(திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் நான்காம் பாசுர அனுபவம்)
சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மாமயில் ஆட அரங்கத்தம்மான் திருவயிற்று
உதரபந்தம், என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே!*
ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில், எம்பெருமானின் அதிலும் குறிப்பாக திருவரங்கனின் திருமேனியழகை அடியவர்கள் அனுபவிக்கும் உன்னதப் பிரபந்தங்களில் தலைசிறந்ததாக விளங்குவது திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான்.
கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் உறையூரில், ஸ்ரீவத்ஸத்தின் (பெருமாளின் திருமார்பில் உள்ள மரு) அம்சமாக அவதரித்த திருப்பாணாழ்வார், உலகின் சாதி மத எல்லைகளைக் கடந்து, லோகசாரங்க முனிகளின் தோள்களில் ஏறி திருவரங்கக் கர்ப்பகிரகத்திற்குள் பிரவேசித்தார். அங்கே பள்ளிகொண்டிருக்கும் அரங்கநாதனின் திருவடியிலிருந்து திருமுடிவரை படிப்படியாக அனுபவித்த பரவசமே இந்த பத்து பாசுரங்களாக வெளிப்பட்டது.
அளவில் சிறியதாய் இருந்தாலும், வேதங்களின் சாரம் முழுவதையும் தன்னுள் அடக்கிய அற்புதப் பிரபந்தமே அமலனாதிபிரான்.
மணவாள மாமுனிகள் தமது உபதேச ரத்தினமாலையில், திருப்பாணாழ்வாரின் அவதாரச் சிறப்பையும், அவரது பாசுரங்களை அடியவர்கள் கற்றுய்ய வேண்டிய அவசியத்தையும் பெருமையுடன் போற்றுகிறார். பரமபதத்தில் விளங்கும் பரத்துவத்தை விட, அடியவர்கள் எளிதில் கண்டு அனுபவிக்கும்படி திருவரங்கத்தில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கும் பெருமானின் சௌலப்யமே இந்தப் பிரபந்தத்தின் உயிர்நாடியாகும்.
அத்தகைய உன்னத அனுபவ ஓட்டத்தில், நான்காம் பாசுரம் அரங்கனின் திருவயிற்றையும், அதனை அலங்கரிக்கும் “உதரபந்தம்” என்னும் திருவாபரணத்தையும் ஆழமாக அனுபவிக்கிறது.
ஒவ்வொரு வார்த்தைக்குமான அர்த்தம்.
சதுரம் - நாற்சதுர வடிவில் வலிமையாக அமைந்த
மா - உயர்ந்த, அகன்ற
மதிள் - பெரும் கோட்டை மதில்களால்
சூழ் - நாற்புறமும் சூழப்பட்ட
இலங்கைக்கு இறைவன் - இலங்கை நகரத்தின் தலைவனான இராவணன்
தலை பத்து உதிர - அவனது பத்து தலைகளும் அறுந்து விழும்படி
ஓட்டி - முதல் நாள் போரில் அவனை ஆயுதமின்றி ஓடச்செய்து
ஓர் வெங்கணை - ஒப்பற்ற ஓர் அஸ்திரத்தை
உய்த்தவன் - பிரயோகித்த ஸ்ரீராமபிரான்
ஓதவண்ணன் - கடல் போன்ற குளிர்ந்த கார்மேக நிறமுடையவன்
மதுர மா வண்டு பாட - மதுர இசையோடு வண்டுகள் ரீங்காரம் செய்ய
மா மயில் ஆட - அழகிய மயில்கள் தோகை விரித்து ஆட
அரங்கத்து அம்மான் - திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருக்கும் என் ஸ்வாமி
திருவயிற்று உதரபந்தம் - அவரது திருவயிற்றை அலங்கரிக்கும் பொன்னான அரைஞாண்
என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே - என் இதயத்தில் புகுந்து ஓயாது உலாவிக்கொண்டிருக்கிறது
“சதுர மாமதிள் சூழ் இலங்கை” என்ற தொடக்கம், ஸ்ரீராமபிரானின் வீரத்தையும் தர்மநெறியையும் ஒன்றாக நினைவூட்டுகிறது. இலங்கை என்பது வெறும் நகரமல்ல. கடல் அரண்களாலும், அசைக்க முடியாத கோட்டை மதில்களாலும் சூழப்பட்ட பேரரசு. அந்த இராவணன், பிரம்மா மற்றும் பரமசிவன் அளித்த வரங்களால் ஆணவம் கொண்டு, யாராலும் வெல்ல முடியாதவன் என்று கருதப்பட்டான்.
ஆனால், ஸ்ரீராமன் அவனை வென்ற விதமே தனிச்சிறப்பு.
பெரியவாச்சான் பிள்ளை தமது வியாக்யானத்தில், இராவணன் ஆயுதமின்றி நின்றபோது இராமன் அவனை உடனே கொல்லாமல், “இன்று போய் நாளை வா” என்று அனுப்பிய நிகழ்வை ராஜதர்மத்தின் உச்சமாக விளக்குகிறார்.
வெற்றிபெறுவது மட்டும் இராமனின் நோக்கம் அல்ல;
ஆணவத்தை ஒழித்து தர்மத்தை நிலைநிறுத்துவதே அவரது திருவுளம்.
பூர்வாச்சார்யர்கள் இந்தப் பாசுரத்தை ஆன்மீக ரீதியாகவும் விளக்குகின்றனர்.
இங்கே “இலங்கை” என்பது மனித உடலைக் குறிக்கிறது.
அதன் “சதுர மதிள்கள்” என்பது அகங்காரம், மமகாரம், காமம், குரோதம் போன்ற ஜீவனைச் சூழ்ந்திருக்கும் தீய குணங்களைச் சுட்டுகின்றன.
அடியவர்களின் உள்ளத்தில் புகுவதற்கு முன், பெருமான் தன் அருளெனும் அம்பினால் இந்த அகந்தைக் கோட்டைகளை உடைத்தெறிகிறான். இராவணனின் பத்துத் தலைகள் விழுந்ததுபோல், ஜீவனின் பாவவாசனைகளும் வேரோடு அறுக்கப்படுகின்றன.
இராவணனை அழித்த அதே பெருமான், இங்கு “ஓதவண்ணன்” என அழைக்கப்படுகிறார். அதாவது கடலைப் போல குளிர்ந்தவன். கார்மேகத்தைப் போல சாந்தமான திருமேனியுடையவன். யுத்தத்தின் உக்கிரம் சற்றும் தெரியாதபடி, அடியவர்களுக்காக அரங்கத்தில் பள்ளிகொண்டு சேவை சாதிக்கிறான்.
இதுவே பரத்துவமும் சௌலப்யமும் ஒருங்கே கலந்த திருவரங்க ரகசியம்.
திருவரங்கப் பொழிலில், "மதுர மா வண்டு பாட மா மயில் ஆட" என்ற வர்ணனை மூலம் சோலைகளின் வளம் விவரிக்கப்படுகிறது. பூர்வாச்சார்யர்கள் இதனைத் தத்துவார்த்தமாக விளக்கும்போது, வண்டுகளின் மதுரமான ரீங்காரம் என்பது திருவரங்கத்தில் ஒலிக்கப்படும் வேத கோஷங்களையும், ஆச்சார்யர்களின் உபதேசங்களையும் குறிக்கிறது. மயில்களின் ஆனந்த நடனம் என்பது, பெருமானின் திவ்ய வடிவைக் கண்டு பரவசமடைந்து ஆனந்தக் கூத்தாடும் பாகவதர்களின் (அடியவர்களின்) பெருக்கைக் குறிக்கிறது. இத்தகைய பக்திப் பெருவெள்ளம் பாயும் திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவயிற்றை ஆழ்வார் அடுத்து அநுபவிக்கிறார்.
திருவரங்கநாதனின் திருவயிற்றில் மூன்று மடிப்புகள் (திரிவலிகள்) காணப்படுகின்றன. இவை, பிரபஞ்சத்தில் உள்ள மூன்று வகையான ஆன்மாக்களான நித்தியர்கள் (பரமபத வாசிகள்), முக்தர்கள் (சம்சார பந்தத்திலிருந்து விடுபட்டவர்கள்), மற்றும் பத்த ஜீவர்கள் (இவ்வுலகில் கட்டுண்டு வாழ்பவர்கள்) ஆகிய அனைவரும் எம்பெருமானின் முழுமையான ஆளுகைக்கு உட்பட்டவர்கள் என்பதை உணர்த்துகின்றன. பிரளய காலத்தில் அகில அண்டங்களையும் தன் வயிற்றுக்குள் வைத்துக் காத்தவன் அவன்.
ஆனால் அதே திருவயிற்றில் இன்னொரு அதிசயமும் உள்ளது. அந்த திருவயிற்றின் கீழே காணப்படும் தழும்பு, கண்ணன் அவதாரத்தில் யசோதை பிராட்டி கட்டிய கயிற்றின் அடையாளமாகும்.
அகிலாண்ட கோடிப் பிரபஞ்சங்களைத் தன் வயிற்றுக்குள் அடக்கிக் காத்த பரம்பொருள், ஒரு இடைக்குலத் தாயின் அன்புக்குக் கட்டுப்பட்டு உரலோடு நின்றான்.
இதுவே ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் வலியுறுத்தும் “சௌலப்யம்”. அடியவர்களின் அன்பிற்குக் கட்டுப்படுவது, அதுவே எம்பெருமானின் உயர்ந்த பெருமை.
பராசர பட்டர் தமது ஸ்ரீரங்கராஜ ஸ்தவத்தில், “உதரபந்தம்” என்பது சாதாரண ஆபரணம் அல்ல என்று விளக்குகிறார். அது, பரம்பொருளின் மேன்மையையும் அடியார்க்கு எளியனாகும் அவனது இயல்பையும் இணைக்கும் ஆன்மீகப் பாலமாக விளங்குகிறது. அடியவர்களின் பக்திக்குக் கட்டுப்படும் ஆச்ரித பாரதந்த்ரியத்தின் சின்னமே இந்த உதரபந்தம்.
ஸ்வாமி வேதாந்த தேசிகர் திருப்பாணாழ்வாரை "நம் பாணநாதன்" என்று தமது அதிகார சங்கிரகத்தில் போற்றிப் புகழ்கிறார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஸ்வாமி இந்த அமலனாதிபிரான் ஒன்றிற்கு மட்டுமே 'முனி வாகன போகம்' என்ற மணிப்பிரவாள வியாக்யானம் அருளியுள்ளார். மேலும், ஸ்வாமி தேசிகர் தனது பகவத் தியான சோபானம் ஐந்தாவது ஸ்லோகத்தில் நம் திருவரங்கனின் உந்தி எத்தனை பிரம்மாக்களை வேண்டுமானாலும் உருவாக்கக் கூடியது. அவ்வளவு சக்தியானது ஆதாரமானது இந்த திருவரங்கனின் உந்தியிலும் உதரபந்தத்திலும் ஆழ்வாரின் மனம் சுழல்கின்றது என்றால் அது மிகையன்று.
மேலும் ஸ்வாமி தேசிகர், ஒரு நுட்பமான ரகசியத்தையும் விளக்குகிறார். அமலனாதிபிரானின் முதல் மூன்று பாசுரங்களின் தொடக்கச் சொற்களான, “அமலன்”, “உவந்த”, “மந்தி” இவற்றின் முதல் எழுத்துக்கள் அ — உ — ம என அமைந்து, பிரணவ மந்திரமான “ஓம்” என்பதைக் குறிப்பதாக அவர் விளக்குகிறார். அதனுடன் “அமலன் உவந்த மந்தி” எனும்போது இராமன் உகந்த அனுமன் என அர்த்தமும் வருவதாகவும் அருளியுள்ளார். இடைப்பகுதி பாசுரங்கள் பாதுகையின் மேன்மையைக் குறிப்பன என்றும் விளக்குகிறார்.
“என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே” - ஸ்வாமி வேதாந்த தேசிகர் தமது முனிவாகன போகத்தில் இந்த சொல்லுக்கு அளித்துள்ள விளக்கம் அற்புதமானது.
உதரபந்தத்தின் அழகு, ஆழ்வாரின் இதயத்தில் அமைதியாக அமரவில்லை.
அது அங்கே அரசன் மாளிகையில் உலாவுவது போல கம்பீரமாய் அசைந்து கொண்டிருக்கிறது. “உலாவுதல்” என்பது நிலையின்மையல்ல. மாறாக, இடைவிடாது பெருகிக்கொண்டே இருக்கும் பகவத் அனுபவத்தின் அலை.
அரங்கனின் உதரபந்த அழகு, ஆழ்வாரின் மனத்தில் ஓயாத தியானமாக மாறிவிட்டது.
மொத்தத்தில் இந்தப் பாசுரம், போர்க்களத்தின் வீரச் சுவையோடு தொடங்கி, திருவரங்கத்தின் சாந்த ரஸத்தில் கரைகிறது. இலங்கையின் கோட்டைகளை இடித்த வீரன், திருவரங்கத்தில் அடியவர்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு பள்ளிகொண்டிருக்கிறான்.
அகில உலகங்களை விழுங்கித் தாங்கிய திருவயிறு, யசோதையின் கயிற்றுத் தழும்பை அணிந்திருக்கிறது. அந்த திருவயிற்றை அலங்கரிக்கும் உதரபந்தம், திருப்பாணாழ்வாரின் உள்ளத்தில் புகுந்து ஓயாது உலாவுகிறது. அதேபோல், இந்தப் பாசுர அனுபவமும் அடியவர்களின் இதயத்தில் நிலைத்து, அகந்தையை அழித்து, பகவத் அனுபவத்தின் பேரின்ப வாழ்வை அருளுகிறது.
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக