புதன், 14 ஏப்ரல், 2021

குரு பரம்பரை வைபவம் - 4 - கோமடம் மாதவாச்சார்யார்

பகவானின் நாமமே அருமருந்து


பூதத்தாழ்வார் தம் பாசுரங்கள் மூலம் எந்த விஷயத்தை வெளிப்படுத்தியிருக்கிறாரோ, அதே விஷயத்தைத்தான் ஆண்டாளும் தம் பாசுரங்கள் மூலம் கூறுகிறாள். ஒவ்வொரு ஆழ்வாரின் ஆழ்ந்த பக்தியையும் அவர்களின் தன்நிலையையும் இவள் ஒருவளே அறிவாள். அதனால்தானோ என்னவோ, இவளை ‘பதின்மருக்கு ஒரு பெண் பிள்ளையிரே’ என்று ஜனன்யாசார்யார் என்பவர் விளக்குகிறார். அதாவது பத்து ஆழ்வாருக்கு இவள் ஒருவளே பெண்ணின் தகுதியைப் பெறுகிறாள். சரி! பூதத்தாழ்வாரைப் பற்றி ஆண்டாளின் நோக்குதான் என்ன?


‘கற்றுக் கறவை கணங்கள்..’ என்கிற திருப்பாவையின் 11ம் பாசுரத்தில் பூதத்தாழ்வாரின் மகிமையை ஆண்டாள் விளக்குகிறாள். இந்தப் பாசுரத்தில் ‘‘குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே’’ என்ற அடி பூதத்தாழ்வாருக்கு நன்கு பொருந்தும். தாயின் கருவிலிருந்து பிறவாததால் குற்றமொன்றில்லாதவர். ‘கோ’ என்றால் பக்தி ததும்பும் நற்சொற்கள். இதைத்தான் ஸ்ரீஸூக்திகள் என்று ஆன்றோர்கள் கூறுவர். கோவலர் என்றால், பக்திப் பரவசத்துடன் ஸ்ரீஸூக்திகளான நற்சொற்களை அருளவல்லவர் என்று அர்த்தம். பொற்கொடியே என்பதன் உள் அர்த்தம் என்னவென்றால், ‘கோல்தேடி யோடுங் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்’ என்று தம்மை ஒரு கொடியாக தம் பாசுரத்தில் சொல்லிக் கொள்கிறார். ‘பகவானாகிய கோலைத் தேடிச் செல்கிற கொடி போன்றவன் நான்’ என்கிறார். மேலும் ‘‘கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து’’ என்பது முதலாழ்வார்களான பொய்கையார், பூதத்தார், பேயாழ்வார் ஆகிய மூவருக்கும் பொருந்தும். கற்றுக் கறவை என்பதில் கறவை என்பதற்கு நற்சொற்கள் என்று பொருள். மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் பெரிய பெரிய பாசுரங்களை அருளினார்கள். ஆனால், அது போலல்லாமல் இந்த மூவரும் வெண்பாவாகிய சிறிய பாசுரங்களை அளித்தார்கள். 


இந்த ஆண்டாள் பாசுரத்தில் ‘‘புனமயிலே’’ என்ற விளியும் இவருக்கு நன்கு பொருந்தும். அதையே பூதத்தாழ்வார் ‘‘பொழிலிடத்தே வாழும் மயில்’’ என்று தன்னையே கூறிக் கொண்டார். இந்த ஆழ்வார் தோன்றிய தலம் திருக்கடல்மல்லை எனும் மாமல்லபுரமாகும். பொதுவாகவே மயில் மேகத்தைக் கண்டு மிக்க குதூகலமடையும். மேகம், நீர் பருக வருமிடம் கடல். இதன் கரையிலே நின்று மேகத்தைக் கண்டு மயில்கள் அகவும். மகிழ்ந்து நிற்கும். இந்த ஆழ்வார் நின்ற இடமும் கடற்கரையே. அங்கு கோயில் கொண்டுள்ள தலசயனப்பெருமாள் ஒரு மேகத்தையொத்தவர் ஆதலால் இம்மேகத்தைக் கண்டு ஆழ்வாராகிய மயில், பக்தியால் அகவுகிறது என்றாயிற்று.


மேலும், ஆண்டாள் இதே பாசுரத்தில் ‘‘சுற்றத்துத் தோழிமார்’’ என்கிறாள். அதாவது பூதத்தாழ்வாருக்கு பொய்கையாழ்வாரும் பேயாழ்வாரும் சுற்றத்தவர் ஆவர். ஏனைய ஆழ்வார்கள் இவருக்கு தோழிமார் ஆவர். இவ்வாழ்வார் ஒருவரே முகில் வண்ணன் பேர் பாடினவர். ஆதலால், ஆண்டாள் முகில்வண்ணன் பேர் பாட நீர் வாரும் என விளிக்கிறாள். புனமயில் முகில் வண்ணனைத்தானே பாடும் என்ற அர்த்தத்தில் ஆண்டாள், பூதத்தாழ்வாரை புனமயிலே என விளித்து உனது இடையழகாகிய பக்தியின் பெருமை எனக்கு நன்றாகத் தெரியும். நீர் அதை மேலும் மெருகூட்டும் என விளிக்கிறாள். அடுத்தவர், பேயாழ்வார்.

துவாபரயுகம். எங்கும் வேத ஒலி சப்தம். காதுக்கு இனிமையான மதுரமான சங்கீத ஜாலங்களோடு மயிலாப்பூரும் மயிலாடும் திருவல்லிக்கேணியும் ஒரே ஊராகத் திகழ்ந்தன. மாட மாளிகைகளும் கூட கோபுரங்களும் நிறைந்த இத்தலத்தில்தான், ஒரு பக்கம் பார்த்தசாரதிப் பெருமாளும் ஒரு பக்கம் கேசவப்பெருமாளும் கோயில் கொண்டு ஆன்மிக அன்பர்களுக்கு அருள்பாலித்தனர். இதற்கு இடைப்பட்ட க்ஷேத்திரம்தான் மாதவப்பெருமாள் கோயில். இடையே கபாலீஸ்வரர் கோயில். இந்த மாதவப்பெருமாள் கோயில் அருகில் மிகவும் செழிப்பான, கண்களுக்குக் குளிர்ச்சியான, மணமுள்ள துளசிவனம் அமைந்திருந்தது. அங்குள்ள ஒரு அழகானதொரு கிணற்றிலேதான் பேயாழ்வார் அவதரித்தார். இவரைப் பற்றிய வடமொழி ஸ்லோகம் ஒன்று: 


‘‘துலா சதபிஷக்ஜாதம் மயூர புரி கைரவாத்

மஹாந்தம் மஹதாக்யாதம் வந்தே ஸ்ரீ நந்தகாம்சக(ஜ)ம்.” 


இதன் பொருள் என்னவென்றால், ஐப்பசி மாதம், சதய நட்சத்திரத்தில் திருமயிலையில் ஒரு கிணற்றில் செங்கழுநீர் பூவிலிருந்து (செவ்வல்லி) நந்தகமென்னும் பெருமாள் கரத்தினில் இருக்கும் வாளின் அம்சமாக அவதரித்த பெரியவரான பேயாழ்வாரை வணங்குகிறேன் என்பதாகும்.


பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அவதரித்த அதே ஸித்தார்த்தி வருடம் ஐப்பசி மாதத்தில் அவர்களுடைய திருவோணம், அவிட்டம் நட்சத்திரங்களுக்கு அடுத்ததான சதயத்தில் தோன்றி உலகு உய்ய நல்வழிப்படுத்தினார், பேயாழ்வார். இவர், சாத்ய பக்தி எனப்படும் சாதனையால் அடையக்கூடிய பக்தியின் வடிவாகத் திகழ்ந்தவர். மற்ற இரு ஆழ்வார்கள் வையத்தையும் அன்பையும் முறையே தகளியாக வைத்து நாரணற்கு விளக்கேற்றினர்; ஆனால் இவரோ அவ்வொளி கொண்டு 


‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும் 

அருக்கனணி நிறமும் கண்டேன், செருக்கிளரும் 

பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன், 

என்னாழி வண்ணன்பால் இன்று’ 


என பாடி மகிழ்ந்தார். இவர் வைராக்ய சீலர். அதனால் மனத்தில் உள்ளானை கண்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி, எதையும் உண்ணாமல், ‘உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்’ என்றபடி வாழ்ந்து வந்தார். 


பொதுவாகவே மூன்று ஆழ்வார்களுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை, அவர்கள் நீரில் வளரும் மிருதுவான பூக்களிலிருந்து தோன்றியவர்கள். ஒரு அன்னையின் கருவில் வாசம் செய்து பிறந்தவர்கள் அல்லர். தண்ணீரின் குளிர்ச்சியும் பூவின் மணமும் மிருதுவான தன்மையையும் தம் சுபாவமாகவே உடையவர்கள். சில சமயங்களில் பூவை வண்டு மொய்த்து திளைத்து ஹரி என்று ரீங்காரம் செய்வது போல இவர்களும் வண்டாக மாறி பகவானாகிற பூவை மொய்த்து ஹரி என்ற நாமத்தைச் சொல்லியே வாழ்ந்தவர்கள். ஆசார்யர்கள் என்கிற குருவுக்கு பொதுவாகவே வண்டை உவமையாகக் கூறுவது வைணவ மரபு. காரணம், வண்டிற்கு இரண்டு இறக்கைகள் உள்ளது போல இவர்களுக்கும் அத்வைதம், த்வைதம் என்கிற மதமே இறக்கைகள். இவர்கள் விசிஷ்டாத்வைத வண்டாக மாறி எம்பெருமானை அனுபவிப்பர். 


அதனால்தான் சுவாமி ராமானுஜரை அருளாழி வரிவண்டே என நம்மாழ்வார் தம் திருவாய்மொழி என்ற பாசுரத்தில் குறிப்பால் உணர்த்தினார் என்பர் பெரியோர். இவை எல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டுதான் பேயாழ்வார் பகவானை,


மனத்துள்ளான் மாகடல் நீருள்ளான் மலராள்

தனத்துள்ளான் தண்துழாய் மார்பன்; சினத்துச்

செருநருகச் செற்றுகந்த தேங்கோத வண்ணன்

வருநரகம் தீர்க்கும் மருந்து


என விளித்தார். சம்ஸாரமாகிய கோரமான கடலைத் தாண்டுவதற்கு ஒரு சாதனம்தான் பகவானின் நாமம் என்கிறார். அதுவே மருந்தாகும் எனவும் பகர்கிறார். மயிலாப்பூர் இணைந்திருந்த திருவல்லிக்கேணியிலே கோயில் கொண்டுள்ள பார்த்தசாரதி எம்பெருமானை வேங்கடகிருஷ்ணனாக பார்த்து இவ்வாறு அனுபவிக்கிறார்:


வந்துதைத்த வெண்திரைகள் செம்பவளம் வெண்முத்தம்

அந்தி விளக்குமணி விளக்காம் எந்தை

ஒரு வல்லித் தாமரையாள் ஒன்றிய சீர்மார்வன்

திருவல்லிக்கேணியான் சென்று. 


‘தாமரையாள் ஒன்றிய சீர்மார்வன்’ என்கிறார். பூமகளை தன் மார்பில் கொண்ட வேங்கடவனை நினைத்து மனமுருகி, திருமலையில் கோயில் கொண்ட என்னப்பனோ இவன் என்று அர்த்தம் தொனிக்க பாடி மகிழ்ந்து பார்த்தசாரதியை வேங்கடகிருஷ்ணன் என அனுபவித்தார். ஆகவேதான் பூமகளை (மஹாலக்ஷ்மி) ஒருவல்லித் தாமரையாள் என சாதுர்யமாக பேயாழ்வார் விளிக்கிறார். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இது நரசிம்ம க்ஷேத்திரம். அவருக்கு தெள்ளியசிங்கர் என்றும் பெயர். பாரதப்போர் முடிந்த பிறகு பார்த்தசாரதி இவ்விடத்தே கோயில் கொள்ள ஆசைப்பட்டு வந்ததால், இவருக்கு முன்னுரிமை கொடுத்து, இங்குள்ள தெள்ளியசிங்கர் பின்பக்கம் தான் சென்றார். எனவே, இக்கோயிலில் இன்றும் இரண்டு கொடிமரங்கள் (துவஜஸ்தம்பம்) இருக்கக் காணலாம்.

தனக்கு எவ்வளவு ஜென்மம் கொடுத்தாலும் பரவாயில்லை. ஆனால் அஞ்சாதிருக்க அருள்வாய் எனும் தொனியில்,  


‘‘வாய் மொழிந்து வாமனனாய் மாவலிபால் மூவடி மண்

நீயளந்து கொண்ட நெடுமாலே தாவியரின் 

எஞ்சா இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி

அஞ்சாதிருக்க அருள்’’ என்கிறார்.


வாமனனாக எல்லா உலகங்களையும் அளந்து கொண்ட உத்தமன் பேர்பாட இந்த கோரமான கலி ஒரு பக்தனையும் ஒன்றும் செய்யாதன்றோ! பூதத்தாழ்வாரைப் போலவே இவரும் வேங்கட மலையின் செழிப்பை வர்ணிக்கிறார். அதாவது,


‘‘புரிந்து மத வேழம் மாப்பிடி யோடு ஊடி

திரிந்து சினத்தால் பொருது 

விரிந்த சீர் வெண்கோட்டு முத்துதிர்க்கும் வேங்கடமே 

மேலொருநாள் மண்கோட்டுக் கொண்டான் மலை.” 


இப்படி வேழத்தை வர்ணிப்பது போல் குருமார்களையே வர்ணிக்கிறார், மத வேழம் சுவாமி ராமானுஜர். மாப்பிடி என்றால் நம் போலுள்ள சீடர்கள். முத்துதிற்கும் வேங்கடமே என்பது முத்து முத்தான சாத்திரங்களையும் வேதப் பொருட்களையும் உதிர்ப்பார் என்றதாயிற்று. அப்படிப் பெருமைமிக்கது எங்கள் வேங்கடம் என பேயாழ்வார் விளிக்கிறார்.

அடுத்து, இவரைப் பற்றி ஆண்டாள் விவரிப்பதைக் காணலாம்.


நன்றி - தினகரன் ஆன்மிகம் மே 2012


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக