ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 97

நான்காவது ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்

(ப்ருதுவுக்கு ஸ்ரீமஹாவிஷ்ணு அனுக்ரஹம் செய்து ஹிதம் (நன்மையை) உபதேசித்தல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனும் யஜ்ஞங்களைப் பாதுகாப்பவனும் அவற்றில் கொடுக்கிற ஹவிஸ்ஸுக்களை புஜிக்கின்றவனுமாகிய வைகுந்தன் ப்ருதுவின் யஜ்ஞங்களால் நன்கு ஆராதிக்கப்பெற்று இந்த்ரனுடன் அவனைப் பார்த்து “மன்னவனே! இவ்விந்த்ரன் நூறு அஸ்வமேத யாகங்கள் செய்ய வேண்டுமென்கிற உன் ஸங்கல்பத்திற்கு விக்னம் (இடையூறு) செய்தானாகையால், அந்த அபராதத்தைப் பொறுக்கும்படி வேண்டுகிறான். இவன் விஷயத்தில் பொறுக்கவேண்டும். உலகத்தில் மதியுடைய மன்னவர் பிறர்க்கு உபகாரம் செய்யும் தன்மையராகி எத்தகைய பூதங்களுக்கும் த்ரோஹம் (கெடுதி) செய்யமாட்டார்கள். தேஹம் ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்டதல்லவா? அவர்கள் அதற்காகப் பிறர்மேல் த்ரோஹ சிந்தை கொள்ள மாட்டார்கள். உன்னைப்போன்ற பண்டிதர்களும் ஈச்வரனது மாயையால் மதிமயங்குவார்களாயின், அவர்கள் நெடுநாள் பெரியோர்களைப் பணிந்ததெல்லாம் பயனற்றதேயாகும். ஆகையால் பண்டிதனாயிருப்பவன் இச்சரீரமானது அவித்யை, காமம், கர்மம் இவைகளால் ஏற்பட்டதென்பதை அறிந்து அதில் மனப்பற்று செய்யலாகாது. ஆத்மா என்றும் ஒருவாறாயிருப்பவன்; நிர்மலன் (அழுக்கற்றவன்); ஸ்வயம்ப்ரகாசன் (வேறு எதனுடைய உதவியின்றி தானே தோன்றுபவன்); ராகம் (விருப்பு), த்வேஷம் (வெறுப்பு) முதலிய துர்க்குணமற்றவன்; ஜ்ஞானானந்தாதி (ஜ்ஞானம், ஆனந்தம் முதலிய) குணங்களுக்கிடம்; அணு ஸ்வரூபனாயினும் (அணு அளவினன் - மிகவும் சிறியவன் என்றாலும்) ஜ்ஞானத்தினால் எங்கும் நிறைந்தவன்; மறைவில்லாதவன்; தேஹாதிகளை (சரீரம் போன்றவற்றை) ஸாக்ஷாத்கரிப்பவன்; தேஹத்திற்குள் (உடலில்) புகுந்து அதைத் தரிப்பவன் (தாக்குபவன்); தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணமாயிருப்பவன் (வேறாயிருப்பவன்); தேஹ தர்மங்களான பசி தாஹம் முதலியவை ஆத்மாவுக்குக் கிடையாது; அவனுக்கு தேவ மனுஷ்யாதி பேதங்கள் (வேறுபாடுகள்) எவையும் கிடையாது. இதற்கு ஸுஷுப்தியே (ஆழ்ந்த உறக்கமே) த்ருஷ்டாந்தம் (உதாரணம்). அப்பொழுது நானென்பது மாத்ரம் தோற்றுமேயன்றி மற்ற பேதங்கள் எவையும் தோற்றாது. இத்தகைய ஆத்மஸ்வரூபத்தையும் அவ்வாத்மா பரமாத்மாவான எனக்கு உட்பட்டவன் என்பதையும் அறிந்து என்னை உபாஸிப்பானாயின், அவன் ப்ரக்ருதியோடிருப்பினும் அதன் குணங்களால் தீண்டப்பெறமாட்டான். பலனை விரும்பாமல் வர்ணாச்ரம தர்மத்தினால் என்றும் என்னை ச்ரத்தையுடன் ஆராதிப்பானாயின், அவன் மனம் மெல்ல மெல்லத் தெளிவு பெறும். ராகம் த்வேஷம் முதலிய தோஷங்களையெல்லாம் துறந்து தூயமனத்தனாகி ஆத்ம பரமாத்ம ஸ்வரூபங்களை நன்றாக உணர்ந்து பசி தாஹம் முதலிய ஊர்மிகள் தீண்டப்பெறாததும் எனக்குச் சரீரமும் குணப்பெருமையுடையதும் ப்ரக்ருதி ஸம்பந்தமற்றதுமாகிய ஆத்மஸ்வரூபத்தைப் பெறுவான். “ஆத்மா இயற்கையில் நிர்விகாரன் (மாறுதல்கள் அடையாதவன்); பஞ்சபூதங்கள், ஜ்ஞானேந்திரிய, கர்மேந்த்ரியங்கள், மனம் ஆகிய இவற்றின் ஸமுதாயமான தேஹத்திற்கு ப்ரபு; இயற்கையில் எவ்வகை விகாரங்களும் இல்லாதவன். இவனுக்கு வரும் விகாரங்களெல்லாம் ப்ரக்ருதி ஸம்பந்தத்தைப் பற்றினவை” என்று எவன் அறிகிறானோ, அவன் ப்ரக்ருதியோடிருக்கும் பொழுதே க்ஷேமத்தைப் பெறுவான். ஸத்வ ரஜஸ் தமோ குணங்களால் விளையும் விகாரங்களெல்லாம் சரீரத்தைச் சேர்ந்தவைகளேயாயினும் அச்சரீர ஸம்பந்தத்தினால் ஆத்மா ஜ்ஞான ஸங்கோசம் (அறிவு குறைவு) உண்டாகப் பெற்று அதனால் ஸுக துக்கங்களை அனுபவிக்கின்றான். தேஹாத்ம விவேகமுடைய பண்டிதர்கள் என்னிடத்தில் மிகுந்த ப்ரீதியுடையவராகி அங்கனம் தேஹத்தைப் பற்றி விளைகிற ஸம்பத்துக்களிலும் விபத்துக்களிலும் ஸுகதுக்கங்களால் கலங்க மாட்டார்கள், ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்த அறிஞனாகையால் இந்திரியங்களை வென்று ஸுகதுக்கங்களை ஸமமாகப் பாவித்து மேன்மையுள்ள தேவாதிகளிடத்திலும் தாழ்மைக்கிடமான பசு, பக்ஷி முதலியவற்றிலும் நடுத்தரமான மனுஷ்யரிடத்திலும் பேதம் (வேற்றுமை) பாராட்டாமல், நான் ஏற்படுத்தின மந்த்ரி முதலிய ஸமஸ்த ஜனங்களோடும்கூடி உலகங்களையெல்லாம் பாதுகாத்து வருவாயாக. 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 96

நான்காவது ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்


(ப்ருது தன் யாகக் குதிரையைத் திருடின இந்த்ரனை வதிக்க முயன்றதும், ப்ரஹ்மதேவன் ஸமாதானம் செய்ததும்)


மைத்ரேயர் சொல்லுகிறார்:- பிறகு ராஜரிஷியாகிய ப்ருது, ஸ்வாயம்புவமனு வாஸம் செய்தமையாலும் ஸரஸ்வதி நதி கிழக்கு முகமாய்ப் பெருகி வருகின்றமையாலும் பரிசுத்தமாகிய ப்ரஹ்மாவர்த்தமென்னும் க்ஷேத்ரத்தில் நூறு அச்வமேத யாகங்கள் செய்யவேண்டுமென்று ஸங்கல்பித்துக் கொண்டு யாகம் நடத்தினான். சதக்ரதுவென்று பேர்பெற்ற மஹானுபாவனாகிய தேவேந்த்ரன் தன்னைக்காட்டிலும் அவன் செயலில் மேற்படுவதைக் கண்டு அவனது யஜ்ஞத்தைப் பொறாதிருந்தான். ஸர்வாந்தராத்மாவும், ஸமஸ்த லோகங்களுக்கும் ஹிதோபதேசம் செய்பவனும் (நன்மையை உபதேசிப்பவனும்), ஷாட்குண்யபூர்ணனும் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனும்), யஜ்ஞங்களால் ஆராதிக்கப்பெற்று அவற்றிற்குப் பலன் கொடுப்பவனும், ஸமர்த்தனும் (ஸாமர்த்யம் உடையவனும்), ஸர்வேச்வரனுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணு ப்ரஹ்மதேவனோடும் ருத்ரனோடும் லோகபாலர்களோடும் அவரது ப்ருத்யர்களோடும் கூடி, கந்தர்வர்களாலும் அப்ஸர மடந்தையர் கூட்டங்களாலும் முனிவர்களாலும் பாடப்பெற்றுத் தானே நேரில் புலப்பட்டான் (தெரிந்தான்). அப்பொழுது ஸித்தர், வித்யாதரர், தைத்யர், யக்ஷர் முதலிய தேவஜாதிகளும், மனுஷ்யர்களும், ஸுநந்தன், நந்தன் முதலிய பகவானுடைய ப்ருத்யர்களும்., கபிலர், நாரதர் தத்தர் முதலிய முனிவர்களும், ஸனகாதி மஹாயோகிகளும், மற்றுமுள்ள அவனுடைய பக்தர்களும் அவனைப் பின்தொடர்ந்து வந்தார்கள். 

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

மா கேலரா விசாரமு? - துஷ்யந்த் ஸ்ரீதர்

“தான் வைகுண்டம் போகும் பொழுது, ராமர் தன்னோடு இருந்த அத்தனை ஜீவராசிகளையும் சேர்த்தே வைகுண்டம் அழைத்துக் கொண்டு போனார்” என தியாகராஜ ராமாயண சங்கீத உபன்யாசத்தைத் துவக்கினார் துஷ்யந்த் ஸ்ரீதர்.


“ராமருக்காகவே பிறந்தவர்னு சொல்லணும்னா குலசேகர ஆழ்வாரைத்தான் சொல்லணும். அவர் அப்படி ராமரை ஆராதிச்சிருக்கிறார், பாசுரங்களால்! குலசேகர ஆழ்வாரும் புனர்பூசம், ராமரும் புனர்பூசம்! என்ன பொருத்தம்!! 'எங்கள் குலத்து இன்னமுதே'ன்னு பிரபந்தத்துல குலசேகர ஆழ்வார் தாலாட்டிப் பாடற மாதிரியேதான், தியாகராஜரும் தாலாட்டி இருக்கார்.


“ஒய்யார லோக வையா”னு ராமரைத் தாலாட்டற அழகு இருக்கே! தியாகராஜர் தன்னோட ஒவ்வொரு பாட்டு வழியாகவும் ராமரோடவே பேசியிருக்கார்.


சீதையை, ராவணன் அபகரிச்சுண்டு போனப்பறம் ராமர் அழறார். அங்க இருக்குற ஒவ்வொரு புல்லுக்கிட்டேயும், பூக்கிட்டேயும், “என் சீதை எங்கே, எங்கே?”ன்னு கேட்டுக் கதறுகிறார். இதில் ஒரு பூ தெற்கு பக்கமா தன் தலையைத் திருப்பிக்கறது. கோதாவரியைப் பார்த்து, “சீதை எங்கே?”ன்னு கேட்கறார். அதுக்கு நன்றாகத் தெரியும். ராவணன்தான் சீதையைத் தூக்கிக்கொண்டு போனான்னு. ஆனாலும், ராவணனுக்குப் பயந்து அது வாயே திறக்கல.


அதனால அந்தக் காலப் பெரியவர்கள், “ராமர் கேட்ட பொழுது சீதை எங்கேன்னு கோதாவரி சொல்லல! அது எப்படி புண்ணிய நதியாகும்”னு கேட்பார்கள். ஆனால், ஸ்வாமி தேசிகன் சொல்றார்: “அதோட பேர்ல கோதா, அதாவது ஆண்டாள்னு இருக்கே! அதனால, கோதாவரியை மன்னித்து விடலாம்”னு!

திங்கள், 17 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 95

நான்காவது ஸ்கந்தம் - பதினேழாவது அத்தியாயம்

ப்ருது பூமியைக் கறத்தல்

மைத்ரேயர் சொல்லுகிறார்:- பூமிதேவி இங்கனம் துதிசெய்தும் கோபம் தணியாமல் உதடு துடிக்கப்பெற்றிருக்கிற அம்மன்னவனைப் பார்த்துப் பயந்து தானே ஒருவாறு மனத்தை அடக்கிக்கொண்டு “ப்ருது சக்ரவர்த்தியே! கோபத்தை முழுவதும் அடக்கிக்கொண்டு நான் சொல்லுவதைக் கேட்பாயாக. வண்டு புஷ்பங்களினின்று தேனை ஆராய்ந்தெடுப்பதுபோல், பண்டிதனாயிருப்பவன் ஸமஸ்த வஸ்துக்களிலும் ஸாரத்தை க்ரஹிக்கவேண்டும். நன்மைகளை விரும்பும் புருஷர்களுக்கு அவை ஸித்திக்கும்பொருட்டு, உண்மையை உணர்ந்த முனிவர்கள் இவ்வுலகத்திற்குரிய க்ருஷி (விவசாயம்) முதலிய உபாயங்களையும் பரலோகத்திற்குரிய அக்னிஹோத்ரம் முதலிய உபாயங்களையும் கண்டுபிடித்து, அவற்றில் பரலோகத்திற்குரிய உபாயங்களைத் தாங்கள் அனுஷ்டித்தும் காட்டியிருக்கிறார்கள். முன்புள்ளோர் காட்டின அந்த உபாயங்களை ஒருவன் ச்ரத்தையுடன் அனுஷ்டிப்பானாயின், தான் விரும்பும் நன்மைகளை அனாயாஸமாகப் (கஷ்டமின்றி, எளிதாகப்) பெறுவான். அவற்றை அனாதரித்துத் (ஆதரிக்காமல்) தன் புத்தியால் சிலவற்றைக் கைப்பற்றிக் கார்யம் செய்வானாயின், அந்த உபாயாபாஸங்கள் (முறையற்ற வழிமுறைகள்) அடிக்கடி தொடங்கி நடத்தப்பெறினும் தடைபட்டு அவனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கமாட்டாது. 

மன்னவனே! முன்பு ப்ரஹ்மதேவன் இவ்வுலகத்தில் ப்ரஜைகளின் ஜீவனத்திற்காகவும் யாகாதி கர்மங்களின் மூலமாய் அடையக்கூடிய பரலோக ஸுகத்திற்காகவும் ஓஷதிகளைப் படைத்தான். அவற்றையெல்லாம் நன்னடத்தையில்லாத துஷ்டர்கள் (கொடியவர்கள்) அனுபவிப்பதைக் கண்டேன். உன்னைப் போன்ற லோகபாலர்கள் எவரும் அந்தத் துஷ்டர்களைத் தண்டித்து என்னை ஆதரித்துப் பாதுகாக்க நேராதிருந்தேன். உலகமெல்லாம் திருடர்கள் நிறைந்திருந்தார்கள். ஆகையால் “இவை யஜ்ஞாதி கர்மங்களுக்கு வேண்டும்” என்று நான் ஓஷதிகளை வெளியிடாமல் உள்ளடக்கிக் கொண்டேன். நெடுநாளானபடியால் அவை என்னிடத்தில் ஜீர்ணமாயின. நீ உபாயத்தினால் அவற்றை வெளிப்படுத்திக் கொள்வாயாக. 

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 94

நான்காவது ஸ்கந்தம் – பதினாறாவது அத்தியாயம்


(ப்ருது பூமியை வதிக்கத் தொடங்குகையில் பூமி அவனை ஸ்தோத்ரம் செய்தல்)


மைத்ரேயர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய அந்த ப்ருது மன்னவன் இவ்வாறு தன் குணங்களையும் செயல்களையும் ஸ்துதி பாடகர்களால் புகழப்பெற்றவனாகி அவர்களை ஆடை ஆபரணம் முதலியவைகளால் ஸம்மானித்து அவர்கள் செய்த ஸ்தோத்ரத்தையும் அபிநந்தித்து (பாராட்டி) ஸந்தோஷப்படுத்தினான். அவன் ப்ராஹ்மணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களையும் ப்ருத்யர்களையும் (சேவகர்களையும்) மந்திரிகளையும் புரோஹிதர்களையும் ஜனங்களையும் நன்கு வெகுமதித்தான். 


இங்கனம் மொழிந்த மைத்ரேயரைப் பார்த்து, “பூமி பலவகை உருவங்களைத் தரிக்கும் திறமையுடையதே. ஆயினும் எதற்காகப் பசுவின் உருவம் தரித்தது. அம்மன்னன் அந்தப் பூமியைக் கறக்கும்பொழுது எது கன்றாயிருந்தது? எதைப் பாத்ரமாகக் கொண்டான்? பூமி இயற்கையில் மேடும் பள்ளமுமாயிருப்பது. அதை அவன் எப்படி ஸமமாக்கினான்? இந்த்ரன் அவனது யாக குதிரையை ஏன் பறித்துக்கொண்டு போனான்? மஹானுபாவரே! அந்த ராஜர்ஷி, ப்ரஹ்மவித்துக்களில் சிறந்த ஸனத்குமாரரிடத்தில் தத்வஜ்ஞானத்தைப் பெற்று எந்த கதியை அடைந்தான்? இவன் அழகிய புகழுடையவனும் ஸமர்த்தனுமாகிய ஸ்ரீக்ருஷ்ண பகவானுடைய முதன்மையான அவதாரமல்லவா? ஆகையால் இவனுடைய புகழ் பரிசுத்தமாயிருக்குமே. இவனுடைய புகழ் மற்றும் ஏதேனும் உளதாயின், அதையும் எனக்கு மொழிவீராக; நான் பகவானிடத்திலும் அவனை உள்ளபடி அறிந்த உம்மிடத்திலும் பக்தியும் ப்ரீதியும் உடையவன். எனக்கு பகவான் ப்ருதுவாய் அவதரித்துப் பூமியைக் கறந்த வ்ருத்தாந்தத்தை உரைப்பீராக” என்று விதுரர் வினவினார். 

புதன், 12 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 93

நான்காவது ஸ்கந்தம் – பதினைந்தாவது அத்யாயம்

(ஸ்துதி பாடகர் முனிவர்களால் தூண்டப்பெற்று ப்ருது சக்ரவர்த்தியை ஸ்தோத்ரம் செய்தல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- வைதாளிகர்களும் (கவி, பாடகர்) வம்சாவளி படிப்பவர்களும் ஸ்துதிபாடகர்களும் அந்த ப்ருது சக்ரவர்த்தியின் வாக்காகிற அம்ருதத்தினுடைய பானத்தினால் மனக்களிப்புற்றவராகி, பகவானுடைய அம்சமான அந்த ப்ருதுவின் கல்யாண குணங்களை அறிந்த முனிவர்களால் தூண்டப்பெற்று அம்மன்னவன் இங்கனம் சொல்லிக்கொண்டிருப்பினும் அவனை ஸ்தோத்ரம் செய்தார்கள்.

ஸ்துதி பாடகர்கள் சொல்லுகிறார்கள்:- வாராய் மஹானுபாவனே! நாங்கள் உன்னுடைய மஹிமையை வர்ணிக்க வல்லரல்லோம். ஏனென்னில், நற்குணங்களால் விளங்கும் தன்மையரான ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகளுக்கும் நீ தேவனாயிருப்பவன். கல்யாண குணங்களால் அவர்களைக் காட்டிலும் மேலாக ப்ரகாசிக்கும் தன்மையன். நீ உன்னுடைய ஸங்கல்ப ரூப ஜ்ஞானத்தினால் இங்கனம் அவதரித்தாய். நீ ஸமஸ்த கல்யாண குணங்களும் நிறைந்த பகவானேயன்றி வேறன்று. ஆகையால் உன்னுடைய மஹிமையை நாங்கள் எங்கனம் வர்ணிக்க வல்லராவோம்? “நீங்கள் சொல்லுவது யுக்தமே (ஸரியே). பகவானுடைய குணங்கள் எல்லையில்லாதவை ஆகையால் அவற்றை வர்ணிக்க வல்லரல்லீர். நான் மானிடனாகையால் என் குணங்களை ஏன் வர்ணிக்கவல்லரல்லீர்?” என்னில், சொல்லுகிறோம், கேட்பாயாக. நீ வேனனுடைய அங்கத்தினின்று உண்டானவனாயினும், எல்லையில்லாத கல்யாண குணங்கள் நிறைந்த பகவானுடைய அம்சமே. அத்தகையனான உன் பௌருஷங்கள் இவ்வகைப்பட்டவையென்று நினைக்கமுடியாதவை. அவற்றில் ப்ரஹ்மாதிகளுடைய புத்திகளும் ப்ரமிக்கின்றன. இனி, நாங்கள் அவற்றை வர்ணிக்க வல்லரல்லோமென்பதைப் பற்றிச் சொல்லவேண்டுமோ? நாங்கள் உன் மஹிமையை வர்ணிக்க வல்லரல்லோமாயினும், மிகுந்த புகழுடையவனும் ஸ்ரீமஹாவிஷ்ணுவின் அம்சாவதாரமுமாகிய உன்னுடைய கதையாகிற அம்ருதத்தைப் பானம் செய்வதில் ஆவலுடையவர்களாகிய நாங்கள் முனிவர்களால் உபதேசமாகத் தூண்டப்பெற்றவராகி ஸ்லாகிக்கத்(புகழத்) தகுந்தவைகளும் தோஷமற்றவைகளுமான உன் சரித்ரங்களை விரித்துச் சொல்லுகிறோம். 

வியாழன், 6 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 92

நான்காவது ஸ்கந்தம் – பதினான்காவது அத்தியாயம்

(ப்ராஹ்மணர்கள் ராஜ்யத்தில் வேனனை அபிஷேகம் செய்தலும் அவன் அதர்மிஷ்டனாயிருப்பதைக் கண்டு ரோஷத்தினால் அவர்களே அவனைத் தமது தேஜஸ்ஸினால் (ப்ரகாசத்தினால், தவமஹிமையால்) வதித்தலும்.) 

மைத்ரேயர் சொல்லுகிறார்:- லோகங்களின் க்ஷேமத்தையே நினைக்கும் தன்மையரான ப்ருகு முதலிய ரிஷிகள் இங்கனம் விண்ணப்பம் செய்யப்பெற்றவராகி மனிதர்களைப் பாதுகாக்கும் திறமையுடைய மன்னவன் இல்லாது போவானாயின் ஜகத்தெல்லாம் தர்மத்தை இழந்து பசுவைப் போன்றதாகுமென்பதை ஆலோசித்து, வேதங்களை ஓதியுணர்ந்த மஹானுபாவர்களான அம்மஹர்ஷிகள் வீரனாகிய வேனனுடைய மாதாவான ஸுநீதையை அழைத்து அவளுக்குத் தெரிவித்து மந்த்ரி முதலியவர்களுக்கு அஸம்மதமாயிருப்பினும் வேறு கதி இல்லாமையால் வேனனையே பூமண்டலத்திற்கெல்லாம் நாதனாக அபிஷேகம் செய்தார்கள். கொடுந்தண்டனை செய்யும் தன்மையனான வேனன் ராஜாஸனத்தில் ஏறினானென்று கேட்டவுடன் திருடர் முதலியவர், ஸர்ப்பங்களிடத்தில் பயந்த எலிகள் போல் எங்கும் புலப்படாமல் ஒளிந்து கொண்டார்கள். அவ்வேனன் ராஜாஸனத்தில் ஏறினவுடன் அஷ்ட திக் பாலகர்களின் ஐச்வர்யங்களாலும் அணிமா முதலிய அஷ்ட ஐச்வர்யங்களாலும் (அணிமா முதலிய எட்டு பலன்கள் - அவையாவன

அணிமா - சரீரத்தை சிறிதாக்கிக்கொள்ளுதல் 
மஹிமா - பெரிதாக்கிக்கொள்ளுதல் 
லகிமா - லேசாகச் செய்தல் 
கரிமா - கனமாக்கிக்கொள்ளுதல் 
வசித்வம் - எல்லாவற்றையும் தன் வசமாக்கிக்கொள்ளுதல் 
ஈசத்வம் - எல்லாவற்றிற்கும் தலைவனாயிருத்தல் 
ப்ராப்தி - நிணைத்த பொருளைப் பெறுதல் 
ப்ராகாம்யம் - நினைத்தவிடம் செல்லும் வல்லமை)

கர்வமுற்றவனாகிச் சிறிதும் விவேகமின்றித் தன்னைத் தானே மேன்மையுடையவனாக பாவிப்பவனாகி மிகுந்த மதியுடையவனாகவும் மஹாபாக்யமுடையவனாகவும் நினைத்துக் கொண்டான். இங்கனம் ஐச்வர்ய மதத்தினால் கண் தெரியாத (இது செய்யலாம், இது செய்யலாகாதென்கிற விவேகமில்லாத) அவ்வேனன், மாவெட்டியில்லாத யானைபோல் அடக்குவாரில்லாமல் வழிதப்பி நடக்கின்றவனாகி ரதத்தில் ஏறிக்கொண்டு ஆகாயத்தையும் பூமியையும் நடுங்கச் செய்பவன் போன்று முழுவதும் உலாவினான். அவன் ஆங்காங்குள்ள அந்தணர்களை அழைத்து “வாரீர் ப்ராஹ்மணர்களே! யாகம், தானம், ஹோமம் இவைகளைச் செய்யலாகாது. எக்காலத்திலும் எவ்விடத்திலும் இந்த வ்யாபாரங்களைச் செய்யலாகாது” என்று பேரி வாத்யத்தை முழக்கி அனைவருக்கும் தர்மங்களைச் செய்யலாகாதென்று கட்டளையிட்டுத் தடை செய்தான். பிறகு ப்ருகு முதலிய முனிவர்களும் யாகம் செய்விப்பவர்களான ருத்விக்குகளும் பாவத்தொழிலனாகிய அவ்வேனனுடைய நடத்தையைக் கண்டு லோகங்களுக்கெல்லாம் வ்யஸனம் (கேடு) நேரிட்டதையும் ஆலோசித்து இரக்கத்துடன் இங்கனம் மொழிந்துகொண்டார்கள். 

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 91

நான்காவது ஸ்கந்தம் – பதிமூன்றாவது அத்யாயம்


ப்ருது சக்ரவர்த்தியின் சரித்ரம்


ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இங்கனம் மைத்ரேயர், த்ருவன் வைகுண்டலோகம் ஏறின வ்ருத்தாந்தத்தை மொழியக் கேட்டு, மேலும் பகவானிடத்தில் பக்தி வளரப்பெற்ற விதுரர் அந்த மைத்ரேயரைப் பார்த்து மேல்வருமாறு வினவத் தொடங்கினார்.


விதுரர் சொல்லுகிறார்:- பகவானுடைய சரித்ரங்களைத் தவிர மற்றெதையும் நெஞ்சிலும் நினைக்கலாகாதென்கிற வ்ரதம் மாறாதிருக்கப் பெற்றவரே! மைத்ரேய மஹர்ஷீ! ப்ரசேதஸ்ஸுக்களின் ப்ரஹ்மஸத்ரத்தில் (ப்ரசேதஸ் போன்ற ரிஷிகள் செய்யும் ப்ரஹ்மஸத்ரம் என்ற பல நாள் செய்யும் யாகத்தில்) நாரத முனிவர் த்ருவனுடைய மஹிமையைப் பாடினாரென்று நீர் சொல்லக் கேட்டேன். அந்த ப்ரசேதஸ்ஸ மக்கள் என்பவர் யாவர்? அவர் யாருடைய புதல்வர்? யாருடைய வம்சத்தில் பிறந்தவராகப் புகழ் பெற்றவர்? அவர்கள் எவ்விடத்தில் ப்ரஹ்மஸத்ரம் நடத்தினார்கள்? நாரதர் பாகவதர்களில் (பகவானிடத்தில் பக்தியுடையவர்களில்) சிறந்தவரென்று நினைக்கிறேன். தத்வோபதேசத்தினால் பகவானுடைய ஸாக்ஷாத்காரத்திற்கு உபாயமாயிருக்கின்றாரல்லவா? சேதன அசேதன தத்வங்களின் உண்மையையும் அவற்றிற்கு நிர்வாஹகனான (நியமிப்பவனான) ஈச்வரனுடைய உண்மையையும் அறிவித்து உலகமெல்லாம் பரமபுருஷனை ஸாக்ஷாத்கரிக்கும்படி செய்கின்றாரல்லவா? இவர் பஞ்சராத்ரம் (ஆகம சாஸ்த்ரம்) முதலிய சாஸ்த்ரங்களின் மூலமாய் பகவானை ஆராதிக்க வேண்டிய விதமாகிற க்ரியாயோகத்தை உலகங்களுக்கு உபதேசித்தாரல்லவா? அந்த நாரதர் பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவர். உலகத்திலுள்ளவர் அனைவரும் தத்தமது வர்ணாச்ரமங்களுக்கு உரியவைகளும் பகவானுடைய ஆராதன ரூபங்களுமான பஞ்ச மஹாயஜ்ஞாதி கர்மங்களை (ப்ரஹ்ம,தேவ, பித்ரு, பூத, நர யஜ்ஞங்கள் என்று தினமும் செய்ய வேண்டிய ஐந்து கர்மங்கள் பஞ்ச மஹா யஜ்ஞங்கள் எனப்படும்)  அனுஷ்டித்துக்கொண்டு யஜ்ஞங்களில் கொடுக்கிற ஹவிர்ப்பாகங்களைப் புசிப்பவனும் யஜ்ஞங்களுக்கு ப்ரபுவுமாகிய (யஜமானன், அதிகாரி) பகவானை ஆராதிக்க வேண்டுமென்று உலகங்களின் க்ஷேமத்திற்காக மொழிந்தார். (ஸமஸ்த யஜ்ஞங்களாலும் ஆராதிக்கப்படுமவனாகிய பகவானுடைய ஆராதனங்களே இவையென்னும் நினைவுடன் அனைவரும் தத்தமது வர்ணாச்ரமங்களுக்குரிய தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டுமென்று முறையிடுகிற பஞ்சராத்ரம் முதலிய க்ரந்தங்களை உலகத்திலுள்ளவர் அனைவரும் அறிந்து உஜ்ஜீவிக்கும்படி வெளியிட்டார். இப்படி மஹோபகாரம் செய்த அந்நாரத பகவானுடைய மேன்மையை என்னென்று சொல்லலாம்.) தேவ ரிஷியாகிய அந்த நாரத பகவான் ப்ரசேதஸ்ஸுக்களின் ப்ரஹமஸத்ரத்தில் எந்தெந்த பகவத் கதைகளை மொழிந்தாரோ, அவற்றையெல்லாம் கேட்க வேண்டுமென்று எனக்கு மிகவும் விருப்பமாயிருக்கின்றது. ஓ ப்ராஹ்மணோத்தமரே! அவற்றை எனக்கு மொழிவீராக.