முதல் ஐந்து பாசுரங்களில் திருமணச் சடங்குகளைப் பாடிய ஆண்டாள், இந்த ஆறாவது பாசுரத்தில் முத்துமாலைகள் சரம்சரமாக தொங்கும் பந்தலில், மங்கல நாதங்கள் முழங்க, மதுசூதனன் தன் திருக்கரம் பற்றிய 'பாணிக்ரஹண' அதாவது கைத்தலக் காட்சியைத் தன் தோழியிடம் பரவசத்துடன் விவரிக்கிறாள்.
திருமணத்தின் தொடக்கத்தில் மத்தளம் முதலான மேள தாளங்கள் முழங்குகின்றன. அழகிய வரிகளையுடைய சங்குகள் ஒலிக்கின்றன. இங்கு 'நின்றூத' என்பதில் உள்ள 'நின்று' என்ற சொல், அந்த மங்கல நாதம் திருமணம் முடியும் வரை இடைவிடாமல், நிறுத்தாமல் ஒலித்துக்கொண்டே இருந்ததைக் குறிக்கிறது. அந்த ஓசைகளுக்கிடையே திருமணச் சடங்குகள் நிகழ்வதை ஆண்டாள் நம் கண்முன்னே நிறுத்துகிறார். எங்கே தெரியுமா?
முத்துக்களால் ஆன மாலைகள் சரங்களாகக் கோர்க்கப்பட்டு, வரிசை வரிசையாகத் தொங்கவிடப்பட்ட அந்த அழகிய பந்தலின் கீழ் இந்த வைபவம் நடைபெறுகிறது. யாரோடு தெரியுமா ஆண்டாள் தன் மைத்துனனுடன் என்கிறாள்.
மைத்துனன் - கண்ணனை மணந்த நப்பின்னைப் பிராட்டிக்கு யசோதை அத்தை முறை என்பதால் கண்ணன் அவளுக்கு மைத்துனன் (அத்தை மகன்). நப்பின்னையாகவே தன்னை நினைக்கும் கோதை, அதே உரிமைப் பாராட்டி கண்ணனை 'மைத்துனன்' என்கிறாள்.
நம்பி என்பதற்கு ’ஆண்களில் சிறந்தவன்' என்று பொருள். அகிலத்தை ஆளும் பரம்பொருள், ஒரு சாதாரணப் பட்டரின் மகளான தன்னை மணக்க இறங்கி வந்த அந்த எளிமையைப் போற்றியே 'நம்பி' என்று அழைக்கிறாள்.
மதுசூதனன் - 'மது' என்ற அசுரனை அழித்து, அவன் கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டவன் (ஹயக்ரீவ அவதாரம்). தீமையிடமிருந்து வேதங்களைக் காத்தவன், தன் காதலையும் எவ்வித இடையூறும் இன்றி காப்பான் என்ற நம்பிக்கையில், அவனை 'மதுசூதனன்' எனப் போற்றுகிறாள். மேலும், அவளுக்கு உரியவளைப் பிறர் எவரேனும் உரிமை கொண்டாட வந்தால், அவர்களை அழித்து அவளை மீட்டெடுக்கும் வல்லமை மிக்கவன் அவன் என்பதையும் இது உணர்த்துகிறது.
"அவனே வந்து என்னை கைப்பிடித்தான்" என்கிறாள் ஆண்டாள். தான் அவனுக்கு உரியவள் என்பதால், தன் உடைமையை அடைவதற்கு அவனே தேடி வருவதுதான் முறைமை. அந்தப் பெருமிதத்துடன், கண்ணன் தானாக முன்வந்து தன் கரம் பற்றியதாகக் கனவு காண்கிறாள்.
நிச்சயம் பெரிய கனவு தான். ஆண்டாள் திருவடிகளே சரணம்.
01-04-2026

கருத்துரையிடுக