அதுவரை திருவரங்கக் கோயில் உள்ளே வராமல் ஆற்றுக் கரையிலிருந்தே அரங்கனை வணங்கிய திருப்பாணாழ்வார், லோகசாரங்க முனியின் தோள்களில் அமர்ந்து அரங்கனின் சன்னதி வந்ததும் திருவடி முதல் திருக்கண்கள் வரை அனுபவித்து பத்தே பத்து பாசுரங்கள் பாடி அரங்கனுடன் ஐக்கியமாகிறார். ஆழ்வார் பாடிய பாசுரங்களே அமலனாதிபிரான். முதல் பாசுரத்தின் முதல் இரண்டு வார்த்தையே இதற்கு தலைப்பு.
ஆழ்வார், தனது முதல் பாசுரத்திலேயே எம்பெருமானின் ஒன்பது திருநாமங்களை அடுக்குகிறார்.
"அமலன்" என்று தொடங்கி "அரங்கத்து அம்மான்" வரை ஆழ்வார் திருவரங்கனை ஒன்பது திருநாமங்களால் விளித்துப் பரவசமடைகிறார்.
அந்த ஒன்பது திருநாமங்கள் - அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர்கோன், வேங்கடவன், நிமலன், நின்மலன், நீதிவானவன், அரங்கத்தம்மான்.
இந்த பாசுரத்தில் வரும் அமலன், விமலன், நிமலன், நின்மலன் ஆகிய நான்கு திருநாமங்களும் மேலோட்டமாக 'தூய்மையானவன்' என்ற ஒரே பொருளைக் குறித்தாலும், ஆழ்வாரின் அனுபவத்தில் அவை நான்கு வெவ்வேறு பரிமாணங்களைக் காட்டுகின்றன. இதனை வியாக்யானத்தின்படியே பார்ப்போம்.
அமலன் - தான் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தில் அரங்கனின் சந்நிதிக்குள் நுழைய அஞ்சிய ஆழ்வாருக்கு, "என்னோடு கலப்பதால் உனக்கு எந்தக் குறையும் வராது" என்று உணர்த்திய எம்பெருமானின் குறையற்ற தூய்மை.
ஆதிபிரான் - அனைத்திற்கும் மூலமான ஆதிமூலம்.
விமலன் - ஆழ்வாரின் சிறுமையைப் பாராமல், அவரைத் தன் அடியார்களுக்கு ஆட்படுத்திய அந்தப் பேரொளியின் கருணை மிக்க தூய்மை.
விண்ணவர்கோன் - இந்திரன் போன்ற தேவர்களுக்கெல்லாம் தலைவன்.
விரையார்பொழில் வேங்கடவன் - மேகங்கள் மலைகளை உரசும் திருவேங்கடத்தில் அருளும் வேங்கடவன்.
நிமலன் - பிரமன், சிவன் போன்ற உயர்பதவியில் இருப்பவர்களுக்கே எட்டாத ஐஸ்வர்யம் உடையவனாய் இருந்தும், எளிய அடியார்களுக்குத் தன்னைத் தந்து நிற்கும் எளிமை கலந்த தூய்மை.
நின்மலன் - அடியார்களின் குற்றங்களைக் கண்டாலும், அவற்றை குற்றமாகக் கருதாமல் "போக்யமாக" (இனிமையாக) ஏற்கும் எம்பெருமானின் பெருந்தன்மை மிக்க தூய்மை.
அடுத்து வரும் 'நீதி வானவன்' என்ற திருநாமம் மிகவும் சிறப்பானது. இது பரமபதத்தை ஆள்பவன் என்ற பொருளைத் தந்தாலும், நுணுக்கமாகப் பார்த்தால் இது சக்ரவர்த்தித் திருமகனான இராமபிரானையே குறிக்கிறது என்பதை அறியலாம்.
ஸ்வாமி வேதாந்த தேசிகன் தனது தசாவதார ஸ்தோத்திரத்தில் இராமபிரானை 'தர்மோ விக்ரஹவான்' (அறமே உருவெடுத்தவன்) என்று போற்றுகிறார். 'நீதி' என்ற சொல்லும் 'தர்மம்' என்ற சொல்லும் இணையானவை.
நீள்மதில் அரங்கத்தம்மான் - நீண்ட மதில்களையுடைய திருவரங்கத்தில் கோயில் கொண்டு அருளும் அரங்கன்.
இந்த ஒன்பது திருநாமங்களையும் சொல்லி அப்பேற்ப்பட்ட அரங்கனின் திருக்கமலப் பாதம் என் கண்ணில் ஒட்டிக் கொண்டு விட்டதே.
ஆழ்வார் அரங்கனின் திருவடியில் தொடங்கி திருமுடி வரை பாடும் 'பாதாதிகேச' வருணனையில் இது முதல் படி. நீண்ட மதில்களையுடைய திருவரங்கத்தில் கண்வளர்ந்தருளும் அழகிய மணவாளனின் திருவடித்தாமரைகள், ஆழ்வார் தேடிச் செல்லாமலே "தானே வந்து" அவர் கண்களுக்குள் புகுந்து கொண்டனவாம்.
திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்!
02-04-2026

கருத்துரையிடுக