அதிகப் பார்வை

“விண் கடந்த சோதி” - கோமான் ஶ்ரீ பாலாஜி


விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்!*
பண் கடந்த தேசம் மேவு பாவநாச நாதனே!*

எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய்*

மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே?      


ஸ்ரீவைணவ நெறியில் பன்னிரு ஆழ்வார்களுள் திருமழிசை ஆழ்வார் தனித்துவமிக்க ஆன்மீக ஞானியாகப் போற்றப்படுகிறார். இவரைப் பூர்வாசாரியர்கள் "உறையில் இடாதவர்" என்று வர்ணிக்கின்றனர். இதற்கு, விவாதக் களத்தில் எம்பெருமானின் பரத்துவத்தை நிலைநாட்டுவதற்காகத் தனது வாதத் திறமை என்னும் வாளை எப்போதும் உறையிலிடாமல் தயாராக வைத்திருப்பவர் என்பது பொருளாகும். சமண, பௌத்த, சைவ சமயச் சித்தாந்தங்களை நேரில் ஆராய்ந்து, இறுதியில் ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்பரம்பொருள் (பரதத்துவம்) என்பதைத் திண்ணமாக உணர்ந்து வைணவ நெறியைத் தழுவியவர். 


எம்பெருமானின் திருவாழியான சுதர்சனத்தின் அம்சமாக அவதரித்த இவர் அருளிய இருபெரும் பிரபந்தங்கள், நான்முகன் திருவந்தாதி மற்றும் திருச்சந்த விருத்தம் ஆகும்.


திருச்சந்த விருத்தம் என்பது தமிழ் மொழியின் மிக உன்னதமான சந்த நயத்தோடு கூடிய 120 பாசுரங்களைக் கொண்ட ஒரு தத்துவப் பெட்டகமாகும். இப்பிரபந்தம் எண்களின் குறியீடுகள் மூலம் எம்பெருமானின் எல்லையற்ற கல்யாண குணங்களையும், அவனது ஐந்து நிலைகளையும் (பர, வியூஹ, விபவ, அந்தர்யாமி, அர்ச்சை) விளக்குகிறது. சம்சாரத் துயரக் கடலில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்கள், எம்பெருமானை மறந்து இதர தேவதைகளை நாடித் துன்புறுவதைக் கண்டு வருந்திய ஆழ்வார், உய்யும் வழியைக் காட்டுவதற்காகவே இந்த நூலை அருளினார். 


இதில் 27-ஆவது பாசுரமான "விண்கடந்த சோதியாய்..." என்னும் திருப்பாடல், எம்பெருமானின் பரத்துவத்தையும் (மேன்மையையும்), அவனது சௌலப்யத்தையும் (எளிமையையும்) ஒருங்கே இணைத்துக் காட்டி, அவனது வியத்தகு செயல்களை யாராலும் அளவிட முடியாது என்று போற்றும் பக்திப் பூர்வமான பாசுரமாகும்.


பூர்வாசாரியரான பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்கியானத்தின் அடிப்படையிலும் உத்தமூர் ஸ்வாமிகளின் பிரபந்த ரக்ஷையின் விளக்கங்களையும் சேர்த்து இப்பாசுரத்தின் ஒவ்வொரு வரியிலும் பொதிந்துள்ள ஆழ்ந்த தத்துவார்த்தக் கருத்துகளை பார்ப்போம்.


“விண்கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய்!” - முதல் அடியில் இடம்பெற்றுள்ள இரு விளிச்சொற்களும் (சோதியாய், மூர்த்தியாய்) எம்பெருமானின் இரு வேறு உன்னத நிலைகளான எங்கும் பரந்திருக்கும் தன்மை அதாவது விபுத்துவத்தையும் சூட்சுமத்துவத்தையும் ஒருசேர விளக்குகின்றன.


“விண் கடந்த சோதியாய்”:- சாதாரண வழக்கில் 'விண்' என்பது ஆகாயத்தைக் குறிக்கும். ஆனால், உபநிடத வியாக்யானங்களின்படியும், நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்களின்படியும் ("சுரரறிவருநிலை விண்"), இங்கு 'விண்' என்பது "மூலப்பிரகிருதி" எனப்படும் பிரபஞ்சத்தின் ஆதிப் பருப்பொருளைக் குறிக்கிறது. இதையே உத்தமூர் ஸ்வாமிகள் கார்கியாஜ்ஞவல்க்ய ஸம்வாதத்தில் “மூலப்பிரகிருதியை ஆகாசமென்றது” உபநிஷத்து என்று விவரித்துத் தருகிறார். ஆக, இங்கு ‘விண்’ என்பது சாதாரண ஆகாயத்தை அல்ல; மூலப்பிரகிருதியையே குறிக்கிறது. பிரகிருதி முழுவதையும் கடந்து, தனக்கு நிகரே இல்லாதபடி சுயம்-பிரகாசமாய் அதாவது சுய ஒளியுடன் திகழும் பரஞ்சோதியே எம்பெருமான். இது எம்பெருமானின் எல்லையற்ற பெருமையையும், அவனது பரத்துவ விபுத்துவத்தையும் பறைசாற்றுகிறது.


“விளங்கு ஞான மூர்த்தியாய்”:- 'ஞான மூர்த்தி' என்பது சுயம்-பிரகாசமான, அறிவே வடிவான ஆத்ம சொரூபத்தைத் தனக்குச் சரீரமாகக் கொண்டவனைக் குறிக்கும். எம்பெருமான் எல்லாவற்றையும் கடந்தவராக இருந்தாலும், அதே நேரத்தில் எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக உறைந்து பிரகாசிக்கும் சூட்சும வடிவினன் என்பதை இது காட்டுகிறது. இங்கு “விளங்கு ஞான” என்பது பத்தர்கள், முக்தர்கள் மற்றும் நித்யர்களான ஜீவர்களெல்லோரையும் குறிக்கும் என்கிறார் உத்தமூர் ஸ்வாமிகள்.


“பண் கடந்த தேசம் மேவு”:- 'பண்' என்பது இசையைக் குறித்தாலும், இங்கு வேதங்களை உள்ளார்ந்த அர்த்தத்தில் குறிக்கிறது. வேதங்கள் ஒலிகளாலும் பண்களாலும் பாடப்படுவதால் அவை பண் என்ற வார்த்தையால் குறிக்கப்பட்டன. "பண்கடந்த தேசம்" என்பது வேதங்களாலும் முழுமையாக விவரிக்கவோ அல்லது எல்லைக்குட்படுத்தவோ முடியாத அப்ராகிருத ஸ்தலமான ஸ்ரீவைகுந்தத்தைக் குறிக்கிறது. அத்தகைய உன்னத தேசத்தை விரும்பித் தனது நித்திய இருப்பிடமாகக் கொண்ட பரமபுருஷனை இது குறிக்கிறது. மற்றொரு கோணத்தில், அடியார்கள் மீதுள்ள பேராசையினால் பரமபதத்தைக் காட்டிலும் பாற்கடலிலும் இச்சம்சார மண்டலத்திலும் வந்து உறையும் அவனது எளிய போக்கிய நிலையையும் இது குறிக்கும்.


“பாவநாச நாதனே”:- இது ஒரு வடமொழித் தொடராகும். அடியார்களின் பிறவிப் பிணிகளையும், தீவினைகளையும் வேரோடு அழிக்கவல்ல ஒப்பற்ற தலைவன் எம்பெருமான் ஒருவனே என்பதை இது உணர்த்துகிறது.


“எண் கடந்த யோகினோடு”:- 'யோகு' (யோகம்) என்ற வடசொல் இங்கு இரு மாபெரும் தத்துவங்களை விளக்குகிறது. முதலாவதாக, இது எம்பெருமானின் எல்லையற்ற 'கல்யாண குணங்களைக்' குறிக்கிறது. இரண்டாவதாக, இது மகாபலியின் செருக்கை அடக்குவதற்காக எம்பெருமான் கையாண்ட ஒப்பற்ற 'உபாயத்தை' அதாவது  தந்திரத்தைக் குறிக்கிறது. எளிமையாக சொல்வதென்றால் வாமனனாக வந்து அசுரர்கள் அனைவரையும் மயக்கி மாயம் புரிந்ததைக் குறிக்கிறது. தனது பரத்துவ மகிமையில் சிறிதும் குறைவின்றி, எண்ணிலடங்கா கல்யாண குணங்களோடு திகழும் நிலையையே ஆழ்வார் ‘எண்கடந்த யோகு’ எனப் போற்றுகிறார்.


“இரந்து சென்று மாணியாய்”:- அகில உலகிற்கும் அதிபதியான எம்பெருமான், இந்திரனுக்குத் தனது உரிமைகளை மீட்டுத் தருவதற்காகவும், மகாபலியின் செருக்கை அடக்குவதற்காகவும் தன்னைச் சுருக்கிக் கொண்டு, அழகிய குள்ள பிரம்மச்சாரியாக (வாமனனாக) வடிவெடுத்து, அவனிடம் கையேந்தி இரந்து நின்றான். உலகையே படைத்துக் காக்கும் பரம்பொருள் ஒரு சாதாரண யாசித்து நிற்கும் பிரம்மச்சாரியாக மாறிச் சென்றது அவனது எல்லையற்ற எளிமையின் (சௌலப்யத்தின்) உச்சக்கட்டமாகும்.


“மண் கடந்த வண்ணம்”:- வாமனனாக வந்த எம்பெருமான், மூன்று அடி மண் யாசித்து, மகாபலி நீர் வார்த்துத் தானம் கொடுத்தவுடன், திரிவிக்கிரமனாக விஸ்வரூபம் எடுத்து மண்ணையும் விண்ணையும் அளந்து கடந்தான். அண்ட சராசரங்களையும் தனது திருவடிகளால் அளந்து கொண்ட அந்த வியத்தகு செயலை இது குறிக்கிறது.


“நின்னை யார் மதிக்க வல்லரே”:- இத்தகைய வியத்தகு செயல்களையும், பரத்துவத்தோடு இணங்கிய சௌலப்யத்தையும் உடைய உனது உண்மையான சொரூபத்தை யாரால் முழுமையாக மதிக்கவோ அல்லது அளவிடவோ முடியும்?. பிரம்மா, பரமசிவன் போன்ற உயர் தேவர்களாலும் கூட உனது இத்தன்மையின் எல்லையைக் கண்டறிய முடியாது என்பது ஆழ்வாரின் அசைக்க முடியாத பக்திப் பூர்வமான துணிபாகும்.


எல்லாவற்றையும் கடந்து நின்று சோதியாக விளங்கும் பரம்பொருள் (பரத்துவம்), அடியவர்களின் பாவங்களை நீக்கும் பொருட்டுத் தானே ஒரு சிறிய வாமனனாக கை நீட்டி இரந்து செல்கிறான் (சௌலப்யம்).


மார்க்கண்டேய மகரிஷியின் வரலாற்றை பூர்வாசாரியர்கள் இங்கு ஒப்புநோக்குகின்றனர். மகாப்பிரளயத்தின் போது அகில உலகங்களையும் விழுங்கி, ஒரு சிறிய ஆலிலையின் மேல் குழந்தையாகத் துயின்ற எம்பெருமானின் வாயினுள் பிரபஞ்சம் முழுவதையும் கண்ட மார்க்கண்டேயரின் வியப்புக்கு நிகரானது ஆழ்வாரின் இந்த அனுபவமாகும். எம்பெருமானின் பெருமைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்பதைத் திருமழிசை ஆழ்வார் தனது யோக நெறியின் மூலமாகவும், கூர்மையான தத்துவப் பார்வையினாலும் இப்பாசுரத்தில் மிக எளிமையாக வடித்துத் தந்துள்ளார்.


திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்த விருத்தம் 27-ஆம் பாசுரம், எம்பெருமானின் எல்லையற்ற மேன்மையையும், அவனது எல்லையற்ற கருணையையும் ஒருசேர விளக்கும் ஒப்பற்ற பக்திப் பாசுரமாகும். வேதங்களாலும் அளவிட முடியாத பரமபத நாதன், சாதாரண ஜீவன்களாகிய நமது பாவங்களை நாசம் செய்வதற்காக எளிய அர்ச்சா வடிவிலும், விபவ அவதாரங்களிலும் வந்து அருள் புரிகிறான் என்பதை இப்பாசுரம் பக்தி பூர்வமாக நிறுவுகிறது. இத்தகைய பெருமை மிக்க எம்பெருமானின் திருவிளையாடல்களையும், குணங்களையும் எவராலும் முழுமையாக மதிப்பிட முடியாது என்ற ஆழ்வாரின் கூற்று, ஜீவாத்மாவின் எல்லையற்ற சரணாகதித் தத்துவத்தை உணர்த்துகிறது.


அளவிட முடியாத பரம்பொருள், அளவில்லா எளிமையுடன் அடியவர்களுக்காகத் தன்னைச் சுருக்கிக் கொள்கிறான் என்பதே இந்தப் பாசுரத்தின் உயிர்நாடி.


திருமழிசையாழ்வார் திருவடிகளே சரணம்.

Post a Comment

புதியது பழையவை