வெள்ளி, 31 ஜனவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 90

நான்காவது ஸ்கந்தம் – பன்னிரண்டாவது அத்தியாயம்

(த்ருவன் குபேரனால் அபிநந்தனம் செய்யப்பெற்றுத் (பாராட்டப்பட்டு) தன் பட்டணம் சேர்ந்து பல யாகங்கள் செய்து ஸ்ரீவிஷ்ணுவின் ஸ்தானத்தை அடைதல்)

த்ருவன் ஸ்வாயம்புவ மனுவின் உபதேசத்தினால் கோபம் தீர்ந்து யக்ஷர்களை வதிப்பதினின்று திரும்பியிருப்பதை அறிந்து மஹானுபாவனாகிய குபேரன் அவ்விடம் வந்து சாரணர் யக்ஷர் கின்னரர் இவர்களால் துதி செய்யப்பெற்ற அந்த குபேரன், கை கூப்பிக்கொண்டு நிற்கிற அந்த த்ருவனைப் பார்த்து இங்கனம் மொழிந்தான்.

குபேரன் சொல்லுகிறான்:- வாராய் க்ஷத்ரிய குமாரனே! நீ யக்ஷர்களை வதித்தமையால் உண்டான பாபம் தீரப் பெற்றாய். நான் உன் விஷயத்தில் மிகுதியும் ஸந்தோஷம் அடைந்தேன். அதற்குக் காரணம் என்னெனில், நீ உன் பாட்டனாராகிய (தாத்தாவாகிய) ஸ்வாயம்புவ மனுவின் உபதேசத்தினால் துறக்கமுடியாத வைரத்தையும் (விரோதத்தையும்) துறந்தாயல்லவா? அதுவே காரணம். “நான் யக்ஷர்களை வதித்தமையால் உண்டான பாபத்தின் ஸம்பந்தம் உடையவனாயிருக்க எப்படி நான் பாபமற்றவனாவேன்?” என்னில், சொல்லுகிறேன், கேட்பாயாக. நீ யக்ஷர்களை வதித்தவனல்லை. யக்ஷர்களும் உன் ப்ராதாவை (ஸஹோதரனை) வதிக்கவில்லை. ஏனென்னில், ப்ராணிகளின் மரணத்திற்கும் உத்பத்திக்கும் காலஸ்வரூபனான ஈச்வரனே ஸமர்த்தனன்றி, மற்றவர்க்கு அந்த ஸாமர்த்யம் இல்லை. “ஒருவரையொருவர் வதித்தமையும் அதனாலுண்டான வேர்வை இளைப்பு முதலியதும் எனக்கும் யக்ஷர்களுக்கும் ப்ரத்யக்ஷமாயிருக்க, அதை நீ செய்யவில்லை. ஈச்வரனே அதைச் செய்தானென்பது எங்கனம் பொருத்தும்” என்னில், சொல்லுகிறேன். ப்ராணிகள் தேஹத்தைக் (உடலைக்) காட்டிலும் விலக்ஷணமான (வேறான) ஆத்மாவின் உண்மையை அறியாமல் அந்த தேஹத்தையே ஆத்மாவாக ப்ரமித்து (தவறாக, பொய்யாக நினைத்து) “நான் கொன்றேன். நீ கொன்றாய்” என்று நினைக்கின்றார்கள். “நான், நீ” என்கிற அறிவில் தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை அவர்கள் அறிந்தவரல்லர். நானென்று தோற்றுகிற ஆத்மாவைக் காட்டிலும் வேறுபட்ட தேஹத்தையே ஆத்மாவாக நினைக்கின்றார்களாகையால் அவர்கள் விபரீத ஜ்ஞானமுடையவர். விபரீத ஜ்ஞானமாவது ஒரு வஸ்துவை மற்றொரு வஸ்துவாக நினைக்கை. முத்துச்சிப்பியைப் பார்த்து இது வெள்ளியென்று நினைக்கை விபரீதஜ்ஞானம். ஒரு வஸ்துவுக்கு ஒரு குணம் இயற்கையில் ஏற்பட்டிருக்க, அதைவிட்டு அதிலில்லாத மற்றொரு குணத்தை அதிலிருப்பதாக நினைக்கை அன்யதா ஜ்ஞானமென்று கூறப்படும். சங்கம் வெளுத்திருக்க, அதைப் பொன்னிறமுடையதாக நினைக்கை அன்யதாஜ்ஞானமாம். இவர்கள், பிறரைக் கொல்லும் தன்மையனல்லாத ஆத்மாவிடத்தில் கொல்லும் தன்மையை ஏறிடுகிறார்களாகையால், அன்யதாஜ்ஞானமும் உடையவர்களே. ஜீவாத்மா கொல்லும் தன்மையனுமல்லன். ஆத்மாவுக்கு உத்பத்தியாவது தேஹஸம்பந்தம் (உடலின் சேர்க்கை) உண்டாகப் பெறுகையே. மரணமாவது தேஹவியோகம் பெறுகையே (உடலின் தொடர்பின்மையே). உடலுக்கே உத்பத்தியும் மரணமும் உள்ளவை. உடலுக்கு உத்பத்தியாவது ஒரு அவஸ்தையைப் (நிலையைப்) பெறுகையே. மரணமாவது முன்னிருந்த அவஸ்தையை விடுகையே. இந்த உத்பத்தி மரணங்கள் தேஹத்திற்கு என்றும் உள்ளவைகளே. ஆகையால் பரிஹரிக்க (தவிர்க்க) முடியாமல் நித்யமாயிருக்கின்ற உத்பத்தி மரணங்களைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. 

திங்கள், 27 ஜனவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 89


நான்காவது ஸ்கந்தம் – பதினொன்றாவது அத்தியாயம்

(த்ருவன் நாராயணாஸ்தரத்தினால் சத்ருக்களை வதித்தலும், அதனால் யக்ஷர்களெல்லோரும் பாழாவதைக் கண்டு ஸ்வாயம்புவமனு தானே நேரில் வந்து தத்வோபதேசம் செய்து [தத்வங்களை உபதேசித்து] அவனை ஸமாதானப்படுத்தலும்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்ஙனம் ரிஷிகள் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டு த்ருவன் உடனே ஆசமனம் செய்து தன் தனுஸ்ஸில் (வில்லில்) நாராயண அஸ்த்ரத்தைத் தொடுத்தான். இந்த நாராயணாஸ்த்ரத்தை எடுத்து ப்ரயோகிக்கையில், வாராய் விதுரனே! யக்ஷர்கள் நிர்மித்த (உண்டாக்கின) மாயைகளெல்லாம், ஜ்ஞானோதயத்தில் ராகம் த்வேஷம் முதலிய க்லேசங்களெல்லாம் (துண்பங்களெல்லாம்) தொலைவதுபோல், உடனே நாசமடைந்தன. ரிஷிகளில் முதன்மையான நாராயணனிடத்தினின்று உண்டானதாகிய அந்த அஸ்த்ரத்தை த்ருவன் தனுஸ்ஸில் தொடுக்கையில், ஸ்வர்ணமயமான பிடிகளுடையவைகளும் கலஹம்ஸங்களின் (ஆண் அன்னங்களின்) இறகுகள் கட்டப் பெற்றவைகளுமான பாணங்கள் அந்த தனுஸ்ஸினின்று வெளிப்பட்டுச் சத்ருக்களின் ஸைன்யத்தின்மேல் பயங்கரமான கோஷத்துடன் ப்ரவேசித்தன. அவைகள் அந்த சத்ரு ஸைன்யத்தின்மேல் ப்ரவேசிப்பது கண்டால், மயில்கள் பயங்கரமாக ஒலித்துக்கொண்டு வனத்தில் புகுவது போலிருந்தது. கூரிய நுனியுடைய அந்த பாணங்களால் யுத்தத்தில் அடிக்கப்பட்ட அந்த யக்ஷர்கள் கோபாவேசமுற்று, ஸர்ப்பங்கள் கருடனை எதிர்ப்பதுபோல், ஆயுதங்களை மேல் தூக்கிக்கொண்டு நாற்புறங்களிலும் அந்த த்ருவன்மேல் எதிர்த்தோடினார்கள். அங்கனம் எதிர்த்து ஓடிவருகின்ற அந்த யக்ஷர்கள் எல்லோரையும் பாணங்களால் கைகளும் துடைகளும் கழுத்துக்களும் வயிறுகளும் அறுப்புண்டு விழும்படி அடித்துப் பரலோகத்திற்கு அனுப்பினான். அங்கனம் அடியுண்ட அந்த யக்ஷர்கள், ஸம்ஸாரத்தில் ஸமஸ்த (எல்லா) ஸங்கங்களையும் (பற்றுதலையும்) துறந்த ஸந்யாஸிகள் ஸுர்ய மண்டலத்தை பேதித்துக்கொண்டு போய்ச் சேரும்படியான பரலோகத்திற்குப் போனார்கள். அற்புதமான ரதமுடைய த்ருவன் இங்கனம் நிரபராதிகளான அந்த யக்ஷர்கள் எல்லோரையும் வெகுவாய் வகித்துக்கொண்டிருப்பது கண்டு த்ருவனுடைய பாட்டனாகிய ஸ்வாயம்புவமனு மன இரக்கம் உண்டாகப்பெற்று மஹர்ஷிகளுடன் அவனுக்கு அருகாமையில் வந்து அவனைப் பார்த்து இங்கனம் மொழிந்தான்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 88


நான்காவது ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்

(உத்தமன் வேட்டைக்குச் சென்று மரணம் அடைதலும், த்ருவன் அவனைக் கொன்ற யக்ஷர்களோடு யுத்தஞ் செய்து அவர்களை வதித்தலும்)

த்ருவன், சிம்சுமாரனென்கிற ப்ரஜாபதியின் புதல்வியாகிய ப்ரமி என்பவளை மணம் புரிந்தான். அந்த த்ருவனுக்கு ப்ரமியிடத்தில் கல்பனென்றும் வத்ஸரனென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். வாயுவின் புதல்வியான இடை என்பவளையும் அவன் மணம் புரிந்திருந்தான். அவளிடத்தில் உத்கலனென்னும் புதல்வனையும் மடந்தையர்களில் சிறந்த ஓர் புதல்வியையும் பெற்றான். அந்த த்ருவனுடைய ப்ராதாவான உத்தமன் விவாஹம் (திருமணம்) ஆகாமலே இருந்து ஒருநாள் வேட்டைக்குப் போகையில், அங்கு ஹிமவத் பர்வதத்தில் மஹாபலனான ஓர் யக்ஷனால் அடியுண்டு மாண்டான். அவனுடைய மாதாவான ஸுருசி அவன் வரக்காணாமையால் அவன் போன வழியே போய் அவன் கதியை அடைந்தாள் (மரணம் அடைந்தாள்). த்ருவன் ப்ராதாவான உத்தமனுடைய மரணத்தைக் கேட்டு, கோபம், பொறாமை, சோகம் இவைகளால் மனம் நிரம்பப்பெற்று, ஜயசீலமான ரதத்தில் ஏறிக்கொண்டு யக்ஷர்களின் வாஸஸ்தானமான லங்காபுரிக்குப் போனான். அவன் வடதிசையில் சென்று ஹிமவத் பர்வதத்தின் தாழ்வரையில் ருத்ரனுடைய ப்ருத்யர்களால் (சேவகர்களால்) சூழப்பட்டதும் யக்ஷர்கள் நிரம்பப்பெற்றதுமாகிய லங்காபுரியைக் கண்டான். நீண்ட புஜதண்டங்களையுடைய அந்த த்ருவன் ஆகாசத்தையும் திசைகளையும் ஒலிக்கச் செய்துகொண்டு சங்கத்தை எடுத்து ஊதினான். வாராய் விதுரனே! அந்த சங்கத்வனியைக் (சங்கின் ஒலியைக்) கேட்டு யக்ஷரது மடந்தையர் பயத்தினால் நடுநடுங்கின கண்களுடையவராகி மிகுதியும் பயந்தார்கள். அப்பால், மஹாவீரர்களும் பலிஷ்டர்களுமான (பலசாலிகளுமான) அந்த யக்ஷர்கள் த்ருவன் செய்த சங்கத்வனியைக் கேட்டு அதைப் பொறுக்க முடியாமல் ஆயுதங்களை ஏந்திக்கொண்டு அந்த அலகாபுரியினின்று யுத்தத்திற்குப் புறப்பட்டு அவனை எதிர்கொண்டார்கள். பயங்கரமான தனுஸ்ஸை (வில்) உடையவனும் மஹாரதனும் வீரனுமாகிய அந்த த்ருவன் அங்கனம் தன்னை எதிர்த்து வருகின்ற யக்ஷர்களில் ஒவ்வொருவனையும் மும்மூன்று பாணங்களால் ஒரே காலத்தில் அடித்தான். அந்த யக்ஷர்கள் அனைவரும் அவன் ப்ரயோகித்த பாணங்கள் நெற்றியில் பொத்துக் கொள்ளப்பட்டு அவ்வளவில் தாங்கள் தோற்றதாக நினைத்து அவனுடைய அந்தச் செயலைப் புகழ்ந்தார்கள்.

செவ்வாய், 21 ஜனவரி, 2020

மெச்சி நின்றாரை அருளும் கச்சி வரதன் - முனைவர் மா.சிதம்பரம்

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற நூற்றி எட்டு திவ்யதேசங்களுள் குறிப்பிடத்தக்கது திருக்கச்சி வரதராசப் பெருமாள் கோயில். ஆழ்வார்களின் மங்களாசாசனம் பெற்ற திவ்ய தேசங்களில் இது மூன்றாவதாகக் கருதப்படுகிறது. முதலிடத்தில் திருவரங்கம் திருக்கோயிலும், இரண்டாவது இடத்தில் திருமலை - திருப்பதியும் இடம்பெற்றுள்ளன.


இத்திருத்தலம் கச்சியில் உள்ள வைணவத் தலங்களுள் எல்லாம் சிறப்புடையதாகவும் பல்லவர்களால் ஆளப்பெற்ற தொண்டை நாட்டின் வைணவத் திருத்தலங்களுக்கு எல்லாம் தலைமைத் தன்மை உடையதாகவும் திகழ்கிறது. 


தடம் சூழ்ந்து, அழகாய்க்கச்சி ஒளி 
மாடங்கள் சூழ்ந்து, அழகிய கச்சி மணி 
மாடங்கள் சூழ்ந்து, அழகாய்க் கல்லுயர்ந்த 
நெடுமதில்சூழ் கச்சி 


என்று ஆழ்வார்களால் சிறப்பிக்கப்பெற்ற இத்தலம் விஷ்ணு காஞ்சியென்றும், அத்திகிரியென்றும், திருக்கச்சி என்றும் அழைக்கப்படுகின்றது.


“உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் 
மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் 
அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் 
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே”


என்று நம்மாழ்வாரால் திருவாய் மொழியில் பாடப்பெற்ற பாசுரத்தில் ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்று சிறப்பிக்கப்படுபவர் இத்திருத்தலத்தில் அருட்பாலிக்கும் வரதன்தான் என்று வைணவச் சான்றோர்கள் குறிப்பிட்டுரைப்பர். அவர்கள்தம் கூற்றினை மெய்ப்பிப்பதுபோல் இத்தலத்து நம்மாழ்வார் தன் இதயத்தில் கை குவித்தவாறு அருட்பாலிக்கின்றார். இத்திருக்காட்சி வேறு திவ்ய தேசங்களில் காணக் கிடைக்காத கண்கொள்ளாக் காட்சியாகும். மேலும் இத்திவ்யதேசம் திருமங்கையாழ்வாரால் நான்கு பாசுரங்களிலும் பூதத்தாழ்வாரால் இரண்டு பாசுரங்களிலும் பேயாழ்வாரால் ஒரு பாசுரத்திலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. 


பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதிப் பாசுரம் பெருமானின் அழகிய திருக்கோலத்தினை நம் கண்முன் காட்சிப்படுத்துகிறது. இங்கு எழுந்தருளி ஆட்கொள்ளும் எம்பெருமான் பெரிய திருவடியாகிய கருடாழ்வாரைத் தன் வாகனமாகக் கொண்டு ஊர்ந்து வருபவர். ஆதிசேடனைத் தன் அணையாகக் கொண்டு அறிதுயில் கொள்பவர். மூன்று வகை அக்னியாய்த் தோற்றம் கொண்டவர். வேதங்களாய் நிற்பவர். 


தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது துயரம் தாளாது வாசுகி என்னும் பாம்பால் உமிழப்பட்ட ஆலகால விடத்தினை உண்ட சிவனுக்கும் இறையானவர். இத்தகைய சிறப்புடையவரே இவ் அத்தியூரான். எங்கள் பிரானும் அவனேதான் என்றெல்லாம் பூதத்தாழ்வாரின் இரண்டாம் திருவந்தாதிப் பாசுரம் காட்சிப்படுத்தி நிற்கின்றது. இதனை,

நலம் தரும் சொல்.... - பி.ஆர்.எஸ்


நாராயணாவென்னும் நாமம்!! திருமங்கையாழ்வார் கண்டு கொண்டது!! இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நாராயண நாமம் வருகிறது. இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார். இந்த நாமத்தின் அர்த்தத்தை குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார். அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும். அதற்கு அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது. அஜாமிளன் பிறப்பால் அந்தணர் குலத்தை சார்ந்தவர். ஒரு முறை யாக யக்ஞங்களுக்காக தர்ப்பை முதலியவைகளை சேகரிக்க வேண்டி அஜாமிளன் காட்டுக்கு சென்றார். அங்கே ஒரு தாசியை கண்டு அவளை மோகித்து, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார். அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

முன் வினை பயனால் தனது கடைசி பிள்ளைக்கு நாராயணன் என்று பெயரிட்டார்.  கடைசி பிள்ளையின் மேல் பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா என்று பல முறை கூறுகிறார். கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள். யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தனது கடைசி மகனை நினைத்து நாராயணா என்று அழைக்கிறார். நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள். யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்து கூறினார்கள். அதற்கு விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிரை காக்கிறார்கள்.

ஶ்ரீமத் பாகவதம் - 87


நான்காவது ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்

(த்ருவன் பகவானை ஸ்தோத்ரம் செய்து அவனால் வரம் கொடுக்கப்பெற்றுப் பட்டணத்திற்கு (நகரத்திற்கு) வந்து தகப்பன் கொடுத்த ராஜ்யத்தை ஆளுதல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- இங்கனம் பகவான் கூறிய வசனத்தைக் கேட்டு தேவதைகள் பயம் நீங்கப்பெற்று, த்ரிவிக்ரமாவதாரம் செய்து உலகங்களை இந்த்ரனுக்கு மீட்டுக் கொடுத்த மஹோபகாரனான (பெரிய நன்மைகளைச் செய்பவனான) அந்த பகவானுக்கு நமஸ்காரம் செய்து தேவலோகம் போய்ச் சேர்ந்தார்கள். அப்பால், ஆயிரம் தலையனாகிய பகவானும் தன் ப்ருத்யனாகிய த்ருவனைப் பார்க்க விரும்பிக் கருடன்மேல் ஏறிக் கொண்டு மதுவனத்திற்கு வந்தான். அந்த த்ருவன் பக்தியோகம் நன்கு நிறைவேறப்பெற்ற புத்தியால் தன்னுடைய ஹ்ருதய புண்டரீகத்தில் ஸாக்ஷாத்கரிக்கப்பெற்ற பகவான் திடீரென்று மின்னல் மறைந்தாற்போல் மறைந்தமை கண்டு கண்ணைத் திறந்து பார்க்கையில் அந்த பகவான் ஹ்ருதயத்தில் தோற்றினபடியே வெளியில் திகழ்ந்து நிற்கக் கண்டான். அங்கனம் பகவானை நேரே ஸாக்ஷாத்கரித்தமையால் (பார்த்தமையால்) பரபரப்புண்டாகப் பெற்ற அந்த த்ருவன் தனது உடலை பூமியில் தடிபோல் சாய்த்து நமஸ்காரம் செய்தான். அவன் அந்த பகவானைப் பார்த்தவுடனே அவனைக் கண்களால் பானம் செய்பவன்போல் (அருந்துபவன், குடிப்பவன் போல்) கண்ணாரக் கண்டான். முகத்தினால் முத்தமிடுபவன் போலும் புஜங்களால் கட்டியணைப்பவன் போலும் அவனை நமஸ்கரித்தான். அவன் அந்த பகவானுடைய குணங்களைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்யவேண்டுமென்று (துதிக்க வேண்டுமென்று) விரும்பியும் துதிக்கத் தெரியாமல் வெறுமனேயிருந்தான். ஸமஸ்த லோகங்களுடைய ஹ்ருதயத்திலும் வஸிப்பவனாகையால் பகவான் அந்த த்ருவனுடைய ஹ்ருதயத்திலும் வஸிப்பவனே. ஆகையால் அந்த பரமபுருஷன் அவனுடைய அபிப்ராயத்தை அறிந்து கருணை கூர்ந்து ப்ரணவஸ்வரூபமான தன் சங்கத்தினால் (சங்கினால்) அந்த த்ருவனைக் கபோலத்தில் (கன்னத்தில்) ஸ்பர்சித்தான் (தொட்டான்). அந்த த்ருவன் அங்கனம் சங்கத்தினால் ஸ்பர்சிக்கப் பெற்றவுடனே, அந்த தேவதேவனுடைய அனுக்ரஹத்தினால் வேதாந்தங்களெல்லாம் நிறைந்த வாக்குகளைப் பெற்றான். நினைத்தபடி வாயார வல்லனானான்; மற்றும், ஜீவாத்ம பரமாத்மாக்களின் உண்மையை உள்ளபடி அறிந்தான். அவனுக்கு சாஸ்வதமான ஸ்தானத்தைப் பெறும் பாக்யமும் ஸித்தமாயிற்று. நிரவதிகமான (எல்லையற்ற) பக்திபாவமும் உண்டாயிற்று. அத்தகையனான அந்த த்ருவன் பரபரப்பில்லாதவனாகி ஜகத்து முழுவதும் ப்ரஸித்தமான பெரும் புகழுடைய பகவானை ஸ்தோத்ரம் செய்தான் (துதித்தான்).

த்ருவன் சொல்லுகிறான்:- பகவானே! நான் உன்னை ஸ்தோத்ரம் செய்யவேண்டுமென்ற விருப்பம் உண்டாகப் பெற்றும், துதிசெய்வதற்குரிய வாக்கு நேரப்பெறாதிருந்தேன். அங்கனம் கார்யத்திற்கு உபயோகப்படாமல் உறங்குவது போன்றிருந்த என் வாகிந்தரியத்திற்குள் (வக்கிற்குள்) நீ உன் ஸங்கல்பரூப ஜ்ஞானத்தினால் புகுந்து அதைக் கிளப்பியெழுப்பினாய். நீ, சேராதவைகளைச் சேர்ப்பிக்கை முதலிய ஸர்வ சக்திகளும் அமைந்தவன். அத்தகையனான உனக்கு இது யுக்தமே (தகுமே). ஹஸ்தம் (கை), பாதம் (கால்), ச்ரவணம் (காது), த்வக்கு (தோல்) முதலியவற்றையும் மற்ற ப்ராணன்களையும் நீயே அவற்றுள் புகுந்து எழுப்புகின்றாய். நீ உட்புகாத பக்ஷத்தில் அவை தத்தமது கார்யங்களைச் செய்யவல்லவையாக மாட்டாது. அவையும் உனக்குச் சரீரங்களே. நீ ஜ்ஞானாதி குணங்களெல்லாம் நிறைந்தவன். பரமபுருஷன். அத்தகையனான உனக்கு நமஸ்காரம். வாராய் பகவானே இதோ புலப்படுகின்ற ஜகத்தையெல்லாம், பலவாறாகப் பரிணமிக்கும் (மாறும்) திறமையுடைய ஸத்வாதி குணங்கள் அமைந்ததும் உன்னுடைய சக்திபோல் உன்னை விட்டுப் பிரியாதிருப்பதுமாகிய மாயையென்னும் ப்ரக்ருதியால் ஸ்ருஷ்டித்துக் கார்யமாயும் காரணமாயுமுள்ள ஸத்வாதி குணமயமான (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாலான) ஸகல (எல்லா) பதார்த்தங்களிலும் (பொருள்களிலும்) ஜீவன் மூலமாய் ப்ரவேசித்து, அக்னியானது தான் ஒருபடிப்பட்டிருப்பினும் நீண்டும் குறுகியும் பலவாறாயிருக்கையால் பலவகைப்பட்ட காஷ்டங்களில் (குச்சிகளில்) பற்றிப் பலவாறு தோற்றுவதுபோல், நீ ஒருவனாயிருந்தும் உன் சரீரமான வஸ்துக்கள் பலவாறாயிருக்கையால் பலவாறு தோற்றுகின்றனை. காஷ்டங்கள் (குச்சிகள்) நெடுமை குறுமை முதலிய பல தன்மைகளுக்கு இடமாயிருப்பினும், அவை அவற்றில் பற்றின அக்னிக்கு எங்கனம் ஸம்பந்திக்கிறதில்லையோ, அங்கனமே உனக்குச் சரீரமான வஸ்துக்களின் தோஷங்கள் அவற்றில் உட்புகுந்திருக்கிற உன்னிடத்தில் ஸம்பந்திக்கிறதில்லை. நீ எப்பொழுதும் உன் ஸ்வரூபம் மாறப்பெறாதவன். பகவானே! ப்ரஹ்மதேவன் முதலில் இந்த ஜகத்தைப்படைக்க விரும்பி இன்னவிதமாகப் படைக்கவேண்டுமென்று தெரியப்பெறாமல் உறங்கினவன்போல் ஒன்றுமறியாமல் கிடந்து உன்னைச் சரணம் அடைகையில், அவனுக்கு நீ ஜ்ஞானம் கொடுத்தாய். அப்பால் அவன் உறங்கியெழுந்தவன்போல் நீ கொடுத்த ஜ்ஞானத்தினால் இந்த ஜகத்தையெல்லாம் உள்ளபடி அறிந்தான். இந்த வஸ்துவை இன்ன விதமாகப்படைக்க வேண்டுமென்று தெரிந்துகொண்டு அப்பால் இந்த ஜகத்தையெல்லாம் ஸ்ருஷ்டித்தான் (படைத்தான்). தாபத்ரயத்தினால் (ஆத்யாத்மிகம், ஆதிபெளதிகம், ஆதிதைவிகம் என்கிற முன்று வகையான துன்பங்களால்) -- உலகில் மனிதர்களுக்கு வரும் துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை 

வெள்ளி, 17 ஜனவரி, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 86

நான்காவது ஸ்கந்தம் – எட்டாவது அத்தியாயம்


த்ருவ சரித்ரம்


த்ருவன் ருசியின் துர்ப்பாஷணங்களைப் (கொடிய வார்த்தைகளைப்) பொறாமல் (பொறுக்க மாட்டாமல்) தவத்தினால் ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஆராதித்தல். 


ஸ்ரீமைத்ரேயர் சொல்லுகிறார்:- ஸனகாதிகளும் நாரதர் ருபு ஹம்ஸர் அருணி ஆகிய இவர்களும் ப்ரஹ்மாவின் புதல்வர்கள். இவர்களெல்லோரும் க்ருஹஸ்தாச்ரமத்தில் இழியாமல் (திருமணம் செய்துகொண்டு இல்லற தர்மங்களில் ஈடுபடாமல்) இந்த்ரியங்களை வென்று நைஷ்டிக ப்ரஹ்மசர்யத்தில் இருந்தார்கள். ஆகையால் அவர்களுக்கு வம்சமே இல்லை. அதர்மனும் ப்ரஹ்மாவின் புதல்வனே. அந்த அதர்மனுடைய பார்யை மருஷை என்பவள். சத்ருக்களை வெல்லும் திறமையுடையவனே! அந்த மருஷை, தம்பனென்னும் புத்ரனையும் (மகனையும்) மாயை என்னும் புதல்வியையும் (மகளையும்) பெற்றாள். தம்பன் மாயை இவ்விருவரையும் பிள்ளையில்லாத கிருதி வாங்கிக் கொண்டு, தம்பனைப் பிள்ளையாகவும் மாயையை மறுமகளாகவும் அபிமானித்து வைத்துக்கொண்டான். சிறந்த மதியுடையவனே! அந்த மாயை தம்பன் இவர்களுக்கு லோபனும் நிக்ருதியும் உண்டானார்கள். அந்த லோபன் நிக்ருதி இவரிடத்தினின்று க்ரோதனும் ஹிம்ஸையும் உண்டானார்கள். அவரிடத்தினின்று கலியும் துருக்தியும் உண்டானார்கள். துருக்தியிடத்தில் கலி பயத்தையும் ம்ருத்யுவையும் பிறப்பித்தான். வாராய் நல்லியற்கையுடையவனே! அந்த பயம் ம்ருத்யு இவரிடத்தினின்று யாதனையென்னும் பெண்ணும் நிரயனென்னும் பிள்ளையும் உண்டானார்கள். இவர்களெல்லோரும் அதர்மமாகிற வ்ருக்ஷத்தின் (மரத்தின்) கிளைகள் போன்றவர்கள். இவர்கள் ஸம்ஸாரத்தை மேன்மேலும் வளர்ப்பவர்களாகையால், மோக்ஷத்தில் விருப்பமுடையவன் இவர்களோடு சேரக்கூடாது. ஸந்யாஸ ஆஸ்ரமத்திலிருப்பவன் இவர்களை சிறிதும் கண்ணெடுத்துப் பார்க்கலாகாது. அவன் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். பாபமற்றவனே! இங்ஙனம் ப்ரதிஸர்க்கத்தை (இந்த ப்ரபஞ்சம் அழிவதற்குக் காரணமான அதர்மத்தின் ஸந்ததியை) உனக்கு நான் சுருக்கமாகச் சொன்னேன். இவற்றைத் துறப்பானாயின், புண்யம் பெறுவான். இந்த ப்ரதிஸர்க்கத்தை மூன்று தரம் கேட்பானாயின், தன்னுடைய பாபங்களெல்லாம் தீரப்பெறுவான். இங்ஙனம் மனு கன்னிகைகளின் ஸந்ததியைச் சொன்னேன். இனி மனுபுத்ரர்களின் ஸந்ததியைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 


வாராய் கௌரவ ச்ரேஷ்டனே! மனு கேட்பவர்களுக்குப் புண்யத்தை விளைக்கும்படியான புகழுடையவன். அதற்குக் காரணமென்னென்னில், தன்னை நினைத்த மாத்ரத்தில் தன்னைப்பற்றினாருடைய பாபங்களைப் போக்கும் திறமை அமைந்த பகவானுடைய அம்சாவதாரமான ப்ரஹ்மாவின் சரீரத்திலிருந்து பிறந்தவன்; அந்த பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவன். ஆகையால் பகவானுடைய சரித்ரம்போல் அவனுடைய புத்ரர்களின் வம்ச சரித்ரமும் பரிசுத்தமாயிருக்கும், பக்தியை விளைக்கும். பகவத் பக்தர்களாகையால் மனு புத்ரர்களின் வம்சம் கேட்கத் தகுந்ததே. சதரூபையின் பர்த்தாவான (கணவனான) மனுவுக்கு ப்ரியவ்ரதனென்றும் உத்தானபாதனென்றும் இரண்டு புதல்வர்கள் உண்டு. அவ்விருவரும் ஜகத்திற்கெல்லாம் அந்தராத்மாவான பகவானுடைய குணவிசேஷத்தின் தோற்றத்தினால் ஜகத்தைப் பாதுகாப்பதில் நிலையுற்றிருந்தனர். அவர்களில் உத்தானபாதனுக்கு ஸுநீதியென்றும் ஸுருசியென்றும் இரண்டு பார்யைகள் (மனைவிகள்) இருந்தார்கள்: அவர்களில் ஸுருசி என்பவள் பர்த்தாவுக்கு மிகவும் அன்பிற்கிடமாயிருந்தாள். ஸுநீதி என்பவள் ப்ரீதிக்கு இடமாகாதிருந்தாள். அந்த ஸுநீதிக்கு த்ருவனென்று ஒர் புதல்வன் பிறந்தான். ஒருக்கால் அந்த உத்தானபாதன் ஸுருசியின் புதல்வனாகிய உத்தமனென்பவனை மடியில் வைத்துச் சீராட்டிக் கொண்டிருக்கையில், ஸுநீதியின் பிள்ளையாகிய த்ருவன் அருகே வந்து மடியில் ஏற விரும்பினான். அதை அறிந்தும் அம்மன்னவன் அவனது விருப்பத்தை நிறைவேற்றாமை மாத்ரமேயன்றி அதை அபிநந்தனம் (விருப்பம், வரவேற்பது) செய்யாமலேயிருந்தான். தனது சக்களத்தியின் (மற்றொரு மனைவியின்) புதல்வனாகிய அந்த த்ருவன் அங்கனம் மன்னவனது மடியில் ஏற விரும்புவதையும் மன்னவன் அதை அபிநந்தனம் செய்யாதிருப்பதையும் கண்டு ஸுருசி ராஜாவின் அபிப்ராயத்தை அறிந்துகொண்டு மிகவும் கர்வமுற்றவளாகி, அரசனது செவியில்படும்படி த்ருவனைப் பார்த்து மிக்க பொறாமையுடன் இங்கனம் மொழிந்தாள்.

செவ்வாய், 14 ஜனவரி, 2020

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 32 - கண்ணன் ரங்காச்சாரி

30

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை 
திங்கள் செருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்ட வாற்றை அணிபுதுவை 
பைங்கமலத்  தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன 
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே 
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரெண்டு மால்வரை தோள் 
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் 
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். 

முப்பதாம் பாட்டு திருப்பாவைக் கடலுக்கு மற்றொரு கரை. இத்தனை நாளும் இந்த திவ்ய பிரவாகத்தில் குளித்து பக்திப் பரவசம் கொண்ட யாவரும், எம்பெருமானாலும், பிராட்டியாலும் தொடர்ந்து அனுகிரஹிக்கப் படுவார்கள் என்பது குறிப்பு. 

இவர்க்கெல்லாம், மார்கழிப் பாவை நோன்பை அனுஷ்டித்தவர்களின் வழியாகப் பாதியும், அநுகரித்தார் (நோன்பு நடத்திடக் காரணமானவர்கள்) வழியால் இன்னொரு பாதியும் பரி பூரணக் கடாக்ஷம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

பட்டர் சொன்னார். 'கன்றிழந்த தலைநாகு, தோல் கன்றை மடுக்க அதுக்கு இறங்குமாப்போல்' - கன்றினை இழந்த தாய்ப்பசு, இறந்த கன்றின் தோலால் செய்யப்பட்ட பொய்க் கன்றினை, நாவால் தடவிக் கொடுத்து, இரங்கி பாலூட்டுமாப்போலே, கோபியர்கள் சொன்ன இப்பாசுரங்களை அனுசந்தித்து ஆனந்தம் கொண்ட எவர்க்கும், நோன்பெதுவும் செய்யாமல் போனாலும் கூட, பரி பூரண பலன் சித்திக்கும். 

'வங்கக் கடல்' - கடல் கடைந்த போது, அதில் செல்லும் மரத் தோணியானது ஆடாமல் அசையாமல் இருந்ததைப்  போலே. உலகைச் சுழற்றி நடத்தும் செயலில், அன்பர் யாருக்கும் உடலோ / மனதோ நோகச் செய்யாமை, மாலனின் கருணை.  கடலின் அடியில் எங்காவது அமுதம் இருக்குமோ என்னில், அது கண்ணனின் திருக்கரங்கள் தந்த விந்தை.  

கிருஷ்ணனைப்  பாடும் பாசுரத்தில் க்ஷிராப்தி நாதனை ஏன் பாட வேண்டும்?. 'விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமதுண்ட பெருமானே', என்னும் படியாய் கடல் கடைவதைக் காரணமாக்கி, பெரிய பிராட்டியைக் கொண்டது போலே, நோன்பென்னும் ஒன்றை ஊர்க் காரியமாக்கி, கோபியர்களைப் பெறுவதற்கு கண்ணன் செய்த திருவிளையாடலாம். 

திங்கள், 13 ஜனவரி, 2020

உயர் பாவை - 30 - சதாரா மாலதி

உனக்கே யாம் ஆட்செய்வோம் 

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று முதல் பாட்டில் அத்தலை உரிமையைச் சொன்ன ஆண்டாள் 'எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே யாம் ஆட்செய்வோம்' என்று இத்தலைக் கடமையை அறுதியிட்டு முடித்தாள். உரிமை ஒவ்வொன்றுக்கும் கடமை உண்டு. நாட்டுக்காகட்டும் வீட்டுக்காகட்டும் சமூகத்துக்காகட்டும் எதைப்பெறுகிறோமோ அதே விலையுள்ள ஒன்றைத் தருகிறோம். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு, நாராயணனே கொடுப்பான் நமக்கே கொடுப்பான், நாமும் ஆட்செய்வோம் அவனுக்கே செய்வோம். எற்றைக்குமேழேழ்பிறவிக்கும் செய்வோம். இனிய தாம்பத்தியத்திலும் அதே தானே விதி? அவன் எவ்வளவு ஈடுபடுகிறானோ அவ்வளவு அவளுக்கும் ஈடுபாடாகும். 

சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து, உன் 
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறை கொள்வாய், அன்று காண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும், உன் தன்னோடு 
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆள் செய்வோம் 
மற்றை நாம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

காலங்காலையில், அதிகாலையில்வந்தேன். உன்னடி, பொன்னடி, தாமரையடி தேடிவந்தேன். அழகானதும் புனிதமானதும் ஆன அடிகள் பொன்னானது மணமும் கமழ்ந்தாற்போல ஒரே சமயத்தில் அழகும் மதிப்பும் கொண்டதாயிற்று. அப்படி உன்னை வந்தடைந்ததற்கு நோக்கத்தை நீ தெரிந்துகொள். மிக வருந்தி வந்தேன். ஒரு நாள் வாய்த்து சத்துவம் கூடி ,விவேகம் வாய்த்து செய்வன செய்யாதன புரிந்து உன் நிலை அறிந்து பத்து படி தாண்டி, ஆசிரியன் அருளும் பிராட்டி கருணையும் பெற்று நெறி பிறழாமல் கைங்கர்ய வழி மேலேறி சாரூப்யம் சாயுஜ்யம் எய்தி பிழை பொறுக்கும்படி சரணாகதியைச்செய்து இப்போது பரமபக்தியை நிரந்தரமாகப் பெற்றுவிட நிற்கிறேன். உன் நாள் தொடங்குமுன் உன்னைப் பிடித்து விட வேண்டுமென்று விடியற்காலை வந்தேன். இன்னமும் காலைக்குருத்து தான் கிளம்பியுள்ளது. [அந்தப் பெண்கள் பேச்சுக்குப் பேச்சு நடு ராத்திரி என்று குறிப்பிட்டது சரிதான் போலிருக்கிறது. 29வது பாட்டில் சிற்றஞ்சிறு காலை என்றால் 6 முதல் 15 பாட்டில் எந்தக் காலையாக இருந்திருக்கக் கூடும் பாருங்கள்] 

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 31 - கண்ணன் ரங்காச்சாரி

29

சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து, உன் 
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் 
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ 
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது 
இற்றைப் பறை கொள்வாய், அன்று காண் கோவிந்தா 
எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும், உன் தன்னோடு 
உற்றோமே ஆவோம், உனக்கே நாம் ஆள் செய்வோம் 
மற்றை நாம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில் ப்ரபந்தத்தின் சாரமான, கைங்கர்யத்தின் சிறப்பு ஓதப்பட்டிருக்கிறது. 'எம்மா வீடு' என்ற பாசுரத்தால், தாம் அடைந்ததை எண்ணிப் பெருமிதமுற்று 'நெடு மாலுக்கு அடிமை' என்ற சர்ம ஸ்லோக சாரத்தை முடித்து வைத்தார் ஆழ்வார். ஆண்டாளும் அதே பொருள் பட இப்பாடலில் அருளிச் செய்கிறாள்.

'போற்றும் பொருள் கேளாய்' என்பதும், 'உனக்கே நாம் ஆள் செய்வோம்' என்பதும் கண்ணனை அடைந்தமையான 'ப்ராப்யத்தை' வெளிப்படையாய் சொல்லுகின்றன. 'மற்றை எம் காமங்கள் மாற்று' என்பதால் பாகவத கைங்கர்யமே அனைத்திலும் ஸ்ரேஷ்டமானது என்று அனுசந்திக்கப் பெறுகிறது.

'சிற்றஞ்சிறுகாலே' - 'வெட்ட வெடியாலே' என்பது போன்ற ஒரு குலத்தருடைய சஹஜ மொழி. மிக மிக இளங்காலை. கிட்டத் திட்ட விடியற்காலை 3.00 மணியளவு. 'சிறு பெண்களான ஆய்ச்சியர் எழுந்திருக்க வொண்ணாக் குளிர்பொழுது. 'ப்ராஹ்மே முகூர்த்தே சோத்தாய சிந்த்யேதாத் மனோஹிதம்' - ப்ரஹ்ம முகூர்த்தமான இளங்காலைப் போதில் விழித்துக் கிடந்து சிந்திப்பது மனதுக்கு இதம் தரும். அறிவு தூங்கிப் போய் பக்தி தலை எடுக்கும் உன்னத காலம். அத்யந்தம் ப்ராத: காலம். பஞ்ச பஞ்ச உஷத் காலம். அந்த கார இருள் நீங்கி, அஞ்ஞானம் விலகி பகவத் விஷயம் வெளிச் செறியும் காலம்.

'சிறு காலே ஊட்டி ஒருப் படுத்தேன்' என்று இளங்கன்றுகளை மேய்க்கும் காலம். சிறு காலையில் வந்தால் உன்னைக் காண வொண்ணாதே, சிற்றஞ்சிறுகாலை வந்து.

'வந்து' - 'வீதி ஊடே வந்து', 'நம் தெருவின் நடுவே வந்து', 'உன் தோரண வாசலிலே வந்து', அவன் வராததாலே இவர்கள் அவனிடம் வந்து - 'பத்ம்யாம் அபி கமாச்சைவ ஸ்னேஹ சந்தர்சனே நச'. நாங்கள் வந்திருக்கிறோம் என்பதனால் வாசல் வரை வந்து எங்களை எதிர் கொள்ளுபவனை.

'உன்னைச் சேவித்து' - எந்தப் பலனையும் வேண்டாது, சாதன காலத்தில் ரசிக்கும் உன்னைத் சேவித்து. 'நாராயணன் போமிடமெல்லாம் சோதித்து உழி தருகின்றாள்' - அவன் இருக்கும் இடமெல்லாம் தேடி தேடி, அறிந்து சேவிக்கிறாள்.

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

உயர் பாவை - 29 - சதாரா மாலதி

கறவைகள் பின் சென்று....


எத்தனையோ விதத்தில் தன் காதலைச்சொல்லி தான் வேறு ஒரு பிடிப்பில் வாழ்ந்துவிட முடியாதபடி தன் மனம் கண்ணனுடன் இணைந்து பின்னியிருப்பதைச் சொல்லி திரும்பிப்போய் விட இயலாத தூரத்தில் வீடு வாசல் எல்லாம் விட்டு வந்த கோபிகையின் பாத்திரத்தை அநுகரித்து மனசால் ஒரு கோபியாக கண்ணனைக்கிட்டி படிப்படியாக அவனை பலவந்தம் செய்து அவனைக் கூடிய ஆண்டாள் இப்போது வெளியே நிறுத்தி வைக்கப்பட்டாள். 


இந்தப்பாசுரத்தில் இழையும் ஆற்றாமையையும் desperate முயற்சியாக முன் வைக்கும் இறங்கின குரலின் தீனமும் இது வரை சொல்லாத 'இறைவா!' என்ற விளியும் கவனித்து நோக்கத் தக்கவை.

சாரூப்யம் ஆயிற்று சாயுஜ்யம் ஆயிற்று இனி கிளம்பிப் போகலாமே என்று கண்ணன் சொல்ல துடித்துப்போனாள் ஆண்டாள். இனிப் போவதா? இங்கேயே இருக்கத் தான் வந்தேன் என்றாள். அதற்கான சுக்ருதம் என்ன உன்னிடம்? தகுதி என்ன இருக்கிறது உனக்கு? சொல்கிறாயா குறித்துக் கொள்கிறேன் என்றான் கண்ணன். அதெல்லாம் எதுவும் கிடையாது. அதெல்லாம் முன்பே விவரமாகச் சொல்லிவிட்டேனே! என்னிடம் சித்தோபாயமன்றி சாதனோபாயம் எதுவும் கிடையாது. என்றாள். கண்ணன் சொன்னான். அப்படி யாரும் நற்கருமம் செய்யாதவர் கிடையாது. நீங்கள் இடையர்கள் வர்ணாஸ்ரம தர்மமாய் பசு சம்ரட்சணம் செய்திருப்பீர்களே, அதைச் சொல்லுங்கள், எவ்வளவு நாள் செய்திருப்பீர்கள், எவ்வளவு பசு மேய்த்திருப்பீர்கள் என்று கேட்டான். ஒரு இலக்கம் குறித்துக் கொண்டு அதற்கேற்ப இவ்வளவு நாள் சாயுஜ்யம் என்று ஆண்டாளுடைய ஸ்வர்க்க வாசத்தை வரைமுறைப் படுத்த பதிவட்டையை எடுத்தான். 

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 30 - கண்ணன் ரங்காச்சாரி

28

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம் 
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து, உன் தன்னைப் 
பிறவிப் பெருந்தனைப் புண்ணியம் நாமுடையோம் 
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா, உன் தன்னோடு 
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது 
அறியாத பிள்ளைகளோம், அன்பினால் உன் தன்னைச் 
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே 
இறைவா நீ தாராய், பறையேலோர் எம்பாவாய்

முதல் பாட்டில் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்று சொன்ன, ப்ராப்ய - அடைவதற்கு எளியவன், ப்ரபாவ - அடைவது நிச்சயம், என்ற சித்தாந்தங்களை விரிவாக 28, 29 ம் பாசுரங்களில் பேசுகிறார்கள்.

நோன்பு செய்வதற்கு என்னுடைய பறை (சங்கு நாதம்) தேவை தான். அது ஓன்று தான் உங்கள் குறிக்கோளோ?, என்று கண்ணன் வினவிடமும், கோபியர்கள் பதிலுரைக்கிறார்கள்.

ஊராரின் ஒப்புதலை நோன்புக்குப் பெறுவதற்காக நாங்கள் சொன்ன ஒரு காரணம் தான் 'பறையே' அன்றி, உன் திருவடி சம்பந்தமும், கைங்கர்யமும் தான் நாங்கள் புருஷார்த்த சித்தி பெற முக்கியக் கருவிகள். இதை நாங்கள் அடைய நீயே கருவியாக வேண்டும் என்று பணிக்கிறார்கள் கோபியர்கள்.

கறவைகள் பின் சென்று - இடை விடாது உன் பேரைப் பாடி தியானித்து, அர்த்த ஞானங்கள் ஏற்பட்டு, கடை பிடிக்க வேண்டிய விதி முறைகளைத் தவறாது பின் பற்றி, எதன் மேலும், யார் மேலும் பகைமை அகற்றி, மனத்தால் சுதந்திரர்கள் ஆகி, பொருட்களிலிருந்து மனதை விடுவித்து ஆத்மப் ப்ரணவமாக்கி, ஆத்ம யோகம் கை வந்து, அந்தர்யாமிகளாகி (மனத்தளவால் மட்டுமே வாழ்ந்திடும் பக்குவம்), பெருமாளின் ஸ்வரூபங்களை காதினால் கேட்டும் மனநம் செய்தும், அவனை எப்போதும் அர்ச்சித்துக் கிடக்கும் நிரந்தரர்களாகி, இப்படிப்பட்ட விரிவான வழி முறைகளால் உன்னைப் பெறுவதைத் தான் சாத்திரங்கள் பேசுகிறது.

இவற்றைப் பின் பற்றிட ஆச்சார்யர்களைத் தேடிப் போக வழி இல்லாமையினால், பசுக்களையே நாங்கள் ஆச்சார்யர்களாய் வரித்திருக்கிறோம். வசிட்டர் போன்ற மகா முனிகளுக்கு சாதாரண மனிதர்களின் ஒப்பீட்டில் ஞானம் மிகுந்து கிடப்பதை போலே, எங்களுடன் ஒப்பிட்டால், பசுக்களுக்கு ஞானம் மிக அதிகம், என்கிறார்கள் கோபியர்கள். அதனால் தான் நாங்கள் பசுக்களின் பின் சென்று கிடக்கிறோம்.

சனி, 11 ஜனவரி, 2020

உயர் பாவை - 28 - சதாரா மாலதி

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா…


பகைவரை வெற்றி காணும் சிறப்புடையவனே! கோவிந்தனே! என்று ஆரம்பிக்கிறது பாசுரம். பகைவரைத்தான் வெல்லுவார்கள் அதிலென்ன சிறப்பு இருக்கிறது? பகைவனுக்குத் தோற்றால் துப்புவார்களே! கூடவே ஒரு கோவிந்தா போடுவது எதற்கு? கோவிந்தன் எளியவன். மாட்டிடையன் பசுமேய்ப்பவன் என்று பொருள். அவனா பகைவனை வென்றெடுப்பவன்? இல்லை. கோவிந்தப் பட்டம் அவன் பெற்றது பகைவரை ஜெயித்ததற்கு அல்ல. அன்பரிடம் தோற்றதற்கு. தோல்விச்சிறப்புடையவன் தான் கோவிந்தன். ஊடலில் தோற்றாரே வென்றார் என்பது போல நண்பரிடம் அவன் தோற்றுத் தோற்று வெற்றி காண்பவன். 


என் அன்பான பசு மேய்ப்பானே! என்னை ஜெயிக்க நான் என்ன பகையா உனக்கு? உன்னால் என்னிடம் ஜெயிக்க முடியாது. நீ தோற்கத்தான் போகிறாய். என்றாள் ஆண்டாள். நீ கொடுத்த பொருட்களையெல்லாம் அள்ளிக் கொண்டு சங்கு, பறை, பல்லாண்டிசைப்பார், விளக்கு, கொடி, விதானம் எல்லாம் சுருட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன் என்று நினைத்தாயா? உன்னைப் பாடிப் பறைகொண்டதற்கு அடையாளமாக நாடடங்க கொண்டாடும்படி எனக்குப் பரிசில் வேண்டும். எனக்குச் சூடகம் என்ற தலையணி வேண்டும், தோள்வளை என்ற வங்கி வேண்டும் தோடு வேண்டும் செவிப்பூ வேண்டும் பாடகம் என்ற பாத அணி வேண்டும் இன்னும் நிறைய அணிகலன்கள் வேண்டும். அதெல்லாம் நீ அணிவிக்க நான் அணிவேன் என் புத்தாடையை நீ தர நான் உடுத்துவேன் அதன்பிறகு நெய் முழுக சமைக்கப்பட்ட பால் சோற்றை நெய்யொழுகி முழங்கை வழியே வழியும்படி உன் சன்னிதியில் உன்னைப்பார்த்தவாறே சேர்ந்திருந்து மகிழ்ந்து சாப்பிட்டுக் குளிர்ந்து திருப்தியடைவேன் என்றாள் ஆண்டாள். இவ்வளவு தான் பாடல். 

திருப்பாவை திவ்ய பிரவாகம் - 29 - கண்ணன் ரங்காச்சாரி

27

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப் 
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம் 
நாடும் புகழும் பரிசினால் நன்றாக 
சூடகமே தோள் வளையே, தோடே செவிப்பூவே 
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம் 
ஆடை உடுப்போம் அதன் பின்னே பால் சோறு 
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக் 
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

கண்ணன் சொல்கிறான். நம் போல் ஒரு ஈஸ்வரன் உண்டான பின் தான் நம் பாஞ்சஜன்யம் போன்ற சங்கும் உண்டாக முடியும். 'போல்வன சங்கங்கள் என்ற பல சங்குகளைக் கேட்டீர்களே.
உங்கள் நோன்புக்கு உதவிடும் வண்ணம், நம் பாஞ்சஜன்யத்தை எடுத்துக் கொள்ளுங்கள். 

புள்ளரையன் கோயில் வெள்ளை விளிச் சங்கையும், ஆநிரை மேய்க்கும் போது அவை இல்லம் திரும்பிட யாம் ஊதும் சங்கையும், யாம் உலகமளந்த போது ஜாம்பவான் ஊதிய ஜெயச் சங்கையும், பெரும் பறையான, நாம் லங்கையை அழித்த போது ஜெயம் சாற்றிய சங்கையும், திருவரையில் குடக் கூத்தாடிய போதில் ஊதிய சங்கையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

பல்லாண்டு பாடப் பெரியாழ்வாரையும், நம்மோடு உம்மை இணைத்துக் காப்பிட்டுப் பாடிட நம்மாழ்வாரையும், கோல விளக்காய் நப்பின்னை பிராட்டியையும், கொடிக்கு பெரிய திருவடியையும், விதானமான மேல்கூரைக்கு நம் அனந்தாழ்வானையும் எடுத்த்துக் கொள்ளுங்கள். இதற்கு மேலும் உங்களுக்கு யாம் செய்ய வேண்டியது ஏதேனும் உண்டோ என்று கேட்டான்.