கரு மாமுகில் உருவா! கனல் உருவா! புனல் உருவா!
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச் சலசயனத்து
அருமாகடல் அமுதே! உனது அடியே சரண் ஆமே.
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி ஏழாம் பத்து, ஒன்பதாம் திருமொழியில் ஒன்பதாவது பாசுரமாக விளங்குவது “கரு மாமுகில் உருவா…” என்ற இப்பாசுரம், வைணவ சமயத்தின் ஆழமான தத்துவங்களை எளிய உருவகங்களின் வழியே நமக்கு கொண்டு சேர்க்கும் பாடலாகத் திகழ்கிறது. ஒரே எம்பெருமான் எவ்வாறு வெவ்வேறு மனிதர்களுக்கு வெவ்வேறு அனுபவமாக விளங்குகிறார் என்பதை ஆழ்வார் இங்கு கண்முன் நிறுத்துகிறார்.
சோழ நாட்டுத் திவ்யதேசங்களுள் தனித்துவமான அமைதியும், இயற்கை எழிலும் நிறைந்த திருத்தலம் திருச்சிறுபுலியூர். பசுமையான வயல்கள் சூழ்ந்த இத்தலத்தில் அருள்மாகடல் பெருமாள், சலசயனத் திருக்கோலத்தில் மிகச் சிறிய பாலக வடிவில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டு எழுந்தருளியுள்ளார். ‘சிறுபுலியூர்’ என்ற பெயர் இத்தலத்திற்கு இருந்தாலும், இங்கு பெருமாள் வழங்கும் அருள் எல்லையற்ற பெருங்கடலாகும்.
பாசுரத்தின் முதல் அடியிலேயே ஆழ்வார் எம்பெருமானின் பல்வேறு அனுபவ நிலைகளை அற்புதமாக வரைகிறார்.
“கரு மா முகில் உருவா!” - அடியவர்களின் துன்பத் தீயைத் தணிக்கும், கார்மேகம் போன்ற குளிர்ந்த வடிவம் உடையவனே!
“கனல் உருவா!” - உன்னிடம் பக்தி இல்லாத எதிரிகளுக்கு, சுட்டெரிக்கும் நெருப்பு போன்ற வடிவம் கொண்டவனே!
“புனல் உருவா!” - அடியவர்கள் அனைவரும் எளிதில் மூழ்கி மகிழக்கூடிய, குளிர்ந்த நீர் போன்ற வடிவம் கொண்டவனே!
“பெரு மால் வரை உருவா!” - சாதாரண மனிதர்களின் அறிவுக்கு எட்டாத, மிகப் பெரிய மலை போன்ற வடிவம் கொண்டவனே!
“பிற உருவா!” - உலகத்தின் அனைத்து உயிருள்ள உயிரற்ற பொருட்களுமே உனது வடிவமாக அமையப்பெற்றவனே!
“நினது உருவா!” - உலகத்தைக் கடந்த உனக்கே உரித்தான, தெய்வீகமான தூய வடிவம் கொண்டவனே!
“திரு மா மகள் மருவும்” - திருமகள் லட்சுமி எப்போதும் இடைவிடாமல் உறைந்து மகிழும்
“சிறுபுலியூர்ச் சலசயனத்து” - திருச்சிறுபுலியூர் திவ்ய தேசத்தின் நீர் அணை மேல் படுத்திருக்கும்
“அரு மா கடல் அமுதே!” - பெறுதற்கு மிக அரிய பாற்கடல் அமுதம் போன்ற இனிமை உடையவனே!
“உனது அடியே சரண் ஆமே” - உன்னுடைய திருவடிகளே அடியேனுக்குப் புகலிடமும் அடைக்கலமும் ஆகும்!
இப்பாசுரத்தின் பொதுவான கருத்து மிகவும் எளிமையானது, ஆனால் ஆழமானது. அடியவர்களின் வாழ்க்கைத் துயரங்களைத் தீர்க்கும் கார்மேகமாகவும், தீயோரை அழிக்கும் நெருப்பாகவும், எளியவர்களுக்குக் குளிர்ந்த நீராகவும், அறிஞர்களால் வியக்கப்படும் மாபெரும் மலையாகவும் விளங்கும் பெருமாள், உலகத்தின் எல்லாவற்றையும் தன் வடிவமாகக் கொண்டிருந்தாலும், தனக்கெனத் தனித்துவமான தெய்வீக மங்கள வடிவோடு விளங்குகிறான். அத்தகைய பெருமைகளைக் கொண்டவன், திருமகள் உறையும் திருச்சிறுபுலியூர் சலசயனத்தில் சயனத்திருக்கிறான். பாற்கடலில் உதித்த பெறுதற்கரிய அமுதம் போன்ற அவனது திருவடிகளே எங்களைப் போன்ற உயிர்களுக்கு மீட்சி தரும் ஒரே சரண் புகலிடமாகும்.
பெருமாள் ஒரே நேரத்தில் உலகிலுள்ள வெவ்வேறு மனிதர்களுக்கு எவ்வாறு வெவ்வேறு நிலைகளில் காட்சியளிக்கிறான் என்பதை ஆழ்வார் இப்பாசுரத்தின் முதல் அடியில் அழகாகக் காட்டுகிறார். இதற்கு உத்தமூர் ஸ்வாமிகள் விரிவான தத்துவ விளக்கத்தைத் தருகிறார்.
பெருமாளின் திருமேனியை அடியவர்கள் பார்க்கும்போது, அது அவர்களுக்குக் கார்மேகம் போன்ற குளிர்ந்த தன்மையைத் தருகிறது. வெயிலில் வாடிய பயிருக்கு மழைமேகம் எவ்வாறு புத்துயிர் அளிக்குமோ, அதேபோல வாழ்க்கைத் தீயில் வெந்து தணியும் உயிர்களின் ஆன்மீகத் தாகத்தையும், துயரங்களையும் பெருமாள் தனது கருணை மழையால் தணிக்கிறான்.
அதே வேளையில், பெருமாளிடம் பக்தியில்லாத எதிரிகளுக்கு அவன் மிகக் கொடிய நெருப்பாகத் தோற்றமளிக்கிறான். இரணியனுக்கும் கம்சனுக்கும் அவன் எவ்வாறு மரண பயத்தை ஏற்படுத்தும் நெருப்பாகத் தோன்றினானோ, அவ்வாறே தீயவர்களின் அகந்தையைச் சுட்டெரிக்கும் நெருப்பாக அவன் திகழ்கிறான். இதையே ஆண்டாள் “நெருப்பென்ன நின்ற நெடுமாலே” என்று திருப்பாவையில் அருளியுள்ளார். ஆனால், அவனது அடியவர்களுக்கோ அவன் எப்போது வேண்டுமானாலும் அணுகக்கூடிய எளிய நீர்நிலையைப் போன்றவன். குளத்தில் உள்ள நீர் தாகத்தோடு வருபவர்கள் அனைவருக்கும் பாகுபாடின்றித் தாகம் தீர்ப்பது போல, பெருமாளும் தன் அடியவர்களிடம் எளிமை என்ற குணத்தைக் காட்டுகிறான். சாதி, குலம், கல்வி என எவ்வித வேறுபாடும் இன்றி எளியவர்களும் அவனது அருளில் திளைக்கலாம்.
நடுநிலையாளர்கள் எனப்படும் பொதுவினருக்கு பெருமாள் அறிவதற்கு கடினமான மாபெரும் மலையாகத் தோன்றுகிறான். மலையின் கம்பீரத்தை தூரத்திலிருந்து பார்த்து வியக்கலாமே தவிர, அதன் உச்சியில் உள்ள இரகசியங்களை எளிதில் அறிய முடியாது. அதுபோல, சரியான பக்தி இல்லாத பொதுவினருக்கு அவன் ஒரு புரியாத தத்துவ மலையாகவே நீடிக்கிறான்.
பாசுரத்தில் வரும் 'பிற உருவா! நினது உருவா!' என்ற வரிகளுக்கு உத்தமூர் ஸ்வாமிகள் விசிஷ்டாத்வைதத்தின் முக்கியக் கோட்பாடான 'சுபாச்ரயத்வ' தமிழில் ‘மங்களகரமான புகலிடம்' என்ற விளக்கத்தை அளிக்கிறார். இவ்வுலகத்தில் உள்ள உயிர்கள், உயிரற்ற பொருட்கள் ஆகிய அனைத்தும் பெருமாளின் உடலாகவே திகழ்கின்றன. இதனை விசிஷ்டாத்வைதத்தில் சரீர-சரீரி உறவு கொண்டவன் என்பர். இதனையே ஆழ்வார் 'பிற உருவா' என்று குறிப்பிடுகிறார்.
ஆயினும், இயற்கையின் குணங்களான சத்துவ, ராஜச, தாமச எனும் முக்குணங்கள் அற்றதும், அவனுக்கே உரித்தான தூய வடிவத்தை 'நினது உருவா' என்று ஆழ்வார் போற்றுகிறார். தியானம் செய்வதற்கும், அடியவர்கள் பற்றிக் கொள்வதற்கும் ஏற்ற பெருமாளின் இந்தத் தூய தெய்வீக மங்கள வடிவத்தையே ‘மங்களகரமான புகலிடம்' என்பர். இந்தத் திருமேனியைத் தரிசிப்பதன் மூலமே மனதின் தூய்மையற்ற எண்ணங்கள் யாவும் நீங்கி ஆன்மா தூய்மை அடைகிறது.
பாசுரத்தின் கடைசி அடியில் வரும் “அருமாகடல் அமுதே!” என்ற சொல் மிக உயர்ந்த ஆன்மீக நயத்தைக் கொண்டது. பாற்கடலைக் கடைந்து தேவர்கள் பெற்ற அமுதம் எவ்வாறு அரியதோ, அதுபோல் வைகுந்தத்தில் உள்ள பரமபத நாதனின் அனுபவமும் சாதாரண உயிர்களுக்கு எட்டாத ஒன்றாகும். ஆனால், அத்தகைய அரிய பரமன், திருச்சிறுபுலியூரில் மிகவும் எளிமையான கோயில் வடிவில் அடியவர்களுக்காகக் கிடைக்கிறான் என்பதே இவ்வரியின் உள்ளுறை பொருள்.
இப்பாசுரத்தில் பஞ்சபூத தத்துவமும் அழகாக மறைந்துள்ளது.
கனல் — நெருப்பு.
புனல் — நீர்.
வரை — நிலம்.
முகில் — காற்றும் ஆகாயமும்.
இதன் மூலம், இப்பிரபஞ்சமே எம்பெருமானின் திருமேனி என்பதை ஆழ்வார் சுட்டிக்காட்டுகிறார்.
திருச்சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமாளை நோக்கி ஆழ்வார் இறுதியில் கூறும் “உனது அடியே சரண் ஆமே” என்ற வரி, வைணவ சமயத்தின் மையக் கருத்தான அடைக்கலத்தின் உச்சமாகும். உலகில் நிலையற்ற புகலிடங்களைத் தேடி அலைவதற்குப் பதிலாக, எம்பெருமானின் திருவடிகளே நித்தியமான பாதுகாப்பு என்பதை ஆழ்வார் உறுதியாக அறிவிக்கிறார்.
கருணை மேகமாகவும், ஞான அக்னியாகவும், அமுத வடிவாகவும், உலகமெங்கும் நிறைந்த ஆதாரமாகவும் விளங்கும் திருச்சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமாளின் திருவடிகளைச் சரணடைந்தவர்களுக்கு வாழ்க்கைத் துன்பங்கள் அனைத்தும் கரைந்து போகும்.
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.

கருத்துரையிடுக