வியாழன், 26 ஜூன், 2014

கண்ணனை நினைக்காத நாளில்லையே!

அவசரயுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மைப் போன்றவர்களுக்கு ஆண்டாள் காட்டிய உயர்ந்த வழி சரணாகதி. அதாவது, இறைவனைச் சரணடைவது. இதை விட சிறந்த மார்க்கம் உலகில் வேறில்லை என்று திருப்பாவையின் முப்பது பாசுரங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

* சுவாமிதேசிகன், கோதாஸ்துதியில் ஆண்டாளை ""விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா ந:'' விசேஷமாகப் போற்றுகிறார். ""விஷ்ணு சித்தரின் மகளான ஆண்டாள் என்னுடைய மனதில் எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும்'' என்பது இதன் பொருள். 

* ஆண்டாள் மார்கழி நோன்பை நோற்று கண்ணனை அடைந்தாள். மார்கழியை "மார்கசீர்ஷம்' என்று குறிப்பிடுவர். "தலைசிறந்த வழி' என்பது இதன் பொருள். கடவுளை அடைவதற்குரிய வழிகளில் ஆண்டாள் காட்டிய பாவை நோன்பு மிகவும் சிறந்தது.

* திருமாலின் திருவடியில் பூக்களை இட்டு அர்ச்சிக்க வேண்டும். ஆத்மாவை அவன் திருவடியில் சமர்ப்பிக்க வேண்டும். வாய், அவனுடைய திருநாமத்தை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த மூன்றுவழிகளையும் பின்பற்றி உயிர்கள் மோட்சகதி பெற வேண்டும் என்பதே கோதை காட்டிய நெறிமுறை. 

* கோதை என்பதற்கு "நல்ல வாக்கு அருள்பவள்' என்பது பொருள். அவளுடைய திவ்யமான திருவடிகளை எப்போதும் மனதில் சிந்திப்பவர்க்கு நல்வாக்கை கொடுத்து அருள்வாள். மங்கலமான சுபசொற்களை நாவால் பேச அனுக்ரஹம் செய்வாள். 

* கோதை திருமாலை மணக்கும் பேறு பெற்றவள். இரு மாலைகளைக் கட்டி தினமும் திருமாலுக்குச் சூட்டினாள். ஒன்று பூமாலை; மற்றொன்று பாமாலை. பூமாலையைச் சூடியும், பாமாலையைப் பாடியும் அவன் திருவடிகளில் சமர்ப்பித்தாள். அதனால் "சூடிக் கொடுத்த நாச்சியார்' என்னும் பெயர் பெற்றாள். 

* கண்ணனிடம் தன் காதலை வெளிப்படுத்த ஆண்டாள் பூக்களை தூதாக அனுப்பினாள். ""என்னுடைய ஆசையை எம்பெருமானிடம் தெரிவித்து அவன் அருளை எனக்கு பெற்றுத் தாருங்கள்'' என்று சொல்லி அனுப்பினாள். இதன்மூலம் ஆண்டாள் கண்ணனையும் ஆண்டாள், நம்மையும் ஆள்கிறாள்.


* "அஞ்சுக்குடிக்கொரு சந்ததியாய்' என்று மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் ஆண்டாளை சிறப்பிக்கிறார். பன்னிரு ஆழ்வார்களின் கோஷ்டிக்கு, ஆண்டாளே பூங்கொடியாக விளங்குவதால், அவளின் அவதாரம் உயர்ந்ததாக போற்றப்படுகிறது.

ஆண்டாள் பற்றி மூக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார்

நன்றி - தினமலர்

அஷ்டபதி எனும் கீதகோவிந்தம் - ஸ்ரீ வத்ஸ ஸோமதேவ சர்மா

இது ஜயதேவர் என்ற கிருஷ்ணபக்தரால் எழுதப்பட்ட சிறந்த நூல். இதில் பக்திரஸம், ஸ்ங்கீதம், நர்த்தனம் இவைகளுக்கேற்ற அம்சம் பல ஆகிய விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதை புரி ஜகன்னாத ஷேத்திரத்தில் ஜயதேவர் பாட அவர் மனைவி பத்மாவதி ஆடினாள். ஆடல் பாடல் இரண்டும் பகவானுக்குப் பூஜாகாலத்தில் செய்யும் அறுபத்து நான்கு உபசாரங்களில் சேர்ந்தவை. உபசாரம் ஒவ்வொன்றும் நம்மிடம் பகவானுக்குக் கருணை உண்டாக்கும் கருவியாம். அவைகளில் நாட்டியமும் கீதமும் மிகவும் அந்தரங்கமான தத்துவம் நிறைந்தவை. பகவான் நாத வடிவினன். நாதம் காற்றுடன் கலப்பதே நாட்டியக் கலையாம்.

நாத வடிவினன் பரமாத்மா. ஒலிக்கு அனுகூலமான காற்று வடிவமானவள் பராசக்தி. இந்த தத்துவமே ராதாகிருஷ்ண ஸ்வரூபமாகத் தோன்றி பக்தரின் உள்ளம் பக்குவமாவதற்காகப் பல லீலைகளக் செய்தது. லீலைகள் பொதுவாக எல்லோர் உள்ளத்தையும் கவரும். அதனுள் பதிந்து கிடக்கும் பரதத்வம் உத்தம பக்தரான ஒரு சிலர் உள்ளத்தையே கவரும். அத்தகையவரே பரம ஏகாந்தி, ஜீவன் முக்தர் எனப்படுவர். அத்தகைய உத்தமரில் ஒருவர் வேதவ்யாஸர். அவர் 18 புராணங்களின் மூலமாகப் பற்பல அரிய பெரிய தத்துவங்களை உலகுக்கு அளித்தார்.

அவைகளில் பத்தாவதான ப்ரம்மவைவர்த்தம் எனும் புராணத்தில் ஸ்ரீராதாக்ருஷ்ண சரிதத்தைக் கூறுகிறார். அதற்கு விரிவுரை வடிவமாக அமைந்த கர்க்க ஸம்ஹிதை என்ற இதிஹாஸத்திலும் இது மிக விரிவாகவும் ரஸமாகவும் தத்வார்த்தத்துடனும் விளக்கப்பட்டிருக்கிறது. இவ்விரு நூல்களையும் ப்ரமாணமாகக் கொண்டே அஷ்டபதி அமைக்கப்பட்டது.

கோலோகத்திலுள்ள ஸ்ரீக்ருஷ்ணன் விரஜா என்ற மனைவியுடன் ரமித்துக் கொண்டிருந்தார். அதையறிந்த ராதை கனகோபத்துடன் வந்தாள். க்ருஷ்ணன் விரஜையை நதியாக மாறும்படி கூறி தாமும் மறைந்துவிட்டார். ராதை ஏமாந்து தன்னிருப்பிடம் போகும்போது, ராதையை தேடி அலைபவர் போல், ’ராதே ராதே’ எனக்கூறி எதிரே வந்தார் அவர். ராதை கோபங்கொண்டு பேசாமல் போக, க்ருஷ்ணன் அவளைச் சமாதானப்படுத்தினார். அவள் கடுங்கோபத்துடன் செல்ல, ’ராதே, கோபம் வேண்டாம். உன்னைப் பணிகிறேன். இனி உன்னை விட்டு அன்னியரிடம் ஆசை கொள்ளேன்’ என்றார். அவள் திரும்பிப் பாராமலேயே சென்றாள்.

இதைக் கண்ட உத்தம பக்தனான ஸுதாமா ராதையிடம் கோபங்கொண்டார். க்ருஷ்ணன் மறுபடியும் விரஜையுடன் விளையாட, பகவானது பிரிவை ஸஹிக்காமல் ஒரு தோழியை அனுப்பித் தன்னை மன்னித்து தன்னிருப்பிடம் வரும்படி சொல்லி அனுப்பினாள் ராதை. க்ருஷ்ணன், ராதையின் விரஹத்தால் எழுந்து நடக்க சக்தி இல்லாமல் தவிப்பதாகவும் உடனே ராதையை அங்கு அழைத்து வரும்படியும் அவளிடமே கூறினார். வேறு வழியில்லாமல் பகவானிருப்பிடம் வந்தாள் ராதை.

முன்பு அவளிடமே கோபங்கொண்ட ஸுதாமா அவளை உள்ளே விடாமல் தடுத்தார். தேவி அவரை அரக்கனாகும்படி சபித்தாள். ஸுதாமா ராதையைப் பகவானை விட்டு பிரிந்திருக்கும்படி சபித்தார். உடனே பகவான் வெளியில் வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். ஸுதாமாவை சங்கசூடனாக பிறந்து சிவனால் கொல்லப்பட்டு கோலோகம் வரும்படி கூறினார். ராதையை வ்ருஷபானு என்பவரின் பெண்ணாகப் பிறந்து, அங்கிருக்கும்படியும் தாம் வஸுதேவனிடம் பிறந்து நந்தன் வீட்டில் வளரும் போது ராதையை மணந்து சிலகாலம் அவனியில் தங்கி பிறகு இருவரும் கோலோகம் செல்லலாம் என்றும் கூறினார். இந்தக் கதையைத் தான் ஜயதேவர் இருபத்துநான்கு அஷ்டபதியாகப் பாடினார்.

இதில் கோலோகத்தில் நடந்த கதையும் பூலோகத்தில் வந்த கதையும் சேர்த்து வர்ணிக்கப்படுகிறது. வேதத்திற்குத் தாயான காயத்ரீ எனும் மந்த்ர ராஜம் இருபத்துநான்கு அக்ஷரமுள்ளது. ஒரு எழுத்திற்கு ஆயிரம் ச்லோகமாக வால்மீகி ஸ்ரீராமசரிதத்தை 24000 ச்லோகமுள்ள ஸ்ரீராமாயணமாக இயற்றினார். ஸ்ரீத்யாகராஜஸ்வாமிகள் 24 ஆயிரம் கீர்த்தனமாக எழுதினார். இருபத்துநான்கு அஷ்டபதிகளாக ஜயதேவர் எழுதினார்.

கோவிந்தனைப் பற்றிய கீதமானதால் கீத கோவிந்தம் என்றும் எட்டுப் பதங்கள் (இங்கு நடனத்திற்கேற்றபடி பதங்கள் எனப்படுகின்றன) அமைக்கப்பட்டிருப்பதால் அஷ்டபதி என்றும் பெயர் தோன்றிற்று. ஆரம்பத்திலும் முடிவிலும் உள்ள கீதத்தைப் புஷ்டிப்படுத்த பல ச்லோகங்கள் கூறப்படுகின்றன. பலர் இவ்வரிய நூலை ஒவ்வொரு ராகம், தாளத்தில் எழுதியிருக்கின்றனர். சிலர் இதை அவரவர் குரு சொன்னபடி வெவ்வேறு ராகத்தில் பாடுகின்றனர்.

காவ்யம் என்று பெயர் அமைக்கப்பட்டதால் ரகுவம்சம் முதலிய காவ்யங்களைப் போல் ஸர்க்கம் என்று பிரிவு காணப்படுகிறது. இதில் 12 ஸர்க்கங்கள் உள. கண்ணனுடைய த்வாதசாக்ஷரீ என்ற மஹா மந்திரத்தை மனசில் வைத்து 12 ஸர்க்கமாக அமைத்திருக்கிறார். ஒவ்வொரு ஸர்க்கத்திற்கும் அவர் வைத்த பெயர் மிக அருமையானவை. அர்த்த புஷ்டி நிறைந்தவை. அருள் சுரப்பவை.

1. ஸாமோத தாமோதரன்: உரலோடு கட்டிய தாய்க்கும் ஆனந்தம் அளிப்பவர்.
2. அக்லேச கேசவன்: ப்ரம்மாவையும் சிவனையும் கஷ்டப்படாமல் காத்தவர்.
3. முக்த மதுஸூதனன்: மோஹங் கொண்ட மது எனும் அரக்கனைச் சிக்ஷித்தவர்.
4. ஸ்நிக்த மதுஸூதனன்: மது கைடபருக்கும் தன் அழகைக் காட்டியவன்.
5. ஸாகாங்க்ஷ புண்டரீகாக்ஷன்: தன்னை நாடி பக்தர் வருவார்களா என விசாலமான கண்களால் பார்ப்பவன்.
6. த்ருஷ்ட வைகுண்டன்: அல்லது தன்ய வைகுண்டன்: வைகுண்ட இன்பத்தை எல்லோருக்கும் அறிவிப்பவன்.
7. நாகர நாராயணன்: க்ராமத்தில் கோபகோபியருடன் இருந்து பழகினாலும் நகரத்தில் உள்ளவர்க்கும் ஏற்றபடி நடப்பவர்.
8. விலக்ஷ்ய லஷ்மீபதி: பகவத் கருணையைக் கோரும் அனைவரையும் லக்ஷ்மீயாகப் பாவித்து மணப்பவர்.
9. முக்த முகுந்தர்: விசேஷ அனுபவத்தைத் தரும் ஸத்குரு.
10. சதுர சதுர்புஜம்: ஸகல புருஷார்த்தங்களையும் அள்ளி அளிக்கும் நான்கு கைகள் உள்ளவர்.
11. ஸாநந்த கோவிந்தர்: இடையர்க்கும் பூமியில் தோன்றிய அனைவருக்கும் ஆனந்தமளிப்பவர்.
12. ஸுப்ரீத பீதாம்பர: பக்தரது பக்தியால் பரம ஸந்தோஷமடைந்து பக்தரைப் பீதாம்பரதாரியாகச் செய்பவர்.

இந்தப் பொருள் பொருந்திய நாமாக்களே இவ்வஷ்டபதியின் கருத்தை நன்கு விளக்குகின்றன. 

மோக்ஷமென்பதை நாம் அறியவில்லை. அறியாத ஒன்றை அறிந்த ஒன்றின் மூலமாகவே அறியவேண்டும். துன்பக் கலப்பில்லாத பேரின்பமே மோக்ஷம். அந்த ஆனந்தத்தின் திவிலைகளே மற்ற ஆனந்தங்கள். அனுபவத்தினால் மாத்ரம் அறியக்கூடிய இன்பம் பேரானந்தம். அதை அறிய அவரவர் அனுபவத்தால் உணர்ந்த சிற்றின்பத்தை உதாரணமாகக் காட்டுகிறது வேதம். சிற்றின்பமென்பதைத் தற்கால உலகம், மேனாட்டவரைப் போல் மிருக இன்பமான காதல் எனக் கருதுகிறது. அது தவறு. ஸதிபதிகள் மனம் ஒருமித்து, இனிமையாகப் பேசுதல், பழகுதல், ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமை, பிரிவால் ஏற்படும் துன்பம், பகவத் பூஜையின் உபசாரமான ஆடல் பாடல்களை நமது காயமெனும் கோயிலில் குடிகொண்டிருக்கும் இறைவனுக்கு அளித்தல், ஆலிங்கனம், முத்தமிடுதல் என்ற வகையில் இருவரும் பேதமில்லாதிருத்தல் முதலியவையே சிற்றின்பமாம்.

இதே நாயக-நாயகி பாவத்தால் ஜீவன்-ஈசுவரன் இருவருக்கும் ஒருமை சேர்க்கை, உபாஸனை முதலியன கூறப்படுகின்றன. இது நம் மதத்தில் மாத்ரமல்ல; முகம்மதிய மதத்திலும், கிறிஸ்தவ மதத்திலும் இதே போல் நாயக-நாயகி பாவம் காணப்படுகிறது. தேவாரம், திவ்யப்ரபந்தம் முதலிய தமிழ் நூல்களிலும், பல பக்தர்களது பாடலிலும், ப்ரேமபக்தியை இங்ஙனம் சித்திரிக்கிறார்கள். அதோடு ஸ்தூலமாகப் பார்த்தால் சிற்றின்பம் போல் காணப்படினும் அவ்வளவும் வேதாந்தம் நிறைந்தது இது. ஆதலால் துறவியர்கூட இதைப் பாடுவார்கள். ஜீவன் பரமாத்மாவிடமிருந்து பிரிந்துவந்து பல துன்பங்களை - ஜனன மரணம், மூப்பு, பிணி, பசி போன்றவற்றை - அனுபவிக்கிறான். பரமனின் அருளால் நல்ல ஆசாரியன் அரிய உபதேசங்களைச் செய்து இறைவனிடம் ஜீவனைச் சேர்க்கிறான். க்ருஷ்ணன் பரமாத்மா, ராதை ஜீவாத்மா, ஸகி ஆசார்யன், என கற்பிக்கப்படுகிறது. இங்ஙனமே காமக்ரோதாதிகளுடன் படை எடுத்து வரும் அக்ஞானமென்ற அரசனை ப்ரபோதனெனும் ராஜா ஜயிக்கிறான் என்று குணங்களை அரசனாகச் சித்திரித்த ப்ரபோத சந்திரோதயம், ஸங்கல்ப ஸூர்ய உதயம் என்ற நாடகங்கள் நம் முன்னவரால் எழுதப்பட்டிருக்கின்றன. பத்ம புராணமே இதற்கு வழிகாட்டியாக விளங்குகின்றது.

நன்றி - காமகோடி

சனி, 21 ஜூன், 2014

தாள் கண்டார் தயாபரன் ஊர் கண்டார் - எம்.என்.ஶ்ரீனிவாசன்

பன்னிரண்டாழ்வார்களால் பாடல் பெற்ற வைணவத் தலங்கள் நூற்று எட்டாகும். இவற்றை நூற்றெட்டு வைணவத் திருப்பதிகள் என்று வைணவ  பக்தர்கள் கூறுவர். ஆனாலும் இந்த நூற்று எட்டில் பொதுவாக திருப்பதி என்று சொன்னால் அது திருவேங்கடமென்னும் தலத்தையே குறிக்கும்.
திருவேங்கடத்தின் பெருமையைப் பற்றி பத்து ஆழ்வார்கள் பாடியுள்ளனர். அவற்றில் குலசேகராழ்வார் பாடல்கள், இத்தலத்தில் பிறப்பதானால் உண்டாகும் பெருமையை விளக்கும் பாடல்களாகும். குலசேகராழ்வார், "மீண்டும் இனி எனக்குப் பிறவி வேண்டாம். அப்படி ஒருவேளை மறுபடி பிறப்பதுதான் விதியெனில், அது மனிதப் பிறவியாக இல்லாவிடினும் திருமலையில் உள்ள கோனேரியில் வாழும் பறவையாகவோ, சுவாமி புஷ்கரணி திருக்குளத்தில் மீனாகவோ, அதன் கரையில் மரமாகவோ பிறக்க வேண்டும். அப்படியோர் பேறு கிடைத்தால் அதை இந்திர பதவியைவிட உயர்ந்ததாகக் கருதுவேன்' என்று பாடியுள்ளார். பெருமாளின் சந்நிதியில் படியாய்க் கிடந்தாவது அவன் பவளவாய் காணவேண்டும் என்பது ஆழ்வாரின் அற்புத ஆசை.

இத்தகு சிறப்புவாய்ந்த திருப்பதி திருமலையில் ராமானுஜரின் குருவான திருமலை நம்பி, கோவில் அரையராக திருப்பணி செய்துவந்தார். அதேசமயத்தில் தமிழ்நாட்டில் திருமாலின் தெற்கு வீடு என்று போற்றப்படும் திருவரங்கத்தில் கோவில் அரையராக ராமானுஜர் சேவைசெய்து வந்தார். இந்நிலையில் ராமானுஜர், தம் சீடர்களுடன் தல யாத்திரை செய்யும்போது திருவேங்கடத்திற்கு வந்து கீழ்த்திருப்பதியில் தங்கியிருந்தார். பல தலங்களுக்கு நடந்தே சென்று வந்திருந்ததால் அனைவருக்கும் கடுமையான பசி உண்டாயிற்று.

அப்போது ராமானுஜரின் சீடரும், திருமலையில் அவர் பெயரில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தவருமான அனந்தாழ்வார் நான்கு அடியார்களுடன் ராமானுஜரிடம் வந்தார். தம் குருவான ராமானுஜரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். ராமானுஜரும் தன் சீடனை மார்புறத் தழுவிக்கொண்டார். பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவளித்தார் அனந்தாழ்வார்.

அனைவரும் உண்டு மகிழ்ந்ததும் அனந்தாழ்வார் ராமானுஜரிடம், ""சுவாமி! தங்கள் வருகையை எதிர்பார்த்து திருமலை நம்பி சுவாமிகள் மலைமீது ஆவலுடன் காத்திருக்கிறார். தேவரீர் அங்கே எழுந்தருள வேண்டும்'' என்று கூறினார். அதற்கு ராமானுஜர், ""அனந்தாழ்வானே, இத்திருவேங்கடமலை நித்திய சூரிகளும் தவ சிரேஷ்டர்களும் உலவும் மலை. இம்மலையில் நான் கால் வைத்து நடப்பது அபசாரமாகாதா?'' என்று கேட்டார்.

அதற்கு அனந்தாழ்வார், ""சுவாமி, திருவரங்கத்தில் தங்களுடன் திருப்பணி செய்துகொண்டிருந்த என்னை, இத்திருமலையில் நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கர்யம் செய்யுமாறு தாங்கள்தானே அனுப்பி வைத்தீர்கள். அடியேன் இம்மலையில் கால் வைத்து ஏறும்போது தாங்கள் வரக்கூடாதா? தங்களைப் போன்றவர்கள் வருவதால்தான் இத்தலத்தின் மகிமையை உணர்ந்து எண்ணற்ற பக்தர்கள் வருவார்கள்'' என்று கூறி ராமானுஜரையும் சீடர்களையும் அழைத்தார்.

அதன்படி ராமானுஜர் திருமலையின் வீதியிலே வரும்போது, அவருடைய உறவினரும் குருவுமான திருமலை நம்பி எதிரில் வர, அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார்.

""சுவாமி, அடியேனை வரவேற்கத் தாங்களே வரவேண்டுமா? யாராவது ஒரு சிறியவரை அனுப்பி வைத்தால் போதாதா?'' என்று ராமானுஜர் கேட்டார். அதற்கு நம்பி, ""ராமானுஜா, நானும் அப்படித்தான் நினைத்தேன். வீதியில் வந்து நான்கு திசைகளிலும் பார்த்தேன். அங்கு என்னைவிடச் சிறியவன் யாரும் இல்லை. அனைவரும் என்னைவிட உயர்ந்தவர்களாகவே இருந்தனர். அதனால்தான் நானே வந்தேன்'' என்றார். நம்பியின் சொற்களைக் கேட்ட ராமானுஜர், ""சுவாமி, தேவரீரைவிட உயர்ந்தவர் வேங்கடவன் ஒருவரைத் தவிர வேறு யாருமில்லை'' என்று சொல்லி உள்ளம் உருகினார்.

வைணவ சமயத்தின் முக்கியமான கொள்கைகளில் ஒன்று பிறர் படும் துயரத்தை தனதெனக் கொள்ளுதல்; அவர்களின் துயரைத் தீர்த்தல்.

திருக்கோட்டியூர் நம்பிகளிடம் கற்றுக்கொண்ட எட்டெழுத்து மந்திரமாகிய நாராயண மந்திரத்தை- தனக்கு நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை; ஊரில் உள்ளவர்கள் எல்லாம் துயர்தீர்ந்து மோட்சமடைய வேண்டுமென்ற கருணையினால், தம் குருநாதருக்குக் கொடுத்த வாக்குறுதியையும் மீறி திருக்கோட்டியூர் கோபுரத்தின் மீதேறி நின்று அனைவருக்கும் உபதேசித்தவர் ராமானுஜர். பிறர் துன்பத்தைப் போக்கி நன்மை செய்வதற்காக தனக்கு எத்தகைய துன்பம் வந்தாலும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்பவனே உண்மையான வைணவன் என்ற கொள்கையின் சின்னமாக விளங்கியவர் ராமானுஜர்.

வைணவத்தின் மற்றொரு கொள்கை பணிவுடைமை. நிறைகுடம் தளும்பாது என்ற பழமொழிக்கேற்ப, பக்தியின் எல்லை கண்ட பரமபக்தர்கள் தம்மை "நான்' என்று சொல்ல மாட்டார்கள். "அடியேன்' என்றே கூறுவார்கள். மற்றொரு அடியாரைப் பற்றிக் குறிப்பிடும் போது அவர் பக்தியிலும் கல்வியிலும் தம்மைவிடக் குறைந்தவராக இருந்தாலும், அவரை "தேவரீர்' என்றே கூறுவார்கள். அக்கொள்கைக்கேற்பவே, ராமானுஜரும் திருமலை நம்பியும் சந்தித்துக்கொண்டது வைணவத்தின் இரு பெருங்கொள்கைகள் சங்கமமானது போன்ற தெய்வீகமான காட்சியாகும். இந்நிகழ்ச்சி திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தில், "யான் சிறியன் என்றேனோ திருமலை நம்பி போலே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமலை நம்பி, ""ராமானுஜா, நீயும் உன் சீடர்களும் பசியுடன் வந்திருக்கிறீர்கள். கோனேரியில் நீராடி வேங்கடவனை வணங்கிவிட்டு திருவமுது செய்யலாம்'' என்று கூறினார். இதைக் கேட்ட ராமானுஜர், ""சுவாமி, தாங்கள் மறந்துவிட்டீர்களா? தேவரீர் அனந்தாழ்வாரிடம் அறுசுவையான உணவைக் கொடுத்தனுப்பி இருந்தீர்களே? 

அந்த தேவாமிர்தத்தைப் போன்ற திருவமுதை உண்டுவிட்டுத்தானே வருகிறோம்'' என்றார்.

ராமானுஜர் கூறியதைக் கேட்ட திருமலை நம்பி ஆச்சரியத்துடன், ""ராமானுஜா, நான் அனந்தாழ்வானிடம் உணவு கொடுத்தனுப்பவில்லையே'' என்று கூறி அனந்தாழ்வாரை அழைத்தார். அனந்தாழ்வாரோ, ""இப்பொழுதுதானே தங்களைப் பார்க்கிறேன்'' என்றார். 

இதுகேட்டு ராமானுஜர் அதிசயித்தார்.

உடனே திருமலை நம்பி, ""ராமானுஜா, தன் குழந்தை பசியோடிருப்பதை எந்தத் தாயாவது பொறுத்துக்கொள்வாளா? அதுபோல் நீயும் உன் சீடர்களும் பசியோடிருப்பதை அறிந்த திருவேங்கடமுடையான் அனந்தாழ்வார் வடிவத்தில் வந்து உங்கள் அனைவருக்கும் தாமே உணவு பரிமாறியிருக்கிறார். ராமானுஜா, நீ வைணவத்தை வாழ்விக்கப் பிறந்தவன். வைணவத்துக்கு உடையவன்; பக்தர்களுக்கும் உடையவன். உன் பக்தியே பக்தி, உன் பாக்கியமே பாக்கியம்!'' என்று அன்புடன் கூறினார். ராமானுஜரின் மற்றொரு திருநாமம் "உடையவர்' என்பதாகும்.

ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார், திருமலையில் தம் குருநாதர் பெயரில் "ராமானுஜர் நந்தவனம்' என்ற அழகான பூந்தோட்டத்தை அமைத்து ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துகொண்டிருந்தார் என்பதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தோம். ஒருநாள் அவர் பூப்பறித்துக் கொண்டிருந்தபோது ஒரு சர்ப்பம் அவரைத் தீண்டிவிட்டு ஓடிவிட்டது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் பூப்பறித்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த அடியார்கள், ""சுவாமி, உங்களை சர்ப்பம் தீண்டிவிட்டது. சர்ப்பத்தின் விஷம் தலைக்கேறும்முன் வைத்தியம் செய்துவிட்டு பிறகு பூப்பறிக்கலாம்'' என்றனர்.

அதற்கு அனந்தாழ்வார், ""அன்பர்களே! அடியேன் வலிமையுடையவனாக இருந்தால் வழக்கம்போல இந்த சுவாமி புஷ்கரணியில் நீராடி ஏழுமலையானை சேவிக்கப் போகிறேன். சர்ப்பம் வலிமையுடையதாக இருந்தால் வைகுண்டத்தில் உள்ள விரஜா நதியில் நீராடி பரமபதநாதனுக்கு சேவை செய்யப் போகிறேன். அடியார்கள் மரண பயம் அடைவதில்லை'' என்றார். திருமலையான் அவரை தன்வசமே வைத்துக்கொண்டான்.

"வேம்' என்றால் "சுட்டெரிக்கும் தீ' என்பது பொருள்; வேங்கடம் என்பது நம் பாவ வினைகளைச் சுட்டெரித்துப் புனிதர்களாக்கும் தலம்.


வினைகள்  நீங்கி வீடுபேறு அடையவிரும்புவோர் உடையவரையோ, எம்பெருமானாகிய திருமலையப்பனையோ சரணடைந்தால், "தனதாள் அடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் தரும் பிரானல்லவோ' அவன்!

நன்றி - ஓம் சரவணபவ 2013

ராமபிரான் தேடிய வசிப்பிடம் - பி.ராஜலட்சுமி

"ராம ராம' எனும் இனிய சொல்லை வலிமையாகக் கூவிக்கொண்டு, கவிதையாகிற கிளையில் ஏறி அமர்ந்திருக்கும் குயிலைப் போன்றவர் வால்மீகி. ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி முனிவர் என்பது யாவரும் அறிந்ததே. நாம் எல்லாரும் உன்னத நிலையை அடையவேண்டும் என்ற உயர்ந்த உள்ளத்துடன் அற்புதமான இந்த இதிகாசத்தை இயற்றித்தந்த வால்மீகி முனிவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இதற்கும் மேலே ஸ்ரீவால்மீகி முனிவர், தாரக பிரும்மமாகிய ஸ்ரீராமன் ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிரந்தரமாக வாழவேண்டும் என்று பதித்து வைத்துள்ளார். இப்படி ஒரு அரிய பெரிய சாதனையை வால்மீகி முனிவர் நமக்கு அனுக்கிரகம் செய்துள்ளார் என்பதற்காகவே அவருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஸ்ரீமத் அத்யாத்ம ராமாயணத்தில், ஸ்ரீராமபிரானுக்கும் வால்மீகி முனிவருக்குமிடையே நடந்த ஒரு உரையாடல் நெஞ்சை உருக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

ஸ்ரீராமர் வனவாசம் தொடங்கும் காலம். நிஷாத அதிபதியான வேடன் குகனுக்கு கங்கைக்கரையில் அனுக்கிரகம் செய்துவிட்டு, பரத்வாஜருடைய ஆசிரமம் சென்று அங்கு ஒரு இரவைக் கழித்துவிட்டு மறுநாள் அருகிலுள்ள வால்மீகி முனிவரின் ஆசிரமத்திற்குப் போகிறார் ராமபிரான்.

ராமன், சீதா பிராட்டி, இளையபெருமானாகிய லட்சுமணன் ஆகிய மூவரையும் பார்த்து வால்மீகி முனிவருக்கு பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. 

அவர்களை அன்புடன் வரவேற்று உபசரித்து, ராமன் திருவாய் மலர்ந்தருள வேண்டுமென்று காத்துக்கொண்டிருக்கிறார்.

ராமன் முனிவரை வணங்கி, "முனிபுங்கவரே, நான் இதுநாள் வரை அரண்மனையிலேயே கழித்துவிட்டேன். தந்தை சொல் காக்கும் பொருட்டு வனவாசம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனக்கு இந்த வனப்பிரதேசம் அவ்வளவு பழக்கமில்லை. தாங்கள் மகாதபஸ்வி. தங்களுக்குத் தெரியாதது எதுவுமில்லை. நாங்கள் மூவரும் வாழ்க்கை நடத்துவதற்கு, ஒரு வாசஸ்தானத்தை தாங்கள்தான் கூறியருள வேண்டும்'' என்றான்.

வால்மீகி மகாஞானியல்லவா? ராமன் என்ற நாமத்துடன் தன் முன்னே பிரசன்னமாகியிருப்பது எங்கும் நிறைந்த பரிபூரண பரப்பிரும்மம் என்று அறியாதவரா?

சீதாபிராட்டி யோகமாயை என்றும்; இளைய பெருமான் ஆதிசேஷன் என்றும் அறியாதவரா?

எல்லா அறிவுக்கும் மூல அறிவான பரப்பிரும்மம், தான் வசிப்பதற்கு ஏற்ற இடம் எதுவென்று தன்னிடம் கேட்கிறாரே! பகவான் இல்லாத இடம் ஒன்று உண்டா? என்றெண்ணி வால்மீகி முனிவர் சிரித்தார். 

"என் அப்பனே ராமா! நல்ல கேள்வி கேட்டாய். நீங்கள் வசிப்பதற்கு ஒரு இடத்தை நான் கூறவேண்டுமா? இது என்ன விளையாட்டு. சகல லோகங்களுக்கும் நீயல்லவா நிவாசஸ்தானம். சகல பிராணிகளும் உன்னை அடையவேண்டும் என்றல்லவா விரும்புகிறார்கள்.

உனக்கு அடைக்கலம் புகும்படியான பிரதேசத்தை நான் கூறவேண்டும் என்று கேட்கி றாயா? அதிலும் ஒரு விசேஷம் இருக்கத்தான் செய்கிறது. எல்லாருடைய உள்ளங்களும், சகல பூதங்களும் நீ வாசம் செய்யும் சாதாரணமான ஸ்தானங்கள்தான். பிராட்டியுடன் நீ வாசம் செய்வதற்கு இந்த சாதாரணமான ஸ்தானங்கள் போதாது. நிரந்தரமாக வாசம் செய்ய விசேஷமான ஸ்தானம் வேண்டுமென்று கேட்கி றாய் போலும்.

தத் வக்ஷ்யாமி ரகுஸ்ரேஷ்ட
யத்தே நியதமந்திரம்

தாங்கள் நிரந்தர வாசம் செய்வதற்கு விசேஷமான கோவில்களை நான் தீர்மானம் செய்து வைத்திருக்கிறேன். அவற்றைக் கூறுகிறேன்; கேளுங்கள்'' என்று சொன்ன வால்மீகி, பெருமாள் நிரந்தரமாக வாசம் செய்யும் அதி அற்புதமான ஸ்தலங்களைப் பற்றிக் கூறுகிறார். அவர் கூறிய அமுத மொழிகளைக் கேட்போமா?

"ராகத்துவேஷங்கள் அற்றவர்களாகவும்; நட்பு, பகை இல்லாமல் யாரையும் சமமாகப் பார்ப்பவர்களாயும்; எந்த உயிரிடத்தும் பகைமை இல்லாமல் அன்பு செலுத்திக் கொண்டு எப்பொழுதும் உன்னையே பஜனை செய்பவர்களாயும் உள்ளவர்களின் இதயத்தை ஒரு ஒப்பற்ற க்ஷேத்திரமாக தாங்கள் அமைத்துக்கொள்ள வேண்டும். 

எவன் ஒருவன் எப்போதும் உனது மந்திரத்தை ஜெபம் செய்த வண்ணமாக- உன்னை சரணாகதி அடைந்தவனாய்; விருப்பு- வெறுப்பு, சுகம்- துக்கம், குளிர்ச்சி- வெப்பம் என்ற இருமை மயக்கம் நீங்கியவனாய் பற்றற்று வாழ்ந்து வருகின்றானோ, அவனுடைய இதயப் பிரதேசம் தாங்கள் புனிதமான ஆலயம் அமைத்துக்கொள்ள ஏற்ற பிரதேசமாகும்.

அகம்பாவத்தை உதறிவிட்டு, பரமசாந்த சுபாவத்துடன், ராகத்துவேஷங்கள் அற்றவனாய், மண், பொன் ஆகியவற்றை சமமாகக் கருதுகிற வனாய், யார் இருக்கிறானோ, அவனது உள்ளம் தாங்கள் தேவாலயம் அமைத்துக்கொள்ள பரமபவித்ரமான பிரதேசமாகும்.

தனது மனதையும் புத்தியையும் உனக்கு அர்ப்பணம் செய்தவனாய், என்றும் திருப்தியுள்ளவனாய் எல்லா செயல்களையும் ஈசுவரார்ப்பணமாகச் செய்கிறவனாய் யார் இருக்கிறானோ, அவனது நெஞ்சில் ஓர் ஆலயத்தை தாங்கள் சுபமாக அமைத்துக்கொள்ளலாமே.

யாவும் மாயை என்று திட நம்பிக்கை கொண்டு, எவன் ஒருவன் துன்பத்தில் கலக்கமடையாமலும், இன்பத்தில் மயக்கமடையாமலும் இருக்கின் றானோ, அவனுடைய பரிசுத்தமான மனப் பிரதேசத்தில் தாங்கள் தங்கள் வாசஸ்தானத்தை பவித்ரமுள்ளதாக அமைத்துக்கொள்ளுங்கள்'' என்று அற்புதமாக பகவானிடம் கேட்டுக் கொள்கிறார்.

வால்மீகி முனியின் வாய்மொழி மூலம், பகவான் எங்கெல்லாம் நிரந்தரமாக வாசம் செய்வார் என்று அறிந்து கொண்டு, பகவானுக்கு நாம் நெஞ்சில் ஆலயம் அமைக்கலாமே.

"மனத்துள்ளான் வேங்கடத்தான்' என்று பூதத்தாழ்வார் பாடுகிறார். ஸர்வ வியாபியாக எங்கும் பரந்து நிறைந்திருப்பவர் நம் உள்ளத்திலேயும் நுழைந்து அமர்ந்திருக்கிறார் என்று அனுபவிப்பதைப் பார்க்கிறோம்.

இதையே திருமூலர் "உள்ளம் பெருங்கோவில், ஊனுடம்பு ஆலயம்' என்று சொல்லிவிட்டு, வேடிக்கையாக இன்னொரு செய்தியையும் சொல்கிறார். இறைவன் ஏன் மனதிற்குள் புகுந்து தனது வாசத்தை ஏற்படுத்திக் கொண்டார்? பகவானின் செயல்கள் அனைத்திற்கும் ஏதாவது ஒரு தத்துவம் இருக்க வேண்டுமே? எனவே அவர் உள்ளே புகுந்துகொண்டதற்கு காரணம் என்னவென்றால் மனிதனுக்கு ஆசை மிகவும் அதிகம். ஆசை என்பது வளர்ந்து கொண்டே இருக்கும்.  ஆசை என்ற பசி அடங்குவதே இல்லை. வள்ளலாகிய இறைவனைக் கண்டால் கறந்து எடுத்துவிடுவார்கள். எனவே எல்லாம் அளிக்கும் அந்த இறைவன் கொள்ளையடிக்கும் இந்த கள்ளப் பெருமக்களைக் கண்டு அஞ்சி அந்த மனிதர்களின் மனத்திலேயே ஓடி ஒளிந்துவிடுகிறார் 
என்கிறார்.

முனிவர்களும், மகான்களும் பரப்பிரும்மத்தை எப்படி எல்லாம் அனுபவித்து, நம்மைப் போன்ற சாதாரணமானவர்களும் இறையின்பத்தை அனுபவித்து ஆனந்தம் அடையவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு வழிகாட்டுகிறார்கள். ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்வார்- "தெய்வீகத் தன்மை பெற்ற முனிவர்களும், மகான்களும் பகவானின் நெருங்கிய உறவினர்கள். நம்மைப்போல சாதாரண மக்கள் ஈசுவரனுடைய தூரத்து உறவினர்கள். பகவத் தத்துவத்தை அறிந்துகொள்ளவும், பகவானுடைய அனுக்கிரகத்தை அடையவும் நாம் இறைவனின் நெருங்கிய உறவினர்களாகிய மகான்களை நாடவேண்டும்.'

பரப்பிரும்மமாகிய ஸ்ரீராமபிரானின்  நெருங்கிய உறவினரான வால்மீகி முனியின் அற்புதமான விவரணையைக் கேட்டு, நாமும் நம் மனதில் இறைவனை இருத்த முயற்சிக்க வேண்டும். இதயத்தில் வைத்து வழிபட வேண்டும்.


நன்றி - ஓம் சரவணபவ 2013

வெள்ளி, 20 ஜூன், 2014

மார்கழி மகிமையும் கோதை நோன்பும் - மும்பை ராமகிருஷ்ணன்

கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதையில் கூறுவார் : மாஸானாம் மார்கசீர்ஷோஹம் - மாதங்களில் மார்கழி என்று. ஏன்? அவர் பிறந்த ஆவணி மாதத்தைக் கூறவில்லை. அவரது பிரியமான ராதை பிறந்த புரட்டாசியைக் கூறவில்லை. திருப்பதி வெங்கடாசலபதி என்று பிரசித்த கோவிந்தனின் முக்கிய திருவோணம் – புரட்டாசியைக் கூறவில்லை. ராமர் பிறந்த சித்திரையைக் கூறவில்லை. ஏன்?
நமது நாட்டில் கோயில்களைப் பார்த்தால், பொதுவாகச் சிறிது நேரம் கழித்துத்தான் திறக்கும். ஆனால் பெருமாள் கோயிலையோ, சிவன் கோயிலையோ, கணபதி, முருகன், தேவி, சாஸ்தா என்ற பிரத்யேகக் கோயில்களையோ எதைப் பார்த்தாலும், விடியற்காலையிலேயே திறந்து அபிஷேக பூஜை ஆராதனைகள் நடக்கும் மாதம் மார்கழி.

ஆஸ்திக மக்களும் பரவலாக மார்கழி மாதம் விடியற்காலை எழுந்து நீராடி ஆன்மிக வழிபாட்டில் ஈடுபடுவர். தொலைக்காட்சியிலோ, வானொலியிலோ, திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி என்று துதிகள் கேட்டு, துதி செய்து மகிழ்வர். காரணம் என்ன?

பிரதோஷக் காலத்தில் மாலைவேளையில் சிவனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறோம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். நமது மார்கழி மாதமே, தேவர்களின் விடியற்காலை. படிக்கும் சிறுவர்களிடம் சொல்வதில்லையா – விடியற்காலை எழுந்து படி, மனதில் நன்கு பதியும், புரியும், மனது தெளிவாக இருக்கும் என்று.

நமது விடியற்காலையும் தேவர்களின் விடியற்காலையும் சேர்வது மார்கழி மாதமே! சிவராத்திரி, நவராத்திரி, பௌர்ணமி என்றெல்லாம் இரவுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் துதி, பூசைகள் செய்வதுடன், மார்கழி மாத விடியற்காலம், தேவ விடியற்காலை சேர்ந்த நேரம், Sound Theory-இல் Resonance என்று சொல்வார்கள். அப்போது ஆன்மிக அதிர்வுகள் (Spritual Vibrations) உன்னதமாகும். மிகுந்த பலனைத் தரும்.

இராணுவச் சிப்பாய்கள் லெப்ட் – ரைட் என்று ஒருவிதமான அதிர்வுகளுடன் நடப்பார்கள். ஏதேனும் பாலம் வந்தால், அவர்கள் சாதாரணமாகத்தான் நடக்க வேண்டும். பாலத்தில் லெப்ட்-ரைட் போட்டால், பாலத்தின் அதிர்வுகளும் சேர்ந்து (Resonance) பாலமே உடைந்து போகலாம்.

ஆன்மிக அதிர்வுகள் ஒன்றி இணையும் மாதம் மார்கழி. ஆகவே மாதங்களில் உன்னதமானது மார்கழி.
ஏகாதசி மகாவிஷ்ணுவை வணங்கிட உகந்த நாள். சிவனுக்குப் பிரதோஷம் சிறந்தது. தேவி உபாசகர்களுக்குப் பௌர்ணமி உகந்தது. நடராஜ அபிஷேகம் ஆண்டுக்கு 6 நாட்கள் நடைபெறுகிறது.

என்றாலும் மார்கழி மாத ஏகாதசி மகா உன்னத ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி என்று எல்லாப் பெருமாள் கோயில்களிலும் விடியற்காலையில் தரிசனமாக வெளியே வருதலும், மார்கழி மாதத் திருவாதிரை நட்சத்திரப் பௌர்ணமியில் நடராஜருக்கு அபிஷேக ஆராதனைகளுடன் விடியற்காலை வெளியே உலவி வருதலும் மிகமிக விசேஷமானது.

தொண்டரடிப் பொடியாழ்வார் மகாவிஷ்ணுவுக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடினார். ஆண்டாள் வில்லிப்புத்தூர் ரங்கனைக் குறித்துத் திருப்பாவை பாடினாள். மாணிக்கவாசகர் திருப்பெருந்துறைச் சிவனைக் குறித்துத் திருப்பள்ளி எழுச்சி பாடினார். அவரே திருவண்ணாமலைச் சிவனைக் குறித்து திருவெம்பாவை பாடி நெகிழ்ந்தார்.

இவற்றைப் பாடி ஆன்மிகப் பக்தர்கள் மனம் நெகிழ்கின்றனர். மார்கழியில் திருவில்லிப்புத்தூரில் துளசிமாடத்தின் அடியில் பூமியில் கோதை உதித்தாள். அரங்கனுக்கு மலர்க் கைங்கரியம் செய்யும் பெரியாழ்வார் கோதையைக் கண்டெடுத்து வளர்த்தார். நாரதர் கூற, ருக்மணி தேவி துவராகைக் கண்ணனே தன் கணவன் என்று மனதில் ஒன்றினாள். கண்ணனே அவளது ஊருக்கு வந்து அவளை மணந்து மகிழ்வித்தார்.


அதே நாரதர் கூற, கந்தனே வேடனாக, கிழவனாக எனப் பல லீலைகள் புரிந்து வள்ளிதேவியை மணம் புரிந்தார்.

பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுத்த மாலையைக் கோதை தான் அணிந்து பெருமாளுக்குத் தான் உகந்த மனைவியா என்று அழகு பார்த்தாளாம். ஒரு நாள் இதனைக் கண்டுவிட்ட பெரியாழ்வார் அம்மாலையை, மாசுபட்டது என்று அணிவிக்கவில்லையாம். அரங்கனோ, ஆண்டாள் அணிந்து அழகு பார்த்த மாலைதான் தனக்கு வேண்டுமென்றார். அவ்வாறே நடந்திட, கோதை விடியற்காலை மற்ற தோழிகளையும் எழுப்பி ஊர்வலம் வந்து திருப்பாவையைப் பாடினாள்.

வாரணம் ஆயிரம் என்று அரங்கனுடன் தான் மணம் புரிந்ததாகக் கனாக் கண்டேன் தோழீ நான் என்று பாடினாள். மகாவிஷ்ணுவுக்குப் பல்லாண்டு பாடினாள். பெரியாழ்வார் திகைத்தார். அரங்கனோ, கோதையை மணமகளாக அலங்கரித்துத் திருவரங்கக் கோயிலுக்கு அழைத்து வாரும் என்க, அவரும் அவ்வாறே செய்ய, மணமாலையுடன் திருவரங்கக் கருவறைக்குள் சென்ற ஆண்டாள், அரங்கனுள் மறைந்தாள். என்னே அதிசயம்!

திருவெம்பாவை, திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் நடராஜருள் மறைந்தது போல், மீராபாய் துவாரகாதீசனுள் ஒன்றியதுபோல் ஆண்டாள் அரங்கனுள் மறைந்தாள். பக்தனின் ஆழ்ந்த பக்தி பரமனுடன் இணைத்திட துவைதம் (ஜீவாத்மா – பரமாத்மா என்கிற இரண்டு) அத்வைதமாக – ஒன்றாக ஒன்றிவிடுகிறது. அதுவே மார்கழி மாதக் கோதை நோன்புத் தத்துவம்.

நாமெல்லாம் – ஆணோ, பெண்ணோ – யாவரும் பெண்தான். ஆண்டவன்தான் ஆண்! ஜீவன் பரமனுடன் இணைவதையே நாம் முக்தி, கல்யாணம், அனுபூதி நிலை என்கிறோம். மலர்சூடி, பாமாலைப் பாடி ஆண்டாள் அரங்கனுடன் ஒன்றினாள். திருப்பாவை மகிமை அத்தகையதல்லவா!

ஸ்ரீதேவி, பூதேவி அர்ச்சாவதாரமாக, கருவறையிலோ, பஞ்சலோக விக்கிரகமாகவோ இருக்கலாம். தனியே மகாலட்சுமி – ஸ்ரீதேவியாக அமர்ந்த கோலத்தில் இருக்கலாம். ஆனால், தனிக் கருவறையில் பூதேவியைக் காண்பது அரிது. நின்று கொண்டிருக்கும் ஆண்டாளைக் காணலாம். அத்தகைய மகா உன்னத நிலையைப் பெற்றவள் கோதை என்னும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள். தனது பக்தியில் ஆண்டவனையே தனதாக்கியதால் அவள், ஆண்டாள். ஆண்டவனை, பெருமாளை ஆள வரவில்லை. மணம்புரிய ஒன்று சேர்ந்திட விரும்பினாள். ஆகவே அவள் ஆண்டாள்.


ஆண்டாள் கூறும் சில திருப்பாவை மகிமைகளை ரசிப்போம்.

நாராயணனே நமக்கே பறை தருவான் (பறை – வாரி வழங்கும் அருள்).

நோன்பு எவ்வாறு செய்ய வேண்டும்? பரமன் அடிபாடி நெய்யுண்ணோம் பாலுண்ணோம், நாட்காலே நீராடி, மலரிட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், …. உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி – தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து – வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

தாமோதரனை தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித் தொழுது வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

நின்ற நெடுமாலே உன்னை அருத்தித்து வந்தோம், பறை தருதியாகில் திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி, வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே யாவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம், மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


ஆக சரணாகதித்துவ ஆண்டாளின் திருப்பாவையைப் பாடிட நாம் என்றும், எங்கும், ஆண்டவன் திருவருள் பெற்று இன்பமாய் வாழ்வோம் என்பதில் ஐயமுண்டோ?!

ஆழ்வாரைப் போற்றிய ஆழ்வார் - எஸ். ஸ்ரீதுரை

இந்திய ஆன்மிக மரபில் ஆண்டவனுக்குச் சமமான மதிப்பு ஆச்சாரியன் எனப்படும் குருவிற்கும் வழங்கப்படுகிறது.

வைணவ அடியார்களான ஆழ்வார்கள் பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் குண விசேடங்களில் ஆழ்ந்து தமிழ்ப் பாசுரங்களைப் பாடி வழிபட்டமையால் ஆழ்வார்கள் என்று போற்றப்பட்டனர்.
அந்தப் பன்னிரண்டு ஆழ்வார்களுள் மதுரகவி ஆழ்வார் என்பவர் மட்டும் ஆண்டவனைப் பாடாமல் தம் ஆச்சாரியரான நம்மாழ்வாரைப் போற்றிக் கொண்டாடி ஒரேயொரு பதிகம் பாடித் தாமும் ஆழ்வாராகவே ஆகிவிட்டார்.

அவரைப் பற்றிக் கொஞ்சம் அறிந்து கொள்வோம்.

தென்தமிழ் நாட்டில் ஸ்ரீவைகுண்டத்தின் அருகே விளங்கும் திருத்தலம் ஆழ்வார் திருநகரி ஆகும். ஆழ்வார் பாடல் பெற்றதால் இது திவ்வியதேசமும் ஆகும். இவ்வூருக்குள் அவதரித்து அசையாப் பிண்டமாய் இருந்து பரம்பொருளாம் ஸ்ரீமந் நாராயணனின் நினைவிலேயே நிறைந்திருந்தவரே நம்மாழ்வார். பிறந்தவுடனே இப்பிறவி பற்றிய தொடர்பையும் சிந்தனையையும் கொடுத்துப் பிறப்பு- இறப்புச் சுழலில் நம்மைத் தள்ளுவது சடம் என்னும் வாயு. அந்த வாயுவைக் கோபித்து விலக்கியவர் நம்மாழ்வார். அதனால் சடகோபர் என்றும் போற்றப்படுகிறார்.

இந்த நம்மாழ்வாருக்குச் சீடராகி, இவரது புகழை மட்டுமே பாடித் தாமும் ஓர் ஆழ்வாராக ஏற்றம் பெற்றவரே மதுரகவியாழ்வார் ஆவார். மதுரகவியாழ்வார் காலத்தால் நம்மாழ்வாருக்கு மூத்தவர். ஆழ்வார் திருநகரி அருகில் உள்ள திருக்கோளூரில் அவதரித்தவர்.

வைணவர்களின் விக்கினம் போக்கும் தெய்வம் விஷ்வக்சேனர் எனப்படுகிறார். பெருமாள் கோயில் பிரம்மோற்சவங்களின் போது வெவ்வேறு வாகனங்களில் எம்பெருமான் வீதிவலம் வருவதற்கு முன்பாக விஷ்வக்சேனர் திருவுருவம் வீதியுலா எடுத்துச் செல்லப்படுவது வழக்கம்.

விஷ்வக்சேனர், சேனை முதலியார் என்று அழகுத்தமிழில் அழைக்கப்படுகிறார். எம்பெருமான் சேனைகளின் தலைவராகிய விஷ்வக்சேனரே பூவுலகில் நம்மாழ்வாராக அவதரித்தார். நம்மாழ்வார் ஓர் அசைவுமின்றி நீண்டகாலம் இறைச்சிந்தனையிலேயே லயித்திருந்திட இடமளித்த புளியமரம் ஆதிசேசனின் அவதாரமாகும்.

ஆழ்வார் திருநகரியில் இன்று காட்சிதரும் இம்மரம் திருப்புளி ஆழ்வார் என்று கொண்டாடப்பட்டு வருகிறது. எம்பெருமானின் கணங்களில் ஒருவராக விளங்கிய குமுதர் என்பவரே மதுரகவியாழ்வாராக அவதரித்தார்.

அந்தணர் குலத்தில் தோன்றிய மதுரகவியாழ்வார், வேதசாஸ்திரங்களைக் கற்று இறைபக்தி மேலிட்ட நிலையில் ஸ்ரீகிருஷ்ண பகவானை நேரில் தரிசிக்க விரும்பி வடதேச யாத்திரை சென்றபோது, தேற்குத் திசையில் ஒரு ஜோதிப்பிழம்பு தென்பட்டது. பல நாட்கள் அவ்வாறு தென்பட்டதால், தமது வடதேச யாத்திரையைக் கைவிட்டு, அச்சோதியை அருகில் சென்று பார்க்கும் ஆவலில் மீண்டும் தென்திசையில் நடக்கத் தொடங்கினார்.

அச்சோதியானது ஆழ்வார் திருநகரியில் மறைந்து விடவும், அவ்வூரில் ஏதேனும் விஷயம் உள்ளதா என்று அவ்வூராரிடம் கேட்டார். அவ்வூர்த் திருக்கோயிலின்கண் உள்ள புளியமரத்துப் பொந்தில் யோக நிலையில் வீற்றிருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி அறிந்தார். ஆர்வமுடன் சென்று நம்மாழ்வாரை வணங்கினார்.

எதுவும் பேசாதிருந்த நம்மாழ்வாரின் அருகில் சென்று, செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்? என்று வினவ, யோக நிலையிலிருந்த நம்மாழ்வார் அது அத்தைத் தின்று அங்கே கிடக்கும் என்று பதில் கூறிவிட்டு மீண்டும் யோக நிலைக்குச் சென்று விட்டாராம்.

இக்கேள்வி பதில் சாரம் இது:

இவ்வுலகில் பிறக்கும் ஜீவாத்மாக்கள் அனுபவிப்பது என்ன? என்பது மதுரகவியாழ்வாரின் கேள்வி.
ஜீவாத்மாக்கள் இப்பிரபஞ்சத்திலுள்ள பொருள்களின் போகத்திலேயே திளைத்து இந்தச் சம்சார வாழ்வில் உழன்று கொண்டிருக்கும் என்பதே நம்மாழ்வாரின் பதில்.

மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையாக விளக்கிக் கூறிய நம்மாழ்வாரையே அதுமுதல் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்டார் மதுரகவியாழ்வார்.

நமது ஆன்மிக மரபில் சாதி வித்தியாசங்களுக்குச் சற்றும் இடம் இல்லை என்பதற்கு நம்மாழ்வார்-  மதுரகவியாழ்வார் ஆகிய இருவருமே எடுத்துக் காட்டுகள் ஆவார்கள்.

குருவாகிய நம்மாழ்வார் வேளாள இனத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவரையே தெய்வமாகப் போற்றிய மதுரகவியாழ்வார் அந்தண குலத்தைச் சேர்ந்தவர் என்பதும் நம் மனத்தில் குறித்துக் கொள்ள வேண்டியதாகும்.

நம்மாழ்வாரைத் தம்முடைய குருவாக ஏற்றுக் கொண்ட மதுரகவியாழ்வார், தம் குருநாதர் யோக நிலையிலிருந்து மீண்ட நேரங்களில் எல்லாம் உதிர்க்கும் திருவாய்மொழிப் பாசுரங்களைப் பட்டோலையிட்டுப் பாதுகாத்து வந்தார்.

மேலும், தம் குருவாகிய நம்மாழ்வாரைப் போற்றி, கண்ணி நுண் சிறுத்தாம்பினால்… என்று தொடங்கும் பதிகத்தைப் பாடித் தமது குருபக்தியை வெளிப்படுத்தினார். அப்பதிகத்தின் இரண்டாவது பாசுரத்தில்-

தேவும் மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே! என்று கூறியிருப்பதன் மூலம், தமக்கு நம்மாழ்வாரைத் தவிர வேறொரு தெய்வம் கிடையாது என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

இவ்வாறு தெய்வபக்தியின் எல்லை நிலமே குருபக்தி என்று வைணவம் கூறுவதற்கு எடுத்துக்காட்டாக இவர் விளங்கினார். தமது குருவைப் போற்றி ஒரேயொரு பதிகம் பாடிய மதுரகவியாழ்வாரும் ஆழ்வார்கள் வரிசையில் போற்றப்படுவது நமது இந்திய ஆன்மிக மரபின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாகும்.

மதுரகவியாழ்வார் தமது பதிகத்தின் கடைசிப்பாட்டில் (பலசுருதிப் பாசுரம்) நம்மாழ்வார் பெருமையைப் பேசும் தமது பாடல்களை நம்புகின்ற நல்லோர் வாழும் இடமே வைகுந்தம் ஆகும் என்றும் கூறுகிறார்.

… … தென்குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே!

இத்தனைப் பெரும் சிறப்புகளுக்கு இருப்பிடமான மதுரகவியாழ்வாரின் கண்ணி நுண் சிறுத்தாம்பினால் பதிகம் நாலாயிரம் திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களையும் நமக்குக் கொடுத்தருளிய வரலாறு இன்னும் அற்புதமானதாகும்.

ஆழ்வார்கள் காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் தோன்றிய முதல் வைணவ ஆச்சாரியாரான நாதமுனிகள் (ஸ்ரீ ராமானுஜருக்கு முற்பட்டவர்) ஒரு சமயம் கும்பகோணம் நகரில் அமைந்த ஸ்ரீ ஆராவமுதப் பெருமாள் திருக்கோயிலில் தரிசனம் செய்தபோது பக்தர்கள் சிலர் நம்மாழ்வார் திருவாய்மொழிப்பதிகம் ஒன்றை ஓதியதைக் கேட்டார். அப்பதிகத்தின் இறுதியில் ஓராயிரத்துள் இப்பத்தும் என்று அமைந்ததைக் கேட்டு, மீதியுள்ள 990 பாசுரங்களை அறிவீரா என்று வினவ, அந்த பக்தர்களோ இந்த ஒரு பதிகத்தை மட்டுமே செவிவழியாக அறிந்து ஓதி வருகிறோம் என்று பதில் கொடுத்தனர்.

நம்மாழ்வாரின் அவதாரத் தலமாகிய ஆழ்வார் திருநகரிக்கே சென்று அறிந்து வர எண்ணி, அங்கு சென்றார் நாதமுனிகள்.

அந்தத்தலத்து வைணவர்களோ, நம்மாழ்வாரின் சீடராகிய மதுரகவியாழ்வார் இயற்றிய கண்ணி நுண் சிறுத்தாம்புப் பதிகத்தின் பெருமையைக் கூற, நாதமுனிகளும் அந்தப் பதிகத்தை இடைவிடாது பன்னீராயிரம் முறை ஓதினார்.

இதனால் மகிழ்ந்து காட்சியளித்த நம்மாழ்வார், தமது திருவாய்மொழிப்பாசுரங்கள் ஆயிரம் மட்டுமின்றி, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்குப் போதிக்க, அவர் மூலமே திவ்வியப் பிரபந்தம் தமிழ் மக்களைச் சென்றடைந்தது.


இவ்வாறு மதுரகவியாழ்வாரின் குருபக்தி, அவரையும் ஆழ்வார் ஆக்கி, நம் அனைவரையும் ஆழ்வார் பாசுரங்களை ஆழ்ந்து அனுபவிக்க வைத்த திறம் பெருமையிலும் பெருமை மிக்கதாகும்.

நன்றி - ஓம் சக்தி

ஞாயிறு, 15 ஜூன், 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 26

உலகின் மூலமுதற்காரணம் ஸ்ரீமந்நாராயணன். கருணையே வடிவான ஸ்ரீதேவி நாச்சியாரோடு சேர்ந்தே எப்போதும் இருப்பவன் அவன். குருபரம்பரை வைபவத்தைப் பற்றிச் சொல்லும்போது, பிரதம ஆச்சார்யனாக இருப்பவன் விஷ்ணு. 

இரண்டாவது ஆச்சார்ய ஸ்தானம் பிராட்டிக்கு, மூன்றாவது விஷ்வக்சேனர், நம்மாழ்வார் இப்படியே குருபரம்பரை தொடர்கிறது. 

லோகமாதாவான லட்சுமி தாயாருக்கு எத்தனையோ சூக்த மந்திரங்கள் இருந்தாலும், சிறப்பாக அவளின் பெயரிலேயே இருப்பது "ஸ்ரீ'சூக்தம். (ஸ்ரீஎன்றால் லட்சுமி) மனதிற்கும், வாக்கிற்கும் எட்டாத அவளின் திருவடிப் பெருமையை யாராலும் வரையறுக்க முடியாது. 

திருமாலின் வலது மார்பிலுள்ள ஸ்ரீவத்சம் என்னும் மருவை, தன் இருப்பிடமாகக் கொண்டு சேவை சாதிப்பவள் அவள். பிராட்டி சம்பந்தம் இருப்பதால் பகவானுக்கு சிறப்பு. பகவானிடம் நித்யமாக குடியிருப்பதால் பிராட்டிக்கு சிறப்பு. இருவரும் ஒருவரால் மற்றொருவருக்கு ஏற்றம் பெறுகிறார்கள். யார் நல்லவன் என்று கேட்டால், வேதஅத்யயனம்(ஓதுபவன்) செய்பவனே நல்லவன். வேத அத்யயனம் செய்பவன் யார் என்று கேட்டால் நல்லவனே வேதம் ஓதுபவன். இதை பிரபந்தத்தில், ""நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்' என்று குறிப்பிடுவர். 

ஸ்ரீரங்கத்தில் பெரிய பிராட்டி வெள்ளிக்கிழமையில் புறப்பாடு என்றால், பெண்கள் கூட்டம் அலை மோதும். தாயாரை சேவிக்க ஆண்கள் கூடினாலும், அதை விட பெண்கள் அதிகமாக வருவதற்குக் காரணம், நம் குலத்திற்கு தலைவியான பிராட்டியை ஆராதிக்க வேண்டும் என்பது தான். அதுபோல, பிராட்டியின் திருவாக்கான ஸ்ரீசூக்த மந்திரத்தை பெண்கள் சொல்லி ஆராதிக்க விரும்பலாம். ஆனால், வேதத்தின் பாதமான இந்த மந்திரத்தை பெண்கள் ஜபிக்க சாஸ்திரம் அனுமதிக்கவில்லை. அதற்குப் பதிலாக, ஸ்ரீசூக்தத்தின் விளக்கமாக பின்னாளில் உண்டான கூரத்தாழ்வானின் ஸ்ரீஸ்தவம், வேதாந்த தேசிகனின் ஸ்ரீஸ்துதி, ஆளவந்தாரின் சதுஸ்லோகி, பராசர பட்டரின் ஸ்ரீகுணரத்ன கோசம் போன்றவற்றை ஜபிக்கலாம். 

ஸ்ரீசூக்தத்திற்கு வியாக்யானம்(உரை) எழுதியவர் நலந்திகழ் நாராயண ஜீயர். இவருக்கு நாராயண முனி என்றும் பெயருண்டு. மந்தமதி படைத்தவர்களும் தெளிவாக புரிந்து கொள்ள நீரோடை போல விளக்கம் எழுதியுள்ளார். 

பராசர பட்டர்களின் சீடர்களில் ஒருவராக இவரைக் கருதுவர். "மாத்ரு தேவோபவ, பித்ரு தேவோபவ, ஆச்சார்ய தேவோபவ, அதிதி தேவோபவ' என்னும் தைத்ரிய உபநிஷத வரிகள்
எல்லோருக்கும் தெரிந்திருக்கும். பெற்ற தாய், தந்தை, ஆசிரியர், விருந்தினர் இந்த நான்கு பேரும் தெய்வத்திற்குச் சமமானவர்கள் என்பது இதன் பொருள். 

மற்றொரு ஆழமான பொருளும் இதற்குண்டு. இந்த உலகத்திற்கு அன்னையான ஜகன்மாதா ஸ்ரீதேவி, உயிர்களைக் காக்கும் தந்தையான திருமால், நமக்கு வழிகாட்டும் ஆச்சாரியார்கள், அதிதியான பாகவத உத்தமர்கள், ஸ்ரீ வைஷ்ணவர்களே நமக்கு தெய்வங்கள். ஆழ்வார்கள் தங்களின் பாசுரங்களின் வாயிலாக தாய், தந்தையான பிராட்டியையும், பெருமாளையும் தெய்வமாகப் போற்றியுள்ளனர். ஆச்சார்யனையே தெய்வமாக கொண்டு வாழ்ந்து காட்டியவர் மதுரகவியாழ்வார். குருவான நம்மாழ்வாரைத் தவிர வேறு யாரையும் அவர் வணங்கவில்லை. பாகவத உத்தமர்களைத் தெய்வமாக வணங்கியவர் திருமங்கைஆழ்வார். அவர் திருக்கடல்மல்லை என்னும் திவ்ய தேசத்தில் தலசயனப் பெருமாளாக வீற்றிருக்கிறார். அங்கு பாடிய பாசுரத்தில் "அடியவர்களே எனக்கு குலதெய்வம்' என்று பாடியுள்ளார். இந்த நான்கில் முதன்மையாக இருப்பவள் பிராட்டியே.

பரீட்சை எழுதும்போது, ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுரை சொல்வார்கள். நன்கு தெரிந்த வினாக்களை முதலில் எழுதிவிட்டு, கஷ்டமானதை பிறகு எழுதும்படி அறிவுறுத்துவர். அதுபோல, பற்றிக் கொள்வதற்கு எளியவளான பிராட்டியை முதலில் சரணடைவது சுலபம். 

பெருமாளுக்கு மூன்று விதமான குற்றங்கள் உண்டு என்பார்கள் பெரியவர்கள். அவர் சர்வ சுதந்திரமானவர். யாரும் எதற்காகவும் எந்த கேள்வியும் அவரிடத்தில் கேட்க முடியாது. இரண்டாவது அவர் உயிர்களுக்கு பாவபுண்ணியம் அடிப்படையில் கர்மவினைப்படி பலன்களைத் தருபவர். அவர் பரமாத்மா, உயிர்கள் ஜீவாத்மா. அதனால், அவர் நாம் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கிறார். ஆனால், பிராட்டி அப்படிப்பட்டவள் அல்ல. பெண்ணாக இருப்பதால் அவள் உயிர்களின் கஷ்டங்களை நன்கு அறிந்தவள். 

பெற்றவர்கள் தான் பிள்ளைகளுக்கு நாமகரணம் (பெயர்) சூட்டுவது வழக்கம். ஆனால், கண்ணனுக்கு மனைவியான ஆண்டாள், அவனுக்கு அழகாக ஒரு நாமம் சூட்டுகிறாள். "பெண்ணின் வருத்தம் அறியாப் பெருமான்' என்பது அந்தப்பெயர். 

பெண்ணாக பிறந்தவர் களுக்கு தான், வாழ்வின் கஷ்ட நஷ்டம் தெரிந்திருக்கும். ராமன், கண்ணன் என எத்தனையோ அவதாரங்களை எடுத்த பெருமாள், பெண்ணாக ஒருமுறை கூட அவதரிக்கவில்லை. சிலர் மோகினி அவதாரம் எடுத்திருக்கிறாரே என நினைக்கலாம். அது அசுரர்களை ஏமாற்ற போட்ட வேஷம் தான். இப்போது இன்னும் ஒரு சந்தேகமும் நமக்கு உண்டாகும். பூலோகத்தில் பெண்ணாகப் பிறக்கும் உயிர்களுக்கு தானே கஷ்டம். ஆண்களாகப் பிறந்தால் கஷ்டமில்லையோ என்ற எண்ணம் உண்டாகும். ஆண், பெண் என நாம் சொல்வதெல்லாம் உருவத்தால் மட்டுமே. வைஷ்ணவ சம்பிராதயத்தில் புருஷோத்தம னான பெருமாள் மட்டுமே ஆண். ஜீவாத்மாவாக இருக்கும் நாமெல்லாம் பெண்கள் தான். பெண் கோஷ்டியான நாம், பெண்ணாக இருக்கும் பிராட்டியைப் பற்றுவதே தர்மம். 

பெருமாள் கர்மாவின் அடிப்படையில் பாவபுண்ணியத்தைப் பார்த்து பலன் தருகிறார். அவருக்கு ஒருகண் சூரியனாகவும், ஒருகண் சந்திரனாகவும் இருக்கிறது. அந்த கண்கள் உஷ்ணமாகவும், குளிர்ச்சியாகவும் இருக்கிறது. ஆனால், பிராட்டிக்கோ இரு கண்களுமே சந்திரனைப் போல குளிர்ச்சி கொண்டவை. அவளிடத்தில் உஷ்ணமே கிடையாது. அவள் நம் பாவ, புண்ணியத்தை ஒருபோதும் பார்ப்பதில்லை. தாயைப் போல பிள்ளைகள் மீது அன்பு கொண்டவள். பரமாத்மாவாக பெருமாள் இருப்பதால், அவர் நமக்கு எளிதில் எட்டுவதில்லை. பிராட்டியோ ஜீவாத்மாவாக நம்முள் ஒருத்தியாக இருந்து கடைத்தேற்றம் செய்கிறாள். அவளின் திருவடிகளை சரணடைவோம். கோலத் திருமார்பில் குடியிருக்கும் அவள் எம்பெருமானையே நமக்கு கொடுத்து மகிழ்வாள்.


முற்றும்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 25

பெருமாளிடம் பூமிபிராட்டி, ""நம் குழந்தைகளாகிய பூலோகத்து உயிர்கள் வாழ்வில் உய்வடைய ஏதாவது வழிகாட்டுங்கள்,'' என்று வேண்டினாள். பெருமாளும் அவளுக்கு உபதேசம் செய்யத் தொடங்கினார்.

மனம், வாக்கு, காயம் என்று மூன்றாலும் கடவுளைச் சிந்திக்க வேண்டும். இதையே எண்ணம், சொல், செயல் என்றும் குறிப்பிடுவர். மனதால் கடவுளின் திருவடிகளைச் சரணாகதியாக பற்றிக் கொள்ள வேண்டும். வாக்கால் அவன் திருநாமத்தை பாட வேண்டும். கையால் பூக்களை அவன் திருவடியில் வைத்து வணங்க வேண்டும். இந்த மூன்றையும் செய்யும் உயிர்கள் சம்சாரக்கடலில் இருந்து கரையேறி மோட்சத்தை அடையலாம் என்று பூமிபிராட்டிக்கு வராகப்பெருமான் உபதேசம் செய்தார். இதனை "சூகரம் சொன்ன சுகர உபாயம்' என்பர்.

சூகரம் என்றால் "பன்றிமுகம் கொண்ட வராகப்பெருமான்'. "சுகரஉபாயம்' என்றால் "எளிமையான வழி'. 

இந்த மூன்றையும் செய்வதற்கு ஏற்றது இளமைக்காலம். "கிளரொளி இளமை கெடுவதன் முன்னம் வளரொளி மாயன் வீற்றிருக்கும் அழகர்கோவிலுக்கு வாருங்கள்' என நம்மை அழைக்கிறார் நம்மாழ்வார்.
திருமாலிருஞ்சோலை மலையில் இளமையில் ஏறி சேவியுங்கள். 

தவறினால் முதுமையில் இரண்டு கால்களால் ஏற முடியாமல் அல்லல்படுவோம். அப்போது மூன்றாவது காலாக தடி (ஊன்றுகோல்) தேவைப்படும். முதுமையில் மரணப்படுக்கையில் ஞாபகம் தப்பிவிடும். என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்று நமக்குத் தெரியாது. கடைசி நிமிஷம் வரை எம்பெருமானின் திருநாமத்தை சொல்ல முடியாது என்பதால், "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் நாராயண நாமம்' என்று பெரியாழ்வார் நமக்கு வழிகாட்டுகிறார்.

""மனம், வாக்கு, காயத்தால் தன்னிடம் சரணடைந்தவர்களை மோட்சத்திற்கு அழைத்துச் சொல்வது என் பொறுப்பு,'' என்று பூமிபிராட்டியிடம் வாக்கு கொடுத்தவர் பூவராகர். ஆனால், அதை செயல்படுத்துவர் திருமோகூரில் வீற்றிருக்கும் காளமேகப்பெருமாள் தான். வழித்துணையாக நமக்கு வந்து கைகொடுப்பவர் என்பதால் அவரை "ஆப்தன்' என்கிறார்கள். இதற்கு "நல்ல நண்பன்' என்று பொருள்.

வராகமூர்த்தி சொன்ன உபதேசத்தை நமக்கு எடுத்துச் சொல்ல பூமிபிராட்டி எண்ணம் கொண்டாள். ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திவ்யதேசத்தில் கோதை ஆண்டாளாக அவதரித்து நமக்காக வாழ்ந்து காட்டினாள். "திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே' என்று அவளின் ஏற்றத்தைப் போற்றுவர். பிரணவம் என்பது அகாரம், உகாரம், மகாரம் என்னும் மூன்று அக்ஷரங்களின் சேர்க்கை. இந்த மூன்றும் ஓரே கருவறையில் இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டுமே. அகாரமாக ரங்கமன்னாரும், உகாரமாக ஆண்டாளும், மகாரமாக கருடாழ்வாரும் ஏக சிம்மாசனத்தில் இங்கு வீற்றிருக்கின்றனர். சீதை, ருக்மணி, பாமா என தேவியர் பூமியில் அவதரித்தபோது, பிறந்த வீடும், புகுந்த வீடும் வேறுவேறாகவே இருந்தது. ஆனால், பூமிபிராட்டியான ஆண்டாளுக்கு பிறந்ததும், புகுந்ததும் பெரியாழ்வாரின் வீடு தான்.

கல்யாணம் முடிந்து, "வீட்டோடு மாப்பிள்ளை' என்ற சம்பிரதாயத்தை உலகில் முதன் முதலில் ஏற்படுத்தி வைத்தவர் பெருமாள் தான். பெரியாழ்வார் வாழ்ந்த இல்லமே இப்போது கோயிலாக விளங்குகிறது. இதற்கு "நாச்சியார் திருமாளிகை' என்று பெயர். பெரிய வீட்டில் இருப்பதைப் போன்ற ஜன்னல்களை ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பார்க்கலாம். 

மாயனை மன்னுவட மதுரை மைந்தனை ....என்று தொடங்கும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரத்தில், "தூயோமாய் வந்து தூமலர் தூவித் தொழுது, வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க' என்று வராகமூர்த்தி சொன்ன உபாயத்தை ஆண்டாள் குறிப்பிடுகிறாள். 

இப்படி யார் பக்தி செய்தாலும், செய்த பாவம் அத்தனையும் தீயில் தூசு போலாகி விடும். கிடந்து, இருந்து, நின்று, அளந்து, இடந்து, உண்டு, உமிழ்ந்து என எத்தனையோ விதங்களில் பெருமாள் சேவை சாதிக்கிறார். பாம்பணையில் கிடப்பதும், அமர்ந்து இருப்பதும், தனித்து நிற்பதும், திரிவிக்ரமனாய் உலகை அளப்பதும், வராகராக வந்து பூமியை இடப்பதும்(தாங்குவது), பிரளய காலத்தில் பூமியை உண்பதும்(விழுங்குவதும்), மீண்டும் சிருஷ்டிக் காலத்தில் உமிழ்வதும்(பூமியை வெளிப்படுத்துவது) பூமிபிராட்டியை முன்னிட்டு தான். முதல் மனைவி இருக்க, இரண்டாவது திருமணம் செய்தால் மூத்த மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுப்பது வழக்கம். அதுபோல, ஸ்ரீதேவிக்கு மார்பில் மட்டும் சின்ன இடத்தைக் கொடுத்து விட்டு, பூமிதேவிக்கு தன்னையே கொடுத்து விட்டார். 

இதுவும் பெருமாள் பூமிபிராட்டிக்கு கொடுத்த ஏற்றம்தான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பொய்கையாழ்வாரின், முதல் திருவந்தாதி என்னும் பாசுரத்தில், பூமிதேவி திருமாலைப் பிரிந்ததால் அழுவதாகப் பாடியுள்ளார். இதற்கு ஸ்ரீரங்க நிர்வாகத்தில் ஈடுபட்ட ஆளவந்தார் காலத்திற்கு முந்தியவர்களும், ஆளவந்தாரும், பராசரபட்டரும் ஒவ்வொரு விதமான காரணத்தைச் சொல்வார்கள். காலத்தால் முந்திய நிர்வாகத்தினர், நிலையான பூமியை விட்டு, ஸ்ரீதேவி பாற்கடலுக்கு பெருமாளை அழைத்துச் சென்ற வருத்தத்தால் பூமிதேவி அழுவதாகக் குறிப்பிடுவர்.

ஆனால், ஆளவந்தாரோ, ""பூமி எப்போதும் ஆடாமல் அசையாமல் நிலையாக இருக்கிறது. ஆனால், கடலோ எப்போதும் ஆடிக் கொண்டிருக்கும். அதனால், ஸ்ரீதேவியோடு இருப்பதில் பெருமாளுக்கு சிரமமே,'' என அன்பின் காரணமாக பூமிதேவி அழுவதாக விளக்கம் அளித்தார்.

ஆனால், பராசரபட்டரோ வேறுவகையில் விளக்கம் அளித்தார். ஒரு காதலன் பொருள் தேடி விட்டு மழைக்காலத்தில் திரும்பி வருவதாகச் சொல்லி விட்டுப் புறப்பட்டான். ஆனால், வரவில்லை. மழை பெய்யத் தொடங்கியது. காதலி பிரிவுத்துயரம் தாங்காமல் அழுதாள். அவளுடைய தோழி, "இதுநிஜமான மழையில்லை. பாற்கடலில் திருமால் திருமகளோடு தங்கியிருப்பதால், பூமிதேவி அன்பால் விடும் கண்ணீர் துளிகளே' என்று சொன்னதாக விளக்கம் கொடுத்தார்.


இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விளக்கம் சொன்னாலும், ரங்கநாதர் என்னும் குளத்தைச் சுற்றி வரும் அன்னம் போல, ஸ்ரீதேவி பெருமாளையே வலம் வந்து கொண்டிருக்கிறாள். அவளின் நிழல் போல பூமிதேவி எப்போதும் இருந்து கொண்டிருக்கிறாள். நிழலோடு யாரும் சண்டை போடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், நிஜத்தை விட நிழல் வளர்ந்து கொண்டே போவதை பார்க்கலாம். அதனால், தேவியருக்குள் ஒருபோதும் சண்டை உண்டாவதில்லை.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 24

திருமாலின் இடப்புறத்தில் வீற்றிருக்கும் பூமிபிராட்டியாரின் வைபவத்தை இனி கேளுங்கள். வைணவ சம்பிரதாயத்தில் பூமிபிராட்டியின் அவதாரமாகப் போற்றப்படுபவள் ஆண்டாள். அவளின் திருவடித்தாமரையின் பெருமையை சுவாமிதேசிகன் கோதாஸ்துதியில் போற்றிப் பாடுகிறார். பெரியாழ்வாரின் திருமகளாக ஸ்ரீவில்லிபுத்தூரிலே அவதரித்தவள் இவள். அவள் ஏன் இப்படி ஒரு மானிடராக மண்ணில் அவதரிக்க வேண்டும்?

வைகுண்டத்திற்கு "நலம் அந்தமில்லதோர் நாடு' என்று பெயருண்டு. அங்கு பெறும் நன்மைக்கு முடிவே கிடையாது. அப்படிப்பட்ட வைகுண்டத்தை விட்டு பூலோகத்தில் பிராட்டி ஏன் அவதரிக்க வேண்டும்? உயிர்களான நம் மீது கொண்ட கருணையால் தான். விஷ்வக்சேனர், ஆதிசேஷன் போன்ற நித்யசூரிகள் எப்போதும் பெருமாளுக்கும், பிராட்டிக்கும் கைங்கர்யம் செய்தபடி இருப்பர். அந்த வளமான, ஆனந்த வாழ்வை விட்டு லீலாவிபூதியான பூலோகம் வந்தாள். மணவாள மாமுனிகள், நித்யவாழ்வான வைகுண்டத்தை இகழ்ந்து நமக்காக ஆண்டாள் பூமிக்கு வந்ததாக குறிப்பிடுகிறார்.

தாழ்வான ஒன்றை இகழ்வது தானே உலக வழக்கம். ஆனால், பிராட்டியார் ஏன் வளமான வைகுண்டத்தை இகழ்ந்தாள்? 

ஒரு பணக்கார பெண் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள். அவளுக்கு தன் பிள்ளை மீது அன்பு அதிகம். குழந்தை உடல்நலமில்லாமல் சிரமப்பட்டது. அதை குணப்படுத்த வைத்தியரின் குடிசை வீட்டில் ஒருமாதம் தங்க வேண்டியிருந்தது. அதற்காக தாய், தன் வசதியான வாழ்வைத் துறந்து விட்டாள். தன் சவுகர்யத்தை விட பிள்ளையின் நலத்தை பெரிதாக மதிக்கும் தாய் போல, பிராட்டியும் உயிர்களின் உஜ்ஜீவனத்திற்காக (உய்வுக்காக) பூலோகம் வந்தாள். 

ஸ்ரீதேவி, நீளாதேவிக்கு இல்லாத ஏற்றம் பூமிதேவிக்கு. திருமால் எடுத்த தசாவதாரத்திற்கும், அவர் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கும் 108 திவ்ய தேசங்களுக்கும் ஆதாரமாக இடம் கொடுத்தவளே பூமி பிராட்டி தான். இதுவும் அவளுக்குரிய தனிச்சிறப்பு. திருமகள் ராமனோடு சீதையாக வந்தபோதும், கண்ணனோடு ருக்மணியாக வந்தபோதும் அவளுக்கு இடம் கொடுத்தவளும் இந்த பூமிபிராட்டியே. இவள் மட்டுமே பன்னிரு ஆழ்வார்களில் ஒருத்தியாகும் பாக்கியம் பெற்றவள். மற்ற ஆழ்வார்கள் ஆண்கள் என்பதால், "நாயிகாபாவத்தில்' தன்னை பெண்ணாகவும், திருமாலை நாயகனாகவும் பக்தி செலுத்தி வந்தனர். ஆனால், ஆண்டாள் இயல்பிலேயே பெண் என்பதால், பெருமாளை இன்னும் விசேஷமாக அனுபவிக்கும் பாக்கியம் பெற்றாள். ஆழ்வார்கள் ஒரு அடி பாய்ந்தால், இவள் 16 அடி பாய்ந்தாள் என்றே சொல்லலாம். 

ஸ்ரீதேவியான திருமகள், பெருமாளை விட்டுப் பிரியாமல் அவனுடைய மார்பில் நித்யவாசம் செய்கிறாள். அதனால் அவளுக்கு "நித்ய அனபாயினீம்' என்றும் பெயருண்டு. முக்தி பெற்ற உயிர்களே நித்யசூரிகளாக பெருமாளை விட்டுப் பிரிவதில்லை. ஆனால், ஸ்ரீதேவிக்கு எப்போதும் பெருமாளின் திருமார்பில் எப்போதும் "தங்கி இருக்கணுமே' என்ற கவலை இருந்து கொண்டே இருக்குமாம். ஆனால்,பெருமாள், ஸ்ரீதேவி மட்டுமில்லாமல் அனைவரையும் சேர்த்து தாங்குபவளாக பூமிபிராட்டி விளங்குகிறாள். ஆதரவு படைத்தவளாக ஸ்ரீதேவி இருக்க, பூமிதேவியோ ஆதாரமாக இருக்கிறாள் என்பதும் அவளுக்குரிய சிறப்புகளில் ஒன்று.

ஹிரண்யாட்சன் என்ற அசுரன், பூமிபிராட்டியைக் கடலுக்கடியில் சென்று ஒளித்து வைத்தான். நீரில் நீண்டகாலம் எந்த பொருள் கிடந்தாலும், அதில் பாசி படர்ந்து விடும். பூமியிலும் பாசி படர்ந்து போனது. பாசி பிடித்தால் அழுகின துர்நாற்றம் உண்டாகி விடும். தனக்கே உரிய பொறுமை என்னும் பண்பினால் பிராட்டி இதை தாங்கிக் கொள்கிறாள். "பாசி தூர்த்துக் கிடந்த பார்மகள்' என்று இதைக் குறிப்பிடுவர். அப்போது பெருமாள் பூமியைக் காப்பாற்றும் நோக்கத்துடன், பன்றி முகத்துடன் வராக அவதாரமாக புறப்பட்டார். அப்போது, அவரின் மேனி முழுவதும் அழுக்கு நீர் சொட்டத் தொடங்கியது. துர்நாற்றம் வரத் தொடங்கியது. வாசனைப் பொருள் எதுவாக இருந்தாலும், அதற்குரிய சுகந்தத்தை அளிப்பவர் பெருமாள் தான். ஒளி வீசும் பொருள் எதுவானாலும், அது ஒளி கொடுப்பதும் அவரே. ஆனால், அவரே இப்படி துர்கந்தமாக அழுக்குமேனியாக ஏன் செல்ல வேண்டும்? அது தான் மனைவி மீது கொண்ட உண்மையான அன்பின் அடையாளம். மனைவி தன்னை அழகுபடுத்திக் கொள்ளும்போது, தானும் அலங்காரம் செய்து கொள்வதும், அவளுக்கு உடல்நலம் இல்லாத சமயத்தில் தானும் எளியவனாக இருப்பதும் நல்ல கணவனுக்குரிய இலக்கணம். இதை தான் நமக்கு இதன் மூலம் உணர்த்துகிறார். 

சத்தியம், நேர்மை, பணிவு இப்படியான நற்பண்புகளின் ஒட்டுமொத்தம் தான் ராமன். ஆனால், கண்ணனோ இந்த குணங்களுக்கு நேர்மாறானவன். கபடம், தந்திரம், பொய், திருட்டு இப்படி தோஷமான குணங்களெல்லாம் கொண்டவன். உலகத்திலும் இப்படி இருவிதமான மனிதர்கள் தான் இருக்கிறார்கள். குணத்தாலே ஜெயித்தவன் ராமன். தோஷத்தாலே ஜெயித்தவன் கண்ணன். அதைப் போல, ஸ்ரீதேவி ஒளியாலே ஏற்றம் படைத்தவள். ஆனால், பூமிபிராட்டியோ அழுக்காலே ஏற்றம் படைத்தவள். 

பெற்ற தாய் குழந்தையாக இருக்கும் போது, நம்மைப் பாலூட்டி சீராட்டி வளர்க்கிறாள். பூமித்தாயோ நாம் வாழும் காலம் வரைக்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறாள். தங்கம், வெள்ளி என விலையுயர்ந்த உலோகங்கள், அரிசி, பருப்பு என தேவையான உணவு வகைகள் எல்லாம் அவளின் கொடையே. 

பூமிபிராட்டிக்கு பிருது என்ற மன்னனின் பெயரால் "பிருத்வி' என்று பெயருண்டு. அவன் செங்கோல் ஆட்சி நடத்திய மன்னன். ஆனால், அவன் காலத்தில் பஞ்சம் தலைவிரித்தாடியது. என்ன செய்வதென ஒன்றும் புரியாமல், தன் வில்லை எடுத்துக் கொண்டு பூமியையே விரட்டத் தொடங்கினான். ஓரிடத்தில் பூமியைக் கொல்லத் தலைப்பட்டான். பூமியில்லாவிட்டால், உயிர்கள் அழிந்து போகும் என்ற உண்மையை அவனுக்கு உணர்த்தினாள் பிராட்டி. தான் ஒரு பசுவாக மாறி நின்றாள். 

அவளுடைய மடியில் அத்தனை செல்வங்களும் பால் போல பொங்கியது. பிருதுவும் ஒரு அதைப் பெற்று மகிழ்ந்தான். பிருதுவுக்கு வாழ்வு தந்ததால் "பிருத்வி' என போற்றப்பட்டாள். கருணை என்று வந்து விட்டால், பூமியும் பெரிய பிராட்டியான ஸ்ரீதேவிக்கு இணையானவள். பொறுமை என்றால் இவளுக்கு நிகர் இவள் மட்டும் தான். வராகபுராணத்தில் பூமிபிராட்டியின் வைபவம் விரிவாகப் பேசப்படுகிறது. சம்சாரக்கடலில் இருந்து நாம் தப்பவேண்டுமானால், பூமிதேவியோடு வீற்றிருக்கும் வராகப்பெருமானின் திருவடியைப் பிடித்துக் கொள்வது ஒன்றே வழி. 


- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 23

ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளிடம் பிராட்டி, ""ஸ்வாமி! தெற்கு நோக்கி ஏன் சயனத்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டாள். ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பிராட்டிக்கு ஏன் இந்த சந்தேகம் என்று பெருமாளுக்கு ஆச்சரியம். 

""விபீஷணனோடு நாம் இலங்கைக்கு சென்றிருக்க வேண்டும்,'' என்றார் அவர். பெருமாள் வீபிஷணனுக்காக தெற்கு நோக்கி சயனம் கொண்டிருப்பதாக பெரியாழ்வார் பாசுரத்தில் கூறுகிறார். ஆனால், "இதெல்லாம் கட்டுக்கதை' என்கிறார் வேதாந்த தேசிகன். 

""கோதைநாச்சியாரான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளைக் காணவே பெருமாள் தெற்கு நோக்கி சயனம் கொண்டிருக்கிறார். பெருமாளுக்கு பெண் கொடுத்த மாமனாரான பெரியாழ்வாருக்கு இந்த உண்மையைச் சொல்ல வெட்கம். அதனால், சொல்ல மறுத்து விட்டார்,'' என்கிறார்.

""ரங்கநாதரை கண்குளிர தரிசித்து விட்டபின், எப்படி உங்களால் "போயிட்டு வர்ரேன்' என்று சொல்லி விட்டு கிளம்ப முடிகிறது. ரங்கனை சேவித்தால் அங்கேயே இருந்து விட வேண்டும்,'' என்பதே ஆழ்வார்களின் முடிவு.

""என்னை அவமானப்படுத்தியவன் விபீஷணன். அவனுக்காகவா சயனத்திருக்கிறீர்?'' என்று கேட்கிறாள் பிராட்டி. பெருமாளும் வியப்புடன், ""உம்மை யார் அவமானப்படுத்தியது?'' என்றார்.

அவரைப் பார்த்து தாயார், "" வானுலகில் பிரம்மா, குபேரன், இந்திரன் போன்றவர்கள் எல்லாம் என் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ஆனால், நான் யாரும் கூப்பிடாமலே இலங்கைக்குப் போனேன். ஆனால், விபீஷணனோ ராவணனிடம், ""ராம பாணம் இலங்கையில் இருக்கும் ராட்சஷர்கள் அனைவரையும் அழித்துவிடும். சீதை இங்கு வந்ததிலிருந்து இங்கு ரத்த ஆறு ஓடுகிறது. நரி ஊளையிடுகிறது. 
கொள்ளிக்கட்டைகள் கீழே விழுகிறது. இவளுக்கும் மங்கலத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று என்னைப் பழித்தவன் அவன்.  அவனுக்காக தெற்கு நோக்கி சயனத்திருக்கிறீரே?'' என்றாள்.

இந்த உரையாடல் வால்மீகி ராமாயணத்தில் இருக்கிறது. 

""விபீஷணன் நல்லதுக்காக ஒன்றைச் சொல்வானே தவிர, தீமைக்காக எதுவும் சொல்ல மாட்டான். அப்படி சொல்லி இருந்தாலும், அதுவும் நன்மை கருதித் தான்,'' என்றார் பெருமாள்.

பிராட்டிக்கு பெருமாளின் பதிலைக் கேட்டு ஒரே ஆனந்தம். பிராட்டியின் நோக்கமும், விபீஷணன் மீது குறை சொல்வது அல்ல.

வீடு கட்டும் பெரிய கொத்தனார் போல பிராட்டி இங்கு செயல்படுகிறாள். கட்டிடம் கட்டும்போது, கட்டுமானம் உறுதியாக இருக்கிறதா? என்று அவ்வப்போது அவர் சோதித்துப் பார்ப்பார். பக்தர்களுக்காக பெருமாளை அவள் சோதித்துப் பார்க்கிறாள். அவர்கள் பெருமாளிடம் நிலையாக சேர்ந்து விட்டார்களா என்று சோதிக்கிறாள். இதுவும் அவளுடைய புருஷகாரம் என்னும் கருணையே. 

பிராட்டி கருணையே உருவான கடலாக விளங்குகிறாள். நம் குற்றத்தை அவள் ஒருபோதும் பொருட்படுத்தவில்லை. நம்மை பெருமாளோடு சேர்த்து வைப்பதே அவளுடைய லட்சியம். பிராட்டி என்னும் கருணைக் கடலில், நாம் இன்னும் பிராயாணம் செய்யவில்லை. ""இதோ கடல்! என்று கரையில் நின்று பார்த்து ஆனந்திக்கிறோம்! அவ்வளவு தான். அவளின் வைபவத்தைக் கண்டு பெருமாளே ஆனந்தப்படுகிறார். தயாசதகத்தில் வேதாந்ததேசிகன் பிராட்டியின் கருணையை வியந்து பாடியுள்ளார். 

""திருவேங்கடமுடையானுக்கு ஞானம், பலம், ஐஸ்வர்யம் என எத்தனையோ நல்ல குணங்கள் இருக்கின்றன. ஆனால், பிராட்டியின் தயை அவருடன் சேராவிட்டால், அத்தனையும் தோஷமாகி விடும். பிராட்டியின் சம்பந்தத்தால் தான் பெருமாளுக்கே ஏற்றம் உண்டானது. அதனால் தான் பிராட்டியை லட்சுமி, மாதா என்றெல்லாம் போற்றி வணங்குகிறோம்,'' என்கிறார் தேசிகன். 

அவளது கருணையைப் பெற ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்ய வேண்டியதில்லை. தெருவில் செல்லும்போது, தாயார் சந்நிதியைப் பார்த்து, கீழே கிடக்கும் கைகளை உயர்த்தி, ""தாயே வணக்கம்'' என்று கைகூப்பினால் போதும். அவள் நம்மை தலையாலேயே சுமக்கத் தயாராகி விடுவாள்.

காஞ்சிபுரம் தேவபெருமாள் அபயஹஸ்தத்தோடு(மேல்நோக்கிய கரம்) காட்சி தருகிறார். ஆனால், அவரை வரதன் என்று அழைக்கிறோம். அவருக்கு ஏன் அப்படி பெயர் வந்தது? ஊருக்குள் பேரும் புகழும் மிக்க பிராமணர் ஒருவர் இருக்கிறார். அவர் ஆற்றில் நீராடுகிறார். அவர் மார்பில் அணிந்திருக்கும் யக்ஞோபவிதம்(பூணூல்) காணாமல் போனது. ஊரில் பார்ப்பவர்கள் அவரை பிராமணர் கிடையாது என்று மறுத்து விடுவார்களா என்ன? அதுபோலத்தான், தேவபெருமாள் அபய ஹஸ்தம் காட்டினாலும், பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை வாரி வழங்குவதால், வரதப்பெருமாள் என்றே அழைக்கப்படுகிறார். அப்படி வாரி வழங்கும் பெருமாளுக்கு, பாவாத்மாவான நம்மைக் கண்டால் சிலநேரத்தில் கோபம் வந்துவிடும். அதுவும் கூட நம் நன்மைக்காகத் தான். சம்சார சாகரத்தில், எவ்வளவு காலம் தான் இவர்கள் கிடக்கப் போகிறார்கள். மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து இறக்கப் போகிறார்கள்? தர்மத்தைக் கடைபிடித்து எப்போது மோட்சகதியை அடைவார்கள்? என்ற கோபம் தான். 

அப்போதும் தாயாரே நம் சார்பாக பெருமாளிடம் பேசத் தொடங்குகிறாள். ""எதை வேண்டுமானாலும் போனால் போகட்டும் என்று வாழ்வில் மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், பேரை விட்டு விட்டால் அதைப் பெற முடியாது. உபநிஷதங்கள் உம்மை,"புருஷோத்தமன்' "நாராயணன்' என்று போற்றுகின்றன. வாரி வழங்கும் இயல்பை விடக் கூடாது. அவர்களைக் காத்தருள வேண்டும்,'' என்று வேண்டுகிறாள். 

பரீட்சையில் வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு இருவித இயல்பு உண்டு. வழிமுறை சரியாக இருந்தாலே மதிப்பெண் என்று ஒரு ரகம், முடிவு சரியாக இருந்தால் தான் மதிப்பெண் என்று ஒரு ரகம். இரக்கமுள்ள தாயாரின் வழிகாட்டுதலால், பெருமாள் நாம் எந்த ரகமாக இருந்தாலும், மதிப்பெண் வழங்க காத்திருக்கிறார்.
தொண்டரடிப் பொடியாழ்வார் தன் பாசுரத்தில், ""வெட்டி வெட்டிக் கொண்டு பெருமாளை விலகிக் கொண்டே சென்றேன். ஆனால், பெருமாளே என்மீது அன்பு கொண்டு விட்டுக் கொடுக்காமல் என்னை ஒட்டிக் கொண்டு வந்தார். இப்போதோ அவரின் வடிவழகைக் கண்டு மயங்கி நின்றேன். என்னை அவரோடு சேர்த்துக் கொண்டார்,'' என்று பாடுகிறார்.

எப்படியாவது நம்மை காத்து ரட்சிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். அந்த கைங்கர்யத்தைச் செய்து பெருமாளின் திருவடிகளில் நம்மைச் சேர்த்து வைப்பவள் பிராட்டியே.

- இன்னும் ஆனந்திப்போம்

நன்றி - தினமலர்