்களும், நர்த்தகிகளும் ஆடினார்கள். பாட்டுக்காரர்கள், பாடினார்கள். த்ரௌபதி! நான் ஜகதீசனும், யாதவ ச்ரேஷ்டனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனை இவ்வாறு வரிக்கையில், மன்னவர் கூட்டங்களில் தலைமையுள்ளவர்கள், காம விகாரத்தினால் பீடிக்கப்பட்டு, அதைப் பொறுக்க முடியாதிருந்தார்கள். சதுர்ப்புஜனான ஸ்ரீக்ருஷ்ணனோவென்றால், சிறந்த நான்கு குதிரைகள் கட்டப்பெற்ற ரதத்தில் என்னை ஏற்றி, சார்ங்கமென்னும் தனுஸ்ஸை (வில்லை) ஊன்றிக் கொண்டு, முயற்சியுடன் யுத்தத்திற்கு நின்றிருந்தான்.
ராஜ பத்னி! தாருகன், பொன்னலங்காரம் செய்யப் பெற்ற அந்த ரதத்தை ஓட்டினான். ம்ருகங்கள் பார்த்துக் கொண்டிருக்கையில் ஸிம்ஹம் நடப்பது போல, ஸ்ரீக்ருஷ்ணன், ராஜர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், அவர்களைப் பொருள் செய்யாது நடந்தான். அவர்களில் சில மன்னவர்கள் யுத்தம் செய்ய முயன்று, கலசங்களை அணிந்து, தனுஸுக்களையும் (வில்லையும்) ஏந்திக்கொண்டு, வழியில் தடுக்க விரும்பி, க்ராம ஸிம்ஹங்கள் ஸிம்ஹத்தைத் தொடர்வது போல, ஸ்ரீக்ருஷ்ணனைத் தொடர்ந்தார்கள். அவர்களில் சிலர், சார்ங்கத்தினின்று நழுவின பாண (அம்புக்) ஸமூஹங்களால் (கூட்டங்களால்) புஜங்களும், பாதங்களும், கழுத்துக்களும் அறுப்புண்டு, யுத்த பூமியில் விழுந்தார்கள். சிலர் யுத்த முயற்சியைத் துறந்து, அவ்விடத்தினின்று ஓடிப்போனார்கள். பிறகு, யதுபதியான ஸ்ரீக்ருஷ்ண பகவான், நாற்புறத்திலும் நன்கு அலங்காரம் செய்யப் பெற்றதும் ஸூர்யனை மறைக்கின்ற த்வஜ படங்களும் (கொடிகளும்), விசித்ரமான தோரணங்களும் நிறைந்து, ஆகாயத்திலும், பூமியிலும் ஸர்வகாலமும் துதிக்கப்பட்டதுமாகிய தன் பட்டணமான த்வாரகைக்குச் சென்று, ஸூர்யன் தன் மண்டலத்திற்குள் ப்ரவேசிப்பது போல, தன் க்ருஹத்திற்குள் ப்ரவேசித்தான்.
அப்பொழுது, என் தந்தை நண்பர்களையும், ஸம்பந்திகளையும், பந்துக்களையும், சிறந்த ஆடையாபரணங்களாலும், படுக்கை, ஆஸனம், பரிவாரம் இவைகளாலும், பூஜித்தான். பூர்ணனாகிய (அனைத்தும் அடையப்பெற்றவனான) ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ஸமஸ்த ஸம்பத்துக்களும் அமைந்த தாஸிகளையும், காலாள், யானை, தேர், குதிரை ஆகிய சதுரங்க ஸைன்யங்களையும், சிறந்த ஆயுதங்களையும் பக்தியுடன் கொடுத்தான். இந்த நாங்கள் எட்டுப் பேர்களும், எல்லாவற்றிலும் பற்றில்லாமையாகிற வைராக்யத்தினாலும், தவத்தினாலும், மஹானந்த ஸ்வரூபனான, தன்னைத் தான் அனுபவிக்கையால் நிறைவாளனான அந்தப் பகவானுக்கு, நேரே வீட்டு வேலை செய்யும் தாஸிகளானோம்.
மற்ற மஹிஷிகள் சொல்லுகிறார்கள்:– ஸ்ரீக்ருஷ்ணன், நரகாஸுரனையும், அவனைத் தொடர்ந்த கூட்டங்களையும் வதித்து, திக்விஜயத்தில் ஜயிக்கப்பட்ட ராஜாக்களின் கன்னிகைகளாகிய எங்களை, அந்த நரகாஸுரன் சிறையில் அடைத்திருப்பதை அறிந்து, சிறையினின்று விடுவித்து, அவன் அவாப்த ஸமஸ்தகாமனாயினும் (அனைத்தும் அடையப்பெற்றவனாயினும்), ஸம்ஸாரத்தினின்று விடுவிக்கவல்ல தன் பாதார விந்தங்களை இடைவிடாமல் நினைக்குத் தன்மையுள்ள எங்களை, மணம் புரிந்தான்.
நல்லொழுக்கமுடையவளே! நாங்கள், பூமண்டலத்திற்கெல்லாம் ப்ரபுவாயிருக்கையாகிற ஸாம்ராஜ்யத்தையாவது, இந்த்ர பதவியையாவது, கைவல்யத்தையாவது, அவற்றால் உண்டாகும் போகத்தையாவது, அணிமாதி ஸித்திகளையாவது, ப்ரஹ்ம பதத்தையாவது (சதுர்முக ப்ரஹ்மாவின் இடத்தையாவது) அளவற்ற பரமபத்தையாவது (ஸ்ரீவைகுண்டத்தையாவது) விரும்பவில்லை. பின்னையோவென்றால், ஸ்ரீமஹாலக்ஷ்மியின் கொங்கை மேல் குங்குமத்தின் மணம் நிறைந்து, மிகவும் அழகியதுமான இந்த கதாதரனுடைய பாதார விந்தங்களின் பராகத்தைச் (தூளை) சிரஸ்ஸினால் தரிக்க விரும்புகிறோம். அளவற்ற ஸௌசீல்யகுணமுடைய (உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு இரண்டறக் கலந்து பழகும் தன்மையுடைய) மஹானுபாவனான இந்த ஸ்ரீக்ருஷ்ணன், கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்கையில், கோகுலத்திலுள்ள கோபிகைகளும் காடுகளிலுள்ள வேடப்பெண்களும், புற்களும், செடி கொடிகளும், கோபர்களும், இவனுடைய பாதார விந்தங்களின் ஸ்பர்சத்தை விரும்பினவல்லவா? (அவ்வாறே, நாங்களும் விரும்புகின்றோம். ஸௌசீல்யம் (உயர்ந்தவன் தாழ்ந்தவர்களோடு இரண்டறக் கலந்து பழகும் தன்மை), ஸௌலப்யம் (எளிமை, எல்லோராலும் அடையப்படும் தன்மை) முதலிய குணங்கள் அளவற்றிருக்கிற பகவானுடைய பாத தூளி, அவன் பந்தர்களுக்கு ஸுகமாகக் கிடைக்கக் கூடியதே).
எண்பத்து மூன்றாவது அத்தியாயம் முற்றிற்று.