ஞாயிறு, 11 ஏப்ரல், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 297

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பதொன்றாவது அத்தியாயம்

(குசேல வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த ஸ்ரீக்ருஷ்ணன், இவ்வாறு ப்ராஹ்மண ச்ரேஷ்டராகிய அந்தக் குசேலருடன் பேசிக் கொண்டிருந்து, ஸமஸ்த ப்ராணிகளுடைய மனோ பாவத்தையும் (உள்ளக்கருத்தையும்) அறிந்தவனாகையால், எனக்காக அவல் கொண்டு வந்தும் அதைக் கொடுக்க வெட்கப்படுகிறாரென்று தெரிந்து கொண்டு, அவ்வந்தணரைக் குறித்து மொழிந்தான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராஹ்மணரே! உம்முடைய க்ருஹத்தினின்று எனக்கு என்ன உபஹாரம் (அன்பளிப்பாகக்) கொண்டு வந்தீர்? என் பக்தர்கள் ப்ரீதியுடன் எனக்கு எதைக் கொடுப்பார்களோ, அது அற்பமாயினும், அதுவே எனக்குப் பெரிதாயிருக்கும். என்னிடத்தில் பக்தியில்லாதவர் எனக்கு அபாரமாகக் (பெரியதாகக்) கொடுப்பினும், அது எனக்கு ஸந்தோஷத்தின் பொருட்டு ஆகாது. எவனேனும் இலையையாவது, பூவையாவது, பழத்தையாவது எனக்குப் பக்தியுடன் கொடுப்பானாயின், தூய மனமுடைய அவன் பக்தியுடன் கொடுத்த அதையெல்லாம் நான் சாப்பிடுவேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ராஜனே! அந்த ப்ராஹ்மணர், ஸ்ரீக்ருஷ்ணனால் இவ்வாறு மொழியப் பெற்றும், வெட்கமுற்றுத் தலையை வணக்கிக் கொண்டு, ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனான அந்த ஸ்ரீக்ருஷ்ணனுக்குத் தான் கொண்டு வந்த அவல் பிடியைக் கொடாமலேயிருந்தார். ஸமஸ்த ப்ராணிகளின் மனத்தை அறிபவனும், எல்லாவற்றையும் ஸாக்ஷாத்கரிப்பவனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ணன், அந்த ப்ராஹ்மணருடைய வரவின் காரணத்தை அறிந்து, தான் செய்ய வேண்டியதைப் பற்றித் தனக்குள் சிந்தித்தான். 

“இவர், முன்பு செல்வம் வேண்டும் என்னும் விருப்பத்துடன் என்னைப் பணியவில்லை. என்னுடைய நண்பராகிய இவர், இப்பொழுது பதிவ்ரதையான தன் பார்யைக்கு ப்ரியம் செய்ய விரும்பி, என்னிடம் வந்தார். தேவர்களுக்கும் கிடைக்க அரிய ஸம்பத்துக்களை நான் இவருக்குக் கொடுக்க வேண்டும்” என்று ஸ்ரீக்ருஷ்ணன் தனக்குள் சிந்தித்து, அவ்வந்தணர் துணிக்கந்தலில் கட்டிக் கொண்டு வந்திருக்கிற அவலை இது என்னென்று தானே பிடுங்கிக்கொண்டு, “நண்பரே! இதோ கொண்டு வந்திருக்கிறீரே. இது எனக்கு மிகவும் ஸந்தோஷத்தை விளைப்பதல்லவா? இந்த அவல்கள் ப்ரபஞ்சத்தையெல்லாம் சரீரமாகவுடைய என்னை மிகவும் திருப்தி அடையச் செய்கின்றன” என்று மொழிந்து, ஒருபிடி அவல் எடுத்துப் புசித்து, இரண்டாம் பிடி எடுத்தான். 

அவ்வளவில், ஸ்ரீமஹாலக்ஷ்மியாகிய ருக்மிணி, அதைச் சாப்பிட ஒட்டாமல் விரைவுடன் ஸ்ரீக்ருஷ்ணனுடைய கரத்தைப் பிடித்துக் கொண்டு, “ப்ரபஞ்சத்திற்கெல்லாம் அந்தராத்மாவாகி அதையெல்லாம் சரீரமாகவுடையவனே! இந்த ஒரு பிடி அவல் சாப்பிட்ட மாத்ரத்தினாலேயே புருஷனுக்கு இஹத்திலாவது (இந்த உலகத்திலாவது), பரத்திலாவது (வேறு உலகத்திலாவது) ஸமஸ்த ஸம்பத்துக்களும் விளையுமே. ப்ரபஞ்ச ஸ்வரூபியான (இந்த உலகே வடிவான) உமக்கு, ஸந்தோஷத்தை விளைக்க இவ்வளவே போதுமாயிருக்க, இரண்டாம் பிடியும் சாப்பிட்டு என்ன செய்யப் பார்க்கிறீரோ, தெரியவில்லையே. என்னையும் கூட இவ்வந்தணர் பின்னோடனுப்பப் பார்க்கிறீரா என்ன? ஆகையால், இவ்வளவே போதும்” என்று மொழிந்தாள். 

அவ்வந்தணர், ஸ்ரீக்ருஷ்ணனுடைய திருமாளிகையில் புசித்துப் பருகி, அன்றிரவெல்லாம் ஸுகமாக வஸித்திருந்து, தன்னை ஸ்வர்க்கவாஸியாக நினைத்துக் கொண்டார். மற்றை நாள் பொழுது விடிகையில், அவர் ஜகத்திற்கெல்லாம் க்ஷேமத்தை விளைப்பவனும், நண்பனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனால் அபிநந்தனஞ் செய்து (கொண்டாடி) அனுமதி கொடுத்துக் கொஞ்ச தூரம் தொடர்ந்து வழிவிட்டு, வந்தனமும் செய்யப் பெற்று, தன் க்ருஹத்திற்குச் சென்றார். அவ்வந்தணர், தன் நண்பனாகிய ஸ்ரீக்ருஷ்ணனிடத்தினின்று தனம் கிடைக்கப் பெறாமல், “தானும் எனக்குப் பணம் வேண்டும்” என்று யாசிக்காமல் வெட்கமுற்று, மஹானுபாவனான பகவானுடைய காட்சி நேர்ந்தமையால் ஸந்தோஷம் அடைந்து, தன் க்ருஹத்திற்குச் சென்றார். 

அவர் போகும் பொழுது, தனக்குள் சிந்தித்தார்: “ஆ! என்ன ஆச்சர்யம்! ஸ்ரீக்ருஷ்ணன் ப்ராஹ்மண விச்வாஸமுடையவர்களில் சிறந்தவனென்று கேள்விப்பட்டிருந்தேன். ப்ராஹ்மணர்களைத் தெய்வம் போல் கொண்டாடுகையாகிற அவன் தன்மையை இப்பொழுது நேரில் கண்டனுபவித்தேன். ஏனென்றால், மிகவும் தரித்ரனாகிய (ஏழையான) நான், மார்பில் ஸ்ரீமஹாலக்ஷ்மியைத் தரித்துக்கொண்டிருக்கிற ஸ்ரீக்ருஷ்ணனால் அணைக்கப் பெற்றேனல்லவா? தரித்ரனும், பாபிஷ்டனுமாகிய நான் எங்கே? ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வாஸஸ்தானமாகிய ஸ்ரீக்ருஷ்ணன் எங்கே? ஆயினும், ப்ராஹ்மணனென்றன்றோ என்னை ஸ்ரீக்ருஷ்ணன் புஜங்களால் அணைத்துக் கொண்டான். மற்றும், தனது அன்பு நாயகியான ஸ்ரீமஹாலக்ஷ்மி வீற்றிருக்கத் தகுந்த படுக்கையில் அவன் என்னை ப்ராதாவைப்போல் உட்கார வைத்து, சாமரத்தைக் கையில் ஏந்திக் கொண்டிருக்கிற தன் பார்யையுடன் வணக்கமுற்று, எனக்கு விசிறினான். 

தேவர்களுக்கும் தேவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், ப்ராஹ்மணர்களையே தனக்குத் தெய்வமாக உடையவனாகையால், கால்களைப் பிடிப்பது முதலிய உபசாரங்களால் மிகுந்த சுச்ரூஷை (பணிவிடை) செய்து, என்னைத் தேவதையைப் போல் பூஜித்தான். அவனுடைய பாதார விந்தங்களில் செய்யும் பூஜை, ப்ராணிகளுக்குப் பாதாளம், பூமி ஆகிய இவற்றிலுள்ள ஸமஸ்த ஸம்பத்துக்களையும், ஸமஸ்த ஸித்திகளையும், ஸ்வர்க்க, மோக்ஷங்களையும் விளைக்கும். ஆயினும், “பணமில்லாமையால், இப்பொழுது என்னையே நினைத்துக் கொண்டு சாந்தனாயிருக்கிற இவன், பணத்தைப் பெற்றால், மிகவும் மதித்து (கர்வமுற்று) என்னை நினைக்கவே மாட்டான்” என்று நினைத்து, “கருணையுடைய ஸ்ரீக்ருஷ்ணன் எனக்கு அபாரமாகப் பணத்தைக் கொடுக்கவில்லை” என்று அந்தப் பகவானுடைய குணங்களைச் சிந்தித்துக் கொண்டே, தன் க்ருஹத்திற்கு அருகாமையில் சென்றார். 

அந்த க்ருஹமோவென்றால், ஸூர்யன், அக்னி, சந்தரன் இவர்களோடொத்த விமானங்களாலும், பறவைகள் குலாவப் பெற்றவைகளும், ஆம்பல், தாமரை, செங்கழுநீர், நெய்தல் இவை மலர்ந்த ஜலாதாரங்கள் (நீர்நிலைகள்) அமைந்தவைகளும், விசித்ரங்களுமான உபவனங்களாலும், உத்யானவனங்களாலும் நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கிற புருஷர்களாலும், அவ்வாறே நன்றாக அலங்காரங்களை அணிந்து மானமருமென்னோக்கியர்களுமான (மான் போன்று மருண்ட பார்வை கொண்ட) மடந்தையர் மணிகளாலும், நாற்புறத்திலும் சூழப்பட்டிருந்தது. அவ்வந்தணர் அதைக் கண்டு, “இதென்ன? இது யாருடைய இடம்? என்னுடையதே ஆயின், அது எவ்வாறு இத்தகையதாயிற்று?” என்று சிந்தித்துக் கொண்டிருக்கையில், தேவதைகளோடொத்த ஒளியுடைய புருஷர்களும், ஸ்த்ரீகளும், மஹானுபாவராகிய அவரைப் பெரிய ஸங்கீதத்தோடும், வாத்யங்களோடும் எதிர்கொண்டார்கள். 

அவருடைய பார்யை (மனைவி), தன் கணவன் வந்திருப்பதைக் கேட்டு, ப்ரேமத்தினாலும், மிகுந்த ஸந்தோஷத்தினாலும், மிகவும் பரபரப்புற்று, உருவம் கொண்ட ஸ்ரீமஹாலக்ஷ்மி போல் க்ருஹத்தினின்று விரைவுடன் புறப்பட்டு வந்தாள். பதிவ்ரதையாகிய அம்மடந்தையர்மணி, தன் கணவனைக் கண்டு, ப்ரீதியாலும், நெடு நேரம் காணாத ஆவலாலும், கண்களில் நீர் பெருகப் பெற்று,  கண்களை மூடிக்கொண்டு, அவரைப் புத்தியினால் வணங்கி, மனத்தினால் அணைத்துக்கொண்டாள். அவ்வந்தணர், விமானத்திலேறிய தெய்வமடைந்தை போல் திகழ்கின்றவளும், கழுத்தில் பொன் பதக்கங்களை அணிந்த தாதிகளினிடையில் ப்ரகாசிக்கின்றவளுமாகிய தன் பத்னியைக் (மனைவியைக்) கண்டு, மிகவும் வியப்புற்று, அந்தப் பார்யையுடன் (மனைவியுடன்) ரத்னமயமான ஸ்தம்பங்களின் ஸமூஹங்களோடு கூடி, தேவேந்த்ர பவனம் போன்ற தன் க்ருஹத்திற்குள் நுழைந்தார். 

அவர், பால் நுரை போல் மென்மையும், வெண்மையும் அமைந்த படுக்கைகளும், யானைத் தந்தங்களால் இயற்றப்பட்டு ஸ்வர்ண மயமான கருவிகளும் அமைக்கப் பெற்ற மஞ்சங்களும், பொற்பிடியிடப் பெற்ற சாமரங்களும், மெதுவான மெத்தைகள் இடப்பெற்ற ஸ்வர்ணமயமான ஆஸனங்களும், முத்துச் சரங்கள் தொங்க விடப்பெற்று மிகுந்த ஒளியுடையவைகளுமான மேற்கட்டுக்களும், நிர்மலமான ஸ்படிக ரத்னங்களால் எடுக்கப்பட்டவைகளும், விலையுயர்ந்த மரகத ரத்னங்கள் அமைக்கப் பெற்றவைகளுமான சுவறுகளில் திகழ்கின்ற ரத்ன தீபங்களும், மடந்தையர் மணிகளும் நிறைந்திருக்கிற அம்மாளிகையில், ஸமஸ்த ஸம்பத்துக்களும் ஸம்ருத்தமாயிருக்கக் (மிகுதியாய் இருக்கக்) கண்டு, ப்ரமித்து நின்று, “ஒரு காரணமுமில்லாமல் இந்த ஸம்ருத்தி (செல்வச் செழிப்பு) நமக்கு எப்படி நேரிட்டது?” என்று சிந்தித்தார். 

மீளவும், அவர் தனக்குள் “பாக்யமற்றவனும், ஸர்வ காலமும் தரித்ரனுமாய் (ஏழையாய்) இருக்கிற எனக்கு, இந்த ஸம்பத்து நேரிட்டதற்குக் காரணம், உபய விபூதி நாயகனும் (லீலா விபூதி என்கிற இந்த உலகம் மற்றும் நித்ய விபூதி என்கிற ஸ்ரீவைகுண்ட திவ்ய லோகம் – இவ்விரண்டிற்கும் தலைவனும்), யாதவ ச்ரேஷ்டனுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய தர்சனமே ஒழிய, மற்றொன்றும் காரணமாக அமையாது”. அளவற்ற யோகத்தையுடைய பகவான், யாசகனுக்கு அபாரமான செல்வத்தைக் கொடுப்பதாயிருப்பினும், “கொடுக்கிறேன். வாங்கிக்கொள்” என்று சொல்லாமலே, பரோக்ஷத்தில் (நேரில் சொல்லாமலே) கொடுக்கிறான். (ப்ரஹ்மபதம் வரையிலுள்ள ஐச்வர்யத்தைக் கொடுப்பினும், தன் போகத்தைக் காட்டிலும் அது மிகவும் அற்பமாகையால், அதைக் கொடுக்க லஜ்ஜித்து (வெட்கப்பட்டு), தான் நேரில் கொடுக்கிறதில்லை. மேகம், ஒருகால் அமிதமாக மழை பெய்யினும், அதைத் தன் சக்திக்கு அற்பமாகவே நினைத்து, ராத்ரியில் ஜனங்கள் படுத்துறங்கும் பொழுது, கர்ஜனை செய்யாமல், பரோக்ஷத்தில் (பிறர் அறியாமல்) மழை பெய்வது போல, யாதவச்ரேஷ்டனாகிய ஸ்ரீக்ருஷ்ணன், தன் பக்தன் ஸமர்ப்பிப்பது அற்பமாயினும், அதை வெகுவாக அபிமானித்து (நினைத்து), விருப்பமுள்ளவர்களுக்கு அவர்கள் விரும்பும் புருஷார்த்தங்களை எல்லாம் பெய்கின்றான். 

ஸ்ரீக்ருஷ்ணன் தான் கொடுப்பது அளவற்றிருப்பினும், அதை அற்பமாகவே நினைக்கின்றான். தன் பக்தன் ஸமர்ப்பிப்பது அற்பமாயினும், அதை வெகுவாக நினைக்கின்றான். நான் கொண்டு போன ஒரு அவல்பிடியை மஹானுபாவனாகிய ஸ்ரீக்ருஷ்ணன் பெரிய ப்ரீதியுடன் அங்கீகரித்தான் அல்லவா? உபய விபூதி நாதனாகிய அப்பரமனுக்கு அதனால் ஆக வேண்டியது என்ன இருக்கிறது? ஆயினும், அது கிடைக்கப் பெறாதவன் போல் பெரிய ஆவலுடன் அதை மேல் விழுந்து பிடுங்கிக்கொண்டு புசித்தானல்லவா?) ஆகையால், அந்த மஹானுபாவனே எனது ஜன்மங்கள் தோறும் ஹிதம் (நன்மை) உரைக்கும் ஸுஹ்ருத்தும் (நலன் விரும்பியும்), ப்ரீதிக்கிடமான நண்பனும், ஆபத்துக்களில் பாதுகாக்கிற மித்ரனுமாவானாக (நண்பனுமாவானாக). (அந்தப் பகவானோடேயே எனக்கு ஜன்மங்கள் தோறும் எல்லா விதத்திலும் ஸ்னேஹம் விளையுமாக). மற்றும், அவனுக்கே நான் ஜன்மங்கள் தோறும், தாஸனாக இருப்பேனாக. 

அளவற்ற கல்யாண குணங்களுடையவனும், மஹானுபாவனுமாகிய பகவானோடு இடைவிடாமல் ஸஹவாஸம் செய்வேனாயின் (கூடி இருப்பேனாயின்), எனக்கு அவனுடைய பக்தர்களோடு மிகுந்த ஸஹவாஸம் (தொடர்பு) நேருமல்லவா? (ஆகையால், ஜன்மங்கள் தோறும் அவனுடைய ஸஹவாஸத்தையே (கூடி இருப்பதையே) வேண்டுகிறேனன்றி இந்த ஐச்வர்யத்தை விரும்பவில்லை.) நான் பகவானிடத்தில் பக்தியுடையவனாயிருப்பேனாயின், எனக்குப் பகவான் ஐச்வர்யம் கொடுத்தது ஆச்சர்யமே. 

எனக்கு ஐச்வர்யம் கொடுத்தமையால், என்னைப் பக்தனன்று என்றே நினைக்கிறேன். ஏனென்றால், கர்மத்தினால் விளையும் பிறவியற்ற பகவான், பணமுடையவர்களுக்கு மதம் (கர்வம்) உண்டாவதையும், அவர்கள் நரகத்தில் விழுவதையும், அவர்களுக்கு அது அத்தகைய அவிவேகத்தை பகுத்தறியும் புத்தியின்மையை) விளைப்பதையும் ஆலோசித்து, ஸமர்த்தனாகையால், தன் பக்தர்களுக்கு போக்ய (அனுபவிக்கப்படும் பொருட்கள்), போகோகரண (அனுபவிப்பதற்கான கருவிகள்) போகஸ்தானாதி (அனுபவிப்பதற்கான இடம்) ரூபமான ஸம்பத்துக்களையாவது, ராஜ்யத்தையாவது, பிள்ளை, பசு, பணம் முதலிய விபூதிகளையாவது (சொத்துக்களையாவது) கொடுக்கிறதில்லை. ஆகையால், “அவன் எனக்குத் தன்னிடத்தில் மேன்மேலும் பக்தியையே விளைப்பானாக” என்று விவேக புத்தியினால் நிச்சயித்து, பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவராகி, சப்தாதி விஷயங்களை மெல்ல மெல்லத் துறக்க முயன்று, அவற்றில் அவ்வளவு ஆவலின்றி, பார்யையுடன் (மனைவியுடன்) அவற்றை அனுபவித்துக் கொண்டு வந்தார்.

ப்ரபூ! (இணையெதிரில்லாத பகவான், மிகவும் தரித்ரனாகிய (ஏழையான) ப்ராஹ்மணனை எதற்காக இவ்வாறு ஆதரித்தானென்று சங்கிக்க வேண்டாம்!) ஏனென்றால், யஜ்ஞங்களுக்கு நிர்வாஹகனும் (நியமிப்பவனும்), ப்ரஹ்மதேவன் முதலிய தேவர்களுக்கும் தேவனும், தன் பக்தர்களின் வருத்தங்களைப் போக்கும் தன்மையனுமாகிய பகவானுக்கு, ப்ராஹ்மணர்களே ப்ரபுக்களும், தெய்வமும். அவனுக்கு, அவர்களைக் காட்டிலும் வேறொரு தெய்வம் கிடையாது. (ஆகையால், அவன் அவ்வந்தணரை அவ்வாறு ஆதரித்த விஷயத்தைப் பற்றிச் சங்கிக்க வேண்டாம்.) இவ்வாறு பகவானுக்கு மிகுந்த நண்பராகிய அவ்வந்தணர், பிறரால் வெல்ல முடியாதவனாயினும், தன் ப்ருத்யர்களால் (அடியார்களால்) நன்கு வெல்லப்பட்ட பகவானைக் கண்டு, த்யான யோகத்திற்கு உதவி செய்கின்ற பஞ்ச மஹா யஜ்ஞாதிகளான தன் வர்ணாச்ரம தர்மங்களை அனுஷ்டித்து, அந்தப் பகவானுடைய த்யானம் மேன்மேலும் வளரப்பெற்று, அதனால் ஸம்ஸார பந்தத்தினின்று விடுபட்டு, நித்ய முக்தர்களுக்கு வாஸஸ்தானமாகிய வைகுண்டமென்கிற அந்தப் பகவானுடைய லோகத்தை அடைந்தார்.

{எப்பொழுதுமே ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொண்டு பகவானுக்கு நித்ய கைங்கர்யம் செய்யும் அனந்த, கருட, விஷ்வக்ஸேனர் முதலியோர் நித்யர்கள். இவர்களுக்கு இவ்வுலகியல் வாழ்க்கை ஸம்பந்தம் என்றுமே இல்லை. 

இந்த உலகில் அனாதியான புண்ய பாப ரூபமான வினைகளை பல கோடி ஜன்மங்களாக அனுபவித்து, அதன் பிடியிலிருந்து விலக விரும்பி, நல் ஆசார்யன் உபதேசத்தால் பரதத்வம் ஸ்ரீமந்நாராயணனே என்று தெளிந்து; அந்த பரமாத்மாவின் ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ரூப (திருமேனி), விபவ (பெருமை), குண, விபூதி (நியமிக்கும் தன்மை) முதலியவற்றை அறிந்து; ஜீவர்கள் எப்பொழுதும், எந்த ஒரு காரணத்தையும் முன்னிடாமல், இயற்கையாகவே எம்பெருமானுக்கே சேஷபூதர்கள் (அடிமை) என்று தனக்கு பரமாத்மாவினுடனான ஸம்பந்தத்தை உணர்ந்து; “உபநிஷத்துக்களில் மோக்ஷ உபாயமாக விதிக்கப்பட்ட பக்தி யோகத்தை அனுஷ்டிக்க ஞானமும், சக்தியும் அற்றவனும் (அகிஞ்சனனும்), அந்த ச்ரிய:பதியான எம்பெருமானைத் தவிர வேறு கதி (புகல்) அற்றவனுமான (அனன்யகதியுமான) நான், மஹா விச்வாஸத்துடன் (நிச்சயமாக நமக்கு மோட்சம் அளிப்பான் என்கிற உறுதியான நம்பிக்கையுடன்); “இதை நான் செய்கிறேன் அல்லேன்; இந்த செயல் எனது அன்று; இதன் பலனும் எனக்கன்று; எல்லாம் எம்பெருமானுடையதே” என்கிற ஸாத்விக த்யாகத்துடன்; எனது அல்லாததான ஆத்மாவையும், இந்த ஆத்மாவைக் காக்கும் பொறுப்பையும், அதன் பலனான பகவத் கைங்கர்யத்தையும் சேஷியான (ஸ்வாமியான) திவ்ய தம்பதிகளின் திருவடித் தாமரைகளில் ஸமர்ப்பணம் செய்கிறேன்” என்று ஆசார்ய முகமாக அங்கங்களுடன் கூடிய சரணாகதி செய்து, அந்த பகவானின் கருணையால் முன்வினை அனைத்தும் ஒழிந்து, ஸ்ரீவைகுண்ட திவ்ய லோகத்தில் திவ்ய தம்பதிகளுக்கு கைங்கர்யம் செய்யும் பேறு பெற்றவர்கள் முக்தர்கள். இவர்களுக்கு மீண்டும் இந்த உலகில் பிறவி இல்லை.}  

ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டியவற்றை நிறைவேற்றிக் கொடுப்பவர்களில் சிறந்த பகவானுடைய ப்ரஹ்மண்யத்தனத்தை (ப்ரஹ்ம குலத்திற்கு நன்மை செய்யும் தன்மையை) வெளியிடுகிற இந்த உபாக்யானத்தைக் (கதையைக்) கேட்கும் புருஷன், பகவானிடத்தில் பக்தி விளையப்பெற்று, புண்ய பாப கர்மங்களால் விளைகிற ஸம்ஸாரத்தினின்று விடுபடுவான். 

எண்பத்தொன்றாவது அத்தியாயம் முற்றிற்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக