செவ்வாய், 28 ஜனவரி, 2014

கண்ணபிரான் யார் பக்கம்? - பி.என்.பரசுராமன்

போருக்கு முன்னால் போட்டி... கண்ணபிரான் யார் பக்கம்?

குருஷேத்திரப் போர் நடப்பது உறுதியானது. இதையடுத்து பாண்டவர்களும் கௌரவர் களும் தங்களது படைபலத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் அரசர்கள் பலரை சந்தித்து ஆதரவு திரட்டுவதிலும் தீவிரம் காட்டினர். இதன் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணரைச் சந்திக்க துவாரகைக்கு வந்தான் துரியோதனன்.
அப்போது, கோட்டை மதிலின் மேல் பறந்த கொடிகள் இட வலமாக அசைந்தாடின. இந்தக் காட்சி, 'துரியோதனா, நீ இங்கு வந்தும் பயனில்லை. மேக வண்ணனான எங்கள் அழகுக் கண்ணன், பாண்டவர்களுக்குத் துணையாக வருவானேயன்றி, உனக்குத் துணையாக வர மாட்டான்' என்று கொடிகள் சொல்வது போல் இருந்ததாம்! இதையே,

ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடைய எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட்கு அல்லால் படைத் துணையாக மாட்டான்
மீண்டு நீ போகென்று அந்த வியன்மதில் குடுமி தோறும்
காண்டகு பதாகை ஆடை கைகளால் தடுப்ப போன்ற

என்று விவரிக்கிறது வில்லி பாரதம்.

ஆனால், துரியோதனனுக்கு இதெல்லாம் புரியவில்லை. அவன் கோட்டைக்குள் நுழைந்தான். பகவான் கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தார் (அவரா உறங்குவார்... அவர் எதிர்பார்த்திருந்தது அர்ஜுனனை. ஆனால், வந்திருப்பது துரியோதனன் அல்லவா! எனவே, தூங்குவது போன்று பாவனை செய்தார் என்றே சொல்ல வேண்டும்). அவரது மஞ்சத்தை நெருங்கியவன் பகவானின் தலைமாட்டில் அமர்ந்தான்.

வேதங்களில் வல்ல முனிவர்களும் துதிபாடும் அந்த மாலவனின் திருவடி அருகே அமர வேண்டும் என்று துரியோதனனுக்குத் தோன்றவில்லை. 'மன்னவர்க்கும் மன்னவனான நான், மாடு மேய்க்கும் இவனது காலடியில் அமர்வதா?' என்ற அகம்பாவம் அவனுக்கு. 'ஆணவம் உள்ளவர்கள், ஆண்டவனின் திருவடிகளைக் கூட நெருங்க மாட்டார்கள்' என்பதற்கு துரியோதனனே சிறந்த உதாரணம்!

கண் மூடிப் படுத்திருந்த பகவானுக்கு பதைபதைப்பு. 'எங்கே அர்ஜுனன்? இன்னும் காணோமே!' என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனன் வந்து சேர்ந்தான். பகவான் தூங்குவதைக் கண்டவன் அருகில் வந்து அவரின் திருவடிகளை வணங்கினான். பிறகு, அங்கேயே கை கூப்பியபடி நின்றான்.

பகவான் கண்ணன், விழித்ததும் முதலில் தென்பட்டது... திருவடி அருகே நின்றிருந்த அர்ஜுனனே! அதன் பிறகே தன் தலைமாட்டில் இருக்கும் துரியோதனனைக் கவனித்தார். இருவரிடமும் நலம் விசாரித்தவர், அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டார்.

உடனே துரியோதனன், ''கண்ணா, குருஷேத்திர யுத்தத்தில், எங்களுக்கு உதவியாக நீ பங்கேற்க வேண்டும். நீ விருப்பு வெறுப்பற்றவன். முதலில் வந்தவன் நான் என்பதால் போரில் எங்களுக்கே உதவி புரிய வேண்டும்!'' என்றான்.

''துரியோதனா... நீயே முதலில் வந்தவன். என்றாலும் நான் முதலில் பார்த்தது அர்ஜுனனையே! இருப்பினும் உங்கள் இரு தரப்புக்குமே உதவுகிறேன். பெரும் வீரர்களைக் கொண்ட எனது படைகள் வேண்டுமா? அல்லது போரில் நிராயுதபாணியாக கலந்து கொள்ள முடிவு செய்திருக்கும் நான் வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள்!'' என்றவர் தொடர்ந்தார்

''உங்கள் இருவரில் இளையவனான அர்ஜுனன் முதலில் தனது விருப்பத்தைக் கூறலாம்!'' என்றார்.
அர்ஜுனன் சற்றும் யோசிக்கவில்லை. ''கண்ணா! உன் துணையே எங்களுக்குப் போதும்; உனது படைகள் தேவையில்லை'' என்றான்.

இதைக் கேட்டு துரியோதனன் பூரித்தான். 'நிராயுதபாணியான கண்ணனை வைத்துக் கொண்டு என்ன செய்ய... அவனது படை பலம் கிடைத்தால் அல்லவா நன்று!' என்பதுதானே அவன் எண்ணம். அது பலித்ததில் அவனுக்கு மகிழ்ச்சி.

''கண்ணா! அர்ஜுனனின் விருப்பத்தையே நிறைவேற்று! எனக்கு உனது படைகளைக் கொடு!'' என்று கேட்டான்.

அதன்படி, கண்ணனின் படைகளைப் பெற்ற துரியோதனன் உறவினர்களுடன் அழிந்ததையும், பகவான் கண்ணனையே பெற்ற அர்ஜுனன், சகோதரர்களுடன் வாழ்ந்ததையும் அறிவோம்.

நாமும் கண்ணனிடம், கண்டதையும் கேட்காமல் கண்ணனையே துணையாகக் கேட்டுப் பெற்றால், வாழ்வில் நிச்சயம் உயரலாம்!

நன்றி - சக்தி விகடன்

செவ்வாய், 21 ஜனவரி, 2014

வெண்ணெய் வீசுகிறாள் தாயார்... மனம் உருகுகிறார் அரங்கன்! ஊடலுக்குப் பின் கூடல்! - க.ராஜீவ்காந்தி


வருடத்தின் 365 நாட்களில், 322 நாட்களும் உத்ஸவம் காணும் பெருமாள், ஸ்ரீரங்கத்து அரங்கன்தான்! காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றுக்கு நடுவே பிரமாண்டமான ஆலயத்தில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅரங்கனுக்கு விழாக்களும் பிரமாண்டமாக நடைபெறுகின்றன.
அவற்றில் மிக முக்கியமான பெருவிழா, பங்குனி உத்திரத் திருவிழாதான்!

அட... வைகுண்ட ஏகாதசி முதலான எண்ணற்ற விழாக்கள் சிறப்புற நடைபெறும் ஸ்ரீரங்கம் ஆலயத்தில், பங்குனி உத்திர நன்னாள்தான் முத்தாய்ப்பான விழாவா என ஆச்சரியம் மேலிடுகிறதுதானே?!
ஸ்ரீபிரம்மாவே கொண்டாடிய முதல் உத்ஸவம், பங்குனி உத்திரத் திருவிழா என்கிறது ஸ்தல புராணம். அதனால்தான், இந்த விழாவை, ஆதிபிரம்மோத்ஸவம் எனப் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர், ஸ்ரீரங்கம் வாழ் பக்தர்கள்.

பங்குனி உத்திர விழாவின் இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா? பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது ஒரு பங்குனி உத்திர நன்னாளில்தான்! அதுமட்டுமா? ஸ்ரீராமானுஜர், பெருமாளின் திருவடியை அடைவதற்காகத் தேர்வு செய்ததும் இந்தப் புண்ணிய நாளைத்தான்.

பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊடல் என்பதை ஏதோ கணவன்-மனைவி சண்டையாகப் பார்க்கக்கூடாது. அது, ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே நடைபெறுகிற பாசப் போராட்டம் என்பார்கள், ஆன்மிகச் சான்றோர். அதாவது, மனைவி என்பவள் ஜீவாத்மா. ஜீவாத்மாவைத் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம். எனவே, ஜீவாத்மாவான மனைவியும், பரமாத்மாவான கணவனும் தங்களுக்குள் நிகழ்கிற ஊடல்களைப் பெரிதுபடுத்தாமல், அனைத்தையும் மறந்து, அனுசரித்து இணைந்து வாழ்ந்தால்தான் பேரின்பத்தை அடைய முடியும் எனும் உயரிய தத்துவத்தை விளக்குகிறது இது.

இந்த அரியதொரு கருத்தை உலக மக்களுக்கு உணர்த்தும் வகையில், பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் மட்டையடி உத்ஸவம் எனும் பிரளயகலச வைபவம் நடைபெறுகிறது.
சரி... பெருமாளுக்கும் தாயாருக்கும் என்ன பிரச்னை? ஏன் ஊடல்?

திருச்சியில் உள்ள உறையூர் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தான் சோழ மன்னன் ஒருவன். அவனுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அந்தக் குறையைப் போக்க, ஸ்ரீமகாலட்சுமி கமல மலரில் அவதரித்த தலம், உறையூர் திருத்தலம்.

இங்கே உறையூரில், கமலவல்லி நாச்சியார் எனும் திருநாமத்தில் அவளுக்குக் கோயிலே அமைந்துள்ளது.  தாயாரின் திருநட்சத்திரம் - ஆயில்யம். எனவே, பங்குனியின் ஆயில்ய நட்சத்திர நன்னாளில், ஸ்ரீரங்கநாதர் உறையூருக்கு வருவார்; அவருடன் கமலவல்லி நாச்சியார், ஏக சிம்மாசனத்தில் திருக்காட்சி தருவதைக் காணக்கண் கோடி வேண்டும்!

உறையூரில் நாச்சியாருடன் திருவீதியுலா வந்துவிட்டு, பின்பு ஸ்ரீரங்கத்தின் சித்திரை மற்றும் உத்திர வீதிகளில் திருவலம் வந்து, ஆர்யபட்டா நுழைவாயிலின் வழியே ஆலயத்துக்கு வருவார் அரங்கன். 'பெருமாளைக் காணோமே...’ என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கும் ஸ்ரீரங்கநாயகித் தாயார், இவரின் வருகையைப் பார்க்காமல் விடுவாளா?!

எங்கு சென்றுவிட்டு வருகிறார் என்பதை அறிந்து, கடும் ஆத்திரமானாள், தாயார். கண்கள் சிவக்க, தோள்கள் புடைக்க, புருவம் நெளிய, மொத்தக் கோபமும் தலைக்கேறியபடி, புளித்த தயிர், வெண்ணெய், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அள்ளியெடுத்துப் பெருமாளின் மீது வீசியெறிந்தாள்.  

அதையடுத்து நிகழ்கிற அவர்களின் சம்பாஷணைகள்தான், சுவாரஸ்யம்! 'உமது ஆடைகள் கசங்கியிருக்கின்றன; உங்களின் திருவாபரணங்கள் கலைந்து கிடக்கின்றன; உடலெங்கும் இப்படி வியர்த்துக் கொட்டுகிறதே!’ என்று அரங்கனை அணுஅணுவாக அளந்து, ஆராய்ந்து, கோபக் கணைகளை கேள்விக்கணைகளாக்கினாள், தாயார்.

வீடுகளில் ஏதேனும் பிரச்னை என்றால், 'உனக்காக என் உயிரையும் தரச் சித்தமாக உள்ளேன்’ என்போம், அல்லவா?! இதை நமக்குச் சொல்லிக் கொடுத்த குருநாதரே அரங்கன்தான்! 'என்ன... என்னையா சந்தேகப்படுகிறாய்? உனக்காக, சமுத்திரத்திலே மூழ்கிவிடட்டுமா? எரிகின்ற தீயில் குதித்துவிடட்டுமா? அல்லது, பாம்புக் குடத்தில் கையை விடட்டுமா?'' என, தன் இனிய மனைவியைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ஏதேதோ சொன்னார் ஸ்ரீஅரங்கன். பிறகென்ன... புயலுக்குப் பின் அமைதி; ஊடலுக்குப் பின் கூடல் என்பதற்கேற்ப, முட்டிக்கொண்ட பெருமாளும் தாயாரும் ஒட்டிக்கொண்டனர். தாயாரும் கோபத்தை மறந்தாள்; வெள்ளைக் கொடி காட்டிப் புன்னகைத்தாள். இந்த நன்னாள்... பங்குனி உத்திரத் திருநாள்!

பங்குனி உத்திரப் பெருவிழாவன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தைக் கண்ணாரத் தரிசித்தால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர் என்பது ஐதீகம்! இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதி, மேலும் ஒருவரையருவர் நன்கு புரிந்துகொண்டு, கருத்தொற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.  

ஸ்ரீரங்கம் கோயிலில், பங்குனி உத்திர மண்டபம் என்றே உள்ளது. இந்த நாளில், பெருமாளும் தாயாரும் திருக்காட்சி தருவது இந்த மண்டபத்தில்தான். எனவே, மண்டபத்துக்கு இந்தத் திருநாமம் உண்டானதாம். மண்டபத் தூண்களில் ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணர், விபீஷணன், சுக்ரீவன், ஜாம்பவான் ஆகியோரின் திருவுருவங்கள் அமைந்துள்ளன.

இந்த நாளில், சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறும். அதேபோல், ஸ்ரீஅரங்கனுக்கு, ஸ்ரீராமானுஜர் அருளிய 'சரணாகதி ஸ்ரீவைகுண்ட கத்யங்கள்’ சொல்லி ஸேவிக்கப்படுவதும் வழக்கத்தில் உள்ளது! அன்று இரவில், பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.


பங்குனி உத்திர நாளில், ஸ்ரீஅரங்கனையும் ஸ்ரீரங்கநாச்சியாரையும் தரிசிப்போம்; பூமியில் வாழ்கிற தம்பதியர் யாவரும் கருத்தொருமித்து, ஒரு குறையுமின்றி வாழ்வோம்!

நன்றி - சக்தி விகடன்

'வாங்க மாப்பிள்ளை வாங்க! மகிமைமிகு மாசி மகத்தில்… - க.ராஜீவ்காந்திதிருமலைராயன்பட்டினத்தில், மாசிமக நன்னாளில், தீர்த்தவாரித் திருவிழா நடைபெறுவதைக் காண, தேர்க் கூட்டம் திருவிழாக் கூட்டமென நிறைந்திருப்பார்கள், பக்தர்கள். அன்றைய நாளில், எட்டு பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒருசேரக் காட்சி தருவார்கள் என்றால், கூட்டத்துக்குச் சொல்லவா வேண்டும்?! அப்போது எல்லா பெருமாள்களுக்கும் தலைமையேற்பவர், திருக்கண்ணபுரத்து நாயகனாம் ஸ்ரீசௌரிராஜபெருமாள்தான்!

நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் உள்ளது திருப்புகலூர். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்கண்ணபுரம். 108 திவ்விய தேசங்களுள், மிகப் பிரமாண்டமாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படும் தலம்; ஐந்து ஆழ்வார்களால் 129 பாடல்கள் பாடி, மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயம்; ஸ்ரீபெருமாளின் கீழைவீடு என பெருமைப்படுத்தப்படும் கோயில்; பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களுள் முக்கியமான திருத்தலம் எனச் சிறப்புகள் பல கொண்டது, திருக்கண்ணபுரம் திருக்கோயில்.  

ஒரு காலத்தில், மலைகளுக்கும் பறக்கும் சக்தி இருந்ததாம். அப்படி அவை பறப்பது, மனிதர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்பதால், அவற்றின் இறக்கைகளை வெட்டி வீழ்த்தினான் இந்திரன். ஒரே ஒரு மலை மட்டும், திருமலைராயன்பட்டினம் கடலுக்குள் மூழ்கி, மறைந்து தப்பித்தது!

அப்போது, அடிமைத்தனத்தில் இருந்து தன் தாயை, பெருமாளின் துணையுடன் மீட்டுவிட்ட கர்வத்தில் இருந்தான் கருடன். இறக்கைகளை விரித்தபடி இறுமாப்புடன் அவன் பறக்கும் இடத்துக்குக் கீழுள்ள பூமிப் பகுதியெங்கும் இருள் சூழ்ந்ததாம்!

இந்த நிலையில், திருக்கண்ணபுரம் தலத்துக்கும் பறந்து வந்தான் கருடன். அப்போது, ஸ்ரீசௌரிராஜபெருமாளின் துவாரபாலகர்கள், அந்தத் தலத்தின்மேல் பறக்கவேண்டாம் எனத் தடுத்தார்கள். அதை மீறினான் கருடன். ஆத்திரம் அடைந்த துவாரபாலகர்கள், பூமியில் தெரிந்த அவனது இறக்கைகளின் நிழலைத் தொட்டு இழுத்துப் பிய்த்தெடுத்தனர். இதில் நிலைகுலைந்த கருடன், திருமலைராயப்பட்டினக் கடலுக்குள், இந்திரனுக்குப் பயந்து பதுங்கியிருந்த மலையில் விழுந்தான். அந்த மலையின்மீது அமர்ந்து, மீண்டும் தனக்கு இறக்கைகளை வழங்கும்படி, பெருமாளை நோக்கிக் கடும்தவம் இருந்தான். தவத்தால் மகிழ்ந்த ஸ்ரீசௌரிராஜபெருமாள், அவனுக்குப் பறக்கும் வலிமையைத் தந்தருளினார். இந்தச் சம்பவம் நிகழ்ந்தது, மாசிமக நன்னாளில்! ஆகவே, வேறெங்கும் இல்லாத வகையில், திருக்கண்ணபுரத்தில் மட்டும் கருவறையில் திருமாலுக்கு அருகிலேயே காட்சி தருகிறார் கருடாழ்வார். கருடன் அமர்ந்து தவம் செய்த அந்த மலை, 'கருட பர்வதம்’ எனப்படுகிறது.

இதையொட்டி, கிழக்குக் கடலில் உள்ள கருட பர்வதத்துக்குக் காட்சி தரும் வகையில், திருமலைராயன்பட்டினக் கடற்கரையில் மாசி பௌர்ணமியன்று எழுந்தருள்கிறார் ஸ்ரீசௌரிராஜபெருமாள். அப்போது அவருடன் சுற்று வட்டாரக் கோயில்களில் உள்ள பெருமாள்களும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும்.


மாசிமக விழாவையொட்டி, திருக்கண்ணபுரத்தில் இருந்து திருமலைராயன்பட்டினத்துக்கு முன்கூட்டியே செல்லும் கருடாழ்வார், அங்கேயுள்ள வெள்ள மண்டபச் சத்திரத்தில் சௌரிராஜபெருமாளின் வருகைக்காகக் காத்திருப்பார். திருக்கண்ணபுரத்திலிருந்து அதிகாலை தங்கப் பல்லக்கில் புறப்படும் ஸ்ரீசௌரிராஜ பெருமாள்,  திருமருகல் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு, தீர்த்தவாரி நோக்கிச் செல்வார். வழியெங்கும், வெண்பட்டு மற்றும் ரோஜாமாலை சகிதமாக, பெருமாளுக்குக் காத்திருப்பார்கள் பக்தர்கள். அங்கே, திருமலைராயன்பட்டினம் ஸ்ரீவெங்கடேஸ்வர பெருமாள், ஸ்ரீரகுநாதபெருமாள், ஸ்ரீவிழி வரதராஜ பெருமாள், நிரவி ஸ்ரீகரியமாணிக்க பெருமாள், காரை- கோவில்பத்து ஸ்ரீநித்தியபெருமாள் முதலான பெருமாள்கள், ஸ்ரீசௌரிராஜ பெருமாளுக்காகக் காத்திருப்பார்கள். பிறகு, அனைவரும் சூழ, மாலை 5 மணிக்கு கடலில் தீர்த்தவாரி விமரிசையாக நடந்தேறும். திருக்கண்ணபுரம் கோயில் நிர்வாகம் (தமிழகம்), புதுச்சேரி மாநில அறநிலையத்துறை நிர்வாகம் ஆகியவை இணைந்து விழா ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும். இங்கிருந்து 15 நாட்கள் திருவீதி உலாவுக்குப் பிறகு, பெருமாள் திருக்கண்ணபுரத்துக்கு வருவதுடன் நிறைவுறுமாம், மாசிமகப் பெருவிழா!

இந்திரனின் நண்பன் உபரிசரவசு எனும் வேந்தனின் மகளான பத்மினியை(திருமகள்), திருமால் திருமணம் செய்து கொண்டதால், ராமபிரானை மிதிலை நகரத்து மக்கள், 'மாப்பிள்ளை’ எனக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதேபோல், திருமலைராயன்பட்டினத்து மீனவர்கள், ஸ்ரீசௌரிராஜ பெருமாளை, 'மாப்ளே’ என்றே அழைக்கின்றனர். இங்கே, நாச்சியாருக்கு 'வலைநாச்சியார்’ என்பது திருநாமம்!

திருக்கண்ணபுரம் கோயிலுக்கு எதிரில் உள்ளது நித்ய புஷ்கரணி தீர்த்தம். இதில் நீராடினால், சகல பாவங்களும் நீங்கும்; பிள்ளை பாக்கியம் பெறலாம் என்பது நம்பிக்கை.


நன்றி - சக்தி விகடன்

அனுமன் பெற்ற பரிசு! - முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச்சார்யர்கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா...' - திருப்பாவையின் 27-வது பாசுரத்தில் வரும் வரி இது. சொன்னாலே நாக்கில் நீர் ஊறும் இந்த சர்க்கரைப் பொங்கல் பாசுரத்தில்... 'உன்றன்னைப் பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்' என்று பாடுகிறாள் ஆண்டாள். அதாவது, 'எதிர்த்துப் போராடுபவர்களை ஜெயிக்கக்கூடிய பரமாத்மாவான உன்னைப் பாடி நான் பெரும் பரிசு!' என்கிறாள் ஆண்டாள். அப்படி என்ன பரிசு... நாடு புகழும் பரிசு?!
ஊரெல்லாம் கொண்டாட, பலரின் முன்னிலையில் தரப்படும் பரிசு; எந்த அபிப்ராய பேதமும் இல்லாமல் எல்லோரும் ஆமோதிக்க, உயர்ந்த சபையில் அளிக்கப்படும் பரிசு! அப்படிப்பட்ட பரிசைப் பெற்றவர் யார்?

'எங்கே ராமநாமம் ஒலிக்கிறதோ அங்கே இருப்பேன்' என்று சொன்ன ஆஞ்சநேயன்தான்! அவனுக்குக் கிடைத்தது போன்ற பரிசு யாருக்குக் கிடைக்கும்?!

ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம். ஊரே திரண்டு நிற்க, கோலாகலமாக இருக்கிறது சாகேதபுரி. சீதாதேவி, தன் கழுத்தில் இருந்த முத்துமாலையை கையில் வைத்துக் கொண்டு யாருக்குத் தரலாம் என்று யோசித்தாள்!

'தேஜஸ், தைரியம், புகழ், திறமை, வல்லமை, அடக்கம், நீதி, ஆண்மை, பராக்கிரமம், அறிவு ஆகியவை எவரிடம் விளங்குகிறதோ அவருக்கு இந்த மாலையைக் கொடு!' என்றான் ராமபிரான். உடனே, முத்துமாலையை ஆஞ்சநேயனுக்கு வழங்கினாள் சீதாதேவி. பரமாத்மாவின் திருவுளமும் இதுவே!

'அடடா... இந்தப் பரிசுக்குத் தகுதி உடையவன் ஆஞ்சநேயனே' என்று அனைவரும் ஆமோதித்தனர். இதுதான் நாடு புகழும் பரிசு!

'ராமோ நாந்யத்ர கச்சதி' என்று ஸ்ரீராமனைத் தவிர, வேறு எவரையும் நினைக்காதவன் அனுமன்.
ராமாவதாரம் முடிந்து பரமாத்மா வைகுண்டத்துக்கு எழுந்தருளும்போது புல் - பூண்டு எல்லாவற்றுக்கும் மோட்சம் கொடுத்தான். 'வைகுண்டத்துக்கு வருகிறாயா?'' என்று அனுமனிடமும் கேட்டான்.

''வைகுண்டத்தில் ராமாயண உபந்யாசம் உண்டா?'' என்று பதில் கேள்வி கேட்டான் அனுமன். ''இல்லை'' என்று பரமாத்மா சொல்ல... ''அப்படியெனில், வைகுண்டம் எனக்கு வேண்டாம்'' என்றான் ஆஞ்சநேயன். ஆனந்தக் கண்ணீர் பொங்க அனுமனை அணைத்துக் கொண்டான் ஸ்ரீராமன். ''உன்னால் காடாலிங்கனம் பண்ணப்பட்ட இந்த சரீரத்தை விட்டு வைகுண்டம் வேண்டாம்!'' என்றான் ஆஞ்சநேயன்!

இப்போதும், ராமாயண ப்ரவசனம் நடக்கும் இடத்துக்கு ஆஞ்சநேயன் வருவதாக ஐதீகம். எனவே, மணைப் பலகை ஒன்று போட்டு, இரண்டு வாழைப்பழங்களை வைப்பார்கள். 'ராமா' என்று சொல்வதைக் கேட்க அப்படியோர் ஆசை மாருதிக்கு! ஆகவே அனுமனுக்கு பரிசு கொடுத்தால், கூடாது என யார்தான் மறுப்பார்கள்?!

ஒரு முறை, பத்ரிகாஸ்ரமத்தில் இருந்து தென்திசை நோக்கி யாத்திரை வந்தார் நாரதர். இதேபோல் அனுமன், தென்திசையில் இருந்து பத்ரிகாஸ்ரமத்துக்குச் சென்றான்.

ஆகாச மார்க்கமாகச் செல்லும்போது இருவரும் ஓரிடத்தில் சந்தித்துக் கொண்டனர்.

இரண்டு பேரும் பண்டிதர்கள்; அவர்களது பேச்சில் உயர்ந்த விஷயங்களே நிறைந்திருந்தன. ''பத்ரிகாஸ்ரமம் போகிறேன்; என்னுடன் வாருங்கள்'' என்றான் அனுமன். அவரது வார்த்தையைத் தட்டமுடியாமல், நாரதரும் உடன் சென்றார்.

சமுத்திரத்துக்கு நடுவே ஓர் அழகான பட்டினத்தைக் கண்டனர். ''இதென்ன ஊர்?'' என்று கேட்டார் அனுமன். ''இதுதான் பலராமனின் ஊர்'' என்றார் நாரதர். உடனே கோபம் வந்தது மாருதிக்கு! கதாயுதத்தை ஓங்கியபடி, ''யார் பலராமன்? என் ராமனைவிட பலமானவனா..? ஊருக்குள்
சென்று 'பல' சப்தத்தை இழக்க வேண்டும். அவன் பெயரில் 'பல' இருக்கக் கூடாது. இல்லையென்றால், ஊரே சமுத்திரத்தில் உருளும் என்று சொல்லுங்கள்!'' என்று கர்ஜித்தார்.

நாரதருக்கு பயம். வேறு வழியின்றி வாசுதேவனி டம் சென்றார். வாசுதேவனுடன், வைகுண்டத்தில் இருந்து வந்திருந்த கருடனும் இருந்தார். பரமாத்மாவிடம் நாரதர், ''தங்கள் அண்ணாவின் பெயரில் உள்ள 'பல' எனும் வார்த்தையை எடுத்துவிட வேண்டுமாம்! இல்லையெனில், ஊரையே சமுத்திரத்தில் உருட்டப் போவதாகச் சொல்கிறான் மாருதி'' என்றார் நடுங்கியபடி.

இதைக் கேட்டு கோபம் அடைந்த பலராமன் கலப்பையைத் தூக்கினார். கருடனோ, 'ஒரு குரங்கா இப்படிப் பேசுகிறது? உத்தரவிடுங்கள்... அவனைக் கட்டி இழுத்து வருகிறேன்'' என்றான். பரமாத்மாவும், சந்தோஷம் பொங்க உத்தரவு கொடுத்தார்.

ஆத்திரத்துடன் வந்த கருடனை, அப்படியே வாலால் சுழற்றி, கடல் நீரில் தோய்த்து எடுத்து வீசியெறிந்தார் அனுமன். இறக்கைகள் ஒடிந்த நிலையில், பகவானின் திருவடியில் வந்து விழுந்தான் கருடன். அவனிடம், ''என்ன கருடா... இறக்கைகள் ஒடிந்து விட்டனவா?! ஒரு குரங்கை உன்னால் கொண்டு வர முடியவில்லையே...'' என்றார் மாதவன். தலைகுனிந்து நின்றான் கருடன்.

அடுத்து, சைன்யத்தைத் திரட்டிக்கொண்டு ஆவேசத் துடன் சென்றார் பலராமர். அனுமன், தனது நீளமான வாலை நீட்ட, அதில் சிக்கித் தவித்தார் பலராமர்; அவரின் சைன்யம் சமுத்திரத்தில் தத்தளித்தது!

''வேறு வழியே இல்லை. அனுமனின் கோபத்தைத் தணிக்க ஒரே வழி... நான் ராமனாக மாறுகிறேன்; நீ லட்சுமணனாக மாறி விடு'' என்று பலராமனிடம் சொன்னார் பரமாத்மா. ''அப்படியே... சத்யபாமாவை சீதாவாக அழைத்து வாரும். ஸ்ரீராம பட்டாபிஷேக கோலத்தைக் காட்டினால், அனுமனின் கோபம் பறந்தோடி விடும்!'' என்று நாரதரிடம் சொன்னார் பகவான்.

அதன்படி பரமாத்மா, ஸ்ரீராமராக அமர்ந்திருக்க, பட்டாடை சலசலக்க ஆபரணங்கள் அணிந்தபடி சபைக்கு வந்தாள் சத்யபாமா. தன் தர்மபத்தினியைக் கண்ட பரந்தாமன், ''எந்த ஊர் நாட்டியக்காரி இவள்? இங்கே அரங்கேற்றம் செய்ய வந்திருக்கிறாளோ?' என்று கேட்க, துக்கத்திலும் வெட்கத்திலும் உடைந்து போனாள் சத்யபாமா; உள்ளே ஓடிச் சென்று அழுதாள்!

நாரதரிடம் பரமாத்மா மெள்ள கண்ணசைக்க... புரிந்து கொண்ட நாரதரும் உள்ளே சென்று, ''சீதையாக வரச் சொன்னால் இப்படியா வருவது? திருமண தருணத்தில் இருந்த சீதையைப் பிடிக்காதாம் அனுமனுக்கு! அசோகவனத்தில் சோகமாக இருந்த சீதையைத்தான் பிடிக்குமாம். ஆகவே, அந்தக் கோலத்தில் வா'' என்றார் நாரதர்.

இதைக் கேட்ட சத்யபாமா, ஆபரணங்களை கழற்றினாள்; தலையை விரித்துப் போட்டாள்; சேலைத் தலைப்பைக் கிழித்து முடிச்சுகளைப் போட்டுக் கொண்டு சபைக்கு வந்தாள். இப்போதும் பரமாத்மாவுக்கு திருப்தி இல்லை. ''சீதை அசோகவனத்திலும் நன்றாகத்தான் இருந்தாள். இப்படி, பத்ரகாளி போல் வருகிறாயே'' என்றார். இதையடுத்து ருக்மிணியே, சீதாதேவியாக வந்தாளாம்!

உடனே கருடனை அழைத்த பரமாத்மா, ''உன் முதுகில் அனுமனை ஏற்றி வா!'' என்றார். அனுமனும் அவனது வாலும் நினைவுக்கு வர... கருடன் மறுத்தான்.

''நான் சொன்னதாகச் சொல்லி அழைத்து வா'' என்றார் பரமாத்மா. அதன்படி, அனுமனை சந்தித்து விவரம் சொன்னான் கருடன். அத்துடன் பகவான், பட்டாபிஷேகக் கோலத்தில் உள்ள விவரத்தையும் தெரிவித்தான். இதையடுத்து கருடனின் மேல் ஏறி வந்தான் மாருதி!

ராமாவதாரத்தில் கிடைத்த பரிசு - முத்துமாலை! இப்போது, தனது வாகனத்தையே கொடுத்து... பெரிய திருவடி மீது சிறிய திருவடி பவனி வரும் அழகை துவாரகையில் இருந்தபடி ரசித்தார் பரமாத்மா! ஆனாலும் திருப்தியில்லை அவருக்கு! அனுமன் செய்த உபகாரத்துக்கு எல்லையே இல்லையே! பிறகு... ஸ்ரீராமனாக, அடுத்து கிருஷ்ணனாக, இதையடுத்து சேஷ சயனத்தில் லட்சுமியுடன் நாராயணனாக... மாறி மாறி காட்சி கொடுத்தார் பரமாத்மா!


இதில் ஒரு விஷயம்... கிருஷ்ணனாகவும் நாராயணனாகவும் அவர் காட்சி தந்த போது, சட்டென்று கண்ணை மூடிக் கொண்ட மாருதி, ஸ்ரீராமராகக் காட்சி தரும் போது மட்டும் கண்களை அகல விரித்து ஆனந்தமாக ஸேவித்தான்! அதாவது ராமரைத் தவிர அனுமனின் மனம் வேறு எங்கும், வேறு எவரிடமும் செல்லாது! அதனால்தான் பெறற்கரிய பரிசு பெற்றான்!

நன்றி - சக்தி விகடன்

வியாழன், 16 ஜனவரி, 2014

கிரக தோஷம் போக்கும் தசாவதார தரிசனம்

யார் இந்தப் பெண்? முகமது பின் துக்ளக்கின் படை ஸ்ரீரங்கம் கோயிலை துவம்சம் செய்தது. நான்காம் திருச்சுற்றை கிட்டத்தட்ட முற்றிலுமாக அழித்துவிட்டது என்றே சொல்லலாம். அதோடு படையின் ஒரு பகுதியினர் கோயிலிலேயே தங்கிவிடவும் செய்தனர். கோயிலுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருந்த தானியங்கள் அவர்களுடைய பசியை ஆற்றின! அந்த நிலையிலும் ரங்கன் அவர்களுக்கு இப்படி கருணை செய்தான்! இவர்களது அக்கிரமத்தால் வெகுண்ட பலரில் இந்த எம்பெருமானடியாரும் (சைவக் கோயில்களில் தேவரடியார்கள் போல, வைணவக் கோயில்களில் நடன சேவை புரியும் அடியவர்கள்) ஒருத்தி. இனி தன்னால் நடனமாடி, அரங்கன் புகழ் பாடி, பக்தி செலுத்த முடியாதே என்று பெரிதும் வேதனையுற்றாள். 

தன் பாணியில் ஆலய சேவை செய்ய இயலாத தன் நிலையை எண்ணி அவள் உள்ளம் நொந்தாள். இதைவிட நேரடியாக மோட்சத்துக்கே போய், ஸ்ரீமன் நாராயணனுக்கே சேவை புரியலாம் என்றும் அவள் கருதிவிட்டாள். அப்படி போகும் வாய்ப்புத் தனக்குக் கிட்டுமானால், அதற்குமுன் இப்படி ஒரு பக்தித் தடையைத் தோற்றுவித்த பாவியை அழித்துவிட்டே அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவள் தீர்மானித்தாள். தன்னை வசீகரமாக அலங்கரித்துக் கொண்டாள். முகமதிய படைத் தளபதியைத் தன் கவர்ச்சியால் ஈர்த்து, தங்கத்தால் ஆன ரங்கநாதரின் உற்சவர் விக்ரகம் இருக்குமிடம் தனக்குத் தெரியும் என்றும் அதைத் தான் அவனுக்குக் காட்டுவதாகவும் கூறி அழைத்துச் சென்றாள்.

அவனுக்குப் போக்குகாட்டியபடி கிழக்கு பெரிய கோபுரத்தின் உச்சிக்கு இட்டுச் சென்ற அவள், அங்கிருந்து அவனைக் கீழே தள்ளி கொன்றாள். பிறகு, அந்த மாபெரும் சாதனையைப் புரிந்த திருப்தியில் தானும் கீழே குதித்தாள். தலைவனை இழந்த படை அங்கிருந்து தறிகெட்டு ஓடி மறைந்தது. ஆனாலும் அந்தப் பெண்ணுக்கு உரிய மரியாதை செய்ய அரங்கன் விரும்பினான் போலும்! அதனால், தீரச்செயல் புரிந்து, உயிர் பிரியும் தறுவாயிலிருந்த அந்தப் பெண்ணை பலரும் காப்பாற்ற முயன்றார்கள். ஆனால் அந்தப் பெண்ணோ, தன்னைக் காப்பாற்றுவதைவிட, தன் வேண்டுகோள் ஒன்றை அவர்கள் நிறைவேற்றித்தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.

அதாவது, ‘‘என்னைப் போன்ற எம்பெருமானடியார்கள் முக்தி அடையும் காலத்தில், அவர்களுடைய ஈமக்கிரியைக்காக கோயில் திருமடப்பள்ளியிலிருந்து நெருப்பும் திருக்கொட்டாரத்திலிருந்து அமுதுக்கான தானியங்களும் சுவாமியிடமிருந்து திருமாலை, திருப்பரிவட்டம் மற்றும் தீர்த்தம் ஆகியவற்றையும் பிரியும் ஆத்மாவுக்கு மரியாதை செலுத்தும்வகையில் அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டாள். அன்று அவளுக்கு அந்த மரியாதையை அளித்த கோயில் நிர்வாகத்தினர், இன்றுவரை விடாமல் அந்த மரபினர் வைகுந்தம் ஏக, அதே மரியாதையைத் தொடர்ந்து அளித்து வருகிறார்கள்.

ஸ்ரீரங்கக் கோயிலில் தரிசிக்க வேண்டிய இன்னொரு சந்நதி, தசாவதார சந்நதி. பத்து அவதாரங்களும் இங்கே கோயில் கொண்டிருப்பதுபோல வேறு ஆலயம் எதிலாவது காணப்படுகிறதா என்று தெரியவில்லை.

ராமாவதார ஸூர்யஸ்ய சந்த்
                ரஸ்ய யதுநாயக
ந்ருஸிம் ஹோ பூமிபுத்ரஸ்ய ஸௌம்ய
                      ஸோம ஸிதஸ்யச
வாமநோ விபுதேந்தரஸ்ய பார்கவோ
                           பார்க்கவஸ்ய
கூர்மோ பாஸ்கர புத்ரஸ்ய ஸைம்க்ஹி
                     கேயஸ்ய ஸுகர
கேதுர் ம்நாவாதாரஸ்ய யோகாசாந்
                          யேபி கேசரா
-என்கிறார், சுவாமி வேதாந்த தேசிகர்.

இந்தப் பாடலில் தேசிகர் முதலில் ராமாவதாரத்தைக் குறிப்பிட்டதன் முக்கிய காரணம், இந்த தசாவதாரங்களுக்கும் மூலமானவர், ராமனின் இக்ஷ்வாகு குலத்தின் குலதெய்வமாகத் திகழ்ந்த இந்த ரங்கன்தான் என்பதே. இந்த தசாவதார சந்நதியில் வழிபட்டால், கீழ்காணும் கிரக தோஷங்கள் நீங்குவதாகச் சொல்கிறார்கள்: ராமாவதாரம் - சூரியன்; கிருஷ்ணாவதாரம் - சந்திரன்; நரசிம்மவதாரம் - செவ்வாய்; கல்கி அவதாரம் - புதன்; வாமனவதாரம் - வியாழன்; பரசுராம அவதாரம் - சுக்கிரன்; கூர்ம அவதாரம் - சனி; வராக அவதாரம் - ராகு; மத்ஸ்ய அவதாரம் - கேது; பலராம அவதாரம் - குளிகன் (சனியின் மகன்)  இந்த தசாவதார சந்நதியில் தங்கியிருந்தபடிதான் கோயிலுக்கு அருஞ்சேவை ஆற்றினார் திருமங்கையாழ்வார்.

முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண
முனிவரொடு தானவரும் திசைப்ப வந்து
பன்னுகலை நால் வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய நம் பரமன் காண்மின்

-என்பது திருமங்கையாழ்வாரின் பாடல். ஸ்ரீரங்கனின் இந்த அர்ச்சாவதாரத் திருமேனி பிரம்மனின் கோரிக்கையால் உலகோருக்குக் காணக் கிடைத்தது என்கிறார் ஆழ்வார். அரக்கர்களை அழித்து, அவர்கள் ஒளித்திட்ட வேதங்களை மீட்டு பிரம்மனிடம் அளித்ததோடு, அவற்றை அவனுக்கு உபதேசமும் செய்தார். அந்த அருள் வல்லமையால் பிரம்மன் பிரபஞ்சத்தைப் படைத்தான். ஆனாலும் ஏனோ மனக்குழப்பம் அடைந்தான். தான் படைத்த பிற உயிர்களோடு, தனக்கும் நிலையில்லாமை உண்டு என்ற உண்மை, தடுமாற்றம் தந்தது. வேறு வழி தெரியாமல், பல்லாண்டுகளாக அஷ்டாக்ஷர மந்திரத்தை உபாசித்தவாறே கிடந்தான்.

பரந்தாமன் அவன்முன் தோன்றி அவன் வேண்டுவது யாது என்று வினவ, தானும் ஏனையோரும் எளிதாக தரிசனம் காணும்வகையில் அவர் அவதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டான். உடனேயே தான் திருப்பாற்கடலில் காட்டும் கோலத்தை, அப்படியே இங்கே, ஸ்ரீபிரணவாகார விமானத்தில் அர்ச்சாவதாரமாகக் காட்டினார் பெருமாள் - இது ஆழ்வார் பாடலின் திரண்ட கருத்து. இப்படி உலகோர்க்கெல்லாம் அர்ச்சாவதாரமாகக் காட்சியளித்த அந்த ரங்கனைத் தானும் தினமும் தரிசித்து மகிழ வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீரங்கத்தில், கோயிலுக்குள்ளேயே தங்கியிருந்தார் திருமங்கையாழ்வார்.

திருடிய பொருட்களால் திருமால் சேவை - கோமடம் மாதவாச்சாரியார்

மன்னனாக இருந்த திருமங்கையாழ்வார் திருவரங்கப் பெருஞ் செல்வரானார்க்கு பல்வேறு கைங்கர்யங்களை செய்து வந்தார். இவர் ஒரு சமயம்  சோழநாட்டுத் திருப்பதிகளை (சிதம்பரம் முதல் திருவரங்கம் ஈறான 40 திவ்ய தேசங்கள்) மங்களாசாசனம் செய்து வருகையில் சீர்காழியில், இவரு டைய சிஷ்யர்கள் வழக்கப்படி, ‘‘நாலுகவிப் பெருமாள் வந்தார், அருள்மாரி வந்தார், அரட்டமுக்கி வந்தார், அடையார்சீயம் வந்தார், ஆலிநாடர் வந் தார், மங்கை வேந்தன் வந்தார், பரகாலன் வந்தார்’’ என்று திருமங்கையாருக்கான விருதுகளை முழங்கிக்கொண்டு சென்றார்கள். அப்போது அவ்வூரில் இருந்த திருஞானசம்பந்த நாயனாரின் அடியார்கள் அவர்களைத் தடுத்தனர். 

‘‘எங்கள் நாயனார் இருக்குமிடத்தில் நீங்கள் ஏனையோருக்கு விருது  முழங்கிச் செல்லலாகாது’’ என்றனர். உடனே ஆழ்வாரும், ‘‘அப்படியாயின், அந்த நாயனாருடன் விவாதத்தில் ஈடுபடுவோம்’’ என்று மறுமொழி கூறினார். பிறகு, சீர்காழியில் வைணவ குலத்தில் உதித்த ஒரு வைஷ்ணவ அம்மையார் கொடுத்த வெண்ணெயை உண்ட தாடாளப் பெருமானை (காழிச்சீராம விண்ணகரப் பெருமாள்) எழுந் தருள்வித்துக்கொண்டு நாயனார் இருக்குமிடம் சென்றார், ஆழ்வார். திருஞானசம்பந்தர் ஒரு கவி சொல்ல, திருமங்கையாழ்வார் அதில் பல குற்றங் குறைகளை கூறினார்.

‘‘அப்படியானால் நீவிர் ஒரு கவி சொல்லும்,’’ என்று நாயனார் சவால் விடுக்க, ஆழ்வாரும், காழிச்சீராம விண்ணகரப் பெருமானை குறித்து ‘‘ஒரு குறளாய் இருநிலம் மூவடி மண்வேண்டி’’ என்று  தொடங்கி, பத்துபாட்டுகள் அருளிச் செய்தார். கடைசிப் பாசுரத்தில் விஷ்ணுதாசன் என்ற அர்த்தத்தில் அகம்பாவமே இல்லாமல், ‘‘ஆலிநாடன், அ ருள்மாரி, அரட்டமுக்கி, அடையார்சீயம், கொங்கு மலர்க்குழலியர்வேள், மங்கை வேந்தன், கொற்றவேல், பரகாலன், கலியன் சொன்ன சங்கமுகத்  தமிழ்மாலை பத்தும் வல்லார், தடங்கடல் சூழ் உலகுக்கு தலைவர் தாமே’’ என்று அருளிச் செய்தார்.

இதைக்கேட்ட திருஞானசம்பந்தர் மறுமொழி ஏதும் கூறாமல், ‘‘உமக்கு இவ்விருதுகளெல்லாம் பொருந்தும்’’ என்று ஆழ்வாரை வியந்து, தம்மிடமுள்ள  வேலாயுதத்தை காணிக்கையாக அளித்தார். சீர்காழிக்கு அருகிலுள்ள, திருவாலி திருநகரி திவ்ய தேசத்திற்குச் சென்றால் இன்றும் வேல் கொண்ட ஆழ்வாரை தரிசிக்கலாம். திருவரங்கச் செல்வனாரான அழகிய மணவாளனுக்கு விமானம், மண்டபம், கோபுரம், மதில் ஆகியவற்றை உருவாக்கும் கைங்கர்யங்களை செய்யத் திருவுள்ளம் கொண்டார் ஆழ்வார். அதற்காக திருநாகையில் (நாகப்பட்டினம்) உள்ள புத்த விகாரத்திலிருந்த தங்க புத்த பிரதிமையை, அந்த  சேவைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள உறுதி பூண்டார்.

அவர் தம் பரிவாரங்களுடன் புறப்பட்டு நாகப்பட்டினம் அடைந்து விசித்திரமான  சிற்ப  வேலைகளையுடைய புத்த விகாரத்தைக் கண்டார். அதனுள் நுழைவதற்கு எங்கும் வழி காணாது தவித்தார். வெளியே சுற்றி வந்தபடி அந்த ஆலயம்  முழுவதையும் ஆராய்ந்து பார்த்தார். ஆலய சிகரத்தில் சக்கர உருவிலுள்ள ஒரு யந்திரம் இடைவிடாது சுழன்று கொண்டிருந்தது. அதை நிறுத்தினால்  அந்த சிகரம் வழியாக உள்ளே செல்ல இயலும் என்று ஊகித்தார். பல வாழைத் தண்டுகளைக் கொண்டுவந்து சிறுசிறு துண்டுகளாக்கினார். அவற்றை  அச்சக்கரத்தில் நுழைத்தார். தண்டுகளின் நூல்கள் நடுவில் சுற்றிக் கொண்டதால் அந்தச் சக்கரப் பொறி அசையாமல் நின்று விட்டது.

அதற்குப்பின் தமது சீடர்களுள் ஒருவரை அவ்வழியாக ஆலயத்தினுள் இறங்கச் சொல்லி விக்ரகத்தை எடுத்து வரச் செய்தார். அந்த சீடரும் அவ்வாறே  கவர முயற்சித்தபோது, அந்த பிம்பம் தன் மந்திர பலத்தால் அவர் கைக்குச் சிக்காமல் அந்த ஆலயம் முழுவதும் திரிந்து ஓடத் தொடங்கியது.  ஆனால், ஒரு கட்டத்தில், ஆழ்வாரின் அருளால் சீடர் கரம் பட, விக்ரகத்தின் சக்தி குன்றத் தொடங்கியது. தன் சக்தி குன்றியதும், அந்த புத்த உரு வம் பேசத் தொடங்கியது. ‘‘ஈயத்தாலாகாதோ, இரும்பினாலாகாதோ, பூயத்தால் மிக்கதொரு பூதத்தாலாகாதோ, தேய்த்தேய்பித்தளை நற்செம்புகளாலாகாதோ, மாயப்பொன் வேணுமோ மதித்தென்னைப் பண்ணுகைக்கே’’ என்று அரற்றியபடி கீழே விழுந்தது.

பின்பு அந்த சீடர், அந்த  பொற்பிரதிமையை எடுத்துக் கொண்டு வந்து குருநாதர், திருமங்கையாழ்வாரிடம் அளித்தார். அதைப் பாதுகாப்பாக, இரவோடு இரவாக, நாகப்பட்டின த்திலிருந்து எடுத்துச் சென்றார். விடியும் சமயத்தில் திருக்கண்ணங்குடி திவ்யதேசத்தை அடைந்தார். அங்கே உழப்பட்டு சேறாகியிருந்த ஒரு வயலில்  அந்த தங்க விக்ரகத்தைப் புதைத்து வைத்தார். தன் சீடர்களுடன் அருகிலிருந்த உறங்காப் புளி மரத்தடியில் தங்கினார். பொழுது விடிந்தவுடன் வயலுக்குச் சொந்தக்காரர், வயலில் நடுவதற்காக நாற்றுச் சுமையை எடுத்துக்கொண்டு வந்தார். அவரைப் பார்த்த ஆழ்வார் அவரைத் தடுத்தார். ‘‘இந்த வயலில் நீங்கள் உழக் கூடாது. காரணம், இது எங்கள் பாட்டன் வயல், எங்கள் சொத்து’’ என வாதிட்டார்.

இது கேட்டுத் திடுக்கிட்ட வயலுக்குச் சொந்தக்காரர் அவர் வாதத்தை மறுத்து அந்த வயல் தனக்குச் சொந்தமானதுதான் என்று அறுதியிட்டுக் கூறினார்.
உடனே திருமங்கையாழ்வார், ‘‘இந்த நிலம் எனக்குச் சொந்தம் என்பதை நிரூபிக்கும் பத்திரத்தை நான் நாளைக்குக் கொண்டு வருகிறேன். அந்தப்  பத்திரம் தவறானதாக இருந்தால் இந்த நிலம் உனக்கே சொந்தமாகும்’’ என்று கூற, அவரும் சம்மதித்து அன்றைக்கு வயலில் வேலை செய்யாமல்  திரும்பிச் சென்றார். நிம்மதிப் பெருமூச்சு விட்டார் ஆழ்வார். தங்கமய புத்தரைக் கவர்ந்து வந்து, அவர் பொருட்டு ஒரு பொய்யையும் சொல்லி, பெருமாள் சேவையை  நிறைவேற்ற நினைத்த அவருக்கு, ஏற்படவிருந்த மிகப் பெரிய தடை நீங்கியது! பிறகு அவர் புதைக்கப்பட்ட பொன் விக்ரகத்தை எடுத்துக் கொண்டு  ஸ்ரீரங்கம் சென்று அங்கே உருக்கி விற்றனர். இப்படி உருக்கப்பட்ட தங்கத்தை அவர் எப்படிப் பயன்படுத்தினார்?

‘‘ஜிதபாஹ்ய ஜிராதி மணி ப்ரதிமா அபி
வைதிகயந்நிவ ரங்கபுரே
மணிமண்டப வப்ரகணான் விததே
பரகாலகவி: ப்ரணமே மஹிதான்’’

என்ற ஸ்ரீரங்கராஜஸ்தவம் என்ற ஸ்லோகத்தில் பராசர பட்டர் வர்ணிக்கிறார். அதாவது, ‘‘சமணர் முதலோனோரின் ரத்தினம், பொன்னாலான  பிம்பங்களை தம் தோள் வலிமையால் வென்று கொண்டு வந்து மணி மண்டபங்களையும், திருமதில்களையும் திருவரங்கத்தில் நியமித்த  பரகாலகவியான திருமங்கையாழ்வாரை வணங்குகிறோம்’’ என்று பொருள். இவ்வாறு பொன்விக்ரக பொருட்களைக் கொண்டு ஸ்ரீரங்கத்தில் பல திரு ப்பணிகளைச் செய்தார். மதில் சுவர் கட்டி வந்தபோது, தொண்டரடிப்பொடியாழ்வார் திருமால் கைங்கர்யத்துக்காக அமைத்த நந்தவனம் குறுக்கிட்டது.  அவ்வாழ்வாரின் பக்தி ஞானத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், மதில் சுவரை அந்தத் தோட்டத்துக்குக் குறுக்காகக் கட்டாமல், வளைத்துச் சென்று,  நந்தவனம் சிறிதும் பாதிக்கப்படாதவகையில் அமைத்தார்.

திவ்ய தேசங்களுக்கு மங்களாசாசனம் செய்து பதிகம் பாடி வருகையில் ‘‘பெரும்புறக் கடலை’’ என்று தொடங்கிய திருக்கண்ணமங்கை பதிகத்தை  ஆழ்ந்த பொருள் பொதிந்த அடுக்கு மொழிகளாலே அழகுறப் பாடி முடித்தார், திருமங்கையாழ்வார். அந்தப் பொருளை அறிய வேண்டும் என்று தி ருக்கண்ணமங்கை எம்பெருமானிடமே தெரிவித்தார்: ‘‘வெண்சங்கமொன்றேந்திய கண்ணா! நின்றனக்கும் குறிப்பாகில் கற்காலம் கவியின் பொரு ள்தானே’’. பகவானும் ‘‘அப்படியே கற்கிறோம். அர்ச்சாவதாரத்தில் இயலாததாகையால், பிறிதொரு காலத்தில் உம்மை ஆச்சார்யனாகக் கொண்டு,  கவியின் பொருளைக் கற்போம்’’ என்று அருளிச் செய்தான்.

அதன்படியே, ஆழ்வார் தமது அவதாரத் திருநக்ஷத்திரமான கார்த்திகை நாளில் நம்பிள்ளையாக அவதரித்தார். அச்சமயம், திருக்கண்ணமங்கை திவ்ய  தேசத்து கண்ணனும், தனது அவதாரத் திருநட்சத்திரமான ஆவணி ரோகிணியில் கிருஷ்ணன் என்னும் திருநாமத்தோடு அவதரித்தார். அவர்தான்  பெரியவாச்சான் என்ற மஹான். அப்படி அவதரித்துப் பரகால கவியின் பாடல்களோடு மற்ற ஆழ்வார்களின் பாசுரங்களையும் அவற்றின் அரும் பொரு ட்களையும் நம்பிள்ளையிடம் விரிவாகக் கற்று உலகுய்ய வியாக்யானங்களை வெளிப்படுத்தினார் என்பது பெரியோர்களின் கருத்து. திருமங்கையாழ்வார் தமது ஆறு திவ்ய பிரபந்தங்களையும் அருளிச் செய்த பின்பு ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளி திருநெடுந்தாண்டகம் என்ற பாசுரத்தை தேவகானத்தில் இசைத்துப் பாடினார்.

அதனால் திருவுள்ளம் உகந்த பெரிய பெருமாள் ‘‘உமக்கு வேண்டிய வரத்தை பெற்றுக் கொள்ளும்’’ என்று நியமித்தருளினார். ‘‘தேவரீர் மார்கழி மாத்தில் கண்டருளுகிற அத்யயன உத்ஸவத்தில் நம்மாழ்வார் அருளிச் செய்த திராவிட வேதத்தையும் (திருவாய்மொழி) திருச்செவி சாத்தியருள வேண்டும் (கேட்டு அருள வேண்டும்) என்று பிரார்த்தித்தார். பெருமாளும் அவ்வண்ணமே அருள்புரிந்தார். அவ்வாணையின்படி திருமங்கையாழ்வார், நம்மாழ்வாருடைய ஊராகிய ஆழ்வார் திருநகரியிலிருந்து அர்ச்சாரூபியான நம்மாழ்வாரை வருடந்தோறும் ஸ்ரீரங்கத்திற்கு எழுந்தருளச்செய்து அவர் முன்னிலையில், வடமொழி வேதம், திராவிட வேதமான நாலாயிர திவ்ய ப்ரபந்தம் இரண்டும் சேர்ந்த உபய வேத பாராயணத்தை சிறப்பாக நடத்திக் காட்டினார்.

பத்து நாட்களையும் ராப்பத்து உத்ஸவமாக  கொண்டாட ஏற்பாடு செய்தார். உத்ஸவம் முடிந்த பின்பு சுவாமி நம்மாழ்வாரை மீண்டும் குருகூர்க்கு (ஆழ்வார் திருநகரி) எழுந்தருளச் செய்வித்தார். இப்படி பத்து நாள் விழாவாகத் தொடங்கிய திருவத்யயன உத்ஸவம், ஆசார்யர்கள் காலத்தில் மற்ற ஆழ்வார்களுடைய திவ்ய பிரபந்தங்களுக்காக பத்து நாள் பகல் பத்து உத்ஸவமும் சேர்ந்து மொத்தம், பகல் பத்து, ராப்பத்து என்பதாக இருபது நாள் உத்ஸவம் நடைபெற்றது. இதோடு இயற்பா  உத்ஸவமும் சேர்க்கப்பட்டு இருபத்தொரு நாள் உத்ஸவமாக வளர்ந்தது. பின்பு பராசரபட்டர் காலத்திலே திருமங்கையாழ்வார் அருளிச் செய்த திருநெடுந்தாண்டகத்தின் சிறப்பை நோக்கி பகல்பத்து உத்ஸவ ஆரம்ப தினத்திற்கு முன்னால் திருநெடுந்தாண்டக உத்ஸவமும் சேர்க்கப் பெற்று இப்போது நடந்து வருகிறது.

இத்தகவல் பெரியவாச்சான்பிள்ளை அருளிய கலியனருளப்பாடு போன்ற நூல்களில் காணப்படுகிறது. சில காலத்திற்கு பிறகு ஆழ்வார் திருநகரியிலிருந்து சுவாமி நம்மாழ்வாரை எழுந்தருளச் செய்வதில் பல சிரமங்கள் ஏற்பட்டதால் ஸ்ரீரங்கத்திலேயே வேறொரு நம்மாழ்வார் உத்ஸவ விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது திருவத்யயனோத்ஸவம், எல்லா திவ்ய தேசங்களிலும் 21 நாட்கள்  பகல் பத்து, ராப்பத்து என்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், வடநாட்டிலுள்ள திவ்ய தேசங்களில் இம்மாதிரியான அத் யயனோத்ஸவம் நடைபெறுவதில்லை. காரணம் அங்கு வேறுவிதமான சம்பிரதாயம், ஆகம சாஸ்திர முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.  நேபாளத்திலுள்ள முக்திநாத், குஜராத், ராஜஸ்தானிலுள்ள பஞ்ச த்வாரகா திவ்ய தேசங்கள், திருஅயோத்தி, நைமி சாரண்யம், பதரிகாஸ்ரமம், திரு ப்பிரிதி, திருக்கடித்தானம், வட மதுரை, திருவாய்ப்பாடி ஆகியவையே அந்த திவ்ய க்ஷேத்திரங்கள். துஷ்டர்களிடமிருந்து பொருட்களைப் பறித்து பாகவத கைங்கர்யம் செய்வதும் நல்லொழுக்கம்தான் என்று வாழ்ந்து காட்டியதன் மூலம் கலிதோஷத்தைக் கடிந்து நலிந்ததினால் பெரும் புகழ் எய்தினார், திருமங்கையாழ்வார்.

கடைசிக் காலத்தில், திருக்குறுங்குடி எம்பெருமானான நம்பியிடம் மிகவும் பக்தி செலுத்தினார். எம்பெருமான் நம்பி எழுந்தருளியிருக்கும் திருக்குறுங்குடியில் வாழ்ந்து அவரது வடிவழகை அனுபவித்துக் கொண்டே திருநாட்டுக்கு எழுந்தருளினார். உடனே அவரது அருந்துணைவியான குமுதவல்லி நாச்சியாரும் அவரைத் தொடர்ந்து மோட்சம் ஏகினார். இப்போதும் திருக்குறுங்குடியில் ஆழ்வார் திருநாட்டுக்கு எழுந்தருளிய இடத்தில் அவரது சந்நதி உள்ளது.

நன்றி - தினகரன்

பெருமாளே நம்மாழ்வாராக அவதரித்தாரோ? - கோமடம் மாதவாச்சாரியார்

திருநெல்வேலிக்கு அருகே ஆழ்வார்திருநகரி என்கிற ஊர் உள்ளது. இதைச் சுற்றி ஒன்பது கோயில்கள் உள்ளன. நம்மாழ்வாராலேயே பாடப்பெற்று,  இன்றும் 'நவ திருப்பதி' என்ற பெயரோடு பிரசித்தமாக விளங்குகின்றன. இந்த ஆழ்வார் திருநகரியானது குருகாபுரி, திருநகரி என்றே வழங்கலாயிற்று.  'குரு' என்ற சொல்லுக்கு சங்கு என்றும், நாரை என்றும், குருக்கத்தி மலர் என்றும் பல பொருட்கள் உள்ளன. மேலும், சங்கு வடிவம் கொண்ட சங்க  முனிவர் என்பார் இருந்த தலமாதலால் குருகூர் என வழங்குவர். இப்படி பெருமை வாய்ந்த தலத்தில் காரியார் என்ற வேளாளர் குல வைணவத்  திலகர், திருமாலை நெறிதவறாது வழிபட்டு வந்தார். இவரது தந்தை பொற்காரி, 'திருவண்பரிசாரம்' என்ற திவ்யதேசத்திலுள்ள உடையநங்கை என் பவளை தன் மகனான காரியாருக்கு மணமுடித்து வைத்தார். பின்னர் வைகுந்தம் அடைந்தார். 

காரியாரும், உடைய நங்கையும் இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தனர். நீதிநெறி வழுவாது வாழ்வாங்கு வாழ்ந்து திருமாலே கதி என்று கிடந்தனர்.  காலங்கள் செல்ல செல்ல தமக்கு இன்னும் மகப்பேறு இல்லையே என்று வருந்தினர். இவ்விருவரும் திருமாலை வணங்கி வருகையில், திருக்குறுங்  குடியிலுள்ள வாமன நம்பியை வேண்டினால் மகப்பேறு கிட்டும் என்று ஓர் அசரீரி ஒலித்தது. உடனே, அந்த திவ்யதேசத்திற்கு ஏகி வாமன நம்பியை  உளமாற வழிபட்டனர். பகவானும் ‘நாமே உமக்கு புத்திரனாகப் பிறப்போம்’ என்று கூறி ஆசீர்வதித்தார். அவர்கள் பேரானந்தம் அடைந்து தம் ஊ ருக்குப் புறப்பட்டனர்.

உபயநங்கை கர்ப்பம் தரித்தாள். பத்து மாதம் கடந்தபிறகு, சூரிய குலத்து ராமன் போலவும், சந்திர குலத்து கண்ணபிரான் போலவும், இந்த குரு கையார் குலத்தின் ஒளிவிளக்காக ஒரு குழந்தை தோன்றிற்று. காரியார் குழந்தைக்குக் காரிமாறன் என்று பெயரிட்டார். பிறந்த அந்தக் கணமே சடம்  என்கிற மாயையை கோபித்துக் கொண்டே அவதரித்தவர் என்பதால் இக்குழந்தைக்கு சடகோபர் என்கிற திருநாமமும் உண்டு.

''ராதே கலிதினே லாபே வைசாகே காவ்யவாஸரே!
லக்னே கர்க்கடகே ஸுத தநயம் நாதநாயிகா||''

- என்று ஒரு ஸ்லோகம் 'திவ்ய சூரி சரிதம்' என்கிற புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் ‘லாபே’ என்றால் நாற்பத்து மூன்று என்று பொருள்.  அதாவது,‘‘கலியுகம் பிறந்து 43ம் நாளில், வசந்த ருதுவில், ப்ரமாதி வருடத்தில், வைகாசி மாதம், சுக்ல பட்சத்தில் சதுர்த்தசியில் விசாக நட்சத்திர த்தோடு கூடிய வெள்ளிக் கிழமையில், ''ப்ரபன்ன ஜன கூடத்தர்'' என்று சொல்லக்கூடிய நம்மாழ்வார் தோன்றினார் என்று வர்ணிக்கிறது. சுவாமி  மணவாள மாமுனிகள் என்ற வைணவப் பெரியார் தம் நூலாகிய 'உபதேச ரத்தின மாலை' நம்மாழ்வாரைப் பற்றி கூறுகையில், ''உண்டோ, வைகாசி  விசாகத்துக்குக் கொப்பொரு நாள்? உண்டோ, சடகோபர்க் கொப்பொருவர்? திருவாழ் மொழிக்கொப்பு தென்குருகைக்குண்டோ? உண்டோ  ஒப்பார்தனிலொக்குமூர்'' என்று வியக்கிறது.

''சடாரிம் ஸைர்யபம் பஜே'’’ என்றே இவரைப் பற்றி புராணங்கள் கூறுகின்றன. ‘சேனை முதலியார் எனப்படும் விஷ்வக்ஸேனரின் அம்சமாக அவதரித்த  சடகோபரை உபாஸிக்கிறேன்’ என்று அதற்குப் பொருள். ஆசார்யர்களில் தலைவரான பிள்ளை லோகாசார்யாரின் தம்பியான அழகிய மணவாளப்  பெருமாள் நாயனார் என்ற ஒரு மஹான் ‘ஆசார்ய ஹ்ருதயம்’ என்கிற நூலை எழுதியருளியிருக்கிறார். இந்த நூலில் ஸ்வாமி நம்மாழ்வாரின் அவதார  ரகசியத்தை பின்வருமாறு கூறுகிறார்.

'அத்ரி ஜமதக்னி பங்க்திரத வஸுநந்த
ஸுநுவானுடைய யுக வர்ணக்ரமாவதாரமோ?
வ்யாசாதிவதாவேசமோ? மூதுவர் கரைகண்டோர்
சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற
அனந்தன்மேல் புண்ணியங்கள் பலித்தவரோ
என்று சங்கிப்பர்கள்''

-என்று அருளியுள்ளார். அதாவது, ''ஒவ்வொரு யுகம்தோறும் எம்பெருமான் அவதரித்தானே, அதேபோல கலியுகத்தில் அந்தப் பெருமாளே ஸ்வாமி  நம்மாழ்வாராக அவதரித்தாரோ? நான்மறைகளை முறைப்படுத்தி வெளியிட்ட வியாசராக அவதரித்ததுபோல, ஸ்ரீமன் நாராயணன் வேளாள குலத்தில்  உதித்த இந்த நம்மாழ்வாரிடம் ஆலோசித்து மீண்டும் தமிழ் மறையை வெளிப்படுத்தினானோ? வைகுண்டத்திலுள்ள விண்ணாட்டவர் மூதுவராகிய நி த்ய முக்தர்களில் ஒருவரோ? இப்படி யாருமல்லாமல், முன் ஜென்மங்களில் பல நற்பயன்கள் காரணமாக திரட்டியதின் விளைவாய் இப்படி அவதரித் தாரோ? வைகுண்டப் பெருமான் பாம்பணைப் பள்ளி கொள்ளுமிடத்து தன்னுடைய கடாட்சத்தால், ஒரு நித்ய ஸம்ஸாரியை நித்ய ஸூரியாக்கினாரோ  என்றெல்லாம் வியாக்கியானம் சொல்வார்கள்.

ஏனெனில், உண்மையில் ஸ்வாமி நம்மாழ்வாரும் நித்ய ஸூரிகளில் ஒருவர் அல்ல, நம்மைப்போல் ஒரு சம்சாரியே  அதாவது,  பூமியில் வாழ்பவர்  ஆவார். இந்த சம்சாரி,  எந்தவித காரணமுமின்றி, எதிர்பார்ப்புமின்றி திருவாய்மொழி போன்றதொரு தமிழ்மறையை அருளிச் செய்தார். அப்படியொரு  சம்சாரிக்கு பகவான் மயர்வற மதிநலம் அருளிளான் என்றால் அது பகவானுக்கும் பெருமைதானே! ஆக, சாதாரண நித்ய சம்சாரிகளில் சிலரை  எம்பெருமான் விசேஷ அனுக்கிரஹம் செய்து அவர்களை ஆழ்வார்களாக்கி, அவர்களைக் கொண்டு இவ்வுலகை உய்விக்க திருவுள்ளம் கொண்டான்.

இப்படி பற்பல பெருமைகளை கொண்டவரே நம்மாழ்வார். இவர் அவதரித்தது முதல் அழாமல், தாய்ப்பால் அருந்தாமல் கிடந்தார். கவலைப்பட்ட  பெற்றோர், இவர் இப்படி உள்ளாரே, பசிக்கு தாய்ப்பால் கூட உண்ணாமல் இருந்தால் உடல்நலம் பாதிக்காதா என்று பயந்து திருமாலின் சந்நதியில்  இட்டனர். ஆழ்வார்திருநகரியில் உள்ள எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு கருணையுடன் அவரை நோக்க, இந்தக் குழந்தை மெல்ல நகர்ந்து ஒரு  புளிய மரத்தடியில் சென்று உட்கார்ந்து கொண்டது. பகவானை மழை, வெயிலிலிருந்து ஆதிசேஷன் எப்படி காப்பாரோ அதேபோல் இந்த குழந் தையை புளியமரமே காப்பாற்றிற்று. அதாவது, ஆதிசேஷனே இந்த மரத்திற்குள் ஆவேசித்து இந்த ஆழ்வாரை காப்பற்றினார் என்றே
கொள்ள வேண்டும்.

இப்படியிருக்கையில், மதுரகவிகள் என்ற மற்றுமொரு ஆழ்வார், ஆழ்வார் திருநகரிக்கு அருகிலுள்ள 'திருக்கோளூர்' என்கிற திவ்யதேசத்தில் அவதரித் தார். இவருடைய இன்கவிகள் தேன் சொட்டுவதுபோல் இருக்குமாதலால் இவரை மதுரகவிகள் என்றே கொண்டாடினர். அந்த மதுரகவியாழ்வார் ஒரு சமயம் வடநாட்டு திவ்யதேச யாத்திரைக்குச் சென்றார். முக்தியளிக்கும் நகரங்களில் கீர்த்தி பெற்ற திருஅயோத்தி மாநகரில் எழுந்தருளியுள்ள  ஸ்ரீசீதாராமனை தரிசித்தார். அச்சமயத்தில் தென்திசையில் பெரிய அக்னிப் பிழம்பு ஒன்று பெரிய தேஜஸாக தோன்ற அதைப் பார்க்க எண்ணி அதன ருகில் சென்றார். அதுவோ தென்திசை நோக்கி நகர்ந்து கொண்டே சென்றது. அவரும் அதைத் தொடர்ந்தார்.

அந்த தேஜஸானது தமிழகத்திலுள்ள தன்னுடைய ஊர்ப் பக்கம் சென்றதால் ஆச்சரியம் கொண்டு, ஆவலுடன் அதன் பின்னேயே சென்றார். தன் ஊ ருக்கு அருகிலுள்ள திருநகரியில் சென்று அங்கு கோயில் கொண்டுள்ள எம்பெருமானின் சந்நதியிலுள்ள புளிய மரத்தடியில் அது சென்று மறைந் தபோது அப்படியே திகைத்து நின்றுவிட்டார். அங்கு சென்ற மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரைக் கண்டார்; பகவானையே கண்டதாக எண்ணி மகிழ்ந்தார். நம்மாழ்வார் கண்களை மூடிக் கொண்டு எதுவும் பேசாமல் இருக்கவே, மதுரகவிகளும், இவர் பேச்சிழந்தவரோ என்ற சந்தேகத்துடன்  அதை சோதித்துப் பார்க்க, ஒரு சிறு கல்லை இவர் மீது வீசினார்.

நம்மாழ்வார் மேல் அக்கல் பட்டவுடன் தியானத்திலிருந்த ஆழ்வார், மெல்ல கண் திறந்து பார்த்தார். அவர் பேசுவாரோ என்பதையும் சோதித்தறிய,  ''செத்ததின் வயிற்றிலே சிறியது பிறந்தால் அது எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?’’ என்று கேட்டார். அதாவது, அறிவற்ற உடலோடு அணு  பரிமாணமான ஆத்மாவுக்குத் தொடர்பு உண்டானால், அந்த ஆத்மா எதை அனுபவித்துக் கொண்டு எதைப் பற்றாகக் கொண்டு வாழும் என்று வினவ,  உடனே நம்மாழ்வாரும், ''அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும்'' என்று கூறினார்.

அதாவது, அதிலிருக்கும் இன்ப துன்பங்களையே அனுபவித்துக் கொண்டு அவ்வுடலையே பற்றியிருக்கும் என்று பொருள். இதைக் கேட்ட மதுரகவிகள்  மிகமிக இன்புற்றார். இவர் ஞானிதான், மகான்தான் என்று போற்றிப் புகழ்ந்து, நம்மாழ்வாரின் திருவடித் தாமரைகளில் வீழ்ந்து வணங்கினார்.  இவரையே தனக்கு எல்லாமுமாகக் கொண்டு கைங்கரியம் செய்து வந்தார். இந்த சமயத்தில்தான் சுவாமி நம்மாழ்வார் நான்கு வேதங்களுக்கு ஈடாக நான்கு தமிழ் மறைகளை அருளினார். ரிக்வேத சாரமாக திரு விருத் தத்தையும், யஜுர் வேத சாரமாக திரு வாசிரியத்தையும், சாம வேத  சாரமாக திரு வாய் மொழியையும், அதர்வண வேத சாரமாக பெரிய திருவந்தாதியையும் அருளிச் செய்தார்.

இதோடு நில்லாமல் இவற்றின் தேறிய பொருளை மதுர கவியாழ்வார்க்கு விரித்து ரைத்தார். மதுர கவியாழ்வாரும், அவை எல்லாவற்றையும் பட்டோலை செய்து கொண்டார். அதன்பிறகு மதுர கவியாழ்வார் சுவாமி நம்மாழ்வார் விஷயமாக ''கண்ணினுண் சிறுத்தாம்பு'' என்று ஆரம்பித்து பத்து  பாடல்களைப் பாடினார். அதன் தேறிய பொருள் என்னவெனில், ஒருவனுக்கு தன் ஆசார்யனான குருவைத் தவிர வேறொரு தெய்வம் கிடையாது என் பதாகும். ‘தேவுமற்றறியேன் குருகூர் நம்பி’ என்று பாடிப்பாடி மகிழ்ந்தார். ஆம், சுவாமி தேசிகனும், தன்னுடைய வடமொழி ஸ்லோகங்கள் வாயிலாக  இப்பொருள்பட, ‘‘ஆசார்யாத் இஹ ஸமதிகான் அன்யான் நமன்யாமஹே'' என்று எழுதியிருக்கிறார். ‘நம் குருவைத் தவிர மேலான தெய்வம்  கிடையாது, நாம் அறியோம்’ என்று பாடினார். 

நன்றி - தினகரன்

நாயகியாய் மாறி நாயகனை நயந்த நம்மாழ்வார் - கோமடம் மாதவாச்சாரியார்

திருவாழ்மார்பனான எம்பெருமான் கோயில் கொண்டுள்ள திருவண்பரிசாரத்தைச் சேர்ந்த நம்மாழ்வாரின் தாயார் உடைய நங்கை, தம் குழந்தை காரிமாறன்(நம்மாழ்வார்) சாதாரண குழந்தையைப் போல் பால், அமுது உண்ணக் காணாது மிகவும் வருத்தமுற்றாள். ஆழ்வார் திருநகரியில் கோயில் கொண்டுள்ள ஆதிபிரான் இக்குழந்தைக்கு மயர்வற மதிநலம் அருளியபடியால் பிறந்தநாள் முதல், சாதாரண குழந்தை போலல்லாமல், கோயிலிலுள்ள புளிய மரத்தடியில் 'பத்மாஸனோபவிஷ்டம்' என்கிறபடி பத்மாசனத்தில் அமர்ந்து எம்பெருமானின் தியானத்திலேயே இருந்தது. சதா சர்வ காலமும் பகவானின் சொரூபத்திலேயே தோய்ந்து கிடந்தது. 

சில காலத்திற்குப் பிறகுதான் மதுரகவியாழ்வார் மூலமாக பேசத் தொடங்கி நான்கு வேதத்தின் சாரமாக நான்கு பிரபந்தங்களை அருளினார் காரிமாறன். இவருடைய கிருஷ்ணானுபவம், இவரே கண்ணபிரானோ என்று வியக்கும் அளவுக்கு பக்தியில் உயர்ந்திருந்தார். சாம வேதத்தின் சாரமாக உள்ள திருவாய் மொழியின் ஆரம்பத்திலேயே கண்ணன் யசோதைப் பிராட்டியால் உரலில் கட்டப்பட்டதைக் கண்டு, சிந்தைமருண்டு, ''எத்திரம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே'' எனக் கூறி மயங்கி விழுந்தார்.

அப்படியே ஆறு மாத காலம் கிருஷ்ண மோகத்திலேயே கிடந்தார். பகவானைக் கட்ட யாரால்தான் முடியும்? யசோதைப் பிராட்டிக்கு தன் திருவயிற்றைக் காட்டி கட்டும்படி கண்ணன் செய்தது, அவள் செய்த பக்தியால்தானே! பகவானும் ''கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயனன்றோ!'' அதாவது, அவனாகவே கட்டுப்பட்டாலொழிய அவனை யாராலும் கட்ட முடியாது. அப்படி கட்டிய பிறகு, கயிற்றை அறுத்துக்கொண்டு வரத் ‘தெரியாமல்’ கண்ணபிரான் உரலினோடேயே இருந்தானே அந்தக் காட்சியில்தான் ஆழ்வார் நெஞ்சுருகிப் போனார்.

''நம் பந்தம் நம்மால் அறுக்க வொண்ணாதது போலவே, அவன் பந்தமும் அவனால் அறுக்க வொண்ணாது'' என்பர், பெரியோர். இதன் பொருள் என்னவெனில், நாம் இந்த சம்சாரமாகிய கடலில் கட்டுண்டு, கரை நம் கண்ணுக்குத் தெரியாததால் கரை சேர முடியாதபடிக்கு கிடக்கிறோம். அப்படியிருக்க, கிணற்றிலே விழுந்த ஒரு பூனை வெளியே வரத் தெரியாமல் தவிக்கும் காலத்தில், யாரேனும் ஒரு குடத்தை கயிற்றில் கட்டி அக்கிணற்றிலே இறக்கினால், அந்தப் பூனை குடத்தினுள் அமர்ந்து சுலபமாக வெளியே வருவதுபோல, பகவானாகிய குடமானது, நம் பக்தியாகிய கயிற்றிலே இட்டு குருநாதனால் இறக்கப்படும்போது நாம் சுலபமாக இக்கடலிலிருந்து வெளியே வந்துவிடலாமல்லவா!

அதாவது, நம் பந்தம் நம் முயற்சியால் அறுக்க வொண்ணாததாகும். இதன்படியே பகவான் பக்தனுக்காக இரங்கி வந்து விட்டானானால், நம் இதயத்தினுள் கட்டுப்பட்டு கிடப்பான். அப்படி கிடக்கும்போது அந்த பந்தத்தை அவனே அறுக்க வொண்ணாததாக இருப்பான். மார்வமென்பதோர் கோயிலமைத்து மாதவனென்னும் தெய்வமாக இதயத்துள் உறைவன். பக்தர்களின் பாதத்துளிக்கு ஆசைப்பட்டு அவர்களின் பின்னா லேயே பகவான் சதா சென்று கொண்டி ருப்பான்; அந்த பக்தர்களின் இதயத்தைவிட்டு நீங்கவே மாட்டான் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

இதைக் கண்டுதான் ஸ்வாமி நம்மாழ்வார் அப்படி மோகித்துக் கிடந்தார். நம்மாழ்வாரைப் பற்றி கூறுகையில் 'கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிரம்’’ என்பர், பெரியோர். த்ருஷ்ணா என்றால் அளவு கடந்த காதல், அன்பு, வேட்கை எனப்படும். அப்படியாயின் கிருஷ்ண த்ருஷ்ணா என்பதற்கு இருவகையான வியாக்கியானம் இட்டருள்வர் பெரியோர். 1. கிருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை என்றும் 2. க்ருஷ்ண த்ருஷ்ணை என்றும் கூறுவர். முதலில் கூறப்பட்டதன் கருத்து யாதெனில் கிருஷ்ணனிடத்தில் ஆழ்வார் தமக்குள்ள வேட்கையை பலவாறாக வெளிப்படுத்துகிறார்.

''கங்குலும் பகலும் கண் துயிலறியாள், கண்ண நீர் கைகளால் இறைக்கும், சங்கு சக்கரங்களென்று கைகூப்பும், தாமரைக் கண்ணென்றே தளரும், எங்கனே தரிக்கேன் உன்னைவிட்டென்றும், இருநிலம் கைதுழாவிருக்கும், செங்கயல் பாய்நீர்த் திருவரங்கத்தாய், இவன் திறந்தென் செய்கின்றாயே’’ என்று தன் பாசுரம் வாயிலாகத் தெரிவிக்கிறார். அதாவது, பராங்குச நாயகியாகிய நம்மாழ்வார் பெரிய பெருமாளிடத்தில் (திருவரங்கம்) மோகித்துக் கிடந்தபடி, ‘இந்த நாயகி விஷயமாக என்ன செய்ய நீர் எண்ணுகின்றீர்?’ என்று தாயாராகத் தன்னை உருவகித்துக்கொண்டு கேட்கும் பாணியில், தமக்குள்ள அவாவை, வேட்கையை, காதலை வெளிப்படுத்துகிறார்.

''கங்குலும் பகலும்'' (இரவும் பகலும்) விடாது பக்தி செய்து
''அழுது அழுது அலமந்தம் மாவழுங்க கிடக்கிறார். அப்படி ‘அழுத கண்ண நீர் கைகளால் இறைக்கும்’ என்கிறபடி தம் கைகளால் எடுத்து எடுத்து இறைத்து அதுவே தாமிரபரணி நதியாக மாறிவிட்டது
என்று கூறும்படி இவருக்கு பகவானிடத்தில்
பித்து உண்டாகியது. தான் உடனே அவனோடு
சேர மாட்டோமா என்கிற தாபமும் உண்டானது.

இரண்டாவதன் பொருளான, ''க்ருஷ்ண த்ருஷ்ணை என்றால் கிருஷ்ணனுக்கு நம்மாழ்வாரிடத்தில் அளவு கடந்த காதல், அன்பு, வேட்கை, அவா உண்டாயிற்று. அவரை உடனே பார்க்க எண்ணி, காட்சி கொடுத்து மயர்வற மதிநலமருளி, தானே நம்மாழ்வாரோ என்று எண்ணும்படி அவரோடு இரண்டறக் கலந்த உணர்வாகப் பொருள் உரைப்பார்கள். இவர் புளிய மரத்தடியிலேயே கிடக்க, எல்லா திவ்யதேசத்து எம்பெருமான்களும், ஆழ்வார் திருநகரிக்கு வந்து காட்சி கொடுத்து, ‘என் திவ்யதேசத்தை பாடு’ எனக் கேட்டு பாடலை வாங்கிக் கொண்டார்கள். ஆக, பகவானுக்கும் நம்மாழ்வாரிடம் ஆராத காதல் உண்டானது.

இதை ஸ்ரீமத் பாகவதத்தில் அம்பரீஷ சரிதத்தில், பகவானே துர்வாச மகரிஷிக்கு விளக்கியுள்ளார். ‘சாதுக்களின் இதயத்தில் என்றும் நீங்காமல் தான் உறைகிறேன். அவ்வண்ணமே என் இதயத்தில் சாதுக்கள் உறைகின்றனர். எங்கள் உறவு யாராலும் பிரிக்க முடியாத பந்தம்’ என்கிறார். அதாவது, பகவானின் இருதயமே வேதம். ஆனால், பகவானோ, ‘என் இதயத்தில் சாதுக்கள் உறைகிறார்கள்’ என்கிறார். அப்படியென்றால், சாதுக்களே வேத ஸ்வரூபம்தானே! அதனால்தான் ஸ்வாமி நம்மாழ்வாருக்கு ''அனந்தா வை வேதா'' என்கிறபடி நான்கு வேதமும் அனந்தமானது.

அந்த வேதங்களே நான்கு பிரபந்தங்களாக உதித்தது. நான்கு வேதங்களுக்குள் சாம வேதமாக இருக்கிறேன் என்று கீதையில் கண்ணன் அருளியதால்தானோ என்னவோ, சாமவேத சாரமான திருவாய்மொழியின் ஆயிரம் பாசுரமும் ஆழ்வார் வாக்கில் ஈரத் தமிழாக வெளிவந்தன. வேதம் என்ற ஒன்று உண்டானால் அதற்கு முன்பாக ப்ரணவம் என்று சொல்லக்கூடிய ஓம் என்ற சொல் வேண்டுமே! மேலும் ஓம் என்பது அ, உ, ம என்று மூன்று எழுத்தாக விரியும். இதை முதற்சொல்லாக வைத்து தம் பிரபந்தமாகிய திருவாய்மொழியை ஆரம்பித்துள்ளார், நம்மாழ்வார்.

''உயர்வற..........
மயர்வற மதிநலம்..........
அயர்வறும்............
துயரறு சுடரடி...........  (முதல் பாட்டு)

இங்கு சற்று உ, ம, அ என்று மாறுபட அமைந்திருக்கிறது. 'அ' என்ற எழுத்து பகவானை (விஷ்ணுவை) குறிக்கும். 'உ' என்ற எழுத்து குருநாதனைக் (ஆசார்யனை) குறிக்கும். 'ம' என்ற எழுத்து சாதாரண மனி தனைக் (சேதனனை) குறிக்கும். முதலில் 'உயர்வற' என்று ஆரம்பித்து ஆசார்ய சம்பந்தத்தைக் கூறுகிறார். அடுத்து, ''மயர்வற'' என்று சிஷ்ய ஸம்பந்தத்தைக் (மனிதனை) கூறி, அதன் பிறகு முதலில் கூறப்பட்ட ஆசார்யன், பின்னால் சொல்லப்பட்ட சிஷ்யனை பகவானோடு சேர்த்து வைப் பதால் அயர்வறும் என்று கூறி பகவானைச் சுட்டிக்காட்டி அப்படிப்பட்ட பகவானின் திருவடியைத் தொழுவோம் வாரீர் (துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே) என்று சொல்லி, தம் முதல் பாசுரத்திலேயே சரணாகதி தத்துவத்தை வெளியிட்டருளியுள்ளார்.

ஸ்வாமி நம்மாழ்வாரைப் பொதுவாகவே 'பராங்குச நாயகி' என்றே வழங்குவர். (ஸ்வாமி திருமங்கையாழ்வாரை 'பரகால நாயகி' என்றே கூறுவர்.) ''மாறன் பணித்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன் ஆறங்கம் கூற அவதரித்த'' என்று உபதேச ரத்தினமாலை எழுதிய மணவாள மாமுனிகள் அருளியுள்ளார். மாறனாகிய நம்மாழ்வார் நான்கு மறையை தமிழில் ஓதினார். (திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி). ஆனால் திருமங்கையாழ்வாரோ வேதத்திற்கு ஆறு அங்கம்போல, ஆறு திவ்ய பிரபந்தங்களை அருளியுள்ளார். அவை:

பெரிய திருமொழி, திருக்குறுந் தாண்டகம், திருநெடுந் தாண்டகம், திருவெழுக் கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல். நம்மாழ்வார் ஏன் தன்னை நாயகியாக பாவித்துக்கொள்ள வேண்டும்? மறைகள் பகவானை ஒரு புருஷன், அவனே எல்லோருக்கும் நாதன், நாயகன் என்றெல்லாம் வர்ணித்து மகிழ்கின்றன. அப்படிப்பட்ட நாயகனை, நாயகி பாவத்தில் அனுபவிப்பதே சாலச் சிறந்தது என்பதற்காகவே தலைவி பாடுவதாகவே பாசுரங்களை அருளியுள்ளார் நம்மாழ்வார். 

நன்றி - தினகரன்

அர்ச்சனை வழிபாட்டை ஆரம்பித்து வைத்த ஆசார்யன் - கோமடம் மாதவாச்சாரியார்

பூவுலகில் நம்மாழ்வாரை முதல் ஆசார்யனாகக் கொண்டுதான் குரு பரம்பரையே தொடங்குகிறது. அப்படியானால் ஏனைய ஆழ்வார்கள்  ஆசார்யார்கள் ஆகமாட்டார்களா என்ற சந்தேகம் எழலாம். நமக்கு விடை தருகிறார், ஸ்ரீபராசர பட்டர். ‘எல்லா ஆழ்வார்களும் நம்மாழ்வாருக்குள்  அடக்கம்’ என்று ஒரு தனிப் பாடலில் குறிப்பிடுகிறார்: 

‘‘பூதம் ஸரச்ச மஹதாஹ்வய பட்டநாத  ஸ்ரீ பக்திசார குலசேகர - யோகிவாஹான் பக்தாங்ரிரேணு பரகால யதீந்த்ர மிச்ரான் - ஸ்ரீமத் பராங்குச முனிம் - ப்ரணதோஸ்மி நித்யம்’’

அதாவது, ‘‘முதலாழ்வார்களான மூவரோடு, திரு மழிசைப்பிரான், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடிகள், திருப்பாணர், குலசேகரர், திருமங்கை மன்னன், மதுரகவிகள், ஸ்ரீராமானுஜர்  ஆகியவர்களோடு சேர்ந்த ஸ்ரீஸ்வாமி நம்மாழ்வாரை தினமும் வணங்கி வழிபடுகிறேன்,’’ என்று பொருள்.

ஆகையால், ஸ்ரீநம்மாழ்வரை அங்கி என்கிறார். அதாவது, மற்ற ஆழ்வார்களும், ஸ்ரீராமானுஜரும் இவருக்கு அங்கங்கள் என்பதாகப் பொருள். எப்படி  வேதமானது பகவானை அங்கி என்றும், ஏனைய தேவர்களை அங்கங்கள் என்றும் கூறுமோ, அப்படியே இங்கும் சொல்லப்பட்டிருப்பது குறிப்பிட த்தக்கதாகும். ஒரு சமயம்  ஸ்ரீநாதமுனிகள் திருக்குடந் தையிலுள்ள ஆராவமுதன் சந்நதிக்கு எழுந்தருளியபோது, அங்குள்ள அடியார்கள், ஸ்வாமி  நம்மாழ்வாரின் பத்து பாசுரங்களை ‘‘ஆராவமுதே அடியேனுடலம் நிற்பாலன்பாயே...’’ என்று தொடங்கி முடிவில் ‘‘குழலின் மலியச் சொன்ன  ஓராயிரத்துள் இப்பத்தும் மழலை தீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே’’ என்று பாடி முடிந்தவுடன் அவர்களை நோக்கினார். ‘‘உங்களுக்கு  ஆயிரம் பாடல்களும் தெரியுமோ?’’ என்று கேட்டார் நாதமுனிகள்.

அந்த அடியார்கள், ‘‘எமக்குத் தெரியாது. ஆனால், இந்த பத்துப் பாசுரங்கள் மட்டுமே தெரியும்’’ என்றனர். ‘‘அட, அப்படியானால், ஏனைய  தொள்ளா யிரத்துத் தொண்ணூறு பாடல்களும் எங்கே கிடைக்கும்?’’ என்று நாதமுனிகள் வினவினார். அவருக்குக் கிடைத்த பதில் வரை ஆச்சரிய த்தில் ஆழ்த்தியது: ‘‘யாரோ ஸ்ரீ நாதமுனிகள் என்றொருவர்வரப் போகிறாராம். இவர் நம்மாழ்வாரின் திருக் குறுகூருக்குச் சென்று, அங்கு எழுந்தரு ளியுள்ள ஸ்ரீஆதிப்பிரானை தரிசித்துவிட்டு, அங்குள்ள புளிய மரத்தடியில் எழுந்தருளியுள்ள ஸ்வாமி நம்மாழ்வாரைப் பிரார்த்தித்து ஆயிரம்     பாடல்களையும் கைவரப்பெற்று, உலகத்திற்கே பிரகாசத்தை அள்ளி வீசப் போகிறாராம்!’’

அந்த பதிலைக் கேட்டு நாதமுனிகள் அப்படியே நெகிழ்ந்துபோய்விட்டார். மறுகணமே, யோசிக்காமல் திருக்குறுகூர் நோக்கி நடந்தார்.ஆதிப்பிரானை  தரிசித்துவிட்டு, உடனேயே அதே வேகத்தில் ஸ்ரீ நம்மாழ்வாரை தரிசிக்க புளியமரத்தடிக்கு வந்தார். நம்மாழ்வார் மீது, அவரது சீடரான ஸ்ரீமதுரக  வியாழ்வார் பாடிய பத்துப் பாடல்களையும் கற்றுணர்ந்து 10000 முறை திரும்பத் திரும்பச் சொல்லி நம்மாழ்வாரின் கிருபைக்கு ஸ்ரீநாதமுனிகள் பாத் திரமானார். ‘‘என்ன வேண்டும்?’’ என்று ஸ்வாமி நம்மாழ்வார் அர்ச்சாவதார திருமேனியராகக் கேட்டார்.நாதமுனிகள் கண்ணீர் பெருக்கி, மெய்  சிலிர்த்து, ‘‘நீவீர் சாதித்த ஆயிரம் பாடல்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்,’’ என்று பிரார்த்தித்தார்.

உடனே  ஸ்ரீநம்மாழ்வார், தமது திருவாய் மொழியிலுள்ள ஆயிரம் பாடல்களையும் தந்து, மேலும் மூன்று பிரபந்தங்களாகிய திருவாசிரியம், பெரிய  திருவந்தாதி, திருவிருத்தம் ஆகியவற்றையும் அளித்தார். அதோடு ஏனைய ஆழ்வார்களின் பாடல்களையும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களையும்      அருளினார். இப்படிப் பேரருள் புரிந்ததற்காகவே, ஸ்வாமி நம்மாழ்வாரை இப்பூவுலகின் முதல் ஆசார்யராக கொள்கிறோம். வால்மீகி, வியாசர்  போன்றோர் வந்த சத் சம்பிரதாயத்திலேயே ஊன்றி ஞானத்தோடு திகழ்ந்தவர் நம்மாழ்வார். ‘மேலும் சொன்னால் விரோதமிது ஆகினும் சொல்லு வன் கேண்மினோ’ என்று உண்மையையே உரைத்தவர்.

தம் உணவு, போஷணைகள் எல்லாமே ஸ்ரீமன் நாராயணனால் அளிக்கப்பட்டவை; ‘உண்ணும் சோறும் பருகும் நீரும், தின்னும் வெற்றிலையுமெல் லாம் கண்ணன்’ என்றிருந்தார், இந்த ஆழ்வார். கிஞ்சித்தும் கர்வம் கொள்ளாதவர். ‘அடியேன் சிறிய ஞானத்தன்’ என்று தன்னை எளிமைப்படுத் திக்கொண்டவர். கர்மேந்திரிய சுகங்களை விட்டுவிட்டு எல்லாமே பகவான் என்றிருந்தார். ‘என் முடிவு காணாதே என்னுள் கலந்தானை சொல்  முடிவு காணேன். நான் சொல்வது என் சொல்லீரே,’ என்ற நிலையில் இருந்தார். தனக்கும், பிறர்க்கும் இதையே நினைத்து நினைத்து நெஞ்சுருகி,  ‘கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ’ என்ற பெருந்தன் மையுடன் விளங்கினார். இப்பெருந்தகையை  ‘தேவுமற்றறியேன் குறுகூர்
நம்பி பாலினின்னிசை பாடித் திரிவனே’ என்று போற்றினார்.

ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய வைணவ ரகசியங்கள்தான் எவை? மோட்சத்தில் இச்சை உடையவன் அறிய வேண்டிய ரகசியம் மூன்று என்கிறார்.  அவை: திருமந்திரம், த்வயம் (இரட்டை), சரம ச்லோகம். திருமந்திரத்தை பகவான் பதரிகாச்ரமத்தில் (பத்ரிநாத்) அருளினான். த்வயத்தை, பகவான்  தன்னுடைய விஷ்ணு லோகத்தில் ஸ்ரீமகாலக்ஷ் மிக்காக ஆதிசேஷன் மற்றும் கருடனுக்கு வெளியிட்டான். சரம ஸ்லோகத்தை குரு க்ஷேத்திரத்தில்  தேர்த்தட்டில் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும் ரீதியில் இசைத்தான். இவை மூன்றும், ஒரு குருவின் அருகிலிருந்தே தெரிந்து கொள்ள வேண்டிய  ரகசியங்கள். திருமந்திரமான ‘ஓம் நமோ நாராயணாய’ என்கிற திருவெட்டெழுத்தில், ‘ஓம்’ என்பது பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணனுக்கும்  ஜீவாத்மாவுக்கும் உள்ள அநாதியான, சுவாமி-தாசன் உறவை அறிவிக்கிறது.

‘நமோ’, நான் என்கிற அகங்கார மமகாரங்களை ஒழிக்கும் சூட்சுமமும், ‘நாராயணா’, நாராயணனுக்கே அடிமை; அவனுக்கே கைங்கரியம் செய்ய  வேண்டும் என்பதை உணர்த்துகிறது. இரண்டாவதாக த்வயம், ‘ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் ப்ரபத்யே ஸ்ரீமதே நாராயணாய நமஹ’ என்ற   தத்துவம். அதாவது, சரணாகதி அடைய விரும்புபவன், பிராட்டியின் மூலமாக பகவானைப் பற்றவேண்டும். இதையே நம்மாழ்வார், ‘உடனமர் காதல்  மகளிர் திருமகள், மண்மகள், ஆயர்மடமகள் என்றிவர் மூவர்’ என்னும் பாசுரத்தில் அறிவித்திருக்கிறார். மூன்றாவதான சரம ஸ்லோகம், எந்த தாத்பர்யத்தை வெளிப்படுத்துகிறது? ‘ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச: இந்த பகவத்கீதை ஸ்லோகத்தை தேர்த் தட்டிலே அர்ஜுனனுக்கு கண்ணன் உபதேசித்தான். அதாவது, ‘‘மகான்களைப்போல எல்லா தர்மங்க¬ளயும் விட்டொழித்து என் ஒருவனையே சரணம் அடைவாயாக. நான் எல்லா பாவங் களிலிருந்தும் உன்னை விடுவிக்கிறேன்; மேலான மோட்சத்தை  அருள்கிறேன்,’’ என்கிறான்.
 
இந்தக் கருத்துகளை நம்மாழ்வாருடைய பாசுரங்களில் காணலாம். ‘உயர்வர உயர்நலம்...’ என்று தொடங்கி பல இடங்களில் நாராயணனை  விவரிக்கிறார். ‘ஓம்’ என்ற சப்தத்தை முதல் பாடலில் வலியுறுத்தி, ‘நாம் அவனுக்கே ஆட்செய்வோம்’ என்பதையும் ‘ஒழிவில் காலமெல்லாம்  உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேணும் நாம்’ என்று அருளி அதன் மூலம் திருமந்திரத்தை விளக்குகிறார். ‘கண்ணனல்லால் இல்லை கண்டீர் சரண்’ என்றும், ‘கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர், எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே’ என்றும் பாடி, சரணாகதி லட்சணமான சரம ஸ்லோகத்தின் தாத்பர்யத்தை வெளியிட்ட ருளினார். நாலாயிரமும் எதைக் கூற வருகின்றன?

முதலாயிரத்தில் அமைந்த திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி, குலசேகர் பாடிய பெருமாள் திருமொழி, தொண்டரடிப்பொடிகள்  பாடிய திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, திருமழிசைப்பிரான் பாடிய திருச்சந்த விருத்தம், திருப்பாணாழ்வார் பாடிய அமலனாதிபிரான் ஆகியவை  யாவும் ஓம் என்கிற பிரணவத்தின் அர்த்தமாகப் பாடப்பட்டவை. அதே ஆயிரத்தில் மதுரகவிகள் பாடிய ‘கண்ணினுண் சிறுத்தாம்பு’ என்பது  ‘நமஹ’ என்பதன் பொருளை விளங்கச் செய்வதாகும்.

இரண்டாம் ஆயிரத்தில் திருமங்கை மன்னன் பாடிய பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் ஆகியவை ‘நாராயணாய’ என் பதன் பொருளை விளங்கச் செய்கிறது. மூன்றாவது ஆயிரமாகிய இயற்பா முழுவதுமே சரம ஸ்லோகத்தை விவரிக்கிறது. இதை தீர்க்க சரணாகதி  என்பார்கள், பெரியோர். நாலாவது ஆயிரத்தில் த்வயத்தையும், அர்த்த பஞ்சகத்தையும் விவரித்து அந்தாதியாக பாடியுள்ளார் ஸ்வாமி நம்மாழ்வார். ஆழ்வார்களின் பாடல்கள் மறைந்தபோதிலும், நம்மாழ்வார் ஒருவரே தீர்க்க தரிசனத்தால், இன்ன இன்ன பாடல்கள், இந்த இந்த ஆழ்வாரால்  பாடப்பட்டது என்று கூறி நாலாயிரத்தையும் அர்ச்சாவதார ரூபியாகவே மதுரகவிகளுக்கு சொன்னார். இப்போது பிரபந்தங்களைப் படிக்கவும்,  பாடவும், எண்ணி எண்ணி மகிழவும் கிடைத்திருக்கிற தென்றால், அதற்கு  நம்மாழ்வாரின் கருணைதான் காரணம்.

ஸ்வாமி நம்மாழ்வார் இவ்வாறு பிரபந்தங்களை நாதமுனிகளுக்கு அருளியதை மகான் எம்பார் நயமாக வர்ணிக்கிறார்: ‘நம்மாழ்வார் என்ற  காளமேகம், லட்சுமிநாதனெனும் கடலிலே புகுந்து கருணையாகிற நன்னீரை முகந்து மேலெழுந்து, கருமேகமாகி,  கர்ப்பவதிபோல் மெல்ல நகர்ந்து  நாதமுனி என்ற மலை உச்சியில் நாலாயிரத்தையும் மழையாகப் பொழிந்தது. அந்த மழை, உய்யக் கொண்டார், மணக்கால் நம்பி என்ற அருவிகள்  மூலமாக ஆளவந்தார் (யாமுநாச்சியர்) என்ற பெரிய ஆற்றையடைந்து, வீரநாராயணபுரத்தில் (வீராணம்), எம்பெருமானாராகிய (சுவாமி ராமானுஜன்)  ஏரியில் வந்து தேங்கி நிறைந்து நின்றது. அந்த ஏரியிலிருந்து புனித நீர் ராமானுஜரின் 74 சிஷ்யர்கள் (74 சிம்மாசன அதிபதிகள்) வழியாக  மக்களுக்குள் எப்போதும்  பாய்ந்து கொண்டேயிருக்கிறது.’’

‘வேதத்தின் உட்பொருளையெல்லாம் தம் நெஞ்சில் எம்பெருமான் நிலை நிறுத்தினான்’ (‘மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள், நிற்கப் பாடி என் னெஞ்சுள் நிறுத்தினான்’) என்று மிக குதூகலத்துடன் கூறுகிறார். இப்படி வேதங்களிலுள்ள அரிய பெரிய கருத்துகளை யாவரும் அறியும் வண்ணம்  இனிய எளிய தமிழ்ப் பாக்களால் பாடினார். இதை அனைவரும் கற்றுணர்ந்து ஊரும், நாடும், உலகமும்  தன்னைப் போலவே பகவானுடைய திரு நாமங்களையும் தார்கள் என்கிற குணநலன்களையும் எப்போதும் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று விரும்பினார்.

இப்படிப் பல பெரு மைகளோடு விளங்கும் ஆழ்வாரைக் காண, ‘விண்ணாட்டவர் மூதுவர்’ என்னும்படியான நித்ய சூரிகளும், மஹரிஷிகளும், தேவர்களும், குறுகூருக்கு  வர, ஆழ்வார் அக்குழாத்துக்கும் சேர்த்து ‘பொலிக பொலிக பொலிக’ என்று பல்லாண்டு பாடி காப்பிட்டு மகிழ்ந்தார். ‘பொலிக...’ என்கிற பாசுர த்தின் மூலம் உலகைத் திருத்தி பகவான் திருவடியில் சேர்த்து வைக்கும்படியான ராமானுஜர் வரப் போகிறார் என்று பல இடங்களில் குறிப்பால்  உணர்த்தினார்.

‘அருளாழி வரிவண்டே’ என்று, ராமானுஜரை வண்டாக விளித்தே பாசுரத்தை அருளினார். இவரை ப்ரபன்ன ஜன கூடஸ்தர் என்றழைப்பர்.  பகவானை ஏழைப் பங்காளன் என்பதுபோல், அவனிடம் பக்தி செய்து உயர்ந்த சரணாகதியின் மூலம் அவனை அடைவதே ப்ரபத்தி மார்க்கமாகும்.  அப்படி உயர்ந்த பக்தியான சரணாகதி செய்த வர்களை ‘ப்ரபன்ன ஜனங்கள்’ என்றழைப்பார்கள்.  அவர்கள் எல்லோருக்கும் தலைவனாக ஸ்வாமி  நம்மாழ்வார் திகழ்வதால் அவரை ‘ப்ரபன்ன ஜன கூடஸ்தர்’ என்பார்கள்.

இப்போது திவ்ய தேச கோயில்களில் தெய்வத் திருமேனியை நாம் தரிசித்து பூஜித்து பக்தி செலுத்துகிறோமே, அந்த அர்ச்சராதி மார்க்கத்தை முதன்முதலாக உருவாக்கியவர் நம்மாழ்வார் என்றறியும்போது வியப்பால்  விழிகள் விரிகின்றன. ‘சூழ்விசும் பணி முகில் தூரியம் முழக்கின்’ முதலான பத்துப் பாடல்களில் அந்த மார்க்கத்தை அவர் விவரித்திருக்கிறார்.  வடமொழியிலுள்ள வேதத்தில் எப்படி அர்ச்சராதி மார்க்கம் விவரிக்கப்பட்டிருக்கிறதோ, அப்படியே இவரும் வெளியிட்டிருக்கிறார். தன்னுடைய  முப்பத்தைந்தாவது வயதில் ‘அந்தமில் பேரின்பத்து அடியரோடிருக்கும்படி’, அவாவற்று வீடு பேறு பெற்றார். 

நன்றி - தினகரன்
   

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 22

அயோத்தியில் வாழ்ந்த காலத்தில் ராமனிடம் சீதை பேசியதே இல்லை. இதழோரம் சிறுபுன்னகை மட்டுமே செய்வாள். தசரதரின் 360 மனைவியரும் அரண்மனையில் இருந்ததால், சீதைக்கு மாமியார்கள் பயம். அதனால், ராமனிடம் கூட பேச மாட்டாள். ஆனால், காட்டிற்குச் சென்றதும், ராமனிடம் கலகலப்பாகப் பேசி சிரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. விளையாட்டே போட்டியாக மாறியது. யார் முதலில் கோதாவரி நதியில் நீந்தி கரையை தொடுகிறார்கள் என்பது தான் போட்டி. நடுவராக லட்சுமணன், நதிக்கரையில் இருந்த பாறையில் அமர்ந்து கொண்டார். ராமன் கணப்பொழுதில் கரையை தொட்டுவிட வந்து விட்டார். 

இருந்தாலும், தொடுவதற்குள் சீதையைத் திரும்பிப் பார்த்தார். சீதை ஆரம்பித்த இடத்திலேயே நீந்திக் கொண்டிருந்தாள். ராமன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மூச்சடக்கி தண்ணீருக்குள் தலையை மறைத்துக் கொண்டார். சீதையும் அக்கரையைத் தொட்டு விட்டு மீண்டும் கரைசேர்ந்தாள். 

லட்சுமணனிடம், ""பார்த்தாயா? உன் அண்ணனை! இது தான் வசிஷ்டரிடம் கற்ற லட்சணமா?'' என்று கேலி செய்தாள். ஆனால், ராமனுக்கோ மனைவியிடம் தோற்றுப் போனதில் அவ்வளவு சந்தோஷம். இந்த விஷயத்தை சீதையைப் பிரிந்த நேரத்தில் ராமன் எண்ணிப் பார்க்கிறான். அதாவது, பிராட்டி சம்பந்தம் இல்லாமல் அவன் இல்லை. ராமபட்டாபிஷேக நேரத்திலும், வசிஷ்டர் அதை சாதாரண ராஜ பட்டாபிஷேகமாகக் காணவில்லை. 

"கல்யாண குண சாம்ராஜ்ய பட்டாபிஷேகம்' என்று சொன்னார். அதனால் தான், சீதையை ராமனின் அருகில் இருக்கச் செய்தார். ராமனுக்கும் அப்படித்தான்..அயோத்தி என்பது அவனுக்கு சிறிய வஸ்து. பக்கத்தில் சீதை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அவன் குணத்தையே காட்டுகிறான்.
வாலி வதம் விஷயத்திலும் இதை நாம் கண்கூடாகக் காணலாம். ராமபாணம் பட்டு வாலி அடிபட்டு விழுந்ததும், ""ராமா...இம்மைக்கு மட்டுமல்ல, ஏழ்பிறப்புக்கும் ராம என்ற மந்திரமே உயர்ந்தது என்கிறார்கள். இத்தனை பெருமை பெற்ற நீ, என்னை மறைந்திருந்து கொன்றாய். இதன்மூலம், நீ என்னைக் கொன்றதாக நினைக்காதே. இக்ஷ்வாகு குலத்தின் பெருமையைக் கொன்றிருக்கிறாய். சக்கரவர்த்தி தசரதரின் பெருமையைக் கொன்றிருக்கிறாய்,'' என்று கடுமையாகச் சொன்னான்.
ராமன் அவனுக்கு பல சமாதானங்களைச் சொன்னார். ஆனால், வாலி அவற்றை ஏற்க மறுத்துவிட்டான்.
""நீ என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்கமாட்டேன். ஆனால், நீ இவ்வாறு செய்ததற்கான காரணம் எனக்குத் தெரியும். சீதையைப் பிரிந்த பிறகு, நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. ஆவியாய் வந்த சீதையை (உன் உயிர் போன்ற சீதையை) அமிழ்தம் போன்ற சீதையை, ஜனகன் பெற்ற அன்னமாகிய சீதையை நீ பிரிந்த பிறகு, நீ திகைத்துப் போய் இருக்கிறாய்! என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. அதனால் தான் இப்படி செய்தாயோ?'' என்று பதில் சொல்கிறான்.
உண்மையும் அதுதான். 

பிராட்டியைப் பிரிந்தது முதல், தான் என்ன செய்கிறோம் என்று தெரியாமலே ராமன் தப்பு செய்தார். அப்படி தப்பு தப்பாக செய்ததில் ஒரு தப்பு தான் மறைந்து நின்று வாலியைக் கொன்றது.
சரி...வாலி சொல்லித்தான் நமக்கெல்லாம் இந்த உண்மை தெரிய வேண்டுமா! ராமனே இதை ஒத்துக்கொண்டிருக்கலாமே! சீதையைப் பிரிந்து குழம்பியிருக்கும் நேரத்தில் இந்தக்குழப்பம் நேர்ந்து விட்டதாகச் சொல்லியிருக்கலாமே என்றால் அதற்கும் காரணம் இருக்கிறது.

பத்தினி பிறந்த வீடு போயிருக்கிறாய் பர்த்தா என்ன செய்கிறான்? பால்காரன் யார் என்று கூட அவனுக்கு தெரியாது என்றாலும், அதை அவன் ஒத்துக்கொள்வானா? அதுபோலத்தான் இதுவும்! நாம் சின்ன விஷயத்தில் மயங்குகிறோம். பகவான் சரணாகதம் செய்யும் விஷயத்தில் மயங்கிப் போகிறான். இதிலிருந்தே புரியவில்லையா! பிராட்டி தான், அவனது மயக்கத்தைத் தீர்த்து வைக்கிறாள் என்று! ஆகவே, அவள் அருகாமையில் இருந்தால் தான், ராமன் எதையும் செய்வான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மாமல்லபுரத்தில் திருவிடந்தை வராகப்பெருமான் கோயில் இருக்கிறது. இவர் மீது திருமங்கையாழ்வார் நாயகி பாவத்தில் (தன்னை இறைவனின் காதலியாக நினைத்தல்) பாசுரம் பாடுகிறார். இந்தப் பெருமான் மீது அவருக்கு காதல். என்னை ஏற்றுக்கொள் என்கிறார். இதை ஆழ்வாரின் தாயார் கேட்கிறாள்.

""மகனே! அந்தப் பெருமானுக்கு திருமணம் ஆகிவிட்டதென்ற விஷயம் உனக்குத் தெரியாதா? எற்கனவே, திருமணமான ஒருவன், உன்னை எப்படி ஏற்பான்? நீ வேண்டுமானால் திருவிடந்தை போய் பார். அவன் தாயாருடன் சேவை சாதிப்பான். இடதுமடியிலே தாயார் வீற்றிருப்பாள், நன்றாகப் போய்பார்த்து வா,'' என்றாள்.

திருமங்கையாழ்வாரும் திருவிடவிந்தை வந்தார். பெருமாளை சேவித்தார். அர்ச்சகரிடம் "தாயார் இங்கே இருக்கிறாளா?' என்றார்.

""ஆம்...பெருமாள் தாயாருடன் தான் சேவை சாதிக்கிறார். அவரது இடதுமடியிலே வீற்றிருப்பதை தாங்கள் சேவிக்கலாமே!'' 
என்று பதில் சொன்னார் அர்ச்சகர்.

அவசரமாக வீடு திரும்பினார் திருமங்கையாழ்வார்.

அம்மாவிடம் போனார். 

""நான் அந்தப் பெருமானை இப்போது முன்பை விடத் தீவிரமாக இரண்டு மடங்கு காதலிக்கிறேன்,'' என்றார். 

""என்னடா இது! இவன் அனர்த்தமாகப் பேசுகிறானே! தாயாருடன் பெருமாளைப் பார்த்து வா! அவன் ஏற்கனவே திருமணமானவன் என்று சொல்லி அனுப்பினால், தாயாருடன் சேவித்த பிறகும், இப்படி பேசுகிறானே!'' என்று தவித்த வேளையில், ""பிராட்டியின் கடாட்சம் இருந்தால் தானே அவனையே அடைய முடியும் என்ற அர்த்தத்தில் அவர் சொன்னது அந்த தாய்க்கு தெரியவந்தது. அலைகடலைக் கடைந்த போது வெளிவந்த சாதாரண அமுதத்தை பெருமான் தேவர்களுக்கு கொடுத்து விட்டார். ஆனால், நிஜமான அமுதமான பிராட்டியை ஏற்றார். அவள் அன்று அவர் மார்பில் ஏறி அமர்ந்தது தான்! இன்றுவரை அவரோடு இருக்கிறாள். எனவே பிராட்டியால் மட்டுமல்ல! நாம் எல்லாருமே பெருமானை ஆலிங்கனம் (தழுவுதல்) செய்து ஆனந்தமாக இருக்க முடியும். அதாவது, அவனை அடைய முடியும். அதற்கு அவனை சரணாகதி அடைய வேண்டும்.

- இன்னும் ஆனந்திப்போம்


நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 21

இலங்கையை விட்டுக் கிளம்பும் முன் ராமர், சீதைக்கு லங்காபுரியை சுற்றிக்காட்டுகிறார்.

""சீதா! இந்த இடத்தில் தான் கும்பகர்ணன் அழிந்தான், இங்கு தான் ராவணனைக் கொன்றேன், இங்கே தான், இந்திரஜித்தை லட்சுமணன் முடித்தான்...'' என்றவர், ""சரி...இந்த லங்கையை ஒருமுறை உன் கண்களால் பார்,'' என்றார்.

""அதைத்தானே இத்தனை நாளும் செய்து கொண்டிருந்தேன். இவ்வளவு காலமும் இங்கே தானே இருந்தேன்,'' என்றாள் பிராட்டி.

""நீ இங்கே இருந்ததும் உண்மை, பார்த்ததும் உண்மை. ஆனால், அது கோபப்பார்வை. இப்போது குளிரப் பார். ஏனெனில், நம் பிள்ளை விபீஷணன், இனி இந்த தேசத்தை ஆளப்போகிறான். உன் கடாட்சம் இருந்தால் தான், அவனால் சிறப்பாக ராஜ்யத்தை நடத்த முடியும்,'' என்றார்.

உடனே பிராட்டி, தனது மனதிலுள்ள மங்கள எண்ணங்களையெல்லாம் ஒன்றுசேர்த்து, லங்கையை குளிரக் கடாட்சித்தாள் என்கிறது வால்மீகி ராமாயணம்.

சுக்ரீவன் விஷயத்தில், பிராட்டி கடாட்சித்தது போலவே தெரியவில்லையே என்று சந்தேகப் படுவோர் உண்டு. இந்த சந்தேகம் பிராட்டிக்கே வந்து விட்டதாம். அவள் அனுமானிடம், ""குரங்குகளுக்கும் மனுஷர்களுக்கும் எப்படி நட்பு ஏற்பட்டது?'' என்று கேட்டாளாம். அதாவது, தனது அனுக்கிரகம் இல்லாமல், ராமபிரானின் அனுக்கிரகத்தை அவர்கள் எப்படி பெற்றார்கள் என்பது அவளது சந்தேகத்திற்கான காரணம்.

அனுமான் சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

""தாயே! தங்கள் அனுக்கிரகம் இல்லாமல், நாங்கள் எப்படி பெருமானின் கடாட்சத்தை அடைய முடியும். தாங்கள், ராவணனால் ஆகாச மார்க்கமாக கடத்தப்பட்ட போது, உங்கள் ஆபரணங்களை மூடையாகக் கட்டி கீழே போட்டீர்கள் இல்லையா? நாங்கள் ரிஷ்யசிருங்க மலையில் இருந்த போது, எங்கள் கையில் தானே அவை கிடைத்தன. அந்த ஆபரணங்கள் வழியாக தங்கள் கடாட்சம் கிடைத்த பிறகு தானே, ராமபிரானின் அனுக்கிகரம் கிடைத்தது. தங்கள் சம்பந்தமின்றி, அவர் அனுக்கிரகம் எங்களுக்கு எப்படி கிடைக்க முடியும்?'' என்று பதிலளித்தார். சீதாபிராட்டி கடத்தப்பட்டதில் இன்னொரு ஆனந்தமான விஷயம்.

எல்லாரும் ராமனைச் சரணடைந்தார்கள். ஒரு ராட்சதனையும் சரணாகதம் ஆக்கத்தான் ராமனே லங்கை வந்தார். அதற்காகத் தான் சீதாபிராட்டியும் லங்கை சென்றதே!

பிள்ளை லோகாச்சாரியார் என்ன சாதிக்கிறார் (சொல்கிறார்) தெரியுமா? பிராட்டியின் சக்தி என்னவென்று தெரியாதவர்கள் தான், ராவண பலாத்காரத்தால் தான், சீதாபிராட்டி கடத்தப்பட்டாள் என நினைப்பார்கள். ஆனால், ராட்சதனையும் சரணாகதி அடையச்செய்ய, சீதாபிராட்டி உருவாக்கிக் கொண்ட சந்தர்ப்பமே அது,'' என்கிறார்.

பிராட்டியின் சக்தி அபரிமிதமானது. அவள் தான் ராவணனையும் கட்டி தூக்கிச்சென்றாளே தவிர, அவன் அவளைத் தூக்கிச் செல்லவில்லை. அவள் ஏன் சிறைப்பட்டாள்? தான் உள்ளே போனால் தான் மற்றவர்களுடைய சிறையை அறுத்து விட முடியும் என்பதால் தான்! அவள் சிறைப்பட்டால் தான், தேவஸ்திரீகளின் சிறையை வெட்டி விட முடியும்! அது மட்டுமா! சம்சாரிகள் இந்த ராவணனால் படும் துன்பத்தில் இருந்து தீர்த்து விட முடியும். அதற்காகத்தான் சீதை வலியப் போனாள். 

ஒருவன் கிணற்றில் விழுந்து விட்டான். அவனைத் தூக்கிவிட, ஓரளவு ஆழத்துக்கு வேண்டுமானால் கயிறைக் கட்டி தூக்க முயற்சிக்கலாம். ஆழம் அதிகமென்றால், உள்ளே குதித்து தான், கிணற்றுக்குள் கிடப்பவனை மீட்டு வர முடியும். சீதாதேவி அதைத் தான் செய்தாள். அவளைப் பற்றினால் தான் பிறகு அவனைப் பற்ற முடியும்.

பெருமானின் குணங்கள் பல. அதை எண்ணி முடிக்க முடியாது. அவரது கல்யாண குணங்கள் பற்றி, நான் ஒன்றரை மணி நேரம் பேசுகிறேன் என்றால், அவரது குணங்கள் அவ்வளவு தான் என்றில்லை. அவரது குணங்கள் பற்றி என் நாக்கிற்கு அந்தளவு தான் பேசும் சக்தி இருக்கிறது! நம்மாழ்வார் பெருமானைப் பற்றி 1202 பாடல்கள் பாடினார். அதற்காக அவர் பாடிய அளவுக்கு தான் அவரது குணங்கள் என்றில்லை! அவருக்கு அந்தளவு தான் சக்திஇருக்கிறது.

பெருமாளை "பராபரன்' என்பார்கள். "பர' என்றால் "மேன்மைக்கெல்லாம் எல்லை'. "அபர' என்றால் "எளிமைக்கெல்லாம் எல்லை'. அவரது குணங்களை மேன்மை, எளிமை என்று இரண்டு கோஷ்டிகளாகப் பிரிக்கலாம். ஆனால், இதில் "பரத்வம்' எனப்படும் மேன்மை குணம் தான் அவரிடம் அநேகமாக பிரகாசிக்கும். 

எளிமையை அவரது ஸ்வாதந்திரமும் (சுதந்திரம்) கோபமும் அநேகமாக மூடியிருக்கும். இதை "நெருப்பு கிளர்ந்தாற் போல்' என்பர். 

தணல் "தக தக' என எரியும். ஆனால், மேலே சாம்பல் மூடியிருக்கும். சாம்பலைத் தட்டினால் தான் தணலின் தகதகப்பு தெரியும். அதுபோல, பெருமாளிடம் நிறைய குணங்கள் உண்டு. பக்தனை ரட்சிக்க அபரிமிதமான குணங்கள் உண்டு. ஆனால், அது சாம்பல் மூடிய தணல் போல காணப்படும். 
தாய்மார்களிடம் கேட்டால் தெரியும். சின்னகோலைவைத்து சாம்பலைத் தட்டினால் தணலின் தகதகப்பைத் தெரிந்து கொள்ளலாம். (இப்போது இது மாதிரி தணல் விஷயங்கள், நம் ஸ்திரீகளுக்கு தெரியுமா தெரியாதா என்று கேட்டு விட வேண்டாம்).

பெரியவர்கள் தங்கள் நாளில் பார்த்ததை வைத்து தான் இதையெல்லாம் சொல்லியிருக்கிறார்கள். பிராட்டி அந்த சாம்பலைத் தட்டுகிறாள். உடனே பெருமானின் கல்யாண குணங்கள் பொத்துக்கொண்டு வெளியே கிளம்புகின்றன. இதுவரையும் நீங்கள் பெருமானைச் சேவித்தீர்கள். பிராட்டியை சேவித்தபிறகு பெருமானிடம் போனால், இன்னும் அதிகமாக அவரது குணம் பிரகாசிக்கும். "மாமாயன் மாதவன் வைகுந்தன்' என்று பாடுகிறாள் ஆண்டாள். இதில் மாமாயனும் வைகுந்தனும் பெருமாள். நடுவில் இருக்கும் மாதவத்துவமே பிராட்டி. 

அதனால் தான், இதை நடுவில் போட்டு எழுதினாள் ஆண்டாள். பிராட்டியின் சம்பந்தம் இருந்தால் தான் அவனே மாமாயன், வைகுந்தனாக முடியும். 

- இன்னும் ஆனந்திப்போம்


நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 20

ராமாயணத்திலே லட்சுமி பிராட்டியாரின் வைபவம் அழகாக வர்ணிக்கப்படுகிறது. அதை அனுபவிக்கும் முன், பிராட்டியின் இன்னும் சில குணங்களைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமாளின் ஒரு கண் கும்பகர்ணனையும், ராவணனையும் பார்க்கிறது. இன்னொரு கண் விதுரன், சஞ்சயன் போன்ற மகாத்மாக்களையும் காண்கிறது. ஒரு பக்கம் சண்டைக்காரர்கள், இன்னொரு பக்கம் ரசிகத்தன்மை. இவ்வாறு, அவர் ரசிக்கக் கற்றுக் கொண்டது பிராட்டியிடத்தில் தான். ஸ்ரீமகாலட்சுமி தாயார் பள்ளியில் படித்த ஒரே மாணவன் பெருமாள் மட்டும் தான்.
அவள் பெருமாளிடம் நம்பிக்கையுடன் பேசுவாள். 

நம்மிடம் நம்பிக்கையில்லாமல் பேசுவாள். பெருமாளுக்கும், பிராட்டிக்கும் ஒருவர் மீது ஒருவர் வைத்த நம்பிக்கையின் அளவு சமமானது. ஆயர்பாடியில் நந்தகோபன் வீட்டில் நந்தகோபன், யசோதை, கண்ணன் ஆகியோர் வரிசையாகப் படுத்திருப்பார்கள். இதில் நடுவில் இருப்பவள் யசோதை. அவளது ஒரு கை நந்தகோபன் மீது இருக்கும். இன்னொரு கை, கண்ணன் படுத்திருக்கும்
தொட்டில் மீது இருக்கும். கட்டிலுக்கும், தொட்டிலுக்கும் பாலமாக இருப்பவள் அவள். அதுபோல் ஜீவாத்மா என்ற தொட்டில் கயிறு லட்சுமி பிராட்டியின் ஒரு கையில், பரமாத்மா என்கிற திருமால் மீது ஒரு கை. இந்த இருவரையும் இணைக்க அவள் முயற்சி செய்கிறாள்.

ஓம்காரத்தின் நடுவிலும் அவள் தான் இருக்கிறாள். "ஓம்' என்பதை அகரம், உகரம், மகரம் (அ,உ, ம) என்று பிரிப்பர். இதில் அகரம் என்பது பரமாத்மா. உகரம் லட்சுமி தாயார். மகரம் ஜீவாத்மா.
பரமாத்மாவையும், ஜீவாத்மாவையும் சேர்த்து வைக்க அவள் பாடுபடுகிறாள். ஜீவாத்மா செய்த பாவத்தால் பரமாத்மா கோபமாக இருக்கிறார். இந்த கோபத்தையும், பாவத்தையும் அவள் நடுவில் இருந்து மாற்றுகிறாள். உபதேசம் மூலம் இருவரையுமே திருத்தப் பார்ப்பாள். திருத்த முடியாவிட்டால், தன் பார்வை கடாட்சத்தால் இருதரப்பையும் திருத்தி விடுவாள்.

புருவத்தை நெளிப்பாள், கண்ஜாடை காட்டுவாள்...! இதை நமது லவுகீக வாழ்வுடன் ஒப்பிடக்கூடாது. லட்சுமி தாயார் இப்படியெல்லாம் செய்து தானா பரமாத்மாவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று நம் சாமானிய வாழ்க்கையைக் கொண்டு கணக்கு போட்டு விடக்கூடாது.

கங்கைக்கரையில் பரிசல் இருக்கும். அக்கரைக்கு கொண்டு விடச்சொல்லி கரையில் வைத்து கூலி பேசினால், பரிசல்காரன் ""இஷ்டப்பட்டதைக் கொடுங்க!'' என்று சொல்லி ஏற்றி விடுவான். நடு ஆற்றிற்கு போன பிறகு தான். ""உங்களுக்கு நீச்சல் தெரியுமா?'' எனக் கேட்பான். அப்போது, அவனது கேள்வியைப் புரிந்து கொண்டு கூலி நிர்ணயமாகும். நீச்சல் தெரியும் என்றால் ஒரு கட்டணம். தெரியாது என்றால் இன்னொரு கட்டணம். அப்போது, அவன் கேட்டதைக் கொடுத்து தான் ஆக வேண்டும்.

அதுபோலத் தான் தாயாரும்! பெருமாள் அவளது பார்வையில் மயங்கிக் கிடக்கும் போது, அவள் ஜீவாத்மாவை கரைத்தேற்றுவது குறித்து பேசுவாள். நம் உலக வழக்கில், கணவனிடம் மனைவி இப்படி கேட்பது என்பது, ஏதாவது சுயநலம் கருதி! ஆனால், ஜீவாத்மாக்களின் நன்மை கருதி, தாயார் பெருமாளிடம் கேட்கிறாள். இதை தேக ரீதியாக எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆத்மா, பரமாத்மா சம்பந்தம் என்று எண்ண வேண்டும். பரமாத்மாவிடம் அழகையும், ஜீவாத்மாவிடம் அருளையும் காட்டி அவள் திருத்துவாள்.

இப்போது, ராமாயணம் பக்கம் திரும்புகிறேன்.

ராமன் காட்டுக்குப் புறப்பட்டு விட்டான். சீதாதேவி உடன் வருவேன் என்கிறாள். ராமன் ஒத்துக்கொள்ளவில்லை. 

உடனே சீதை,""உங்கள் மாமனார் மாமியாரிடம் பெயரைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்,'' என்று வேகமாக ஒரு வார்த்தையை விட்டாள்.

அதோடு விட்டாளா! புருஷோத்தமனாகிய பகவானைப் பார்த்து, ""நீங்கள் என்னைக் காட்டுக்கு அழைத்துச் செல்லாவிட்டால், "ஆண் உடை உடுத்திய பெண்ணுக்கு என் பெண்ணைக் கொடுத்து ஏமாந்தோமே' என்று என் தந்தை ஜனகர் வருத்தப்படுவார்,'' என்றாள்.

அவ்வளவு தான்! இவளை அழைத்துக் கொண்டு போவதைத் தவிர வேறு வழியில்லை என்று ராமன் முடிவு செய்து விட்டார். 

அதோடு விட்டாளா! ""நீங்கள் காட்டுக்குப் போக வேண்டும் என்ற விஷயம் உங்களுக்கு இன்று தான் தெரியும். ஆனால், எனக்கு என் ஐந்து வயதிலேயே தெரியும். என் அப்பா, என் ஜாதகம் குறித்து ஜோதிடரிடம் பலன் பார்த்தார். நான் குணவானுக்கு வாழ்க்கைப்படுவேன், சக்கரவர்த்திக்கு வாழ்க்கைப்படுவேன், பெரிய நாட்டுக்கு ராணியாவேன்... என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந் தவர்...ஆனால்... என்று இழுத்தார்.

அந்த "ஆனால்' என்பது இடிவிழுந்தாற் போல் இருந்தது. ஏனெனில், "இவள் வனவாசம் போக வேண்டும்' என்றும் இருக்கிறது என்றார். எனவே, நான் அப்போதே காட்டுக்குப் போக மூட்டை கட்டி வைத்து விட்டேன். நான் ஏற்கனவே கிளம்பி விட்டேன். நீர் வேண்டுமானால், பின்னால் வாரும்,'' என்று சொல்லாக்குறையாக கிளம்பி விட்டாள் அவள்.

இந்த சமயத்தில் லட்சுமணன் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தான்.

""நானும் உன்னோடுவருவேன் அண்ணா,'' என்றான்.

""நீ இங்கிருந்து தாயார்களையும், தந்தையையும் கவனித்துக் கொள்,'' என்றார் ராமபிரான்.
அவனோ, ""அண்ணா! நீங்கள் சீதாபிராட்டியாரிடம் பேசிக்கொண்டிருந்த போது, என்னை அழைத்துச் செல்வதாக சொன்னீர்களே!'' என்றான்.

""அப்படி ஏதும் நான் சொல்லவில்லையே!'' என்ற ராமபிரானிடம்,""அண்ணா! நீங்கள் பிராட்டியாரிடம் பேசும் போது, பரதனை உன் கூடப்பிறந்த தம்பியாக நினைத்துக் கொள் என்றீர்கள். சத்ருகனனை பெற்ற மகன் போல் பார்த்துக் கொள்ள சொன்னீர்கள். 

கவுசல்யாவை தாயார் போலும், தசரதரை தந்தை போலும் கவனித்துக் கொள்ளச் சொன்னீர்கள். என்னை எப்படி நினைத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதுவும் பிராட்டியிடம் சொல்லவில்லையே! இதிலிருந்தே புரிந்து கொள்ள மாட்டேனா! என்னை நீங்கள் அழைத்துச் செல்லப் போகிறீர்கள் என்று!'' என்று கேட்டான்.

ராமபிரானிடம் பதில் இல்லை.

எனவே, ரொம்பப் பெரியவர்கள் பேச்சில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவர்களது பேச்சை பிறர் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் கழுத்தில் கத்தி வைக்குமளவு கூட அந்த பேச்சின் தன்மை போய் விடும். இருந்தாலும் ராமன் மறுத்தார். லட்சுமணனோ சீதாராமரின் திருவடிகளைப் பிடித்து, தன்னையும் அழைத்துச் செல்ல ஒப்புதல் பெற்றான்.

- இன்னும் ஆனந்திப்போம்


நன்றி - தினமலர்