ஞாயிறு, 23 மே, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 308

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்

(நாரதமஹர்ஷி வஸுதேவனுக்குப் பாகவத தர்மங்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கௌரவ குலத்தை மேன்மைப்படுத்தும் தன்மையனே! நாரத மஹர்ஷி ஸ்ரீக்ருஷ்ணனைப் பணிவதில் பேராவலுடையவராகி, அந்த ஸ்ரீக்ருஷ்ணனுடைய புஜங்களால் (தோள் வலிமையால்) பாதுகாக்கப்பட்ட த்வாரகாபுரியில் நிரந்தரமாக வாஸம் செய்து கொண்டிருந்தார். (ஜ்ஞானாதிகாரான (பரதத்வமான பகவானைப் பற்றிய அறிவு உடையவரான) அத்தேவர்ஷி பரமாத்ம ஸாக்ஷாத்காரமுடையவராகையால் (பகவானை த்யானத்தில் நேராகப் பார்த்தவராதலால்), அவருக்கு ஸ்ரீக்ருஷ்ணனைப் பணிவதில் அத்தகைய பேராவல் உண்டாயிருக்க வேண்டிய அவச்யம் என்னென்று சங்கிக்க (ஸந்தேஹப்பட) வேண்டாம்). 

ராஜனே! கண்களைப் படைத்தவன் எவன்தான் தன்னைப் பணிகிற ஸகல ஜனங்களின் ம்ருத்யுவையும் போக்கவல்லவைகளும், ஜ்ஞானாதிகர்களான (ஆத்ம, பரமாத்மாக்களைப் பற்றிய அறிவு உடைய) ப்ரஹ்ம, ருத்ராதி, தேவ ச்ரேஷ்டர்களால் பணியப் பெற்றவைகளுமாகிய ஸ்ரீக்ருஷ்ணனுடைய பாதார விந்தங்களைப் பணியாதிருப்பான்? வஸுதேவன் ஒருகால் தேவர்ஷியாகிய நாரதர் தன் க்ருஹத்திற்கு வர, அவரைப் பூஜித்து, ஸுகமாக உட்கார்ந்திருக்கின்ற அம்முனிவரை நமஸ்கரித்து இவ்வாறு மொழிந்தான்.

வஸுதேவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே! நீர் மூன்று லோகங்களையும் ஸஞ்சரித்துக் கொண்டிருப்பது என்னைப் போன்ற ஸமஸ்த ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவேயன்றி, வேறு காரணத்திற்காகவன்று. உத்தம ச்லோகனான (மிகுந்த சிறப்புடைய) பகவானுடைய ஸ்வரூப (இயற்கைத் தன்மை), ஸ்வபாவாதிகளை (குணங்களை) அறிவிக்கும் த்வாரமாய் (வழியாய்) இருப்பவர்களான உம்மைப் போன்ற பெரியோர்களின் யாத்ரை, ஸம்ஸார தாபங்களால் பீடிக்கப்பட்ட ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவே அல்லவா? தாய், தந்தைகள் வருவது பிள்ளைகளின் ஸுகத்திற்காக அல்லவா? (எங்களுடைய யாத்ரையை விசேஷித்துப் புகழ்கின்றாயே. தேவாதிகளுடைய யாத்ராதி கார்யங்களும் கர்மலோகங்களின் க்ஷேமத்திற்காகவே அல்லவா. அவற்றை விட்டு இதைப் புகழ்வது ஏனோ? என்றால்) பர்ஜன்யன் (மழை தேவதை) முதலிய தேவதைகளின் நடத்தை ப்ராணிகளின் துக்கத்திற்கும், ஸுகத்திற்கும் பொதுவாயிருக்கின்றது. (ஒருகால் துக்கத்தையும், ஒருகால் ஸுகத்தையும் கொடுக்கும்.) அச்சுதனிடத்தில் நிலைநின்ற மனமுடைய உம்மைப் போன்ற ஸாதுக்களின் நடத்தையோ என்றால் எப்பொழுதும் ஸுகத்தையே கொடுக்கும். தேவதைகளை எவர்கள் எப்படி பணிகின்றார்களோ, அவர்களை அத்தேவதைகள் அப்படியே அனுஸரிப்பார்கள். ஏனென்றால், அந்தத் தேவதைகள் நிழலைப் போன்று ப்ராணிகளின் பணிதலுடைய தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வை) அனுஸரித்துப் பலன் கொடுப்பார்கள். ஸாதுக்களோ என்றால், ஸம்ஸார தாபங்களால் (உலகியல் வாழ்வின் துன்பங்களால்) வருந்தின ஸமஸ்த ப்ராணிகளிடத்திலும், அவர்களுடைய துக்கங்களையெல்லாம் போக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவர்கள். 

வெள்ளி, 21 மே, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 307

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – முதல் அத்தியாயம்

(ப்ராஹ்மண சாபத்தினால் யாதவ குலம் க்ஷீணித்த (அழிந்த) வ்ருத்தாந்தத்தைக் (கதையைக்) கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீகிருஷ்ணன், பலராமனும் தானுமாகிப் பூதனா, சகட, யமளார்ஜூனாதிகளான ஆஸுர ப்ரக்ருதிகளை வதித்து, யாதவர்களால் சூழப்பட்டு, குரு, பாண்டவாதிகளுக்கு விரைவில் முடிக்கவல்ல கலஹத்தை விளைவித்து, அதர்மிஷ்டர்களை (தர்மத்தை பின்பற்றாதவர்களை) எல்லாம் ஒழித்து, இவ்வாறு பூமியின் பாரத்தை நீக்கினான். 

ஜகதீசனாகிய ஸ்ரீகிருஷ்ணன், சத்ருக்களாகிய துர்யோதனாதிகளால் கபடத்தை (சூதை) உட்கொண்ட சூதாட்டம், அவமதி (அவமானம்), த்ரௌபதியின் தலைமயிரைப் பிடித்திழுக்கை முதலிய பல அபகாரங்கள் (தீங்குகள்) செய்து, கோபமுறும்படி செய்யப்பட்ட பாண்டவர்களை நிமித்தமாகக் கொண்டு, கௌரவர் பக்ஷத்திலும், பாண்டவர் பக்ஷத்திலும் ஸஹாயமாகச் சேர்ந்த மன்னவர்களை ஒருவரையொருவரால் அடித்து முடித்து, இவ்வாறு பூமியின் பாரத்தை நீக்கினான். இவ்வளவென்று அளவிட்டறிய முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களையுடைய அப்பரமபுருஷன், தன் புஜங்களால் பாதுகாக்கப்பட்ட யாதவர்களைக் கொண்டு பூமிக்குப் பாரமான ராஜர்களின் ஸைன்யங்களையும், ராஜர்களையும் மடித்து, மீளவும் தனக்குள் அம்மஹானுபாவன், “பூமியின் பாரத்தை இவ்வளவு நீக்கியும் அது நீங்கவில்லையென்றே நினைக்கின்றேன். 

ஏனென்றால், ஒருவராலும் பொறுக்க முடியாத யாதவ குலம் இன்னம் அப்படியே இருக்கின்றதல்லவா? இந்த யாதவ ஸைன்யத்திற்கு மற்றொருவனால் எவ்விதத்திலும் பரிபவம் (அவமானம்) உண்டாகாது. இனி இதை அழிக்க வல்லவன் எவனுமே இல்லை. ஏனென்றால், இந்த யாதவ ஸைன்யம் என்னையே பற்றியிருப்பது. என்னைப் பற்றினவர்களுக்கு ஒருகாலும் கெடுதி உண்டாகாதல்லவா? 

அந்த யாதவர்கள் என்னையே கதியாகப் பற்றினமையால், வீர்ய, சௌர்யாதிகள் (வலிமை, பராக்ரமம்) அமைந்து, பெருமை உடையவர்களாய் இருக்கின்றார்கள். ஆகையால், இவர்கள் ஒருவராலும் பரிபவிக்க (அவமதிக்க) முடியாதவர்கள். மூங்கில் புதரில் மூங்கில்கள் ஒன்றோடொன்று இழைத்துக் கொள்கையால் புதர் முழுவதும் அழிந்து போகும்படி நெருப்பு உண்டாவது போல், இந்த யாதவ குலத்தில் தனக்குள் கலஹத்தை உண்டாக்கி, அதை முடித்து, பூமியின் பாரத்தை முழுவதும் நீக்கி, அவதார ப்ரயோஜனம் கைகூடப்பெற்று,  பசி, தாஹம் முதலிய ஊர்மிகள் (துன்ப அலைகள்) இன்றி சாந்தமான ஸ்ரீவைகுண்டமென்கிற என் ஸ்தானத்திற்குப் போய்ச் சேருகிறேன்” என்று சிந்தித்தான். 

வியாழன், 13 மே, 2021

குரு பரம்பரை வைபவம் - 9 - கோமடம் மாதவாச்சார்யார்

படியாய்க் கிடந்து பெருமாளின் பவளவாய் காண்பவர்


உபந்யாசகர் வர்ணனையில் தன்னை மறந்து அப்போது தான் ராமாயண சரிதமே நிகழ்வதாக நினைத்து உணர்ச்சி வயப்பட்டவர் குலசேகர ஆழ்வார். இப்படி அவர் பெருமாளின் மீது கொண்ட பிரேமை எல்லை கடந்ததாக இருந்தது.


ஒருமுறை, குலசேகர ஆழ்வார் திருவரங்கம் பெருநகரின் பெருமையை உணர்ந்து, பெரிய பெருமாளை சேவிப்பதற்கு நாள் குறித்தார். ‘‘இவர் பெரிய பெருமாளை சேவித்தால் மீண்டும் வரமாட்டார்’’ என்பதை உணர்ந்த மந்திரிகள், இவரது யாத்திரையை தடுத்து நிறுத்த ஓர் உபாயம் செய்தனர். அதாவது இவர் பாகவத ஆராதனம் செய்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர். ஆதலால், இவர் யாத்திரைக்கு குறித்த நாளன்று ஏராளமான வைஷ்ணவர்களை அழைத்து வந்து இவரது திருமுன்பு நிறுத்தினர். இவரும், எம்பெருமானை ஆராதிப்பதைக் காட்டிலும் அவரின் அடியார்களை ஆராதிப்பது தலைசிறந்தது என்று உணர்ந்து யாத்திரையை நிறுத்தி வைத்தார். இப்படியே இவர் ஸ்ரீரங்கம் செல்ல நாள் குறித்தபோதெல்லாம், வைஷ்ணவர்களை அனுப்பி யாத்திரையை நிறுத்தினர், மந்திரிகள். இப்படியாக இவர் புகழ்பாடும் விஷயம் ஒன்றில் ‘‘குஷ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரா தினே தினே, நமஹம் சிரஸா நமாமி ராஜானம் குலசேகரம்’’ என்ற வடமொழி ஸ்லோகம் வர்ணிக்கிறது. அதாவது எவருடைய தலைநகரில் ஸ்ரீரங்க யாத்திரையைப் பற்றிய பேச்சு தினந்தோறும் முழங்குகிறதோ, அப்படிப்பட்ட ராஜாவாகிய குலசேகரரை தலையால் வணங்குகிறேன் என்று இவர் பெருமை இன்றளவும் பேசப்படுகிறது.


மற்றுமொரு சுவையான சம்பவம். இவரது அரண்மனையினுள்ளும், ஆலோசனை மண்டபத்திலும் மற்றும் அந்தரங்க இடங்களிலும்கூட பாகவதர்கள் கோஷ்டி கோஷ்டியாக போய் வருவதற்கு உரிமை பெற்றிருந்தனர். இதைக் கண்டு பொறாமை கொண்ட சில மந்திரிகள், இவர்கள் மீது குலசேகரருக்கு வெறுப்பை உண்டாக்க திட்டமிட்டனர். 


ஒரு ஸ்ரீராம நவமி உற்சவத்தன்று எம்பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும்போது திருவாபரணங்களில் விலை மதிக்க முடியாததொரு முத்து மாலையை எடுத்து ஒளித்து வைத்தனர், மந்திரிகள். திருமஞ்சனம் முடிந்தபின் மாலையைக் காணாது, அர்ச்சகர்கள் அரசனிடம் அறிவித்தனர். அவர் மந்திரிகளை அழைத்து, ‘‘கள்வனை விரைவில் தேடிப் பிடியுங்கள்’’ என்று கட்டளையிட்டார். அதையே காரணமாகக் கொண்டு மந்திரிகள், ‘‘இந்த அரண்மனையில் தங்கு தடையின்றி திரியும் வைஷ்ணவர்களில் ஒருவரே இம்மாலையை எடுத்திருக்க வேண்டும்’’ என்று பழி சுமத்தினர். அதைக்கேட்ட ஆழ்வார் செவி புதைத்துக் கொண்டார். மந்திரிகளை கடிந்து, ‘‘எம்பெருமானின் அடியார்கள் ஒரு நாளும் இந்த அடாத செயலை நினைக்கக்கூட மாட்டார்கள். இதை நானே நிரூபித்துக் காட்டுவேன்’’ என்றார். 

புதன், 12 மே, 2021

குரு பரம்பரை வைபவம் - 8 - கோமடம் மாதவாச்சார்யார்

வெள்ளத்தை எதிர்த்து வந்த பிரபந்தங்கள்


திருமழிசை ஆழ்வாரின் திருப்பாதம் பற்றி நடந்த கணிகண்ணன் என்பவனுடைய விஷயத்தில் நாம் தெரிந்து கொள்வது என்ன? ஒரு சிஷ்யனுக்காக, பகவானுக்கே ஆணையிடும் சமர்த்தர்கள்தான், நம் உத்தம குருமார்கள். பைந்நாகப் பாயை சுருட்டிக் கொள் என்றும், விரித்து விடு என்றும் திருமழிசை ஆழ்வார் போன்ற ஆழ்வார்களைத் தவிர வேறு யார் கூற முடியும்? அப்படித்தான் ஒரு சமயம் துர்வாச மகரிஷியிடம் பகவான், ‘‘நான் என் பக்தர்கள், பாகவதர்களுக்கு அடிமை’’ என்கிறான். ஒட்டுமொத்தமாக இதன்மூலம், நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில் கோயிலில் உள்ள எம்பெருமானிடம் பக்தி சிரத்தையோடு அணுகினால், அவன் நம்முடன் கலந்துரையாடி நம்மை வாழ வைப்பான், நாம் ஆட்டுவிக்கும்படியெல்லாம் கூட ஆடுவான் என்பதேயாகும். 


மேலும் திருமழிசையாழ்வார், கச்சியிலிருந்து புறப்பட்டு திருக்குடந்தை எனும் கும்பகோணத்திற்கு  செல்ல விழைந்தார். ஆதியில் கடகோணம் என்றும் அழைப்பர். கும்ப கடம் உடைந்த ஊரல்லவா அது! அப்படிச் செல்லும்போது வழியில் பெரும்புலியூர் என்ற கிராமத்தில் ஒரு அந்தணரின் வீட்டுத் திண்ணையில் ஓய்வெடுத்தார். அந்த வீட்டில் சிலர் வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். ஆனால், அவர்கள் திருமழிசையார் வந்து வாசல் திண்ணையில் உட்கார்ந்த உடனேயே வேதம் ஓதுவதை நிறுத்தி விட்டனர். இந்த மகாயோகீஸ்வரரின் பெருமையை அறியாமல், மற்ற சாதிக்காரர்களின் காதில் வேத சப்தங்கள் விழக் கூடாது என்று நினைத்து வேதத்தை ஓதாமல் நிறுத்தி விட்டனர். 


இவர்களின் மனப்போக்கை அறிந்த ஆழ்வார் வேறொருவர் வீட்டுத் திண்ணையில் சென்று அமர்ந்தார். மீண்டும் வேதம் ஓதுதலை தொடங்க முற்பட அந்த அந்தணர்களுக்கு வேதம் மறந்து போயிற்று. இதைக் கண்ட ஆழ்வார் அங்கிருந்தபடியே ஒரு கருப்பு நெல்லை நகத்தால் கிள்ளி குறிப்பால் உணர்த்தினார். அதாவது வேதத்தில் ‘கிருஷ்ணானாம் வ்ரீஹீனாம் நக நிர்பின்னம்’ என்ற வாக்கியத்தை சொல்ல மறந்த அந்தணர்களுக்கு நினைவூட்டினார். இதற்கு என்ன பொருள் எனில், கிருஷ்ணம் என்றால் கருப்பு நிறம், வ்ரீஹீ என்றால் நெல். நிர்பின்னம் என்றால் கிள்ளிப் போடுதல் என்பதாகும். இந்த வரியை அவ்வளவு அழகாக நெல்லை கிள்ளி காட்டினார். அதன் பிறகு வேதம் ஓதுதலைத் தொடங்கி சீக்கிரமே முடித்துக்கொண்டு திருமழிசையாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். அதோடு நில்லாமல் அவரை பலவாறு உபசரிக்கவும் செய்தனர். அச்சமயத்தில் அந்த ஊர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் எந்த வீதியில் இந்த ஆழ்வார் சஞ்சரிக்கிறாரோ அந்த முகமாகத் திரும்பியருளினான். இந்த ஆச்சரியத்தை அர்ச்சகர் மூலமாக அறிந்த அவ்வூரார் அனைவரும் திகைத்துப் போயினர். அவ்வூரில் யாகம் செய்து கொண்டிருந்த பெரும்புலியூர் அடிகளிடம் சென்று ஆழ்வாருடைய பெருமையைக் கூற, அதுகேட்ட தீட்சி தரும் பேரானந்தம் கொண்டு ஆழ்வாரை எதிர்கொண்டழைத்தார். ஆழ்வாருக்கு அக்ர பூஜையையும் செய்தனர். அக்ர பூஜையென்றால் ஒரு நல்ல காரியத்தை ஆரம்பிக்குமுன் செய்யும் ஒரு பூஜை.

வியாழன், 6 மே, 2021

குரு பரம்பரை வைபவம் - 7 - கோமடம் மாதவாச்சார்யார்

அற்புதம் புரிந்த ஆழ்வார்


பரம பாகவதர்களை, பகவானின் அடியார்களை, பிரம்மாவாலும் ஏன் பரமசிவனாலும்கூட ஒன்றும் செய்ய முடியாது. இதற்கு திருமழிசையாழ்வாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவமே மிகச் சிறந்த சான்றாகும். ஒரு சமயம் திருமழிசையாழ்வார் கந்தைத் துணியொன்றை தைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ரிஷப வாகனத்தில் ஈசனும் பார்வதியும் ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்தனர். அச்சமயம் தேவி, ‘‘யார் இவர்?’’ என்று வினவினாள். ஈசனும் ‘‘இவர் மகா தேஜஸை உடையவர். மிகச் சிறந்த வைஷ்ணவர்’’ என்று வாயாரப் புகழ்ந்தார். அம்பிகை ஆச்சரியப்பட்டாள். ‘‘அப்படியானால் வேண்டும் வரத்தை அளித்துவிட்டுச் செல்லலாம் வாருங்கள்’’ என்றாள். இருவரும் திருமழிசையாழ்வாரின் இருப்பிடம் நோக்கி வந்தார்கள்.


திருமழிசையாரோ துணியை தைப்பதிலேயே கவனமாக இருந்தார். ‘‘நாங்கள் வரம் கொடுக்கவே வந்திருக்கிறோம். நீங்கள் இப்படி பாராமுகமாக இருக்கிறீர்களே!’’ என்று சிவ-பார்வதி கேட்டனர். 

ஆனால், திருமழிசையாரோ, ‘‘எமக்கு ஒன்றும் வேண்டாம்’’ என்று திண்ணமாகக் கூறினார். 

‘‘இப்படி நாங்களே வரம் தர முன்வரும்போது மறுக்கிறீர்களே,’’ என்று தொடர்ந்து கேட்டனர். 

‘‘சரி, மோட்ச லோகமான பரமபதத்தை அருள முடியுமா?’’ என்று கேட்டார் திருமழிசையாழ்வார்.

‘‘மோக்ஷமிச்சேத் ஜனார்த்தனாத். மோட்சம் தரவல்லவன் முகுந்தனே, அது எம்மாலாகாது. வேறு ஏதாவது கேளும்’’ என்றார், மகாதேவர். 


‘‘சரி, அந்த முக்தியைப் பெறுவதற்கும் அதற்கான ஆன்மிக சாதனங்களை அனுஷ்டிக்கவும் நீண்ட ஆயுளைத் தரவேண்டும்’’ என்று கேட்டார். 


‘‘உமது ஆயுள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட ஒன்று. என்னால் அதை நீட்டிக்க முடியாது’’ என்று ஈசன் பதில் கூறினார். 


கடைசியாக திருமழிசையாழ்வார், ‘‘இந்த நூல் ஊசியின் துளையின் வழியே சுலபமாக வரும்படி செய்யுங்கள்’’ என்று பரிகாசமாகக் கூறினார். இதனைக் கேட்ட பரமசிவம் கடும் சினம் கொண்டார். ‘‘செருக்குடைய உன்னை அனங்கனைப்போல (மன்மதன் போல) சரீரம் இல்லாதபடி இப்போதே பொசுக்கி விடுகிறேன் பார்’’  என்று கூறி நெற்றிக் கண்ணை திறந்தார். அதிலிருந்து அக்னி ஜுவாலை கிளர்ந்தெழுந்தது. 


இதைக் கண்ட திருமழிசைப்பிரான், ‘‘இந்திரன் போல் உடல் முழுதும் கண் காட்டினாலும் அஞ்சுவேனல்லன்’’ என்று சொல்லி தமது வலது திருவடியின் பெருவிரலில் உள்ளதொரு கண்ணைத் திறந்தார். அதிலிருந்து பெருந் தீ எழுந்து ஊழிகால நெருப்பினும் பன்மடங்கு பெரியதாகி நெற்றிக் கண்ணிலிருந்து கிளர்ந்த நெருப்பை அடக்கி, முக்கண்ணனாரையே சுடத் தொடங்கிற்று. கங்காதரரான ஈசன் அந்தத் தீயை சாந்தப்படுத்துவதற்காக தன் சடையிலிருந்த பல மேகங்களை ஏவி ஊழிக் கால மழைபோல பொழியச் செய்தார். அந்த மேகங்களும் மழை பொழிந்ததனால் பெரு வெள்ளம் ஏற்படவும் பரம பாகவதரான திருமழிசையாழ்வார் சிறிதும் அசையாமல் எம்பெருமானை தியானித்தபடியே இருந்தார். இறுதியில் திரிபுராந்தகரான சிவபெருமான் ஆழ்வாருக்கு ‘பக்தி ஸாரர்’ என்று விருதை அளித்து கயிலாயம் சேர்ந்தார். இந்த விஷயத்தை ஆழ்வாரே தமது பாசுரத்தில் தெரிவிக்கிறார்.

ஶ்ரீமத் பாகவதம் - 306

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – தொண்ணூறாவது அத்தியாயம்

(ஸ்ரீக்ருஷ்ணன் தன் பத்னிகளோடு க்ரீடித்த விதமும், அவர்களுக்கு அவனிடத்திலுள்ள ப்ரேமாதிசயமும் (அதிகமானஅன்பும்), அவனுடைய புத்ர - பெளத்ராதி ஸந்ததியும், இந்த ஸ்கந்தத்தின் ச்ரவணாதி (கேட்பது முதலியவற்றின்) பலமும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு வல்லபனான அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், ஸமஸ்த ஸம்பத்துக்களும் நிறைந்து, மேன்மையுடைய வ்ருஷ்ணிகளால் சூழப்பெற்றதும், சிறந்த அலங்காரங்களை அணிந்து புதிய யௌவன (இளம்) வயதினால் மிகுந்த ஒளியுடையவர்களும், உப்பரிகைகளில் பந்து முதலியவற்றைக் கொண்டு விளையாடலுற்று மின்னல்கள் போல் விளங்குபவர்களுமாகிய பெண்மணிகள் மனக்களிப்புடன் வாஸம் செய்யப் பெற்றதும், மதஜலத்தைப் பெருக்குகின்ற யானைகளாலும், நன்கு அலங்கரித்துக் கொண்டிருக்கிற போர் வீரர்களாலும், ஸ்வர்ணாலங்காரம் செய்யப்பெற்று விளங்குகின்ற குதிரைகளாலும், அத்தகைய தேர்களாலும், என்றும் நிரம்பின ராஜமார்க்கங்களையுடையதும், உத்யானங்கள், உபவனங்கள் இவை நிறைந்திருப்பதும், புஷ்பித்திருக்கின்ற வ்ருக்ஷங்களின் (மரங்களின்) வரிசைகளில் நுழைந்து மதுபானம்செய்து (தேன் அருந்தி) களித்திருக்கின்ற வண்டுகளின் ஸமூஹங்களால் முழுவதும் த்வனி உண்டாயிருக்கப் பெற்றதுமாகிய த்வாரகையென்னும் தன் பட்டணத்தில் பதினாறாயிரம் பத்னிகளுக்கும் தானொருவனே வல்லபனாகி (கணவனாகி), அத்தனை அற்புத உருவங்களை ஏற்றுக்கொண்டு, போக்ய (அனுபவிக்கப்படும் பொருட்கள்) போகோபகரணாதி (அனுபவிப்பதற்கான கருவிகள்) ஸம்ருத்திகளெல்லாம் (நிறைவு, செல்வச்செழிப்பு) நிறைந்திருப்பவைகளும், மலர்ந்த நெய்தல், செங்கழுநீர், ஆம்பல், தாமரை ஆகிய இப்புஷ்பங்களின் தூள்கள் படிந்து வாஸனையமைந்த நிர்மலமான ஜலமுடையவைகளும், பக்ஷிகள் இனமினமாய்க் கூவப்பெற்றவைகளுமாகிய அப்பெண்மணிகளின் க்ருஹங்களில் விளையாடிக் கொண்டிருந்தான். 

அளவற்ற வைபவமுடைய அப்பரமன், மடந்தையர்கள் ஆலிங்கனம் செய்யவும், அவர்களது கொங்கையின் குங்குமக் குழம்பு தன் அங்கமெல்லாம் படியவும் பெற்று, அவர்களுடன் தாமரை மடுக்களில் இழிந்து ம்ருதங்கம், பணவம், ஆனகம், வீணை முதலிய வாத்யங்களை வாசிக்கிற கந்தர்வர்களாலும், புராணாதிகள் படிக்கிற ஸுதர்களாலும், வம்சாவளி படிக்கிற மாகதர்களாலும், ஸ்துதி பாடகர்களான வந்திகளாலும், பாடப்பெற்று விளையாடினான். 

தன்னை அடைந்தவர்களைக் கைவிடாது காக்கும் தன்மையுள்ள அம்மஹானுபாவன், அம்மடந்தையர்மணிகள் சிரித்துக்கொண்டு ஜலமிறைக்கும் பாத்ரங்களால் ஜலத்தை எடுத்திறைக்க, தானும் அவர்கள் மேல் ஜலத்தை எடுத்திறைத்துக் கொண்டு யக்ஷராஜன் (குபேரன்) யக்ஷ ஸ்த்ரீகளோடு விளையாடுவது போல் அவர்களோடு விளையாடினான். 

வஸ்த்ரங்கள் நனைந்து, ஸ்தன (முலை) ப்ரதேசங்கள் (பகுதிகள்) வெளித்தோன்றவும், பெரிய தலைச் சொருக்கினின்று புஷ்பங்கள் உதிரவும் பெற்ற அம்மாதரசிகள், தம் காதலன் தங்கள் மேல் ஜலம் இறைப்பதைப் பரிஹரிக்க (தவிர்க்க) வேண்டுமென்னும் எண்ணத்தினால் அவனையே ஆலிங்கனம் செய்து, அதனால் விளைந்த மன்மத விகாரத்தினால் திகழ்கின்ற அழகிய முகமுடையவர்களாகி விளங்கினார்கள். 

செவ்வாய், 4 மே, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 305

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்தொன்பதாவது அத்தியாயம்

(ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்களில், விஷ்ணுவே பரன் (மேலானவன்) என்று அறுதியிடுதல் (உறுதிப்படுத்துதல்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனே! ரிஷிகள், ஸரஸ்வதி நதிக்கரையில் ஸத்ரயாகம் (நீண்ட நாட்கள் செய்யும் யாகம்) நடத்த உட்கார்ந்தார்கள். ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்களாகிய மூன்று தேவர்களுக்குள் எவன் பெரியவனென்று அவர்களுக்குள் விவாதம் உண்டாயிற்று. மன்னவனே! அவர்கள் அதை நிச்சயிக்க விரும்பி, ப்ரஹ்மாவின் புதல்வராகிய, ப்ருகு மஹர்ஷியை அதைத் தெரிந்து கொண்டு வரும்படி அனுப்பினார்கள். 

அவர், ப்ரஹ்ம தேவனுடைய ஸபைக்குச் சென்றார். அம்முனிவர், ப்ரஹ்ம தேவனுடைய ஸத்வ குணத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டு, அத்தேவனை ஸ்தோத்ரம் செய்யாமல், வெறுமனே இருந்தார். தன்னொளியினால் ஜ்வலித்துக் கொண்டிருக்கிற மஹானுபாவனாகிய அந்த ப்ரஹ்ம தேவன், அவ்வாறு ஸ்தோத்ரம் செய்யாதிருந்ததற்கு அம்முனிவர் மேல் கோபித்துக் கொண்டான். அந்த அயன் (ப்ரஹ்மா) ஸமர்த்தனாகையால், அக்னியை அதன் கார்யமான ஜலத்தினால் அணைப்பது போல, தன் புதல்வராகிய ப்ருகு முனிவர் விஷயமாகத் தன் மனத்தில் உண்டான கோபத்தை, தன் விவேக புத்தியினால் அடக்கிக் கொண்டான். 

அப்பால், அம்முனிவர் சிவனுடைய ஸத்வ குணத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டுக் கைலாஸ பர்வதத்திற்குப் போனார். மஹேச்வரனாகிய அந்த ருத்ரதேவன், ஸந்தோஷத்துடன் எழுந்து, ப்ராதாவான அம்முனிவரை அணைத்துக் கொள்ள ஆரம்பித்தான்: அம்முனிவர், “நீ வழி தப்பி, தப்பு வழியில் நடப்பவன். நீ என்னைத் தீண்டலாகாது” என்று மொழிந்து, அவன் தன்னை அணைப்பதற்கு இசையாதிருந்தார். அந்த ருத்திரன் கோபித்து, நெருப்பு எரிகின்ற தீக்ஷணமான (கூர்மையான) கண்களுடையவனாகி, சூலத்தை ஏந்திக்கொண்டு, அந்த ப்ருகு முனிவரை வதிக்கத் தொடங்கினான். பார்வதிதேவி, அவனுடைய பாதங்களில் விழுந்து, வேண்டாமென்று நல்வார்த்தைகள் சொல்லி, ஸமாதானப்படுத்தினாள். 

பிறகு, அம்முனிவர் எங்கு ஜனார்த்தனன் வாஸம் செய்கிறானோ அத்தகையதான வைகுண்ட லோகத்திற்குச் சென்று, ஸ்ரீமஹாலக்ஷ்மியின் மடியில் சயனித்துக் கொண்டிருக்கிற அப்பகவானை, மார்பில் காலால் உதைத்தார். ஸத்புருஷர்களுக்குக் கதியாகிய அந்தப் பகவான், உடனே ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் படுக்கையினின்றும் எழுந்து, இறங்கிச் சீக்ரமாக அம்முனிவரைச் சிரத்தினால் நமஸ்காரம் செய்தான். மற்றும், அப்பகவான் அம்முனிவரைப் பார்த்து மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அந்தணரே! உமக்கு நல்வரவாகுக! இந்த ஆஸனத்தில் க்ஷணகாலம் வீற்றிருப்பீராக. ப்ரபூ! நீர் வந்ததை அறியாதிருந்த எங்களுடைய அபராதத்தைப் பொறுத்தருள வேண்டும். மஹானுபாவரே! கங்காதி புண்ய தீர்த்தங்களுக்கும் தூய்மையை விளைக்கவல்ல உமது ஸ்ரீபாத தீர்த்தத்தினால், என்னையும், என்னுடைய லோகத்தையும், என்னிடத்தில் நிலைநின்ற மனமுடைய லோகபாலர்களையும், புனிதம் செய்வீராக. மஹானுபாவரே! இப்பொழுது, நான் ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு என்றும் மாறாத இடமாயினேன். உம்முடைய பாதம் படுதலால், பாபங்களெல்லாம் தீரப்பெற்ற என்னுடைய மார்பில், ஸ்ரீமஹாலக்ஷ்மி என்றும் தவறாது வஸித்திருப்பாள்.

திங்கள், 3 மே, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 304

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்தெட்டாவது அத்தியாயம்

(பகவத் பக்தர்களின் ஏழ்மைக்குக் காரணம் கூறுதலும், பஸ்மாஸுர வத வ்ருத்தாந்தமும்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹர்ஷீ! தேவதைகளிலும், அஸுரர்களிலும், மனுஷ்யர்களிலும், எவர் அமங்கலனான (நன்மையற்ற) ருத்ரனைப் பணிகிறார்களோ, அவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களும், போகம் (அனுபவிக்கும் பொருட்களை) உடையவர்களுமாய் இருக்கின்றார்கள். ஸ்ரீ மஹாலக்ஷ்மிக்கு வல்லபனான (கணவனான) பரமபுருஷனைப் பணிகிறவர்களோ என்றால், அவ்வாறு பணக்காரர்களாயிருக்கிறது இல்லை. (செல்வத்திற்கு அதிஷ்டான தேவதையான ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு வல்லபனான (கணவனான) பரமபுருஷனைப் பணிகிறவர் அன்றோ பணக்காரர்களாயிருக்க வேண்டும். கையில் கபாலம் ஏந்திப் பிச்சை எடுக்கிற சிவனைப் பணிகிறவர்கள் ஏழைகளாய் இருக்க வேண்டுமல்லவா? அப்படியிருக்க, இப்படி விபரீதமாயிருக்கிறது. விஷ்ணு, ருத்ரர்கள் இருவரும் ஒருவரோடொருவர் பொருந்தாத ஸ்வபாவமுடையவர்கள். அந்த ப்ரபுக்களைப் பணிகிறவர்களுக்குப் பலன் விபரீதமாயிருக்கின்றது. இவ்விஷயத்தில் எங்களுக்குப் பெரிய ஸந்தேஹமாயிருக்கிறது. இதை நாங்கள் அறிய விரும்புகிறோம்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சிவன், பார்வதியுடன் கூடி, ஸர்வகாலமும் மூன்று வகைப்பட்ட அஹங்காரம்  நிறைந்த மூர்த்தியுடையவன்; மற்றும், தமோ குணத்தினால் மூடப்பட்டவன். அஹங்காரம், வைகாரிகமென்றும், தைஜஸமென்றும், தாமஸமென்றும் மூன்று வகைப்பட்டது. அந்த மூன்று வகைப்பட்ட அஹங்காரத்தினின்று பதினொரு இந்திரியங்களும் தன்மாத்ரங்களோடு கூடின பஞ்ச பூதங்களுமாகிய பதினாறு விகாரங்கள் உண்டாயின. (தாமஸ அஹங்காரத்தினின்று தன்மாத்ரங்களோடு கூடின பஞ்ச பூதங்களும், வைகாரிக அஹங்காரத்தினின்று பதினொரு இந்திரியங்களும் உண்டாயின.  ராஜஸ அஹங்காரம் அவ்விரண்டிற்கும் உதவி செய்யும் தன்மையது. இம்மூன்று வகைப்பட்ட அஹங்காரங்களுக்கும், ருத்ரன் அதிஷ்டான தேவதை). இத்தகைய அஹங்காரம், அதன் விகாரங்கள் ஆகிய இவற்றின் அதிஷ்டான தேவதைகளான ருத்ரன் முதலியவர்களில் எவரையேனும் பணியும் புருஷன், ஸமஸ்த ஐச்வர்யங்களையும் பெறுகின்றான். 

பரமபுருஷனோ என்றால், ஸத்வம் முதலிய ப்ராக்ருத குணங்களுக்கு உட்படும் தன்மையற்றவன்; ஜ்ஞான, ஐச்வர்யாதி குணங்களெல்லாம் நிறைந்தவன்; சேதனா சேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணன் (வேறானவன்); ஸர்வஜ்ஞன் (அனைத்தும் அறிந்தவன்); அருகிலிருந்து ஜீவாத்மாக்களின் குண, தோஷங்களைப் பார்த்துக் கொண்டிருப்பவன். ஆகையால், அத்தகைய பரமபுருஷனைப் பணிகிறவன், ப்ராக்ருத குணங்களற்று முக்தனாகிறான்.

ருத்ராதிகளோ என்றால், இதற்கு நேரே விபரீதமான ஸ்வபாவம் உடையவர்கள். ப்ரஹ்ம, ருத்ராதிகள், ரஜஸ், தமஸ்ஸுக்கள் நிறைந்த ஸ்வபாவமுடையவர் ஆகையாலும், ஸத்வாதி குணங்களுக்கு உட்பட்டு நடப்பவர் ஆகையாலும், ஷாட்குண்யபூர்ணர் (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவர்) அன்று ஆகையாலும், ஜீவகோடியில் சேர்ந்தவராகையாலும், ஸர்வஜ்ஞர் அன்று ஆகையாலும், அவர்களுக்கு மோக்ஷம் கொடுக்கும் திறமை கிடையாது. பின்னையோவென்றால், தங்கள் சக்திக்குத் தகுந்தபடி அர்த்த காமாதிகளைத்தான் அவர்கள் கொடுப்பார்கள். 

ஞாயிறு, 2 மே, 2021

ஶ்ரீமத் பாகவதம் - 303

தசம (பத்தாவது) ஸ்கந்தம் – உத்தர பாகம் – எண்பத்தேழாவது அத்தியாயம்

(ச்ருதி கீதை)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ப்ரஹ்ம ரிஷீ! ஜாதி, குணம், க்ரியை இவற்றில் ஏதேனுமொன்றை முன்னிட்டுக் கொண்டு, அவற்றிற்கிடமான வஸ்துக்களை அறிவிப்பவைகளான வேதங்கள், பரப்ரஹ்மத்தை நேரே எப்படி அறிவிக்கவல்லவையாகும். ஏனென்றால் அப்பரப்ரஹ்மம், சேதனர்களோடாவது (ஜீவாத்மாக்களோடாவது), அசேதனங்களோடாவது (ஜடப்பொருட்களோடாவது) ஒப்பிட்டு இத்தகையதென்று நிரூபிக்க முடியாதது. ஆகையால், ஜாதியை முன்னிட்டுக் கொண்டு அறிவிக்க முடியாது. அது சேதனா சேதனங்களை (ஜீவாத்மாக்கள் மற்றும் ஜடப்பொருட்களைக்) காட்டிலும் விலக்ஷணமாகையால் (வேறானதாகையால்), அதை அவற்றோடு ஒப்பிட்டு இத்தகையதென்று அறிவிக்க முடியாது. மற்றும், அந்தப் பரப்ரஹ்மம், ஸத்வ, ரஜஸ், தமஸ்ஸுக்களென்கிற மூன்று குணங்களும் தீண்டப் பெறாதது. குணத்தை முன்னிட்டு வஸ்துக்களை அறிவிக்கும் சப்தங்கள், அக்குணங்கள் தீண்டப்பெறாத அந்த ப்ரஹ்மத்தை எவ்வாறு அறிவிக்கும்? இவ்வாறே செயல்கள் எவையுமில்லாத அந்த ப்ரஹ்மத்தைச் செயல்களை முன்னிட்டு வஸ்துக்களை அறிவிக்கும் சப்தங்கள் எவ்வாறு அறிவிக்கவல்லவையாம். (ஆகையால், வேதங்களெல்லாம் பரப்ரஹ்மத்தையே முக்யமாக அறிவிக்கின்றன என்று நீர் பல தடவைகளில் மொழிந்தது எவ்வாறு பொருந்தும்?)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- திறமையுள்ள ஸர்வேச்வரன், ஜீவாத்மாக்களுக்குக் கரண, களேபரங்களை (இந்த்ரிய, சரீரங்களை) அளிப்பதற்காகவும், அவர்களுக்கு க்ஷேமங்களை விளைப்பதற்காகவும், அவர்கள் ஸ்வரூபத்தை அறிந்து மோக்ஷம் பெறுதற்காகவும், லீலைக்காகவும், ஜனங்களுக்கு புத்தி, இந்திரியம், மனம், ப்ராணன் இவற்றைப் படைத்தான். ஈச்வரன் இருபத்து நான்கு தத்வங்களையும், தேவ, மனுஷ்யாதி சரீரங்களையும் படைத்து, அவற்றுள் ஜீவன் மூலமாய் ப்ரவேசித்து, அவற்றைச் சரீரமாகக் கொண்டு, அவற்றின் நாமங்களுக்குத் தானே முக்யமான பொருளாகி, அவையெல்லாம் அவனேயென்னும் படி அமைந்திருக்கிறானாகையால், அவனிடத்தில் தேவ, மனுஷ்யத்வாதி ஜாதியாவது, ஸத்வ, ரஜஸ், தமோ குணங்களாவது, போதல், வருதல், முதலிய செயல்களாவது இல்லையாயினும், அவற்றை முன்னிட்டுப் பொருள்களை அறிவிக்கிற வேத வாக்யங்களெல்லாம் அவற்றிற்கிடமான சேதனா சேதனங்கள் (ஜீவாத்மாக்கள் மற்றும் ஜடப்பொருட்கள்) மூலமாய் அவனை அறிவிக்கின்றனவாகையால், வேதங்களெல்லாம் அவனையே முக்யமாக அறிவிக்கின்றன என்பதற்குத் தடையில்லை. 

ஆனால், “ஸமஸ்த சப்தங்களுக்கும் பரமபுருஷனே முக்யமான பொருளென்பது உலகத்தவர்களுக்கு ஏன் தெரியவில்லை? உலகத்திலுள்ளவர் அந்தந்த சப்தங்களுக்கு அந்தந்த வஸ்துக்களையே பொருளாக அறிகிறார்களன்றி, பரமபுருஷனே முக்யமான பொருளென்று அறியவில்லை. இப்படி உலகத்தில் ஏற்பட்டிருக்கிற வழக்கத்தை அழித்து, புதிய வழக்கத்தை எப்படி ஸாதிக்க முடியும்” என்றால் சொல்லுகிறேன்; கேள். 

ஸமஸ்த சப்தங்களும் பரப்ரஹ்மத்தையே முக்யமாக அறிவிக்கிறதென்னும் இந்த ரஹஸ்யம் உபநிஷத்துக்களின் அர்த்தங்களை ஆராய்ந்தறிந்தவர்களுக்குத் தெரியுமன்றி, மற்றவர்களுக்குத் தெரியாது. பெரியோர்களுக்கும் பெரியோர்களான வாமதேவாதி மஹர்ஷிகள் இந்த ரஹஸ்யத்தை நிச்சயித்திருக்கிறார்கள். இவ்வாறு ரஹஸ்யமான இந்தச் சப்த சக்தியை ச்ரத்தையுடன் மனத்தில் தரிக்கும் புருஷன், ப்ரார்த்திக்க வேண்டியது மற்ற எதுவுமின்றி முக்தியாகிய க்ஷேமத்தைப் பெறுவான். இவ்விஷயத்தில் ரிஷி வேஷம் தரித்துப் பத்ரிகாச்ரமத்தில் வஸிக்கிற நாராயணனுக்கும், நாரத மஹர்ஷிக்கும் வினா விடையாக நடந்த ஒரு இதிஹாஸத்தைச் சொல்லுகிறேன்; கேள். 

பகவானிடத்தில் அன்புடையவரும், அவனுக்கு அன்பரும், ஓயாமல் உலகங்களில் திரிந்து கொண்டிருப்பவருமாகிய நாரத மஹர்ஷி, ஒருகால் புராண ரிஷியாகிய நாராயணனைப் பார்க்க விரும்பி, வர்ணாச்ரம தர்மங்கள், ஆத்ம ஜ்ஞானம் (ஜீவாத்மா, பரமாத்மா பற்றிய அறிவு), ராக (விருப்பு), த்வேஷாதிகள் (வெறுப்பு) தீண்டப்பெறாமையாகிற சாந்தி, இக்குணங்களுடையவனாகி இப்பாரத வர்ஷத்திலுள்ள ப்ராணிகளின் க்ஷேமத்திற்காகவும், மோக்ஷத்திற்காகவும், கல்பம் வரையில் தவத்தில் இழிந்திருக்கிற அந்நாராயணனுடைய ஆச்ரமமாகிய பத்ரிகாச்ரமத்திற்குச் சென்றார். 

கௌரவ ச்ரேஷ்டனே! அங்குக் கலாபக்ராமத்தில் வசிக்கின்ற ரிஷிகளால் சூழப்பட்டு உட்கார்ந்திருக்கின்ற அந்நாராயணனை நாரதர் வணங்கி, நீ வினவின இவ்விஷயத்தைப் பற்றியே வினவினார். மஹானுபாவனாகிய அந்நாராயணனும், அந்நாரத மஹர்ஷிக்கு ரிஷிகள் கேட்டுக் கொண்டிருக்கையில் உனக்கு நான் சொன்ன இந்தப் பரிஹாரத்தையே (தீர்வையே) மொழிந்தான். 

ஜனலோக வாஸிகளான பெரியோர்களாகிய ஸனந்தனாதிகளுக்கும், இவ்விஷயத்தைப் பற்றியே முன்பு வினா, விடையாக ஸம்வாதம் (உரையாடல்) நடந்தது. அந்த ப்ரஹ்ம வாதத்தையே (பகவானைப் பற்றிய உரையாடலையே) நாராயண பகவான் நாரதருக்கு மொழிந்தான்.