அதிகப் பார்வை


பெரியாழ்வார் அருளிய பெரியாழ்வார் திருமொழியில் (முதற்பத்து, 2-ம் திருமொழி, முதல் பாசுரம்) யசோதை அன்னையின் அரவணைப்பில் கண்ணனின் திருவடி அழகைக் கொண்டாடும் இந்தப் பாசுரத்தில், தாமரை போன்ற தன் திருவடியைத் தானே கைகளால் பிடித்து, வாயில் வைத்துச் சுவைக்கும் கண்ணனின் அந்தப் பால்ய லீலையைக்கண்டு மெய்மறக்கிறாள் யசோதை. அந்தப் பரவசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள "பவள வாய் ஆய்ச்சிமீர்! வந்து காணீரே!" என்று அழைக்கிறாள்.
சீதக்கடலுள் அமுதன்ன தேவகி - பாற்கடலில் தோன்றிய அமுதம் போன்றவள் தேவகி அன்னை. அமுதம் எப்படி உண்பவருக்குப் பேரின்பம் தருமோ, அப்படியே அமுதம் போன்ற கண்ணனை உலகிற்குத் தந்தவள் தேவகி.
கோதை குழலாள் அசோதை - மலர்மாலைகள் சூடிய கூந்தலை உடையவள் யசோதை அன்னை. தேவகி அன்னை கம்சனின் பயத்தால், தன் திருவயிற்றில் உதித்த அமுதத்தையே (கண்ணனை) யசோதைக்குப் பரிசாக (போத்தந்த) அனுப்பி வைத்தாள்.
பாதக்கமலங்கள் - எம்பெருமானின் திருவடிகள் தேன் பொழியும் மலர்கள் போன்றவை (நம்மாழ்வார் திருவாய்மொழியிலே “தேனே மலரும் திருப்பாதம்”).
கடலில் தோன்றிய அமுதம் தேவர்களுக்கு மட்டும் உரியது (புறவமுது). ஆனால், கண்ணன் என்னும் அமுதம் அனைவருக்கும் அருளக்கூடியது (உள்ளமுது).
தன் திருவயிற்றில் இருக்கும் உலகங்கள் அனைத்தும் உய்ய வேண்டும் என்பதற்காகவும், தன் பாதத்தில் ஊறும் தேனைத் தானே சுவைப்பதற்காகவும் கண்ணன் தன் திருவடியை வாயில் வைத்துச் சுவைக்கிறான்.
பேதைக்குழவி - ஒன்றுமறியாத பாலகனைப் போல, தன் பிஞ்சுக்கரங்களால் தன் திருவடித் தாமரைகளைப் பிடித்து இழுத்து, வாயில் வைத்துச் சுவைக்கிறான்.
தாமரை மலர்: செந்தாமரை இதழ் போன்ற மென்மையும், சிவந்த நிறமும் கொண்ட அந்தப் பாதங்கள் காண்பவர் கண்ணைக் கவர்பவை.
"பவளம் போன்ற சிவந்த இதழ்களை உடைய பெண்களே! வாருங்கள்! அரியதொரு காட்சியைக் காண வாருங்கள்!" என்று யசோதை கூவி அழைக்கிறாள்.
இந்தக் காட்சியைத் தான் மட்டும் கண்டு மகிழ்ந்தால் போதாது, அருகில் இருப்போரும் கண்டு உய்ய வேண்டும் என்ற தாய்மை உள்ளத்தோடு அவர்களை அழைக்கிறாள்.

29-03-2026

Post a Comment

புதியது பழையவை