“அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே!” - கோமான் ஶ்ரீ பாலாஜி


அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ!

   அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ!*

இந்திரன் ஆனையும் தானும் வந்து, இவனோ!

   எம்பெருமான் உன் கோயிலின் வாசல்*

சுந்தரர் நெருக்க, விச்சாதரர் நூக்க,

   இயக்கரும் மயங்கினர், திருவடி தொழுவான்*

அந்தரம் பார் இடம் இல்லை, மற்று இதுவோ!

   அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.     


திருவரங்கத்தில் அரங்கநாதனுக்குத் நந்தவன கைங்கர்யம் செய்து, மலர் மாலைகள் சாற்றி வாழ்ந்த விப்ரநாராயணர் என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வார், சம்சாரத் துயரங்களிலிருந்து தம்மை உய்வித்த பெருமானை எழுப்பும் முகமாக இத்திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களை அருளிச்செய்தார்.


சங்க காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பாடும் மரபு நிலவியது. எனவே,  மன்னனை உறக்கத்திலிருந்து எழும்படி வேண்டிப் பாடுவது ’துயிலெடை  நிலை’ எனப்பட்டது. மன்னர்களை அதிகாலையில் துயில் எழுப்புவதற்காக 'வந்தி' மற்றும் 'வைதாளிகர்' எனப்படும் பாடகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். வந்தி என்பவர் மன்னனின் கல்யாண குணங்களையும் வீரத்தையும் புகழ்ந்து பாடுபவர்; வைதாளிகர் என்பவர் விடியலின் அறிகுறிகளை எடுத்துரைத்துத் துயில் எழுப்புபவர். 


இந்த ‘வந்தி வைதாளிகர்’ பற்றி அறிந்த ஸ்வாமி வேதாந்த தேசிகர் ஒரே இரவில் அருளிச் செய்த பாதுகா சஹஸ்ரம் 9வது பத்ததிக்கு “வைதாளிக பத்ததி” என்று பெயரிட்டு உபநிடதங்களில் உரைப்பது போல ரங்கநாதரை வந்தி வைதாளிகர்கள் எழுப்பி அன்றாட நடப்புகளுக்கு அரங்கன் செல்ல அவனை ஏந்த ‘பாதுகை’ காத்திருப்பதாக அருளியுருப்பார். (நன்றி - sadagopan.org)


பக்தி இயக்கத்தின் பரவலாக்கத்தின் விளைவாக, லௌகீக மன்னர்களுக்குச் செய்யப்பட்ட இத்தகைய உபசாரங்கள் பிரபஞ்சத்தின் ஏக சக்ராதிபதியான எம்பெருமானுக்கு மாற்றி அமைக்கப்பட்டன. இத்தகைய மரபு மாற்றத்தின் மிக உன்னதமான சான்றாகத் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி அமைகிறது. இதனை வடமொழியில் ‘சுப்ரபாதம்’ என்கின்றனர். உலகில் முதல் சுப்ரபாதம் பாடியவர் விசுவாமித்ர முனிவர், இராம லக்குவனர்களை தன் வேள்வி காக்க அழைத்துச் சென்றபோது அடுத்த நாள் விடிகாலையில் “கௌசல்யா சுப்ரஜா ராமா” என்று முதல் சுப்ரபாதத்தை பாடி உலகிற்கு கொடுத்தார். ஏன் ‘காயத்ரி மந்திரத்தை’ உலகிற்கு கொடுத்ததே விசுவாமித்ர முனிவர் தானே.


இங்கே ‘அரங்கனின் அறிதுயில்’ என்பது மானுட உறக்கம் போன்றதன்று; அது பிரபஞ்சத்தைக் காக்கும் 'யோக நித்திரை' ஆகும். பெரியாழ்வார் இதனை ‘கள்ள நித்திரை’ என்று தன் திருமொழியில் அருளியுள்ளார். சைவ சித்தாந்தத்தில் இதனை 'திரோதான சக்தி’ என்பார்கள். இறைவன் நம் உள்ளத்தில் வெளிப்படாமல் மறைந்திருக்கும் நிலையே திரோதானம் எனப்படும். அவன் பள்ளியெழுந்து நமக்குக் காட்சி தருவது என்பது, நம் ஆன்மாக்களை சுத்தம் செய்வதாக அர்த்தம்.


திருப்பள்ளியெழுச்சியின் இந்த ஏழாம் பாசுரம், விடியற்காலையில் திருவரங்கத் திருக்கோயில் வாயிலில் கூடியிருக்கும் முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் இதர தேவலோகவாசிகளின் எல்லையற்ற பக்திப் பெருக்கையும், அதனால் ஏற்படும் நெரிசலையும் மிக நயமாக விவரிக்கிறது.


“அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ” - தேவர்கள் அனைவரும் தங்களின் இருப்பிடமான சொர்க்கத்தை விடுத்து, திருவரங்கக் கோயில் வாசலையே விண்ணுலகமாகக் கருதி வந்து திரண்டுள்ளனர்.


“அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ” - அரிய தவங்களைச் செய்யும் சனகாதி முனிவர்களும், நாற்பத்தொன்பது மருத கணங்களும் கூட, அரங்கனின் அர்ச்சாவதார அழகைக் கண்டு தங்களின் யோக நிலையை மறந்து இங்கு வந்துள்ளனர்.


“இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ” - தேவலோகத்து அரசனான இந்திரன் தன் தலைமைத்துவ கர்வத்தை விடுத்து, தனது வாகனமான ஐராவதத்துடன் எளிய அடியாரைப் போல் வாசலில் காத்திருக்கிறான்.


“எம்பெருமான் உன் கோயிலின் வாசல்” - அகில உலகையும் ஆளும் எம்பெருமான் எளியோர்க்கும் எளியவனாய்க் கோயில் கொண்டுள்ள வாசஸ்தலம் இதுவே.


“சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க” - "சுந்தரம்" என்றால் அழகு. இங்குப் பேரழகுடன் பாடித் துதிக்கும் கந்தர்வர்கள் நெருக்கி நிற்கிறார்கள். வித்தியாதரர்கள் பக்திப் பெருக்கில் தங்களின் உயர்வை மறந்து முன்னே செல்ல ஒருவரையொருவர் முட்டித் தள்ளுகின்றனர்.


“இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்” - யக்ஷர்களும் உமது திவ்ய திருவடிகளைத் தொழுவதற்காக உனது கல்யாணத் திருக்குணங்களை அனுபவிப்பதில் தேவர்கள் தங்களை மறந்த பரவச நிலையை அடைந்துள்ளனர்.


“அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ” - இதனால் விண்ணுலகிலும் (அந்தரம்) மண்ணுலகிலும் (பார்) அணுவளவும் இடமே இல்லாதவாறு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. திருவரங்கத் திருக்கோயிலே பரமபதமாகவும் இவ்வுலகமாகவும் ஒரு புள்ளியில் குவிந்துவிட்ட நிலையை இது காட்டுகிறது.


“அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே” - திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் என் தந்தையே! தயை கூர்ந்து துயில் எழுந்து அருள்வாயாக! உலகினரின் அக இருளைப் போக்கி அருள் புரியுமாறு அரங்கனிடம் ஆழ்வார் வேண்டும் பிராத்தனை.


இப்பாசுரத்தில் உள்ள சில நுணுக்கமான அர்த்தங்களை பார்ப்போம்.


பரத்துவ நிர்ணயம் (எம்பெருமானின் பரம்பொருள் தன்மை) :- இந்திரன், சனகாதி முனிவர்கள், மருத கணங்கள், முனிவர்கள் மற்றும் தேவதைகள் அனைவரும் அரங்கனின் வாயிலில் தங்களின் வாகனங்களுடன் காத்து நிற்பதன் மூலம், ஸ்ரீமன் நாராயணனே வழிபடப்படும் பரம்பொருள் என்பதும், மற்ற தேவர்கள் அவனது ஆணைக்கு உட்பட்ட தொண்டர்கள் அல்லது பணியாட்கள் என்பதும் தெளிவாகிறது.


புற இருளும் அக இருளும்:- சூரியன் உதிப்பதால் உலகியல் ரீதியான புற இருள் மட்டுமே விலகும்; ஆனால் எம்பெருமான் கண் விழித்துப் பார்க்கும் போது மட்டுமே ஆன்மாக்களைப் பிடித்துள்ள சம்சார இருள் என்னும் அக இருள் அழியும் என்று வியாக்யானங்கள் விளக்குகின்றன.


விபீஷணனின் வழிபாடு:- "இலங்கையர்கோன் வழிபாடு செய் கோயில்" என்று ஐந்தாவது பாசுரத்தில் குறிப்பிடப்பட்டதன் தொடர்ச்சியாக, விபீஷணனுக்குக் காட்சி தர எழுந்தருளிய அரங்கன், இங்குத் தம்மைக் காணக் கூடியிருக்கும் விண்ணுலக வாசிகளுக்கும் காட்சி அருள வேண்டும் என்று ஆழ்வார் வேண்டுகிறார்.


இந்த திருப்பள்ளியெழுச்சிக்கும் வெங்கடேச சுப்ரபாதத்திற்கும் உள்ள ஒற்றுமையை சற்று பார்ப்போம். மணவாள மாமுனிகள் தன் சீடர்களுடன் திருமலை யாத்திரை மேற்கொண்டபோது, எம்பெருமான் திருவேங்கடமுடையானுக்கு ஒரு சுப்ரபாதம் அமைய வேண்டும் என்று ஶ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணனுக்கு ஆணையிட்டார். அவரும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பள்ளியெழுச்சிப் பாசுரங்களை அப்படியே மனக்கண்ணில் நிறுத்தி, உதாரணத்திற்கு இந்தப் பாசுரத்தை அப்படியே வடமொழியில், 

“பிரம்மா ஆதய சுரவரா ச மகர்ஷ யஸ்தே

சந்தஸ் சனந்தன முகாஸ் தவ யோகி வர்யா

தாமாந்திகே தவஹி மங்கள வஸ்து ஹஸ்தா

ஸ்ரீ வேங்கடாசல பதே தவ சுப்ரபாதம்” என்று ஸ்லோகமாய் வடித்துள்ளார். ஆழ்வார் தமிழில் உரைத்த இயற்கை வர்ணனைகள், விலங்குகளின் செய்கைகள் மற்றும் பக்தி நெரிசல்கள் ஆகியவற்றை அண்ணன் சமஸ்கிருத யாப்பு வடிவில் கொண்டு வந்துள்ளார்.


இது திருமலையின் அன்றாட வழிபாட்டு முறைகளில் இன்றும் உயிர்ப்போடு கடைப்பிடிக்கப்படுகிறது. அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, தங்க வாயில் முன்பு 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்' பாடப்பட்டுப் பெருமான் துயில் எழுப்பப்படுகிறார்.


மார்கழித் திங்களில் மட்டும் ஒரு வியத்தகு மாற்றம் நிகழ்கிறது. மார்கழி மாதம் முழுவதும் திருமலையில் 'ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்' முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, அதற்குப் பதிலாகத் தமிழில் ஆண்டாள் அருளிய 'திருப்பாவை' மற்றும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் 'திருப்பள்ளியெழுச்சி' ஆகிய தமிழ் திவ்ய பிரபந்தப் பாடல்களே ஓதப்பட்டுப் பெருமான் துயில் எழுப்பப்படுகிறார்.


மணவாள மாமுனிகளால் ஏற்படுத்தப்பட்ட இந்தச் சிறப்பான விதிமுறை, தமிழ் பிரபந்தத்திற்கும் வடமொழி வேதத்திற்கும் சரிநிகர் சமானத்துவம் அளிக்கும் 'உபய வேதாந்த' நெறியின் மிக உன்னதமான சான்றாகும். (நன்றி - Naadopaasana).


தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் ‘அந்தரத்து அமரர்கள்...’ என்ற இந்த ஏழாவது பாசுரம், முப்பத்து முக்கோடி தேவர்களும் தங்கள் தலையாய பெருமைகளை மறந்து அரங்கனின் திருவடியில் காத்து நிற்கும் நிலையை வர்ணித்து, சரணாகதியே ஆன்மாவின் உண்மையான உய்வு என்பதை உலகிற்கு உணர்த்துகிறது.


தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்.


Post a Comment

புதியது பழையவை