அதிகப் பார்வை

“என்னால் செயற்பாலது என்?” - கோமான் ஶ்ரீ பாலாஜி


இவை அன்றே நல்ல, இவை அன்றே தீய*
இவை என்று இவை அறிவனேலும்* இவை எல்லாம்

என்னால் அடைப்பு, நீக்கு ஒண்ணாது இறையவனே!*

என்னால் செயற்பாலது என்?  


நம்மாழ்வார் அருளிச்செய்த நான்கு தமிழ் மறைகளுள் மூன்றாவதாகத் திகழும் பிரபந்தம், பெரிய திருவந்தாதியாகும். இது நான்கு வேதங்களுள் அதர்வண வேதத்தின் சாரமாக வைணவப் பூர்வாசிரியர்களால் போற்றப்படுகிறது. 


முதலாழ்வார்கள் மூவர் இயற்றிய திருவந்தாதிகள் ஒவ்வொன்றிலும் நூறு பாசுரங்கள் அமைந்திருக்க, நம்மாழ்வாரின் பெரிய திருவந்தாதியோ எண்பத்தேழு பாசுரங்களை மட்டுமே கொண்டு வடிவில் சிறியதாகக் காணப்படுகிறது. இருப்பினும், "சிறுமை" என்பது உடலளவிலும் "பெருமை" என்பது குண அளவிலும் கொள்ளத்தக்கது என்ற வியாக்யான மரபின்படி, சொல்லழகும் பொருளழகும் மிகுந்து விளங்குவதால் இப்பிரபந்தம் "பெரிய திருவந்தாதி" எனச் சிறப்புப் பெயர் பெற்றது. மேலும், இதன் எழுபத்தைந்தாம் பாசுரத்தில் "யான் பெரியன் நீ பெரியை என்பதனை யார் அறிவார்" என்று ஆழ்வார் எம்பெருமானோடு தன் ஆன்மப் பெருமையைச் சமமாகப் பேசி வாதாடுவதால், இப்பிரபந்தம் இப்பெயரைப் பெற்றது என்பர்.


இப்பின்னணியில், பெரிய திருவந்தாதியின் மூன்றாம் பாசுரமான "இவை அன்றே நல்ல, இவை அன்றே தீய" என்னும் பாசுரம், ஜீவாத்மாவின் இயலாமையையும், “நான் செய்கிறேன்” என்ற அகந்தையை மறுத்து, அனைத்தும் இறைவனின் திருவுள்ளத்தினாலேயே நடைபெறுகின்றன என்ற சரணாகதி தத்துவத்தையும் மிக ஆழமாக எடுத்துரைக்கிறது.


சாஸ்திரங்கள் நம் வாழ்க்கைக்கு இரண்டு வழிகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

ஒன்று நாம் செய்ய வேண்டிய நற்செயல்கள். மற்றொன்று விலக்கப்பட வேண்டிய தீய செயல்கள்.


இந்த இரண்டையும் நம்முடைய அறிவால் புரிந்துகொள்ள முடியும். “இது தர்மம்”, “இது அதர்மம்” என்று பகுத்தறியும் திறன் நமக்கு உண்டு. ஆனால், அவ்வாறு அறிந்திருப்பதாலேயே நம்மால் நல்லதை முழுமையாகச் செய்யவும், தீயதை முழுவதுமாக விலக்கவும் முடியாது.


இதைத்தான் நம்மாழ்வார் மிகுந்த மனவருத்தத்தோடு வெளிப்படுத்துகிறார். “நல்லது எது என்று எனக்குத் தெரியும். தீயது எது என்றும் தெரியும். ஆனால் நல்லதைச் செய்யவும் முடியவில்லை; தீயதை விலக்கவும் முடியவில்லை.” என்பதே இப்பாசுரத்தின் வெளிப்படையான பொருள். அதற்கு காரணம் என்ன அடுத்த வரியிலேயே சொல்கிறார். அதுவே இந்தப் பாசுரத்தின் உயிர்நாடி போன்ற வரி - “என்னால் செயற்பாலது என்?” என்பதாகும். இதில் ஆழ்வார், “நான் சுயமாகச் செய்யக்கூடியது என்ன இருக்கிறது?” என்று கேட்கிறார். இது வெறும் தாழ்மைக் கூறல்ல. விசிஷ்டாத்வைத தத்துவத்தின் மையக் கருத்தே இதிலுள்ளது. 


மனிதன் தன்னை சுதந்திரமானவன் என்று நினைக்கிறான். “நான் செய்தேன்”, “நான் சாதித்தேன்”, “என் முயற்சியால் இது நடந்தது” என்று பெருமை கொள்கிறான். ஆனால் உண்மையில், ஜீவாத்மா எம்பெருமானுக்கு முற்றிலும் அடிமைப்பட்டவன். அவனது சிந்தனை, சொல், செயல் அனைத்திற்கும் பின்னால் எம்பெருமானின் அந்தர்யாமித்துவ (அனைத்திற்குள்ளும் இருந்து நியமிக்கும்) ஆளுமை இருக்கிறது.


அதனால்தான் ஆழ்வார், “நீ எப்படி நடத்துகிறாயோ அப்படியே நான் நடக்கிறேன்.”

என்ற உண்மையை உணர்ந்து பேசுகிறார்.


இதனை உத்தமூர் ஸ்வாமிகள் தனது வியாக்யானத்தில், விசிஷ்டாத்வைத தத்துவத்தின்படி, ஜீவாத்மா அறிவே வடிவினன் ஆயினும், அவன் எம்பெருமானுக்கு முற்றிலும் அடிமைப்பட்டவன் (பரதந்திரன்). மனிதர்கள் தீய செயல்களில் ஈடுபடும்போது, சாஸ்திரங்களில் உள்ள விலக்கு விதிகளாகிய நிஷேதங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தால், அந்த விவேகத்தைக் கொண்டு தங்களைத் தடுத்துக் கொள்ள முயல்வர். ஆனால், அத்தகைய விவேகமும் பகுத்தறிவும் மட்டுமே ஒருவனை நல்வழியில் நடத்திவிடப் போதுமானவை அல்ல என்பதை ஆழ்வார் இங்கு தெளிவுபடுத்துகிறார்.


அனைத்துச் செயல்களுக்கும் முதன்மைத் தலைவன் (பிரதான கர்த்தா) எம்பெருமானே என்பதால்தான் ஆழ்வார் உருக்கமாக ‘இறையவனே!’ என்று அழைக்கிறார்.


பாசுரத்தின் ஆழமான தளத்தில், எம்பெருமானுக்கும் ஆழ்வாருக்கும் இடையே நடைபெறும் ஒரு தெய்வீக விவாதம் வியாக்யானங்களில் விவரிக்கப்படுகிறது. ஆழ்வார் தன் குறைபாடான சொற்களால் எம்பெருமானைப் புகழ்வது அவனது எல்லையற்ற பெருமைக்கு இழுக்கு என்று கருதி விலக முயல்கிறார். ஆனால் எம்பெருமான் அவரிடம் பின்வருமாறு வாதாடுகிறான், “ஆழ்வாரே, நீர் என்னைப் பற்றி அறிந்தவர் அல்லவா? சென்ற பாசுரத்தில் “புகழோம் பழிப்போம்” என்றீர் இப்பாசுரத்தில் அவ்வாறு முன் பாசுரத்தில் பாடியதற்கு நீர் காரணமில்லை அப்படி பாட வைத்தது நான் தான் என்கிறீர். நான் துதிக்கத் தகுந்தவன் அல்லவா? துதியை விரும்புகிறவன் அல்லவா? அப்படியானால் என்னைப் புகழாமல் ஏன் விலகுகிறீர்? மயர்வற மதிநலம் பெற்ற நீரே என்னைத் துதிக்காமல் விலகினால், வேறு யார் என்னை வாழ்த்துவர்? உலகில் உள்ள மற்றவர்களின் துதிகளுக்கும் எனது துதிக்கும் உள்ள வேறுபாட்டை உணர்வீராக" என்று.


எம்பெருமானைப் புகழ்வதில் குற்றச்சாட்டுகளாகத் தோன்றுபவையும் கூட அவனது "சௌலப்யம்" (எளிமை) என்னும் கல்யாண குணத்தையே காட்டும். உதாரணமாக, அவனைக் "கள்ளர் தலைவன்" என்று ஏசினாலும் அது அவனுக்குப் புகழே ஆகும்; ஏனெனில் அது அவனது அடியார் மீதான எளிமையைக் காட்டுகிறது. பெரிய திருவந்தாதியின் முப்பத்தெட்டாம் பாசுரம் இதனை உறுதிப்படுத்துகிறது, "இமைக்கும் பொழுதும் இடைச்சி குமைத்திறங்கள் ஏசியே யாயினும் ஈன்துழாய் மாயனையே பேசியே போக்காய் பிழை”. எம்பெருமானைப் பற்றிய நினைவே பாவநிவர்த்திக்குக் காரணம் என்பதையே ஆண்டாள் நாச்சியாரும் “போயப் பிழையும் புகு தருவான்” என்றாளோ.


மேலும், இறைவனின் கண்களைச் செந்தாமரைக்கு ஒப்பிடுவதும், "அம்புபோல் சூரியன் போகிறான்" என்று கூறுவதும் உலகியல் உவமைகளாகக் குற்றமாகாது. சூரியன் அம்பைப் போல் விரைந்து செல்கிறான் என்னும்போது அவனது வேகமும் நேர்மையும் மட்டுமே கருதப்படுமே தவிர, அம்பு போன்ற வெப்பமோ அல்லது சிறுமையோ அங்கு உவமிக்கப்படுவதில்லை. அதுபோலவே இறைவனின் கண்களைத் தாமரைக்கு ஒப்பிடுவதும் அதன் குளிர்ச்சியையும் மென்மையையும் குறிக்கவே ஆகும்.


ஆழ்வார் தன் இயலாமையைக் கூறி விலக நினைப்பது உண்மையில் எம்பெருமான் மீதான காதல் ஊடலே. இதனை பெரியோர்கள் பிரணய கலகம் என்பர். 


தன் கணவனால் மதிக்கப்படும் ஒரு மனைவி, ஊடலின் போது கோபமாகப் பேசுவது கணவனுக்கு எவ்வாறு மகிழ்ச்சியைத் தருமோ, அதேபோல் ஆழ்வாரின் இவ்வார்த்தைகளும் எம்பெருமானுக்குப் பேரின்பத்தை அளிக்கின்றன.


எம்பெருமான் ஆழ்வாரை நோக்கி, “என்னை அறிய முடியாது என்று தெளிந்தவனே உண்மையாக அறிந்தவனாகிறான்; அதுபோல என்னைப் புகழ முடியாது என்று உணர்ந்து பேசுபவனே என்னை முழுமையாகப் புகழ்ந்தவனாகிறான். எனவே, ஸ்தவப்ரியனான என்னை நீர் புகழும்போது, நானும் உம்மைப் புகழ்ந்து 'ஸ்தோதா' என்ற என் பெயரை நிலைநிறுத்திக் கொள்வேன்" என்று அருளினான்.


கணவனால் மதிக்கப்பட்ட மனைவியைப் போலே, எம்பெருமானால் தத்துவம் தெளிவிக்கப்பட்டுப் புகழப்பட்ட ஆழ்வார், தன் நெஞ்சில் பொங்கிய பேரானந்தத்தால் எம்பெருமானின் பேரருளை வியந்து இப்பாசுரத்தை நிறைவு செய்கிறார். எம்பெருமானின் கேள்விக்கு அடுத்தப் பாசுரத்தில் “என்னில் மிகு புகழார் யாவரே” என்று விடைத் தருகிறார்.


இந்தப் பாசுரம், அடைக்கலத்தின் உயிர்நாடியான "ஆகிஞ்சன்யம்" (எனக்கு வேறு புகலிடம் இல்லை என்னும் நிலை) மற்றும் "அநந்யகதித்வம்" (உன்னைத் தவிர வேறு காப்பவர் இல்லை என்னும் நிலை) ஆகியவற்றை ஜீவாத்மாவின் குரலில் ஒலிக்கச் செய்கிறது. 


நல்லதைச் செய்யவும் தீயதை விலக்கவும் தன் சக்தியால் இயலாது என்பதை ஒப்புக்கொள்வதே உண்மையான சரணாகதி. இந்த அகந்தை ஒழிந்த நிலையில்தான் இறைவனின் கருணை முழுமையாக வெளிப்படும் — முக்தி அங்கிருந்தே கிடைக்கும் என்பது இப்பாசுரத்தின் ஆழமான செய்தி. 


நம்மாழ்வார் திருவடிகளே சரணம்.

Post a Comment

புதியது பழையவை