தீபாவளி பண்டிகை நம் பாரத தேசத்தில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகளில் ஒன்றாகும். தீபாவளி பண்டிகை ஐப்பசி மாதம் கிருஷ்ண சதுர்த்தியன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும். மொத்தம் மூன்று நாட்கள் மிகச் சிறப்பாக புத்தாடைகள், பட்டாசுகள், பக்ஷணங்கள், விரதங்கள் என கொண்டாடப்படும் விழாவாகும்.
முதல் நாள் நரக சதுர்த்தசியாகவும், இரண்டாம் நாள் தீபாவளியாகவும், மூன்றாம் நாள் பலி பாட்டிமையாகவும் கொண்டாடுவார்கள். வராஹ அவதாரத்தில் பூமிதேவிக்கும் வராஹ மூர்த்திக்கும் பிறந்த நரகாசுரன் மிக மிக கொடிய அரக்கனாவான். அவன் தன் மரணம், தன் தாயின் கையால் தான் நிகழ வேண்டும் என்று வரம் பெற்றான்.
யுகங்கள் கடந்தன. கிருஷ்ணாவதாரத்தில் சத்யபாமா பூமிபிராட்டியின் அம்சமாக அவதரித்தார். கிருஷ்ணர் தன் சூஷ்மத்தால் சத்யபாமாவை அந்த கொடிய நரகாசுரனை வதம் புரிய வைத்தார். நரகாசுரன் தான் இறக்கும் தருவாயில் தன் தீய குணங்களை எல்லாம் விடுத்து நல்வரம் தர வேண்டினான். அதாவது தான் இறந்த நாள் எல்லோரும் புத்தாடை அணிந்து, விளக்குகளை ஏற்றி சந்தோஷமாக கொண்டாட வேண்டும் என்று வரம் வேண்டினான். பகவானும் அவ்வாறே அருளினார். அந்த நாளே நரக சதுர்த்தசியாக அனைவராலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இராமாயணத்தில் ஸ்ரீராமபிரானும் சீதையும், லட்சுமணனும் காட்டிலிருந்து இராவணனை வெற்றி கண்டு திரும்பிய திருநாளை அயோத்தி மக்கள் எல்லோரும் சேர்ந்து விளக்கேற்றி அவர்களை வரவேற்றனர். தீபாவளி அன்று தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து கொண்டாடும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருப்பது நாம் காணலாம். மூன்றாவது நாள் பலி பாட்டிமை என்று கொண்டாடுவர்.
வாமன அவதாரத்தில் பலி சக்கரவர்த்தி என்ற அரக்கன் பாதாளத்தில் தள்ளப் பட்டார். பலி சக்ரவர்த்தி வாமனரிடம் தான் ஒரு நாள் பூலோகத்திற்கு வந்து தன் மக்களை காண வேண்டும் என்று கோரினார். வாமனரும் அவ்வாறே ஆகட்டும் என்று கூற, அந்த நாள் அவர் பெயராலே "பலிபாட்டிமை”
என்று கொண்டாடப்படுகிறது.
தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்த்தன மலைக்கு "அன்னகூட உத்ஸவம்” மிக சிறப்பாக நடைபெறும். குன்றெடுத்த கோவிந்தனை நினைவுபடுத்தும் நாளாகும். அந்த நாளில் சில மாநிலத்தில், கேதார கௌரி விரதம், லட்சுமி பூஜை மற்றும் கணேச பூஜை செய்வதும் நடை முறையில் உள்ளது. இந்நாளில், ஸ்ரீமஹாலக்ஷ்மி தாயார் வைகுண்டத்திலிருந்து பூமிக்கு வந்து மக்களுக்கு வரங்களை அருள்கிறார் என்று நம்பப்படுகிறது. தீபாவளி வான வேடிக்கைகளுக்கு மட்டும் அல்லாமல், நம் வாழ்வில் இருக்கும் எண்ணங்கள், தீய பழக்க வழக்கங்கள் எல்லாம் ஒழிந்து, புதிய தீபம் ஒளிர்வதுபோல் நல்ல எண்ணங்கள் வாழ்க்கையில் பிரகாசிக்கும் என்பதை உணர்த்துவதை அறியலாம். தீயவை சுட்டெரிக்கப்பட்டு நன்மையே விளங்கும் என்பது தான் தீபாவளியின் தனித்துவமாகும். தீபாவளி நன்நாளில் எல்லா ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறும்.
திருமலையில் தீபாவளி
கலியுக வைகுண்டமான திருமலையில் ஆனந்த நிலையம் தினமும் தீபவொளியால் ஒளிர்வது அனைவரும் அறிந்ததே. தீபாவளி திருநாளில் திருமலையில் வண்ண ஒளி விளக்குகள், அகல் விளக்குகள் என்று பலவிதமான விளக்குகள் ஏற்றி திருமலையப்பனையும் தாயாரையும் வணங்குகிறார்கள். அன்று திருமலை ஆலயத்தில் தீபாவளி ஆஸ்தானம் என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.
தீபாவளி அன்று உபய நாச்சிமார்களுடன் திருமலையப்ப ஸ்வாமியையும் விஷ்வக்சேனரையும் தங்க வாயில் அருகில் எழுந்தருளச் செய்வார்கள். கருட சன்னிதி முன்பு பலவிதமான பூஜை பொருட்களை வைத்து, அலங்கரிப்பார்கள். விஷ்வக்சேனர், எம்பெருமானின் சேனாதிபதியாவார். அவர் தெற்கு நோக்கி அமர்த்தப்படுவார். பின்பு சிறப்பு குடைகள், அர்ச்சனை பொருட்கள், பிராசாதம் மடைபள்ளியிலிருந்து பிரதக்ஷணமாக மேளதாளத்தோடு கொடி மரம் சுற்றி தங்கவாயில் முன்பு வைப்பார்கள். இந்நிகழ்ச்சியில், வந்து பெரிய ஜீயர் ஸ்வாமிகள், ஆறு பட்டு வஸ்திரங் களை வெள்ளித் தட்டில் வைத்து ஆனந்த நிலையத்தையும் துவஜஸ்தம்பத்தையும் பிரதக்ஷணமாக உள்ளே வந்து அந்த ஆடைகளை சமர்ப்பிப்பார். பட்டு வஸ்த்திரங்களில் ஒன்றை எம்பெருமானின் கிரீடத்திற்கும், இரண்டாவது பகவானின் வாளான நந்தகத்திற்கும், மூன்றாவது உத்தரீயமாகவும், நான்காவது தோள் மாலையாக மூல மூர்த்திக்கும் அர்ச்சகர்கள் அணிவிப்பர். ஐந்தாவது வஸ்திரம் திருமலையப்ப ஸ்வாமிக்கும், ஆறாவது சேனை நாதருக்கும் சாற்றுவார்கள்.
பல சிறப்பு ஹாரத்திகளையும் செய்வர். அதாவது மஹந்த் ஹாரத்தி, தரி கொண்ட வெங்கமாம்பா ஹாரத்தி, தாளபாக்க அன்னமய்யா ஹாரத்தி முதலிய ஹாரத்திகளை செய்வார்கள். புனிதமான அக்ஷதைகள் தூவி மங்கள வாத்தியம் முழங்க தீபாவளி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெறும். சிறப்பு பிரசாதங்கள் செய்து நைவேத்தியம் செய்வர். பின்னர் உபயநாச்சிமார்களோடு திருமலையப்ப ஸ்வாமி சிறப்பு சேவையாக ஸர்வ பூபால வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார்.
நன்றி - சப்தகிரி நவம்பர் 2018

கருத்துரையிடுக