புதன், 29 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 166

ஏழாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம்

(ஸன்யாஸியின் தர்மங்களையும், ப்ரஹ்லாதனுக்கும் – அஜகர வ்ரதத்திலிருந்த (மலைப்பாம்பைப் போன்று கிடைத்ததைக் கொண்டு ஜீவிக்கும் வாழ்க்கை முறையைப் பின்பற்றும்) முனிவருக்கும் நேர்ந்த ஸம்வாதத்தையும் கூறுதல்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- வானப்ரஸ்தன், தனக்கு ஏற்பட்ட நியமங்களை அனுஷ்டித்தபின்பு, வேறு ஆச்ரம தர்மங்களை அனுஷ்டிக்க வல்லனாயிருப்பானாயின், இவ்வாறு அனுஸந்தித்துத் தேஹத்தை மாத்ரம் மிகுத்திக் கொண்டு, தேஹத்தைத் தொடர்ந்த மற்ற எல்லாவற்றையும் துறந்து, ஸன்யாஸ ஆச்ரமத்தைக் கைப்பற்றி, ஒரு க்ராமத்தில் ஒருநாளுக்கு மேல் தங்காமல், எதிலும் விருப்பின்றி, பூமியில் ஸஞ்சரிக்க வேண்டும். இந்த ஸன்யாஸி, துறக்கப்பட்டவைகளில் எதையேனுமொன்றைக் கைப்பற்றுவானாயின், கௌபீனம் (கோவணம்), அரையிலுடுக்கும் வஸ்த்ரம் (இடுப்பில் உடுத்திக்கொள்ளும் துணி) இவற்றை மாத்ரமே கைப்பற்றலாம். ஆபத்தில்லாத ஸமயத்தில், த்ரிதண்டம், கமண்டலு, உபவீதம், அரை ஞாண் இவை தவிர மற்ற எதையும் கைப்பற்றலாகாது. குளிர், காற்று முதலியவற்றைப் பொறுக்க முடியாத ஆபத்காலத்தில், போர்வை முதலியவற்றை மாத்ரமே அங்கீகரிக்கலாம். எங்கும் நியதமாக வாசம் செய்யாமல் பிக்ஷையெடுத்து (பிச்சை எடுத்து) ஜீவித்துக்கொண்டு ஆத்ம அனுபவத்தினால் (தனது ஆத்மா மற்றும் பரமாத்ம த்யானத்தினால்)  ஸந்தோஷமுற்றுத் தனியனாகவே திரிய வேண்டும். ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பனாகி, கோபமின்றி, ஸ்ரீமந் நாராயணனே ப்ராப்யனும் (அடையப்பட வேண்டியவனும்), ப்ராபகனும் (அடைவதற்கு வழியும்), ஆதாரமும் (காப்பவனும்) என்னும் மனவுறுதியுற்று, சேதனா சேதனங்களைக் காட்டிலும் விலக்ஷணனும் (வேறானவனும்), ஸ்வரூபத்தினாலும், ஸ்வபாவத்தினாலும் விகாரமற்றவனுமாகிய (மாறுபாடு இல்லாதவனும்), பரமாத்மாவினிடத்தில் இந்த ஜகத்தெல்லாம் இருப்பதாகவும், பரப்ரஹ்மமென்று ஓதப்படுகிற அந்த பரமாத்மா சேதனா சேதன ரூபமான இந்த ஜகத்தில் எங்கும் அந்தராத்மாவாய் இருப்பதாகவும் பாவிக்க வேண்டும். காலை, மாலைகளில் தேஹத்தைக்காட்டிலும் வேறுபட்ட ஆத்மஸ்வரூபத்தை உணர்ந்த ஸன்யாஸி, பரமாத்ம ஸ்வரூபத்தை ஆராயவேண்டும். ஸ்வப்ன அவஸ்தையில் (கனவு நிலையில்), தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவின் தோற்றத்தை ஆராய்ந்து, அப்பொழுது பகவானே விசித்ரமான மார்க்கங்களையும், தங்களையும் மற்றும் பலவகையான வஸ்துக்களையும் படைத்து, அனுபவிப்பிக்கிறான் என்பதையும் ஆராய்ந்தறிய வேண்டும். ஸம்ஸார பந்த, மோக்ஷங்கள் பகவானுடைய ஸங்கல்பத்தினால் ஏற்படுகின்றவைகளேயன்றி, அவை ஜீவனுக்கு இயற்கையிலே ஏற்பட்டவை அன்றென்றும் அனுஸந்திக்க வேண்டும். ஸம்ஸாரிகள், தப்பாமல் நேர வேண்டிய மரணத்தை எவ்வாறு விரும்பமாட்டார்களோ, அவ்வாறே ஸன்யாஸி நிலையற்றதான ஜீவிதத்தை அபிநந்திக்கலாகாது (விரும்பி மகிழ்ச்சி அடையக்கூடாது). ப்ராணிகளின் உத்பத்தி, விநாசங்களுக்குக் (அழிவுக்குக்) காரணமான காலத்தின் கதியையே எதிர்பார்க்கவேண்டும். கள்ளப் பொய் நூல்களில் (தவறான விஷயங்களைக் கூறும் புத்தகங்களில்) மனம் செலுத்தலாகாது. ஜீவனோபாயமாக எந்த வ்ருத்தியையும் அங்கீகரிக்கலாகாது. ஜல்பம் (இருவர் வாதம் செய்யும் போது, ஒவ்வொருவனும் தன் பக்ஷத்திற்கு ஸாதகமானவற்றையும், எதிரி பக்ஷத்தில் தோஷங்களையும் சொல்லி, வெற்றி அடைய வேண்டும் என்று செய்யப்படும் வாதம் ஜல்பம் எனப்படும்), விதண்டை (தன் பக்ஷத்தை ஸ்தாபிக்காமல், எதிரி பக்ஷத்தைக் கண்டனம் மாத்ரம் செய்யும் வாதத்திற்கு விதண்டை என்று பெயர்) முதலியவற்றிற்கிடமான தர்க்கங்களைத் துறக்க வேண்டும். ஆக்ரஹத்துடன் (பிடிவாதத்துடன்) ஒரு பக்ஷத்தையும் மனத்தில் ஏற்றுக் கொள்ளலாகாது. க்யாதி, லாபாதிகளை (புகழ், ப்ரயோஜனம் முதலியவற்றை) விரும்பி சிஷ்யர்களைச் சேர்த்துக் கொள்ளலாகாது. பல க்ரந்தங்களைப் படிக்கலாகாது. பிறர்க்குப் படிப்பிக்கையும் கூடாது. மடாதிபதியாயிருக்கை முதலிய ஆரம்பங்களைச் செய்யலாகாது. வெளியிந்திரியங்களையும், உள்ளிந்திரியத்தையும் அடக்கிக் கொண்டிருக்க வேண்டும். ஸன்யாஸாச்ரமம் பெரும்பாலும் தர்ம அனுஷ்டானத்திற்காக (கர்மங்களைச் செய்வதற்காக) ஏற்பட்டதன்று. அதில், ஜ்ஞானமே முக்யம். ஆகையால், தர்மங்களைச் செய்தாலும், செய்யலாம்; துறந்தாலும் துறக்கலாம். ஸன்யாஸ ஆச்ரமத்திலிருப்பவன், ஜ்ஞான ஹீனனாயிருப்பானாயின் (ஆத்ம பரமாத்ம விஷயங்களில் அறிவு அற்று இருப்பானேயாகில்), தர்மத்தை அனுஷ்டிக்க வேண்டும். ஜ்ஞானமுடையவன், அதைத் துறக்கலாம். ஜ்ஞானமுடையவனும், ஜ்ஞானயோகத்திற்குத் தடையாகாது இருக்குமாயின், அதை அனுஷ்டிக்கலாம். தடை செய்யுமாயின், அதைத் துறக்க வேண்டும். உபவாஸம் முதலிய வ்ரதங்களை அனுஷ்டிப்பானாயின், அவை தேஹத்திற்குத் தௌர்ப்பல்யத்தை (சக்தி குறைவை) விளைத்து, யோகத்தைக் கெடுக்குமாகையால், அத்தகைய தர்மங்களை ஜ்ஞானயோகத்தையே முக்யமாகக் கொண்ட ஸன்யாஸி அனுஷ்டிக்கலாகாது. மற்றும், ஸன்யாஸி தர்மங்களால் (கர்மங்களால்) ஸாதிக்க வேண்டிய இஹ (இவ்வுலக), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகானுபவங்களில் விருப்பமற்றவன். அதர்மம் போல தர்மமும் இஹ (இவ்வுலக), பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகங்கள் மூலமாய் மோக்ஷத்தைத் தடுக்குமாகையால், அவன் பெரும்பாலும் தர்ம அதர்மங்களை ஸமமாக நினைத்திருக்க வேண்டும். தனக்கு ஜ்ஞானம் உண்டென்பதை அறிவிக்கும் அடையாளங்களையெல்லாம் மறைத்துக்கொண்டு, தன் ப்ரயோஜனத்தையும் பிறர்க்கு அறிவிக்காமல், பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தையே த்யானித்துக்கொண்டு பித்தம் பிடித்தவன்  போலும், ஒன்றும் அறியாத சிறுவனைப் போலவும் இருக்க வேண்டும். 

செவ்வாய், 28 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 165

ஏழாவது ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(ப்ரஹ்மசாரி, வானப்ரஸ்தன் இவர்களுக்குள்ள விசேஷ தர்மங்களையும், ப்ரஹ்மசாரி முதலிய நான்கு ஆச்ரமத்தவர்களுக்குரிய ஸாதாரண தர்மங்களையும் கூறுதல்)

ஸ்ரீ நாரதர் சொல்லுகிறார்:- ப்ரஹ்மசாரி மனத்தையும், மற்ற இந்த்ரியங்களையும் அடக்கி, தாஸன் போல வணக்கமுற்று, குருவுக்கு ஹிதம் (நன்மை) செய்துகொண்டு, அவனிடத்தில் மிகுந்த ப்ரேமத்துடன் (அன்புடன்) அக்குருவின் க்ருஹத்தில் வாஸம் செய்யவேண்டும். மற்றும், அவன் இரண்டு ஸந்திகளிலும் மெளனத்துடன் மனவூக்கமுற்று, காயத்ரியை ஜபித்து, காலை - மாலைகளில் 

(குறிப்பு: காலை, மாலை என்பதோடு “ச” என்கிற இணைப்பெழுத்து இருப்பதால், நடுப்பகலில் செய்யவேண்டிய மாத்தியான்னிகமும் செய்ய வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும்)

குரு, அக்னி, ஸூர்யன், பகவான் இவர்களை உபாஸிக்க வேண்டும். குரு அழைக்கும் பொழுது ஸித்தமாயிருந்து, மனவூக்கத்துடன் அவரிடத்தில் வேதங்களை ஓதவேண்டும். தினந்தோறும், வேதமோதத் தொடங்கும் பொழுதும், முடிக்கும்பொழுதும் குருவின் பாதங்களைத் தலையால் வணங்க வேண்டும். கையில் பவித்ரம் அணிந்து, மேகலை (தர்ப்ப புல்லாலான இடுப்புக் கயிறு - முஜ்ஞை), அஜினம் (மான் தோல்), வஸ்த்ரம், ஜடை (சிகை – குடுமி), தண்டம் (பலாச மரத்தின் குச்சி), கமண்டலு (தீர்த்தம் வைத்திருக்கும் பாத்ரம்), உபவீதம் (பூணூல்) இவற்றைச் சாஸ்த்ரங்களில் சொல்லியபடி தரிக்க வேண்டும். காலை - மாலைகளில் பிக்ஷையெடுக்க வேண்டும். அந்தப் பிக்ஷையில் கிடைத்த அன்னத்தை, குருவின் எதிரில் கொண்டு வந்து வைக்க வேண்டும். குரு அனுமதி கொடுப்பாராயின், அவ்வன்னத்தைப் புசிக்கலாம். ஒருகால் அனுமதி கொடாது இருப்பாராயின், உபவாஸமிருக்க வேண்டும். அவர், மனத்தைப் பரீக்ஷிக்கும் பொருட்டு, ஒருகால் அனுமதி கொடாது இருப்பதும் இருக்கலாம். மிதமாகப் புசித்து, நல்லியற்கையும், நல்லொழுக்கமும் அமைந்து சோம்பலின்றிக் குரு உபதேசித்த அர்த்தங்களில் விச்வாஸமுற்று, இந்திரியங்களை வென்றிருக்க வேண்டும். 

ஞாயிறு, 26 ஜூலை, 2020

ஶ்ரீமத் பாகவதம் - 164

ஏழாவது ஸ்கந்தம் – பதினொன்றாவது அத்தியாயம்

(சாதாரணமான வர்ண தர்மங்களையும், மனுஷ்ய தர்மங்களையும், பிராஹ்மணாதி வர்ண தர்மங்களையும், ஸ்த்ரீ தர்மங்களையும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- “ஹே பரீக்ஷித்! மூன்று அடி அளந்தோனான பகவான் ஸ்ரீமந் நாராயணனிடமே அனன்ய பக்தி கொண்ட அசுரகுல திலகமான பிரகலாதனது பாவனமான திவ்ய சரித்திரத்தைச் சான்றோர்கள் மாபெரும் அவைகளில் பேசி மகிழ்வர். ஏனெனில், அவன் அறிஞரின் அறிஞன்; தூயரென்பார் யாரினும், மறையினும் தூயான். அந்த பக்தனது சரித்திரத்தைக் கேட்டு மகிழ்ந்த தர்மபுத்திரர், பிரும்மதேவரது புத்திரரான நாரதரிடம் மீண்டும் கேட்கலானார். 

யுதிஷ்டிரர் கேட்கிறார்:- “மகரிஷியே! தொன்மை காலம் முதல் மனிதர்கள் மேற்கொண்டு ஒழுகும் பண்டைய தர்மமான வர்ணாச்ரம தர்மங்களையும், ஆசார - அனுஷ்டானங்களையும் பற்றிக் கேட்க விரும்புகிறேன். ஏனெனில், அந்த ஸனாதன தர்மத்தினால், மனிதர்கள் சிறந்த ஞானத்தையும், பக்தியையும் பெறுகிறார்கள். அதனால், சாட்சாத் பகவானையே பெற்று விடுகின்றனர். பிரும்ம தத்துவத்தை அறிந்த பெரியோரே! படைப்புக் கடவுளான பிரும்மதேவரது தவப்புதல்வர் தாங்கள். அவர் தனது மற்ற புதல்வர்களை விடத் தங்களிடம் அதிக அன்பு வைத்துள்ளதற்கு காரணம் என்னவென்றால், தவம், யோகம், சமாதிகளில் அவர்களை விடத் தாங்கள் முன் நிற்பது தான். பகவானிடம் இணையற்ற பக்தி, பிறரிடம் கருணை, தம் வர்ணத்திற்கேற்ற ஆசார அனுஷ்டானங்கள் மற்றும் “யான், எனது” என்னும் செருக்கற்ற தங்களைப் போன்ற அந்தணர்கள்தான், தர்மத்தின் மர்மம் அறிந்தவர்கள். மற்றவர்கள், அவ்வாறு உள்ளது உள்ளபடி அறியமாட்டார்கள்”.

நாரதர் கூறுகிறார்:- “தர்ம நந்தனா! பிறப்பற்ற பகவான் ஸ்ரீமந் நாராயணனே தர்மங்கள் அனைத்திற்கும் மூலகாரணம். அந்த பகவான்தான் தக்ஷன் மகளான மூர்த்திக்கும், தர்ம தேவதைக்கும் தன் (பதினாறு கலைகளில்) ஓர் அம்சத்தை மட்டும் ஏற்று, திருவவதாரம் செய்து, பதரிகாச்ரமத்தில் உலக நன்மைக்காகத் தவம் செய்து கொண்டு இருக்கிறார். தர்மத்தைக் காக்கும் அணை போன்ற பகவானை வணங்கி, அவர் திருவாய் மலர்ந்தருளிய ஸநாதன தர்மத்தை உலகம் நன்மை அடையும் பொருட்டு இப்பொழுது சொல்கிறேன். (கேள்). 

சனி, 25 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 26 - திருப்பூர் கிருஷ்ணன்

என்றும் நம் நினைவில்

அஸ்தினாபுர அரண்மனை உப்பரிகையில் தர்மபுத்திரர் அங்குமிங்குமாக உலவிக் கொண்டிருந்தார். இனம்தெரியாத பதற்றம் அவர் மனத்தைப் பீடித்திருந்தது.

"ஏன் இப்படி நிலைகொள்ளாமல் நடக்கிறீர்கள்?'' - பாஞ்சாலி பரிவோடு கேட்டாள். 

என்னவெனத் தெரியவில்லை. ஏதோ கெட்ட சேதி வரப்போகிறது என்று உள்ளுணர்வு சொல்கிறது. சகுனங்கள் எதுவும் சரியில்லை!

பாஞ்சாலி அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ஏனென்றால் அவள் மன நிலையும் அப்படித்தான் இருந்தது. "துன்பம் வரும் சூழல் நேர்ந்தால் என்ன? கண்ணனைப் பிரார்த்தித்தால் அவன் துன்பத்தை மாற்றி விடப் போகிறான், அவ்வளவுதானே!" என்று அவள் தன்னையே தேற்றிக் கொண்டாள். 

வயோதிகத்தால் தளர்ந்திருந்த தன் மாமியார் குந்திதேவியின் பாதங்களைப் பிடித்து பணிவிடை செய்ய வேண்டி அவளது அறை நோக்கி நடந்தாள்.

பாரதப்போர் முடிந்து கண்ணன் அருளால் வெற்றி கிட்டி அவர்கள் ஆனந்தமாக அஸ்தினாபுரத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் காலம் அது. இப்போது துர்ச்சகுனங்கள் தோன்ற வேண்டிய அவசியமென்ன? பஞ்ச பாண்டவர்களில் நால்வர் இங்கே தான் அரண்மனையில் இருக்கிறார்கள். அர்ஜுனன் மட்டும் கண்ணனைப் பார்த்து வருவதாகக் கூறி துவாரகை சென்றிருக்கிறான். அவனுக்கு எதுவும் நேராதிருக்க வேண்டுமே? தர்மபுத்திரர் மனம் தத்தளித்தது.

நேற்று மாலை தர்மபுத்திரர் அஸ்தினாபுர வீதியில் தேரோட்டிச் சென்றபோது விந்தையான ஒரு காட்சியைக் கண்டார். ஓர் உழவன் தோளில் கலப்பையைச் சுமந்து வந்துகொண்டிருந்தான். அவர் திகைப்போடு அவனிடம் கேட்டார்:

"நாளை மீண்டும் இதே கலப்பையைச் சுமந்துகொண்டு வயலுக்குத் தானே அப்பா போகப் போகிறாய்? அப்படியிருக்க அதை இன்று வீடுவரை சுமந்து வருவானேன்? வயலிலேயே வைத்துவிட்டு வரவேண்டியது தானே?" 

அவன் பெருமூச்சோடு பதில் சொன்னான்:

"பிரபோ! நாடு முன்புபோல் இல்லை. இரண்டு நாட்கள் முன்பு வயலில் நான் விட்டுவந்த கலப்பையை யாரோ திருடிச் சென்றுவிட்டார்கள்!''

தர்மபுத்திரருக்குத் தூக்கிவாரிப் போட்டது. 

"தேசத்தில் திருட்டு தொடங்கிவிட்டதா? துவாபரயுகம் முடிந்து கலியுகம் ஆரம்பமாகப் போகிறதா என்ன? இதுவரை திருட்டைப் பற்றிக் கேள்விப்பட்டதே இல்லையே?" 

அவர் மேலும் தேரோட்டிச் சென்றபோது ஒரு வீட்டின் வெளிக்கதவில் பூட்டு தொங்குவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

"அஸ்தினாபுரத்தில் வீடுகளைப் பூட்டும் வழக்கமில்லையே! ஏன் இவர்கள் பூட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்கள்?" என்று அக்கம் பக்கத்தினரை விசாரித்தார். 

ஶ்ரீமத் பாகவதம் - 163

ஏழாவது ஸ்கந்தம் – பத்தாவது அத்தியாயம்

(பகவான் ப்ரஹ்லாதனை அனுக்ரஹித்து அந்தர்த்தானம் அடைதலும் (மறைதலும்), ருத்ரன் – த்ரிபுர ஸம்ஹாரம் செய்த (த்ரிபுரங்களை எரித்த) வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- சிறுவனாகிய ப்ரஹ்லாதன், பகவான் கொடுக்கிறேனென்ற அந்த வரங்களெல்லாம் பக்தியோகத்திற்கு விக்னமென்று (தடை என்று) நினைத்து “எனக்கு அந்தராத்மாவாயிருந்து என் அபிப்ராயத்தை அறிந்தும் என்னை இவ்வாறு வஞ்சிக்கிறானே (ஏமாற்றுகிறானே)” என்று சிரித்துக்கொண்டு அந்தப் பகவானைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான்.

ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- நாதனே! நான் இயற்கையாகவே பிறந்தநாள் முதல் காமங்களில் (உலக இன்பங்களில்) விருப்பம் அற்று இருக்கிறேன், அப்படிப்பட்ட என்னை அவ்வரங்களைக் கொடுக்கிறேனென்று மேன்மேலும் அவற்றில் ஆசைமூட்டி வஞ்சிக்க வேண்டாம். நான், அவற்றில் மனப்பற்று செய்தால் அநர்த்தம் (கெடுதி) வருமென்று பயந்து அவற்றில் வெறுப்புற்று ஸம்ஸார பந்தத்தினின்று விடுபட விரும்பி உன்னைச் சரணம் அடைந்தேன். வேறு ப்ரயோஜனங்களை விரும்பாமையாகிற பக்த லக்ஷணம் என்னிடத்தில் இருக்கிறதா என்பதை என் வாயால் பரீக்ஷிக்க விரும்பி ஸம்ஸாரமாகிற வ்ருக்ஷத்திற்கு (மரத்திற்கு) விதை போன்றவைகளும், ஹ்ருதயத்தின் முடிச்சு போல அறுக்க முடியாமல் தொடர்ந்திருப்பவைகளுமான காமங்களில் (உலக இன்பங்களில்) என்னைத் தூண்டுகின்றாய். இப்படியில்லையாயின், காருண்ய மூர்த்தியும் ஸமஸ்த லோகங்களுக்கும் ஹிதம் உபதேசிப்பவனுமாகிய நீ என்னை அநர்த்தங்களுக்கு (கெடுதிகளுக்கு) இடமான காமங்களில் தூண்டுவது நன்றாயிராது. ஸம்ஸாரமாகிற இருள் மூடின பெரிய நரகத்தில் கண்கெட்டு ஆத்ம பரமாத்மாக்களின் உண்மையை அறியாமல் உழல்கின்ற ஜீவாத்மாவுக்கு நீயொருவனே அந்நரகத்தினின்று கரையேறும் உபாயத்தை அறிவிப்பவன். ஆகையால் நீ அந்நரகத்தில் மேன்மேலும் அழுத்தவல்ல காமங்களில் (உலக இன்பங்களில்) என்னைத் தூண்டுவது எவ்வாறு பொருந்தும்? 

வெள்ளி, 24 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 25 - திருப்பூர் கிருஷ்ணன்

கல்வியா பக்தியா?

''உண்மை தானா? பண்டிதர் ராமேஷ்வர் அப்படியா சொன்னார்?'' ராமேஷ்வர் சொன்னதாகத் தன் மனைவி சொன்னவற்றைக் கேட்டு விக்கித்து உட்கார்ந்து விட்டார் துக்காராம். 

துக்காராமின் மனைவி முந்தானையால் விழிகளைத் துடைத்துக் கொண்டாள். அவளுக்கு விம்மல் வந்தது. 

"உண்மைதான் சுவாமி. பலர் இதைப் பற்றி என்னிடம் ஏற்கனவே பலமுறை சொல்லி விட்டார்கள். அது நிஜம்தானா என்று அறியத்தான் இன்று நானே ராமேஷ்வர் சொற்பொழிவு செய்யும் இடத்திற்குப் போனேன். கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. அவரது சொற்பொழிவையும் அவர் எழுதிய இலக்கண சுத்தமான பாடல்களையும் கேட்பதற்காகப் பலர் திரண்டு வந்திருந்தார்கள். நான் யார் என்று தெரியக் கூடாது என்பதற்காக முக்காட்டை இழுத்துப் போட்டுக் கொண்டு ஓர் ஓரத்தில் உட்கார்ந்தேன்! அப்போதுதான்...''

"அப்போதுதான்...சொல். மறுபடியும் சொல். அந்த ராமேஷ்வர் என்ன சொன்னார்?'' 

துக்காராம் துயரத்துடன் பரபரப்பாகக் கேட்டார். மனைவி கண்ணீர் வழிய வழியத் தொடர்ந்தாள்:

"மேடையிலேயே பலர் அறிய அவர் அறிவித்தார் சுவாமி. இதே ஊரில் இருக்கும் துக்காராம் என்பவர் எழுதிய அபங்கக் கீர்த்தனைகளை நீங்களெல்லாம் பாடுகிறீர்கள். அந்தத் தப்பை இனிமேல் செய்யாதீர்கள். பாண்டுரங்கனைப் பற்றிப் பாடும் பாடல் இலக்கண சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இலக்கணப் புலமையே சிறிதுமற்றவன் துக்காராம். அவன் பாடல்கள் சொற்குற்றம், பொருள் குற்றம் என்று பலவகைக் குற்றங்களை உடையவை. அவற்றை அவன் வேண்டுமானால் பாடட்டும். ஆனால், அவை நன்றாக இருப்பதாகக் கருதி நீங்கள் யாரும் பாடிவிடாதீர்கள். அப்படிப் பாடுவதன் மூலம் பகவானுக்கு அபசாரம் செய்யாதீர்கள் என்று சொன்னார் சுவாமி!''

"என் தெய்வமே! கிருஷ்ணா! பாண்டுரங்கா!'' மனத்தில் எழுந்த சோகத்தின் கனத்தைத் தாங்க இயலாதவராய் அப்படியே சரிந்தார் துக்காராம். சற்றுநேரம் கழித்து மெல்லக் கேட்டார். 

"கூட்டத்தினர் அவர் கருத்தை ஆமோதித்தார்களா?''

"அதுபற்றி ஒன்றும் சொல்லத் தெரியவில்லை சுவாமி. கூட்டத்தினர் ஆமோதித்தார்களோ இல்லையோ, ஆனால் யாரும் எதிர்க்கவில்லை. அமைதி காத்தார்கள்''.

"மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்வதுண்டே?''

"அது அப்படிப்பட்ட மவுனமாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்த எதிர்ப்பை அவர்கள் வார்த்தையால் அல்லாமல் மவுனத்தால் தெரிவித்தார்களோ என்னவோ?''

ஶ்ரீமத் பாகவதம் - 162

ஏழாவது ஸ்கந்தம் – ஒன்பதாவது அத்தியாயம்

(ப்ரஹ்லாதன் ந்ருஸிம்ஹனை ஸ்தோத்ரம் செய்தல்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு ப்ரஹ்மதேவன், ருத்ரன் முதலிய ஸமஸ்த தேவதைகளும் மற்றவர்களும் தனித்தனியே ஸ்தோத்ரம் செய்யினும் அந்த ந்ருஸிம்ஹ பகவான் கோபவேகம் அடங்கப் பெறாமல் ஒருவர்க்கும் அணுக முடியாதவனாயிருந்தான். ஆகையால் அவர்களில் ஒருவனாவது அவனைக் கிட்டுவதற்கு வல்லமையுடையவன் ஆகவில்லை. அவன் கோபம் தணியாதிருப்பதைக் கண்டு தேவதைகள் அவனுக்கு மிகவும் அன்பிற்கிடமான ஸ்ரீமஹாலக்ஷ்மியை அனுப்பினார்கள். அவளும் அற்புதமான அந்த ந்ருஸிம்ஹ உருவத்தைக் கண்டு “இது வரையில் நாம் இவ்வுருவத்தைக் கண்டதில்லை; கேட்டதுமில்லை. இதென்ன உருவம்?” என்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு) அருகில் செல்ல முடியாமலேயிருந்தாள். இப்படியிருக்கையில், ப்ரஹ்மதேவன் அருகிலிருக்கின்ற ப்ரஹ்லாதனைப் பார்த்து “அப்பா ! உன் தந்தையின் மேல் கோபித்துக் கொண்டிருக்கிற பகவானை அருள்புரியச் செய்வாயாக. நீதான் அவனருகில் செல்லவேண்டும்” என்று சொல்லி அனுப்பினான். 

மன்னவனே! யுதிஷ்டிரா! பகவத் பக்தர்களில் சிறந்த குழந்தையாகிய ப்ரஹ்லாதன் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக்கொண்டு அருகில் சென்று கைகளைக் குவித்துச் சரீரத்தைப் பூமியில் தண்டம் போலச் சாய்த்து நமஸ்கரித்தான். ந்ருஸிம்ஹபகவான் தன் பாதங்களின் அடியில் விழுந்திருக்கின்ற பாலனாகிய ப்ரஹ்லாதனைப் பார்த்துக் கருணை தலையெழப்பெற்று அவனை எழுந்திருக்கச் செய்து, காலமாகிற ஸர்ப்பத்தினின்றும் (பாம்பிடம்) பயந்த மதியுடையவர்களுக்கு அபயங்கொடுப்பதும் தாமரைமலர் போன்றதுமாகிய தன் கையை அவன் தலைமேல் வைத்தான். அவனும் அந்த ஸ்ரீந்ருஸிம்ஹ பகவானுடைய கரம் பட்ட மாத்திரத்தில் ஸமஸ்த பாபங்களும் தொலைந்து அந்த க்ஷணமே ஆத்ம பரமாத்மாக்களின் ஸ்வரூப ஸாக்ஷாத்காரம் உண்டாகப் பெற்று ஸந்தோஷம் அடைந்து உடம்பெல்லாம் மயிர்க்கூச்சம் நிறைந்து ப்ரீதியினால் நெஞ்சுருகிக் கண்ணீர் தளும்ப நின்று அந்தப் பகவானுடைய பாதாரவிந்தங்களை மனத்தில் த்யானித்தான். பின்பு ப்ரஹ்லாதன் ப்ரீதியினால் வாய் தழதழக்கப்பெற்று மனத்தையும் கண்களையும் பகவானிடத்திலேயே நிலைநிறுத்தி மனவூக்கத்துடன் அவனை ஸ்தோத்ரம் செய்யத் தொடங்கினான்.

வியாழன், 23 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 24 - திருப்பூர் கிருஷ்ணன்

நிஜமான ஆன்மிகம்

ஞானேஸ்வரருக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அப்படியா சொன்னான் சங்கதேவ்? ஞானேஸ்வரர் பாடும் பாடல்களைக் கேட்பவர்கள் பைத்தியக்காரர்கள் என்றானாமே!" 

இந்தச் செய்தியைத் தன்னிடம் வந்து சொன்னவனை அன்போடு பார்த்தார் ஞானேஸ்வரர். சொன்னவன் ஞானேஸ்வரரின் தீவிர அடியவன். தன் குரு பற்றிய அவதூறைக் கேட்க நேர்ந்ததை எண்ணி அவன் விழிகளில் கரகரவெனக் கண்ணீர் வழிந்தது. 

ஞானேஸ்வரர் அருகில் அமர்ந்திருந்தாள் அவருக்கிணையான பக்தையும், தங்கையுமான ஐந்தே வயதுச் சிறுமி முக்தாபாய். தன் அண்ணாவின் பக்தன் கண்ணீர் விடுவது அவள் நெஞ்சைச் சுட்டது.

"நான் போய் நம் அடியவர்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொன்ன அந்த சங்கதேவைப் பார்த்து வருகிறேன் அண்ணா!'' என்று புறப்பட்டாள் அவள். 

"சங்கதேவ் மனத்திலும் கண்ணன் தானே குடியிருக்கிறான்! அவனைச் சங்கடப்படுத்தினால் அவன் மனத்திலிருக்கும் கண்ணனைச் சங்கடப் படுத்துவதாக ஆகாதா! நீ சற்றுப் பேசாமல் இரு முக்தா!'' என்றார் ஞானேஸ்வரர். 

"நான் அவனைச் சங்கடப் படுத்துவதற்காகப்போகவில்லை அண்ணா! எல்லார் மனதிலும் இறைவன் தான் இருக்கிறான், எனவே யார் குறித்தும் அவதூறு பேசல் தகாது என்பதை அவனுக்கு உணர்த்தவே போகிறேன்!'' நகைத்துக்கொண்டே நடந்தாள் முக்தாபாய். 

"போ... போ… அங்கே அவன் வீட்டு வாசலில் வரிசை வரிசையாகச் சடலங்கள் அடுக்கப்பட்டிருக்கும். அந்த உயிரற்ற உடல்களின் உறவினர்கள் நிறையப் பேர் சடலங்களைச் சுற்றி அமர்ந்திருப்பார்கள். அதையெல்லாம் பார்த்து பயந்துவிடாதே!'' என்றார் ஞானேஸ்வரர். 

ஶ்ரீமத் பாகவதம் - 161

ஏழாவது ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(ந்ருஸிம்ஹாவதாரமும், ஹிரண்யகசிபுவின் ஸம்ஹாரமும்)

நாரதர் சொல்லுகிறார்:- பிறகு அவ்வஸுரகுமாரர்கள் அனைவரும் அந்த ப்ரஹ்லாதன் மொழிந்ததைக் கேட்டு, அது ஒரு தோஷமுமின்றி அழகாயிருந்தமையால், அதை அப்படியே அங்கீகரித்தார்கள். அவர்கள் அது முதல் அஸுர குருக்கள் கற்பிப்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பால், அவ்வஸுர குருவின் பிள்ளைகள், அந்த அஸுரகுமாரர்களின் புத்தி பகவத்தர்மத்தில் மாறாத ஊக்கமுற்றிருப்பதை அடையாளங்களால் கண்டறிந்து, பயந்து, விரைந்தோடி, ராஜனாகிய ஹிரண்யகசிபுவுக்கு உள்ளபடி அறிவித்தார்கள். பிறகு, குருபுத்ரன் மூலமாய்த் தன் புதல்வன் தன் வழியில் வராமல் தனக்கு அனிஷ்டமான (விருப்பம் இல்லாத) தப்பு வழியில் போகையாகிற அநீதியைக் கேட்டு, கோபாவேசத்தினால் உடம்பெல்லாம் நடுங்கப்பெற்று, ப்ரஹ்லாதனைக் கொல்ல மனங்கொண்டான். அவ்வஸுர ச்ரேஷ்டன், கொடுமையான வாக்கினால் அவமதிக்கத்தகாத ப்ரஹ்லாதனை அவமதித்து, விநயத்தினால் (பணிவினால்) வணங்கி, எவ்வளவு அவமதிக்கினும் கோபமற்றுக் கைகளைக் குவித்துக்கொண்டு, அருகாமையில் நிற்கிற அப்புதல்வனைக் கோபத்தினால் பாபிஷ்டமான (பாபம் உள்ள) கண்ணைக் குறுக்கே சாய்த்துப் பார்த்து, இயற்கையில் கொடியனாகிய அவ்வஸுரன், பாதத்தினால் மிதிக்கப்பட்ட ஸர்ப்பம் போலப் பெருமூச்செறிந்து இவ்வாறு மொழிந்தான்.

ஹிரண்யகசிபு சொல்லுகிறான்:- வீண் வணக்கமுற்றவனே! மந்த (குறைவான, மூடமான) புத்தியுடையவனே! பிடிவாதங்கொண்டு என் கட்டளையைக் கடக்கின்ற உன்னை நான் இப்பொழுது யமன் வீட்டிற்கு அனுப்பி விடுகிறேன். மூடா! நான் கோபமுறுவேனாயின், லோகபாலர்களோடு கூடின மூன்று லோகங்களும் நடுங்கும். அப்படிப்பட்ட என் கட்டளையை நீ என்ன பலங்கொண்டு பயமற்றவன் போலக் கடந்தாய்?

செவ்வாய், 21 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 23 - திருப்பூர் கிருஷ்ணன்

அந்த வரட்டிகள் அப்படித்தான்

பன்னிரண்டு வயதேயான சிறுமி ஜனாபாய் இடுப்பில் கைவைத்து நின்றிருந்தாள். பாண்டுரங்கனின் தீவிர பக்தை அவள். எப்போதும் பாண்டுரங்கனையே சிந்தனை செய்பவள். அதனால்தான் அவனைப் போலவே அடிக்கடி இடுப்பில் கைவைத்து நிற்கத் தொடங்கிவிட்டாளோ? 

ஆனால், இன்று அவள் அவ்விதம் வீட்டுக்கு வெளியே வந்து நின்றபோது அவள் முகத்தில் கடும் கோபம் தென்பட்டது. கோபம் வராதா பின்னே? அவள் வீட்டுச் சுவரில் அவள் தட்டிய வரட்டிகளையும் சேர்த்துப் பக்கத்து வீட்டுக்காரி கூடையில் அள்ளி வைத்திருந்தாளே!

"நான் தட்டிக் காயவைத்த என் வரட்டிகளை நீ அள்ள வேண்டிய அவசியமென்ன? காய்ந்த வரட்டிகள் என் வீட்டுச் சுவரில் தானே இருந்தன? என் கூடையில் நானே வந்து அள்ளிக் கொள்வேனே? அதற்குள் உனக்கென்ன அவசரம்?'' படபடவென்று ஜனாபாய் பொரிந்ததைக் கேட்டு அடுத்த வீட்டுக்காரி கன்னத்தில் கைவைத்து ஆச்சரியப்பட்டாள். 

"அடி அம்மாடீ! இப்போது என்ன செய்துவிட்டேன் என்று இந்தக் கத்துக் கத்துகிறாய்? மழை வரும்போல் இருந்தது. நீயோ உள்ளே மாவரைத்துக் கொண்டிருந்தாய். காய்ந்த வரட்டி நனையப் போகிறதே என்று என் கூடையில் என் வரட்டிகளோடு, உன் வரட்டிகளையும் சேர்த்து எடுத்துவைத்தேன். என் கூடையிலிருந்து பாதி வரட்டிகளை நீ எடுத்துக் கொள் என்று தானே சொல்கிறேன்? இதில் என்ன சிக்கல்?'' 

இதற்கு ஜனாபாய் ஒப்புக் கொள்ளவில்லை. மீண்டும் கத்தலானாள். 

"நல்ல நியாயமாக இருக்கிறதே? உன் வரட்டிகளும் என் வரட்டிகளும் இப்போது கலந்துவிட்டன. அதுதான் சிக்கல். நான் தட்டிய வரட்டிகளைத் தனியே பிரிக்க வேண்டும். அவைதான் எனக்குத் தேவை. உன் வரட்டிகளை நீயே வைத்துக் கொள். அவற்றில் எனக்கு அக்கறை இல்லை. என் வரட்டிகள் எதுவோ அவற்றைத் தனியே பிரித்துத்தா''.

அடுத்த வீட்டுக்காரி கவலையில் ஆழ்ந்தாள்.

ஶ்ரீமத் பாகவதம் - 160

ஏழாவது ஸ்கந்தம் - ஏழாம் அத்தியாயம்

(ப்ரஹ்லாதன் தான் மாத்ருகர்ப்பத்தில் நாரதரிடம் தத்வோபதேசம் கேட்டதை அஸுர குமாரர்களுக்குக் கூறுதல்)

ஸ்ரீநாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு அஸுர குமாரர்களால் வினவப்பெற்ற மஹாபாகவதனான ப்ரஹ்லாதன், என்னிடத்தில் கேட்டதை நினைத்துச் சிரித்துக்கொண்டே, அவர்களை நோக்கி இவ்வாறு மொழிந்தான்.

ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- எங்கள் தந்தையாகிய ஹிரண்யகசிபு, தவம் செய்வதற்காக மந்தர பர்வதத்திற்குப் போயிருக்கும் பொழுது, இந்த்ரன் முதலிய தேவதைகள், “உலகங்களை வருத்துகிற பாபிஷ்டனான (பாபியான) இவ்வஸுரன், எறும்புகளால் கடியுண்ட ஸர்ப்பம்போலத் தன் பாபத்தினாலேயே பக்ஷிக்கப்பட்டான் (உண்ணப்பட்டான்)” என்று சொல்லிக் கொண்டு அஸுரர்களோடு யுத்தம் (போர்) செய்ய முயற்சி கொண்டார்கள். இந்த்ரன் முதலிய அத்தேவர்கள், பலத்தினால் யுத்தத்திற்கு (போர் செய்ய) முயன்றிருப்பதைக் கண்டு அஸுரத் தலைவர்கள், அவர்களால் பீடிக்கப்பட்டுப் பயந்து, மனைவி, பிள்ளை, பணம், நண்பர், பசுக்கள், மற்ற வஸ்துக்கள் ஆகிய இவற்றையெல்லாம் துறந்து, ப்ராணனைப் பாதுகாக்க முயன்று அனைவரும் மூலைக்கொருவராக எல்லாத் திசைகளையும் பற்றி விரைவுடன் ஒடிப்போனார்கள். ஜயசீலர்களான தேவதைகள், ராஜாவான ஹிரண்யகசிபுவின் க்ருஹத்திலுள்ள ஸமஸ்தமான சொத்துக்களையும் பறித்துக்கொண்டு அதைப் பாழ் செய்தார்கள். இந்த்ரன், ராஜ மஹிஷியான என் மாதாவைப் பிடித்துக்கொண்டு போனான். அவ்வாறு இந்த்ரன் கொண்டு போகும் பொழுது, தேவரிஷியான நாரதர் திடீரென்று வழியில் வந்து, பயந்து, நடுங்கி, அழுகுரலில் பக்ஷி (பறவை) போலக் கதறுகின்ற என் தாயைக் கண்டு இந்த்ரனைப் பார்த்துத் “தேவேந்த்ரனே! நிரபராதையான இவளைக் கொண்டு போவது யுக்தமன்று (ஸரியன்று). மிகுந்த மதி (புத்தி) உடையவனே! பிறனுடைய பார்யையை விட்டுவிடு. இவள் பதிவ்ரதை. இவளைக்கொண்டு போகாதே” என்றார். தேவேந்த்ரனும் அதைக் கேட்டு “இவளுடைய வயிற்றில் பிறரால் பொறுக்க முடியாத ஹிரண்யகசிபுவின் வீர்யம் கர்ப்பமாயிருக்கின்றது. ஆகையால், இவள் ப்ரஸவிக்கும் வரையில் என் வசத்தில் இருக்கட்டும். பிறகு, பிறந்த பிள்ளையை வதித்து, என் ப்ரயோஜனத்தை முடித்துக்கொண்டு, இவளை விட்டுவிடுகிறேன்” என்றான். நாரதரும் அதைக் கேட்டு,  “இவளுடைய கர்ப்பத்திலிருக்கும் சிசு, உன்னால் மரணம் அடையக் கூடியதன்று. அது பாபமற்றது; மஹாபாகவத லக்ஷணம் அமைந்தது; சிறந்த குணங்களுடையது; பகவானுடைய பரிவாரங்களில் சேர்ந்தது; மஹாபலமுடையது” என்றார். 

தேவேந்திரன், தேவர்ஷியின் வார்த்தையைக் கேட்டு, வெகுமதித்து அப்படியே அவளைத் துறந்து, அவளுடைய கர்ப்பத்திலிருக்கிற பகவத் பக்தனாகிய என்னிடத்தில் கௌரவத்தினால் அவளை ப்ரதக்ஷிணம் பண்ணி, ஸ்வர்க்கலோகம் போய்ச் சேர்ந்தான். அப்பால் தேவர்ஷி என் மாதாவைத் தனது ஆச்ரமத்திற்கு அழைத்துக்கொண்டு போய், ஸமாதானப்படுத்திக்  “குழந்தாய்! உன் பர்த்தா வரும்வரையில், நீ இவ்வாச்ரமத்தில் இருப்பாயாக” என்றார். அவளும் அப்படியே ஆகட்டுமென்று அத்தேவர்ஷியின் ஆச்ரமத்தில் நிர்ப்பயமாக (பயமின்றி) வஸித்திருந்தாள். அஸுர ச்ரேஷ்டனாகிய ஹிரண்யகசிபு பயங்கரமான தவத்தில் இழிந்து, அதினின்று மீண்டு வராதிருந்தவரையில், பதிவ்ரதையும் கர்ப்பிணியுமான என் தாய், தன் கர்ப்பத்தின் க்ஷேமத்திற்காகவும், தான் நினைத்தபொழுது தன் கணவன் வந்த பின்பு ப்ரஸவிப்பதற்காகவும், மிகுந்த பக்தியுடன், நாரத மஹர்ஷிக்குச் சுச்ரூஷை (பணிவிடை) செய்து வந்தாள். ஸமர்த்தராகிய அம்மஹர்ஷி, கருணை உடையவராகையால், அவ்வாறு சுச்ரூஷை (பணிவிடை) செய்து கொண்டிருக்கிற என் மாதாவுக்கு என்னை உத்தேசித்துப் பகவத் பக்தியோகமாகிற தர்மத்தின் ஸ்வரூபத்தையும், தேஹத்தைக் காட்டிலும் விலக்ஷணனான (வேறானவனான) ஆத்மாவின் ஸ்வரூபத்தையும், உபதேசித்தார். 

திங்கள், 20 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 22 - திருப்பூர் கிருஷ்ணன்

பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்

பாரதப் போர் உக்கிரமடைந்திருந்த தருணம். மாலை மங்கிய நேரம். கண்ணன் குந்தி தேவியுடனும் பாஞ்சாலியுடனும் பேசியவாறு அமர்ந்திருந்தான். அவன் சொல்வதை அமுதம்போல் பருகிக் கொண்டிருந்தார்கள் இருவரும். கண்ணனை விட்டால் அவர்கள் இருவருக்கும் வேறு யார் தான் கதி?

போரில் எத்தனை இறப்புகள்! எத்தனை உயிர்கள் பலியாகிவிட்டன! மனிதர்கள் மட்டுமல்ல, யானைகள், குதிரைகள்… இன்னும் எத்தனை நாட்கள் போர் தொடரப் போகிறதோ? இன்னும் என்னென்ன இழப்புகளையெல்லாம் தாங்க வேண்டியிருக்குமோ? குந்திதேவியிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்பட்டது.

"கண்ணா! இதெல்லாம் ஏன் நடக்கிறது?'' அங்கலாய்த்தவாறே கேட்டாள் அவள்.

கண்ணன் நகைத்தான். பேசாதிருந்தான்.

பாஞ்சாலி சலிப்புடன் சொன்னாள்:

"தெய்வமான நீயே எங்கள் பக்கம் துணையிருக்கிறாய். அப்படியிருந்தும் ஏன் இத்தனை இழப்புகள்?''

கண்ணன் பாஞ்சாலியை சற்றுநேரம் கனிவோடு பார்த்தான். பின் சொன்னான்:

"பாஞ்சாலி! ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்ச்செயல் விளையும். அந்த எதிர்ச்செயலிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது. இது பிரபஞ்ச விதி. கல்லை மேலே தூக்கிப் போட்டால் கீழே விழும். மரத்திலிருந்து கனி ஒருநாளும் மேலே பறந்துபோகாது. தண்ணீர் என்றால் பள்ளத்தை நோக்கித்தான் பாயும். மேட்டை நோக்கிப் பாயாது. நெருப்பு என்றால் சுடத்தான் செய்யும். இப்படி உலக இயக்கத்திற்காக எத்தனையோ விதிகள் இருக்கின்றன. கர்மவினை என்பதும் இவற்றைப் போன்ற ஒரு விதிதான். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அவனறியாமல் செயல்படும் விதி இது. அதை அறிந்துகொண்டு நல்லதையே நினைத்து நல்லதையே பேசி நல்லதையே செய்து வாழ்பவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்கு நல்லதே நடக்கும்.''

"அல்லாதவர்களுக்கு என்ன நடக்கும்?'' பாஞ்சாலி யோசனையுடன் கேட்டாள்.

"அல்லாதவர்கள் கர்மவினையால் விளையும் துயரத்தை அனுபவிக்கத்தான் செய்வார்கள். இந்தப் போரில் இறக்கும் ஒவ்வோர் உயிரும் அதனதன் கர்மவினையை அனுபவித்து அதன் முடிவில்தான் இறக்கிறது. கடவுளின் திட்டப்படி நடக்கும் எதையும் நாம் ஏற்கத்தான் வேண்டும். விமர்சிக்கலாகாது. விமர்சித்துப் பயன் இல்லை''.

குந்திதேவி திகைப்புடன் கேட்டாள். 

"கர்மவினையிலிருந்து யாரும் தப்பமுடியாதா கண்ணா?''

ஶ்ரீமத் பாகவதம் - 159

ஏழாவது ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்

(ப்ரஹ்லாதன் பிள்ளைகளுக்குத் தத்வோபதேசம் செய்தல்)

ப்ரஹ்லாதன் சொல்லுகிறான்:- அறிவுள்ள புருஷன், இந்த மனுஷ்ய ஜன்மத்திலேயே (பிறவியிலேயே), பால்யம் முதற்கொண்டு, பகவானை அடைவதற்குரிய தர்மங்களை அனுஷ்டிக்க வேண்டும். ஜன்மாந்தரத்தில் (அடுத்த பிறவியில்) பார்த்துக்கொள்வோமென்று வெறுமனே இருக்கலாகாது. மனுஷ்ய ஜன்மம் (பிறவி) கிடைப்பது அரிது. மேல் மனுஷ்ய ஜன்மத்தையே (பிறவியே) பெறுவோமென்கிற நிச்சயமில்லை. ஆகையால், இப்பொழுது நேரிட்டிருக்கிற இம்மனுஷ்ய ஜன்மத்திலேயே (பிறவியிலேயே), பகவத் தர்மங்களை அனுஷ்டிப்பீர்களாக. சப்தாதி விஷயங்களை அனுபவித்து, கடைசியில் தர்மங்களை அனுஷ்டிக்கலாமேயென்று நினைக்க வேண்டாம். அதுவரையில், இந்தச் சரீரம் நிலை நின்றிருப்பது நிச்சயமில்லை. ஆகையால், பால்யம் முதற்கொண்டே, பகவானை அடைவதற்கு யத்னம் (முயற்சி) செய்யவேண்டும். நிலையற்றதாயினும், இந்த மனுஷ்ய ஜன்மமே (பிறவியே), புருஷார்த்தத்தை நிறைவேற்றிக் கொடுக்கும். பகவத் தர்மங்களைச் சிறிது செய்வானாயினும், அவன் மோக்ஷத்தை அடைவான். பகவத் தர்மங்களைச் செய்ய ஆரம்பித்து, நடுவில் சரீரம் அழிந்து போமாயினும், கெடுதி உண்டாகாது. இந்த மனுஷ்ய ஜன்மத்தில் (பிறவியில்), பகவானுடைய பாதங்களைப் பணிகையே உரியதாம். இப்பகவான், ஸமஸ்த ப்ராணிகளுக்கும் உள்ளே இருந்து, நியமித்துப் பாதுகாக்கிறான். ஆத்மாக்கள் அனைவர்க்கும், ப்ரீதிக்கிடமானவன் அவனே. மற்றும், அவன் ப்ராணிகளிடத்தில் நல்ல மன இரக்கமுடையவன். நாம் அவனை அனுஸரிப்போமாயின், அவன் நமக்கு ஹிதத்தையே (நன்மையையே) செய்வான். 

ஓ, அஸுர குமாரர்களே! ப்ராணிகளுக்கு தேஹ ஸம்பந்தம் நேர்ந்த மாத்ரத்தில், பசு (விலங்கு) ஜன்மம் (பிறவி) முதலிய எல்லா ஜன்மங்களிலும் (பிறவிகலிலும்) இந்த்ரிய ஸுகங்கள் அவரவர் ப்ரயத்னமில்லாமல் (முயற்சி இல்லாமல்) பூர்வ கர்மங்களுக்குத் (முன் வினைகளுக்குத்) தகுந்தபடி தாமே உண்டாகின்றன. துக்கம் வேண்டுமென்று ஒருவரும் ப்ரயத்னம் (முயற்சி) செய்கிறதில்லை. ஆயினும், கர்மானுகுணமாக (முன் வினைப்பயனாக), ப்ராணிகளுக்குத் துக்கங்கள் தாமே உண்டாகின்றனவல்லவா? அவ்வாறே, ஸுகங்களும், கர்மானுகுணமாகத் தாமே உண்டாகுமென்பதில் ஸந்தேஹமில்லை. அந்த ஸுகங்கள், மனுஷ்ய ஜன்மத்தில் போல், மற்ற பசு (விலங்கு), பக்ஷி (பறவை) முதலிய ஜன்மங்களிலும் உண்டாகும். பகவத் தர்மங்களோவென்றால், மனுஷ்ய ஜன்மத்திற்கே (பிறவிக்கே) அஸாதாரணமானவை. மற்ற ஜன்மங்களில் (பிறவிகளில்) அவை நேரமாட்டாது. ஆகையால், நாம் சப்தாதி விஷய ஸுகங்களுக்காக ப்ரயத்னம் (முயற்சி) செய்ய வேண்டியதில்லை. இதை அறியாமல் ப்ரயத்னம் (முயற்சி) செய்வோமானால், வாழ்நாளை வீணாக அழித்துக்கொள்ளது மாத்ரமேயன்றி, மற்றொரு ப்ரயோஜனமும் உண்டாகாது. ஜன்மாந்தரத்தில் (பின் வரும் பிறவிகளில்) ஸுகத்தை அனுபவிப்பதற்காக யத்னம் (முயற்சி) செய்ய வேண்டுமேயென்றால், வாஸ்தவமே (உண்மையே) ஆயினும், போக (ஸுக அனுபவ), மோக்ஷங்களைக் கொடுக்கவல்ல பகவானுடைய பாதாரவிந்தங்களைப் பணிவோமானால், ஜன்மாந்தரத்திற்கு (பின் எற்படும் பிறவிக்கு) அடியான (காரணமான) கர்மங்களற்றுத் துக்கங்களெல்லாம் அடியோடு தொலையப்பெற்று ப்ரஹ்மானந்தத்தை அனுபவிக்கையாகிற பெரிய  க்ஷேமத்தைப் பெறுவோம். விஷய ஸூகங்களுக்காக யத்னம் (முயற்சி) செய்பவன், அத்தகைய க்ஷேமத்தை அடையமாட்டான். ஆகையால், ஸம்ஸாரத்திலிருக்கும் புருஷன், நன்மை, தீமைகளை அறிந்து, தன் சரீரம் திறமையோடிருக்கும் பொழுதே மோக்ஷமாகிற க்ஷேமத்திற்காக, யத்னம் (முயற்சி) செய்யவேண்டும். 

ஞாயிறு, 19 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 21 - திருப்பூர் கிருஷ்ணன்

உள்ளம் கவர் கள்வன்

பூந்தானம் எளிய கிராமத்து மனிதர். அதிகப் படிப்பறிவில்லாதவர். ஆனால், குருவாயூரப்பனோ அவரது உயிர். எளிய நடையில் உயர்ந்த தத்துவக் கருத்துகளை உள்ளடக்கி அவர் எழுதிய ஞானப்பான பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும்புகழ் பெற்றிருந்தன.

ஒவ்வொரு திங்கட் கிழமை அன்றும் குருவாயூர் சென்று பக்திப்பரவசத்தோடு, குருவாயூரப்பனை துதிப்பது அவர் வழக்கம். 

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, அங்காடிபுரம் என்ற தன் கிராமத்திலிருந்து புறப்பட்ட போது, சற்று நேரமாகிவிட்டது. இருள் சூழத் தொடங்கிவிட்டது. காட்டு வழி. என்றாலும் அடிக்கடிப் போகிற பாதைதானே! குருவாயூரப்பன் துணையிருப்பான். மனத்திற்குள் கிருஷ்ண நாமத்தை ஜபித்தவாறு காட்டு வழியில் நடந்து கொண்டிருந்தார். யாருமற்ற தனிமை அவரைக் கொஞ்சம் அச்சுறுத்தியது. 

அப்போதுதான் எதிர்பாராத அந்த விபரீதம் நேர்ந்தது. சில கள்வர்கள் கையில் வேலோடு ஓடி வந்து அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். அவரிடம் எந்த விளக்கத்தையும் அவர்கள் கேட்கத் தயாராய் இல்லை. ஒரு மரத்தில் அவரைக் கட்டினார்கள். குருவாயூரப்பனே யசோதையால் உரலில் கட்டுண்டவன் தானே என்று அவர் நினைத்துக் கொண்டார். அவரிடம் என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயலானார்கள். 

பூந்தானம் பொருள் பறிபோவதைப் பற்றிக் கவலைப்படுபவர் அல்ல. செல்வத்திற்கெல்லாம் மேலான செல்வமான குருவாயூரப்பன் அருள் போதும் என்று வாழ்பவர் அவர். ஆனாலும், அவர் கைவிரலில் ஓர் அழகிய தங்க மோதிரம் இருந்தது. அதை மட்டும் கள்வர்கள் எடுத்துக் கொண்டு விடக் கூடாது என்று பதட்டத்தோடு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். 

அந்தத் தங்க மோதிரம் அவர் விரலுக்கு வந்தது ஒரு தனிக்கதை. அது உண்மையில் அவருடைய மோதிரமல்ல. நாராயணீயம் எழுதிய நாராயண பட்டத்திரியுடையது...! 

கல்விமானான நாராயண பட்டத்திரிக்குப் பூந்தானம் என்றால் சற்று இளக்காரம் தான். ஒருமுறை பூந்தானம் பாடிய ஞானப்பான பாடல்களைக் கேட்டார் அவர். "இலக்கணமே சரிவர அமையவில்லையே? படிப்பறிவில்லாத நீங்கள் ஏன் பாட்டெழுத வேண்டும்?'' என்று கேட்டு அவரைக் கிண்டல் செய்தார். 

பூந்தானத்திற்கு அளவற்ற வருத்தம். பட்டத்திரி தம் பாடல்களை அங்கீகரிக்கவில்லையே? அவரே அங்கீகரிக்காதபோது பகவான் அங்கீகரிப்பானா? "ஹே குருவாயூரப்பா! பட்டத்திரி என் பாடல்களை ஏற்கும் வகையில் நீ ஏதேனும் அற்புதம் செய்யலாகாதா?'' என பூந்தானம் உருகிக் கரைந்தார்.

மறுநாள் நாராயண பட்டத்திரியின் வீட்டுக் கதவைத் தட்டினான் ஒரு வாலிபன். அழகிய தோற்றம். திருத்தமான உடையலங்காரம். பார்த்தாலே மெத்தப் படித்த இளைஞன் என்பது தெரிந்தது. "உங்கள் நாராயணீயம் மிகச் சிறப்பான காவியம் என்று புகழ்ந்தார் பூந்தானம். அவர்மூலம் அதன் பெருமையறிந்து அதைக் கேட்க வந்திருக்கிறேன்!'' என்றான் அந்த இளைஞன். 

பட்டத்திரி மகிழ்ச்சியோடு இளைஞனை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்து, தம் நாராயணீயத்தைப் படிக்கலானார். அவர் படிக்கப் படிக்க இடையிடையே அந்த இளைஞன் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தான். பல்வேறு இடங்களில் இலக்கணப் பிசகு இருப்பதைச் சுட்டிக் காட்டினான். பட்டத்திரியின் உள்ளம் நடுங்கியது. விழிகளில் கண்ணீர் வழிந்தது. "என் நூலில் இத்தனை இலக்கணத் தவறுகளா? இதை எப்படித் தாம் இதுவரை கவனியாது போனோம்? இந்த இளைஞன் எப்படி எல்லாவற்றையும் உடனுக்குடன் கண்டுபிடிக்கிறான்?''

சனி, 18 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 20 - திருப்பூர் கிருஷ்ணன்

நல்ல மனம் வாழ்க!

புதிய புடவை... இதுவரை அதை ஒரே ஒருமுறை தான் கமலாபாய் கட்டிக் கொண்டிருக்கிறாள். இன்று மாலை கிருஷ்ணர் கோயிலுக்குச் செல்லும்போது இந்தப் புடவையைத்தான் கட்டிக் கொண்டு செல்லவேண்டும். சற்று விலை மதிப்புடையது. 

துக்காராமின் மனைவி நல்ல சேலைகளையும் கட்டுவதுண்டு என்பதைக் கோயிலுக்கு வருபவர்கள் உணரட்டுமே!

அதிக அழுக்கில்லை என்றாலும், புடவையைத் தண்ணீரில் நனைத்துத் துவைத்தாள். 

புடவைக்கு நோகுமோ என்பதுபோல, துவைக்கும் கல்லில் லேசாக அடித்துத் துவைக்கும் தன் செயலை எண்ணி, அவளுக்கே சிரிப்பு வந்தது. புதுப்புடவை என்பதால் கைகளுக்கே புடவை மேல் பாசம் வந்துவிட்டதோ! 

யாரோ ஒருவர் - துக்காராமின் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைகளின் ரசிகர் - அன்பளிப்பாகக் கொடுத்த புடவை! இல்லாவிட்டால் துக்காராம் சம்பாத்தியத்தில் விலை மதிப்புள்ள புடவையை வாங்க முடியுமா என்ன! 

சம்பாத்தியம்! அந்த வார்த்தையை எண்ணியதும் கமலாபாயின் உதட்டில் கசந்த புன்முறுவல் பிறந்தது. உத்யோகம் புருஷ லட்சணமாமே? துக்காராம் எந்த வேலைக்கும் போய் எதுவும் சம்பாதிக்கவில்லை. 

கீர்த்தனைகளை மட்டுமே பாடிக் கொண்டிருந்தால் அடுப்பில் சோறு வேகுமா! வயிறு என்று ஒன்று இருக்கிறதே!

தெரிந்தவர் ஒருவரிடம் சொல்லி, சோளக்கொல்லை ஒன்றைக் காவல் காக்கும் பணியைச் சிறிதுகாலம் முன் துக்காராமுக்கு அவள்தான் வாங்கிக் கொடுத்தாள். கிடைத்த வேலையைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியவேண்டாமா! பரண்மேல் ஏறி பஜனைப் பாடல்களைப் பாடினால் பறவைகள் ஆனந்தமாகத் தாளம் போட்டா கேட்கும்! அத்தனை சோளத்தையும் அவை கொத்திச் சென்றுவிட்டன. சோளக் கொல்லையின் உரிமையாளர் அவரை வேலையை விட்டு நீக்கிவிட்டார்.

எப்போதும் கிருஷ்ண பக்திக் கீர்த்தனைதான்! அவளுக்கும் கிருஷ்ண பக்தி உண்டுதான். என்றாலும், இப்படியா! தெய்வம் என்றைக்குக் கண் திறக்கும்? இவள் வீட்டின் வறுமை என்று மறையும்? 

துக்காராமிடம் இன்னொரு சிக்கல். உயர்ஜாதி அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ளாமல் கீழ் ஜாதியினரையும் சமமாக வைத்து அவர்கள் முன்பாகவும் கீர்த்தனை பாடுவார். இதை எந்த உயர் ஜாதிக்காரர் ஒப்புக்கொள்வார்? 

ஶ்ரீமத் பாகவதம் - 158

ஏழாவது ஸ்கந்தம் -  ஐந்தாவது அத்தியாயம்

(ஹிரண்யகசிபு தன் பிள்ளையான ப்ரஹ்லாதனுடைய விஷ்ணு பக்தியைக் கண்டு அவனை வதிக்கப் பார்த்தல்)

நாரதர் சொல்லுகிறார்:- அஸுரர்கள், ஜ்ஞானாதி குணங்கள் நிறைந்த சுக்ராசார்யரை, தமக்குப் புரோஹிதத்தொழில் செய்யும்படி ஏற்படுத்திக்கொண்டிருப்பது யாவர்க்கும் தெரிந்தவிஷயம். அந்தப்படிக்கு, அச்சுக்ராசார்யருடைய பிள்ளைகளான சண்டன், அமர்க்கனென்ற இருவர்கள் அஸுர ராஜனான ஹிரண்யகசிபுவின் க்ருஹத்தில், புரோஹிதத்தொழில் செய்து கொண்டிருந்தார்கள். அவ்வஸுரராஜன், தங்களிடம் படிக்கும்படி கொண்டுவிட்ட ப்ரஹ்லாதனுக்கும், மற்ற அஸுரப் பிள்ளைகளுக்கும், அவர்கள் நீதி முதலியவற்றைப் படிப்பித்துக்கொண்டு வந்தார்கள். அப்படியிருக்கையில், அந்த ப்ரஹ்லாதன் குரு சொன்னதைக் கேட்டு, அப்படியே வாசித்தானேயன்றி, தன்னுடையவனென்றும், பிறனென்றும் வீண் அபிமானத்தை (எண்ணத்தை) விளைக்கும்படியான அவன் சொல்லை மனத்தில் நன்மையென்று நினைக்கவில்லை. 

பாண்டுவின் புதல்வனே! ஒரு நாள் அவ்வஸுரராஜன், தன் பிள்ளையை மடிமேல் உட்காரவைத்துக்கொண்டு  “அப்பா! குழந்தாய்! உனக்குக் குரு சொல்லிக் கொடுத்தவைகளில் எது நன்றென்று தோன்றுகிறதோ, அதைச் சொல்வாக” என்று வினவினான். 

ப்ரஹ்லாதன் கூறுகிறான்:- “ஓ அஸுரச்ரேஷ்டனே! இவ்வுலகத்தில், ப்ராணிகள் தேஹத்தை ஆத்மாவாகவும், தம்மை ஸ்வதந்த்ரராகவும் (தம் இஷ்டப்படி செயல்பட வல்லவர்களாகவும்) நினைத்து சப்தாதி விஷயங்களில் விருப்பமுற்று, அந்த வீண்பிடிவாதத்தினால் ஸர்வ காலமும் மனம் கலங்கப் பெற்றிருக்கிறார்கள். நரகத்தில் கொண்டு தள்ளுவதும், பாழுங்கிணறு போன்றதுமான, இல்லற வாழ்க்கையைத் துறந்து வனத்திற்குச் சென்று தன்னைப் பற்றினாருடைய ஸம்ஸார பந்தத்தைப் போக்கும் திறமையுள்ள பகவானைப் பற்றுவார்களாயின், அதுவே நன்மையென்று நான் நினைக்கிறேன்” என்றான். 

நாரதர் கூறுகிறார்:- ஹிரண்யகசிபு, தனக்குச் சத்ருவான விஷ்ணுவின் பக்ஷத்தில் நிலை நின்றிருக்கிற பிள்ளையின் வார்த்தையைக் கேட்டுச் சிரித்து, என் சத்ருவாகிய விஷ்ணுவினிடத்தில் மனம் சென்றவர் பாலர்களின் புத்தியைக் கலைக்கிறார்கள். குருவின் க்ருஹத்தில், விஷ்ணு பக்தர்களான ப்ராஹ்மணர்கள் மறைந்திருந்து, சிறுவனுடைய புத்தியைக் கலைக்கின்றார்கள். இது நிச்சயம். ஆகையால் இவன் புத்தி மாறாதிருக்குமாறு நன்கு விசாரித்துக் கொள்ளுங்கள் என்றான். பிறகு, தைத்ய புரோஹிதர்கள் ராஜ படர்களால் தங்கள் க்ருஹத்தில் கொண்டு விடப்பட்ட ப்ரஹ்லாதனை அழைத்து, அவனை நல்வார்த்தைகளால் புகழ்ந்து, இனிய உரையுடன் இவ்வாறு வினவினார்கள். 

வெள்ளி, 17 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 19 - திருப்பூர் கிருஷ்ணன்

பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலா!

பண்டரிபுரத்தில் விட்டலனது சந்நிதியில் தம்மை மறந்து பாண்டுரங்கனையே பார்த்துக் கொண்டிருந்தார் நாமதேவர். அந்தக் கிருஷ்ண விக்ரகத்தின் எழிலில் மனம் பறிகொடுத்து நின்றார். 

அவருக்கு சுமார் இருபத்தைந்து வயதிருக்கலாம்! ஆனால், இந்தச் சிறிய வயதிற்குள் கண்ணன் மேல் எத்தனை பக்தி! 

ஊரும் உலகமும் அவரைப் புகழ்ந்தது. ஆனால், அந்தப் புகழ்ச்சியே அவர் மனதில் நம்மை மிஞ்சிய பக்தன் யாருமில்லை என்ற கர்வத்தைத் தந்துவிட்டது. "கர்வம்" என்ற அந்த உணர்வை மட்டும் விட்டுவிட்டுப் பார்த்தால், உண்மையிலேயே நாமதேவருக்கு இணையான பக்தர் இல்லைதான்! 

பாண்டுரங்கன் அவரை எப்படித் திருத்துவது என்று சிந்தித்தவாறு அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். இறைசக்தி கிருஷ்ணரைத் தவிர வேறு வடிவத்தில் கிடையாது என்று நினைக்கிறார் அவர். அவ்விதம் நினைத்தால் அது, பல வடிவங்கள் எடுக்கக்கூடிய இறையாற்றலை ஒப்புக் கொள்ளாததாக அல்லவா ஆகும்! 

பண்டரிபுரத்தைத் தவிர வேறு திருத்தலமே கிடையாது என்றும் திடமாகக் கருத்து வைத்திருக்கிறார். அதுவும் சரியல்லவே! உலகெங்கும் பரந்துள்ள கடவுள் சக்தி, ஒரே ஊரில் மட்டுமே கட்டுண்டு கிடப்பதாக நினைப்பதும் மூடத்தனம் தான் அல்லவா!

நாமதேவரின் சமகாலத்தில் வாழ்ந்த இன்னொரு பக்தரான ஞானதேவர் அன்று பண்டரிபுரம் வந்திருந்தார். முக்தா என்ற சகோதரியும், நிவ்ருத்தி, ஸோபானர் ஆகிய இரு சகோதரர்களுமாக அவர்கள் மொத்தம் நான்குபேர். நால்வரும் இறைபக்தியில் தோய்ந்த உயர்நிலை அடியவர்கள். எல்லாருமே இருபத்தைந்து வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள். ஞானதேவர் தம் தூய்மையை நிரூபிப்பதற்காக ஒருமுறை எருமையைப் பேசவைத்த பெருமைக்குரியவர்.

நாமதேவர், ஞானதேவர் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் கேள்விப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் சந்தித்துக் கொள்வது அதுதான் முதல்முறை. ஞானதேவரைவிட, சற்று வயதில் மூத்தவரான நாமதேவரைத் தன் சகோதரர்களோடும் சகோதரியோடும் தேடிச்சென்று வணங்கினார் ஞானதேவர். 

நாமதேவரும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. பேசாமல் நின்றுவிட்டார். 

"என்னதான் கிருஷ்ண பக்தர் என்றாலும் தம்மைவிட வயதில் குறைந்தவரை வணங்குவதாவது! இவர்கள் நால்வரும் பல தலங்களுக்கு யாத்திரை போய்விட்டு வந்திருக்கலாம். இருக்கட்டுமே! எல்லாத் தலத்தையும் விட உயர்ந்த தலம் பண்டரிபுரம் அல்லவா? நான் இங்கே பற்பல ஆண்டுகளாக வசிக்கிறேனே! என் பாண்டுரங்கனை மனமார வழிபடுகிறேனே? என் கிருஷ்ணன் எனக்கு நேரில் காட்சி தருகிறான் என்ற விஷயம் இவர்களுக்குத் தெரியுமோ இல்லையோ? பண்டரிபுரத்தில் உள்ள கிருஷ்ணனை பக்திசெய்யும் பக்தர்களுக்கு இணையானவர்கள் உலகில் வேறு யார் உண்டு?" ஆணவத்தால் நாமதேவரின் தலை சற்று நிமிர்ந்தது.

ஶ்ரீமத் பாகவதம் - 157

ஏழாவது ஸ்கந்தம் - நான்காவது அத்தியாயம்

(ஹிரண்யகசிபு வரங்களைப் பெற்று, லோக பாலர்களையெல்லாம் வென்று, விஷ்ணு  த்வேஷத்தினால் (வெறுப்பினால், பகைமையினால்) அவர்களைப் பீடித்தல்)

நாரதர் சொல்லுகிறார்:- இவ்வாறு ஹிரண்யகசிபுவால் வேண்டப்பெற்ற ப்ரஹ்மதேவன், அவனுடைய தவத்தினால் ஸந்தோஷித்து, எவர்க்கும் கிடைக்க முடியாத அவ்வரங்களையெல்லாம் அவனுக்குக் கொடுத்தான். அந்த அன்னவாஹனன் அவ்வஸுரனை நோக்கி  “அப்பனே! நீ என்னிடத்தில் வேண்டுகிற இவ்வரங்கள் எப்படிப்பட்ட புருஷர்களுக்கும் கிடைக்கக் கூடாதவை. ஆயினும், இவ்வரங்களை உனக்குக் கொடுக்கிறேன்” என்று மொழிந்து, அஸுர ச்ரேஷ்டனாகிய அவனால் பூஜிக்கப்பட்டு, ப்ருகு, தக்ஷர் முதலிய ப்ரஜாபதிகள் துதித்துக்கொண்டு பின்தொடர, போய்ச் சேர்ந்தான். ஹிரண்யகசிபு இவ்வாறு ப்ரஹ்ம தேவனிடம் வரம் பெற்று, ஸ்வர்ணம் போன்ற தேஹமுடையவனாகி, தன் ப்ராதாவான ஹிரண்யாக்ஷனைக் கொன்றதை நினைத்துப் பகவானிடத்தில் த்வேஷம் (பகைமை) செய்தான். அம்மஹாஸுரன், மூன்று லோகங்களையும், எல்லாத்திக்குகளையும், தேவர், அஸுரர், மனுஷ்யச்ரேஷ்டர்கள், கந்தர்வர், கருடர், உரகர், ஸித்தர், சாரணர், வித்யாதரர், ரிஷிகள், பித்ருக்கள், முனிவர், யக்ஷர், ராக்ஷஸர், பிசாசர், ப்ரேதர், பூதபதிகள் இவர்களையும் மற்றும் பூதங்களில் எவ்வெவை சிறப்புடையவைகளோ அவற்றையும் ஜயித்து வசப்படுத்திக் கொண்டு, ஜகத்தையெல்லாம் வென்றவனானான். 

அவன், இந்த்ரன் முதலிய லோகபாலர்களின் தேஜஸ்ஸையும்  அவர்களது ஸ்தானங்களையும் பறித்தான். நந்தன தேவ உத்யானத்தையும் (தோட்டத்தையும்) கைப்பற்றினான். எல்லா ஸம்ருத்திகளும் அமைந்த ஸ்வர்க்கலோகத்தில், விச்வகர்மாவால் நேரே நிர்மிக்கப்பட்டதும், மூன்று லோகத்து ஐச்வர்யங்களும் அமைந்திருப்பதுமான, இந்த்ரனுடைய பவனத்தில் வாஸம் செய்தான். அவ்விந்த்ர பவனத்தில் படிக்கட்டுகள் பவழங்களால் இயற்றப் பெற்றிருக்கும். தரையெல்லாம் இந்த்ர நீல ரத்னங்கள் பதித்திருக்கும். சுவர்கள், ஸ்படிக, ரத்ன மயமாயிருக்கும். கம்பங்களெல்லாம், வைடூர்ய மணிகளால் ஏற்பட்டிருக்கும். மற்றும், அவ்விடத்தில் அற்புதமான மேற்கட்டுகளும், பத்மராக ரத்னமயமான ஆஸனங்களும், பால் நுரைபோல் வெளுத்து முத்துச்சரங்கள் தொங்கவிடப்பெற்ற மெத்தென்னும் பஞ்ச சயனங்களும் அமைந்திருக்கும். அங்கு, அழகான பற்களுடைய தெய்வ மடந்தையர்கள் ஒலிக்கின்ற சிலம்பு தண்டைகளால் ஆங்காங்கு சப்தம் செய்துகொண்டு உலாவி ரத்ன மயமான ஸ்தம்பங்களில் அழகிய தங்கள் முகங்களைப் பார்த்துக் கொள்வார்கள். மஹாபலிஷ்டனும், நினைத்தபடி நடத்தும்படியான மன உறுதியுடையவனும், உலகங்களையெல்லாம் ஜயித்துத் தானொருவனே அரசனாயிருப்பவனும், எவராலும் கடக்க முடியாத ஆஜ்ஞை (கட்டளை, ஆனை) உடையவனுமாகிய அந்த ஹிரண்யகசிபு, தன்னால் பீடிக்கப்பட்ட தேவாதிகளால் வந்தனம் செய்யப்பெற்ற பாதங்களுடையவனாகித் தேவேந்த்ரபவனத்தில் வாஸம் செய்து கொண்டு மனக்களிப்புற்றிருந்தான் (இன்புற்றிருந்தான்). 

வியாழன், 16 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 18 - திருப்பூர் கிருஷ்ணன்

கண்ணா உன்னைத் தேடுகிறேன் வா!

அந்த அர்ச்சகர் வழக்கம்போல் அன்றும் திகைத்தார். அவரது பக்தி மனம் பதறியது. அன்றும் கிருஷ்ண விக்கிரகத்தின் காதோரத்தில், கொஞ்சம் சாணம் அப்பியிருந்தது. யார் செய்கிறார்கள் இந்த அபசாரத்தை?

நாள்தோறும் இரவு, கோயிலைப் பூட்டிக் கொண்டுதான் வீடு செல்கிறார். மறுநாள் அதிகாலை ஆலயக் கதவைத் திறந்து மூல விக்கிரகத்தைப் பார்த்தால் கண்ணன் திருவுருவத்தில் காதோரம் கொஞ்சம் பசுஞ்சாணம். எத்தனையோ நாட்களாக இப்படி நடந்துகொண்டிருக்கிறது! யாரிடம் போய்ச் சொல்வது இதை! 

பூட்டிய கோயிலுக்குள் யாரும் நுழையவே முடியாதே! யார் உள்ளே வந்து இப்படி செய்கிறார்கள்? 

அர்ச்சகர் விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்தவாறே "கண்ணா! என் பக்தியில் ஏதும் கோளாறா? கோயில் பூட்டுக்கு வேறு சாவி கூடக் கிடையாதே! அதையும் வீட்டில் என் தலைமாட்டில் வைத்து தான் தூங்குகிறேன். அப்படியிருக்க, எப்படி இவ்வாறு நடக்கிறது? உனக்கு நாள்தோறும் சந்தனக் காப்புச் சாத்துகிறேன். காலையில் வந்து பார்த்தால் உன் காதோரத்தில் கொஞ்சம் பசுஞ்சாணம்! ஏன் இப்படி?'' என்று அரற்றினார். 

அபிஷேகத்தை முடித்து, கண்ணனுக்கு அலங்காரம் செய்தார். மக்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினார்கள். அதன்பின் அர்ச்சனை, ஆராதனை என வழக்கமான நடவடிக்கைகளில் பொழுது சென்றது. 

இரவு கோயிலைப் பூட்டும்போதுதான் பார்த்தார். நாள்தோறும் வரும் ஒரு மூதாட்டி அன்றும் வந்திருந்தாள். தளர்ந்த தேகம். வயோதிகம் தன் கடந்த காலக் கதையை, அவளது முகத்தில் சுருக்கங்களால் எழுதியிருந்தது. 

கிருஷ்ண விக்ரகத்தைப் பார்த்தவாறே கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் அப்படியொரு பரவசம். 

அர்ச்சகருக்கு மூதாட்டியிடம் விசேஷப் பரிவு உண்டு. பல்லாண்டுகளாக தினமும் ஆலயத்திற்கு வருபவள். அர்ச்சகர் பிரியத்தோடு கேட்டார்:

"பாட்டி! இன்று என்ன வேண்டிக் கொண்டாய்?''

"நேற்று என் கண்ணன் நிறைய வெண்ணெய் சாப்பிட்டுவிட்டான். கண்ணன் அருளால் அந்த வெண்ணெயெல்லாம் அவனுக்கு ஜீரணம் ஆகவேண்டும்,'' என்று வேண்டிக் கொண்டேன்.

அர்ச்சகர் சிரித்தார்.

"அதில்லை பாட்டி. உனக்காக ஏதாவது வேண்டிக் கொண்டாயா?''

ஶ்ரீமத் பாகவதம் - 156

ஏழாவது ஸ்கந்தம் - மூன்றாவது அத்தியாயம்

(ஹிரண்யகசிபு தவம் செய்து ப்ரஹ்மதேவனிடம் வரம் பெறுதல்)

நாரதர் சொல்லுகிறார்:- ஓ, யுதிஷ்டிர மன்னவனே! ஹிரண்யகசிபு தன்னைப் பிறரால் வெல்ல முடியாதவனாகவும், மூப்பு, மரணம் அற்றவனாகவும், சத்ருக்கள் எவருமின்றி ஒரே மன்னவனாகவும் செய்து கொள்ள விரும்பினான். அவன், மந்தர மலைச்செறிவில் கால்கட்டை விரலால் பூமியில் நின்று, கைகளை உயரத்தூக்கி, கண்களை ஆகாயத்தில் நிறுத்தி, மிகவும் கொடுமையான தவம் செய்தான். அவ்வஸுரன், ஜடைகளின் (சடை முடியின்) காந்தியால் கிரணங்களோடு கூடின ப்ரளய காலத்து ஸூர்யன்போல ப்ரகாசித்தான். இவ்வாறு அவன் தவம் செய்து கொண்டிருக்கையில், முன்பு ராக்ஷஸர்களால் உபத்ரவிக்கப்பட்டு (துன்புறுத்தப்பட்டு), மறைந்து திரிந்து கொண்டிருந்த தேவதைகள், தங்கள் தங்கள் ஸ்தானங்களை (இருப்பிடத்தினை) அடைந்தார்கள். அவ்வஸுரனுடைய சிரஸ்ஸினின்றும், தவப்பெருக்கினால் உண்டான புகையுடன் கூடின அக்னி, கீழும் மேலும் குறுக்குமாக நாற்புறங்களிலும் பரவி லோகங்களையெல்லாம் எரித்தது. நதிகளும், ஸமுத்ரங்களும் கலங்கின. த்வீபங்களோடும், பர்வதங்களோடும் கூடின பூமண்டலமெல்லாம் நடுங்கின. ஸூர்யாதி க்ரஹங்களும், மற்ற நக்ஷத்ரங்களும் விழுந்தன. திசைகளெல்லாம் எரிந்தன. தேவதைகள், அந்தத் தவநெருப்பினால், ஸ்வர்க்க லோகத்தை விட்டு ஸத்ய லோகம் போய்ச்சேர்ந்து, ப்ரஹ்மாவை நோக்கித்  “தேவதேவனே! ஜகத்திற்கெல்லாம் ப்ரபூ! நாங்கள் ஹிரண்யகசிபுவின் தவத்தினால் தஹிக்கப்பட்டு, ஸ்வர்க்கத்தில் வாஸம் செய்ய முடியாதிருக்கிறோம். உனக்குப் பூஜை செய்கின்ற உலகங்களெல்லாம், அவனுடைய தவத்தின் கொதிப்பினால் பாழாவதற்கு முன்னமே உனக்குத் தோற்றுமாயின், அவனுடைய தவ நெருப்பை அணைப்பாயாக. நீ எல்லோரையும் பரிபாலிக்க வல்லவனல்லவா? பிறரால் செய்யமுடியாத தவத்தைச் செய்கின்ற அவ்வஸுரனுடைய அபிப்ராயம் (எண்ணம்) இதுவல்லவா? ஆனால், உமக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. ஆயினும் சொல்லுகிறோம், கேட்பீராக.” 

புதன், 15 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 17 - திருப்பூர் கிருஷ்ணன்

ஆடுகிறான் கண்ணன்

அன்று இரவும் அந்த நிகழ்ச்சி நடைபெறுகிறதா என்று கவனிப்பதற்காக கிருஷ்ண பக்தரான ரகுநாதர் உறங்காமல் காத்திருந்தார். திருப்பதியில், கணிகை புரந்தரி வீட்டில் தானே அவர், சில நாட்களாகத் தங்கியிருக்கிறார்! 

இரவு பதினொன்றரை மணி இருக்கலாம். வழக்கம்போல் புரந்தரி அழகாக ஒப்பனை செய்துகொண்டாள். கூந்தலில் பூச்சரம் சூடி, கையில் வீணையை எடுத்துக்கொண்டாள். வாயில் கதவை மெதுவாய்த் திறந்து வீணையோடு வெளியே நடந்தாள். 

உறங்குவதுபோல் பாவனை செய்துகொண்டிருந்த ரகுநாதர் கடைக்கண்ணால் பார்த்தார். புரந்தரியின் முகத்தில் தென்பட்ட தூய ஒளியைக் கண்டு அவளை வணங்க வேண்டும்போல் தோன்றியது. வீணையோடு அவள் செல்லும் காட்சி வீணையே வீணையைத் தூக்கிக் கொண்டு நடப்பதுபோல் தோற்றமளித்தது.

அர்த்தராத்திரியில் அவள் வழக்கம்போல் அன்றும் எங்கோ செல்வது கண்டு அவர் சிந்தனையில் ஆழ்ந்தார்.... 

கர்நாடக சங்கீதத்தில் பெரும்புலமை பெற்றவர் ரகுநாதர். புரந்தரியின் பாட்டு அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது. கோடிக்குயில்களின் குரலைச் சேர்த்துக் குழைத்தாலும் அவளது ஒரு குரலின் தேனினிமைக்கு ஈடாகாதே! 

ரகுநாதர் கர்நாடக இசை வல்லுநர் மட்டுமல்ல, திருப்பதிக்கு, ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்திருப்பதும், அவரது சொந்தப் பிரதேசமான கர்நாடக மாநிலத்திலிருந்துதான். ஏழுமலையானை தரிசனம் செய்வது அவரது வாழ்நாள் வேட்கை. இப்போதுதான் வேளை வாய்த்தது. வெகுநாள் பயணம் செய்து திருப்பதி வந்து சேர்ந்தார். ஏழுமலையானை தரிசித்தார். வேங்கடவன், "இன்னும் கொஞ்சநாள் இங்கேயே இருந்து என்னைக் கண்ணாரக் காண்" என்று சொல்வதுபோல் நகைத்தான். அவருக்கு வேங்கடவனை உடனே பிரிய மனமில்லை. 

ஆனால், திருப்பதியில் எங்கே தங்குவது? அவர் தங்குமிடம் தேடித் தவித்தபோதுதான் அந்த மதுரகானம் செவியில் விழுந்தது. யார் இந்த தெய்வீகக் குரலுக்குச் சொந்தக்காரர் என்றறியும் விருப்பத்தோடு, குரல் வந்த வீட்டில் படியேறினார். 

அங்கே ஓர் இளம்பெண் இசையாராதனை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். கையில் வீணையை மீட்டியவாறு அவள் பாடியபோது எது வீணையின் நாதம், எது அவள் குரல் என்று கண்டறிவது சிரமமாக இருந்தது! 

நெற்றியில் திருமண் துலங்க, அவர் வீட்டின் உள்ளே வந்தது கண்டு அவள் வீணையைக் கீழே வைத்துவிட்டு அவரை நமஸ்கரித்தாள்.

"சுவாமி! என் பெயர் புரந்தரி. வேங்கடவனின் அடியாள்! ஒரு கிருஷ்ண பக்தை! திருமால் அடியவரான தங்கள் வருகையால் என் இல்லம் புனிதமடைந்தது''.

"பெண்ணே! உன் குரலும் இசையும் பிரமாதம். நான் கர்நாடகப் பிரதேசத்திலிருந்து வேங்கடவன் தரிசனத்திற்காகத் திருப்பதி வந்தேன். நானும் இசைப் பாடல்களால் கண்ணனை ஆராதிப்பவன் தான். நீ பாடியும் யாழிசைத்தும் ஆராதிக்கிறாய். நான் எழுதியும் பாடியும் போற்றுகிறேன். திருப்பதியில் மேலும் சில நாட்கள் தங்கி வேங்கடவனைக் காண ஆவல். ஆனால், எங்கு தங்குவதுஎன்றுதான் தெரியவில்லை''.

"என் இல்லத்திலேயே தங்கலாமே சுவாமி? ஆனால், நான் கணிகை குலத்தவள். என் குலம் கருதித் தாங்கள் தயங்குவீர்களோ என்னவோ?''

ஶ்ரீமத் பாகவதம் - 155

ஏழாவது ஸ்கந்தம் - இரண்டாவது அத்தியாயம்

(ஹிரண்யகசிபுவின் வ்ருத்தாந்தத்தைக் கூறுதல்)

நாரதர் சொல்லுகிறார்:- தேவதைகளிடத்தில் பக்ஷபாதமுடைய (சார்ந்த) பகவான், வராஹ உருவங்கொண்டு தன் ப்ராதாவான (ஸஹோதரனான) ஹிரண்யாக்ஷனை வதிக்கையில், ஹிரண்யகசிபு கோபத்தினாலும், சோகத்தினாலும் பரிதவித்தான். அவன் கோபத்தினால் உதட்டைக் கடித்து, கண்கள் மிகவும் ஜ்வலிக்கப் பெற்றுக் கோபாக்னியின் புகையால் அழுக்கடைந்த ஆகாயத்தைப் பார்த்துப் பயங்கரமான கோரைப் பற்களாலும், கொடிய கண்ணோக்கத்தினாலும் பார்க்க முடியாமல் புருவ நெரிப்புடன் கூடின முகமுடையவனாகி, ஸபையில் சூலத்தை உயரத் தூக்கிக்கொண்டு, தானவர்களைப் பார்த்து இவ்வாறு மொழிந்தான். “ஓ தானவர்களே! தைத்யர்களே! த்ரிமூர்த்தனே! த்ரியக்ஷனே! சம்பரா! சதபாஹூ! ஹயக்ரீவா! நமுசீ! பாகனே! இல்வலா! விப்ரசித்தீ! புலோமா! மற்றும், சகுனாதிகளே, நீங்கள் எல்லோரும் என் வார்த்தையைக் கேட்பீர்களாக. உடனே நான் சொன்னபடியும் செய்வீர்களாக. காலதாமதம் செய்யவேண்டாம்.      

ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர் கூட்டத்திலும், அஸுரர் கூட்டத்திலும் ஸமனாயிருப்பவன். ஆயினும், நமது சத்ருக்களான தேவதைகள், ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் அணுகிப் பழகுவது, சேவை புரிவது இவற்றின் வாயிலாகத் தேவர்கள் அவரை அனுவர்த்தித்துத் (பின்பற்றித்) தங்களுக்கு ஸஹாயமாக (உதவியாக)  ஏற்படுத்திக்கொண்டு, தாங்கள் பலத்தில் அற்பர்களாயினும் (குறைந்தவர்களாயினும்), அவனைக்கொண்டு எனது நண்பனும், அன்புள்ள சகோதரனுமாகிய ஹிரண்யாக்ஷனைக் கொல்வித்தார்கள். ஸூர்யன் போல் தேஜோமயமான உருவமுடையவனாயினும், மாயையினால் வராஹ உருவங்கொண்டு, தனக்கு இயற்கையான தேவதாரூபத்தைத் துறந்து தன்னைத் தொடர்கிறவனைத் தொடர்ந்து, பாலன் போல் மன நிலைமையின்றி, என் ப்ராதாவைக் கொன்ற அவ்விஷ்ணுவின் கழுத்தை என் சூலத்தினால் முறித்து, நான் மன வருத்தம் தீர்ந்து, அந்த ரக்த ப்ரவாஹத்தினால் (ரத்த வெள்ளத்தினால்), ரக்தத்தில் (ரத்தத்தில்) ப்ரீதியுடைய என் ப்ராதாவை த்ருப்தி அடையச் செய்யும் வரையில், நீங்கள் ப்ராஹ்மணர்களும், க்ஷத்ரியர்களும் நிறைந்த பூமியில் சென்று, தவம், யாகம், வேதம் ஓதுதல், விரதம், தானம் முதலிய தர்மங்களைச் செய்யும் தன்மையுடையவர்கள் அனைவரையும் வதித்துக் கொண்டிருப்பீர்களாக. 

செவ்வாய், 14 ஜூலை, 2020

கண்ணன் கதைகள் - 16 - திருப்பூர் கிருஷ்ணன்

கனிவாக உபசரிக்கணும்!

தர்மபுத்திரர் நிகழ்த்தும் ராஜசூய யாகத்தை ஒட்டி அக்கம் பக்கத்திலிருந்தெல்லாம் மக்கள் ஜே ஜே எனக் குழுமினார்கள். அஸ்தினாபுரம் முழுதும் மக்கள் வெள்ளம். 

எல்லோரும் வந்த காரணம் யாகம் பல நாட்கள் நடக்கும், கட்டாயம் அன்னதானம் நிகழும், வயிறாரச் சாப்பிடலாம் என்பதே. தர்மபுத்திரர் உணவுச்சாலை அதிகாரிகளிடம் யார் வந்தாலும் இல்லை என்று சொல்லாது உணவளிக்க உத்தரவிட்டிருந்தார். 

பின்னர், தன் தம்பிகளை அழைத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணியைக் கொடுத்தார். நகுல சகாதேவர்களுக்கு யாகம் காண வருபவர்களை வரவேற்கும் பொறுப்பு. அர்ஜுனனுக்கு யாகசாலையைப் பாதுகாக்கும் பணி. 

பீமன் "எனக்கென்ன வேலை?'' என்று கேட்டான். தர்மபுத்திரர், சற்று யோசித்துவிட்டு, "பீமா! நீ போஜனப்ரியன். உணவுச்சாலையில் ஏராளமானோர் உணவு உண்பார்கள். அவர்கள் திருப்தியாகச் சாப்பிட்டுச் செல்ல வேண்டும். அரைகுறை வயிறோடு எழுந்து விடக்கூடாது. அவர்களை உபசரித்து சாப்பிட வைக்க வேண்டியது உன் பொறுப்பு. பசிக்கும் போதெல்லாம் நீயும் சாப்பிட்டுக் கொள்ளலாம். சரிதானா?'' என்றார். 

"அப்படியே ஆகட்டும்!'' என்று மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டு உணவுச்சாலை நோக்கி நகர்ந்தான் பீமன். 

ஒருசில தினங்கள் கழிந்தன. யாகம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஆனால், உணவுண்ண வருவோர் கூட்டம் பெரிதும் குறைந்துவிட்டது. ஏராளமான உணவை என்ன செய்வது என்று தெரியாமல் சமையல் கலைஞர்கள் திகைத்தார்கள். அவர்கள் தர்மபுத்திரரிடம் நிலைமையைத் தெரிவித்தார்கள். 

தர்மபுத்திரருக்கு ஆச்சரியம். "புகழ்பெற்ற சமையல் கலைஞர்கள் அவர்கள். உணவு மிக ருசியாகத்தான் இருக்கும். ஆனால், உணவுண்ண வருவோர் எண்ணிக்கை ஏன் கிடுகிடுவென்று குறைகிறது?" பீமனை விசாரித்தார். 

பீமன், "அதுதான் எனக்கும் தெரியவில்லை!'' என்று அவரோடு சேர்ந்து திகைத்தான். அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது கையில் புல்லாங்குழலைத் தட்டியவாறு உள்ளே நுழைந்தான் கண்ணன். தர்மபுத்திரர் கண்ணனை வணங்கி வரவேற்றார். பின் ஆதங்கத்தோடு சொன்னார்:

"கண்ணா! இதென்ன சிக்கல்? உணவு அம்பாரம் அம்பாரமாகக் குவிக்கப்பட்டிருக்கிறது. விதவிதமான பலகாரங்கள் உண்பவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. ஆனால், உண்பதற்கு அதிகம் ஆட்கள் வருவதில்லை. ஏன் இப்படி?''