இடைகழியில் சந்தித்த இனியவர்கள்
பக்தியே மனமாகவும் உடலாகவும் உடையவர்கள்தான் ஆழ்வார்கள். இவர்கள் பெருமையை சொல்லில் அடக்க முடியாது. ஆழ்வார்களின் பக்தியை ஆண்டாள்தான் எப்படியெல்லாம் அனுபவிக்கிறாள்! பேயாழ்வாரின் அருமை பெருமைகளை ஆண்டாள் இவ்வாறு விவரிக்கிறாள்:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்
ஒருவரோடு ஒருவர் சேராமல், தனித்தனியே சஞ்சரித்துக் கொண்டிருந்த பொய்கையார், பூதத்தார், பேயார் மூவரையும் ஒன்று சேர்த்து வைத்து அவர்கள் வாயிலாக தான் பாடப்படும் அனுபவத்துக்காக ஒரு பெரும் மழையை திருக்கோவிலூரில் உருவாக்கிக் காத்திருந்தான் பகவான். பேயாழ்வாருக்கு தமிழ்த் தலைவன் என்கிற பெயரும் உண்டு. இப்போது ஆண்டாள் பாசுரத்திற்கு வருவோம்.
‘நோற்று’ என்பதில், மற்ற இரண்டு ஆழ்வார்கள் விளக்கு ஏற்றுகிற உபாயத்தைச் செய்யவே அவர் நோற்றார் என்று பொருள்படுகிறது. அதாவது அவ்விருவரும் விளக்கேற்றுவதற்காக இவர் நோற்றார் எனலாம். இன்னமும் விளக்கமாக கூறினால், இவர் நோற்ற நோன்பு எதற்கெனில், அவ்விரு ஆழ்வார்களும் விளக்கேற்ற, அந்த வெளிச்சத்தில் ‘திருக்கண்டேன்’ என பகவானின் ரூபத்தைக் கண்டு களித்துப் பாடலாமே என்பதால்தான். இப்படி இவர் இருந்த நிலையைத்தான் நோன்பு நோற்றாயோ என்று விளிக்கிறாள் ஆண்டாள். ‘சுவர்க்கம்’ என்கிற அனுபவத்தை இவர் ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்’ என்று கூறி ஆனந்த கூத்தாடுகிறார். மேலும், சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய் என்கிறாள், ஆண்டாள். ‘வாசல் திறவாதார்’ என்றது பேயாழ்வாருக்கு நன்கு பொருந்தும். கனமான மழை பெய்த ஓர் இரவில், திருக்கோவிலூரில் ஒரு வீட்டு இடைகழிக்குள் புகுந்த பொய்கையார், மழையிலிருந்து தப்ப தாழிட்டுக் கொண்டார். பிறகு பூதத்தார் வந்து கதவைத் தட்ட, பொய்கையார் உள்ளிருந்து ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்’ என்று சொல்லி கதவைத் திறந்து அவருக்கு வழிவிட்டார்.
அந்த மழையின் காரணமாகவே ஒதுங்குவதற்கு வந்த பேயாழ்வாரும் இடைகழிக் கதவைத் தட்ட, உள்ளிருந்து பூதத்தார் ‘ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்’ எனக்கூறி தாள் திறந்து வழிவிட்டார். இதன் பிறகு யாரும் வந்து கதவைத் தட்டாததை, ‘வாசல் திறவாதார்’ என ஆண்டாள் தெரிவிக்கிறாள். அடுத்ததாக ‘நாற்றத்துழாய்முடி நாராயணன்’ என்கிறாள். துழாய் என்றால் துளசி. அதாவது இந்த ஆழ்வார் துழாய் விஷயமாகவே பாடியதைத் தெரிவிக்கிறாள். ‘பொன் நோய்வரை மார்பில் பூந்துழாய்’ என்றும், ‘தன்துழாய் மார்வன்’ என்றும் பாடி மகிழ்ந்ததை இங்கு நினைவுபடுத்துகிறாள். இவ்வாறு பெருமைகள் கொண்ட இந்த மூவரின் பிறவி நிலை என்ன? மூவரும் மனிதப் பிறவி போல் அல்லாமல் புஷ்பத்திலே தோன்றி, கடவுளின் கருணையாலே, சாத்வீகர்களாய் இருந்தனர். வேறு சிந்தை இல்லாமல் பகவானிடம் பக்தி செலுத்தினார்கள். ராஜஸ, தாமஸ குணங்களை அகற்றி சாத்வீகர்களாய் வாழ்ந்தனர். சுத்த ஸத்வ குணத்தில் ஒன்றி நின்றனர்.