வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஆழ்வார் பசி தீர்த்த அமுதன் திருக்கண்ணங்குடி ஸ்ரீதாமோதர நாராயணப் பெருமாள் திருக்கோயில்


கண்ணன் என்னும் கருந்தெய்வத்தின் மீது பக்தி கொண்டு எந்நேரமும் அவன் நினைவில் திளைத்தார் மகரிஷி வசிஷ்டர். கண்ணனும் வெண்ணெயும் இணைபிரியாததாயிற்றே! எனவே, வெண்ணெயைத் திரட்டி, அதைக் கெட்டியாக்கி கண்ணன் உருவம் செய்து பூஜித்து வந்தார். வசிஷ்டரின் பக்தியால் அந்த வெண்ணெய் இளகவில்லை. இவரது பக்தியின் சிறப்பு அறிந்து ஒருநாள் கண்ணனே நேரில் வந்தான்- ஒரு குழந்தையின் வடிவாக. நேரே பூஜை இடத்துக்குச் சென்ற அந்தக் குழந்தை வெண்ணெய்க் கண்ணன் உருவத்தை எடுத்து வாயில் விழுங்கிச் சுவைத்தது. வசிஷ்டருக்கு கோபம் வந்தது. குழந்தையை விரட்டினார். அது பிடிபடவில்லை. குழந்தையின் வேகத்துக்கு வசிஷ்டரால் ஈடுகொடுக்க முடியவில்லை. பிடிபடாது ஓடிய குழந்தை மகிழ மரம் நிறைந்திருந்த வனத்தில் ஓர் ஆசிரமத்துக்குள் சென்றது. அங்கே தவத்தில் இருந்த முனிவர்கள், வந்த குழந்தை யாரெனக் கண்டுகொண்டார்கள். எவனைத் தரிசிப்பதற்காக தவமாய்த் தவமிருந்தார்களோ அவனே நேரில் வந்தால்.. தங்கள் பாசக் கயிற்றால் அவனைக் கட்டிப் போட்டனர். கண்ணன் சொன்னான்... சீக்கிரம் என்ன வேண்டுமோ கேளுங்கள்... வசிஷ்டர் துரத்திக்கொண்டு வருகிறார். அவர்களோ, "கண்ணா உன் தரிசனத்துக்காகத்தானே நாங்கள் தவமிருந்தோம். எங்களுக்குக் காட்சியளித்தது போல் நீ, இங்கே வரும் பக்தர்கள் எல்லோருக்கும் காட்சி தந்து அருள வேண்டும்'. அதே நேரம் வசிஷ்டரும் வந்தார். கண்ணன் காலைப் பிடித்துக் கட்டிக் கொண்டார். இப்படி கண்ணன் தாம்புக் கயிறால் கட்டுண்டதால் தாமோதரன் ஆனான். வசிஷ்டரின் பிடிக்குள் கட்டுண்டு நின்றதால் ஊர் கண்ணன்குடியானது.

கிருஷ்ணாரண்யம் எனப்படும் இத்தலம், பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்களில் ஒன்று. திருக்கண்ணமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி ஆகிய ஐந்து தலங்களையும் பஞ்ச கிருஷ்ணாரண்யத் தலங்கள் என்பர். இதனை பஞ்ச பத்ரா என்றும் புராணம் கூறும். ஆறு, காடு, நகரம், ஆலயம், தீர்த்தம் இவை ஐந்தினாலும் புகழ்பெற்ற இடம் என்பதால் பஞ்ச பத்ரா என்று ஆனது.

திருக்கண்ணங்குடி அருகேயுள்ள மற்ற நான்கு தலங்களையும் சேர்த்து பஞ்சநாராயணத் தலம் என்பர். இங்கே மூலவர் திருநாமம் லோகநாதப்பெருமாள் என்பது. உற்ஸவர்: தாமோதர நாராயணன். ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் வீற்றிருக்கும் அழகே அழகு. தாயார்: லோகநாயகி. அரவிந்தநாயகி என்பது உற்ஸவர் தாயாரின் திருநாமம். மகிழ மரமே தல விருட்சமாக உள்ளது. சிரவண புஷ்கரிணி தீர்த்தம்.

இங்கே பெருமாள், பிருகு முனிவர், பிரம்மா, உபரிசரவஸ், கெüதம ரிஷி, திருமங்கையாழ்வார் ஆகியோருக்கு பிரத்யட்சமாகி அருள் புரிந்துள்ளார். திருமங்கையாழ்வார் 10 பாசுரங்களால் இந்தப் பெருமாளைப் பாடியுள்ளார். மேலும், வைணவ ஆசார்யரான மணவாள மாமுனிகள் மனமுவந்து கொண்டாடிய பெருமாள் இவர்.

திருக்கண்ணன்குடியின் சிறப்பு என்றால், தாயார் சந்நிதியில் உள்ள மூலவரும் உற்ஸவரும் ஒரே ஜாடையில் இருப்பதுவாம். இது வேறு எங்கும் காணமுடியாத அழகு என்பர். மற்ற திவ்ய தேசங்களில் இரு கரம் குவித்த நிலையில் கருடாழ்வார் இருப்பார். ஆனால் இங்கே இரு கைகளையும் கட்டிக் கொண்டு தரிசனம் தருகிறார். இது வைகுண்டத்திலுள்ள கருடனின் காட்சி என்பர்.

இந்தத் தலத்தைப் பற்றிக் கூறும்போது, ஒரு பழமொழியாக ""காயாமகிழ், உறங்காப்புளி, ஊறாக்கிணறு, தோலா வழக்கு- திருக்கண்ணங்குடி'' என்பார்கள். 

உறங்காப்புளி: திருமங்கையாழ்வார் அரங்கன் ஆலயத்தில் மதில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். கட்டடப் பணிக்கு வேண்டிய திரவியம் இல்லை. அப்போது "நாகப்பட்டினத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலை உள்ளது. அதைக் கொண்டுவந்து மதில் கட்டலாம்' என்று இவரது சீடர்கள் கூற, ஆழ்வாரும் நாகை சென்று அச்சிலையைக் கண்டு, அறம் பாடினார். சிலை வடிவம் மட்டும் அவ்வாறே இருக்க, சுற்றி வேயப்பட்ட தங்கம் தானாக வந்து விழுந்ததாம். அதை எடுத்துக்கொண்டு ஸ்ரீரங்கம் செல்லும்போது, இவ்வூரின் வழியாக வந்தவர் கால்கள் நோவு எடுக்க சாலையோர சேறு சகதி நிறைந்த நிலத்தில் அதைப் புதைத்துவிட்டு புளியமரத்தினடியில் படுத்துறங்க எண்ணினார். புளிய மரத்தைப் பார்த்து "நான் அயர்ந்து தூங்கினாலும் நீ தூங்கக் கூடாது' என்று கூறி கண்ணயர்ந்தார். மறுநாள் விடிந்தபொழுது, வயலுக்குச் சொந்தக்காரன் உழத் தொடங்க, புளிய மரம் இலைகளை உதிர்த்து ஆழ்வாரை எழுப்பியதாம். எனவே அவர் மரத்தைப் பார்த்து "உறங்காப்புளி வாழ்க' என்றாராம்.

இப்போதும் சிறு மேடாக உறங்காப்புளி இருந்த இடத்தைக் காணலாம்.

தீரா வழக்கு!: பின்னர் ஆழ்வாருக்கும் நிலத்தின் சொந்தக்காரனுக்கும் நிலப்பிரச்னை எழுந்தது. வாதம் முற்றி, ஊர்ப் பஞ்சாயத்தில் சென்றது. நிலத்துச் சொந்தக்காரன் தனது உரிமைப் பட்டாவை பஞ்சாயத்தாரிடம் காட்டினான். பஞ்சாயத்தார் ஆழ்வாரிடம் கேட்க, "எனக்கு பட்டா ஸ்ரீரங்கத்தில் உள்ளது. இன்று ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இங்கே தங்கியிருந்து நாளை சென்று நானும் உரிமைப் பட்டயத்தைக் கொண்டு வருகிறேன்' என்றார். ஊர்ப் பஞ்சாயத்தும் இதை ஆமோதித்தது. வழக்கும் முடிவுறாமல் போனது. அன்று முதல் இன்றுவரை இந்த ஊரில் எந்த வழக்கு ஏற்பட்டாலும் சரியான தீர்ப்பில்லாமல் தீரா வழக்காகவே (தோலா வழக்காகவே, தீராத வழக்காகவே) இருந்து வருகிறதாம்.

ஊறாக்கிணறு!: ஒரு நாள் தங்கிச் செல்ல அவகாசம் கேட்ட ஆழ்வாருக்கு சிறிது நேரத்தில் தாகம் எடுத்தது. கிணற்றடியில் நீர் இறைத்த பெண்களிடம் தாகம் தணிக்க நீர் கேட்டார். இவர் நிலத்துக்கு வழக்குரைத்தது போல் நம்மிடமும் ஏதாவது செய்தால் என்னாவது என்று எண்ணி தண்ணீர் தரமுடியாது என்றனர். வருந்திய ஆழ்வார், "இந்த ஊரின் கிணறுகளில் நீர் ஊறாமல் போகக் கடவது' என்று சபித்துவிட்டார். அது இன்றும் தொடர்கிறதாம். கிடைக்கும் நீரும் உப்புநீராகத்தான் உள்ளதாம். அதிசயமாக கோயிலுக்குள் திருமஞ்சனத்துக்காக எடுக்கப்படும் மடப்பள்ளி கிணற்றில் மட்டும் சற்று நன்னீர் உள்ளது.

காயா மகிழ்! பசி மயக்கத்தில் மகிழ மரத்தடியில் அமர்ந்தார் ஆழ்வார். அப்போது ஸ்ரீகிருஷ்ணனே தீர்த்தமும் பிரசாதமும் ஏந்தி வந்து இவரைத் தட்டியெழுப்பி, உணவைக் கொடுத்தார். தன்னை மறந்த நிலையில் உணவுண்டு ஏறிட்டுப் பார்த்த ஆழ்வார், வந்தவனைக் காணாது ஆச்சர்யம் அடைந்தார். அந்த மகிழ்வில் மகிழ மரத்தைப் பார்த்து "நீ என்றும் பசுமையுடன் இளமை குன்றாமல் காயாமகிழ மரமாக இருப்பாய்' என்றார்.
இவ்வாறு இந்தத் தலத்துக்கென சில தடங்களைப் பதித்த ஆழ்வார் அன்று இரவோடு இரவாக வயலில் இருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு ஸ்ரீரங்கம் சென்று விட்டார்.

சிறப்பு: 108 வைணவத் திருப்பதிகளில் 18வது தலமும் சோழ நாட்டுத் தலங்கள் நாற்பதில் 26வது தலமுமாக விளங்குகிறது திருக்கண்ணங்குடி.

பிரார்த்தனை: இங்கே பெருமாளுக்கு பால்பாயசம் நைவேத்யம் செய்து, குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்கிறார்கள்.

திருப்பணி: சமீபத்தில் இத்திருக்கோயிலில் பாலாலயம் நடைபெற்றுள்ளது. திருப்பணி வேலைகள் முடிந்து விரைவில் மஹாசம்ப்ரோஷணம் நடக்க வேண்டும் என்பதே பக்தர்களின் விருப்பம்.

அமைவிடம்: நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ள ஆழியூரில் இறங்கி தெற்கே 3 கி.மீ. தொலைவில் உள்ள இத்தலத்தை அடையலாம். ஆழியூருக்கு பேருந்து வசதி நிறைய உண்டு.

கோயில் தரிசன நேரம்: காலை 8-12, மாலை 5-9 வரை.

தொடர்புக்கு: 99431 38591

தீராத விளையாட்டுப் பிள்ளை!


லீலாசுகர் சிறந்த கிருஷ்ண பக்தர். அவர் தன்னுடைய நூலில் கிருஷ்ணனின் லீலைகளை அழகாக விவரிக்கிறார்.

வெண்ணெய் திருடுவதற்காக ஒரு வீட்டுக்குள் நுழைந்தான் கண்ணன். பரணில் ஒளித்து வைத்திருந்த வெண்ணெய்ப் பாத்திரத்தைக் கண்டுபிடித்து வெண்ணெயை எடுப்பதற்காக பாத்திரத்தில் கை நுழைத்தான். 

அப்போது வீட்டுக்கு சொந்தக்காரி வந்துவிட்டாள். அதிர்ச்சியடைந்தவள், ""யாரடா நீ?'' என்று கண்ணனைப் பார்த்துக் கேட்க, அதற்கு கண்ணன் சொன்ன பதில் சிரிப்பை வரவழைக்கும். ""என் கன்றுக்குட்டியைத் தேடி வந்தேன். பாத்திரத்தில் கைவிட்டுப் பார்த்தேன். அதில் கன்றுக்குட்டி இல்லை. நான் போய் வருகிறேன்''.

யசோதையின் மடியில் கண்ணன், பால் குடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்தான். ""கண்ணா நீ பால்குடித்தால்தான் தலை மயிர் நன்றாக வளரும்'' என்றாள் யசோதை. அதன்பின் கொஞ்சம் பாலைக் குடித்த கண்ணன்,உடனே தன் தலையைத் தடவிப்பார்த்துவிட்டு, "அப்படியொன்றும் முளைக்கவில்லையே' என்றதும் யசோதை சிரித்துவிட்டாள்.

யசோதையின் வீட்டில், தரையில் ரத்தினங்களும் மணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. அதனால் தரை பளபளவென்று மின்னியது. தரையில் தவழ்ந்து செல்கிறான் குழந்தை கண்னன். அவனுடைய தாமரை போன்ற பிஞ்சு முகம் கண்ணாடி போன்ற அந்தத் தரையில் பிரதிபலித்தது. அங்கே இன்னொரு குழந்தை இருக்கிறது என்று நினைத்தான் கண்ணன். அந்த இன்னொரு குழந்தையை கைகளால் பிடிக்க முயற்சி செய்தான். பிம்பத்தை எப்படிப் பிடிக்க முடியும்? அந்தக் குழந்தை (பிம்பம்) கைக்கு வராததால், உரக்க அழுதான் கண்ணன்.

எல்லாம் கண்ணனே! - முருகசரணன்


ஸ்ரீராமானுஜர் காலையில் கீதை வகுப்பும், மாலையில் அருளிச் செயல் (திவ்யப் பிரபந்தம்) வகுப்பும் நடத்துவது வழக்கம். காலையும் மாலையும் குரு  சீடர்களிடையே வினாக்கள்-விடைகள்- கலந்து வருவதுண்டு.
காலைக் கதிரவன் போல் வெப்பமுடையது சமஸ்கிருதம். அதனால் காலையில் கீதை. மாலை மதியம்போல் குளிர்ந்தது தமிழ். அதனால் மாலையில் அருளிச் செயல் வகுப்பு எனச் சான்றோர் கூறுவர்.

ஒருநாள் காலை... கீதை வகுப்பு நடந்தது. ""பஹூனாம் ஜன்மனாம் அந்தே' என்று தொடங்கும் சுலோகத்தில் "வாசுதேவ: ஸர்வம்' என்ற இடம் வந்தது. ""பல பிறவிகளின் முடிவில் பற்றற்ற ஞானி "எல்லாம் வாசுதேவனே' என்று உணர்ந்து பரமபதம் அடைகிறான்; அவனுக்கு மீண்டும் பிறப்பில்லை'' என விளக்கம் சொல்லப்பட்டது.

சீடர் குழாமில் ஒருவர், ஸ்ரீராமானுஜரைப் பார்த்து "ஸ்வாமி... எல்லாம் வாசுதேவனே என்கிறீர்கள்... எல்லாம் என்றால் என்ன? எந்த எல்லாம்?' என்று சந்தேகம் கேட்டார். உடனே ஸ்ரீராமானுஜர்,

""உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம்.
கண்ணன் எம்பெருமான்......'' என்று தொடங்கும் திருவாய்மொழியை எடுத்துக்காட்டி, ""உண்ணும் சோறு (உடம்பைக் காக்கும் தாரகம்), பருகுநீர் (உயிரைக் காக்கும் தண்ணீர்), தின்னும் வெற்றிலை (உவகைக்காகப் போடப்படும் வெற்றிலைப் பாக்கு) ஆக தாரக போஷக போக்யமெல்லாம் கண்ணனே வாசுதேவனே'' என்று தெளிவாக விளக்கம் கூறினார்.

கீதையில் வந்த ஐயம் திருவாய்மொழி மூலம் நீங்கியது. அனைவரும் தெளிவும் அமைதியும் பெற்றனர். தம் வாழ்வின் நிறைவில் சீடர்களிடம் ராமானுஜர், "தினமும் அருளிச் செயலே ஓதி உய்வீர்' என்றும் கூறியுள்ளார்.
ஸ்ரீராமானுஜர் அரங்கத்தில் ஸமஸ்கிருதம் பிரசங்கம், மந்திர உபதேசம் செய்திருக்கலாம். ஆனால் அவர் அந்தரங்கத்தில் தமிழே ஆட்சி செலுத்தியது என்பதை கற்றோரே அறிவர்.

உலகளந்த உத்தமன்: காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் திருக்கோயில்


மகாபலி சக்ரவர்த்தி. அசுர குலத்தில் உதித்தவன்தான் இருந்தாலும் நல்லாட்சியால் மக்களின் மனத்தில் இடம்பிடித்தான். மகாவிஷ்ணுவின் பக்தன் பிரகலாதனின் பேரன் ஆயிற்றே! மகிழ்ச்சிப் பெருக்கில் மக்கள் திளைத்திருக்க, அவன் பெருமையோ மூவுலகும் பரவியிருந்தது. மேன்மேலும் தான தர்மங்கள் செய்தான். தானம் அளிக்க அளிக்க... கொடுப்பவன் நானே என்ற அகங்காரமும் அவன் உள்ளத்தே குடிகொண்டது. தர்மாத்மாவான மகாபலியை ஆட்கொள்ளத் திருவுள்ளம் கொண்டார் மகாவிஷ்ணு.

அதே நேரம்... தன் அசுர குல வழக்கப்படி, தேவேந்திரனை எதிர்கொண்டான் பலி. ஆனால் தோற்றான். அதனால் தன் வலிமையைப் பெருக்கிக் கொள்ள குலகுரு சுக்ராச்சாரியார் மூலம் விக்ரஜித் எனும் வேள்வி செய்தான். அதில் வந்த தங்க ரதத்தில் ஏறி தேவலோகம் சென்று போரிட்டான். தேவலோகமான அமராவதிப் பட்டணம் பலியின் வசமானது. கவலை கொண்ட தேவேந்திரன், பிரம்மாவிடம் சென்றான். அவரோ, மகாபலி பிருகு வம்ச ரிஷி பார்கவன் துணையுடன் இதைச் சாதித்துள்ளான். அவனுக்கு தேவலோகத்தைக் கட்டியாள விருப்பம். அவனை இப்போது ஒன்றும் செய்ய முடியாது. தன்னையே அவன் அழித்துக் கொள்வான். நீ மகாவிஷ்ணுவை சரணடை என்றார். இந்திரனும் தன் கவலையை விஷ்ணுவிடத்தே வைத்தான். பெருமான் அவனுக்கு அபயம் சொன்னார்.

இங்கே பூலோகத்தில் தன் புத்திரர்களான தேவர்களின் சிரமம் கண்டு வருந்திய அதிதி, தன் கணவரான காச்யபரிடம் வேண்டினாள். அவர் யோசனைப் படி, அதிதி மகாவிஷ்ணுவை எண்ணி தவம் செய்தாள். அவள் முன் தோன்றிய விஷ்ணு, மகாபலியை ஒன்றும் செய்ய முடியாது. அந்தணர் துணையுடன் ஆட்சி நடத்தும் அவனை, வேள்வியின் பயனாய் பலம் பெற்றுள்ள அவனைப் போரில் வெல்ல முடியாது. ஆனாலும் உன் தவத்துக்கேற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். நாமே உனக்கு மகவாகப் பிறப்போம் என்றார் மகாவிஷ்ணு. அதன்படி, புரட்டாசி திருவோணத்தில் காச்யபருக்கும் அதிதிக்கும் புத்திரராகத் தோன்றினார் விஷ்ணு. குள்ள உருவினனாய் அந்தணக் குழந்தையாய் வடிவெடுத்த விஷ்ணுவுக்கு, உரிய திருநாமம் சூட்டப்பட்டது. வாமன வடிவெடுத்து வந்த பிரானுக்கு உரிய காலத்தே உபநயனமும் ஆனது. வேத மந்திரங்கள் கற்று முகத்திலே ஒளி மின்ன வலம் வந்தார் வாமனர்.

மகாபலிச் சக்ரவர்த்தி தன் புகழ் மேலும் கூட, வேள்விச் சாலை அமைத்து, பெரியதொரு யாகம் வளர்த்தான். அந்த வேள்விச் சாலைக்கு வந்தார் வாமனர். அவர் உருவம் கண்டு உகந்த மகாபலி, அவர் திருப்பாதம் கழுவி அந்நீரைத் தெளித்துக் கொண்டு பாதம் பணிந்தான். யாகம் சிறப்புற நடந்தது.

யாகத்தின் போது, தானம் செய்ய வேண்டும். மகாபலி எல்லோருக்கும் தானமளித்தான். வாமனரிடமும் தானம் அளிக்க முன்வந்தபோது, வாமனரோ, அதை மறுத்தார். ஆயினும் பலமாக வற்புறுத்தவே, தன் அடியால் அளக்கும் வண்ணம் மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார். மகாபலிக்கோ சிரிப்பும் கூடவே சிந்தனையும் எழுந்தது. மிகப் பெரிய பூஞ்சோலையையும் தோட்டத்தையும் தருகிறேன்.. வெறும் மூன்றடி எதற்கு என்று கேட்க, வாமனரோ தன் கோரிக்கையில் பிடிவாதம் காட்டினார்.

அப்போதுதான் சுக்ராச்சாரியார் மகாபலியை அழைத்து, வந்தவர் மகாவிஷ்ணுவே என்றும், இந்த தானத்தை நீ தவிர்த்து விடுவாய் என்றும் கூறினார். ஆனால் பலியோ, தன் குலம் உயர்ந்தது என்றும், குலதர்மப்படி கொடுத்த வாக்கை மீறுதல் தகாது என்றும் கூறி, தானம் அளிக்கத் தயாரானான். கெண்டி நீர் எடுத்து தாரை வார்க்கப் போக, சுக்ராச்சாரியார் அதில் இருந்து நீர் விழாவண்ணம் துவாரத்தை ஒரு வண்டின் உருவெடுத்து அடைத்தார்.

வாமனரோ, தர்ப்பையால் அந்த துவாரத்தைக் குத்த, சுக்ராச்சார்யரின் ஒரு கண் பறிபோனது. பின்னர் தானம் பெற்ற வாமனர், விடுவிடுவென வளர்ந்து, விஸ்வரூபம் காட்டி, தன் ஓரடியால் மண்ணுலகை அளந்து, மற்றோரடியால் தேவலோகம் அளந்து, மூன்றாவது அடிக்கு இடம் கேட்டார். மகாபலி தன் சிரம் குனிந்தான். கைகூப்பி நின்று, தலை கனம் தாழ்ந்து அதில் மூன்றாம் அடியை வைத்து அளக்கச் சொன்னான். வாமனர் அவனுக்கு அருள் புரிந்து, பக்தனாயிருந்தாலும், செல்வச் செருக்கு வந்ததால் தனை மறந்த செயல் கூறி, பாதாள உலகை அவனுக்குப் பரிசளித்தார்.

பாதாள உலகு சென்ற மகாபலிக்கு பெருமான் நினைவு ஆக்கிரமித்தது. தான் சிரம் குனிந்து பாதம் கண்டதால், பெருமாளின் விஸ்வரூப தரிசனம் காணக் கொடுத்து வைக்கவில்லையே என்ற வருத்தம் மிகக் கூடியது.
விஷ்ணுவிடம் கோரினான் மகாபலி. அவன் விருப்பத்துக்கு மனமிரங்கி, பாதாள உலகத்தில் இருந்து மகாபலி தன் சிரசை வெளிக்காட்ட, விஸ்வரூப தரிசனத்தை அவனுக்கு அளித்தார் மகாவிஷ்ணு.

இத்தகைய புராணக் கதையைக் கொண்டு திகழ்கிறது காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் கோயில்.
சுமார் 60 ஆயிரம் சதுர அடி பரப்பில் மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம். கோயில் இரண்டு பிராகாரங்களை உடையது. மூலவர் உலகளந்த பெருமாள். நின்ற திருக்கோலம், விமானம் ஸாரஸ்ரீகர விமானம், தீர்த்தம் நாக தீர்த்தம். பெருமாள் இங்கே நின்ற திருக்கோலத்தில் 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட நிலையில் தனது இடது காலை விண்ணோக்கித் தூக்கியும், இடது கரத்தின் இரண்டு விரல்களையும் வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்திக் காட்டியபடி காட்சி அளிக்கிறார். தாயார் ஸ்ரீ ஆரணவல்லித் தாயாராக அருள் பாலிக்கிறார்.

108 வைணவத் திருப்பதிகளுள் இது திருகாரகம் எனப்படுகிறது. இந்தக் கோயிலின் உள்ளேயே திருஊரகம், திருநீரகம், திருக்கார்வானம் என மூன்று திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த மூன்று திவ்ய தேசங்களும் வேறு வேறு இடத்தில் இருந்ததாகவும், பின்னாளில் இந்தக் கோயிலுக்குள்ளேயே கொண்டு வரப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

இந்த ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் ஆகிய நான்கு திவ்ய தேசப் பெருமாள்களையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் ஒரேயொரு பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார்.

கார்ஹ மகரிஷி பெருமாளைக் குறித்து தவம் இருந்து அளவற்ற ஞானம் பெற்றதால், அவர் பெயராலேயே காரகம் என வழங்கப்படுகிறது. இந்தப் பெருமாளை வழிபட்டால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
இந்த உலகம் தனக்குரியதே என நினைத்து ஆணவம் கொள்வதால் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து, ஆணவம் அடக்கி, பெருமாள் தன் அருளை முழுமையாக வழங்கி மோட்ச வழி காட்டுகிறார். ஆணவம் நீங்கி, உத்தமனாக வாழ திருவோணத் திருநாளில் இந்த உலகளந்த உத்தமனை வணங்கி உய்வு பெறலாம்.

கோயில் திறக்கும் நேரம்: காலை 7-12 வரை, மாலை 4-8 வரை.

இருப்பிடம்: காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கு அருகில், காமாட்சி அம்மன் ஆலயம் செல்லும் வழியில்.

பகடை விளையாடிய பாலாஜி


ஹாதிராம் பாவாஜி என்ற வடநாட்டுத்துறவி திருப்பதி மலையில் தங்கியிருந்தார். திருப்பதி சீனிவாசப் பெருமாள் மீது பக்தி கொண்டு, கோவிந்தநாமஜெபத்தில் ஈடுபட்டார். அவருடைய பக்தியை மெச்சிய பெருமாள், நேரில் சந்திக்க எண்ணம் கொண்டார்.

ஒருமுறை அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடை சாத்தப்பட்டது. கோயிலில் இருந்து கிளம்பிய பெருமாள், காட்டுப்பகுதியில் உள்ள பாவாஜியின் குடிலை அடைந்தார்.

பெருமாளை நேரில் பார்த்ததும் பாவாஜி சந்தோஷத்தில் "வாங்க பாலாஜி' என்று வரவேற்றார். அவரை ஆசனத்தில் அமரச் செய்து பழவகை கொடுத்து உபசரித்தார்.

பெருமாள் அவரிடம், ""எப்போதும் கூட்டம், பூஜை, புனஸ்காரம் என்றே என் அன்றாடப்பொழுது போகிறது. விளையாட்டாகப் பொழுதைப் போக்க எண்ணியே உன்னை நாடி வந்திருக்கிறேன். பகடை விளையாடுவோமா?'' என்று அழைத்தார்.

பாவாஜிக்கு பேச்சே எழவில்லை. ஒரு கணம் திக்குமுக்காடிப் போனார். இறைவனே என்னுடன் விளையாடப் போகிறார் என்றால், அதை விட வேறென்ன கொடுப்பினை வேண்டும்! பகடைகளை எடுத்து வந்தார். சிரித்துப் பேசியபடியே அவர்கள் விளையாடினர். பொழுது போனதே தெரியவில்லை.

பொழுது புலரும் வேளை வந்தது. சுப்ரபாத நேரமானதால் சீனிவாசப் பெருமாளைப் பள்ளியெழுப்ப அர்ச்சகர்கள் கோயிலில் ஆயத்தமாயினர். ""ஆகா! நேரமாகிவிட்டது. இப்போது கிளம்புகிறேன், இரவில் வருவேன், மீண்டும் விளையாடலாம்,'' என்று சொல்லிவிட்டு பாலாஜி மறைந்து விட்டார்.

பகலில் கோயிலில் இருப்பதும், இரவானால் பாவாஜியைத் தேடிச் செல்வதும் பாலாஜியின் அன்றாடக் கடமையானது.

பாவாஜியின் பக்தியை உலகறியச் செய்ய பெருமாள் திருவுள்ளம் கொண்டார். அவருக்கு தெரியாமல் தன்னுடைய ரத்தின ஹாரத்தை(மாலை) குடிலில் வைத்துவிட்டுச் சென்றார்.

சுப்ரபாதபூஜைக்கு வந்த அர்ச்சகர்கள் பெருமாளின் கழுத்தில் ஆபரணம் இல்லாதது கண்டு அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு செய்தி சென்றது. திருடனைக் கண்டுபிடிக்க உத்தரவிட்டார். ரத்தினஹாரத்தைக் குடிலில் கண்ட பாவாஜி, அதனைக் கோயிலில் ஒப்படைப்பதற்காக புறப்பட்டார்.
ஆபரணத்துடன் வந்த பாவாஜியைக் கண்ட காவலர்கள் மன்னரிடம் அழைத்துச் சென்றனர். பாவாஜி, தினமும் இரவு பெருமாள் தன்னைத் தேடிவரும் விஷயத்தைக் கூறினார். மன்னருக்கு பாவாஜி மீது நம்பிக்கை வரவில்லை. அவரிடம், "" இப்போது சோதனை ஒன்றை வைக்கிறேன். ஒரு கட்டு கரும்பு உம்மிடம் தருவேன். இன்றிரவுக்குள் பெருமாள் அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, நாங்கள் அனைவரும் உமது பேச்சை நம்புவோம்,'' என்றார்.

அதன்படி ஒரு அறையில் ஒரு கட்டு கரும்பு வைக்கப்பட்டு பாவாஜியும் சிறை வைக்கப்பட்டார்.
பெருமாளை தியானித்தபடியே ஒரு மூலையில் பாவாஜி அமர்ந்து விட்டார். சீனிவாசப்பெருமாளின் அருளால் யானை ஒன்று அங்கு வந்து கரும்புகளைத் தின்று முடித்தது. காவலர்கள் அதிசயித்து மன்னரிடம் தெரிவித்தனர். பாவாஜியின் பேச்சில் உண்மை இருப்பதை உணர்ந்த மன்னர் விடுதலை செய்தார். இதன்பின் நீண்ட காலம் புகழுடன் வாழ்ந்த பாவாஜி, சீனிவாசப் பெருமாளின் திருவடியில் கலந்தார்.