செவ்வாய், 31 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 107


நான்காவது ஸ்கந்தம் – இருபத்து ஒன்பதாவது அத்தியாயம்

(ப்ரசேதஸர்கள் திரும்பிவந்து ராஜ்யமாளுதல்)

ஸ்ரீவிதுரர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மர்ஷியான மைத்ரேயரே! ப்ராசீனபர்ஹியின் புதல்வர்களான ப்ரசேதஸர்கள் தவம்செய்யப் போனார்களென்றும், அவர்களுக்கு ருத்ரன் ஒரு ஸ்தோத்ரத்தை உபதேசித்தானென்றும் உரைத்தீர். அவர்கள் அந்த ஸ்தோத்ரத்தினால் பரமபுருஷனைக் களிப்பித்து (மகிழ்வித்து) எந்த ஸித்தியைப் பெற்றார்கள்? மோக்ஷங் கொடுக்கவல்ல பரமபுருஷனுக்கு அன்பனாகிய ருத்ரன் திடீரென்று தோன்றி அனுக்ரஹம் செய்யப் பெற்ற அவர்கள் மோக்ஷகதியைப் பெற்றிருப்பார்களென்பதில் ஸந்தேஹமில்லை. அதற்கு முன்பு இந்த லோகத்திலாவது பரலோகத்திலாவது அவர்கள் பெற்ற நன்மையை எனக்குச் சொல்வீராக. ப்ருஹஸ்பதியின் சிஷ்யராகிய உமக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை.

மைத்ரேயர் சொல்லுகிறார்:- "தந்தையின் கட்டளைப்படி நடப்பவரான ப்ரசேதஸர்கள் ஸமுத்ர ஜலத்தினிடையில் ஜப யஜ்ஞத்தினாலும் தியானத்தினாலும் அனைத்து ஜீவராசிகளையும் படைத்த பரமபுருஷனை ஆராதித்தார்கள். ஆதிமூலமாகிய அப்பரமபுருஷன் பதினாயிரமாண்டுகள் கழிந்த பின்பு தன் தேஹகாந்தியால் அவர்களுடைய வருத்தத்தைப் போக்கிக்கொண்டு சுத்த ஸத்வமயமான திருமேனியுடன் அவர்களுக்கு ப்ரதயக்ஷமானான். அவன் கருத்மானுடைய தோளின்மேல் ஏறிக்கொண்டு மேரு பர்வதத்தின் சிகரத்தில் படிந்த நீலமேகம் போன்று பொன் விஜமுடைய பட்டு வஸ்த்ரம் தரித்துக் கழுத்தில் கௌஸ்துபமணி அணிந்து தன் தேஜஸ்ஸினால் திசைகளையெல்லாம் இருளறச் செய்துகொண்டு விளங்கினான். அவனுடைய முகம் பேரொளியுடைய தங்கநகைகள் பூண்டிருந்ததால், அவரது அழகிய கன்னங்களும் திருமுக மண்டலமும் மிகமிக அழகாய் விளங்கின. அவனுடைய கிரீடம் ஜ்வலித்துக் கொண்டிருந்தது. சங்கு சக்கரம் முதலிய எட்டு ஆயுதங்களைத் தரித்த கணநாயகர்களும் ஸனக ஸனந்தனாதி முனிவர்களும் ப்ரஹ்மதேவன் முதலிய தேவதைகளும் அவனைத் தொடர்ந்து வந்தார்கள். கருடர்களும் கின்னரர்களும் அவனுடைய புகழைப் பாடிக்கொண்டிருந்தார்கள். திரண்டு (பருத்து) உருண்டு நீண்ட எட்டு திருக்கரங்களுக்கிடையே வீற்றிருக்கின்ற ஸ்ரீமஹாலக்ஷ்மியுடன் சோபையில் (அழகில்) பொருகின்ற (பொருந்துகின்ற) வனமாலையால் அவன் திகழ்வுற்றிருந்தான். இத்தகைய அந்த ஆதிபுருஷன் கருணை நிறைந்த கண்ணோக்கத்துடன் தன் பக்தர்களான ப்ரசேதஸர்களை நோக்கி மேக கர்ஜனைபோல் கம்பீரமான ஒலியுடன் மொழிந்தான். 

திங்கள், 30 மார்ச், 2020

இறைவனின் சொரூபம்! - பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா


"விஸ்வத்துக்கு மூலமாக, சாட்சியாக, சக்தியாக இருந்து நடத்துவிக்கும் இறைவனின் சைதன்யத்தைப் பலவிதமாக தரிசித்து, கண்டடைந்த அற்புதங்களைத் தியான சுலோகங்களாகவும் ஸ்தோத்திரங்களாகவும் மகரிஷிகள் நமக்களித்துள்ளனர். அதிலிருந்து ஒரு தியான சுலோகத்தை ஆராய்ந்து பார்த்து, அதில் உள்ள தெய்வீக விஞ்ஞானத்தை அறிந்துகொள்வோம்'' என்றார் தம் சொற்பொழிவில், பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.

இது, விஷ்ணு சஹஸ்ரநாமத்திலுள்ள தியான சுலோகம்:

'சாந்தாகாரம் புஜக சயனம், பத்மநாபம், சுரேசம். 
விஸ்வாதாரம், ககன சத்ருசம், மேக வர்ணம், சுபாங்கம் 
லக்ஷ்மீ காந்தம், கமல நயனம், யோகி ஹ்ருத்யான கம்யம், 
வந்தே விஷ்ணும், பவ பய ஹரம், சர்வ லோகைக நாதம்' 

சிருஷ்டியின் முறையையும் அதனை இயக்கும் இறைவனின் சொரூபத்தையும் ஒரு அழகிய கிரம வரிசைப்படி இந்த சுலோகத்தில் பொதித்துள்ளார் மகரிஷி.

ஶ்ரீமத் பாகவதம் - 106


நான்காவது ஸ்கந்தம் – இருபத்து எட்டாவது அத்தியாயம்

கீழ்ச் சொன்ன புரஞ்ஜனோபாக்யானத்தின் கருத்தை வெளியிடுதல்.

ப்ராசீனபர்ஹி சொல்லுகிறான்:- நாரத மஹர்ஷி! நீர் மொழிந்த விஷயம் எமக்கு நன்றாகத் தெரியவில்லை. நாங்கள் ப்ராசீன கர்மவாஸனையால் மதிமயங்கி யஜ்ஞம் முதலிய கேவல கர்மங்களில் மனம் செல்லப்பெற்றவர்கள். தேவரீர் சொன்ன விஷயம் பெரிய பண்டிதர்களாலன்றி, மந்தமதிகளான (புத்தி குறைவான) எங்களால் அறியக்கூடியதல்ல. ஆகையால் அதை விவரித்துச் சொல்லவேண்டும்.

நாரதர் சொல்லுகிறார்:- மன்னவனே! புரமென்று சரீரத்திற்குப் பேர். ஜீவன் அதில் புகுந்து மனப்பற்றுடையனாய் இருக்கையால் புரஞ்ஜனனென்று சொல்லப்படுகிறான். அச்சரீரங்களில் சில ஒற்றைக் காலுடையவைகளும், சில இரண்டு காலுடையவைகளும், சில மூன்று காலுடையவைகளும், சில நான்கு காலுடையவைகளும், சில பலகாலுடையவைகளும், சில காலில்லாதவைகளுமாய் இருக்கும். அந்தப் புரஞ்ஜனனுக்கு அவிஜ்ஞாதனென்று ஒரு நண்பன் உண்டென்று மொழிந்தேனல்லவா? அவனே ஸர்வேச்வரன். அவன் இன்ன பேருடையவனென்றும் இன்ன செயலுடையவனென்றும் இன்ன குணமுடையவனென்றும் ஒருவராலும் அறியமுடியாதவனாகையால் அவிஜ்ஞாதனென்று கூறப்படுகிறான். ராம க்ருஷ்ணாதி நாமங்களாலும், ஜகத்ஸ்ருஷ்டி முதலிய செயல்களாலும் ஸத்யஜ்ஞானாதி குணங்களாலும் சாஸ்த்ரங்களில் சொல்லியபடி பெரியோர்களால் அவன் அறியப்படுகிறானாயினும், அவனுடைய நாமங்களும் செயல்களும் குணங்களும் இவ்வளவென்றாவது இத்தகைய பெருமையுடையவை என்றாவது உள்ளபடி அறியமுடியாதவை ஆகையால் அவனை அவிஜ்ஞாதனென்பது சரியே. இந்த ஜீவன் ப்ரக்ருதியின் குணங்களான சப்தாதி விஷயங்களை அனுபவிக்க விரும்பி கண், காது முதலிய ஒன்பது த்வாரங்களும் இரண்டு கை கால்களுமுடைய மனுஷ்ய சரீரத்தைக் கண்டு தான் போகங்களை அனுபவிப்பதற்கு உரிய இடமென்று நினைத்தான், அஹங்கார மமகாரங்களை விளைக்கும் புத்தியை மடந்தையென்று (பெண் என்று) மொழிந்தேன். இந்தப் புத்தியின் தூண்டுதலால் தான் ஜீவன் இச்சரீரத்தில் இருந்து இந்த்ரியங்களால் சப்தாதி விஷயங்களை அனுபவிக்கின்றான். 

ஜ்ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஆகிய இந்திரியங்கள் பத்தும் தமது வ்யாபாரங்களில் புத்தியை எதிர்பார்க்கின்றவை. ஆகையால் அவை அப்புத்தியாகிற மடந்தைக்கு (பெண்ணிற்கு) நண்பர்களாகவும் ப்ருத்யர்களாகவும் சொல்லப்பட்டன. அவ்விந்திரியங்களின் வ்யாபாரங்களே தோழிகளாகவும், ஐந்து வகையான ப்ராணன் ஐந்து தலைப்பாம்பாகவும், இருவகை இந்திரியங்களிலும் ப்ரதானமாகி வலிவுள்ள மனது மஹாவீரனாகவும், சப்தாதி விஷயங்கள் ஐந்தும் பாஞ்சால தேசங்களாகவும் கூறப்பட்டன. சரீரமாகிற பட்டணத்திற்கு ஒன்பது வாசல்கள் உண்டென்று சொன்னேனல்லவா? அவையாவன - கண்களிரண்டும் மூக்குகள் இரண்டும் காதுகளிரண்டும் முகமொன்றும் மலமூத்ர த்வாரங்களிரண்டும் ஆகிய இவ்வொன்பதே. கண் காது முதலிய இந்திரியங்களோடு கூடி அந்தந்த த்வாரங்களின் வழியாய் ஜீவன் வெளியிலுள்ள சப்தாதி விஷயங்களை அனுபவிக்கின்றான் என்பதைக் கருதியே புரஞ்ஜனன் நண்பர்களோடு கூடி இந்த த்வாரங்களால் அந்தந்தத் தேசங்களுக்குப் போவானென்று சொன்னேன். கண் த்வாரங்களிரண்டும் மூக்கு த்வாரங்களிரண்டும் வாயொன்றுமாகிய இவ்வைந்தும் கிழக்கு முகமாயுள்ள ஐந்து வாசல்களாகவும், வலக்காது தெற்கு வாசலாகவும், இடக்காது வடக்கு வாசலாகவும், மலமூத்ர த்வாரங்களிரண்டும் மேற்கு முகமாயுள்ள இரண்டு வாசல்களாகவும் சொல்லப்பட்டன. 

ஞாயிறு, 29 மார்ச், 2020

ராவணன் எப்போது வெல்லப் பட்டான்? - ஜி.மகேஷ்

ஒருமுறை ராவணன் தனது புஷ்பக விமானம் ஏறி பவனி வந்து கொண்டிருந்தான். அது அவனது அண்ணன் குபேரனிடமிருந்து அவன் பறித்துக் கொண்டது. இப்படி அவன் பவனி வரும் வேளையிலே கைலாய பர்வதம், அவன் வழியில் தடையாக வந்தது. உடன் விமானத்தில் இருந்து குதித்த ராவணன், தனது இருபது கைகளாலும், கைலாயத்தைப் பெயர்த்தெடுக்க முற்பட்டான். அதை அசைத்தும் விட்டான். (பின்பு முக்கண் முதல்வன் தனது கால் கட்டை விரலை, கைலாய பர்வத்தில் வைத்து அழுத்த, அவன் அங்கு சிக்குண்டு இடர் பட்டதும் பின்பு ஈசன் அருளால் அவன் விடுபட்டதும் நாம் அறிந்ததே). இப்படி, பிரளய கர்த்தாவான ஈசனின் இருப்பிடத்தையே அசைத்த வீரன் ராவணன். அது மட்டுமில்லை, இந்த ராவணன் தேவர்களின் அதிபதியான இந்திரனையும் வென்றவன்.

ராவணனோடு யுத்தம் நடக்கும் போது, ராமன் தசமுகனின் முதுகில் காயங்கள் இருப்பதைக் கண்டு வியந்தான். உடன் அருகில் இருந்த விபீஷணனிடம் ‘‘ஒரு உண்மையான வீரனுக்கு மார்பில் காயமிருக்குமே ஒழிய முதுகில் காயமிருக்காது. ஆனால் உனது அண்ணன் ராவணனுக்கோ முதுகில் காயங்கள் இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் விபீஷணா?’’ என்று  கேட்டான். 

 ராமன் வாயால் இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டதும் விபீஷணனுக்குக் கோபம் தலைக்கேறியது. ‘‘என்ன ராமா! எனது அண்ணன் கோழை என்று நினைத்து விட்டாயா?. மூவுலகங்களில் எங்கு தேடினாலும், என் அண்ணனைப் போல ஒரு சுத்த வீரனைக் காண முடியாது ராமா. என் அண்ணன் பொழுதைக் கழிக்க, இந்திரனிடமிருந்து  வென்று வந்த ஐராவத யானைகளோடு மல் யுத்தம் புரிவான். 

அப்போது அந்த யானைகள் அவனது மார்பில் தாக்கும். அதன் காரணமாக ஐராவதத்தின் தந்தங்கள், என் அண்ணனுடைய மார்பை துளைத்து, முதுகு வரை இறங்கி விடும். ஐராவதத்தின் தந்தத்தை உடலிலிருந்து பிரித்து எடுக்க என் அண்ணனுக்கு மனமில்லை. ஆகவே அதை அப்படியே விட்டுவிட்டான். அது மாறாத ரணமாக அவனது முதுகில் உள்ளது. இது தெரியாமல் அவனை கோழை என்று நினைக்காதே’’ என்று பொறிந்து தள்ளினான் விபீஷணன். இப்படி தேவர்களுக்கு மட்டுமில்லை அவர்களது யானைகளுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த மனிதன் ராவணன்.

இப்படிப்பட்ட ராவணன் ஒருநாள் நர்மதை நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற நகரத்தில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான். அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, ராவணனுடைய கூடாரத்தை மூழ்கடித்தது. ராவணன், அந்த வெள்ளத்தில் தத்தளித்துப் போனான். இதைக்கண்டு கரையில் இருந்த பெண்களும் அவர்களுடன் இருந்த ஆயிரம் கை படைத்த ஒருவனும் நகைத்தனர். அந்த ஆயிரம்கைக் கொண்டவன் வேறு யாருமில்லை. 

பட்டர்பிரான் பாடிய பைந்துழாய்க் கண்ணன் - முனைவர் மா.சிதம்பரம்

பெரியாழ்வார் திருமால் நெறியில் ஆழ்ந்து சிறந்திருந்த பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் ஆவார். திருவில்லிபுத்தூரில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். திருவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு மலர்களை மாலையாகச் சாற்றுவதை திருத்தொண்டாகக் கொண்டு வாழ்ந்தவர். இவரால் அருளப் பெற்று திவ்வியப் பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ள பெரியாழ்வார் திருமொழியின் பாடல்களின் எண்ணிக்கை 473 ஆகும். வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைபெற்ற சமயவாதத்தில் வென்று அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்து யானை மீது வரும் பொழுது, திருமால் திருமகளோடு வானத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்கு கண்ணேறு விழுந்து விடுமோ என்றஞ்சி பாடப்பட்டதே திருப்பல்லாண்டு ஆகும்.

தாயாகிய பெரியாழ்வார்:

திருமால்மேல் பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் தாயாகிக் கிருஷ்ணாவதாரத்தின் பல்வேறு செயல்களுள் மனம் தோய்ந்து பக்திச்சுவை ததும்பப் பாடியிருக்கிறார். மால்நிற வண்ணனாய் மாயவனாய் அவதரித்த கண்ணனைக் குழந்தையாகக் கருதி பெரியாழ்வார் பாடிய பாசுரங்கள் கற்பார் மனத்தைக் கசிவித்து தாய்மையின் பேரன்பினை சகலர்க்கும் ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவை. கண்டார் மனம் மயக்கும் மன்னனாய் மண் மீதில் அவதரித்த மாயவனின் எல்லாச் செயல்களிலும் உள்ளம் பறி கொடுத்து தோய்ந்து, இவர் பாடியருளிய பாசுரங்களின் பக்தி அனுபவம் பயிலும்தோறும் கற்கண்டுச் சாறாய் கன்னித் தமிழின் சுவையாய் ஆனந்தம் அளிப்பவை. இப்பாசுரங்கள் மூலம் உலகம் யாவையும் ஒருவாய் மண்ணில் உள்ளடக்கிக் காட்டிய பெருமானுக்கே பெரியாழ்வார் தாயாகிறார். குழந்தைகளுக்கு உரிய செயல்களை பெரியாழ்வார் என்னும் தாய் எப்படி அனுபவிக்கிறாள் என்பதை சில சான்றுகள் மூலம் பார்க்கலாம்.

கண்ணன் பிறப்பு:
     
மாடங்கள் நிறைந்துள்ள திருக்கோட்டியூரில் கண்ணன் பிறந்த இல்லம் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கின்றது. கண்ணன் பிறந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வண்ணம் ஆயர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசிக் கொண்டனர். அதனால் கண்ணன் வீட்டுத் திருமுற்றம் எல்லாம் எண்ணையும் சுண்ணமும் கலந்து சேறாகின என்பார் ஆழ்வார். இதனை வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே என்ற பாடலானது விளக்கி நிற்கும். கண்ணன் அவதரித்த காலத்தில் கோகுலத்தில் நந்த கோபன் மாளிகையில் அந்தக் குழந்தையைப் பார்த்தவர்கள் வெளியில் புறப்பட்டு வந்து கொண்டும் இருந்தனர். அத்தகையோரில் சாமுத்திரிகா லட்சணம் தெரிந்தவர்கள். இக்குழந்தை எல்லாரினும் சிறந்தவன் என்று பேசிக் கொண்டார்களாம். மேலும் உலகினில் உள்ள ஆண்கள் எல்லாம் இக்குழந்தைக்கு உருவத்தால் ஒப்பார்களே அன்றிப் பிற சிறப்பு நிலைகளில் ஒப்பாகமாட்டார்கள் என்றும் எண்ணினார்கள் என்பார் பெரியாழ்வார். இதனை,

பேணிச் சீர் உடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம் புகுவார் புக்குப் போதுவார்
ஆண் ஒப்பார் இவன் நேர் இல்லை காண் திரு-
வோணத்தான் உலகு ஆளும் என்பார்களே

கண்ணபிரான் பிறந்தபோது சங்கு சக்கரம் போன்றவற்றுடன் பிறந்து இருப்பதனைக் கண்ட தேவகி வசுதேவர்கள் இந்த உருவத்தினை கம்சன் தெரிந்து கொள்ளாமல் மறைத்துக்கொள் என வேண்டினராம். கண்ணனும் அப்படியே தாய் தந்தையரின் சொல்லைக் கேட்டு பரிபாலித்து கம்சனால் நேரக்கூடிய ஆபத்தில் இருந்து தப்பியபடியால் ‘பேணி’ என்றும் ‘சீருடைய பிள்ளை’ என்றும் பெரியாழ்வார் அருளிச் செய்தார். சொன்னபடி கேட்கின்ற பிள்ளை அன்றோ அவருடைய பிள்ளை என்று காஞ்சி பிரதிவாதம் அண்ணங்கராச்சாரியார் விளக்கம் செய்வார்.

ஒப்பிலியப்பனுக்கு பங்குனி பிரம்மோற்சவம் - திருக்குடந்தை உ.வே.வெங்கடேஷ்

“தபஸ்யே பால்குனே மாஸே ஏகாதச்யாம் திதௌ முனே
புண்யே ச்ரவண நக்ஷத்ரே முஹூர்த்தே அபிஜித் ஆஹ்வயே
ஆஜகாம வஹாயோகீ ஸாக்ஷாத் நாராயணோ ஹரி:
ஸ தேவ: ஸ்ரீநிவாஸாக்யோ பூமிதேவ்யா: பதி: விபு:
வஸுந்தரா விவாஹார்த்தம் லோகாநுக்ரஹ காம்யயா”

- என்கிறது ஒப்பிலியப்பனின் தல புராணம். 

இதன் பொருள்: “பங்குனி மாதம் ஏகாதசி திதியில், திருவோண  நட்சத்திரத்தில் அபிஜித் முகூர்த்தத்தில், திருவிண்ணகரம் என்றழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோவில் திருத்தலத்தில், பூமி தேவியை மணந்து கொள்வதற்காகவும், தன்னை நாடி வரும் அடியார்களுக்கு அனைத்து வரங்களும் அருட்வதற்காகவும் ஶ்ரீநிவாசன் என்ற பெயரோடு திருமால் அவதாரம் செய்தார்!”

எனவே வருடந்தோறும் பங்குனி மாதத் திருவோண நட்சத்திரத்தை ஒட்டி, கும்பகோணத்துக்கு 5 கி.மீ. கிழக்கில் உள்ள ஒப்பிலியப்பன் கோவிலில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பங்குனி திருவோணத்துக்கு ஒன்பது நாள் முன் தொடங்கும் இந்த உற்சவம், பங்குனி திருவோணத்தன்று நிறைவடையும். 

ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஒப்பிலியப்பனுக்கும் பூமிதேவித் தாயாருக்கும் புறப்பாடு நடைபெறும். அந்தப் புறப்பாடுகளுக்கான பின்னணிகளை ஆசுகவி வில்லூர் ஶ்ரீநிதி சுவாமிகள் வசுமதி சதகம் என்னும் காவியத்தில் விரிவாக விளக்கியுள்ளார். அவற்றை  அவரது ஸ்லோகங்களோடு இணைத்து இக்கட்டுரையில் காண்போம்:

திரும்பி வாராத் தூது - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் அன்றொரு நாள், பச்சைமா மலைபோல் மேனியும், பவளவாயும் கமலம் போன்ற செவ்வியக் கண்களும் உடைய அந்த அரங்கத்து அரவணையானை கண்குளிரக்கண்டு விட்டு வந்திருந்திருந்தாள், அந்தப் பதினெண்பிராயம் நிறையாத பருவமங்கை.


அவனுடைய பரந்தநெற்றியும், அகன்று நீண்டு செவ்வரி படர்ந்த கண்களும், கொவ்வைக் கனிவாயும், பரந்த மார்பும், நீண்ட கரங்களும் மூவுலகை, ஈரடியாக அளந்த திருவடிகளும் விரிஞ்சனை ஈன்ற வனசம் போன்ற திருநாபியும் அவளை அவன்பால் மயக்கமுறச் செய்தன. அவனை மறக்க எண்ணியும் அவளால் மறக்க முடியவில்லை. அதே ஏக்கத்தினால் உடல் மெலியவானாள். எப்பொழுதும் அரங்கத்தாய், அரவணையாய், அழகிய மணவாளா என்றெல்லாம் தன்மனத்திற்குள்ளேயே சொல்லிச் சொல்லி ஏக்கம் கொள்வாள். உற்றார் உறவினர்கள் இடையே சொல்லிக் கொண்டால் தன் ஒரு தலைக் காதலைக் கண்டு பரிகசிப்பார்களோ என்று அவர்களிடமும் சொல்லாமல் இருந்து விட்டாள். எப்பொழுதும் ஒரு உணர்ச்சியற்ற நிலையில் அவள் இருந்து வந்தாள்.


அன்றும் அப்படித்தான். அரங்க மாளிகையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தலைவிக்கு அவள் பின்னால் அவளுடைய அருமைத் தோழிகள் வந்து நின்றது கூடத் தெரியவில்லை. சில நாட்களாகத் தங்கள் தலைவி இவ்வாறு மயக்க நிலையில் இருந்து வருவதை அந்தத் தோழிப் பெண்கள் கண்டிருக்கிறார்கள். அதன் காரணத்தை அறிய அவர்களுக்கு மிகுந்த அவா தான். ஆயினும் தங்கள் தலைவி என்ன நினைத்துக் கொள்வாளோ என்ற அச்சம். இன்று தலைவியின் துயரத்திற்குக் காரணத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று அவர்கள் ஒரு முடிவிற்கு வந்தார்கள். அதைப்பற்றி கேட்டும் விட்டார்கள்.


தான் ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாகவும் அதன் விளைவு தான். தன் துயரத்திற்கு காரணம் என்றும் தலைவி சொன்னாள். அது என்ன விவரம் என்று தோழிகள் கேட்டார்கள். தலைவி சொன்னாள்:


“என் மனக்கருத்தை அறிந்து நன்மை, தீமைகளை ஆராய்ந்து என் நலத்திலேயே நாட்டம் கொண்ட எனதருமை தோழிகளாகிய நீங்களெல்லாம் இருந்தீர்கள். வேளைக்கு வேளை பாலும், பழமும் ஊட்டி என்னால் வளர்க்கப்பட்ட என் அருமைக்கிளிகள் தாமிருந்தன. நான் வைத்துப் பயிராக்கிய பூச்செடிகளில் பூத்த பூக்களிலிருந்த ஊறிய தேனைக்குடித்து விட்டு ரீங்காரம் செய்யும் வண்டுகளிருந்தன. பெண்களாகிய நம்மிடம் நடை பயின்று தோற்கும் அந்த அன்னமும் இருந்தது. நான் அந்தக் கருங்கடல் வண்ணனிடம் கொண்ட காதலைத் தெரிவித்து அவனுடைய ஆதரவைத் தேடிக்கொள்ள உங்களையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளாமல் என் நெஞ்சத்தை விட உண்மையான தூதுவன் வேறு யாருமில்லை என்று எண்ணி என் நெஞ்சையே தூது விடுத்தேன்” என்று சொல்லி முடித்தாள். அவள் மேலும் தொடர்ந்தாள்.

வேய் தந்த முத்தம் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

மண்ணகத்தேயுள்ள மக்கள் தம் துயரைப் போக்கவும், அதைக்கண்டு விண்ணகத்தேயுள்ள விரிஞ்சன் முதலானோரும் வியந்து நோக்கவும், பொன்னி வளங்கொழிக்கும் பூம்புனலரங்கம். கங்கையிற் புனிதமாய காவிரியின் நடுவே உதயனும் வானவீதியில், தன் வழிச் செல்ல இயலாதவாறு தடுத்து நிற்கும் நெடிய மதில்கள். அவையென்ன சாதாரணமானவையா? ஆடகச் செம்பொன்னாலானவை அவற்றின் எண்ணிக்கைதான் என்ன? ஒன்றா? இரண்டா? ஏழு நெடும்மதில்கள். அதன் நடுவே ஓர் அரங்கம். அதுதான் திருவரங்க பெரிய கோயில்.


மதில்கள் ஏழுடையது என்று கூறும் போதே அது ஒரு சிறந்த கோட்டை என்பது சொல்லாமலே விளங்குகிறதல்லவா. அதற்குப் பெயர்தான் அரங்க மாளிகை. அந்த மாளிகையின் கதவுகளைப் பற்றிப் பேசவும் வேண்டுமா? ஆணிப் பொற்றகடுரிஞ்சும் மணிகள் பொருந்திய கதவுகள். அவைகளை நிலையாகத் தாங்கும் நீண்ட நெடிய வாயில்கள். இவையெல்லாம் இவ்வாறென்றால் அந்த மாளிகையின் விமான வனப்பைச் சொல்ல வேண்டுமா? மாணிக்க வெயில் பரப்பும் வயிரமணி விமானம் அது. அதன் கீழ், மாளிகைக்குள் பச்சைமாமலை போல் மேனியும், பவழ வாயும், தாமரை நிகர்த்த தடங்கண்களும் பொருந்தி, சீர் பூத்த செழுங்கமலத் திருத்தவிசில் வீற்றிருக்கும் நீர்பூத்த திருமகளும், நிலமகளும் அடிவருடவும், தன் கடன் பணி செய்து கிடப்பதே என்று எப்பொழுதும் அருகிலிருந்து பணிபுரியக் காத்திருக்கும் அஞ்சிறைப்பறவை பணி கேட்கவும் திருத்துழாய்த் தாரார்ந்த மார்பில் ஞாயிற்றைப் பழிக்கும் கௌஸ்துபமணி பிரகாசிக்க நிற்கவும் அதர்மத்தைக் கடிந்து தர்மத்தை நிலை நாட்டத் துடிதுடித்து நிற்கும் ஐம்படையும் புடை சூழ்ந்திருக்க பிணியரங்க வினையகலப் பெருங்காலந்தவம் பேணி, மணி வயிற்றில் வந்துதித்த மலரயனை வழிபட்டு அவனிடம் வேண்டி மனதாரத் தரப்பட்டு பணியரங்கப் பெரும் பாயலில் பள்ளி கொண்டு பலதரப்பட்டோர்க்கும் பரிவு காட்டும் பரமதயாளன் அங்கே தன் வியக்கத்தக்க வலக்கரத்தை சிரசின் கீழ் கொடுத்துக் குணதிசை முடியும், குடதிசை பாதமும் நீட்டி வடதிசை முதுகு காட்டித் தென் திசையிலங்கை நோக்கிக் கண் வளரும் கருங்கடல் வண்ணன் அங்கே கோயில் கொண்டிருக்கிறான்.


அவ்வாறு ஐவாயரவில் அறிதுயில் அமலனை, பச்சை மாமலையை, கோவலனாய்க் குழல் ஊதும் கள்வனைக் கண்டு களித்த கண்கள் வேறொன்றின் பால் நாடுமோ? நாடுவதென்பது அரிதல்லவா. அவன் ஒரு கரிய பெரிய மலையென்றால் அவன் கண்கள் தாமரை. செய்ய கைகள் தாமரை. நெடிதுயர்ந்த தாள்கள் தாமரை. ஒரு நாலு முகத்தவனோடுலகீன்ற அவனுடைய திருநாபியும் தாமரை. அவனுடைய தொண்டையங்கனிவாயும் தாமரை. இவ்வாறு அவனது அவயவங்கள் எல்லாம் தாமரையாக அந்தப் பச்சை மாமலை மேல் ஒரு தாமரைக் காடே பூத்தது போல் காட்சியளிக்கிறானாம் அந்த அரங்கத்தரவணையான்.


வல்லியை நிகர்த்த வனிதை ஒருத்தி, தன் தாய்ச் சென்றபோது, தாயுடன் அவளும் சென்றாள் அரங்க மாளிகைக்கு. அரங்க மாளிகையில் நாம் மேலே உருவகித்த கோமளனைக் கண்டாள். அவன் பால் மையல் கொண்டாள்.

செவ்வாய், 24 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 105

நான்காவது ஸ்கந்தம் – இருபத்து ஏழாவது அத்தியாயம்

(புரஞ்ஜனன் காலகன்னிகையால் பிடியுண்டு வருந்துதல்)

நாரதர் சொல்லுகிறார்:- பர்ஹிஷதனே! பயனென்கிற அந்த யவனேச்வரனுடைய ஸைன்யமான யவனர்கள் அனைவரும் அவனது ஆஜ்ஜையின்படி நடப்பவர்களாகையால் ப்ரஜ்வாரனோடும் “காலகன்னிகையோடும் கூடி இப்புவனி (இவ்வுலகம்) முழுவதும் திரிந்தார்கள். மன்னவனே! அவர்கள் ஒருக்கால் கிழப்பாம்பினால் காக்கப்பட்டுப் பூமியிலுள்ள போகங்களெல்லாம் நிறைந்த புரஞ்ஜன பட்டணத்தைத் தகைந்தார்கள் (முற்றுகையிட்டார்கள்). புருஷர்களைத் தீண்டின மாத்ரத்தில் நிஸ்ஸாரமாக்கும் (சக்தியற்றவர்களாக்கும்) திறமையுடைய காலகன்னிகையும் புரஞ்ஜனனுடைய பட்டணத்தைப் பலாத்காரமாகக் கைப்பற்றி அனுபவித்தாள். அப்பொழுது யவனர்கள் அப்பட்டணத்து வாசல்களின் வழியாக அதற்குள் நாற்புறத்திலும் நுழைந்து அந்த பட்டணம் முழுவதையும் பாழ்செய்யத் தொடங்கினார்கள். குடும்பத்தில் மனக்கவலையுற்ற அப்புரஞ்ஜனன் தன்பட்டணம் யவனர்களால் பீடிக்கப்படுவது கண்டு அதில் மிகுந்த அபிமானமுடையவனாகையால் பலவகை வருத்தங்களைப் பெற்றான். காலகன்னிகையால் பிடியுண்டு சப்தாதி விஷயங்களில் மனம்மாறப் பெறாமல் விவேகமற்றுச் சோபை அழிந்து கந்தர்வர்களாலும் யவனர்களாலும் பலாத்காரமாகத் தனது ஐச்வர்யமெல்லாம் பறிக்கப்பெற்று மன இரக்கத்திற்கிடமான அப்புரஞ்ஜனன், தன் பட்டணம் சத்ருக்களால் (எதிரிகளால்) பாழாகி இருப்பதையும், பிள்ளைகளும் பேரன்களும் வேலைக்காரர்களும் மந்திரிகளும் தனக்கு ப்ரதிகூலராயிருப்பதையும், பார்யை (மனைவி) ஸ்நேஹம் மாறியிருப்பதையும், தான் காலகன்னிகையால் பிடியுண்டிருப்பதையும், தன் பாஞ்சால தேசம் முழுவதும் சத்ருக்களால் தூஷிக்கப்பட்டிருப்பதையும் கண்டு முடிவில்லாத சிந்தையில் மூழ்கி அதற்குப் பரிஹாரம் இன்னதென்று தெரியாதிருந்தான். இங்கனம் மனக்களிப்பற்ற அப்புரஞ்ஜனன் காமபோகங்களெல்லாம் காலகன்னிகையின் தீண்டலால் நிஸ்ஸாரமாயிருப்பினும் (ரஸமற்றிருப்பினும்) அவற்றில் விருப்பமுற்று ஆத்ம கதியில் விருப்பின்றிப் பெண்டிர்களையும் புதல்வர்களையும் சீராட்டிக் கொண்டிருந்தான். கந்தர்வர்களும் யவனர்களும் காலகன்னிகையும் சேர்ந்து தன் பட்டணத்தை அடியோடு பாழ்செய்வதைக் கண்டு அம்மன்னவன் மனம் இல்லாதிருப்பினும் வேறு கதியில்லாமையால் அதை விட்டுப்போகத் தொடங்கினான்.

ஶ்ரீமத் பாகவதம் - 104

நான்காவது ஸ்கந்தம் – இருபத்து ஆறாவது அத்தியாயம்


(புரஞ்ஜனன் கோபம் தெளிந்த பார்யையுடன் (மனைவியுடன்) கலந்திருத்தல்)


நாரதர் சொல்லுகிறார்:- மஹாராஜனே! புரஞ்ஜனி இங்கனம் தன் விலாஸங்களால் (மயக்கும் பார்வைகளால்) புரஞ்ஜனனை மதிமயக்கி (புத்தி மயங்கும்படி செய்து) வசப்படுத்திக்கொண்டு மனக்களிப்புற்றிருந்தாள் (மகிழ்ந்திருந்தாள்). அம்மன்னவன், கோபம் தெளிந்தெழுந்து ஸ்னானம் செய்து அழகிய ஆடை உடுத்தி குங்குமம் முதலிய மங்கல அலங்காரம் செய்து அன்னபானாதிகளால் திருப்தி அடைந்து அருகே வந்த காதலியைப் புகழ்ந்தான். அவன் அப்பெண்மணியால் அணைக்கப்பட்டுத் தானும் அவளைக் கண்டத்தில் அணைத்து ஏகாந்தத்தில் (தனியே) ரஹஸ்யவார்த்தைகளால் மதிமயங்கி அவளுடன் கூடி இரவு பகல் தெரியாமல் காலவேகத்தைச் சிறிதும் அறியாதிருந்தான். யௌவனக்கொழுப்புடைய (இளமையின் கர்வமுடைய) அம்மன்னவன் பெரிய மனக்களிப்புடன் சிறப்புடைய கட்டில் மேல் காதலியின் புஜத்தையே தலையணையாகக் கொண்டு சயனித்துக் காமபோகத்தில் ஆழ்ந்து அஜ்ஞானத்தினால் விவேகமற்று அப்பெண்மணியொருத்தியை மட்டும் நினைத்திருந்தானே அன்றித் தன் ஸ்வரூபத்தையாவது தனக்கு அந்தராத்மாவான பரமாத்மாவின் ஸ்வரூபத்தையாவது நினைக்கவேயில்லை. அவன் அப்பெண்மணியுடன் இங்கனம் காமக்கலவியில் (இன்பச்சேர்த்தியில்) ஆழ்ந்திருக்கையில், அவனுடைய யௌவனப்பருவம் அரைக்ஷணம் போல் கடந்தது. அப்புரஞ்ஜனன் தன்பார்யையான (மனைவியான) புரஞ்சனியிடத்தில் நூற்றுப்பதினொரு பிள்ளைகளைப்பெற்றான். அப்பொழுது அவனுடைய வாழ்நாளில் பாதி கழிந்தது. அம்மன்னவனுக்கு, சீலம் ஒளதார்யம் முதலிய குணங்கள் அமைந்து தாய் தந்தைகளுக்குப் புகழை விளைக்கவல்ல நூற்றுப்பத்துப் பெண்களும் பிறந்தார்கள். பாஞ்சால தேசாதிபதியாகிய அப்புரஞ்ஜனன் தாய்தந்தைகளின் வம்சத்திற்கு மேன்மையை விளைக்கவல்ல பிள்ளைகளை அவர்களுக்குத் தகுந்த மனைவிகளோடும், பெண்களை அவர்க்குத் தகுந்த மணவாளர்களோடும் சேர்த்தான். அவனுடைய பிள்ளைகளில் ஒவ்வொருவனுக்கும் நூறு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களால் அப்பாஞ்சாலதேசம் முழுவதும் புரஞ்ஜன வம்சமாய் நிரம்பிற்று. 

ஶ்ரீமத் பாகவதம் - 103

நான்காவது ஸ்கந்தம் - இருபத்து ஐந்தாவது அத்தியாயம்


(புரஞ்ஜனன் வேட்டையாடப் போதல்)


நாரதர் சொல்லுகிறார்:- மஹாவீரனாகிய அப்புரஞ்ஜனன் ஒருகால் வேட்டையாட விரும்பி ரதத்தின் மேல் ஏறிக்கொண்டு பஞ்சப்ரஸ்தமென்னும் வனத்திற்குப் போனான். அந்த ரதம் மிக்க வேகத்துடன் போகும் தன்மையது. அதற்கு ஐந்து குதிரைகளும், இரண்டு தண்டிகைகளும் (தடிகளும்), இரண்டு சக்கரங்களும், ஓர் அச்சும், மூன்று மூங்கில்களும், ஐந்து கட்டுக்களும், ஒரு கயிறும், ஒரு ஸாரதியும், ரதிகன் (ரதத்தில் செல்பவன்) உட்காரும்படியான ஓரிடமும், இரண்டு ஏர்க்கால்களும், ஐந்து ஆயுதங்களும், ஏழு மூடல்களும், ஐந்து கடைகளும், ஸ்வர்ண மயமான பலவகை அலங்காரங்களும் ஏற்பட்டிருந்தன. அப்புரஞ்ஜனன் ஸ்வர்ணமயமான கவசம் பூண்டு பாணங்கள் அழியாதிருக்கப்பெற்ற அம்பறாத்தூணிகளையும் எடுத்துக்கொண்டு அந்த ரதத்தின்மேல் ஏறி பதினொரு ஸேனைகளுடன் வனத்திற்குப் போனான். கர்வமுள்ள அம்மன்னவன் தனுஸ்ஸையும் (வில்லையும்) பாணத்தையும் கொண்டு தன்னை விட்டுப் பிரிந்திருக்கப்பொறாத பார்யையையும் (மனைவியையும்) துறந்து பெரிய விருப்பத்துடன் வனத்திற்கு (காட்டிற்குச்) சென்று வேட்டையாடினான். அம்மன்னவன் தாமஸ ஸ்வபாவத்தை ஏற்றுக்கொண்டு கொடிய புத்தியுடன் சிறிதும் மன இரக்கமின்றிக் காடு காடாகச் சென்று ஆங்காங்குள்ள மிருகங்களைக் கூரான பாணங்களால் அடித்தான். மன்னவனே! ராஜாக்களுக்கு வேட்டையாடுவது யுக்தமேயாகையால் (சரியாகையால்), அதில் விரோதமென்னென்று நினைக்கவேண்டாம். சாஸ்த்ரங்கள் வேட்டையாட வேண்டுமென்று விதிக்கவில்லை. ஒருவன் விருப்பமுற்று நினைத்தபடி வேட்டையாடுவானாயின், அது கூடாதென்றும், ப்ரஸித்தமான ச்ராத்தம் முதலிய காரணங்களைப் பற்றியே வேட்டையாடலாமென்றும், மன்னவனே வேட்டையாடலாமென்றும், பரிசுத்தமான மிருகங்களையே வதிக்கலாமென்றும் எவ்வளவு உபயோகப்படுமோ அவ்வளவே வதிக்கலாமென்றும் சாஸ்த்ரங்களில் நியதி ஏற்பட்டிருக்கின்றது. அதைக் கடந்து இரக்கமின்றி மனம்போனபடி வேட்டையாடுவானாயின், அது மன்னவனுக்கும் தோஷத்தையே விளைவிப்பதாகும். இங்கனம் சாஸ்த்ரத்தின் கருத்தை அறிந்து அதற்கு விரோதமில்லாமல் நடந்தாலும், அல்லது இதை அவச்யம் செய்தே ஆகவேண்டுமென்று சாஸ்த்ரம் விதிக்காமையால் இது நமக்கு வேண்டியதில்லையென்று அதினின்று மீண்டு நின்றாலும், அவன் அச்செயலின் பாபத்தினாலும் அந்த ஜ்ஞானத்தினாலும் தீண்டப்படமாட்டான். அப்படியின்றி இதைச் செய்தே ஆகவேண்டுமென்ற பிடிவாதத்துடன் மனம்போனபடி கார்யங்களைச் செய்பவன் புண்ய பாபங்களால் கட்டுண்டு மேன்மேலும் ஸம்ஸாரத்தில் ஆழ்ந்து அறிவழிந்து நரகத்தில் விழுவான். (ஆகையால் அம்மன்னவன் கொடுமதியனாகி [கொடுமை செய்யும் எண்ணத்துடன்] மனம் போனபடி வேட்டையாடினது குற்றமே). அவ்வனத்தில், பலவகை இறகுகள் கட்டப்பெற்ற வேகமுடைய அம்மன்னவனது பாணங்களால் தேஹமெல்லாம் (உடம்பெல்லாம்) பிளவுண்டு வருந்துகின்ற மிருகங்களின் அழிவு மன இரக்கம் உடையோர்க்குப் பொறுக்க முடியாதிருந்தது. அம்மன்னவன் முயல்களையும், பன்றிகளையும், கிடாக்களையும், கவய மிருகங்களையும், கறுப்புச் சாயலையுடைய கலைமான்களையும், முள்ளம்பன்றிகளையும், பரிசுத்தங்களும் அல்லாதவைகளுமான மற்றும் பல மிருகங்களையும் அடித்து இளைப்புற்றான். அப்பால் அம்மன்னவன் பசி தாஹங்களால் வருந்தி வேட்டையினின்று திரும்பி வீட்டிற்கு வந்து ஸ்னானம் செய்து வேளைக்குரிய ஆஹாரம் செய்து ச்ரமம் தீர்ந்து உட்கார்ந்தான். பிறகு தூபத்தினாலும் சந்தனம் முதலிய பூச்சுக்களாலும் பூமாலை முதலியவைகளாலும் தன்னை மேன்மைபடுத்திக்கொண்டு ஸமஸ்த அங்கங்களிலும் (உடல் உறுப்புக்களிலும்) ஆபரணங்களை நன்றாக அணிந்து பார்யையிடத்தில் மனம் செல்லப்பெற்றான்.

ஞாயிறு, 22 மார்ச், 2020

அனுமனுக்கு சிந்தூரம் ஏன்? - அமரர் ரா.கணபதி


ஆஞ்சநேய ஸ்வாமி ஸிந்தூரப் பூச்சு பெற்றதற்கு உள்ள வரலாறோ ரஸம் சொட்டும் ஒன்று. கர்ண பரம்பரையாக வழங்கும் கர்ணாம்ருதமான வரலாறு. அசோகவனத்திலிருந்த அதிசோக காலத்தில் தன்னை அலங்கரித்துக் கொள்வதில் அடியோடு நாட்டமற்று வாட்டமுற்றிருந்தவள் கற்பரசியான பிராட்டி. அவளிடமும் ஓர் அலங்காரத்தைக் கண்டு ஆஞ்சநேயன் ஆச்சரியம் அடைந்தான்.

அவளது நெற்றி உச்சியில் தீற்றியிருந்த சிந்தூரம்தான் அது. வானரிகளில் சுமங்கலிகள் சிந்தூரம் இட்டுக் கொள்ளும் வழக்கமில்லை போலிருக்கிறது. எனவே ஆச்சரியப்பட்டான். அவளிடமே கேட்டான், “தாயே, தப்பாக எண்ணாதே! அணி பணி யாவும் நீக்கிய உன் பவித்திரமான மதி முகத்தை சோக மேகம் மூடி மங்கச் செய்திருப்பதால் பாவி ராவணனுக்கு உண்டாகக் கூடிய தகாத உணர்ச்சி இந்த மட்டுமாவது கட்டுப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்க நீ செக்கச்செவேலென்றிருக்கும் இந்த ஏதோ ஒரு பூஷணத்தைத் தரித்துக்கொண்டு அதன் வசீகரத்தை ஏன் விருத்தி செய்து கொள்கிறாய்?” ஆராத்துயரிலும் அதைக் கேட்டு அன்னையால் புன்னகைக்காதிருக்க இயலவில்லை. அன்பாக மறுமொழி சொன்னாள். 

‘‘மகனே! இது என் அழகை விருத்தி செய்து கொள்ளும் அலங்காரம் அல்ல. என் நாதனின் - நம் பிரபுவின் - ஆயுர் - ஆரோக்யங்களை விருத்தி செய்து கொள்ளும் ரக்ஷையே இது. மணமான ஒரு மங்கையின் மாங்கல்யத்தைக் காத்துத் தரும் பரமமங்கள ரக்ஷை. அலங்காரமாகவும் இதை இரு இமைகளுக்கிடையில் இட்டுக் கொள்ளலாம். 

ஆனால், அவ்வாறு கார் நிறக் கஸ்தூரி, மை, சாந்து முதலியவற்றையும் திலகமாகத் தரிப்பதுண்டு. பதியின் க்ஷேமத்திற்காகவோ குங்குமம் எனப்படும் மங்களச் சின்னமான இச்சிந்தூரத்தைத்தான் மகாலட்சுமியின் வாச ஸ்தானமான நெற்றி உச்சியில் வகிட்டில்தான் இட்டுக் கொள்ள வேண்டும். என் துரதிருஷ்டத்திலும் ஓர் அதிருஷ்டமாக இந்த லங்காபுரி அமைந்துள்ள திரிகூட பர்வதத்தின் இப்பகுதியில் சிந்தூர தாதுப் பாறைகள் இருக்கின்றன. எனவே, தினமும் அதைக் குழைத்து ஆரிய புத்ரரின் ஆயுராரோக்ய வளர்ச்சிக்காகத் தீற்றிக் கொள்கிறேன்.”

இதைக் கேட்டானோ இல்லையோ மாருதிக்கு மின்னலாகச் சிந்தனை படர்ந்தது. பரம பக்தியின் பெருமையும் குழந்தைப்பிள்ளைத்தனத்தின் எளிமையும் ஒன்று கலந்த சிந்தனை! ‘சிந்தூரம் இட்டுக் கொண்டால் நம் பிரபுவுக்கு நன்மை எனில் இந்த அம்மாள் மாத்திரம் ஏன் அந்நன்மையைப் புரியவேண்டும்? நானும்தான் புரிகிறேனே! அவள் வகிட்டில் மட்டும் இட்டுக் கொண்டுவிட்டால் அப்படியே செய்து விட்டுப் போகட்டும். எனக்கு அது போதாது! தலையோடு கால் ஸர்வாங்கமும் பூசிக் கொண்டாலே எனக்குத் திருப்தி ஏற்படும்’ என எண்ணினான்.

சனி, 21 மார்ச், 2020

பக்தனா! பரமனா! - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

“பக்தனா? பரமனா? இருவரில் எவன் பெரியவன் என்று ஒருவர் கேட்டார். பாரெல்லாம் படைத்து அதைக் காத்து வரும் பரமன்தான் பெரியவன் என்ற உண்மையை யாரால்தான் மறுக்கமுடியும் என்று சொன்னார் மற்றவர். இருக்கலாம்; ஆனால் அந்தப் பரமனும் தொண்டர்தம் உள்ளத்தடக்கந்தானே என்று எனக்கு சொல்லத் தோன்றிற்று. ஆம். பாரிடந்து, பாரையுண்டு, பாருமிழந்து, பாரளந்து, பாரையாண்ட, பேரருளானாகிய நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பியாகிய அந்த ஸ்ரீமந் நாராயணன் மூவுலகத்தும் உள்ள ஜீவராசிகள் அத்தனையிலும் உயர்ந்தவன் என்பது ஒரு வகையில் உண்மையேயாயினும் அந்தக் கடல் நீலவண்ணன், கருணைக்கடல் தொண்டர்களின் உள்ளங்களில் நித்தியவாசம் செய்வதைத்தான், பாற்கடலில் வாழ்வதைக்காட்டிலும் பெரிதாகக் கருதுகிறான் என்றால் அது தொண்டர்களின் பெருமையைத்தானே சுட்டிக்காட்டி  நிற்கின்றது.


பரமனை பக்தியோகம் ஒன்றினால்தான் கட்டுப்படுத்தமுடியும். அந்தக் காரியம் பரம பக்தர்களால்தான் செய்ய முடிந்த ஒன்றாகும் என்பதை நாம் நமது நாட்டு அரும்பெரும் பொக்கிஷங்களான புராண, இதிகாசங்கள் வாயிலாக அறிந்திருக்கிறோம். செழுங்கமலத் திருத்தவிசில் வீற்றிருக்கும், நீர்பூத்த திருமகளும், நிலமகளும் அடிவருட பாம்பனைமேல் அறிதுயிலின் இனிதமர்ந்த அந்தப் பெருமான் துஷ்ட நிக்கிரக, சிஷ்டபரிபாலனார்த்தம், பூமியில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வாக வந்து தோன்றிய வரலாறு நாம் அறியாததல்ல. அந்தக் கிருஷ்ணன் போர்க்களத்தில் சோர்ந்து போய் நின்ற பார்த்திபனுக்கு பகவத்கீதையை உபதேசித்து அவனுடைய சோர்வைப் போக்கி அவனை செயலில் ஈடுபடச் செய்தார். அவர் கூறிய யோகங்களில் பக்தியோகம் என்பதும் ஒன்றாகும். இலை (துளசி) புஷ்பம், பழம், தண்ணீர் இவைகளில் எதுவாக இருந்தாலும் சரி. கிடைத்தவற்றைக் கொண்டு அதன் மூலம் என்னைத் திருப்தி செய்து என்னிடம் பக்தி செய்தால், அவனை அவனுடைய பக்திக்கு கட்டுப்பட்டு அவனுடைய யோகட் «க்ஷமங்களை நான் சிரசாவகிக்கிறேன் என்று கண்ணன் அருளிச் செய்திருக்கிறார். இதனால், அந்தப் பரமபதநாதனை அடைவதற்கு உண்மை பக்தி ஒன்றே போதும் என்பது தெளிவாகிறது.


மனம் ஒன்று நாட, கண் ஒன்று காண, கை ஒன்று செய்ய, செவியன்று கேட்க, செய்யும் எந்த பூஜையையும் பரமன் ஏற்பதில்லை. ஒருமையுடன் அவனது திருவடியை நினைந்து உருகி, உள்ளம் பறிகொடுத்து பக்தி செய்யும் பெரியோர்களைத்தான் உண்மை பக்தனாக பரமன் ஏற்றுக் கொள்கிறான் என்பதுதான் பெரியோர்களின் கருத்தாகும்.


மகாபாரதக் கதையிலேயே ஒரு உண்மை பக்தனையும், அந்தப் பக்தனின் பக்திக்கு, பரமன் கட்டுண்டு, அவனுக்கு ஏவல் செய்த விதத்தையும் அந்த நூலாசியரே நமக்கு மிக அழகாக எடுத்துக்கூறும் விவரத்தை இங்கு நாம் ஆராய்வோம்.

அரங்கனைப் பாடிய வாய் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

“அரன் அதிகன், உலகளந்த அரி அதிகன் என்றுரைக்கும் அறிவிலோர்க்குப் பரகதி சென்றடைவரிய பரிசே போல்” என்று மிக அற்புதமாக கவிச்சக்கரவர்த்தி கம்பன் தன் மாபெரும் இலக்கிய படைப்பாகிய இராமகாதையில் குறிப்பிடுகின்றான். ஆம். அவன் கூறியது முற்றும் உண்மைதான். அரன் தான் அகிலத்திலேயே சிறந்தவன் என்றோ அல்லது உலகத்தையே தன் ஈரடியால்  மூவடியாக அளந்து கொண்டானே அந்த அரிதான் பெரியவன் என்றோ நாம் வீண் விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது என்பது தான் அவனது சிறந்த நோக்கமேயன்றி அவன் அரனையோ, அரியையோ இழித்துக் கூறுவதாக ஆகாது.

கம்பன் தான் பாட எடுத்துக் கொண்ட சரிதை திருமாலின் பிறப்பைப் பற்றி. அவன் வட மொழியிலுள்ள வான்மீகி இராமாயணத்தைத் தழுவியே தனது இராம காதையை இயற்றியிருப்பினும் பலவிடங்களில் கதையிலும் சரி, கருத்திலும் சரி, வான்மீகியினின்றும் வேறுபடத்தான் செய்கிறான். மிதிலைக்காட்சிப் படலத்தில் இராமனும், சீதையும் ஒருவரையருவர் கண்டு காதல் கொண்ட பிறகே கடிமணம் புரிந்து கொண்டதாக நம் தமிழ் மரபிற்கேற்ப தன் கதையை மாற்றுகிறான். அதேபோல் வாலி வதைப்படலத்தில் இராமனை முழுமுதற் கடவுளென்பதை வாலி கண்டு கொண்டதாக முதல் நூலின் கருத்திற்கு மாறுபடுகிறான். அதேபோல் யுத்த காண்டத்தில் இரணியன் வதைப் படலமென்ற ஒன்றையும், மாயா சனகப்படலம் என்ற மற்றொன்றையும் கதைப்போக்கில் செருகி விடுகிறான். ஆனால் அவன் இயற்றிய இலக்கிய வரலாற்றை மேற்படி வேறுபாடுகள் எவையும் ஊறுபடுத்துவனவாக இல்லை. இராமன் காலத்திலேயே வான்மீகி வாழ்ந்து வந்தார் என்பது விளக்கம். அதனால் வான்மீகி இராமனைப் பரமனின் அவதாரம் என்று மட்டும் ஒப்புக் கொள்கிறாரே தவிர்த்து அவனையே பரம்பொருள் என்று நாம் எண்ணுமாறு அவர் தனது இலக்கியப்படைப்பைக் கொண்டு செல்லவில்லை. ஆனால் கம்பனோ இராமனை முழுமுதற் கடவுள் என்று தன் இலக்கிய படைப்பெங்கணும் மிகத் தெளிவாகச் சுட்டிக் காட்டிச் செல்கிறான்.

ஶ்ரீமத் பாகவதம் - 102

நான்காவது ஸ்கந்தம் - இருபத்து நான்காவது அத்தியாயம்


புரஞ்சனோபாக்யானம் (புரஞ்ஜனனின் சரிதம்)


மைத்ரேயர் சொல்லுகிறார்:- மஹானுபாவனாகிய ருத்ரன் ப்ரசேதஸர்களுக்கு (பர்ஹிஷதனின் பத்துபிள்ளைகள்) ஸ்தோத்ரத்தை உபதேசித்து அவர்களால் பூஜிக்கப்பட்டு, அவர்கள் பார்த்துக் கொண்டேயிருக்கையில், அவ்விடத்திலேயே மறைந்தான். அப்பால் அவர்களெல்லோரும் ருத்ரன் மொழிந்த பரமாத்ம ஸ்தோத்ரத்தை ஜலத்தில் (தண்ணீரில்) நின்று ஜபித்துக் கொண்டு பதினாயிரமாண்டுகள் தவம் புரிந்தார்கள். இவர்கள் தந்தையாகிய ப்ராசீனபர்ஹி கேவலம் (ஆத்ம பரமாத்ம ஜ்ஞானமின்றி) யாகாதி கர்மங்களிலேயே மிக்க மனவூக்கமுற்றிருந்தான். பிறகு ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்த நாரதமுனிவர் அவன்மேல் மன இரக்கங்கொண்டு அவனுக்கு ஜ்ஞானோபதேசம் செய்யவிரும்பி அவனிடம் வந்து “மன்னவனே! நீ பலவாக யஜ்ஞாதி கர்மங்களை நடத்திக்கொண்டு வருகின்றாய். இதனால் நீ எந்த நன்மையைப் பெறவிரும்புகின்றாயோ? தெரியவில்லை. துக்கங்கள் கழியவேண்டுமென்றாவது ஸுகங்களைப் பெறவேண்டுமென்றாவது நீ விரும்புவாயாயின், இந்தக் கேவல கர்மத்தினால் (பரமாத்ம விஷயத்தில் ஜ்ஞானம், பக்தி இல்லாமல் செய்யும் யாகம் போன்ற கர்மங்களால்) அவ்விரண்டில் எதையும் ஸாதிக்கமுடியாது” என்றார். 


அரசன் கேட்கிறான்:- “மஹானுபாவரே! என் மனம் கேவல கர்மங்களிலேயே மூழ்கி மற்றவற்றிலிருந்து விலகி இருக்கிறது. ஆதலால் நான் மற்ற எந்த நன்மையையும் அறியேன். நான் கர்மங்களினின்று மீண்டு வருமாறு எனக்கு நீர் தத்வஜ்ஞானத்தை (ஆத்ம பரமாத்ம விஷய ஜானத்தை) உபதேசிப்பீராக. விடமுடியாத பலவகை ப்ரவ்ருத்தி தர்மங்கள் தொடரப்பெற்று மேன்மேலும் ஸம்ஸாரத்தை வளர்ப்பதான மனை வாழ்க்கையில் மமகாரத்தை (செருக்கினை) ஏற்றுக்கொண்டு பிள்ளை பெண்டிர் பணம் முதலியவற்றையே புருஷார்த்தமாக நினைத்து மதிகெட்டுத் திரிகிற (அறிவு கெட்டு அலைகிற) என்போன்ற மூடன் சிறந்த தன்மையைப் பெறமாட்டான்” என்றான். அதைக் கேட்டு நாரதர் மன்னவனை நோக்கி இங்கனம் மொழிந்தார்.

வெள்ளி, 13 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 101


நான்காவது ஸ்கந்தம் - இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(ப்ருதுவின் ஸந்ததியைக் கூறுதல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- ப்ருதுவின் புதல்வனான விஜிதாச்வன் ப்ருதுவுக்குப் பின்பு பூமண்டலத்தையெல்லாம் பாதுகாத்து வந்தான். அவன் பெரும்புகழன்; ப்ராதாக்களிடத்தில் (சகோதரர்களிடத்தில்) மிகுந்த ப்ரீதியுடையவன். அவன் ஹர்யக்ஷனுக்குக் கிழக்கு திக்கையும், தூம்ரகேசனுக்கு தெற்குத் திக்கையும், வ்ருகனுக்கு மேற்கு திக்கையும், த்ரவிணனுக்கு வடக்கு திக்கையுமாகத் திசைகளையெல்லாம் தம்பிகளுக்குப் பங்கிட்டுக்கொடுத்தான். இவன் இந்த்ரனுடைய அனுக்ரஹத்தினால் அந்தர்த்தான (மறையும்) சக்தியைப் பெற்றானாகையால் இவனுக்கு அந்தர்த்தானனென்று மற்றொரு பேரும் உண்டாயிற்று. இவன் சிகண்டினியென்னும் தன் மனைவியிடத்தில் மிகவும் புகழத்தகுந்த மூன்று பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் பாவகன், பவமானன், சுசி என்னும் பேருடையவர்கள். கார்ஹபத்யம் முதலிய அக்னிகள் மூவரும் முன்பு வஸிஷ்டருடைய சாபத்தினால் மனுஷ்யஜன்மம் பெற்றார்கள். அவர்களே இந்தப் பாவகன் முதலியவர்கள். இவர்கள் யோகமஹிமையால் மீளவும் தமது கதியைப் பெற்றார்கள். அந்தர்த்தானன் (விஜிதாச்வன்) நபஸ்வதி என்கிற மற்றொரு மனைவியிடத்தில் ஹவிர்த்தானனென்னும் புதல்வனைப் பெற்றான். இந்த அந்தர்த்தான மன்னவன் தன் தகப்பனாருடைய யாகக்குதிரையை இந்த்ரன் பறித்துக்கொண்டு போகையில் அவனைத் தொடர்ந்து சென்று, இவன் குதிரையைப் பறித்தவனென்று தெரிந்தும் கொல்லாமலே விட்டான். ஆனதுபற்றியே அவ்விந்த்ரன் ஸந்தோஷம் அடைந்து இவனுக்கு அந்தர்த்தான சக்தியைக் கொடுத்தான், கப்பம் (சிற்றரசர்கள் செலுத்தும் காணிக்கை) வாங்குவது, தண்டிப்பது, சுங்கம் (வரி) வாங்குவது முதலியவற்றால் ராஜாக்களின் ஜீவனம் தாருணமாயிருப்பதைக் கண்டு அம்மன்னவன் தீர்க்கஸத்ரமென்னும் யாகத்தை நடத்தும் வ்யாஜத்தினால் அந்த ஜீவனத்தைத் துறந்தான். ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்த அம்மன்னவன் அந்த ஸத்ரத்தில் (ஒரு யாகம்) தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையனும் ஆத்மாக்களுக்கு அந்தராத்மாவாகையால் பரமாத்மாவுமாகிய பரமபுருஷனைத் தடைபடாத ஸமாதியினால் (தொடர் த்யானத்தினால்) ஆராதித்து அவனுடைய லோகத்தை அடைந்தான். ஹவிர்த்தானன் ஹவிர்த்தானி என்னும் தன் மனைவியிடத்தில் பர்ஹிஷதன், கயன், சுக்லன், க்ருஷ்ணன், ஸத்யன், ஜிதவ்ரதன் என்ற ஆறு பிள்ளைகளைப் பெற்றான். அவர்களில் பர்ஹிஷதன் மிகுந்த பாக்யமுடையவன். ஹவிர்த்தானனுக்குப் பின்பு அவன் ப்ரஜைகளைப் பாதுகாத்துவந்தான். அவன் யஞ்ஞாதி கர்மங்களை விதிக்கிற வேதபாகங்களிலும் அவற்றை விவரிக்கிற கல்பஸூத்ரம், ஸ்ம்ருதி, இதிஹாஸம், புராணம் முதலியவற்றிலும் யோகமார்க்கங்களிலும் மிக்க வல்லவனாயிருந்தான். அவன் ஓரிடத்தில் யாகம் செய்து முடித்து அதன் ஸமீபத்திலேயே மற்றொரு யாகம் செய்வதும் அதன் ஸமீபத்தில் மற்றொரு யாகம் செய்வதுமாகி இப்பூமண்டலத்தை எல்லாம் யாக பூமியாகக்கொண்டு கிழக்கு நுனியாகப் பரப்பின தர்ப்பங்களால் பூமி முழுவதும் நிறைத்து விட்டான். அதனால் அவன் ப்ராசீனபர்ஹி என்று பேர்பெற்றான். அவன் ப்ரஹ்மதேவனால் உரைக்கப்பெற்ற ஸமுத்ரராஜனது புதல்வியாகிய சதத்ருதி என்பவளை மணம்புரிந்தான். அவள் அங்கங்களெல்லாம் அழகாயிருக்கப் பெற்றவள். இளம்பருவமுடையவள். அவள் ஸமஸ்த ஆபரணங்களையும் அணிந்து விவாஹகாலத்தில் அக்னியை வலம் செய்யும்பொழுது அக்னிதேவன் முன்பு சுகியை விரும்பினாற்போல் அவளை விரும்பினான். புதுமணமடந்தையாகிய அவள் சிலம்புத் தண்டைகளை (கொலுசு) ஒலிப்பித்துக்கொண்டு திசைகளில் உலாவும்பொழுது தேவதைகளும், அஸுரர்களும், கந்தர்வர்களும், ஸித்தர்களும், உரகர்களும், முனிவர்களும் மற்ற மனிதர்களும் மோஹம் (ஆசை) கொண்டார்கள். ப்ராசீனபர்ஹி என்று பேர்பெற்ற பர்ஹிஷதனுக்கு இங்கனம் பேரழகியாகிய சதத்ருதியிடத்தில் பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களெல்லோரும் ப்ரசேதஸ்ஸுக்களென்று ஒரே பெயருடையவர்கள். எல்லோரும் ஒரே வ்ரதத்தை ஆசரித்துக் கொண்டிருந்தார்கள். தர்மத்தின் கரை அறிந்தவர்கள். அவர்கள் ப்ரஜைகளைப் படைக்கும்படி தந்தையினால் கட்டளையிடப்பெற்றுத் தவம் செய்யும் பொருட்டு ஆரண்யம் (காடு) சென்று பதினாயிரம் ஆண்டுகள் தவங்களுக்கு நாதனாகிய பகவானைத் தவத்தினால் ஆராதித்தார்கள். அவர்கள் தவம் செய்வதற்காக ஆரண்யத்திற்கு (காட்டிற்கு) போகும்பொழுது அவர் மேல் ருத்ரன் அருள்புரிந்து வழியில் வந்து தோன்றி ஒன்று உபதேசித்தான். அவர்கள் அதை ஜபித்து அதன் பொருளான பகவானை த்யானித்துக் கொண்டு மிக்க ஊக்கத்துடன் தவம் செய்து வந்தார்கள்.

புதன், 11 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 100

நான்காவது ஸ்கந்தம் – இருபத்து இரண்டாவது அத்தியாயம்

(ப்ருது மன்னவன் விமானத்திலேறி வைகுண்டமேகுதல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- ஸ்வர்க்காதி போகங்களெல்லாம் நிலையற்றவையென்றும் அற்பங்களென்றும் நிச்சயித்திருக்கிற அந்த ப்ருது மன்னவன் தன் தேசத்திலுள்ள ப்ரஜைகளையெல்லாம் (மக்களையெல்லாம்) நெடுநாள் பாதுகாத்துவந்து ஒருநாள் தான் வயது முதிர்ந்திருத்தலைக் கண்டான். அம்மன்னவன் ஜங்கம (அசையும்) ஸ்தாவர (அசையாத) ரூபமான ஜகத்திற்கெல்லாம் ஜீவனம் (பிழைப்பைக்) கற்பித்து ஸத்புருஷர்களின் தர்மத்தை அழியாமல் பாதுகாத்து வந்து பகவானுடைய ஆஞ்ஜையை நிறைவேற்றித் தான் எதற்காக அவதரித்தானோ அதையெல்லாம் முடித்து, தன்னைவிட்டுப் பிரியமுடியாமல் வருந்தி ரோதனம் செய்வது (அழுவது) போன்ற தன் புதல்வியாகிய பூமியைத் தன் புதல்வரிடம் ஒப்புவித்து, ப்ரஜைகளெல்லாம் தன்னைப் பிரிந்திருக்க முடியாமல் வருந்திக் கொண்டிருக்கையில் பார்யையுடன் (மனைவியுடன்) தானொருவனே தபோவனத்திற்குச் சென்றான். அவ்விடத்திலும் அவன் சமதமாதி நியமங்களை அங்கீகரித்து முன்பு பூமண்டலத்தை ஜயிக்கும்பொழுது முயற்சி கொண்டாற்போலவே வானப்ரஸ்தர்கள் ஆசரிக்கும்படியான கொடிய தவத்தில் முயற்சி கொண்டான். அவன் சிலநாள் காய் கிழங்கு வேர்களையும், சிலநாள் உலர்ந்த இலைகளையும், சிலபஷம் வரையில் ஜலத்தையும் ஆஹாரமாக உட்கொண்டிருந்து, அப்பால் வாயுவைப் பக்ஷித்துத் தவம் செய்து வந்தான். 

க்ரீஷ்ம ருதுவில் (வெயிற் காலத்தில்) பஞ்சாக்னி (ஐந்து நெருப்புகளுக்கு) மத்யத்திலும், வர்ஷ ருதுவில் (மழைக்காலத்தில்) விடாமடையினிடையிலும் (தொடர்ந்து ஓடும் நீரிலும்), சிசிர ருதுவில் (குளிர் காலத்தில்) கழுத்தளவு ஜலத்திலும் இருந்து பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானிப்பதும் வெறுந்தரையிலேயே படுப்பதுமாயிருந்தான். குளிர் வெயில் முதலியவற்றைப் பொறுத்துக்கொண்டு மௌனவ்ரதம் தரித்து இந்திரியங்களை வென்று ஸ்த்ரீ ஸம்போகமின்றிச் சாந்தனாகி ப்ராணவாயுவை அடக்கி, பகவானை ஆராதிக்கவிரும்பி இங்கனம் கொடிய தவம் செய்து வந்தான். அம்மன்னவன் இவ்வாறு நாளுக்கு நாள் தவத்தை வளர்த்து அதனால் கர்மங்களெல்லாம் த்வம்ஸமாகப்பெற்று (ஒழியப்பெற்று) ப்ராணாயாமங்களால் தூயமனத்தனாகி இந்த்ரியங்களையெல்லாம் அடக்கி வ்யஸனங்களையெல்லாம் (கவலைகளையெல்லாம்) வேரோடறுத்து ஸனத்குமாரர் உபதேசித்த மேலான ஆத்மயோகத்தின்படி பரமபுருஷனை ஆராதித்தான். நிவ்ருத்தி தர்மத்தில் (உலக வழக்குகளை விட்டு) ச்ரத்தையுடன் இவ்வாறு யத்னம் (முயற்சி) செய்கின்ற அம்மன்னவனுக்கு ஷாட்குண்யம் நிறைந்த (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) பரப்ரஹமத்தினிடத்தில் மாறாத பக்தி உண்டாயிற்று. பகவானுக்குச் செய்த பணிவிடையால் சுத்தஸத்வம் (ரஜஸ், தமஸ் கலப்பில்லாத ஸத்வ குணம்) நிறைந்த மனமுடைய ப்ருதுவுக்கு அந்தப் பக்தியின் நிறைவினால் ஜ்ஞானமும் விரக்தியும் (பற்றற்ற நிலையும்) உண்டாயின. அவன் அந்த ஜ்ஞானத்தினால் ஸம்சயத்திற்கிடமான (ஸந்தேஹத்திற்கு இடமான) ப்ரக்ருதி ஸம்பந்தத்தை வேருடன் அறுத்துக்கொண்டான். அம்மன்னவன் தேஹாத்மப்ரமத்தைக் (இந்த உடலே ஆத்மா என்கிற மயக்கத்தைக்) கடந்து, ஆத்மஸ்வரூபத்தின் உண்மையை உணர்ந்து செயலற்றுத் தான் ப்ரக்ருதி ஸம்பந்தத்தை அறுத்துக்கொண்டதற்குக் காரணமான தேஹ ஜ்ஞானத்தையும் கடந்து, பரமாத்மாவுக்குட்பட்ட ஆத்மஸ்வரூபத்தையே அனுபவித்து வந்தான். யோகம் செய்பவன் பகவானுடைய கதைகளை ப்ரீதியுடன் கேளாதிருப்பானாயின், யோகமார்க்கத்தில் மனவூக்கம் தவறுவான். இவன் பகவத் கதைகளில் மிக்கவூக்கமுடையவனாகையால் யோகமார்க்கத்தில் இம்மியும் தவறாதிருந்தான். அம்மஹாவீரன் ஆத்மாவைப் பரமாத்மாவினிடத்தில் ஸமர்ப்பித்துப் பாபமற்றிருக்கை முதலிய எட்டுக்குணங்களும் (பாபமற்றிருக்கை - கர்மத்திற்கு வசப்படாதிருக்கை, கிழப்பருவமில்லாமை, சாவில்லாமை, சோகமில்லாமை, பசியில்லாமை, தாகமில்லாமை, போகத்திற்குரிய அழிவற்ற வஸ்துக்களை உடைமை, நினைத்ததை முடிக்க வல்லமை) தோன்றப்பெற்றமையால் பரப்ரஹ்மஸாரூப்யத்தை (பகவானுக்கு ஸமமான உருவத்தை) அடைந்து ப்ராரப்த கர்மம் முடியும்படியான காலம் சேர்ந்தமையால் தன் சரீரத்தைத் துறந்தான். அவன் சரீரத்தை விட்ட விவரம் சொல்லுகிறேன் கேள். 

திங்கள், 9 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 99

நான்காவது ஸ்கந்தம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்

(ஸனத்குமாரர் ப்ருதுவுக்கு ஜ்ஞானோபதேசம் செய்தல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- மஹாபராக்ரமசாலியான அந்த ப்ருது மன்னவனைக் குறித்து இங்கனம் ஜனங்கள் சொல்லிக் கொண்டிருக்கையில், ஸூர்யனோடொத்த ஒளியுடைய நான்கு முனிவர்கள் அவ்விடம் வந்தார்கள். உலகங்களையெல்லாம் பாவனமாக்குகின்ற (தூய்மையாக்குகிற) ஒளியினாலேயே இவர்கள் ஸனகாதிகளென்று அறியக்கூடிய ஸித்தேச்வரர்களான (ஸித்தர்களில் உயர்ந்தவர்களான) அம்முனிவர்கள் ஆகாயத்தினின்று இழிந்து வரும்பொழுதே அம்மன்னவன் அவர்களைக் கண்டமாத்ரத்தில் மேற்கிளம்பின ப்ராணன்களை (மேலே கிளம்பும் ப்ராண வாயுவை) நிலைநிறுத்த விரும்பி, ஜீவன் சப்தாதி விஷயங்களை எதிர்கொள்வதுபோல் மிக்க மனவிருப்பத்துடன், ஸபையிலுள்ளவர்களோடும் தன் ப்ருத்யர்களோடும் எழுந்து நின்றான். கௌரவத்தினால் மெய்மறந்து உடனே தலைவணங்கப் பெற்று அவர்களுக்கு அர்க்யமும் ஆஸனமும் (இருக்கையும்) கொடுத்து அவர்களை விதிப்படி பூஜித்தான். அவன் பெரியோர்களின் ஆசாரத்தை வெகுமதிக்க முயன்று அம்முனிவர்களின் பாதங்களை விளக்கி (கழுவி) அந்த ஜலத்தைத் தன் சிரஸ்ஸில் (தலையில்) ப்ரோக்ஷித்துக் (தெளித்துக்) கொண்டான். யாக வேதிகையில் அக்னிகள் ஜ்வலிப்பதுபோல் அம்முனிவர்கள் ஸ்வர்ணமயமான ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கையில், ச்ரத்தையோடும் மனவூக்கத்தோடும் அவர்களை நோக்கி :- “மங்களஸ்வபாவர்களே ! ஆ! நான் என்ன புண்யம் செய்தேனோ? யோகிகளாலும் வருந்தியும் காண முடியாத உங்களுடைய காட்சி எனக்குக் கிடைத்ததல்லவா? உங்களைப்போன்ற அந்தணர்களும் மங்கள ஸ்வரூபனான ஸ்ரீமஹாவிஷ்ணுவும் அவனுடைய பக்தர்களான மற்றவரும் எவனுக்கு அருள் புரிகின்றார்களோ, அவனுக்குப் பரலோகத்திலாவது இவ்வுலகத்திலாவது எதுதான் கிடைக்க அரிதாயிருக்கும்? எங்கும் நிறைந்த ஸர்வஜ்ஞனான பரமாத்மாவை ப்ரஹ்மாதிகளான ப்ராணிகள் அனைவரும் காணமுடியாதிருப்பதுபோல், நீங்கள் இவ்வுலகம் முழுவதும் திரிந்து கொண்டிருப்பினும் உலகத்திலுள்ளவர் ஒருவரும் உங்களைக் காண்கிறதில்லை. க்ருஹஸ்தர்கள் (இல்லறத்தில் இருப்பவர்கள்) பணமற்றவராயினும் ஸாதுக்களாயிருப்பார்களாயின், பணமுடையவர்களே. அவருடைய வீட்டிலுள்ள ஜலம், புல், பூமி வீட்டிற்குடையவன், மற்ற ப்ருத்யர் (சேவகர்கள்) முதலிய அனைத்தும் உங்களைப் போன்ற பெரியோர்களால் அங்கீகரிக்கப்படுகிறதல்லவா? எவருடைய க்ருஹங்கள் உங்களைப் போன்ற பாகவதர்களின் ஸ்ரீபாத தீர்த்தம் படும்படியான பாக்யமற்றவைகளோ, அவை ஸமஸ்த ஸம்பத்துக்களும் அமைந்தவையாயினும், ஸர்ப்பங்களுக்கிடமான சந்தனமரம் போன்றவைகளே. உங்களுக்கு நல்வரவேயல்லவா? நீங்கள் பால்யம் (இளமை) தொடங்கி மோக்ஷத்தில் விருப்பமுடையவர்களாகி இந்திரியங்களை வென்று பெரிய விரதங்களை அனுஷ்டித்துக் கொண்டு வருகின்றீர்கள். சப்தாதி விஷயங்களையே (உலகத்திலுள்ள பொருள்களையே) புருஷார்த்தமாக (அடையப்படவேண்டியவை என்று) ப்ரமித்து (மயங்கி) வ்யஸனங்களுக்கு (கவலைகளுக்கு) விளைநிலமாகிய ஸம்ஸாரத்தில் கர்மங்களால் விழுந்து உழல்கின்ற எங்களுக்கு க்ஷேமம் உண்டாகுமா? பரமாத்மஸ்வரூபனான ஆத்மாவின் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்து அதை அனுபவிப்பதிலேயே மிக்க மனவூக்கமுடையவர்களாகிய உங்கள் விஷயத்தில் க்ஷேமம் விசாரிக்கவேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு நன்மை தீமைகளைப் பற்றின எண்ணங்களே கிடையாது. ஆகையால் நான் உங்களிடத்தில் நம்பிக்கையுடையவனாகி, ஸம்ஸார தாபங்களால் வருந்துகின்ற என் போன்றவர்களுக்கு நண்பர்களான உங்களை வினவுகின்றேன். இந்த ஸம்ஸாரத்தில் உழல்கின்ற ஜீவனுக்கு எந்தக்காரணத்தினால் அனாயாஸமாக க்ஷேமம் உண்டாகும்? ஜ்ஞானிகளுக்கு மிகவும் ப்ரியனும் ஸம்ஸாரிகளான ஜீவாத்மாக்களுக்கு ஜ்ஞானப்ரதானம் செய்து கடைத்தேற்றுந் தன்மையனும் பிறவியற்றவனுமாகிய பகவான் உங்களைப் போன்ற ஜ்ஞானிகளாய் அவதரித்துத் தன் பக்தர்களை அனுக்ரஹிக்கும் பொருட்டு இப்பூமண்டலம் முழுவதும் திரிகின்றான். ஆகையால் பகவானுடைய அம்சமான உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை” என்றான். அந்த ப்ருதுமன்னவன் மொழிந்த வார்த்தை ஸாரமும் (essenceம்) பொருளடக்கமுடையதும் மிதமும் இனியதுமாயிருந்தது. அதைக் கேட்ட ஸனத்குமாரர் ப்ரீதியினால் புன்னகையுடன் இங்கனம் மொழிந்தார்.

ஞாயிறு, 1 மார்ச், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 98


நான்காவது ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்

(ப்ருது மன்னவன் ப்ரஜைகளுக்கு ஹிதம் (நன்மையை) உபதேசித்தல்)

மைத்ரேயர் சொல்லுகிறார்:- பட்டணத்து ஜனங்கள் மன்னவன் வருகிறானென்று தெரிந்து முத்துமாலைகளாலும் விடுதிப்பூக்களாலும் பூமாலைகளாலும் வெண்பட்டுக்களாலும் ஸ்வர்ணதோரணங்களாலும் மிக்க பரிமணமுள்ள தூபங்களாலும் ஆங்காங்கு அலங்காரம் செய்து ராஜமார்க்கங்களிலும் நாற்சந்திகளிலும் வீதிகளிலும் சந்தனம் அகில் முதலிய வாஸனைத் தண்ணீர்களைத் தெளித்து, புஷ்பம், அக்ஷதை, பழம், யவமுளை, பொரிதீபம் முதலிய மங்கள வஸ்துக்களை அமைத்துக் குலைகளோடு கூடின வாழை மரங்களையும் பாக்கு மரங்களையும் கட்டித் தளிர்த்தோரணங்களால் முழுவதும் அலங்கரித்து வைத்தார்கள். இன்னும் அவர்கள் தீபங்களையும் பூஜைக்கு வேண்டிய வஸ்துக்களையும் தயிர் முதலிய ஸமஸ்த மங்கள த்ரவ்யங்களையும் எடுத்துக்கொண்டு சிறந்த காதணிகளை அணிந்து மற்றுமுள்ள அலங்காரங்களால் திகழ்கின்ற கன்னிகைகளை முன்னிட்டு மன்னவனை எதிர்கொண்டு சென்றார்கள். வீரனாகிய ப்ருதுமன்னவன் வந்திகளால் (துதி பாடகர்கள்) துதி செய்யப்பெற்றும் கர்வமின்றி, சங்கு, துந்துபி முதலிய வாத்யகோஷத்தோடும் அந்தணர்களின் வேத கோஷத்தோடும் பட்டணத்திற்குள் நுழையும்பொழுது அப்பெரும்புகழன் ஆங்காங்குப் பட்டணத்து ஜனங்களாலும் காட்டு ஜனங்களாலும் பூஜிக்கப்பட்டுத் தானும் அவர்களை வெகுமதித்துக் களிப்புற்று அவரவர்க்கு வேண்டிய வரங்களையும் கொடுத்துக்கொண்டே சென்று தன் க்ருஹத்திற்குள் ப்ரவேசித்தான். அம்மன்னவன் மஹாகுணசாலி, பெரியோர்களால் பூஜிக்கத் தகுந்தவன். அவனது சரித்ரங்கள் நிந்தைக்கிடமின்றிப் பரிசுத்தமாயிருக்கும். அவன் பூமியைக் கறந்தமை முதலிய இத்தகைய பெரும்பெரிய செயல்களை நடத்திக்கொண்டே பூமண்டலத்தையெல்லாம் நெடுநாள் பாதுகாத்து வந்து இவ்வுலகில் பெரும்புகழை நாட்டி வைகுண்டலோகம் போய்ச்சேர்ந்தான்.

இங்கனம் பலகுணங்கள் நிறைந்ததும் குணசாலிகளால் கொண்டாடப் பெற்றதுமாகிய ப்ருதுவின் புகழை மைத்ரேயர் சொல்லக்கேட்ட விதுரர் பகவானிடத்தில் மிகுந்த பக்தியுடையவராகையால் இச்சரித்ரம் மொழிந்த மைத்ரேயரைப் பூஜித்து மீளவும் அம்முனிவரைப்பார்த்து “மஹர்ஷி! ப்ருதுமன்னவன் ப்ராஹ்மணர்களால் அபிஷேகம் செய்யப்பெற்றதையும், அவன் ஸமஸ்ததேவதைகளாலும் பூஜிக்கப் பெற்றதையும், அவன் தன் புஜங்களில் விஷ்ணுவின் தேஜஸ்ஸு நிலைநிற்கப் பெற்று அவற்றால் பூமியைக்கறந்ததையும் மொழிந்தீர். அவன் அதற்குமேல் நடத்தின வ்ருத்தாந்தத்தையும் எனக்கு மொழிவீராக. தெரிந்தவன் எவன்தான் இந்த ப்ருதுவின் கீர்த்தியைக் கேட்கமாட்டான்? இம்மன்னவன் தன் பராக்ரமத்தினால் ஸம்பாதித்து அனுபவிக்காத போகங்கள் எவையுமே இல்லை. இப்பொழுதுள்ள ராஜாக்களும் இந்திரன் முதலிய லோகபாலர்களும் அவற்றில் சிந்தினவற்றையே அனுபவித்து வருகின்றார்கள். அம்மஹானுபாவனுடைய பரிசுத்தமான சரித்ரத்தை எனக்கு மொழிவீராக” என்று வினவினார். மைத்ரேயரும் அதைக் கேட்டு மேல்வருமாறு கூறினார்.