சனி, 27 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 23


முதல் ஸ்கந்தம் – பதினெட்டாம் அத்தியாயம்

முனிகுமாரன் இட்ட சாபம்

பௌராணிகர் கூறுகிறார்: “கங்கைக் கரையில் பரீக்ஷித் தன் உடலை விடுத்தான். அந்தக் கதை கேட்கக் கேட்க மனதை உருக்க வல்லது. பாவத்தையெல்லாம் போக்கி, பக்தி பேரின்பத்தைக் கொடுக்கக் கூடியது. பாரம்பரியப் பெருமையும், அறிவுக்கூர்மையும் மிக்க பரீக்ஷித், கலியை அடக்கினானேயன்றிக் கொன்றொழித்து விடவில்லை. ஏனெனில், கலிக்கென்று சில பெருமைகளும் உள்ளன.

நாநுத்வேஷ்டி கலிம் ஸம்ராட்
ஸாரங்க இவ ஸாரபுக்
குசலான்யாசு ஸித்யந்தி
நேதராணி க்ருதாணி யத்

ஒருவன் எந்த ஒரு விஷயத்திலும் இருக்கக் கூடிய நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தீமைகளைத் தள்ளி விட வேண்டும். கலியுகத்திலும் சில நன்மைகள் உண்டு. கிருத யுகம், த்ரேதா யுகம் முதலானவற்றில் கடினமான முயற்சிகளால்தான் புண்ணியத்தை சம்பாதிக்க வேண்டும். ஆனால், கலியுகத்திலோ, நம் நல்ல எண்ணங்களினாலேயே புண்ணியத்தை சம்பாதித்து விடலாம். மேலும், க்ருத யுகத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் செய்து செய்து சாதிக்க வேண்டியதை, கலியுகத்தில் குறுகிய காலத்திலேயே சாதித்து விடலாம். ஆகையால்தான், கலியைக் கொன்று விடாமலும், அதே சமயம் அவனைப் பரவச் செய்யாமலும் தடுத்தான் மன்னன் பரீக்ஷித். கலி காலம், கோழைகளிடத்தில்தான் தன் சூரத்தனத்தைக் காட்டும். ஆனால், எவன் ஒருவன் பக்தியோடு பகவானிடத்தில் மனதை வைத்து இருக்கிறானோ, அவனுக்கு கலி ஒரு துன்பமும் கொடுக்காது. கலி நம்மை துன்பப்படுத்தாமல் இருக்க வேண்டுமானால், பகவானுடைய கதைகளை விடாமல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அவனுடைய குணங்களை அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ரிஷிகளெல்லாம், பௌராணிகரிடத்தே கேட்டார்கள்: “நாங்கள் செய்யும் யாக, யக்ஞங்கள் பலத்தை கொடுக்குமோ, அல்லவோ யாம் அறியோம்! ஆனால், உம்மோடு எமக்கு ஏற்பட்ட சேர்த்தி, தாங்கள் சொல்லக் கூடிய பகவத் கதைகள் ஆகியவற்றால் எமது பாவங்கள் தொலைந்து, பகவானின் பாதக் கமலங்கள் கிடைக்கக் கூடியது உறுதி. பரீக்ஷித், பரம பவித்ரமான பாகவத புராணத்தை ஆர்வத்துடன் கேட்டானே! மோட்சத்தையே கொடுக்க வல்லதும், கண்ணனுடைய வடிவமாகவே இருப்பதும், இவ்வுலகத்திலும் கேட்க கேட்க பக்தி பேரின்பம் கொடுக்கக் கூடியதுமான அந்த பாகவத புராணத்தைத் தாங்கள் எமக்கு உரைக்க வேண்டும் என்று கோரினர்.

பௌராணிகர் கூறினார்: “தங்களைப் போன்ற சான்றோர்கள் முன்னே உயர்ந்தவன் அல்லேன் அடியேன்! ஆனால், உங்களுடைய சேர்க்கையாலும், நீங்கள் அபிமானித்தபடியாலும் நான் உயர்த்தப்பட்டேன். எம்பெருமான் அனைத்து நற்குணங்களுக்கும் கொள்கலனாய், எல்லையற்றவனாக இருக்கிறபடியால் ‘பகவான் என்று கொண்டாடப்படுகிறான். (வைகுண்டமாகிய முக்தியைக் கொடுக்கக் கூடிய முகுந்தனே, பகவான்! நாம் நா படைத்த பயனுக்காக அவன் புகழ் பாட வேண்டும். எளியவர்கள் பாடினால் கூட, அவர்களது அருகிலே இருந்து, அவர்களுடைய தோத்திரத்தை எம்பெருமான் உகந்து ஏற்றுக் கொள்கிறான். அதே சமயம் ப்ரஹ்மா போன்ற உயர்ந்தவர்கள் புகழ்ந்தாலும், அவர்கள் அளவுக்கு உயர்ந்து நின்று தோத்திரத்தை ஏற்றுக் கொள்கிறான். நம்மாழ்வார் ஒரு பாடலில் –

செலக்காண்கிற்பார் காணுமளவும்
செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி!

என்று போற்றுகிறார்.)

அடியவர்கள் தமது உள்ளத்திலும், நாக்கிலும் எத்துணை வலிமை உண்டோ, அந்த அளவுக்கு பெருமானைப் பாடுகிறார்கள். அவனும் அந்த அளவுக்கு நின்று அவற்றை மகிழ்ந்து ஏற்றுக் கொள்கிறான். ஆனால், யாராலும் அவனை எட்டிப் பிடித்து விட முடியாது. சரி! இனி பரீக்ஷித்தின் கதையைக் கூறுகிறேன். கேளுங்கள். “அவன் அரசாண்டு வந்தபோது, ஒருநாள் தன் வில்லை எடுத்துக் கொண்டு, வேட்டைக்காக காட்டுக்குச் சென்றான். வெகு தூரம் அலைந்த படியால் பசியாலும், தாகத்தாலும் துவண்டான். அப்போது ச்ருங்கி என்னும் முனிவருடைய ஆச்ரமத்துக்குள் நுழைந்தான். அவரோ, ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அரசன் வந்ததைக் கவனிக்கவில்லை. அரசனுக்கோ பசி, தாகம், மயக்கம்! முனிவர் அவமானப்படுத்தி விட்டாரோ என்கிற ஐயத்தால் எழுந்த கோபத்தில், ஆச்ரமத்தை விட்டு வெளியேறும்போது, கீழே கிடந்த ஓர் உயிரற்ற பாம்பைத் தன் வில்லின் நுனியால் எடுத்து, ரிஷியின் கழுத்தில் இட்டுவிட்டு வெளியேறினான்.அரசன் சென்ற பிற்பாடு, விளையாடிக் கொண்டிருந்த ரிஷியினுடைய புத்திரன் அங்கு வந்தான். தன் தந்தையின் கழுத்தில் இருந்த செத்த பாம்பைக் கண்டான். கோபப்பட்டு, ‘இப்படியா ஓர் அரசன் தன் பிரஜையை அவமதிப்பான்? கண்ணன் இவ்வுலகத்தை விட்டுப் புறப்பட்டுப் போன பிற்பாடு, அரசர்களுக்கெல்லாம் நேர்மை மாறிற்று போலும்! இப்படி தன் நெறியை மீறிய அரசன், இன்றிலிருந்து ஏழாவது நாளில் தக்ஷகன் என்ற பாம்பால் கடிக்கப்பட்டு உயிர் இறப்பான் என்று முனி குமாரன் சபித்தான்.

சற்று நேரம் கழித்து, கண் விழித்துப் பார்த்த ரிஷி, நடந்ததை உணர்ந்து, தன் பிள்ளையும் சினத்தால் தவறு இழைத்ததைப் புரிந்து கொண்டார். ‘அரசன், ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அம்சம். அப்படி இருக்கும்போது, அவனை நீ சபிக்கலாமா? மேலும் அரசன் இல்லாவிடில் பிரஜைகள் எல்லாம் துன்பத்திற்கு உள்ளாவார்கள். கள்வர்களுடைய அராஜகம் வளர்ந்து போகும். ஆகையாலும், நாம் அரசனைச் சபிக்கக் கூடாது. மேலும் அரசன் அப்போது பசி, தாகத்தில் இருந்திருக்கிறான். உண்மை புரியாமல் நடந்து கொண்டான். முனிவர்களாய், ப்ரஹ்ம ஞானிகளாய் இருக்கும் நமக்கல்லவோ பொறுமை இருக்க வேண்டும்! பிள்ளாய்! நீ தவறாக நினைத்து விட்டாய்! இந்த செத்த பாம்பு என் கழுத்தில் இருப்பதைக் கண்டு கோபமுற்றாயே! நம் உடல் கூட ஒரு பாம்பு போன்றதுதானே! செத்த பாம்பைத் தூக்கிப் போட்டு விட்டால் விஷயம் முடிந்து போயிற்று! என்று அலட்சியமாக முடித்து விட்டார்.

மெய்ஞானிகள் எவரும் தங்களைத் துன்பப்படுத்தியவனையோ, ஏசியவனையோ, ஏமாற்றியவனையோ, ஏன், கொல்பவனைக் கூடக் கோபித்துக் கொள்ள மாட்டார்கள். குற்றம் செய்தவன்பால் பொறுமையோடும், கருணையோடும் இருப்பார்கள். ஏனெனில், ஆத்மாவுக்கும், இன்ப துன்பங்களுக்கும் நேரடித் தொடர்பு கிடையாது. இந்த உடலுக்குத்தான் அத்தொடர்பு என்பதை அவர்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், இவற்றையெல்லாம் முனிவர் உரைப்பதற்கு முன்னமேயே, முனிகுமாரன் சாபம் இட்டு விட்டானே! அது பொய்க்குமா? இனி பரீக்ஷித்தின் நிலை என்ன? அவன் எப்படி பாகவதம் கேட்டான்? – என்று பார்ப்போம்.


முதல் ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்
பரீக்ஷித் முன் எழுந்தருளிய சுகர்


பகவானின் பிரதிநிதி அரசன். அரசனாகிய பரீக்ஷித் ஏதோ பசியாலும், தாகத்தாலும் குற்றம் புரிந்திருந்தாலும், அதை மன்னித்திருக்க வேண்டியது முனிவர்களாகிய நம் கடமை...! அதை மறந்து, அவரைச் சபித்து விட்டாயே! இது கூடுமா? நீ செய்தது தவறு என்று முனிவர், தன் மகனைக் கடிந்து கொண்டார். இப்படி முனிவர் ஒருபுறம் நினைக்க, மறுபுறம் அரசனாகிய பரீக்ஷித் தன் குற்றத்தை நினைத்து வருந்தினான். ‘எப்போதும் பகவானை நினைத்துக் கொண்டிருக்கும் முனிவரிடத்தில், நான் எக்காரணம் கொண்டும் அபசாரப்பட்டிருக்கக் கூடாது. இறைவனிடத்தில் தவறு இழைத்தாலும், அதை எளிதில் போக்கிக் கொள்ளலாம். ஆனால், இறை அடியவரிடத்தில் தவறு செய்து விட்டால், அதற்குப் பிராயச்சித்தம் தேடுவது கடினம். பகவானிடத்தில் அபசாரப்பட்டால், அவனிடத்திலேயே மன்னிப்புக் கேட்க வேண்டும்.

ஆனால், ஒரு பாகவதனிடத்தில் அபசாரப்பட்டால், அதற்கு இறைவனிடத்தில் மன்னிப்புக் கேட்க முடியாது; மாறாக, அதே பக்தனிடத்தில்தான் மன்னிப்புக் கோர வேண்டும். அரசனும் சபிக்கப்பட்ட தன் குற்றத்துக்காக வருந்தி, தன் பாபத்தை எப்படிப் போக்கிக் கொள்ளலாம் என்று சிந்தித்தான்.

வைணவ ஆசார்யரான ஸ்ரீ வேதாந்த தேசிகன், ‘ஒருவன் தான் செய்யும் பாவங்களை எப்படி கழித்துக் கொள்ள வேண்டும் – என்று வழி கூறுகிறார். இவ்வழி நான்கு படிகளாக உள்ளன.

முதலாவது – செய்த குற்றத்தை சம்பந்தப்பட்டவர் முன்னிலையில் ஒப்புக் கொண்டு, அக்குற்றத்துக்கு வருத்தப்பட வேண்டும்.

இரண்டாவது – இனி ஒருகாலும் அந்தக் குற்றத்தைச் செய்ய மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது – அக்குற்றத்துக்கு சாஸ்த்ர விதிப்படியுள்ள பிராயச்சித்தத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.

நான்காவது – அந்தப் பிராயச்சித்தத்தைச் செய்து, பாபத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும்.

இந்த நான்கில் எது குறைந்தாலும், பாபம் தொலையாது. இதிலிருந்து நாம் ஒன்று புரிந்து கொள்கிறோம். அடிக்கடி அதே பாவத்தைச் செய்து விட்டு, மன்னிப்புக் கோருவது சாஸ்திரத்தில் ஒப்புக் கொள்ளப்படவில்லை. மேலும், இந்த ஸம்ஸாரத்தில் நாம் வாழும்போது அறியாத் தனத்தாலே சில பாவங்கள் செய்யலாம். அதற்காக மனப்பூர்வமாக வருந்தி விட்டோமானால், மறுபடியும் அதே பாவத்தைச் செய்யாமல் இருந்தோமானால் இறைவன் மன்னிக்கிறான். பாவங்களைத் தெரிந்தே செய்து விட்டு, அதற்கு வருத்தப்படாமலும் இருந்தால், அவற்றுக்கு ஏது மன்னிப்பு? அதற்குரிய தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.

பரீக்ஷித் தன் குற்றத்தை நினைத்து வருந்தி, ‘இனி நாம் ஆட்சியில் தொடருவது நியாயம் இல்லை. முனி குமாரனின் சாபத்தின்படி, நாம் பாம்பால் கடியுண்டு இறந்து போவோம். அதற்கு முன் நல்ல காரியத்தில் ஈடுபடுவோம் என்று தீர்க்கமாக ஆலோசித்து, தன் மகனான ஜனமே ஜயனுக்கு அரசுப் பட்டத்தைக் கட்டி வைத்தான். தான் கங்கைக் கரையை அடைந்தான். கங்கையில், தெற்குப் புறத்தில், கிழக்கு முகமாக தர்ப்பத்தை பரப்பி, வடக்கு முகமாக கைகூப்பி அமர்ந்து கொண்டான். அரசன் நினைக்கிறான்: ‘பகவானின் திருவடியால் தோன்றிய இந்த கங்கைக்குத்தான் எத்தனை மஹிமை! இதில் நீராடி, பகவத் ஸ்மரணையுடன் பட்டினி கிடந்து என் உடலை இதன் கரையிலேயே ‘பிராயோபவேசம் என்று சொல்லப்படும் முறையில் துறக்கப் போகிறேன்!

பரமாத்மாவான பகவானைப் பற்றி நினைத்துக் கொண்டு, கங்கைக் கரையில் உடலைத் துறந்தால், இறைவனடி சேர்வது திண்ணம். கங்கா, கோவிந்த, காயத்ரி... (பகவத்) கீதா ஆகியவை பகவத் ஸம்பந்தமுள்ள பவித்ரமான திருநாமங்கள். கங்கை என்றோ, கோவிந்தன் என்றோ, காயத்ரி என்றோ, கீதா என்றோ – இவற்றைக் கூறுவோமானால்,

சதுர்க்கார சம்யுக்தே புனர்ஜன்ம நவித்யதே

– என்று கூறுவார்கள். (‘க என்ற எழுத்தில் தொடங்கும் இந்நான்கு சொற்களை உணர்வில் கொண்டோருக்கு மறுபிறவி இல்லை.) பெரியாழ்வார் கங்கையின் பெருமையைப் பற்றி பாடும் போதும் –

சதுமுகன் கையில் சதுப்புயன் தாளில்
சங்கரன் சடையினில் தங்கி
கதிர்முகமணி கொண்டு இழிபுனல் கங்கைக்
கண்டம் என்னும் கடிநகரே!
(பெரியாழ்வார் திருமொழி 4-7-11)

– என்று தேவப் பிரயாகையைப் பற்றிப் பாடுகிறார். நாம் பதரிகாசிரம யாத்திரை செல்லும்போது, ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகியவற்றைத் தாண்டிய பின்னர் தேவப் பிரயாக் என்னும் இடம் வரும். அங்கே, அலகநந்தா, பாகீரதி – ஆகிய கங்கையின் இரண்டு கிளைகள் சங்கமிக்கின்றன. பிரயாகை என்றாலே, சங்கமம் என்று பொருள். சதுர் முகனான பிரம்மனின் கரத்தோடு தொடர்புடையவள் கங்கை. சதுர்புஜனான திருமாலின் திருவடியோடு தொடர்புடையவள் கங்கை. சங்கரனாகிய ருத்திரனாரின் திருமுடியோடு தொடர்புடையவள் கங்கை. ஆக, இந்த மும்மூர்த்திகளுடைய தொடர்புள்ள இவளுக்குத்தான் எத்தனை பெருமை!

ஆகவே, நாம் இந்த கங்கைத் தாயின் மடியிலேயே கண்ணன் கழலைணை அடைவோம்! – என்ற முடிவிற்கு வந்தான் அரசன். ‘இப்படி ஓர் உயர்ந்த லட்சியத்தோடே உயிர் துறக்கிறானாமே! அவன் எவ்வளவு உயர்ந்தவனாக இருக்க வேண்டும்! அவன் உயர்ந்த கதியை அடைவதை நாம் பார்க்க வேண்டும் என்று கங்கைக் கரைக்கு எல்லா முனிவர்களும் வந்து சேர்ந்தார்கள். அத்ரி, வஸிஷ்டர், ச்யவனர், பிருகு, ஆங்கிரஸ், பராசரர், விச்வாமித்திரர், அகஸ்தியர், வியாஸர், நாரதர் – இன்னும் பலரும் அங்கு வந்து கூடினார்கள். வந்த அனைவரையும் குறித்து, மன்னன் வணங்கி, தழுதழுத்த குரலோடு பேசுகிறான்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

திங்கள், 8 அக்டோபர், 2012

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 22


முதல் ஸ்கந்தம் – பதினாறாம் அத்தியாயம்

பரீக்ஷித் கண்ட பசுவும், எருதும்

ஸூத பௌராணிகரிடத்தில், சௌனகர் முதலான முனிவர்கள் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஸூதர் கூறலுற்றார் : “உத்தரையினுடைய கர்ப்பத்தில் பரீக்ஷித் பிறந்தான். அவன், தன் மாமனான உத்தரனுடைய பெண்ணான இராவதியைக் கல்யாணம் செய்து கொண்டான். அவர்களுக்கு ஜனமேஜயன் முதலான நான்கு புதல்வர்கள் பிறந்தார்கள். ஒருமுறை அவன் அனைத்து நாடுகளையும் ஜயித்துக் கொண்டு வர, தேரில் ஏறிப் புறப்பட்டபோது, ஒரு வியப்பூட்டும் நிகழ்ச்சியைக் காண்கிறான். ஓர் எருது, ஒரு பசு மாடு அருகருகே நிற்கின்றன. அந்த எருது ஒரே காலில் நின்று கொண்டிருக்கிறது. அருகில் உள்ள பசு தேம்பித் தேம்பி அழுகிறது. இவ்விரண்டையும் அரச வேடம் பூண்டிருந்த ஒரு சாமான்ய மனிதன், தன் கையில் இருக்கும் கோலால் அடித்துக் கொண்டிருக்கிறான். இதைக் கண்ட பரீக்ஷித் கோபமுற்றான். பசுவைக் காப்பாற்றப் புகுந்தான்.... பிறகு என்ன நடந்தது? – என்பதைத்தான் ஸூதர் இங்கு கூற வருகிறார். சௌனகர் கேட்கலுற்றார்.

இது என்ன கதை? ஏன் பசுவும், எருதும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் ஒரு மனிதன் அவற்றைப் போய் அடிக்க வேண்டும்? புரியவில்லையே! இதிலே கண்ணனின் மர்மமான திருவிளையாடல் ஏதோவொன்று இருக்கிறது போலும்! மந்தமான புத்தியும், குறைவான ஆயுளும் உடைய நம் போன்றவர்களுக்கு மோட்சம் அடைய வேண்டும் என்ற விருப்பம் இருக்குமானால், கண்ணனுடைய கதையைக் கேட்பதுதான் ஒரே வழி!

கஷுத்ர ஆயுஷாம் ந்ருணாம் அங்க
மர்த்யாநாம் ருதம் இச்சதாம்
இஹ உபஹுத: பகவான் ம்ருத்யு:
சாமித்ர கர்மணி

வேறு புகலுற்றவர்களான நம் போன்றவர்களுக்கு, தன் திவ்ய சரிதத்தையும், அதைக் கேட்பதையும் புகலாகக் கொடுத்து முக்தி அருள்வதற்கே கண்ணன் அவதரித்தான். அவனுடைய இந்தக் கதையைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஸூதரே சொல்லும்! என்றார் சௌனகர்.

ஸூதர் பதில் கூறலுற்றார்: “பரீக்ஷித் தன் நாட்டின் ஏதோவொரு மூலையில், கலி புருஷன் புகுந்தான் என்று கேள்விப்பட்டான். கண்ணன் புறப்பட்டதால், கலி இனி தலைவிரித்தாடத் தொடங்கி விடும். அதனை நாட்டில் விடக் கூடாது, ஓட்டி விட வேண்டும் என்கிற எண்ணத்தோடு தேரில் ஏறி அமர்ந்தான். கவசத்தை தரித்து, நீண்ட வில்லை எடுத்துக் கொண்டு பரீக்ஷித் புறப்பட்டான். பத்ராச்வம், கேதுமாலம் முதலான நாடுகளை எல்லாம் ஜயித்துக் கொண்டு வந்தான். அவ்விடங்களில் எல்லாம் மக்கள், பரீக்ஷித்தினுடைய புகழைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அவற்றைக் கேட்டுக் கொண்டு, ஒவ்வொரு நாடாகக் கடந்து வந்தான் பரீக்ஷித். அப்போதுதான் ஒரு காளை மாடு தன் ஒரு காலால் மட்டுமே நிற்பதைக் கண்டான். ‘இது ஏன் இப்படி நிற்கிறது? என்று வியப்படைந்தான்.

இனி எருதும், பசுவும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்போம். எருது பசுவைப் பார்த்து, ‘பசுவே! ஏன் அழுகிறாய்? வெகு தூரத்தில் இருக்கும் பந்துக்களில் யாரையாவது இழந்து விட்டாயா? அல்லது நான்கு கால்களில் நிற்க வேண்டிய யான், ஒரு காலில் நிற்கிறேனே! அதை நினைத்து துன்பப்படுகிறாயா? நாட்டில் மழை பொய்த்து விட்டதே என்று வருத்தமா? அல்லது கணவன்மார்கள், மனைவியைக் காப்பாற்ற மறுத்து விடுகிறார்களா? அல்லது சிசுக்களைக் காக்க வேண்டிய பெரியோர்கள் அதற்கு பால் கொடுக்காமலோ, உரிய வயதில் படிப்பு கொடுக்காமலோ ஏமாற்றுகிறார்களா? எத்தனை விதமான சிசுக் கொலை! எத்தனை வகையான பெண் கொலை இவ்வுலகில்? இதற்காகப் பசுவே நீ வருந்துகிறாயா? பூபாரம் தீர்க்கப் பிறந்த கண்ணன், உன் பாரத்தை எல்லாம் போக்கிவிட்டு, திரும்ப வைகுண்டத்தை அடைய நம்மைப் பிரிந்தான் என்பதை நினைத்து துக்கப்படுகின்றாயா? அல்லது எதனாலும் சமாளிக்க முடியாத வலிமையான காலத்தின் கொடுமையைக் கண்டு துன்பப்படுகிறாயா? ஏன்...? கூறுவாயாக....! என்று பேசிற்று.

அதற்கு, பசு உருவில் இருந்த பூமித்தாய் பதில் கூறுகிறாள். இவ்விடத்தில் ஒன்றை நாம் நோக்க வேண்டும். இங்கே நிற்கும் எருதுதான் தர்ம தேவதை! அழுது கொண்டிருக்கும் பசுதான் பூமி மாதா! இப்போது பசு, பதில் பேசலுற்றது:

ஆம்! அழுகிறேன். உண்மை, தூய்மை, தயை, பொறுமை, தியாகம், திருப்தி, நேர்மை, புலன்களை அடக்குதல், சமநோக்கு, மெய்யறிவு, பற்றின்மை, வள்ளல் தன்மை, வீரம், ஒளி, பலம் – போன்ற எத்தனை நற்பண்புகள் பகவானிடத்தில் குடிகொண்டிருந்தன! இந்தப் பண்புகள் எல்லாம் பரவி இருந்தால்தானே பூலோகத்தில் மனிதர்கள் வாழ்வாங்கு வாழ முடியும்? ஆனால், அந்தோ! இந்தப் பண்புகளின் கொள்கலமான கண்ணன் எம்பெருமான் இவ்வுலகத்தை விட்டுப் புறப்பட்டான். ஆகவே, கலி சூழத் தொடங்கி விட்டது. இனி, இந்தக் கலி தேவர்களையும், பித்ருக்களையும், ரிஷிகளையும், சாதுக்களையும், மக்களையும், ஏன், தர்மமாகிய உன்னையும் என்ன பாடுபடுத்துமோ – என்பதைப் பற்றிதான் கவலை கொள்கிறேன். இப்போது என்னைப் பற்றி கூறுகிறேன். ப்ரஹ்மாவும் கூட, தான் நன்கு இருப்பதற்காக, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் திருவடிகளை துதிப்பவர். அந்த லக்ஷ்மி தேவியோ, பெருமானுடைய திருவடிகளையே விரும்பி இருப்பவள். அந்தத் திருவடி எப்போதெல்லாம் பூமியான என் மேல் படுகிறதோ, அப்போது நான் உள்ளம் சிலிர்க்க ஆனந்தப்படுவேன். அந்தத் திருவடி என்னை விட்டு வைகுண்டத்தை அடைந்து விட்டதாமே? அந்தப் பிரிவாற்றாமையால்தான் நான் துக்கப்படுகிறேன் என்றது.

இப்படியாய் எருதும், பசுவும் பேசிக் கொண்டிருந்தபோது, குருக்ஷேத்திரத்தில் ஸரஸ்வதி நதிக்கரைக்கு பரீக்ஷித் வந்து சேர்ந்தான். இனி, அவன் அவற்றிற்கு என்ன நன்மை செய்கிறான் என்று பார்ப்போம்.

முதல் ஸ்கந்தம் – பதினேழாம் அத்தியாயம்

கலிக்குக் கிலி தந்த பரீக்ஷித்

தர்மம் ஓர் எருதின் வடிவத்திலும், பூமித் தாய் ஒரு பசுவின் வடிவத்திலும் அழுது கொண்டு, நின்று கொண்டிருந்தபோது, ஒரு மனிதன் அரச வேடத்தை இட்டுக் கொண்டு, இவை இரண்டையும் அடித்துக் கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் வேட்டைக்காக வெளியேறிய பரீக்ஷித், தன் நாட்டின் ஒரு மூலையில் கலி புகுந்து விட்டது என்பதைத் தெரிந்து கொண்டு, அவ்விடத்தை அடைந்தான். எருதும், பசுவும் அடிபடுவதைக் கண்டான். அதைக் கண்டு கோபமுற்று, மேகம் இடிப்பதைப் போன்ற குரலில் கேட்டான்:

தீயவனே! எதற்காக மாடுகளை அடிக்கின்றாய்? வேஷத்தில் அரசனைப் போல இருந்தாலும், தீய செயலைப் புரிகிறாயே! கண்ணன் இவ்வுலகத்தை விட்டுப் போய் விட்டதால், அவனைத் தொடர்ந்து அர்ஜுனனும் புறப்பட்டுப் போனதால் உலகில் காப்பதற்கு மன்னன் இல்லை என்று நினைத்து அத்து மீறுகிறாயா? அர்ஜுனனின் வழித் தோன்றலாகப் பிறந்த நான் உள்ளேன். பாண்டவர்களுடைய குலத்தில் பிறந்த ஒவ்வொரு அரசனும், தனது காக்கும் கடமையை நன்கு அறிந்திருக்கிறான். எந்தப் பிரஜைக்குத் துன்பம் நேரிட்டாலும், அது விலங்கினமாயினும் கூட, யாம் நிச்சயமாக வந்து காப்போம். இது புரியாமல் நீ குற்றம் புரிகிறாய். பசுத் தாயே! உயர்ந்த தேவதைகள் அனைவரும் உன் உடலில் உறைந்திருக்க, எதற்காக இப்படித் தேம்பித் தேம்பி அழுகிறாய்? எருதே! நான்கு கால்களில் நிற்க வேண்டிய நீ, ஏன் மூன்று கால்களை இழந்து, ஒரு காலில் நிற்கிறாய்? இவனைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டாம். உங்கள் துன்பத்தின் காரணத்தைக் கூறுங்கள். நான் உடனே அதை நிவர்த்தி செய்து கொடுக்கிறேன். பிரஜைகளின் தர்மத்தை அறிந்து, அவர்களை காப்பாற்ற வேண்டியது அரசனான என்னுடைய கடமை. தர்மம் தவறாமல் வாழ்பவர்களை அவசியம் அரசன் காப்பான் என்று கூறினான். உடனே எருது வடிவில் இருந்த தர்மதேவதை பேசலுற்றது: “பாண்டவர்களின் குலத்தில் பிறந்த நீ, அப்பெருமைக்கு ஏற்ப நேர்மையோடு பேசுவது திருப்தி அளிக்கிறது. ஆனால், நீ கேட்ட கேள்விக்கு என்னால் நேரே பதில் கூற இயலாது. எங்கள் துன்பத்துக்கு யார் காரணம் என்று நீதான் கண்டுபிடிக்க வேண்டும். துன்பத்துக்குக் காரணம் ஆத்மாவே என்று சிலரும், கடவுள் என்று பலரும், நாம் செய்திருக்கின்ற கர்மங்களின் பலன் என்றோ அல்லது நம்முடைய இயல்பே துன்பப்படுவதுதான் என்றோ ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைக் கூறுகிறார்கள். இதில் எது சரியானது? நாங்கள் ஏன் துன்பப்படுகிறோம்? – என்பதை நீயே யூகித்து அறிந்து கொள்வாயாக! என்றது.

இதனைக் கேட்ட அரசன் ஆழ்ந்து சிந்திக்கலுற்றான். தன்னுடைய தவ வலிமையால் எருதும், பசுவும் யார் என்பதைப் புரிந்து கொண்டான். தர்ம தேவதையே, எருதின் வடிவத்திலும்; பூமித் தாயே, பசுவின் வடிவத்திலும் நிற்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். அதோடு மட்டுமல்லாமல், இந்த எருது, கிருதயுகத்தின் தொடக்கத்தில் நான்கு கால்களில் நின்றிருந்தது. தவம், தூய்மை, தயை, உண்மை கூறுதல் – ஆகியவையே அதன் நான்கு கால்கள்.

தவ: சௌசம் தயா ஸத்யமிதி
பாதா: க்ருதே க்ருதா:
அதர்மாம் சைஸ்த்ரயோ வக்நா:
ஸ்மய ஸங்க மதைஸ்தவ

ஆனால், பின்னர் அதர்மத்தினுடைய ஆயுதங்களான கர்வம், ஆசை, மதம் ஆகிய மூன்று தீமைகளும் முறையே எருதின் முதல் மூன்று கால்களான தவம், தூய்மை, தயை ஆகியவற்றை ஒவ்வொரு யுகமாக வெட்டிக் கொண்டே வந்தது. இப்போது கடைசி யுகமான கலியுகத்தில் ‘உண்மை கூறுதல் என்னும் கடைசிக் காலில் தர்மத்தின் வடிவான காளை நின்று கொண்டிருக்கிறது. இதோ அழுது கொண்டிருக்கும் பசுதான் பூமி மாதா. கண்ணன் இருந்தபோது எவ்வளவு ஆனந்தமாக இருந்தவள், அவன் புறப்பட்டுப் போன பிற்பாடு, நம்மை யார் காப்பார்கள்? நாம் இனி துன்பப்பட வேண்டியதுதான் – என்று அழுது கொண்டிருக்கிறாள். இவர்களை உடனே காக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்ட பரீக்ஷித், தன் வாளை உருவிக் கொண்டு, அவர்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்த மனிதனை நோக்கி ஓடி வந்தான். அரசன் வருவதைக் கண்ட கலி புருஷனோ உடனே பயந்து போய், பரீக்ஷித்தினுடைய கால்களில் விழுந்து, தன்னைக் கொல்லாமல் இருக்குமாறு மன்றாடினான். “தீனவத்ஸலனான அரசனே! சரணாகதி புரிந்தவர்களைத் தாங்கள் கொல்ல மாட்டீர்களே! என்னைக் காப்பாற்ற வேண்டும்! என்று கெஞ்சினான்.

அப்போது அரசன் கலியைப் பார்த்துக் கூறினான்: “காலில் விழுந்து விட்டாய். தப்பித்துப் போ! ஆனால், எனது ஸாம்ராஜ்யமான ப்ரஹ்மா வர்த்த தேசத்திலே உனக்கு இடம் இல்லை. நீ இருக்கும் இடத்தில் துஷ்டர்களாகிய உன் அடியாட்கள் – அதாவது பேராசை, பொய் கூறுதல், திருட்டு, தாழ்செயல்கள், செல்வமின்மை, கபடம், கலகம், செருக்கு – இவை அத்தனையும் வாழும். பகவானைக் குறித்து ஹோமங்களும், நாம ஜபங்களும் செய்யப்படும் என் நாட்டில், இவற்றுக்கெல்லாம் இடம் கிடையாது. ஆகவே, உடனே நீ வெளியேறிவிட வேண்டும் என்று கூறினான்.

அப்போது கலி புருஷன், பயந்து போய் பதில் கூறினான் : “நீ சொன்னது போல நான் வெளியேறி விடுகிறேன். ஆனால், பகவான்தான் என்னையும் படைத்தான்! கலியாகிய நான் கொடுமை மிக்கவனாக இருப்பதோ, தீமை செய்வதோ என் விருப்பத்தால் அல்ல. முதல் மூன்று யுகங்களை உருவாக்கிய கடவுள்தானே என்னையும் படைத்தான்! ஆகவே, நான் இருப்பதற்கு இடம் கொடு. என்னிடத்திலும் சில நன்மைகள் உண்டு. அதைப் புரிந்து கொண்டு, எனக்கு இருப்பதற்கு இடம் கொடு என்று வேண்டி நின்றான்.

பௌராணிகர் கூறுகிறார்: “இதைக் கேட்ட பரீக்ஷித் சற்றே சிந்தித்து, ‘சரி! உனக்கு நான்கு இடங்களைக் கொடுக்கிறேன். சூதாடுதல், கள் குடித்தல், பெண்களை அவமரியாதை செய்தல், பிராணிகளைத் துன்புறுத்துதல் ஆகிய நான்கு அதர்மங்கள் எங்கெங்கு இருக்குமோ அங்கெல்லாம் நீ இருக்கலாம் என்று மறுமொழி கூறினான். இதைக் கேட்ட கலி, “நான் மிகவும் பருத்தவன். இந்த நான்கு இடங்கள் எனக்குப் போதாது. மேலும் இடங்களைக் கொடு! என்றான்.

அரசன் ஐந்தாவதாக, பேராசையூட்டும் தங்கத்தில் பெரு விருப்பம் உள்ளவர்கள் மனதையே இடமாகக் கொடுத்தான். ஆனால், கலிக்கு அதுவும் போதவில்லை. அரசன் மேலும் ஐந்து இடங்களைக் கொடுக்கிறான். பொய் கூறுதல், செருக்கு, பேராசை, கோபம் அதாவது ரஜோ குணம், பகைமை ஆகிய தீய குணங்கள் புழங்கும் இடங்களைக் கொடுத்தான். ஆக, மொத்தத்தில் இந்தப் பத்து இடங்களும் கலியின் முழு ஆளுகைக்கு உட்பட்டவை.

எனினும், இது கலியுகமாயிற்றே என்று பயப்படத் தேவையில்லை. பரீக்ஷித், இந்தப் பத்தே இடங்களை கலி வாழ்வதற்குக் கொடுத்திருக்கிறபடியால், நாம் இந்தப் பத்து இடங்களுக்கோ, அதற்குரிய பழக்கங்களின் அருகில் கூட போகாமலோ இருந்தால் கலி, நமக்கு எந்தத் துன்பமும் கொடுக்காது. இப்படி, கலியை அனுப்பி வைத்த மன்னவன், தன் நாட்டில் சிறந்த ஹோமங்களைச் செய்தும், நிறைந்த ஆசாரங்களை அனுஷ்டித்தும் காளை இழந்த கால்களான தவம், தூய்மை, தயை ஆகிய மூன்றையும் மீட்டுக் கொடுக்க முற்பட்டான். இப்படியாக, மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்து வந்தான் அவன். ரிஷிகளே! இப்படிப்பட்ட பரீக்ஷித்தின் தேசத்தில்தான் நீங்கள் இப்போது ‘ஸத்திர யாகம் செய்து கொண்டிருக்கிறீர்கள்! – என்று சொல்லி, கலி புருஷனை பரீக்ஷித் விரட்டியதைப் பற்றி நினைவு கூர்ந்தார் பௌராணிகர்.

(தொடரும்)

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 21


முதல் ஸ்கந்தம் - பதினான்காம் அத்தியாயம்

தர்மபுத்திரன் கவலை

தர்மபுத்திரனுக்கு துவாபர யுகத்தினுடைய இறுதி வருவது புரிந்தது. தன் நாட்டில் அபசகுனங்கள் தோன்றியதைக் கவனித்தான். துவாரகையில் கண்ணன் சுகமாக இருக்கிறானா என்று தெரிந்து வரப்போன அர்ஜுனன், ஏழு மாதங்கள் ஆகியும் திரும்ப வரவில்லை. ஆகவே, தர்மபுத்திரன் வருத்தத்தோடு பீமசேனனிடத்தில் பேசினான். ‘நம் நாட்டின் நிலையைப் பார்! மக்கள் எல்லாம் கோபத்தாலும், பேராசையாலும், பொய் கூறுவதாலும், பிறருடைய பொருளுக்கு ஆசைப்படுவதாலும், வஞ்சனை எண்ணம் கொண்டிருப்பதாலும் தாழ்ந்தே போகிறார்கள். வயோதிகர்களை யாரும் காப்பாற்ற மறுக்கிறார்கள். வேதத்தில் ஈடுபாடு குறைகிறது. நரிகள் ஊளையிடுகின்றன. கொள்ளிக் கட்டைகள் விழுகின்றன. ரத்தம் பெருகுகின்றது. நம் நாட்டில் நல்ல சகுனங்கள் என் கண்ணுக்குப் படவில்லை. துவாரகைக்குப் போன அர்ஜுனனையும் காணோம். என்ன நடக்கப் போகிறதோ? என்று கவலையுறுகிறேன்!

இப்படி தர்மபுத்திரன் பேசிக் கொண்டிருந்தபோதே, வருத்தம் தோய்ந்த மனத்தோடு அர்ஜுனன் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்ட தர்மபுத்திரன் வியப்புற்று, ‘அர்ஜுனா! யாரையும் கண்டு கலங்காத நீயா கலங்கியிருக்கிறாய்? உன் உடலில் ஒளி குறைந்திருக்கிறதே! எதனால்? நோய் நொடி இல்லாமல் இருக்கிறாயா? அல்லது அங்கு சென்ற இடத்தில் பந்துக்கள் உன்னை கௌரவப்படுத்தவில்லையா? அவமதித்து விட்டார்களா? அல்லது கையேந்தி நின்றவர்களுக்குக் கொடுப்பதாக பிரதிக்ஞை செய்துவிட்டு, பின்பு பொருளாசையால் அவர்களுக்குக் கொடுக்காமல் வார்த்தை தவறினாயா? குழந்தை, பசு, வயதானவர், நோயுள்ளவர், பெண்கள் இப்படி யாரேனும் உன்னிடத்தில் தஞ்சமாக அடைந்து, அவர்களைக் காப்பாற்றாமல் விட்டு விட்டாயா? ஆசைப்படக் கூடாத ஸ்திரீயினிடத்திலே விருப்பம் வைத்தாயா? அல்லது அலங்காரம் இல்லாமல் இருந்தாலும் கூட, கைவிடத் தகாதவர்களான உன்னுடைய மனைவியரிடத்திலே விருப்பம் வைக்கத் தவறினாயா?

பெரியோர்களோ, உனக்கு சமமானவர்களோ உன்னை ஜெயிக்காமல் விட்டு விட்டார்களா? (சான்றோர்களிடம் தோற்று அவர்களை வணங்குவதே ஒரு பாக்கியம்). ஒருவேளை, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உணவு கொடுக்காமல் நீ உண்டு விட்டாயா? ஏதேனும் கெட்ட காரியத்தைச் செய்தாயா? அல்லது இவை அனைத்தையும் விட சோகத்தைக் கொடுக்கக் கூடியது, கண்ணனை விட்டுப் பிரிவது! கண்ணனைப் பிரிகிறோம் என்ற வருத்தத்தால் உடல் இளைத்து விட்டாயா? இந்த குற்றங்களுக்குள் எது உன் மேனியை வாட்டுகிறது? என்று சூட்சுமமான தர்மங்களை உணர்த்தும் வகையில், தர்மபுத்திரர் கேட்டார்.

நடுங்கிய குரலோடு, அர்ஜுனன் பதில் கூறத் தொடங்கினான். காத்திருந்து கேட்போம்.

முதல் ஸ்கந்தம் – பதினைந்தாம் அத்தியாயம்
கண்ணன் பிரிவு தந்த கலக்கம்

உகந்த தோழன், உற்ற நண்பன், அனைவருடைய நன்மையையே விரும்புபவன் – இப்படிப்பட்ட ஒருவனைப் பிரிந்தால் யாருக்குத்தான் துன்பம் ஏற்படாது? கண்ணனைத் தவிர, உயிர்க்குயிரான இப்படிப்பட்டவன் எவன் இருக்க முடியும்? கண்ணன் இப்பூவுலகத்தைப் பிரிந்து, வைகுண்டத்தை அடைந்தான் என்ற செய்தியை மனத்தில் தாங்க முடியாது திணறிக் கொண்டு, அர்ஜுனன் தன் நாட்டை அடைகிறான். உள்ளமும், உடலும் தளர்ந்து போய் தழுதழுத்த குரலோடு தன் அண்ணனிடத்தே பேசுகிறான்: “தர்மபுத்திரரே! நாம் அனைவரும் கண்ணனால் ஏமாற்றப்பட்டோம். கண்ணன் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, வைகுண்டத்துக்கு ஏகினான். யாருடைய பிரிவை மனிதர்களால், அதுவும் பக்தர்களால் ஒரு வினாடி கூட சகித்துக் கொள்ள முடியாதோ, அப்படிப்பட்ட அவன் நம் அனைவரையும் தவிக்க விட்டுப் பிரிந்தான். பஞ்சபாண்டவர்களாகிய நம்மிடத்தில் கண்ணன் எவ்வளவு பிரியத்தோடு இருந்தான்! இயந்திரத்தில் வைக்கப்பட்ட மீனின் மேல் அம்பைக் குறி தவறாது எய்து, ஸ்வயம்வரத்தில் நான் திரௌபதியை ஜெயித்ததே அவன் அருளால்தான்!

“திரௌபதி மானபங்கப்படுத்தப்படும் நிலைக்கு உட்படுத்தப்பட்டபோது, எங்கோ அவன் இருந்தாலும், ஆபத்திலே புடவை சுரந்து, காத்துக் கொடுத்தான். நாம் காட்டில் இருக்கும்போது, துரியோதனனால் தூண்டப்பட்ட துர்வாஸர் நம்மை சபிக்க நேரிடும் நிலை வந்தபோது, ஒரு பாத்திரத்தில் இருந்த சிறு கீரைத் துண்டை எடுத்து உண்டு, அனைவருடைய பசியையும் போக்கி, துர்வாஸருடைய கோபத்தையே விரட்டினான். எனக்கு பாசுபதாஸ்திரம் தேவைப்பட்டபோது, உடனே பெற்றுக் கொடுத்தான். எளியவனான என்னால் பீஷ்மர், துரோணர் முதலானோர்களை வீழ்த்தியிருக்கவே முடியாது. கண்ணனே தேரோட்டியாக இருந்து, முன்னும் பின்னுமாகத் தேரைச் செலுத்தி, நான் சிரமப்பட்டுச் சண்டை செய்ய வேண்டிய தேவையே இல்லாமல், அவனே யுத்தத்தில் நமக்கு ஜெயித்துக் கொடுத்தான். இறுதியாய், அச்வத்தாமாவினுடைய அஸ்திரத்தால் நம் குலமே அழிந்துவிடும் என்ற தவிப்பில் நாம் இருந்தபோது, அந்த ஆபத்தை நீக்கிக் காத்துக் கொடுத்தான். இப்படி கண்ணன் நமக்காக எத்தனை நன்மைகளைச் செய்திருக்கிறான்!

என் புருவ நெறிப்பின் குறிப்புணர்ந்து, அதற்குத் தக்கவாறு தேரை நடத்துவான். நம்முடைய குழந்தையான பரீக்ஷித் சாகாமல் கண்ணன் காத்தான். அவன் கரிக்கட்டையாக விழுந்தபோதும், உயிர் பிச்சை அளித்தான். திரௌபதியினுடைய மங்கள ஸூத்திரத்திற்கு பங்கம் வராமல் காத்துக் கொடுத்தான். இவை மட்டுமா? நாம் எத்தனை அபசாரங்களை அவனிடத்தில் புரிந்தோம்! அவை அனைத்தையும் தன்னுடைய கண் சிமிட்டல், புன்சிரிப்பு, உதட்டை நெகிழ்த்துதல், அணைத்துக் கொள்ளுதல் போன்ற சிறு சிறு செயல்களாலேயே மன்னித்துத் தன் அருள் நோக்கையே பரிசாகத் தந்தான்.

நர்மாண்யுதார ருசிரஸ்மித சோபிதாநி
ஹே பார்த்த! ஹே அர்ஜுன! ஸகே!
குரு நந்தன! இதி
ஸஞ்ஜல்பிதாநி நரதேவ ஹ்ருதிஸ்வ்ருசானி
ஸ்மதுர் லுடந்தி ஹ்ருதயம் மம மாதவஸ்ய

மாதவனாகிய கண்ணனின் ஒவ்வொரு விளையாட்டுச் செய்கையையும் நினைத்து என் உள்ளம் இப்போதும் உருகுகிறது. அவன் நம்மை கூப்பிட்டபோது, ‘பார்த்தனே! அர்ஜுனா! அத்தை பிள்ளையே! நண்பனே! குரு குலத்தில் உதித்தவனே! என்று பாசத்தோடு அழைத்திருக்கிறான். அவன் பரமேச்வரன்! மனித உடலை எடுத்துக் கொண்டு மண்ணுலகில் அவதரித்திருக்கிறான் என்பதைக் கூடச் சரிவர புரிந்து கொள்ளாத நான், ‘நண்பனே! இடையனே! அடேய்! என்று எத்தனை முறை கூப்பிட்டிருக்கிறேன்? இப்பிழைகளெல்லாம் எனது அறியாமையால் செய்யப்பட்டவை! கண்ணனும் அவற்றைப் புன்னகையுடன் பொறுத்து வந்தான் என்றான் அர்ஜுனன்.

ஆண்டாள் தன் திருப்பாவையில்,

அறியாத பிள்ளைகளோம் அன்பினால்
உன்தன்னைச் சிறு பேரழைத்தனவும்
சீறியருளாதே, இறைவா! நீதாராய் பறை!

– என்று வேண்டுகிறாள். ‘நாங்கள் எல்லாரும் இடைப் பெண்கள். நீ, எம்மிடையே பிறந்தாய்! உன்னையே எம் மணாளன் என்று கொண்டு, எங்கள் அறியாத்தனத்தாலும், அன்பினாலும், சிறுபிள்ளைத்தனத்தினாலும் எவ்வளவோ கேலிச் சொற்களைக் கொண்டு உன்னைக் கூப்பிட்டிருப்போம்! அவை அனைத்தையும் நீ குற்றமாகக் கொள்ளாமல் மன்னித்தருள வேண்டும் என்று வேண்டுகிறாள். அதே நிலைதான் அர்ஜுனனுக்கு!

அஜானதா மஹிமாநந் தவேதம்
மயா ப்ரமாதாத் ப்ரணயேன வாபி

– என்று, கீதை 11-ஆவது அத்தியாயத்தில், கண்ணனிடத்தில் அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான். நாம் ஒவ்வொருவரும் பகவானிடத்தில் எத்தனையோ விதமான குற்றங்களைப் புரிகிறோம். அவன், நம்மை, தன் குழந்தைகளாக நினைத்துக் கொண்டு அனைத்தையும் மறக்கக் காத்திருக்கிறான். நாம் செய்ய வேண்டியது என்ன? இப்படித் தவறு இழைத்து விட்டோமே என்று வருந்தி, அதை அவனிடத்தில் விண்ணப்பித்து மன்னிப்பு வேண்டி நிற்க வேண்டும். மறுபடியும் இந்தக் குற்றம் நிகழாது என்று உறுதி கூற வேண்டும். அதற்குரிய பிராயச்சித்தம் செய்ய வேண்டும். கண்ணன் பஞ்ச பாண்டவர்களோடு உறங்கியபோதும், ஆடியபோதும், உண்டபோதும் எத்தனை வேடிக்கை பேச்சுக்கள் பேசியிருப்பான்!

அர்ஜுனன் தொடர்கிறான் :“ஒரு தந்தை எப்படித் தன் குழந்தையின் பிழையைப் பொறுத்துக் கொள்வானோ; ஒரு பிரியமான காதலி, காதலனுடைய குற்றத்தையெல்லாம் எப்படிப் பொறுப்பாளோ; ஒரு சிஷ்யனின் தவறுகளை ஆசான் எப்படி பொறுப்பாரோ; அதைப்போல கண்ணன் நம் அனைவருடைய குற்றங்களையும் பொறுத்தான். அந்தோ! இப்போது அப்படிப்பட்டவனை இழந்து தவிக்கிறோம். அண்ணா! என்னுடைய காண்டீபம் கையை விட்டுக் கழல்கிறது. ஏற்கெனவே ஒருமுறை மஹாபாரத யுத்தத்தின் முதல் நாள் என்னால் காண்டீபத்தைப் பற்ற முடியாமல் தளர்ந்தேன். அப்போது 700 ஸ்லோகங்களால், கீதையை உபதேசித்து, மறுபடியும் வீரத்தோடும், பலத்தோடும் காண்டீபத்தைத் தூக்க வைத்தான் கண்ணன். ஆனால், இப்போது அந்தக் கண்ணனைப் பிரிந்தோம். இனி இந்தக் காண்டீபத்துக்கு சக்தி கிடையாது. என் உள்ளமும், உயிரும் இப்போது நடுங்குகின்றன என்று அர்ஜுனன் பரிதவித்தான்.

அப்போது தர்மபுத்திரன் இவை எல்லாவற்றையும் கேட்டுத் துன்பப்பட்டு, “அர்ஜுனா! யாதவர்களுக்கு என்ன நடந்தது? கண்ணன் எங்கு சென்றான்? என்று வினவினான். உடனே அர்ஜுனன் கூறினான்: “முனிவர்களுடைய சாபத்தையே ஒரு காரணமாகக் கொண்டு யது குலமே அழிந்து போயிற்று. கண்ணனும் அக்குலத்தில் ஒருவனானபடியால், ‘வந்த காரியம் முடிந்தது –பூமியின் பாரத்தைத் தீர்த்தோம்; அசுரர்களையும், தீயவர்களையும் ஒழித்தோம்; நல்லோரைக் காத்தோம்; திரும்பப் போகலாம் என்ற மனநிறைவுடன் பூமியை நீத்து, வைகுண்டத்தை அடைந்து விட்டான்! என் செய்வோம் இனி? என்று புலம்பினான்.

சிறிது பொழுது இப்படிக் கலங்கிய அர்ஜுனன், மறுபடியும் கண்ணன் உபதேசித்த கீதையை ஞாபகப்படுத்திக் கொண்டு, இழந்த தைரியத்தை மீட்டுக் கொண்டான். ஞானமும், பக்தியும் ததும்ப, ‘கண்ணன் சொன்னபடி நடக்க வேண்டுமானால், ‘இவ்வுலகத்தைக் கண்டு இப்படிக் கலங்குவது கூடாது. அழியாத இன்பமான அவனது திருவடிகளின் நினைவு நம்மோடு எப்போதும் இருக்கும்போது, நாம் ஏன் கலங்க வேண்டும்? என்று மனத்தைத் தேற்றிக் கொண்டான். இனி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று பாண்டவர்கள் யோசிக்கலுற்றார்கள்.

ஒரு கைதேர்ந்த நாடக நடிகன் தன் வேஷத்தைக் கலைத்து விட்டபின், இயல்பானபடி இருப்பான். அவ்வாறே கண்ணனும், தான் எடுத்துக் கொண்ட வேஷத்தைக் கலைத்துவிட்டு வைகுண்டத்தை அடைந்து விட்டான். வேஷம் என்று சொல்வதனாலே கண்ணனுடைய அவதாரம் பொய் என்று பொருள் அல்ல. ஒரு நடிகன் நாடகத்தில் நடித்தால், மனோபலத்துடன் கூடிய அவனது நடிப்பு பொய்யாகுமா? கண் முன்னுள்ள அவன்தான் பொய்யா? உணர்ச்சி ததும்பும் கதைதான் பொய்யா? அனைத்தும் உண்மைதான். ஆனால் நாடகம் முடிந்தால், வேஷம் கலையும். அதேபோலத்தான், கண்ணனுடைய செயலும்! நம்முடைய நாடகமும் முடிந்தது. இனி, அவனையே நாம் அடைய வேண்டும் என்று தர்மபுத்திரன் முடிவு எடுத்து, ‘இந்த லோகத்தை விட்டு வானவர் உலகை அடைவோம் என்று உறுதிபூண்டு, தம்பிகளை அழைத்துக் கொண்டு வனம் ஏகினான். நாட்டைக் காக்க வேண்டுமே! அதற்காகத் தன் பேரனான பரீக்ஷித்துக்குப் பட்டம் கட்டினான். மதுரைப் பட்டணத்தில் சூரசேனனின் மகனான வஜ்ரனுக்குப் பட்டம் கட்டி விட்டு, தம்பிமார்களோடு கந்தமாதன பர்வதத்தில் இருக்கும் பதரிகாச்ரமத்தை நோக்கி நடந்தான்.

இன்றும் நாம் பதரியை அடைந்தால், அவ்விடத்திற்கு மேலே இருக்கும் ‘மானா என்ற இடத்திலிருந்து ‘ஸத்பத் என்றழைக்கப்படும் கடினமானதோர் மார்க்கம் இருக்கிறது. அந்த மார்க்கத்தில் நடந்து போய்த்தான் திரௌபதியும், பஞ்ச பாண்டவர்களும் வடக்குத் திசையில் சென்றார்கள். மக்கள் அனைவரும் ‘திரும்ப வாருங்கள், வாருங்கள் என்று கூப்பிடக் கூப்பிட, யார் பேச்சையும் காதில் போட்டுக் கொள்ளாமல், மனத்தை முழுவதுமாகக் கண்ணனிடத்தில் நிலை நிறுத்தி, தர்மபுத்திரனும், அவன் தம்பிமார்களும் உயர்ந்த ஹிமாசலத்தில் நடந்து, உடலைத் துறந்து, நற்கதி அடைந்தார்கள்.

வை அனைத்தையும் கேள்விப்பட்ட விதுரர், கண்ணனையே உள்ளத்தில் நினைத்துக் கொண்டு பிரபாஸ க்ஷேத்திரத்தில் உடலை விட்டு, உயர்கதியை அடைந்தார். இப்படியாய் கண்ணன் புறப்பட்டுப் போனது, பஞ்ச பாண்டவர்களும் சென்றது, விதுரர் பிரிந்தது – ஆகியவற்றைக் கூறும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, அவர்களுடைய பாபங்கள் விலகி, பரம பவித்திரர்களாய், ஹரி பக்தி பெருகியவர்களாய் வளர்ந்து, அவனுடைய திருவடிகளையே அடைவார்கள் என்பது திண்ணம்.

(தொடரும்)

ஒரு திருத்தம்

ஸ்ரீமத் பாகவதம் முதல் ஸ்கந்தம் - பத்தாம் அத்தியாயம் வரை ஏற்கெனவே பிரசுரமாகியிருக்கின்றன. அந்தப் பகுதிகளில் பதினொன்று, பன்னிரெண்டு, பதின்மூன்று ஆகிய அத்தியாயங்களும் அடங்கும். ஆகவே, இந்த இதழில் பிரசுரமாகும் பகுதி - பதினான்காம் அத்தியாயமாகிறது.

நன்றி - துக்ளக்