‘புகழ்வோம் பழிப்போம்’ - கோமான் ஶ்ரீ பாலாஜி


திருமாலின் திருக்குணங்களை வேதங்களாலேயே முழுமையாகப் பாடி முடிக்க முடியாது என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்க, மிகச்சிறிய அறிவுடைய நாம் நாரணனை அவனின் கீர்த்திகளைப் புகழ்வது என்பது சாத்தியமா? மீறிப் புகழ்வது சரியா? என்ற கேள்வியோடு தொடங்குகிறது இப்பாசுரம்.
புகழ்ந்தால் அது பழிப்பதாகும்! (புகழ்வோம் பழிப்போம்)
புகழாவிட்டால் பழிப்பில்லை (புகழோம் பழியோம்)
நம்மாழ்வார் இப்பாசுரத்தில் கூறுகிறார், "பெருமாளே! உன்னைப் புகழ்ந்தால் அது உன்னைப் பழிப்பதற்குச் சமமாகும்" எனவே ‘புகழ்வோம் பழிப்போம்’, எல்லையற்ற குணங்களைக் கொண்ட ஒருவனை, குறுகிய அறிவைக் கொண்டு "நீ நல்லவன், நீ பெரியவன்" என்று பாராட்டுவது, உண்மையில் அவனுடைய எல்லையற்ற பெருமையைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.
உதாரணமாக, ஒரு மாபெரும் சக்கரவர்த்தியைப் பார்த்து ஒரு ஏழை, "உன்னிடம் நான்கு காசுகள் இருக்கின்றனவே, நீ பாக்கியசாலி" என்று புகழ்ந்தால், அது அந்த அரசனுக்குப் புகழ்ச்சி அல்ல; மாறாக அவமதிப்பு. அதுபோலவே, பரம்பொருளை நாம் புகழ்வதும் அமைகிறது. எனவே, உன்னைப் புகழாமல் இருப்பதே உனக்கு நாம் செய்யும் கௌரவம் எனவே ‘புகழோம் பழியோம்’ என்கிறார் ஆழ்வார்.
நினைத்தாலும் இகழ்ச்சியே (மதிப்போம் இகழ்வோம்)
வாயால் பாடுவது மட்டுமன்றி, மனதால் உன்னை நினைப்பதும் (மதிப்பதும்) கூட உனக்குச் செய்யும் இகழ்ச்சியே அதனால் உன்னை நினைக்காமல் இருப்பதே நல்லது என்று ‘இகழ்வோம் மதிப்போம், மதியோம் இகழோம்’ என்று ஆழ்வார் பாடி நிறுத்தினார்.
இதைக் கேட்ட எம்பெருமானுக்குக் கோபம் வந்தது. "என்னைப் பாடமாட்டாயா?" என்று அவன் கண்கள் சிவக்க, ஆழ்வாரை நோக்கினான்.
பெருமானின் கண்கள் சிவந்ததைக் கண்ட ஆழ்வார் பதறிப்போய், "எங்கள் செங்கண் மாலே! என் மேல் கோபப்படாதே" (சீறல் நீ) என்று வேண்டுகிறார்.
ஆழ்வாரின் கண்கள் கலக்கத்துடன் “உன்னைப் புகழத் தகுதி இல்லை என்று தெரிந்தும், உன்னைப் புகழாமல் இருக்கவும் எங்களால் முடியவில்லை. தீவினையோம்: உன்னைப் புகழத் தகுதி இல்லாதது எங்கள் பாவம்.”
எங்கள் மால் - ஆனால், உன்னைப் பார்த்ததும் புகழத் தோன்றுவது உன் மேல் நாங்கள் கொண்ட அளவற்ற அன்பின் மயக்கம்.
எனவே, புகழத் தொடங்கினால் அது பழிப்பாகி விடுமோ என்று அஞ்சுகிறோம்; புகழாவிட்டால் உன் சீற்றத்திற்கு ஆளாகிறோம். இந்தத் தர்மசங்கடமான நிலை எங்கள் பக்தியின் பித்தம் (மால்) என்கிறார் ஆழ்வார்.
இந்தப் பாசுரம் வெறும் தத்துவ வாதமல்ல — இது ஒரு பக்தனின் உள்ளத்தில் எழும் உண்மையான போராட்டம். "உன்னை என்னால் புகழ முடியாது; ஆனால் புகழாமலும் இருக்க முடியாது" என்ற அந்த ஆனந்தமான துயரமே நம்மாழ்வாரின் பக்தியின் ஆழத்தை நமக்கு காட்டுகிறது.

03-04-2026

Post a Comment

புதியது பழையவை