வெள்ளி, 29 அக்டோபர், 2004

முதலில் பெரியாழ்வாரைப் பற்றிப் பார்ப்போம்....

திருவில்லிப்புத்தூர் என்னும் பாண்டிய நாட்டில் முகந்த பட்டர் என்னும் சோழிய பிராமனர் இருந்தார். அவர் பதுமவல்லி என்னும் பெண்ணை மணந்தார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது. அதுவே பின்னாளில் பெரியாழ்வார் என்றும் பட்டர் பிரான் என்றும் போற்றி புகழப்பட்டார். இவரது ஆண்டுக் காலம் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு. இவர் நன்கு படித்து, திருமாலுக்குத் தொண்டு செய்யும் எண்ணம் கொண்டு பலவகைப்பட்ட மலர்ச்செடிகளை வைத்து, அம்மலர்களால் அழகிய மாலைகள் தொடுத்து திருமாலிற்கு சாற்றிப் பெருவசம் அடைந்தார். இவர் கண்ணனது திருஅவதாரச் செயல்களை போற்றி 44 திருமொழிகளாகப் பாடினார். இவற்றின் மொத்த பாசுரங்கள் 461 ஆகும். திருப்பல்லாண்டு பாசுரங்கள் 12 ஆகும் மொத்தம் சேர்த்து 473 பாசுரங்கள். இவருடைய பாசுரங்கள் பெரியாழ்வார் திருமொழி என்று அழைக்கப்பட்டு நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் முதலில் வைக்கப்பட்டுள்ளது.

இவர் பாடிய தலங்கள்

1. திருவரங்கம்

2. திருவெள்ளறை

3. திருப்பேர்நகர்

4.கும்பகோணம்

5. திருக்கண்ணபுரம்

6. திருச்சித்திரக்கூடம்

7. திருமாலிருஞ்சோலை

8. திருக்கோட்டியூர்

9. திருவில்லிப்புத்தூர்

10. திருக்குறுங்குடி

11. திரு வேங்கடம்

12. அயோத்தி

13. சாளக்கிராமம்

14. பத்ரிநாத்

15. தேவப்ரயாகை

16. துவாரகை

17. மதுரா

18. ஆய்ப்பாடி

19. திருப்பாற்கடல்

20. பரமபதம்.

இனி இவரின் பாடல்களை பார்ப்போம்.



பெரியாழ்வார் திருமொழித் தனியன்கள்

ஸ்ரீமந் நாதமுனிகள் அருளிச் செய்தது



குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்

நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக

ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்

த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி



பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை

இருவிகற்ப நேரிசை வெண்பா



மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று, ஒருகால்

சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்

கிழியறுத்தா னென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே, வந்து



பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று

ஈண்டிய சங்க மெடுத்தூத - வேண்டிய

வேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்

பாதங்கள் யாமுடைய பற்று.



பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.





(அரங்கனுக்கு மாமனாரும், அந்தனர்க் குலத்தலைவருமான பெரியாழ்வாரை வணங்குகிறேன். பெரியாழ்வாருக்கு விஷ்ணுசித்தர், விட்டு சித்தர், பட்டர்பிரான் என்ற பெயர்களும் உண்டு. இவரின் மகள்தான் ஆண்டாள்.)



இந்த நாலாயிர பிரபந்தத்தின் உள்ளே புகுமுன் சிறிது இலக்கியத்தையும், பாவகையையும் சிறிது பார்க்கலாம். முதலிலேயே குறிப்பிடுகிறேன், நான் தமிழ் இலக்கனம் படிக்கவில்லை, நாள் கூறும் கருத்துகளில் தவறிருப்பின் தெரியபடுத்துங்கள் திருத்திக்கொள்கிறேன். பெரும்பாலும் தமிழ் பாக்கள் 1. வெண்பா, 2. ஆசிரியப்பா, 3. கலிப்பா, 4. வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். ஒவ்வொரு பாவுக்கும் 1. தாழிசை, 2. துறை, 3. விருத்தம் என்னும் மூவகைச் செய்யுளினங்கள் உண்டு.

தமிழ் இலக்கியத்தில் வெண்பா ஒரு தனித்த சிறப்புக்குரியதாகும். ஆசிரியப்பாவும் வெண்பாவும் முதற்பா என்றே அழைக்கப்படுகின்றன. தொல்காப்பியர், வஞ்சிப்பா ஆசிரிய நடையுடையது என்றும், கலிப்பா வெண்பா நடையுடையது என்றும் குறிப்பிடுவார். ஆசிரியப்பாவில் ஒரு கருத்தை வெளியிடுவது மிக எளிது. புலவர்களின் உள்ளக் கருத்தை அப்படியே உணர்த்தவல்லது ஆசிரியப்பா. ஆழ்வார்கள் பெரும்பாலும் தமது பாடல்களை ஆசிரியப்பாவிலும் வெண்பாவிலுமே அமைத்துள்ளனர். இவை இரண்டைத் தவிர ஆழ்வார்கள் கலிப்பாவில் பல விருத்தங்கள் எழுதியுள்ளனர். வெண்பா எழுதுவது அவ்வளவு எளிதல்ல என்றும், ஆசிரியப்பாவே மிக எளிதானது என்பதால் பெரும்பாலும் ஆசிரியப்பாவிலேயே எழுதியுள்ளனர். இவை இரண்டு மட்டும் போதுமா? ஏதாவது புதுமை வேண்டாமா... வந்துவிட்டது விருத்தம். விருத்தம் என்றால் புதுமை என்று அர்த்தம் கொள்ளலாம். ஒரே வகையான நடையும் ஓசையும் உடைய ஆசிரியப்பாவில் வெவ்வேறு வகையான உணர்ச்சிகளையமைப்பதில் எவ்வளவோ தடைகள் உண்டென்பதை இடைக்காலப் புலவர்கள் (அதாவது ஆழ்வார்கள்) உணர்ந்தார்கள்.

விருத்தம் என்பது வெவ்வேறு வகை நடையும், வகை வகையான ஓசையும் அமைந்து மாறிமாறி வரக்கூடியதாக இருத்தலைக் கண்டு அதைப் போற்றத் தொடங்கினார்கள். ( டாக்டர் மு.வரதராசன்).

ஆசிரிய விருத்தம் (ஆசிரியப்பா - விருத்தம்) கழிநெடிலடியாசிரிய விருத்தம் என்ற முழுமையான பெயருடையது. ஓரடியில் ஆறு சீரும் அதற்கு மேலும் இருப்பது கழிநெடிலடியாசிரியப்பா.

செய்யுளில் வரும் வரிக்கு அடி என்பது பெயர் அந்த அடி குறைந்த அளவு இரண்டு சீர்களை கொண்டு வரும்.இவற்றின் வகையினைப் பார்ப்போம்.... 1. குறளடி - இரண்டு சீர்களை உடையது 2. சிந்தடி - மூன்று சீர்களை உடையது. 3. நேரடி - நான்கு சீர்களைக் கொண்டது. இஃது அளவடி என்றும் கூறப்படும். 4. நெடிலடி - ஐந்து சீர்களைக் கொண்டது. 5. கழி நெடிலடி - ஆறும் ஆறுக்கு தேற்பட்ட சீர்களை உடையது. என்ன குழப்பமாகிவிட்டதா?...சீர் என்பது அசைகளால் ஆவது. அசை என்பது எழுத்துக்களால் ஆவது. இந்த அசை நேரசை, நிரையசை என இருவகைப்படும். ஐயோ போதுமென்கிறீர்களா ஒழுங்காக ஒப்பித்தேனா தெரியவில்லை... இதெல்லாம் எதற்கு என்றால் பாடலின் மேல் இது கலித்தாழிசை என்றும் இது நேரிசை வெண்பா என்றெல்லாம் சின்னச்சின்ன குறிப்புகள் வரும் அதற்காக தான் இதெல்லாம். மறுபடி கூறுகிறேன் நான் தமிழறிஞனல்ல.... தவறிருப்பின் சுட்டுங்கள் திருத்திக்கொள்கிறேன். இனி பாடல்களைப் பார்ப்போம்..... வாழ்த்துக்கள்.


வியாழன், 28 அக்டோபர், 2004

இப்பொழுது நாலாயிர திவ்வியப் பிரபந்தம் தொகுத்த ஸ்ரீமந் நாதமுனிகள் பற்றிய ஒரு சுவையான கதையைப் பற்றிப் பார்ப்போம்.... இந்த திவ்விய பிரபந்தம் முழுவதும் ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்தது என்று அனைவருக்கும் தெரியும். இந்த திவ்விய பிரபந்தம் ஆழ்வார்கள் காலத்திலிருந்து வாய்மொழியாக பல ஊர்களிலும் பல கோயில்களிலும் இசையுடன் பாடப்பட்டிருந்தது. ஒரு தடவை நாதமுனிகள் என்னும் ஆச்சாரியர் கும்பகோனத்திற்கு சென்று பெருமாள் சேவித்துக் கொண்டிருக்கும்பொழுது அங்கு வந்திருந்த வைஷ்ணவர்கள் சிலர் ஆராவமுதே அடியேனுடலம் என்னும் திருவாய்மொழியை நல்ல இசையோடு பாடினராம், மேலும் குழலில் மலியச்சென்ன ஓராயிரத்துளிப்பத்தும்.... என்றவுடன் நாதமுனிகளுக்கு ஓ... உங்களுக்கு ஓராயிரப் பாடலும் தெரியுமோ என்று கேட்டாராம். அதற்கு அவர்கள் எங்களுக்குத் தெரியாது நீங்கள் ஆழ்வார்திருநகரிச் சென்றால் அடையலாம் என்றனராம்...உடனே நாதமுனிகள் திருக்குருகூரெனும் ஆழ்வார்திருநகரிச் சென்று ஸ்ரீமதுரகவிகள் இயற்றிய கண்ணி நுண்சிறுத்தாம்பு என்னும் திவ்வியபிரபந்தத்தை ஆயிரம் தடவைக்கும் மேல் பாராயணம் செய்ய நம்மாழ்வார் அவர் முன் தோன்றி தாம் இயற்றிய திருவாய்மொழியையும் மற்ற ஆழ்வார்களியற்றிய மூவாயிரப் பாடலையும் தந்தருளினாராம். இப்படித்தான் ஸ்ரீமந் நாதமுனிகள் நாலாயிர திவ்விய பிரபந்தப் பாடல்களை பெற்று பின்னர் அவற்றை தொகுத்தாராம், இப்படியாக குருபரம்பரை நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த நாலாயிரதிவ்வியபிரபந்தம் தமிழ்வேதம் என்றும் திராவிட வேதம் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆழ்வாரும் அவர்கள் அருளிச்செய்தவைகள் பற்றியும் பார்ப்போம்....

1. பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி

2. பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி

3. போயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி

4. திருமழிசையாழ்வார் திருச்சந்தவிருத்தம்

நான்முகன் திருவந்தாதி

5. மதுரகவியாழ்வார் கண்ணி நுண்சிறுத்தாம்பு

6. நம்மாழ்வார் திருவிருத்தம்

திருவாசிரியம்

பெரிய திருவந்தாதி

திருவாய்மொழி

7. குலசேராழ்வார் பெருமாள் திருமொழி

8. பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி

9. ஆண்டாள் திருப்பாவை

நாச்சியார் திருமொழி

10. தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை

திருப்பள்ளியெழுச்சி

11. திருப்பாணாழ்வார் அமலணாதிபிரான்

12. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி

திருக்குறுந்தாண்டகம்

திருவெழுகூற்றிருக்கை

சிறிய திருமடல்

பெரிய திருமடல்



இதில் நம்மாழ்வாரியற்றிய திருவிருத்தம் ரிக் வேத சாரமாகவும், திருவாசிரியத்தை யஜூர் வேதச்சாரமாகவும், பெரிய திருவந்தாதியை அதர்வண வேதச்சாரமாகவும், திருவாய்மொழியை சாம வேதச்சாரமாகவும் கூறுவர். திருமங்கையாழ்வாரியற்றிய இரண்டு திருமடலும், எழுகூற்றிருக்கையும் தமிழில் இதுபோல் ஒரு படைப்பே இல்லை எனக்கூறும் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது. இனி வரும் பகுதிகளில் பாடல்களின் மூலமும் முடிந்த அளவுக்கு அவற்றின் அர்த்தமோ அல்லது அந்தப் பாடலின் சிறப்போ உடனிருக்கும். தொடர்ந்து பாருங்கள் வாழ்த்துக்கள்......


புதன், 27 அக்டோபர், 2004

முதலில் இலக்கியத்தைப் பற்றி பார்ப்போம்.....

சங்க நூல் காலத்தையும் நீதிநூல் காலத்தையும் அடுத்துத் தெளிவாகக் காணப்படுவது பக்தி இயக்கக்காலம். கி.பி.ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் சைவ சமய நாயன்மார்களும், வைணவத்தில் ஆழ்வார்களும் தோன்றி மக்களிடையே தம் பக்திப் பாடல்களைப் பாடி சமயத்தை வளர்த்தனர். இந்த ஆழ்வார்களின் காலம்ப் பற்றி பேரா. வையாபுரி பிள்ளை வித்தியாசப்படுவார். நமக்கு அவை தேவையில்லை. இந்த இலக்கியச் சுவை மட்டும் ரசித்தால் போதும். முதல் ஆழ்வார் மூவரில் பூதத்தாழ்வார் ஒரு பாடலில்



அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

இன்புருகு சிந்தை இடுதிரியா - நன் புருகி

ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

ஞானத் தமிழ்புரிந்த நான்.



பாடலை நன்கு கவணியுங்கள் பூதத்தாழ்வார் ஒரு ஞான விளக்கு ஏற்றினாராம் எப்படி, அன்பே தகளியாகவும் , ஆர்வமே நெய்யாகவும், திரியாக தன்னுடைய பக்தியால் உருகும் மனத்தையும் , நாராயணனுக்கு ஞானச்சுடர்விளக்கு ஏற்றினேன் என்கிறார். அதாவது நாம் உடல் வருத்த வேண்டியதில்லை. நல்ல பாடல் மனமுருகும் பாடல் இவை போதும். அந்த ஆண்டவனை அடைய....... அவ்வளவுதானா? இந்தப் பாடலைப் பாருங்கள்



மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி

ஆணிப் பொன்னால்செய்த வண்ணச் சிறுத்தொட்டில்

பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக் குறளனே தாலேலோ

வையம் அளந்தானே தாலேலோ




ஆகா என்னவொரு தாலாட்டுப்பார்த்தீரா.... வையத்தை அளந்தவனுக்கு மாணிக்கம் இடையிடையே வைரம் பதித்து ஆணிப்பொன்னால் செய்யப்பட்ட சிறுத்தொட்டில், அதுவும் யார் தந்தது அந்த நான்முகனே கொடுத்தத் தொட்டிலில் அழாமல் கண்ணுறங்கு மாதவனே.... தாலேலோ..... வையம் அளந்தவனே தாலேலோ.... யார் இந்தப்பாடலை பாடியவர் என்றால் பெரியாழ்வார்.... இவர் மட்டும்தானா தாலாட்டுப் பாடியுள்ளார் என்றால் நம்ம குலசேகராழ்வார்....சேர நாட்டை ஆண்ட மன்னர்.....



மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே

தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய செம்பொன்சேர்

கன்னிநன்மா மதில்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே

என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ....



குலசேகராழ்வார் இராமாயணத்திலே மிகுந்து ஈடுபாடுக் கொண்டவர், ஒரு தடவை இராமகாதைக் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது அதிலும் குறிப்பாக இலக்குமனனால் அங்கஹீனமடைந்த சூர்ப்பனகை, அரக்கன் கரனிடம் சென்று விவரிக்க அந்த அரக்கன் இராம இலக்குவனர்களை அழிக்க பெரும் படையுடன் வந்தான். இராமன் தனிமையில் வில்லை வளைத்து போர்தொடுத்தான் என்று கேட்டுக்கொண்டிருக்கும்பொழுது, இவையெல்லாம் நிகழ்கால நிகழ்ச்சியென்று எண்ணி தம் படைகளை திரட்டிக்கொண்டு வருமாறு படைத்தலைவனிடம் கூறி தாமும் சென்று இராமனுக்கு உதவவேண்டும் என்றுப் புறப்பட்டார், பிறகு பெரியவர்கள் இராமன் கரனை வென்று பர்னசாலையில் சீதையுடன் இருக்கிறார் என்று சொன்னபிறகே தன் சயநிலைக்கு வந்தாராம். அவர் எழுதிய தாலாட்டு மிகப்பிரசித்தம், கௌசலையில் மனிவயிற்றில் உதித்த இராமனே நீ தென்னிலங்கை சென்று தசமுகனை வென்றாய், இங்கே இந்த திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் சௌரிராஜனயை இராமனாக பாவித்து இந்தத்தாலாட்டை எழுதியுள்ளார்.

இவை மடடும்தானா ஒவ்வொரு ஆழ்வாரைப்பற்றியும் கூறிக்கொண்டே இருக்கலாம்... சின்னச்சின்ன குறிப்புகளுடன் இனி இந்தப்பக்கங்களில் பார்க்கலாம்.......

ஓம் நமோ நாராயணாய நம.