செவ்வாய், 18 ஜூன், 2013

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 57

மூன்றாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம் முதல் 
பத்தொன்பதாவது அத்தியாயம் வரை

ஸ்ரீ வராஹ அவதாரம் 

மைத்ரேயரும் விதுரரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மைத்ரேயர் விதுரருக்கு ஏற்பட்ட ஐயங்களுக்கெல்லாம் விடை கூறி விளக்கிக் கொண்டு வருகிறார். ப்ரஹ்மா உலகத்தைப் படைப்பதைக் கருதி, பின்னால் படைப்புத் தொழிலில் உதவி செய்வதற்காக, ஸனகர், ஸனத் குமாரர் முதலான நான்கு பிள்ளைகளை அவர் தன் மனத்திலிருந்தே உருவாக்கினார். ஆனால், பரப்ரஹ்மத்தைத் தியானிப்பதில் மட்டுமே ஈடுபாடு கொண்ட அவர்கள், படைப்புத் தொழிலில் உதவிக்கு வர மறுத்தார்கள். சற்றும் அயராத நான்முகன், ஸ்வாயம்புவ மனு என்னும் குமாரரை உருவாக்கினார். அவர் மூலம் மேற்கொண்டு சிருஷ்டியைத் தொடர வேண்டும்; உலகத்தையெல்லாம் மக்களால் நிரப்ப வேண்டும்; நல்ல தர்மங்களை அனைவரையும் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும் - என்பதே நான்முகனின் குறிக்கோள். 

ஸ்வாயம்புவ மனு, சதரூபை என்பவளைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு ப்ரிய வ்ரதன், உத்தான பாதன் என்ற இரு மகன்கள் பிறந்தார்கள். ஸ்வாயம்புவ மனு உலகத்தைப் படைக்கத் தொடங்கியவர், மேற்கொண்டு தொடர முடியாமல் நிறுத்தினார். ஏனென்றால், ஹிராண்யாக்ஷன் என்னும் அசுரன் பூமாதேவியை எடுத்து ப்ரளய ஜலத்துக்குள்ளே ஒளித்து வைத்து விட்டான். மக்களைப் படைத்தால், அவர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது - என்பதால் ஸ்வாயம்புவ மனு தன் தந்தையான நான்முகனிடத்தில் வந்து, ‘பூமியை விடுதலை செய்யுங்கள்; அதன் பின்தான் படைப்பைத் தொடர முடியும்’ என்று வேண்டினார். 

இதை எப்படிச் செய்யலாம் என்று ப்ரஹ்மா யோசித்துக் கொண்டிருக்கும்போதே, அவருடைய மூக்கிலிருந்து, சிறிய அளவில் வராஹ ரூபம் ஒன்று தோன்றியது. அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, அது நெடுநெடுவென வேகமாக வளர்ந்து, ஒரு யானை அளவுக்கும், பின்னர் ஆயிரக்கணக்கான யானைகள் அளவுக்கும் நெடிது உயர்ந்து பருத்தது. அவரே வராஹப் பெருமான். திருமாலின் முக்கியமான அவதாரம். பன்றியின் தனிச்சிறப்பு, அதனால் நிலத்தில் நடக்க முடியும். நீரில் நீந்தவும் முடியும். சகதியிலும் சுலபமாக நடக்க முடியும். பூமா தேவி கடலுக்குள் இருந்தபடியால், இந்தத் திறமைகள் எல்லாம் இருந்தால்தான் அவளைக் காக்க முடியும் என்பதற்காக, பகவான் பன்றியாகத் தோன்றினார். 

ஸ்வாமி நம்மாழ்வார் தம்முடைய திருவிருத்தம் என்னும் ப்ரபந்தத்தில், வராஹ அவதாரத்தின் மேன்மையை உரைக்கிறார். 

‘ஈனச் சொல்லாயினுமாக, எறிதிரை வையம் முற்றும்
ஏனத்துருவாய் இடந்தபிரான், இருங் கற்பகம் சேர்
வானத்தவர்க்கும், அல்லாதவர்க்கும், மற்ற எல்லாயவர்க்கும்
ஞானப்பிரானை அல்லால் இல்லை, நான் கண்ட நல்லதுவே...’
என்று சபதம் செய்கிறார். 

அதாவது, “அடியேன் ஏழை. ஏழை சொல் அம்பலம் ஏறாமல் போனாலும், எனக்குத் தெரிந்த நல்லதை உலகத்தாருக்கு உரைக்கிறேன். பன்றியாய் அவதரித்து, பூமாதேவியைப் ப்ரளயக் கடலிலிருந்து மீட்டான் வராஹன். அதே போல, ஸம்சாரம் என்னும் பெருங்கடலில் அமிழ்ந்திருக்கும் நம் அனைவரையும், அதே வராஹப் பெருமான் மீட்பான். இது உறுதி. பூலோகத்தில் உள்ளவர்களுக்கும், வானத்தவர்களுக்கும், ஏன் வைகுந்தத்தில் இருக்கும் நித்யஸூரிகளுக்கும் கூட, இந்த வராஹப் பெருமான் திருவடிகளே ஒரே புகல். இந்த வார்த்தை உண்மை. இதுவே நானறிந்த நன்மை! என்னை நம்பும் அனைவரும் வராஹனையே நம்ப வேண்டும்” - என்கிறார் நம்மாழ்வார். 


அவதாரங்கள் எத்தனையோ இருந்தாலும், இந்த அவதாரத்திற்குத் தனிச்சிறப்பு உண்டு என்று கூரத்தாழ்வாரின் திருக்குமாரரான ஸ்ரீ பராசர பட்டர் அருள்கிறார். இப்போது சொல்லப்போகும் அர்த்தத்தை நன்கு கருத்தில் கொள்க. மற்ற அவதாரங்களைக் குறைத்துக் கூறுவதற்காக, இது சொல்லப்படவில்லை. வராஹ அவதாரத்தின் பெருமையை நிலை நாட்டவே இக்கருத்து கூறப்படுகிறது. இலக்கியக் கண்கொண்டு மட்டும் ரசித்திடல் வேண்டும் இதனை! 

‘முதல் அவதாரமான மத்ஸ்ய அவதாரம் மீன். தண்ணீரை விட்டுக் கரை ஏற முடியாத மீனாக இருக்கும்போது, ஸம்ஸாரக் கடலிலிருந்து நம்மை அது கரை ஏற்ற முடியுமா? இயலாது. அடுத்து கூர்மம். ஆமையான அவதாரம். அதன் முதுகையே மந்தர மலை அழுத்துகிறபோது, ஸம்ஸார பாரத்தைச் சுமந்து கொண்டு, அதனால் அழுத்தப்படும் நம்மை அது மீட்க முடியுமா? இயலாது. நரசிம்ம அவதாரம் சிறந்தது. ஆனால் கழுத்துக்கு மேலே சிங்க உருவமும், கழுத்துக் கீழே மனித உருவமும் கொண்டிருக்கிறான். இரண்டு உருவம் கொண்டவனை நம்ப இயலுமா? விட்டு விடுவோம். 

‘அடுத்து வாமன அவதாரம். உலகத்தையே தாவி அளந்த திருவிக்கிரமனாக வளர்ந்தவன். ஆனால், சிறிய காலைக் காட்டி மூன்று அடி மண் வேண்டி, பின்னால் பெரியதாக வளர்ந்து, அளந்து கொண்டவன். ஆகையால், அவனிடத்தில் நமக்கு நம்பிக்கை பிறவாது. சரி. 

‘அடுத்து, ஆவேச அவதாரமான பரசுராமனைப் பற்றலாம் என்றால், அவரே பெரும் கோபக்காரர். நாமோ கோபத்திலிருந்து விடுதலை அடையத் தவித்துக் கொண்டிருக்கிறோம்; அவரை எப்படிப் பற்ற முடியும்? அடுத்து ஸ்ரீ ராமனைப் பற்றலாம். ஆனால், அவரோ சக்ரவர்த்தித் திருமகன். மிகவும் உயர்ந்தவர். எளிதில் நாம் அவரை அண்டி விட முடியாது. கண்ணன் எளியவனாயிற்றே. அவனைப் பற்றலாமா? ஏலாப் பொய்கள் உரைப்பான்; சொல்லொன்று, செயலொன்றாக இருப்பான்; ஆகையால், அவனை நம்ப முடியாது. அவன் அண்ணன் பலராமனோ, எப்போதும் சண்டைக்காரர். பாரத யுத்தத்தின்போது, தம்பியையே கை விட்டு விட்டு, தீர்த்த யாத்திரை சென்று விட்டவர். நம்மையும் கை விட்டு விடுவாரோ, என்னவோ! 

‘கடைசியான கல்கி அவதாரமோ இன்னும் ஏற்படவே இல்லை. எங்கே பற்ற? ஆகவே, இவை அனைத்தையும் விடுத்து, ப்ரளயக் கடலில் மூழ்கி இருந்த பூமாதேவியைக் கிளர்ந்து எடுத்த வராஹப் பெருமானையே நாம் பற்ற வேண்டும். அவனே நம் அனைவருக்கும் புகலாவான்’. இப்படி, பராசர பட்டர் என்னும் மஹான் ரசித்து அனுபவிக்கிறார். 

ஆண்டாள் ஒரு பாசுரத்தில்,
‘பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டொரு நாள்
மாசுடம்பில் நீர்வாரா மானமில்லாபன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,
பேசி இருப்பனகள், பேர்க்கவும் பேராவே’
என்று கூறுகிறாள். 

‘பூமாதேவி பாசி பிடித்து, தண்ணீருக்குள் மறைந்திருந்தாள். தன்னுடைய திருமேனியில் நீர் சொட்ட, பகவான் வராஹனாக பூமா தேவியை கிளர்ந்தெடுத்தான். அவளுக்குப் பல தர்மங்களை உரைத்தான். அவனே நம் அனைவருக்கும் அடைக்கலம்! தன்னை பக்தியுடன் நினைப்பவர்களை, தன்னிடம் சராணகதி அடைபவர்களை கடைசி வரைக்கும் நினைவில் கொண்டு, முக்தி கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறான். அந்த வார்த்தையில் நம் அனைவருக்கும் நம்பிக்கை வேண்டும்’ - என்கிறாள் ஆண்டாள். 

ஸ்ரீ வேதாந்த தேசிகன் தன்னுடைய மறைபொருள் விளக்க நூலில் வராஹப் பெருமானின் பெருமையை, மற்ற அனைவரோடும் ஒப்பிட்டு தனிச் சிறப்பாக விளக்குகிறார். இப்படிப் புராணங்களும், ஆழ்வார்களும், ஆச்சார்யர்களும் கூறியபடி பார்த்தால், வராஹப் பெருமான் நம் அனைவருக்கும் ஒரே புகல். இந்த எம்பெருமானைச் சேவிக்க வேண்டுமானால், ஸ்ரீ முஷ்ணத்தை அடையலாம். அங்கே ஸ்ரீ பூவராஹ ஸ்வாமியாக அற்புதமாகக் காட்சி கொடுக்கிறார். ஏன்? திருமலை திருப்பதியே மிக மிகப் பழைய காலத்தில் வராஹ க்ஷேத்திரம்தான். பின்னாளில்தான் ஸ்ரீனிவாசப் பெருமாள் அங்கே வந்து அடைந்தார். 

அதேபோல் வால்டேர் சிம்மாச்சலம். ஆந்திரத்தில் விசாகப்பட்டினத்திற்கு அருகே இருக்கும் திருத்தலம். அங்கே பெருமான், வராஹனாகவே காட்சி கொடுக்கிறார். ஆண்டு முழுவதும் சந்தனத் திருக்காப்பு சாற்றிக் கொண்டு, அட்சய த்ருதியை அன்று மட்டும் சந்தனக் காப்பு களையப்பட்டு, வராஹ பகவான் நரசிம்மனாகக் காட்சி கொடுக்கிறார். இப்படி இமயம் முதல் குமரி வரை, எத்தனையோ திருத்தலங்களில் பகவான் வராஹனாக உள்ளார். இவர் எதற்கு அவதரித்தார்? ஏன் இராண்யாக்ஷனால் பூமிப்பிராட்டி ஒளித்து வைக்கப்பட்டாள்? அந்தப் பின்புலத்தைச் சற்றே பார்ப்போம். 

அடியேன் ஓரோர் அத்தியாயமாகத்தான் கூறிக் கொண்டு வந்தேன். ஆனால், இப்போதோ ஸ்ரீ வராஹ அவதாரத்தைச் சொல்லும் ஏழு அத்தியாயங்களையும் ஒரு சேரக் கூறுகிறேன். ஏனென்றால் செய்தி, கோர்வையாகப் புரிய வேண்டுமானால், இவை அனைத்தையும் சேர்த்துச் சொன்னால்தான் எளிதில் விளங்கும். 

ஒரு முறை ப்ரஹ்மாவினுடைய மகன்களான ஸனகர், ஸனத் குமாரர் முதலானோர் வைகுந்தத்தை அடைந்து பெருமானைத் தரிசிக்க விரும்பினார்கள். பகவானுடைய திருக்கோயிலை த்வார பாலகர்களும், க்ஷேத்ர பாலகர்களும் அதாவது - கோயில் காப்பான், வாயில் காப்பான் ஆகியோர் காத்துக் கொண்டிருந்தார்கள். குமுதன், குமுதாக்ஷன், புண்டரீகன், வாமனன், ஸங்கர்ஷணன், ஸர்ப்பநேத்ரன், ஸுமுகன், ஸுப்ரதிஷ்டிதன் ஆகிய எண்மர் க்ஷேத்ர பாலகர்கள். கிழக்குப் புறத்தில் சண்டப் பிரசண்டர்கள்; தெற்குப் புறத்தில் பத்ரன், ஸுபத்ரன்; மேற்குப் புறத்தில் ஜெயன், விஜயன்; வடக்குப் புறத்தில் தாதா, விதாதா ஆகியோர் த்வார பாலகர்கள். 

ஸனகர், ஸனத்குமாரர் முதலானோர் மேற்குப் புறத்திலிருந்து உள்ளே நுழைய முற்பட்டார்கள். அப்போது பகவான் யோக நித்திரை கொண்டிருந்தார். ஆகவே, ஜெயன், விஜயன் ஆகிய த்வார பாலகர்கள், ப்ரஹ்மனின் மகன்களைத் தடுத்தார்கள். சற்று நேரம் பொறுத்துப் போய் தரிசிக்கலாம் என்றனர். அது கண்டு கோபம் கொண்ட ஸனகர், ஸனத்குமாரர்கள் ஜெயன், விஜயன் ஆகியோரை ‘நீங்கள் பூலோகத்தில் போய் பிறக்கக் கடவீர்கள்’ என்று சபித்தார்கள். தாங்கள் செய்த குற்றத்தை உடனே உணர்ந்து கொண்ட ஜெய - விஜயர்கள் மன்னிப்பு வேண்டினார்கள். 

அரவம் கேட்டு, எல்லாம் அறிந்த எம்பெருமான், ஏதும் அறியாதவர் போல் எழுந்து வந்தார். தன்னிடம் தொண்டு புரிபவர்களுக்காக, தானே ஸனகர், ஸனத்குமாரர்களிடத்தே மன்னிப்பு வேண்டினார். இது கண்டு நெகிழ்ந்து போன குமாரர்கள், ‘பகவானே! தாங்கள் இவர்களுக்கு எமது சாபத்தை எவ்விதத்தில் கொடுத்தாலும் அது எங்களுக்குச் சம்மதம். நாங்கள் தடை சொல்ல மாட்டோம்’ என்றனர். 

பெருமானோ, ப்ரஹ்மாவின் குமாரர்களின் சாபத்தை வீணாக்கக் கூடாது என்கிற எண்ணத்தோடே, தானே கூறினார். ‘நீங்கள் பூலோகத்தில் மூன்று முறை அசுரர்களாகப் பிறப்பீர்கள். அப்போது என்னிடத்திலேயே கோபம் கொண்டு எதிர்ப்பீர்கள். இடைவிடாமல் கோபத்தோடே என்னைப் பற்றியே சிந்திப்பீர்கள். இதன் மூலமாக நானே உங்களை அழிப்பேன். நீங்கள் அனைவரும் இறுதியில் என்னை வந்து சேர்வீர்கள்’ என்றார். 

இதன்படியாக ஜெயனும், விஜயனும் மும்முறை பூலோகத்தில் பிறந்தார்கள். அதில் முதல்முறை க்ருத யுகத்தில் ஹிரண்ய கசிபு - ஹிரண்யாக்ஷனாகவும், அடுத்து த்ரேதா யுகத்தில் ராவணன் - கும்பகர்ணனாகவும், அடுத்து த்வாபர யுகத்தில் சிசுபாலன் - தந்தவத்ரனாகவும் பிறந்தனர். இவர்கள் அனைவரையும் பகவானே அழித்தார். இறுதியில் இவர்கள் வைகுந்தத்தைத் திரும்ப அடைந்தார்கள். இதுதான் ஹிரண்யன், ஹிரண் யாக்ஷன் ஆகியோர் பிறந்ததன் பின்புலம். 

இவர்களைப் பெற்றவர்களைப் பற்றிக் கூறுகிறேன். திதி தேவி கச்யபரை மணந்தாள். தவறான காலத்தில் அவரோடு கூடியபடியால், மிகுந்த வீர்யமுள்ள கொடுமைக்காரர்களான இரண்டு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். அவர்களே மூத்தவனான ஹிரண்ய கசிபுவும், இளையவனான ஹிரண்யாக்ஷனும். இவர்கள் வேள்வி, தர்ம காரியங்கள், குழந்தைகள், பெண்கள் ஆகிய அனைவரையும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். ஸ்ரீமன் நாராயணனைத் தங்களுக்கு முதல் விரோதியாக நினைத்து, அவரோடே யுத்தம் செய்து அழிக்க வேண்டும் என்று உறுதி கொண்டார்கள். 

ஆகவே, ஹிரண்யாக்ஷன், உலகம் நலிவதற்காக பூமாதேவியை ஒரு துணி போலச் சுருட்டி, அண்டவெளிக்கு அப்பால் உள்ள ப்ரளயக் கடலில் கொண்டு போய் அமிழ்த்தி விட்டான். இவனை அழிப்பதற்காகத்தான் திருமால் வராஹமாக அவதரித்தார். இனி நாம் விட்ட இடத்தைத் தொடர்வோமா? 

பூமியை எப்படி மீட்கலாம் என்று யோசித்தார் ப்ரஹ்மா. அவருடைய மூக்கிலிருந்து சிறிய பன்றிக்குட்டி வெளிவந்து வெகு வேகமாக வளர்ந்தது. எவ்வளவு பெரியதாக வளர்ந்தார்? அவர் என்ன அற்புதச் செயல்களைச் செய்தார்? - என்பதையெல்லாம் அடுத்த வாரம் நோக்குவோம். 

(தொடரும்) 

ஒரு திருத்தம்

அத்தியாயம் 55-ல் ருதுவைப் பற்றி வெளியான விவரங்கள் சரியல்ல. சரியான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன. இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்த ருதுவென்றும்; ஆனி, ஆடி க்ரிஷ்ம ருதுவென்றும்; ஆவணி, புரட்டாசி வர்ஷ ருதுவென்றும்; ஐப்பசி, கார்த்திகை சரத் ருதுவென்றும்; மார்கழி, தை ஹேமந்த ருது என்றும்; மாசி, பங்குனி சிசிர ருது என்றும் சொல்லப்படுகின்றன.

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 56

மூன்றாவது ஸ்கந்தம் - பனிரெண்டாவது அத்தியாயம்

பிரமன் படைக்கத் தொடங்குதல் 

காலத்தின் பெருமையைக் கூறிய மைத்ரேயர், மேலும் ப்ரஹ்மா, சிருஷ்டித்ததை விளக்குகிறார். நான்முகன், தன்னுடைய மனத்திலிருந்தே ஸனகன், ஸனந்தன், ஸனாதனன், ஸனத் குமாரன் என்ற நான்கு குமாரர்களைத் தோற்றுவித்தார். அவர்களை சிருஷ்டித் தொழிலுக்கு வரும்படி அழைத்தார். 

ஆனால், அவர்களோ நாங்கள் ப்ரம்ம த்யானத்திற்காகப் பிறந்தவர்கள், உம்முடைய செயல்களுக்கு நாம் வருவதில்லை என்று கூறி விட்டார்கள். இது கண்டு நான்முகன் கோபமுற்று, தன் புருவத்தை நெறித்தார். அதிலிருந்து பிறந்தவர்தான் ருத்ரன். அவருக்கு நீலலோஹிதர் என்ற முதற்பெயர் ஏற்பட்டது. 

ருத்ரன் பிறந்தவுடன் அழுதும், ஓடிக் கொண்டும், ‘எனக்குப் பெயர்களையும், இடங்களையும் கொடுக்க வேண்டும்’ - என்று தன் தந்தையான ப்ரஹ்மாவிடத்தில் வேண்டினார். உடனே பதினோரு பெயர்கள், பதினோரு மனைவியர், வாழ்வதற்கு பதினோரு இடங்கள் ஆகியவற்றை நான்முகன் தன் மகனுக்கு ஈந்தார். 

இன்றும் ஏகாதச ருத்ரர்கள், அதாவது பதினோரு ருத்ரர்கள் என்றே பரமசிவனாருக்குப் பெருமை. மனம், இந்திரியங்கள், பிராணன், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி, சூரியன், சந்திரன், தவம் ஆகிய பதினோரு இடங்களையும் ருத்ரனுக்கு ஈந்தார். மேலும் அவருக்குப் பெயர் சூட்டுவதற்காக, மன்யு, மனு, மஹேசானன், மஹான், சிவன், ருதத்வஜன், உக்ரரேதஸ், பவன், காலன், வாமதேவன், த்ருதவ்ரதன் என்று பெயர் சூட்டினார். அவருக்கு தீஹி, விருத்தி, உசனாஉமா, நியுத், ஸர்பி, இலா, அம்பிகா, இராவதி, ஸுதா, தீக்ஷா, ருத்ராணி ஆகிய மனைவியரையும் கொடுத்தார். 

மகனைப் பார்த்து தந்தை, “நீ மேலும் சிருஷ்டியை வளர்க்கலாம்” என்றார். ருத்ரன் தன் மகிமையால் ருத்ர கணங்கள் அனைவரையும் படைக்க, அவர்கள் உலகத்தையே நிறைத்தனர். அப்போது ருத்ரனிடத்தே நான்முகன், “இப்போது நீ தவம் புரியச் செல்லலாம். தவத்தினால், வலிமையை வளர்த்துக் கொண்டு, மேலும் நீ படைக்கலாம்” - என்று கூறினார். 

தொடர்ந்து நான்முகன், தன்னிடத்திலிருந்து பத்து ரிஷிகளை உருவாக்கினார். மரீசி, அத்ரி, அங்கிரஸ், புலஸ்தியர், புலகர், க்ருது, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷன், நாரதர் என்ற பதின்மரும் மிகுந்த திறமைசாலிகள், மகிமை உடையவர்கள். அவர்களைப் படைத்து விட்டு, தன்னுடைய நிழலிருந்து கர்த்தம ப்ரஜாபதியைப் படைத்தார். 


பிறகு நான்முகனுடைய நான்கு முகங்களிலிருந்தும் நான்கு வேதங்கள் வெளிப்பட்டன. கிழக்கு முகத்திலிருந்து ரிக், தெற்கு முகத்திலிருந்து யஜுர், மேற்கு முகத்திலிருந்து ஸாமம், வடக்கு முகத்திலிருந்து அதர்வணம் என்கிற வேதங்களும், ஆயுர் வேதம், தனுர் வேதம், காந்தர்வ வேதம், ஸ்தாபத்தியம் ஆகியவையும், இதிகாச புராணங்களுக்கான இலக்கணங்களும் ப்ரஹ்மாவிடத்திலிருந்தே தோன்றின. 

மேலும் கல்வி, தானம், தவம், உண்மை ஆகிய நான்கும், தர்மத்தின் நான்கு கால்களாய் அவரிடத்திருந்து பிறந்தன. இது தவிர, நாம் செய்யுள் எழுதுவதற்குப் பயன்படும் சந்தஸ்கள், அதாவது காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப், ப்ருஹதி, பங்க்தி, த்ருஷ்டுப், ஜகதீ ஆகிய சந்தஸ்கள். வடமொழி ச்லோகத்தை நான்காகப் பிரித்தால், ஒரு கால் ச்லோகத்துக்கு ஒரு பாதம் என்று பெயர். ஒரு பாதத்திற்கு எத்தனை எழுத்துக்கள் என்கிற கணக்கின் படி சந்தஸ்கள் வேறுபடும். 

காயத்ரி சந்தஸ்கள் என்றால் ஆறு எழுத்துக்கள். உஷ்ணிக் என்றால் ஏழு எழுத்துக்கள். அனுஷ்டுப் என்றால் எட்டு எழுத்துக்கள். இப்படியாகக் கொள்ள வேண்டும். சந்தஸ்கள், எழுத்துகள் ஆகிய அனைத்தையும் தன்னிடத்திலிருந்து பிறப்பித்த நான்முகன் சப்த மயமாகவே தோற்றமளித்தார். 

மேலும் அவர் தியானிக்கும்போது தன்னில் ஒரு அம்சத்தை இரண்டாகப் பிரித்தார். ஒரு பகுதியிலிருந்து ஆணான மனுவும், மற்றொரு பகுதியிலிருந்து பெண்ணான ஸதரூபையும் தோன்றினார்கள். இவர்கள் இருவருக்கும் திருக்கல்யாணம் நடந்து, ப்ர்யம்வ்ரதன், உத்தானபாதன் என்கிற இரண்டு மகன்களும், ஆஹூதி, தேவஹூதி, பிரஸூதி என்கிற மூன்று மகள்களும் பிறந்தார்கள். 

இனிமேல் திருமால் அவதரிக்கப் போகிறார். ஸ்வயாம்புவ மனு படைக்க ஆரம்பிக்க, அவர், தான் படைத்தவர்களை வைப்பதற்குப் பூமியைத் தேட, ஹிராண்யக்ஷன் என்னும் அசுரன் பூமியைக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். அவனை அழிக்கவே பெரும் பன்றி உருவத்தில் வராகப் பெருமான் அவதரிக்கப் போகிறார். எதிர் நோக்குவோம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 55

மூன்றாவது ஸ்கந்தம் - பதினோறாவது அத்தியாயம்

காலக் கணக்கு 

நாம் கடந்த அத்தியாயத்தில் ப்ரஹ்மா செய்த பத்து விதமான சிருஷ்டியைக் கண்டோம். உலகில் ஸ்தாவரங்களான மரம்,செடி, கொடிகள், ஜந்துக்களான விலங்கினங்கள், மனிதர்கள், மேலுலகத்தில் உள்ள தேவர்கள் ஆகிய அனைவரும் தோன்றினார்கள். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய கர்மத்தின்படி வாழ்க்கையை நடத்துகிறான். யாருக்குமே மற்ற எல்லாவற்றையும் விட, காலம் பொன் போன்றது. மிகவும் முக்கியமானது. 

‘பல துன்பங்கள், இன்பங்கள் படைத்தாய், பற்றிலார் பற்ற நின்றானே! கால சக்கரத்தாய்!’ - என்று நம்மாழ்வார் திருவாய் மொழியில் பாடுகிறார். காலத்தையே, தன்னுடைய சக்கரமாகக் கொண்டு, பகவான் இவ்வுலகத்தையே தன் ஆளுகைக்கு உட்படுத்தி இருக்கிறான். காலம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கிறபடியால், அது காலச் சக்கரம் என்று சொல்லப்படுகிறது. 

அனைத்துப் பொருட்களையும் - ஏன் ஒவ்வொன்றையுமே காலம் தன் வசத்தில் கொண்டிருக்கும். இந்தத் தத்துவம், அதாவது காலம் தானும் மாறிக் கொண்டே இருக்கும். மணி, நிமிடம், வினாடி என்று மாறிக் கொண்டே, தான் எதை மூடியிருக்கிறதோ அந்தப் பொருளையும், ஒவ்வொரு வினாடியும் மாற்றிக் கொண்டே இருக்கும். நம் கையில் இருக்கும் புத்தகத்தையோ, ஏன் நம் உடலையோ, நாம் அணிந்திருக்கும் ஆடையையோ அனைத்தையும் காலம் எனும் தத்துவம் மூடியிருக்கும். ஒவ்வொரு வினாடியும், நிமிடமும், இந்தப் பொருள்கள் எல்லாம் பழையனவாகிக் கொண்டே, சிதைந்து கொண்டே போகும். இதுவே காலத்தின் இயல்பு. 

இந்தக் காலத்தின் பிரிவுகளை மைத்ரேயர், விதுரருக்கு விளக்கமாக உரைக்கிறார். இன்றைய விஞ்ஞானத்தில் ‘நானோ செகண்டு’ அளவுக்கு விஞ்ஞானிகள் அற்புதமாக விளக்கி வருகிறார்கள். பாகவத புராணத்திலும், காலத்தை வெகு அழகாகப் பிரித்துக் கூறுகிறார் சுகாசாரியார். நம்முடைய ஒரு நாள் 24 மணி நேரங்கள் கொண்டது. அதில் 60 நிமிஷங்கள் ஒரு மணி நேரம். புராணத்தின்படி ஒரு 48 நிமிஷம், ஒரு முகூர்த்தமாகச் சொல்லப்படுகிறது. அதே 24 நிமிஷங்கள் ஒரு நாழிகை. 

ஒரு நாளில் 60 நாழிகை இருக்கும். ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகைகள். முப்பது முகூர்த்தம் ஒரு நாள். இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம். பதினைந்து லகு ஒரு நாழிகை. பதினைந்து காஷ்டா ஒரு லகு. ஐந்து க்ஷணங்கள் ஒரு காஷ்டா. நான்கு நிமிஷங்கள் ஒரு க்ஷணம். 

மூன்று லவம் ஒரு நிமிஷம். (இந்த நிமிஷம் நாம் ஆங்கிலத்தில் கூறும் மினிட் அல்ல.) மூன்று வேதங்கள் ஒரு லவம். நூறு த்ருடிகள் ஒரு வேதம். மூன்று த்ரிஷரேணுகள் ஒரு த்ருடி. மூன்று அணுக்கள் ஒரு த்ரிஷரேணு. இரண்டு பரமாணுக்கள் ஒரு அணு. காலத்தின் மிகச்சிறிய அளவே பரமாணு என்று சொல்லப்படுகிறது. 

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 54

மூன்றாவது ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

பத்து வகைப் படைப்புகள்

இப்போது பத்து விதமான சிருஷ்டிகளைப் பார்க்கப் போகிறோம். மைத்ரேயர் கூறுகிறார். “ப்ரஹ்மா நூறு ஆண்டுகள் தவம் புரிந்து, தன் நிலையை உணர்ந்து கொண்டார். இனி, தான் அமர்ந்திருக்கும் அழகிய தாமரையிலிருந்து கொண்டு உலகத்தைப் படைக்க ஆரம்பிப்போம் என்று அண்டத்தை மூன்றாகப் பிரித்தார்.” 

இனி சிருஷ்டியை விளக்குகிறார். 

ப்ராக்ருத சிருஷ்டி, வைக்ருத சிருஷ்டி, தேவ சிருஷ்டி என்று மூன்று வகைகள். இதில் ப்ராக்ருத சிருஷ்டியில் ஆறு படைப்புகள் உண்டு. சற்றே விளக்குகிறேன். கூர்மையாகக் கவனிக்கவும். 

“முதலில் மூலப் ப்ரக்ருதி மாறி, மகான் என்று ஆகிறது. மகானிடத்திலிருந்து அஹங்காரம் உருவாகிறது. அஹங்காரத்திலிருந்து பஞ்ச பூதங்கள், அதாவது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவை உருவாயின. 

“பின்னால் பத்து புலன்கள் அதாவது இந்திரியங்கள் உருவாயின. 

“அடுத்து மனம் உருவாயிற்று. இறுதியாய் அறிவை மறைக்கும் திரையாகிற அவித்யை, அதாவது அறிவின்மை என்பதும் சேர்த்தே உருவாயிற்று. இவை ஆறும் ப்ராக்ருத சிருஷ்டியாகச் சொல்லப்படுகின்றன. இவை திருமாலாலேயே படைக்கப்பட்டு, ப்ரஹ்மாவுக்கும் முன்னாலே ஏற்பட்டு விடும். 

“அடுத்து ப்ரஹ்மா படைக்கத் தொடங்கி, மூன்று வைக்ருத சிருஷ்டி செய்கிறார். அதில் முதலாவது - ஸ்தாவர சிருஷ்டி. அதாவது அசையாமல் இருக்கும் மரம், செடி, கொடி ஆகியவை. இவற்றில் ஆறு வகைகள் உண்டு. பூப் பூக்காமலே காய்க்கும் அரசி, அரசு, அத்தி, பலா முதலியவை. 

“இரண்டாவது - ஒரு முறை பலனளித்து ஓய்ந்து விடும் கோதுமை, நெல், பயறு முதலான பயிர் வகைகள். 

“மூன்றாவது - பூப்பதே முக்கியமாக இருக்கும் மல்லிகைக் கொடி முதலானவை. 

“நான்காவது - பட்டையில் பலமுள்ள மூங்கில் முதலான மர வகைகள். 

“ஐந்தாவது - படரும் கொடி வகைகள். 

“ஆறாவது - பூப்பூத்துக் காய் காய்க்கும் ஏனைய மரங்கள். 

“வைக்ருத சிருஷ்டியில் இரண்டாவது வகை - திர்யக்குகள். அதாவது நிலத்திலும் நீரிலும் செல்லக் கூடிய ஜந்துக்களைப் படைக்கிறார். அதில் பசு, ஆடு,எருமை, பன்றி, ஒட்டகம் முதலான இரண்டு குளம்புகள் கொண்ட ஒன்பது வகை மிருகங்கள். 

“அடுத்தது - கழுதை, குதிரை முதலான ஒரு குளம்புள்ள ஆறு வகை மிருகங்கள். 

“மூன்றாவது நாய், நரி, புலி, பூனை, முயல், சிங்கம், யானை, ஆமை முதலான ஐந்து நகங்களைக் கொண்ட பன்னிரண்டு வகை விலங்குகள். 

“அடுத்து மீன் வகைகள். 

“அதற்கு மேல் கழுகு,பருந்து, கொக்கு, மயில், காகம், கோட்டான் முதலான 28 வகைப் பறவைகள். இவை எல்லாவற்றையும் படைத்து முடிக்கிறார். 

“மேலே மனிதர்களைப் படைக்கிறார். இதோடு வைக்ருத சிருஷ்டி முடிந்தது. 


“கடைசியாய், தேவ சிருஷ்டியில் தேவ கணங்களையெல்லாம் படைத்து விடுகிறார். அவர்கள் பத்து வகைப்பட்டவர்கள். தேவர்கள், பித்ருக்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், அப்சரஸ்கள், சித்தர்கள், யக்ஷர்கள், ராக்ஷஸர்கள், சாரணர்கள், பிசாசங்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள். 

“இவர்கள் எல்லோரையும் படைத்து முடித்த பிறகு, மேலும் வம்சங்கள், மன்வந்த்ரங்கள். அந்தந்த மன்வந்த்ரத்தில் ஆளக்கூடிய மன்னர்கள், இவர்கள் எல்லாம் படைக்கப்படுகிறார்கள். இந்தந்தச் சமயத்தில் நடந்த கதைகள். அந்தக் கதைகளுக்குண்டான குறிப்புகள், இவற்றையெல்லாம் விதுரரே, உமக்கு மேலே தெளிவாகக் கூறுகிறேன்” என்று ஓரிடத்தில் நிறுத்தினார் மைத்ரேயர். 

அடுத்து விதுரர் கேட்கிறார். “படைப்பைப் பற்றிக் கூறினீர். ஆனால், இதற்கெல்லாம் ஆதாரமாக இருக்கும் காலத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமே?” என்றார். 

காலம் எவ்வளவு முக்கியமானது? நம் அனைவருக்குமே ஒரு கஷ்டம். ஐந்து வயதுக் குழந்தை முதல் எண்பது வயது முதியவர் வரை, இன்று யாருக்கும் நேரமே இல்லை. வேகமான உலகம். பரபரப்பான வாழ்க்கை. இதில் காலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதை நன்கு நம் வசத்தில் வைத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. ஆகையால், நாம் அடுத்த முறை சந்திக்கும்போது, காலம் என்னும் தத்துவத்தைப் பற்றி விளக்கமாகப் பார்ப்போம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 53

மூன்றாவது ஸ்கந்தம் - ஒன்பதாம் அத்தியாயம் (தொடர்ச்சி)

பள்ளிகொண்ட பரமனின் பேரழகு

விதுரரும் மைத்ரேயரும் உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். ப்ரஹ்மா படைக்கப்பட்டதைப் பற்றி மைத்ரேயர் உபதேசித்து வருகிறார். திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து நான்முகன் தோன்றி, நூறு ஆண்டுகள் தவம் புரிந்து, பெருமானையே நேரே கண்டு, தன்னுடைய பிறவியின் ரகசியத்தையும், அதன் பயனையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். 

‘மேற்கொண்டு இவ்வுலகை சிருஷ்டிக்க வேண்டும். அதற்குண்டான சக்தியைக் கொடு’ - என்று பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமானிடத்தே வேண்டிக் கொண்டார். தன்னுடைய மிக அழகான சயனத் திருக்கோலத்தோடே நான்முகனுக்கு பகவான் காட்சி கொடுத்தார். அதன் மூலமும், தான் செய்த உபதேசங்களின் மூலமும், ப்ரஹ்மாவுக்கு வேண்டிய சக்தி அத்தனையையும் பகவான் வழங்கினார். இவ்விடத்தில் நாம் ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு இவ்வுலகத்தில் வேண்டிய அனைத்து சக்திகளையும் பகவானே அருள்கிறார். தர்ம காரியங்கள், புண்ணிய காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கும், பக்தியை வளர்த்துக் கொள்வதற்கும், மேலும் மேலும் ஞானத்தை வளர்த்துக் கொள்ளவும், பெருமானிடத்திலிருந்துதான் சக்தி பெற ப்ரார்த்திக்க வேண்டும். 

அனைவரையும் படைக்கும் கடவுள், அவசியம் காக்கிறார். ஆகவே, ‘அடியேனைக் காக்க வேண்டும். அடியேனை எதற்காகப் படைத்தீரோ, அந்தக் காரியம் ஸித்தி அடைவதற்குண்டான அனைத்து சக்திகளையும், தேவரீரே அருள வேண்டும்’ - என்று அவனிடமே தினமும் ப்ரார்த்தித்துக் கொள்ளலாம். பகவானுடைய சயனத் திருக்கோலத்தை ப்ரஹ்மா தரிசித்தார் என்று கூறினேன் அல்லவா? 108 திருத்தலங்களுள் சில இடங்களில், நின்ற திருக்கோலத்திலும், சில இடங்களில் வீற்றிருந்த திருக்கோலத்திலும், மேலும் சில இடங்களில் சயனத் திருக்கோலத்திலும் பெருமான் தரிசனம் கொடுக்கிறார். 27 திருத்தலங்களில் சயனத் திருக்கோலம். அதே போல 21 க்ஷேத்திரங்களில் பெருமான் வீற்றிருந்து தரிசனம் அளிக்கிறார். 60 புண்ணிய பூமிகளில் நின்ற திருக்கோலத்தில் பெருமான் காட்சி கொடுக்கிறார். 

ஆழ்வார்களுடைய பாடல்களின்படி அவர் நின்றதை விட, வீற்றிருந்ததை விட, சயனத் திருக்கோலத்தில் அவர்கள் மிகவும் ஈடுபட்டுள்ளனர். 27 திருத்தலங்களில் சயனத் திருக்கோலத்தில் இருக்கும் பெருமான், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக படுத்துக் கொண்டிருக்கிறார். முக்கியமாக ஸ்ரீரங்கம் முதலான க்ஷேத்திரங்களில் புஜங்க சயனம் என்று கூறுவார்கள். அதாவது, ஆதிசேஷ படுக்கையில் ஆனந்தமாக, உலகத்தை எப்படிக் காக்கலாம் என்கிற சிந்தனையோடே சயனித்துக் கொண்டிருக்கும் நிலையை ஸேவிக்கலாம். 

இரண்டாவது - திருக்குடந்தை, அதாவது கும்பகோணத்தில் ஆராவமுதனுடைய சயனம், உத்தியோக சயனம் அல்லது உத்தான சயனம் என்பர். அர்த்த சயனம் என்றும் சொல்லலாம். திருமழிசை ஆழ்வாருடைய வேண்டுகோளுக்கிணங்க, அவரோடு பேசுவதற்காக எழுந்தார் பகவான். ஆனால், ஆழ்வாரோ, ‘இந்த ஏழை கூப்பிட்ட குரலுக்குப் போய் நீர் எழுந்திருந்து பேசுவதாவது, வேண்டாம்! அப்படியே படுத்துக் கொண்டே பேசுவீர்!’ - என்று வேண்ட, முழுவதுமாக சயனமாகவும் இல்லாமல், வீற்றிருந்த கோலமும் இல்லாமல், பாதி எழுந்த நிலையிலேயே பகவான் உள்ளார். ஆழ்வாருடைய வேண்டுகோளுக்கிணங்க, இறைவனும் நடப்பான் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி. 

மூன்றாவது - பால சயனம். சிறு வடிவத்தோடே, க்ருபா சமுத்திரமாய் சிறுபுலியூர் என்னும் க்ஷேத்திரத்தில், பகவானுடைய திருக்கோலமே இது. பாற்கடலில் பள்ளிகொண்ட அருட்கடல் இவர்!

நான்காவது - போக சயனம். தில்லை நகர் திருச்சித்திரகூடத்தே தன் ஆனந்த நிலையை அனுபவித்துக் கொண்டே சயனித்துக் கொண்டிருக்கிறார் பெருமான். அனைத்துப் போகங்களையும் இங்கு துய்க்கிறார்; ஆனந்த வடிவனாக! 

ஐந்தாவது - வீர சயனம். திருவிந்தளூர், மயிலாடுதுறைக்குள்ளேயே இருக்கும் திருத்தலம். அங்கு சங்கு சக்கரங்களைப் பிடித்துக் கொண்டே பகவான் சயனித்திருக்கிறபடியால், இது வீர சயனமாயிற்று. 

ஆறாவது - மாணிக்க சயனம். திருநீர்மலையில் எழுந்தருளியிருக்கும் பகவான் தனது பல திருக்கோலங்களுக்குள் சயனத் திருக்கோலத்திலும் காட்சி தருகிறார் மாணிக்க வண்ணனாக! 

அடுத்து - தர்ப்ப சயனம். திருப்புல்லாணி. அதாவது ராமேச்வரத்துக்குச் சற்றே முன் இருக்கும் இத்திருத்தலத்தே ராமர், கடல் அரசனிடத்தே சேது கட்டுவதற்கு வழி கேட்பதற்காக, சரணாகதி செய்தபோது, தர்ப்பங்களைப் பரப்பி இங்குதான் சயனித்தார். ஆகவே, இது தர்ப்ப சயனம். 

அடுத்து - ஸ்தல சயனம் - பெருமான் பாற்கடலில் சயனித்து, ஆதிசேஷப் படுக்கையில் பள்ளி கொண்டிருப்பதைப் பல கோவில்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், திருக்கடல்மல்லை அதாவது மகாபலிபுரத்தே புண்டரீகர் என்னும் ஒரு பக்தர், கடலுக்குள் படுத்திருக்கும் பகவானைச் சேவிப்பதற்காக தன் கைகளையே ஒரு பாத்திரமாகப் பயன்படுத்தி, கடல்நீரை இறைத்துக் கொட்டி விட்டு, தரையில் நடந்து போய் சேவிக்க வேண்டும் என்று ஆசை கொண்டாராம். நமக்கு ‘இது என்ன மூடத்தனமான நம்பிக்கை’ என்று தோன்றும். ஆனால், தன் பக்தியின் மிகுதியால் பக்தன் இப்படித்தான் செயல்படுகிறான். ஆனால், பெருமான், இவனைவிடப் பித்துப் பிடித்தவர். தன்னுடைய ஆதிசேஷப் படுக்கையையும், பாற்கடலையும் துறந்து, திருக்கடல்மல்லைக்கு வந்து இவருக்குக் காட்சி கொடுப்பதற்காக நிலத்திலேயே படுத்துக் கொண்டார். ஆகவே, இது ஸ்தல சயனம். 

அடுத்து - வடபத்ர சயனம். ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஓர் ஆல் இலைத் தளிரிலே, திருப்பாற்கடலிலே சயனித்துக் கொண்டிருப்பவராக காட்சி தருகிறார் எம்பெருமான். ஆண்டாளாலேயே பாடப்பட்ட பரமன் இவர்! பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோருடைய அவதார ஸ்தலம் இது! 

இறுதியாக - அனந்த சயனம். திருவனந்தபுரத்தே, தன்னுடைய திருவடிகளையும், திருக் கைகளையும் நீட்டிக் கொண்டு பெரிய திரு உருவத்தோடே அடியார்களான நமக்கு ஒரு வாயில் மூலம் திருவடியைத் தரிசிக்கும்படியாகவும், ப்ரஹ்மா முதலான தேவர்களுக்கு அடுத்த வாயில் மூலம் நாபிக்கமலத்தைத் தரிசிக்கும் படியாகவும், நித்ய சூரியர்களுக்கு மூன்றாவது வாயிலின் மூலம் திருமுகத்தையும், திருமுடியையும் சேவித்துக் கொள்ளும்படியாகவும், இப்படி மூன்று வாசற்படிகளால் அனைவருக்கும் காட்சி கொடுக்கும் திருக்கோலம், அனந்த சயனம்! 


இப்படி பல வடிவங்களோடே பகவான் சயனித்துள்ளார். அவருடைய சயனத்தைச் சேவித்தால், ‘கிடந்ததோர் கிடக்கை கண்டும், எங்ஙனம் மறந்து வாழ்கேன், ஏழையேன் ஏழையேனே!’ என்ற தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரம்தான் ஞாபகத்துக்கு வரும். அவர் சயனத் திருக்கோலத்தைச் சேவித்து விட்டு, அந்தத் திருத்தலத்திலிருந்து விடை பெற்றுக் கொண்டு வருவதற்கு யாருக்கேனும் மனம் வருமா? உள்ளம் உருகி, அந்தக் கோவில்களை விட்டு வெளியே வர முடியாமல் திரும்பத் திரும்ப அவரையே நம் மனக் கண்ணால் தரிசித்துக் கொண்டிருந்தோம் இத்தனை நேரம்! 

ஆனால், நாம் பாகவத புராணத்தில் முன்னேற வேண்டுமே, அதனால் அடுத்த அத்தியாயத்தை அடைவோம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 52

மூன்றாவது ஸ்கந்தம் - ஒன்பதாம் அத்தியாயம்

ப்ரஹ்மா பகவானைத் துதித்தல்

ப்ரஹ்மா பகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்தார். “இறைவா! தேவரீரே உமது அருளாலேயே இப்போது தெரிந்து கொண்டேன். நீர் தியானத்துக்குத்தான் விஷயமாகிறீர். தியானிக்காதவன் உம்மை அறிந்து கொள்ள முடியாது. உம் அருள் இல்லாதவனும் உம்மைத் தெரிந்து கொள்வதற்கு இயலாது. யார் யார் உம்மைத் தியானிக்கிறார்களோ, அவர்களுடைய ஹ்ருதய கமலத்தில் நீர் எப்போதும் வீற்றிருக்கிறீர்.” 

‘விட்டுச் சித்தன் மனத்தே கோவில் கொண்ட கோவலன்’ - என்பது பெரியாழ்வாருடைய பாடல். பெருமானுக்கு எத்தனையோ இடங்கள் இருந்தாலும், அதாவது வைகுந்தம், திருப்பாற்கடல், சூரிய மண்டலம் போன்ற உயர்ந்த ஸ்தானங்கள் இருந்தாலும், அதில் வாழ்வதற்கு அவனுக்குப் பெரிதான விருப்பமில்லை. அடியார்களுடைய நெஞ்சகத்தேதான் அவன் பெரிதும் விரும்பி வாழ்கிறான். 

பெரியாழ்வார் சொன்னபடிக்கு, ஆதிசேஷன், திருப்பாற்கடல், திருமகள் ஆகிய அனைவரையும் கூட்டிக் கொண்டு பெருமான், பெரியாழ்வாரின் உள்ளத்திலேயே உறைகிறானாம். ஆழ்வாருக்குத்தான் அவனைத் தன் உள்ளத்திலே வைத்துக் கொள்ள எத்தனை ஆசை! 

எத்தனைதான் கருங்கல்லால் மதில் கட்டினாலும், பெருமானுக்கு அது அழகான காவலா? அல்லது ஆழ்வாருடைய திருவுள்ளத்தில் கோவில் கொண்டு இருந்தால், பெருமான் ஜாக்கிரதையாக இருப்பானா? ஆழ்வார் சொல்லும்படி பார்த்தால், மதில் காவலை விட, ஆழ்வாரின் உள்ளம்தான் பெருமானுக்குக் காவலாம். 

நம்மாழ்வார் ஒரு பாடலில், நவ திருப்பதியில் ஒன்றான தென் திருப்பேரை மகர நெடுங்குழைக் காதனைப் பற்றிப் பாடுகிறார். 

‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தித்
தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்!’
(திருவாய்மொழி 7-3-1) 

பகவான் கருடோத்ஸவம் கண்டருள்கிறார். எங்கு? ஊரில் அல்ல, வீதியில் அல்ல. ஆழ்வாருடைய உள்ளத்திலேயே கருடோத்ஸவம் கண்டருள்கிறானாம். அடியார்களுடைய உள்ளம் பெருமானுக்குப் பெரிய வீதியாகவும், பெரிய கோவிலாகவும் இருக்கிறது போலும். இப்படி பெருமான் அடியார்களுடைய உள்ளத்தை விரும்பி வந்தால், பதிலுக்கு அனைத்துமாக நாம் அவனைத்தானே கொள்ள வேண்டும்? 

ப்ரஹ்மா மேலும் கூறுகிறார்: “எதுவரை உன்னையே தங்களுக்கு உறவாகவும், நீயே எங்களுக்கு ரக்ஷகன் என்றும் புரிந்து கொள்ளவில்லையோ, அது வரை மக்களுக்குப் பயம் ஓயாது. ‘சேலே கண்ணியரும், பெரும் செல்வமும், நன்மக்களும், மேலாத் தாய் தந்தையரும் அவரே இனி என்றாவாரே’ - என்று பாடுகிறார். 

வேதங்களோ, ‘பெற்ற தாயும், பிறப்பித்த தந்தையும், ஆசை மனைவியும், அன்புக்குரிய பெண்களும், பிள்ளைகளும், ஆபத்து வந்தால் காக்கும் சொத்தும், இவை அனைத்தும் பகவானே!’ என்று கூறுகின்றன. 

இந்த உண்மையை யாரெல்லாம் புரிந்து கொள்கிறானோ அவனுக்குப் பயம் விலகுகிறது. அப்படி இல்லாதவன், மரணம், தோற்றம், பிணி, மூப்பு, கொன்று உயிருண்ணும் வியாதி, பகை, பசி, தீயன என்று பலவற்றாலும் துன்பப்படுகிறான். ஆக, பெருமானை யாரெல்லாம் தியானிக்கிறார்களோ அவர்களது துன்பமெல்லாம் விலகுகிறது. இன்பம் அத்தனையும் தழைக்கிறது. ப்ரஹ்மாவிற்கு சிருஷ்டியின் ரகசியமே தியானத்தால்தான் வெளிப்பட்டது என்றால், தியானத்தின் மஹாத்மியம் புரிந்திருக்குமே! 

அடுத்து கூறுகிறார்: “இறைவனே! நீ வெவ்வேறு உருவத்தை எடுத்துக் கொள்கிறாய். அந்தந்தப் பக்தன் உன்னை எப்படியெல்லாம் பார்க்க ஆசைப்படுகிறானோ, அப்படியெல்லாம் நீ உருவம் கொள்கிறாய். உதாரணத்திற்கு, ஆங்காங்கு தேவரீர் கோவில்களில் விக்ரஹ வடிவில் எழுந்தருளியுள்ளீர். அதுதான் எவ்வளவு எளிய வடிவம்! அங்கு சென்று நாம் அர்ச்சனை செய்கிறோம். பகவானுடைய நாமங்களை அர்ச்சகர் வாயார வரிசையாகச் சொல்கிறார். நாம் அஷ்டோத்திர ஸஹஸ்ர நாம அர்ச்சனை செய்கிறோம். அந்த அர்ச்சனை தொடங்கும்போது, அர்ச்சகர் என்ன ஸங்கல்பம் செய்கிறார்? 

‘ஈச்வரனுடைய ப்ரீதிக்காக’, ‘பகவானுடைய கைங்கர்யத்துக்காக’ என்று கூறுவார். ஆக, நாம் நாமங்களைச் சொன்னாலும், அர்ச்சனை செய்தாலும், பூத்தொடுத்துச் சமர்ப்பித்தாலும், எந்தவிதமான கர்மங்களைச் செய்தாலும், அது பக்தியோ எதுவுமே பெருமானுடைய ஆனந்தத்துக்காக அவனுடைய தொண்டாகவே செய்யப்பட வேண்டும். இந்த உண்மையை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்களது வாழ்க்கை இனிக்கும். 

கண்ணன் கீதையில் கூறும்போது, 
யத்கரோஷி யதச்னாஸி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்|
யத் தவஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்ப்பணம்||
(ஸ்ரீமத் பகவத் கீதை : 9-27) 

எதைச் செய்கிறாயோ, எதை உண்கிறாயோ, என்ன தவம் புரிகிறாயோ, என்ன தானம் செய்கிறாயோ - அனைத்தையும் என் ஆராதனமாகச் செய்து, என்னிடத்திலே சமர்ப்பித்து விடுவாய்- என்கிறார். 

மேலும் ப்ரஹ்மா தோத்திரம் செய்கிறார்: “உன்னுடைய குணங்கள், உன்னுடைய சேட்டிதங்கள் ஆகியவற்றை உன் நாமங்கள் பேசுகின்றன. 

யஸ்ய அவதார குணகர்ம விடம்பநாநி
நாமாநி யேஸுவிகமே விவசா க்ருணந்தி|
தேநைக ஜன்மசமலம் ஸஹஸைவ ஹித்வா
ஸம்யாந்த்யபாவ்ருதம்ருதம் தமஜம் ப்ரபத்யே||
(ஸ்ரீமத் பாகவதம் : 3-9-15) 

யாருடைய திருநாமங்களைச் சொல்வதால், அதே ஜன்மத்தில் பாவங்கள் அனைத்தும் கழிந்து, முக்தி அடைகிறோமோ, பகவானே! அந்த உன்னை நான் வணங்குகிறேன். நீயே உலகுக்கு எல்லாம் ஆதாரமாக, காரணமாக உள்ளாய். அப்படிப்பட்ட உன்னை வணங்குகிறேன். 

ஒரு செடி முளைத்து காய்த்து, பழுக்க வேண்டுமானால், வேர் மிக முக்கியமானது. அதைப் போல பகவான்தான் இவ்வுலகத்துக்கே வேராக இருக்கிறார். அவரிடத்திலிருந்து செடி முளைத்தது போல்தான், மற்ற தேவதைகளாகிய நாங்கள் எல்லாம் தோன்றியிருக்கிறோம். 

ஆக, வேராய், முதலாய், வித்தாய் அனைத்துக்கும் காரணமாக இருக்கும் பகவானே! உம்மை வணங்குகிறேன். எந்தத் தெய்வமும் அவரவர் பணியைச் செவ்வனே செய்தால், பயப்பட வேண்டாம். அப்படியில்லையென்றால், உம்மிடத்திலே பயப்பட்டுத்தானே ஆக வேண்டும்? இப்போது நான் சிருஷ்டிக்கத் தொடங்கப் போகிறேன். 

திருமகளுக்குக் கணவனான நீ, என் சிருஷ்டிக்குத் தேவையான அனைத்து சக்தியையும் கொடுத்தருள வேண்டும். தேவரீருடைய நாபிக் கமலத்திலிருந்து, உன் விஞ்ஞான சக்தியாக நான் உருவாகி இருக்கிறேன். இப்போது படைப்புத் தொழிலில் ஈடுபடப் போகும் எனக்கு, வேதங்களை ஓதும் வாக்கு கெடாமல் இருக்கட்டும். நல்லோர்களை சிருஷ்டிக்கும் தொழில் அழியாமல் இருக்கட்டும் - என்று வேண்டிக் கொள்கிறார். 

நாமும் எந்த ஒரு புதிய செயலைத் தொடங்கினாலும், அது நல்ல செயலாக இருந்து, அதைப் பெருமானிடம் வேண்டிக் கொண்டு தொடங்கினால், கண்டிப்பாக தடங்கல் இல்லாமல் நிறைவேறும். இப்படி பலவாறாக துதித்த ப்ரஹ்மா, சோர்வுற்றார். 

தன்னை யார் என்று தெரிந்து கொள்ளவே பெரு முயற்சி எடுக்க வேண்டியதாயிற்று. அடுத்து பெருந்தொழிலாம் சிருஷ்டி வேறு செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக சக்தி வேண்டி நிற்கிறார். அதற்குள் ஆயாசப்பட்டார். பகவான் புன்சிரிப்பு மாறாமல் அவர் முன் தோன்றி, “நான்முகனே! நீர் ஒரு நாளும் சோர்வடைய வேண்டாம். நீர் படைப்பதற்கு வேண்டிய அனைத்து சக்தியையும் உமக்கு அருள்கிறோம். யாரெல்லாம் அனைத்துக்குள்ளும் என்னைப் பார்க்கிறானோ, தனக்குள்ளும் என்னைக் காண்கிறானோ, அவன் சோர்வடைவதில்லை. அனைவருக்கும் நானே அந்தராத்மா. நானே செயல்பட வைக்கிறேன். தானே செயல்படுவதாக ஒருவன் நினைத்தால், அவன் சோர்வடைவான். பகவான் நமக்குள் இருந்து கொண்டு செலுத்துகிறார். அவருக்கு எதுவுமே அரிய செயல் அல்ல. நம்மால் எதுவும் இல்லை என்று புரிந்து கொண்டு செய்தால், அப்போது சோர்வடையாமல் செயல்களை முடித்து விடலாம். 


“யோகிகள், ஞானிகள், தபஸ்விகள் - இவர்கள் எல்லாம், காட்டிலே தனிமையிலே இருந்து கொண்டு, பெரிய செயல்களை எப்படி நிறைவேற்றுகிறார்கள்? இதற்குப் பதில் மிகவும் எளிது. 

“அவர்கள் தாங்கள் செய்வதாக நினைத்தால், நிறைவேற்ற முடியாது. அனைத்தும் மலைப்பாகத் தோன்றும். ஆனால் மலையப்பனான திருவேங்கடமுடையான், ஸ்ரீநிவாசன் நமக்குள் இருந்து, நம்மைச் செய்விக்கிறார் என்று உணர்ந்தோமானால், எதையும் எளிதில் முடித்து விடலாம். இந்த எண்ணம் இல்லாவிடில், மறுபடியும் மறுபடியும் சம்சாரத்தில் உழலப் போகிறோம். 

“ப்ரஹ்மனே! கவலைப்பட வேண்டாம். நம்மை நினைத்துக் கொண்டு, ஆராதித்து, தியானித்து சிருஷ்டிச் செயலைத் தொடங்குவீர். உம்முடைய அனைத்துச் செயல்களும், எனக்கே பிரியத்தை ஏற்படுத்தட்டும். அதனால் நாம் ஆனந்தப்படுகிறோம். உமது துயரத்தையும் நீக்குகிறோம்” என்று சொல்லி, ப்ரஹ்மனுக்கு ஏற்பட்ட ஆயாசத்தை (சோர்வை) நீக்கி, பகவான் மறைந்தார். இனி ப்ரஹ்மா படைப்பைத் தொடங்குகிறார். மேலும் கேட்போம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 51

மூன்றாவது ஸ்கந்தம் - எட்டாம் அத்தியாயம்

நான்முகன் தோன்றிய வரலாறு

பராசரருடைய சீடரான மைத்ரேயரோடு, விதுரர் உரையாடிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்னுள்ள அத்தியாயத்தில், இவ்வுலகம் சிருஷ்டிக்கப்பட்டதைப் பற்றி பல புதிய கேள்விகளை விதுரர் எழுப்பினார். 

அவற்றுக்குப் பதில் கூற முற்படும் மைத்ரேயர், “விதுரரே! நீர் கேட்டிருக்கும் கேள்விகள், பல புதிய கருத்துக்களை உலகத்துக்கு வெளிப்படுத்தப் போகிறது. மக்களின் விருப்பமே, அன்றாடம் புதியது புதியதாக பலவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் - என்பதுதான். அப்போதுதான் வாழ்க்கை, வாழ்வதற்கே இனிமையாகிறது. 

“அந்த விஷயங்களும் எதைப் பற்றியோ இல்லாமல், ஆத்மாவைப் பற்றியோ, நமக்குள்ளே உறையும் பரமாத்மாவைப் பற்றியோ, நாம் படைக்கப்பட்டிருக்கும் ரகசியத்தைப் பற்றியோ இருந்தாலும், இன்னும் எவ்வளவு சிறப்பாக இனிமையாக இருக்கும்! ஆக, உன் கேள்விகள் உலகத்திற்கே நன்மை செய்யப் போகின்றன. சொல்கிறேன் கேள். 

“ஒருமுறை சனகன் முதலானோர், பாதாள லோகத்திற்குச் சென்று ஆதிசேஷன் வடிவத்தில் இருக்கும் சங்கர்ஷணரிடத்தில் சிருஷ்டியைப் பற்றி வினவினார்கள். அப்போது சங்கர்ஷண பகவான், சனத்குமாரருக்கு உபதேசித்தார். சனத்குமாரர் சாங்கியாயனருக்கும், அவர் மறுபடியும் பராசரருக்கும், பிரகஸ்பதிக்கும் உபதேசித்தார். புலஸ்திய மகரிஷியின் அருள் பெற்ற அடியேனுக்கு சிருஷ்டியின் ரகசியத்தை பராசர மகரிஷி உபதேசித்தார். அதைப் பராசரர், ஸ்ரீ விஷ்ணு புராணத்திலும் எழுதி வைத்தார். அதை உமக்குக் கூறுகிறேன். 

ஸ்ரீமந் நாராயணன், க்ஷீரோதகசாயி எனும் பெயருடன் ஆயிரம் சதுர் யுகங்களாக நீண்ட ஆழமான தண்ணீர் கடலில் சயனித்துக் கொண்டிருந்தார். பின்பு அவருடைய சங்கல்பத்தாலும், சக்தியாலும், அவருடைய நாபியிலிருந்து கமல புஷ்பம் வெளிப்பட்டு, அதில் நான்முகனாகிய ப்ரஹ்மா தோன்றினார். 

அப்போது அந்தப் பெருமானின் அழகு வர்ணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. ஆண்டாள் ஒரு பாசுரத்தில், குழலழகர், வாயழகர், கண்ணழகர், கொப்பூழில் எழு கமலப் பூவழகர், என் அரங்கத் தின்னமுதர் - என்று பாடுகிறார். கொப்பூழ் என்பது நாபியைக் குறிக்கும். அதிலிருந்து பேரழகான தாமரை தோன்றி, ப்ரஹ்மா படைக்கப்பட்டார். நான்கு புறமும் சுற்றிச் சுற்றி பார்த்த ப்ரஹ்மா, ‘தான் எங்கிருந்து தோன்றியிருக்கிறோம்? ஏன் பிறந்திருக்கிறோம்?’ என்பதெல்லாம் தெரியாமல் அயர்ந்து போனார்.

பின் தான் பிறந்த தாமரையின் நாளத்தின் வழியே கீழே சென்று பார்த்தார். அப்போதும் ஏதும் கிடைக்கவில்லை. பகவானின் வலக்கரத்தில் பிடிக்கப்பட்டிருக்கும் சக்கரத்தை மட்டும், கால சக்கர வடிவத்தில் கண்டார். ‘சரி, நான் ஏன் பிறந்தேன்?’ என்று தெரிந்து கொள்ள, நூறு ஆண்டுகள் கடும் தவம் புரிந்தார். 

அப்போது எம்பெருமான் அவர் உள்ளத்திலேயே தன்னை வெளிப்படுத்தி, தான் யார், ப்ரஹ்மாவை எதற்காகப் படைத்திருக்கிறோம் என்பது அனைத்தையும் புரிய வைத்தார். அப்போது அவருக்கு காட்சிக் கொடுத்த பகவான், பேரழகு வாய்ந்தவனாக இருந்தான். 

‘பச்சை மாமலை போல் மேனி, 
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரரேரே ஆயர்தம் கொழுந்தே
என்னும்’ - என்று தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையிலே பாடியது போல, மரகதப் பச்சை வடிவத்தோடு, தாமரை போன்ற திருவாய், திருக்கண்கள், திருக்கைகள், திருவடிகள் ஆகியவற்றோடும், உயர்ந்த பீதாம்பரத்தைத் தரித்துக் கொண்டு, நீண்ட திருமேனியோடு பெருமான் காட்சி கொடுத்தார். 


நாகப்பட்டினத்தில் சௌந்திரராஜப் பெருமான் சேவை சாதிக்கிறார். அவருடைய திருமேனியைக் கண்ட திரு மங்கையாழ்வார், ‘பொன்னிவர் மேனி, மரகதத்தின் பொங்கிலஞ் ஜோதி அகலத் தாகம்’ - என்று தொடங்கி ‘அச்சோ ஒருவர் அழகியவா, இது என்ன, அழகு என்ன அழகு, என்னால் சொல்ல இயலாது’ - என்று தன் கண்ணே பட்டு விடுமோ - என்று பயந்தார். 

அப்படிப்பட்ட பேரழகு வாய்ந்த எம்பெருமானை ப்ரஹ்மா தரிசித்தார். இவரே ஹரி என்பதைத் தெரிந்து கொண்டார். அப்போது ப்ரஹ்மாவிற்கு பகவானின் நாபி, அதிலிருக்கும் தாமரை, தண்ணீர், ஆகாயம், காற்று இந்த ஐந்து பொருள்களே கண்ணில் பட்டன. இதைக் கொண்டு சிருஷ்டிக்க வேண்டும். அதற்காக பெருமானிடமே வேண்டத் தொடங்கினார். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 50

மூன்றாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம்

விதுரரின் சந்தேகங்கள்!

‘உலகம் யாவையும் தாம் உளவாக்கலும், நிலைபெறுத்தலும், நீக்கலும் நீங்கலா, அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர் அன்னவருக்கே சரண் நாங்களே’ என்று - கம்ப நாட்டாழ்வார், தன்னுடைய கம்பராமாயணத்தின் தொடக்கத்தில், கடவுள் வாழ்த்துப் பாடலாக, திருமாலை வணங்கி, அவன் உலகுக்கெல்லாம் காரணமாக இருக்கிறான் - என்று வர்ணிக்கிறார். 

‘அனைத்துலகத்தையும் தானே படைத்து, காத்து, தன்னுள் இழுத்துக் கொள்ளும் கடவுள் உலகத்துக்கே தலைவன். இச்செயல்களை அவர் விளையாட்டாகச் செய்கிறார். இப்படிப்பட்ட முதல்வரையே நாம் அனைவரும் தெய்வமாக வணங்குவோம். அவருடைய திருவடிகளையே புகலாகப் பற்றுவோம்’ - என்று கூறுகிறார். பகவான் படைக்கிறான் என்பதை நாம் கடந்த சில வாரங்களாகப் பார்த்து வருகிறோம். தற்போது விதுரர், பராசரருடைய சீடரான மைத்ரேயரிடத்தே, உலகப் படைப்பைப் பற்றிச் சில ஐயங்களை எழுப்புகிறார். தன்னுடைய விளையாட்டுக்காகப் பகவான் படைக்கிறான் என்றால்,அவருக்கு அதன் தேவை என்ன? பகவானுக்கோ கர்மங்கள் கிடையாது. ஆகவே, அதன் காரணமாக அவர் படைக்க இயலாது. அவருக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆக, படைப்பதால் ஒரு பயனும் அவருக்கு இல்லை. 

நாம் ஒரு செயலில் ஈடுபடுகிறோம் என்றால், அதன் மூலம் நமக்குப் பயன் கிட்டுகிறது. ஒரு துணியை நெய்தாலோ, சங்கிலி பண்ணினாலோ, பானை செய்தாலோ அதனால் செய்பவருக்கும் பலன், வாங்குபவர்களுக்கும் பயன். ஆனால், பகவானுக்கு அதைப் போல் ஒரு காரியத்தைச் செய்து, எந்த ஒரு பயனையும் அடையத் தேவையில்லையே, பின் எதற்காகப் படைக்கிறான்? 

மேலும், முக்குணங்கள் நம்மிடத்தில் இருக்கிறபடியால் நாம் எத்தனையோ மாறுதல்களை அடைகிறோம். ஆனால் பகவானுக்கோ, ஸத்வ, ரஜஸ், தமஸ் என்று முக்குணக் கலவை கிடையாது. அவர் தூய்மையான ஸத்வ குணத்தோடே விளங்குபவர். ஆகையால், அவருக்குச் செயலே தேவையில்லையே! ஆக, எப்படிப் பார்த்தாலும் பெருமான், அவனுடைய பயனுக்காகவோ, இன்பத்துக்காகவோ, இவ்வுலகைப் படைப்பது ஒவ்வாது. ஒரு குழந்தை மண் வீடு கட்டி விளையாடுகிறார் போலே, பகவானும் இவ்வுலகத்தைப் படைத்து விளையாடுவது என்று சொன்னால், அந்தக் குழந்தைக்கு நிறைவேறாத ஆசை உள்ளது என்று பொருள். அதற்கு விருப்பம் இருக்கிறபடியாலே மண் வீடு கட்டுகிறது. தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறது. கர்மங்களோ, முக்குணங்களோ இருந்தால்தான், விருப்பு வெறுப்புகளே வரும். ஒரு ஜீவனே, சிறந்த யோக மார்க்கத்தால் முக்கணங்களை, கர்மங்களைத் தாண்டும்போது, அவனே விருப்பு வெறுப்புகளைத் தாண்டி விடுகிறான். பின் பரமாத்மாவுக்கா விருப்பு, வெறுப்புகள் இருக்கும்? ஆகவே, ஒரு குழந்தையைப் போலே அவன் விளையாடுகிறான் என்று சொல்வதும் பொருந்தாது. இனி, நம் பக்கம் வருவோம். 

ஒருவேளை ஒரு ஜீவாத்மாவுக்காக பகவான் படைக்கிறானோ! ஜீவன் இன்பத்தையும்,துன்பத்தையும் அனுபவிக்கட்டும். அதற்காக இந்த உலகத்தில் நிறைய இடங்களையும், பொருள்களையும் காலத்தையும் கொடுப்போம் என்பது பெருமானுடைய நோக்கமாக இருக்குமா என்றால், நாம் இவ்வுலகத்தில் எவற்றோடெல்லாம் தொடர்பு கொண்டிருக்கிறோமோ, அவையெல்லாம் நமக்கு இயற்கையான தொடர்பே அல்ல. கண்ணால் பார்க்கிறோம், காதால் கேட்கிறோம், உணவு உண்கிறோம், கல்யாணம் செய்து கொள்கிறோம், குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறோம், வேலை பார்க்கிறோம். இவை அத்தனையுமா ஒரு ஜீவனுக்கு இயற்கையானவை. எளிய நமக்கே இவையெல்லாம் இயற்கையல்ல, கர்மத்தால் செயற்கையால் ஏற்பட்டவை என்பது நன்கு விளங்குகிறது. அப்படி இருக்கும்போது, இயற்கையான நன்மை எதுவோ, அதைத்தானே பகவான் ஜீவனுக்குக் கொடுக்க வேண்டும்? கர்மங்களின் அடிப்படையில் செயற்கையாய் நாம் இன்பம் என்று நினைத்து ஏமாந்து போகும் இன்பத்தை அனுபவிக்கவா, ஒரு ஜீவனுக்காக உலகைப் பகவான் படைப்பான்? இதுவும் பொருந்தவில்லையே? 

ஒரு தாய், குழந்தை விரும்புகிறது என்பதற்காக, மண்ணைக் கொடுக்க மாட்டாள். அந்தக் குழந்தைக்குக் கசந்தாலும், நல்ல மருந்தைத் தான் ஊட்டுவாள். நாமோ குழந்தை! பகவானோ தாய்! நமக்கு உலக இன்பத்தில் எத்தனையோ இன்பம் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் உண்மையான இன்பமா? நமக்கு நல்லது செய்யுமா? செய்யாது. ஆகவே, அவற்றை நம்மை அனுபவிக்கச் செய்வதற்காக, ஒரு நாளும் பகவான் இவ்வுலகத்தைப் படைக்க மாட்டார். ஒரு தாய் போல அன்பு கொண்டவர், நமக்குக் கசந்தாலும் நல்லதைத்தான் கொடுப்பாரே தவிர, தீய உலகத்தை படைத்து, அதை அனுபவிக்க வைத்து, மேலுமா பாவங்களைச் சேர்க்க வைப்பார்? இதுவும் பொருந்தவில்லை. ஆக, பெருமானுடையகண்ணோட்டத்திலே பார்த்தாலும், நம்முடைய கண்ணோட்டத்திலே பார்த்தாலும், இருவருக்கும் பயனில்லாத படைப்புத் தொழில் எதற்காகச் செய்யப்படுகிறது? இதுவே விதுரருக்கு ஏற்பட்ட ஐயம். இதை மைத்ரேயரிடம் கேட்கிறார். 

“இந்தச் சந்தேகம் என்னை மிகவும் துன்பப்படுத்துகிறது. நீர்தான் உம்முடைய புத்திக் கூர்மையாகிற பெரும் கோடரியால், களை போன்று பரவி, விஷச் செடியாய் இருக்கும் என் ஐயத்தைப் போக்க வேண்டும்” - என்று ப்ரார்த்திக்கிறார். சிரித்துக் கொண்டே மைத்ரேயர், அவருக்குப் பதில் கூறுகிறார். “விதுரரே! நல்ல கேள்வி கேட்டீர். பகவானுக்கு ஒரு நாளும் கர்மத்தின் தொடர்பு இல்லை. முக்குணத்தின் தொடர்பும் இல்லை. பின் எதற்காகப் படைக்கிறார் என்கிறீரா? பகவான் தன் விளையாட்டுக்காகப் படைக்கிறான் என்பது உண்மை. ஆனால், அது நிறைவேறாத ஆசை இல்லையே? பின் எதற்காக விளையாட வேண்டும்? – என்று கேட்டீர். 

“பகவானுக்கு ஒரு ஆசை உள்ளது. பூலோகத்தில் இருக்கும், அல்லது இந்த மாறி மாறி படைப்பு, அழிப்புக்களுக்கு உள்ளாகும் லீலாவிபூதியில் இருக்கும் அனைத்து ஜீவர்களும் தன்னோடே சேர்ந்து வைகுண்டத்தில் அனுபவிக்க வேண்டும். இது பெருமானுடைய நெடுநாள் ஆசை. இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளத்தான், உலகத்தைப் படைக்கிறான். ஸ்ரீ மகாலக்ஷ்மி, பூதேவி, நீலாதேவி, ஆதிசேஷன்,விஷ்வத்சேனர், கருடன் இவர்கள் எல்லோரும் எப்போதும் வைகுண்டத்தில் பெருமானோடே இன்பம் துய்க்கிறார்கள். அவர்களுக்கு எத்தøனை உரிமை உண்டோ, நம் ஒவ்வொருவருக்கும் பெருமானை அனுபவிக்க அத்தனை உரிமை உண்டு. அவர்கள் எப்படிப் பெருமானுக்குக் குழந்தைகளோ, இந்த உலகத்திலிருந்து துன்பப்படும் நாமும் அவனுக்குக் குழந்தைகள்தான். மூன்று குழந்தைகள் இருக்கும் ஒரு தாயார், இருவர் தன்னோடு இருந்து, ஒருவர் மட்டும் வெளியே தவித்துக் கொண்டிருந்தால் பொறுத்துக் கொள்வாளா? அந்தக் குழந்தையும் தன்னோடு இருக்க வேண்டும் என்றுதானே ஆசைப்படுவாள்? அதே போலப் பெருமானும், இந்த உலகத்தில் தவிக்கும் பக்த ஜீவர்கள், அனைவரும் தன்னை வந்து அடைந்து விட வேண்டும். இதுதான் அவனுடைய ஆசை”. 

இந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் இறைவன் படைக்கிறான். இந்த ஆசையை நாம் புரிந்து கொண்டு, இதே பயனுக்காக நாம் வாழத் தொடங்கினோமானால், ஆனந்தமாக இருக்கலாம். ஏனெனில் நாம் படைக்கப்பட்டது இதற்காக. அதைப் புரிந்து கொண்டு விட்டால், நாம் வேலை பார்க்கும் இடத்தில் முதலாளி என்னை எதற்காக வேலைக்கு வைத்திருக்கிறாரோ அந்த இலக்குப் புரிந்து விட்டால், நான் அதை நோக்கி நடப்பேன். எனக்கும் திருப்தி. முதலாளிக்கும் ஆனந்தம். 

ஆனால், அவர் ஒரு காரணத்திற்காக என்னை வேலைக்கு வைக்க, நான் பிறிதொரு பயனுக்காக வேலை பார்த்துக் கொண்டிருந் தால், அப்பொழுது இருவருக்கும் அலைவரிசை ஒத்துப் போகாது. எனக்கு எப்படி அந்த வேலை வாய்ப்பில் முன்னேற்றம் கிடைக்கும்? அதே ஆபத்துத்தான் இங்கும். இதைப் புரிந்து கொள்ளும். பெருமான் தன் விளையாட்டுக்காகத்தான் படைக்கிறார். அது சிறந்த விளையாட்டு. அந்த விளையாட்டின் பயனே, ஜீவாத்மாக்கள் முக்தி அடைய வேண்டும் என்பதற்காக! இது அவருடைய கோணத்திலிருந்து! இனி மைத்ரேயர் கூறுகிறார்.“ஒரு ஜீவனுடைய கோணத்திலிருந்து பார்த்தால், இவன் வெகுகாலமாக மாறி மாறிக் கர்மங்களைச் சேர்த்து வைத்திருக்கிறான். இந்தக் கர்மங்கள் யாவற்றையும் அழித்தாக வேண்டும். கர்மங்களைப் போக்குவதற்குக் கர்ம யோகம், ஞான யோகம் – இவற்றால் ஏற்படும் பக்தி யோகம்தான் வழி வகுக்கும். நாம் விடாமல் நம் கர்மங்களைச் செய்து கொண்டு வந்தால், அதனால் நம் பாபங்கள் அனைத்தும் அழிந்து போகும். பக்தி யோகத்தின் மகாத்மியத்தாலே நம் பாபங்களே உருமாய்ந்து போகும்.” 

ஆண்டாள் பாசுரத்தில் ‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும், தீயினில் தூசாகும்’ - என்று கூறுகிறாள். நாம் செய்திருக்கிற அனைத்து பாபங்களையும் பெருமான் திருவடிகளில் பக்தி செய்யச் செய்ய அனைத்தும் தீயிலிட்ட பஞ்சு போலே உருமாய்ந்து போகும் என்று சாதிக்கிறாள். அதே விஷயத்தை, மைத்ரேயர் விதுரருக்கு உபதேசிக்கிறார். புரிந்து கொள்ளும். “பகவான் வழியில் பார்த்தாலும், விளையாட்டுத்தான் சிறந்த விளையாட்டு. ஒரு ஜீவனுடைய கோணத்திலிருந்து பார்த்தாலும், தன் கர்மங்களைத் தொலைத்தால்தான் முக்தி அடைய முடியும். அதைத் தொலைக்க பக்தி செய்ய வேண்டும். பக்தி செய்யத்தான் அவன் படைக்கவே படுகிறான். இது இவனுடைய கோணத்திலிருந்து! 

“மேலும், நாம் இவ்வாழ்க்கையில் எதை எதையோ அனுபவிப்பதாக நினைக்கிறோமே, இவை அனைத்தும் நம்மை நாமே கனவில் கண்டு கொள்வது போல. நமக்கு ஏன் கனவு வருகிறது? நமக்கு நிறையப் பாபங்கள் இருந்தால், நிஜ வாழ்க்கையிலே புலி துரத்தும், பாம்பு கடிக்கலாம். குறைவான பாபங்கள் இருந்தால், கனவு வாழ்க்கையில் புலி துரத்தும், பாம்பு கடிக்கலாம். நமக்கு நிஜ வாழ்க்கையில் நிரம்பப் புண்ணியங்கள் இருக்குமானால், நிஜ வாழ்க்கையிலே நமக்குப் பெருத்த செல்வம் கிடைக்கும், பட்டாபிஷேகமே நடக்கும். ஆனால், குறைவாகப் புண்ணியங்கள் இருக்குமானால், கனவு வாழ்க்கையில் பட்டாபிஷேகம் நடக்கும். கனவு வாழ்க்கையில் தங்கக் குடம் கிடைக்கும். இவ்வளவே! 

“பெருமானின் கருணையைப் பாருங்கள், ஒரு கனவின் மூலம் கூட நாம் சேர்த்து வைத்திருக்கும் பாபங்களைத் தொலைக்க துணை புரிகிறார். அதுதான் அவனிடத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. ஆனால், இந்தக் கனவில் கண்டது அத்தனையும் எவ்வளவு உண்மையாகும்? நம் கர்மத்தினாலே கனவு காண்கிறோம். அதே போலத்தான் இந்தப் பிறப்பு, இறப்பு ஆகிய வாழ்க்கை அனைத்தும் நம் கர்மத்தாலே!இந்தக் கர்மங்களைத் தொலைத்து விட்டால், எப்படி விழித்தெழுந்தவனுக்குக் கனவு இல்லையோ, அதே போல கர்மத்தைத் தொலைத்து விழித்து எழுந்த நமக்கு, இந்தப் பிறப்போ, இறப்போ, அதனால் ஏற்படும் இன்ப துன்பங்களோ, ஒரு நாளும் பாதிக்காது. 

“ஒரு சந்திரனைக் குளத்தில் பார்க்கிறோம். குளத்து நீர் அசைந்தால், சந்திரன் அசைவது போல் தோற்றம் அளிக்கிறது. உண்மையில் சந்திரனா அசைகிறது? குளத்து நீர் என்பது ஒரு காரணம். அந்தக் காரணத்தால் சந்திரன் அசைவது போலிருக்கிறது. அதே போல, கர்மம் என்பது ஒரு காரணம். கர்மத்தால், பிறக்கிறோம், இறக்கிறோம். ஆனால், இந்தக் கர்ம சம்பந்தம் இல்லாத ஒரு ஜீவன் - முக்த ஜீவன், இயற்கையான நிலையில் இருக்கும் ஜீவனைப் பார்த்தால், அவனுக்கு எந்த அசைவும் கிடையாது. சலனமும் கிடையாது. அவனுக்கு விருப்பு வெறுப்புகள் கிடையாது. முக்குணங்களோ, கர்மங்களோ தீண்டாது.அந்த நிலையை நாம் அடைய வேண்டுமானால், பெருமானுடைய திருவடிகளில் பக்தி பண்ண வேண்டும். அந்தப் பக்தி செய்யச் செய்ய மெதுவே நம் பாபங்கள் அனைத்தும் கழன்றே போகும்.” 

மற்றொன்றைப் பார்ப்போம். நமக்குத் தூக்கம் வரவில்லை என்பதற்காக மாத்திரை சாப்பிடுகிறோம். அதனால் தூங்கப் பார்க்கிறோம். இது நிஜமான தூக்கமா? இது ஆரோக்கியமான தூக்கமா?அதே போல் உலகத் துன்பங்களை மறக்க வேண்டும் என்பதற்காக, வேறு எதிலோ மனத்தை ஈடுபடுத்துகிறோம். இது மாத்திரை சாப்பிட்டு, தூக்கத்தை, கனவை வரவழைப்பது போலே! ஆனால், அது உண்மையான தூக்கமாகாது, இன்பமாகாது. ஆரோக்கியக் கேடு. ஆத்மாவின் ஆரோக்கியத்துக்குக் கேடு. பின் உண்மையான தூக்கம் எது? “நம்முடைய புலன்கள் அனைத்தும், பெருமானுடைய திருவடிகளையே நினைத்து, மனத்தால் அவனையே தியானித்து, அவனுக்காக நிறைந்த உழைப்போடே பல கைங்கரியங்களை, தொண்டுகளைப் புரியப் புரிய நம் இந்திரியங்கள் எல்லாம் அவனுடைய கைங்கரியத்திலேயே சோர்வடைந்து, நன்கு தூங்கும். தூங்கி எழுந்தவர், எப்படி புத்துணர்ச்சியோடு இருக்கிறாரோ, அதே போல் பெருமானைப் பற்றிய தியானத்திலும், அவனுடைய தொண்டுகளிலும் ஈடுபட்டால், நம் புலன்கள் அனைத்தும் மறுபடியும் புத்துணர்ச்சியோடே,ஆனந்தமாக இருக்கும். இதுதான் உண்மை. இதுதான் படைப்பின் ரகசியம். விதுரரே, புரிந்து கொள்ளும்” - என்று மைத்ரேயர் கூறினார். 

விதுரருக்கு மிகுந்த மகிழ்ச்சி. “நம்முடைய பெருத்த ஐயத்தை உம்முடைய உபதேசம் என்கிற கோடரியாலே வெட்டிச் சாய்த்து விட்டீர். இப்போது ஒன்று புரிந்தது. பரமாத்மா சுதந்தி ரன். அவன்தான் முதலாளி. அவனே தலைவன். அவனுக்கு ஒவ்வொரு ஜீவாத்மாவும் தொண்டர்கள். இந்த உண்மையைத் தெரிந்து கொண்டேன். தன் தொண்டர்கள் தன்னை அடைய வேண்டும் என்பதற்காக, இவர்கள் எல்லோரும் முக்தி அடைய வேண்டும் என்பதற்காகத்தான் பெருமான் படைக்கிறான். அந்தப் படைப்பின் ரகசியத்தைத் தெரிந்து கொண்டு, நானும் தொண்டு புரிந்து, என் இறைவனுக்கும் மகிழ்ச்சி கொடுத்து, நான் இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாகவும், இவ்வுலக வாழ்வு முடிந்த பிற்பாடு கர்மங்களைத் தொலைத்து, அவ்வுலகில் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இதைத் தெரிந்து கொண்டேன். 

“ஆனால், ஒன்று புரிந்தது. எந்த ஞானமும் இல்லாத அறிவிலியும் திருப்தியாக இருக்கிறான். மிகுந்த ஞானியும் திருப்தியாக இருக்கிறான். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நாம்தான் தவித்துக் கொண்டிருக்கிறோம். புத்தகத்தையே திறக்காவிட்டாலும் ஐயம் வாராது. புத்தகத்தையே படித்து முடித்து விட்டாலும் ஐயம் போய் விடும். ஆனால், பாதியாக இருந்தால்தானே ஐயம் ஏற்படும். எனக்கு அந்த ஐயம் தீர்ந்தது. இப்போது மேலும் எனக்கு உபதேசிக்க வேண்டும். பகவான் சிருஷ்டித்தான் என்று சொன்னீர், புரிந்தது. யார் யாரை சிருஷ்டிக்கிறார்? விராட் புருஷன் என்பது யார்? அவர் ஆயிரம் கைகள், ஆயிரம் தொடைகள், ஆயிரம் கால்களோடே இருப்பாராமே? அவர் பத்து வித சிருஷ்டி செய்தாராமே! இவற்றையெல்லாம் விளக்க வேண்டும். 

“மேலும், சிருஷ்டிக்கப்பட்ட தேவர்கள், ரிஷிகள் இவர்களுடைய வம்சம், அவருடைய பிள்ளைகள், பேரன்கள், ஆகியோருடைய கதையைக் கூற வேண்டும். பூ உலகம் எப்படி இருக்கும்? ஈரேழு பதினான்கு உலகங்களைப் பற்றியும் சொல்ல வேண்டும். ரிஷிகள், வேதங்கள், அவர்கள் செய்த யக்ஞம், யோகம், உலகத்தில் இருக்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்கிற நான்கு புருஷார்த்தங்கள், இவை எல்லாவற்றையும் கூறும். சிராத்தம் செய்வது எப்படி? பிதுர்க்களுக்கு ஏன் தர்ப்பணம் செய்ய வேண்டும்? கிரஹங்கள், நக்ஷத்திரங்கள் இவை எல்லாம் என்னைப் பாதிக்குமா? நான் ஏன் தானம் செய்ய வேண்டும்? தபஸ் புரிய வேண்டும்? – இவையெல்லாவற்றையும் சொல்லும். ஒரு குரு தன் சிஷ்யன் என்ன சந்தேகத்தைக் கேட்டாலும், அதை ஆனந்தமாகச் சொல்கிறார். மேலும், மேலும் அவர் கேட்கக் கேட்கக் குருவுக்குத் திருப்தி. அதைப் போல நீரும் கூற வேண்டும். 

“ஞானம்தான் சிறந்த சாதனம். முக்தி அடைவதற்கு ஞானமே சிறந்த சாதனம் என்று தெரிந்து கொண்டேன். பெருமானைப் பற்றியும், பக்தர்களைப் பற்றியும் சொல்லும். ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டினால், அதனால்தானே நமக்கு உய்வே கிட்டும். மைத்ரேயரே! என்னிடத்தில் கருணையோடு கூறும்” என்று விதுரர் வினவ, சிஷ்யன் கேட்டதற்கு புன்சிரிப்பு மாறாமல் மைத்ரேயர் பதில் கூறத் தொடங்குகிறார், நாமும் கேட்போம். 

(தொடரும்) 

நன்றி - துக்ளக்

திங்கள், 17 ஜூன், 2013

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 43


‘பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத்தானே சொன்னார்? நமக்காகவா சொன்னார்? அவனுக்குச் சொன்னது நமக்கு எப்படிப் பொருந்தும்?’ என்று சிலர் கேட்கலாம். அர்ஜுனன் என்பது பகவானுக்கு ஒரு சாக்கு. அவ்வளவே! முழுக்க முழுக்க உலக மக்களுக்காக உபதேசிக்கப்பட்டதுதான் கீதை.கீதையில் இல்லாத விஷயங்களே இல்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கிற அத்தனைப் பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும், வேதனைகளுக்கும் விபரீதங்களுக்கும் கீதையில் பொருளுரைத்திருக்கிறார், கண்ணபரமாத்மா. எவர் ஒருவர் பகவத் கீதையைப் படித்து, உணர்ந்து, தெளிகிறாரோ… அவருக்குப் புத்தியில் தெளிவும், சிந்தனையில் தீட்சண்யமும் ஏற்படும் என்பது உறுதி.

அப்பேர்ப்பட்ட உன்னதமான கீதையில் இருந்து இளைஞர்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றை இன்றைய இளைஞர்கள் ஏற்றுச் செயல்பட்டால், அடுத்தடுத்த தலைமுறையில் நல்லதொரு மாற்றங்களும் ஏற்றங்களும் நிச்சயம் நிகழும்.


கல்லூரியில் படிக்கும்போது, கேம்பஸ் இன்டர்வியூ என்று வைக்கிறார்கள். அதில் தேர்வானதும் குதூகலமாகிவிடுகிறார்கள் இளைஞர்கள். பின்னே… படித்து முடிப்பதற்கு முன்பே, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை… அதுவும் கை நிறையச் சம்பளத்துடன் என்றால், குதூகலத்துக்குக் கேட்கவா வேண்டும்?
ஆனால் என்ன… படித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு வருடம் கழித்து வேலை நிச்சயம் என்றாகிவிட, வாழ்வில் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். இனி வேறு எதுவும் இல்லை என்கிற தேக்க நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

ஆச்சார்யர் என்கிற குருவிடம் கால்வாசியும், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து கால்வாசியும், காலப்போக்கில் நடக்கிற சூழல்களால் கால்வாசியும், இறைவனால் கால்வாசியும் போதனைகள் கிடைக்கப் பெறுகின்றன. அப்படியிருக்கும்போது, ஆச்சார்யர் எனும் ஆசிரியரிடம் கற்றுக்கொள்வதற்கே ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் இருக்கும்போது, போதும் என்கிற நினைப்பு வரலாமா இளைஞர்களுக்கு?

‘கற்றுக்கொள்வதற்கு வயதோ, நேரம் காலமோ தேவையில்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்; எப்போதும் எவரிடம் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்’ என்று வலியுறுத்துகிறது கீதை.
அதேபோல், அர்ஜுனனிடம்… ‘நான் சொன்ன விஷயங்களை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால் போதாது, அர்ஜுனா! நல்ல விஷயங்களை எவரிடம் இருந்தும் பெறலாம். நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்; தெளிவு பெறுவாய். கேட்பதும், கேட்டதைக் கொண்டு செயல்படுவதும் மட்டுமே உன்னுடைய வேலை!’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். உடனே அர்ஜுனன், ‘அப்படியென்றால் பலன்?’ என்று கேட்க… ‘அதை என்னிடம் கொடுத்துவிடு’ என்கிறார் பகவான். அதைக் கேட்டுக் குழம்பிப் போனான் அர்ஜுனன். ‘செயலைச் செய்த எனக்குத்தானே பலன் கிடைக்கவேண்டும்?’ என்று மெள்ளக் கேட்டான்.

பகவான் சிரித்துக்கொண்டே, ‘உன் செயலால் விளைகிற வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும்; நல்லதாகட்டும் கெட்டதாகட்டும்… அந்தச் செயலால் விளையும் பலன் எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்’ என்கிறார்.

இதை இளைஞர்களும் மாணவர்களும் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்?

படிப்பது மட்டுமே அவர்களின் வேலை. புத்தியும் மனமும் சக்தி வாய்ந்தவை. அதற்குள் பாடப் புத்தகங்களைப் படித்துப் படித்து உருவேற்றிக் கொண்டு பதித்துக் கொள்ளவேண்டும். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் படிக்கவேண்டும். ‘இதைப் படிச்சுட்டோம்னா, அதிக மார்க் எடுத்துடலாம். அதிக மார்க் எடுத்தா, நாம விரும்பின காலேஜ்ல, நாம நினைச்ச படிப்பிலேயே சேரமுடியும். அந்தப் படிப்புக்குக் கை நிறையச் சம்பளம் கிடைக்கும். அப்படிச் சம்பளம் கிடைச்சா, தினமும் ஹோட்டல்ல ரவா தோசை சாப்பிடுவேன்…’ இப்படியான கனவில் இருந்தும், கற்பனையில் இருந்தும் விலகிவிடுவதே உத்தமம்.

கதை ஒன்று உண்டு. ஓர் ஆசாமிக்கு எதிரே கொஞ்சம் மாவு தயாராக இருந்தது. உடனே அவர் யோசிக்கத் துவங்கினார். ‘இந்த மாவைக் கொண்டு நான்கு சப்பாத்திகள் தயார் செய்யமுடியும். அந்தச் சப்பாத்திகளை நான்கு ரூபாய் என்று பதினாறு ரூபாய்க்கு விற்றால், இப்போது இருக்கும் மாவைவிட இரண்டு மடங்கு மாவு வாங்கலாம். அதற்கு எட்டு சப்பாத்திகள் செய்யலாம். அதில் வரும் தொகை, அதனால் கிடைக்கும் மாவு, அவற்றில் இருந்து வரும் தொகை என்று கணக்கிட்டுப் பார்த்தால், மாதம் ரூ.80,000 சம்பாதிக்க முடியும் என்னால். அப்போது வேலைக்கு நான்கு பேரை வைத்துக் கொள்வேன். அவர்களில் எந்த வேலைக்காரனாவது வேலை செய்யாமல் சோம்பேறியாக உட்கார்ந்திருந்தால், அவனை இந்தக் கோலாலேயே விளாசித் தள்ளிவிடுவேன்…’ என்று நினைத்தபடியே, தன் கையில் வைத்திருந்த கோலை வேகமாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சுழற்றினான். அந்தச் சோம்பேறி வேலைக்காரனின் கால்களில் அடிப்பதாக நினைத்து, கோலால் ஒரு வீசு வீச, அவன் எதிரே மாவு வைக்கப்பட்டிருந்த மண் சட்டி மீது பட்டு, அது உடைந்து, மாவெல்லாம் மண்ணில் சிதறியது.

ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயலை எப்படிச் செய்யலாம் என்று திட்டமிட்டுச் செய்யவேண்டும். சரியாகத் திட்டமிட்டு, நேர்த்தியாகச் செயல்படுகிற சாதுர்யத்தை இளைஞர்கள் கைக்கொள்ளவேண்டும். அந்த ஆசாமியின் மாவுக்கனவு போல் நம் வாழ்க்கை ஒருபோதும் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.

படிப்பதில் ஆழ்ந்து ஈடுபட்டால் போதும். தெளிவுடன் உள்வாங்கிக் கொள்வதே சிறந்தது. அப்படிச் செயல்பட்டால், 95 மார்க் கிடைக்காமல் போய்விடுமா என்ன? படிக்கும்போது படிப்பை மட்டுமே நினைக்க வேண்டும். படிக்கிற வேளையில், இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என நினைக்கவே நினைக்காதீர்கள், இளைஞர்களே!

முறம், சல்லடை இந்த இரண்டும் ஒரே விஷயத்தைத்தான் செய்கின்றன. ஆனால், அப்படிச் செய்வதில் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளைச் சல்லடையால் சலித்துப் பாருங்கள்; அதையே முறத்தால் புடைத்துப் பாருங்கள். தேவையானது எதுவோ அது கீழே போய், கசடுகள் அனைத்தும் சல்லடைக்குள் தங்கிவிடும். ஆனால், முறத்தில் ஒரு பொருளைப் போட்டுப் புடைத்தோமானால், தேவையற்ற பொருட்கள் எல்லாம் முறத்தில் இருந்து சட்சட்டென்று வெளியே தெறித்து விழுந்துவிடும். தேவையானவை எதுவோ அது அப்படியே முறத்தில் தங்கிவிடும். நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதில் நாம் முறம் போல் இருக்கிறோமா, அல்லது சல்லடையாக இருந்து விட்டுவிடுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது.

ஒரு செயலைச் செய்து முடிப்பதில் தீவிர முயற்சியும் சரியான திட்டமிடலும், செயல்பாட்டில் நேர்த்தியும் வந்துவிட்டால், நமது காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியையே தேடித் தருவான் பகவான். சந்தேகமே இல்லை.

‘செயலைச் செய்தது நான்தானே? அப்படியெனில் பலனை உனக்கு ஏன் தரவேண்டும்’ என்று அர்ஜுனன் கேட்டதற்கு பகவான் சொல்கிறார்… ‘நல்ல பலன் என்றால் எனக்குத் தந்துவிடு என்றா சொல்கிறேன். கெட்டதோ நல்லதோ… பலன் எதுவாக இருந்தாலும், அதை என்னிடம் கொடுத்துவிடு என்கிறேன். இதில் என்ன தவறு அர்ஜுனா?

தவிர, இன்னொரு விஷயம். நீ சரீரன். உன்னால் மட்டுமே விளைந்தது இல்லை இது! ஐந்து பேர் ஒன்றுகூடவேண்டும். அதாவது ஆத்மா, தேகம், பஞ்சபூதங்கள், பரம்பொருள், இந்திரியங்கள் ஆகிய ஐந்தும் இணைந்தால்தான் செயலைத் திட்டமிடவோ, முனைப்புடன் செயல்படவோ முடியும். ஆகவே, செயலைச் செய்வது மட்டுமே உன் வேலை. அதில் எப்போதும் கவனம் செலுத்துவாயாக! பலனைப் பற்றி அலட்டிக் கொள்ளாதே!’ என்கிறார் பரந்தாமன்.

அதாவது, ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

எனவே, பலனை எதிர்பாராமல் கண்ணும் கருத்துமாக நமது கடமைகளைச் செய்துகொண்டே போவோம். அவற்றுக்கான பலன் நிச்சயம் நம்மை வந்து அடைந்தே தீரும்!

எல்லாப் புகழும் கிருஷ்ணனுக்கே!

முற்றும்.

நன்றி - சக்தி விகடன்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 42

ஞாயிறு காலையில் இத்தனை மணிக்கு எழுந்திருக்கவேண்டும் என்கிற எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் மெள்ளக் கண் விழிப்பவர்கள், மிகுந்த உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் சொல்வார்கள்… ‘அடடா! நேத்திக்கு சுகமா தூங்கினேன். அடிச்சுப் போட்டாப்ல, நிம்மதியான உறக்கம். ஆனந்தமா இருந்துச்சு தூக்கம்!’வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை எனும் விடுமுறை நாள் என்பது எத்தனை பெரிய சுகம்! சனிக்கிழமை இரவு தூங்கப் போகும்போதே, ‘அப்பாடா… நாளைக்கு அரக்கப்பரக்க எழுந்து ஓடவேணாம்’ என்று நிம்மதியுடன் தூங்கச் செல்வதில் இருந்தே துவங்கி விடுகிறது நிம்மதியும் சந்தோஷமும்.

அது எப்படி? விழித்துக்கொண்டிருக்கும்போதுதானே நமக்கு என்ன நேர்கிறது என்பதை நம்மால் உணர முடியும்? கை, காலை அசைக்காமல், கண்கள் சொருக, உலகமே இடிந்து விழுந்தாலும் காதில் விழாத அளவுக்குத் தூங்குகிறபோது, அப்படியான தூக்கத்தை நிம்மதியான தூக்கம் என்று எப்படி நம்மால் சொல்ல முடிகிறது? அப்படி உணருவது யார்? அந்த சுகமான தூக்கம் என்பது யாரைச் சென்று சேர்ந்து, நிம்மதியைத் தருகிறது?

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அது ஆத்மாவின் சந்தோஷம் என்பதை உணரமுடியும். சரீர சந்தோஷம், ஆத்ம சந்தோஷம் என இரண்டு வகை உண்டு. நமக்குப் பிடித்த ஆடைகளை அணிவதும், பிடித்த உணவை உண்பதும், விரும்பிய வாகனத்தில் பயணிப்பதும், சொகுசு மெத்தையில் படுப்பதும் சரீர சந்தோஷங்கள். ஆனால், ஆத்ம சாட்ஷாத்காரத்தை உணர்ந்து தெளிந்து புரிந்து நடப்பதுதான் ஒவ்வொரு மனிதனின் கடமை என்கிறார் பகவான்.

அதனால்தான் அர்ஜுனனுக்கு உரைத்த கீதையில், சரீர அனுபவம் பற்றி எதையும் குறிப்பிடவில்லை ஸ்ரீகிருஷ்ணர். கண்ணில் படுகிற, தொட்டு உணரக்கூடிய சரீரம் பற்றி நாமே அறிந்துகொள்வோம் என்று பகவானுக்குத் தெரியாமலா இருக்கும்! ஆகவே, நாமே தெரிந்துகொள்ளக்கூடிய எளிய விஷயத்தைப் புறந்தள்ளிவிட்டு, முக்கியமான விஷயங்களைப் பாடமாக்கி, எளிமையாகத் தந்தார் கிருஷ்ண பரமாத்மா. அவர் சொல்லச் சொல்ல, அர்ஜுனன் மலைத்துப் போனான். வாழ்வின் அத்தனை சூட்சுமங்களையும் வாழ்வியல் நெறிமுறைகளையும் ஒருங்கே பயின்றான்; படித்ததைச் செயலாக்கினான்; வெற்றியும் பெற்றான்.

‘குளித்துவிட்டுச் சாப்பிடு’ என்கிறது வேதம். தினமும் நீராடு என்று சொல்லியிருக்கலாம். ஒவ்வொரு வேளையும் சாப்பிடு என்று அறிவுறுத்தியிருக்கலாம். ஆனால், அப்படிச் சொல்லாமல், குளித்துவிட்டுச் சாப்பிடு என்று சொல்லியிருக்கிறது வேதம். ஏன்?

உடல் வியர்த்து, உடலில் சோர்வும் அயர்ச்சியும் வந்துவிட்டால், யாரும் சொல்லாமல் நாமே குளிக்கத்தான் போகிறோம். அதேபோல, பசி நேரம் வந்துவிட்டால், வழக்கம்போல் வேளாவேளைக்குச் சாப்பிடத்தான் போகிறோம். ஆகவே, வேதம் குளி என்றும் சொல்லவில்லை; சாப்பிடு என்றும் போதிக்கவில்லை. ‘குளித்துவிட்டுச் சாப்பிடு’ என்று வேறொரு இடத்துக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அப்படிச் செய்வதில்தான் தேக ஆரோக்கியமும் ஆத்ம சுத்தியும் இருக்கிறது என்பதைச் சூசகமாக உணர்த்துகிறது வேதம். அதை எளிமையாக எல்லோருக்கும் உணர்த்தியவர் பரமாத்மா.

சாப்பிடுவது மட்டுமல்ல; வீட்டில் பெண்கள் குளித்த பிறகுதான் அடுப்பைப் பற்றை வைக்கவேண்டும்; அரிசி போன்ற தானியங்களைத் தொடவேண்டும். குளித்துவிட்டுச் சுத்தபத்தமாகச் சமையலறைக்குச் சென்று உணவு தயாரிப்பதே உத்தமம். இன்றைய காலகட்டத்தில், குழந்தை ஏழரை மணிக்கும் கணவர் எட்டு மணிக்கும், மனைவி எட்டரை மணிக்குமாக பள்ளிக்கும் வேலைக்கும் ஓடவேண்டியிருக்கிறது. ஆனாலும் வேதம் அறிவுறுத்துவதை, சான்றோர்கள் உபதேசித்ததை ஒருபோதும் மீறக்கூடாது.
வேதத்தின் நாயகனும் அகில உலகத்தின் தலைவனாகவும் திகழ்கிற பரம்பொருள், நண்பனாகவும் தூதனாகவும் இருந்து எப்படியெல்லாம் உலகுக்கு அருள்பாலித்தார் என்று பார்த்தோம். இப்போது வேதத்தின் மூலமாகவும் கீதையின் வாயிலாகவும் உபதேசித்து, நமக்கெல்லாம் ஆச்சார்ய புருஷனாகவும் திகழ்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

ஏழைக் குசேலனுக்கு நண்பனாக இருந்து, அவனுடன் சேர்ந்து அவல் உண்டார். அவனுடைய குடிசையை மாளிகையாக மாற்றி, நாயகனாகவும் அருள்பாலித்தார். அர்ஜுனனுக்குச் சொல்கிற சாக்கில், கீதையை உலகுக்கு எடுத்துரைத்து தன்னை ஆச்சார்யனாக வெளிப்படுத்தி, பாடங்கள் தந்து வழிநடத்தினார். பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைப் பற்றிக்கொண்டுவிட்டால் போதும்… இந்த ஜன்மத்தை இனிதே நிறைவேற்றித் தந்து அருள்பாலிப்பார் பரமாத்மா.

”கண்ணா… எனக்கு ஒரு ஆசை! ஜகத்துக்கே நாதன் என்கிறாய்; உலகமே உன் சொத்து என்று சொல்கிறாய். புல்லாங்குழலும் சிரசில் மயில்தோகையும் கொண்டு உன் அழகுத் திருமுகத்தைக் காட்டுகிறாய். ஆனால், ஜகத்துக்கே நாதனாகத் திகழும் உன் திருக்கோலத்தைக் காண வேண்டும். அதுவே என் ஆசை. எனக்கு அருள்வாயா?” என்று அர்ஜுனன் கேட்டான்.

”அவ்வளவுதானே…” என்று சிரித்த முகத்துடன் சொல்லிவிட்டு, பூமிக்கும் வானுக்குமாக விஸ்வரூபம் எடுத்து நின்றார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். அசுரர்களும் தேவர்களும், முனிவர்களும் ஞானிகளும், பெண்களும் குழந்தைகளும், மனிதர்களும் மரங்களும் என உலகில் உள்ள அனைத்துமே அவன் வாய்க்குள் வந்து விழுந்தன. பிறகு, அந்த உயிர்கள் அவனில் இருந்து வெளிவந்து உலகில் விழுந்தன. இதைப் பார்த்து பிரமித்து நின்றான் அர்ஜுனன். ”என் ஆச்சார்யரே… என்னை ஆளும் பரம்பொருளே! உம்மை வணங்குகிறேன்” என்று சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான்.

”எனக்கு நண்பனாக இருந்து தோள் கொடுத்தாய். நாயகனாக இருந்து வெற்றிக்கு வியூகம் அமைத்தாய். தூதனாகச் சென்று அத்தனை காரியங்களிலும் ஈடுபட்டாய். ஆச்சார்யனாக இருந்து கீதோபதேசத்தை வழங்கி, புத்தி தெளிய வைத்தாய். ஆத்மாவைப் புரிய வைத்தவனும் நீயே! பரமாத்மாவான உன்னைச் சரணடைதலே மோட்சத்துக்கு எளிய வழி என்று எடுத்துரைத்தவனும் நீயே! உன்னை வணங்கித் தொழுகிறேன், கண்ணா… என்னை ஆட்கொண்டு அருள்பாலிப்பாயாக!” என்று கண்ணீர் மல்கக் கை கூப்பி, நமஸ்கரித்தான் அர்ஜுனன்.

கண்ணபிரான், எல்லாமானவன்! எல்லாவற்றிலும் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவன். அவனை ஒருகணம் நினைத்தால் போதும்… ஏதேனும் ஒரு ரூபத்தில், ஓடோடி வந்து நம்மைக் காப்பான் என்பது சத்தியவாக்கு.

(அடுத்தது நிறைவுப் பகுதி) 

நன்றி - சக்தி விகடன்