செவ்வாய், 30 ஜூன், 2020

கண்ணன் கதைகள் - 3 - திருப்பூர் கிருஷ்ணன்

அந்த மூன்று கத்திகள்

அர்ச்சுனனின் மனம் பாரதப் போரில் வெற்றி பெற்ற மமதையில் திளைத்துக் கொண்டிருந்தது.

"கண்ணன் எனக்குத் தேரோட்டினான். தெய்வம் என் அருகே இதோ இப்போது கூட அமர்ந்து கொண்டிருக்கிறது. என் பக்தியின் வலிமையே வலிமை. என்னை விடக் கண்ணன் மேல் அதிக பக்தி செலுத்துபவர் யார் இருக்கமுடியும்?...."

"அப்படி நீயாக முடிவுசெய்து விட முடியுமா? உன்னை விட என்மேல் கூடுதலாக பக்தி செலுத்துபவர்கள் உலகில் இருக்கக் கூடாதா என்ன?'' கண்ணன் கேட்டான்.

அர்ச்சுனன் திடுக்கிட்டான். 

"என் மனத்தில் ஓடுகிற எந்தச் சிறு நினைவையும் உடனே படித்து விடுகிறானே கண்ணன்!"

"நீ என்னை மனத்தில் வைத்து பூஜிக்கிறாய் அர்ச்சுனா! உன் மனத்திலேயே இருக்கும் எனக்கு உன் நினைவுகளைக் கண்டுகொள்வது சிரமமா?'' கண்ணன் கலகலவென்று நகைத்தான். கண்ணன் மேல் தன்னளவு பக்தி செலுத்துபவர் யாருமில்லை என்ற ஆணவம், தொடர்ந்து அர்ச்சுனன் மனத்தில் பால் ஏடு போல் மிதந்து கொண்டிருந்தது.

உள்ளத்தில் எழும் ஆணவ அழுக்கைப் போக்க பகவானை பக்தி செய்ய வேண்டும். பகவானை பக்தி செய்வது குறித்தே, ஆணவம் எழுமானால் அந்த அழுக்கை எப்படி அகற்றுவது? அர்ச்சுனனின் பக்தி சார்ந்த கர்வத்தை அடக்க வேண்டியது தான். கண்ணன் ஒரு முடிவு செய்தான். 

"அர்ச்சுனா! என் பக்தர்களில் சிலரை நேசிக்கிறேன். சிலரை மதிக்கிறேன். நான் மதிக்கும் பக்தை பிங்கலை இங்கே அஸ்தினாபுரத்தின் அருகிலேயே வசிக்கிறாள். அவளைச் சென்று சந்திப்போம் வா!''

"அதற்கென்ன போகலாம். சில பக்தர்களை நேசிப்பதாகவும் சில பக்தர்களை மதிப்பதாகவும் சொன்னாயே? அந்த இரு பக்தர்களிடையே என்ன வேறுபாடு?''

"சுயநலம் சார்ந்து பிரார்த்திப்பவர்களும் என் பக்தர்கள் தான். அவர்கள் வேண்டியதை அருள்கிறேன். அவர்களை நேசிக்கிறேன். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பக்தி செலுத்துபவர்களும் அபூர்வமாகச் சிலர் இருக்கிறார்கள். அவர்களை நேசிப்பது மட்டுமல்ல, மதிக்கவும் செய்கிறேன். சுயநலமற்ற பக்தர்களால் தான் பகவானுக்கே ஆற்றல் கூடுகிறது. நான் மதிக்கும் மூதாட்டியான பிங்கலையை நாம் சந்திப்பதில் வேறொரு நோக்கமும் இருக்கிறது''.

"என்ன நோக்கம்?'' 

ஶ்ரீமத் பாகவதம் - 146

ஆறாவது ஸ்கந்தம் – பன்னிரண்டாவது அத்தியாயம்

(இந்த்ரனுக்கும் வ்ருத்ராஸுரனுக்கும்  ஸம்பாஷணமும், இந்திரன் வருந்தி வ்ருத்ராஸுரனை வதித்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரீக்ஷித்து மன்னவனே! தன் சரீரத்தைத் துறக்க விரும்பி, யுத்தத்தில் ஜயத்தைக் காட்டிலும் மரணத்தையே மேலாக நினைத்திருக்கின்ற அந்த வருத்ராஸுரன் இங்கனம் பகவானைத் துதித்துச் சூலத்தை ஏந்திக்கொண்டு, ப்ரளய ஜலத்தில் கைடபனென்னும் அஸுரன் பரமபுருஷனை எதிர்த்தாற்போல், இந்த்ரன் மேல் எதிர்த்து வந்தான். வீரனாகிய அந்த அஸுரேந்தரன், ப்ரளய காலாக்னி போலப் பொறுக்க முடியாமல், ஜ்வலிக்கின்ற நுனிகளையுடைய சூலத்தைச் சுழற்றிக் கோபத்துடன் இந்திரன் மேல் எறிந்து ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்து, “பாபிஷ்டனே! மாண்டு போவாய்” என்றான். பிறகு, வஜ்ராயுதத்தை ஏந்திக்கொண்டிருக்கும் தேவேந்திரன் ஆகாயத்தில் சுழன்று கொண்டு, ஸூர்யன் போலவும் நெருப்புத் தணல்கள் போலவும், கண்ணெடுத்துப் பார்க்க முடியாமல் எதிர்த்து வருகின்ற சூலத்தைக் கண்டு சிறிதும் தளர்ச்சியோ, பயமோ இன்றி நூறு கணுக்களையுடைய தன் வஜ்ராயுதத்தினால் அச்சூலத்தையும் வாஸுகியின் உடல் போன்ற அவனது புஜத்தையும் எல்லோரும் ஆச்சரியப்படும்படி அறுத்தான். பிறகு, வ்ருத்ராஸுரன் ஒரு புஜம் அறுப்புண்டு மிகவும் கோபமுற்று வஜ்ராயுதத்தை ஏந்தின இந்த்ரனைக் கிட்டிப் பரிகத்தினால் (இரும்புத் தடியால்) அவ்விந்தரனைக் கன்னத்தில் அடித்துத் தேவலோகத்து யானையான ஐராவதத்தையும் அடித்தான். அங்கனம் அடியுண்ட இந்த்ரனுடைய ஹஸ்தத்தினின்று (கையிலிருந்து) வஜ்ராயுதம் கீழ் விழுந்தது. கூட்டம் கூட்டமாயிருக்கிற தேவதைகள், அஸுரர்கள், சாரணர்கள், சித்தர்கள் அனைவரும் அவ்வஸுரன் செய்த அற்புதமான செயலைக் கண்டு வெகுமதித்தார்கள். மற்றும், அவர்கள் இந்திரனுக்கு நேர்ந்த ஸங்கடத்தைக் கண்டு, ஆ! ஆ! என்று மிகவும் இறைச்சலிட்டார்கள். அப்பொழுது, தேவேந்திரன் சத்ருவின் எதிரில் தன் கையினின்று வஜ்ராயுதம் நழுவினதற்கு லஜ்ஜித்து (வெட்கப்பட்டு), மீளவும் அதை எடுக்காதிருந்தான். அங்கனம் வஜ்ராயுதத்தை எடுக்காதிருக்கின்ற இந்திரனைப் பார்த்து வ்ருத்ராஸுரன் மொழிந்தான். 

திங்கள், 29 ஜூன், 2020

கண்ணன் கதைகள் - 2 - திருப்பூர் கிருஷ்ணன்

காத்திருப்பான் கமலக்கண்ணன்

சோவென்று இடைவிடாத பெருமழை பெய்துகொண்டிருந்தது. பிரளயம் வந்துவிடும்போல் தோன்றியது. கோகுலத்திலிருந்த அத்தனை யாதவர்களும் கோவர்த்தன கிரியின் கீழ் வந்து நின்று கொண்டிருந்தார்கள். 

ஒரு வாரமாக மழை கொட்டித் தீர்க்கிறதே! வானத் துணியில் கிழிசல் ஏற்பட்டு விட்டதா? ஆனால், கனமழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததைப் பற்றி யாதவர்கள் யாரும் கவலைப் படவில்லை. 

அவர்களைக் காக்கத்தான் கண்ணன் இருக்கிறானே! ஒற்றை ஆள்காட்டி விரலால் மலையைத் தூக்கியவாறு நின்று கொண்டிருந்தான் கண்ணன். சக்கரத்தை ஏந்தும் கரம் இப்போது மலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. அவன் முகத்தில் எப்போதும் போல் இனிய புன்முறுவல்.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள், ஆடுமாடுகள் என மலையின் கீழ் ஒதுங்கிய கூட்டம் ஆனந்தமாய் மழையை ரசித்துக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த கோவர்த்தனகிரி தனக்குள் நகைத்துக் கொண்டது! அதன் நகைப்பை உணர்ந்த கண்ணன் மலையிடம் மானசீகமாகப் பேசலானான்:

"என்ன சிரிப்பு? என் விரல் வலிக்குமே என்று உனக்குக் கவலையாக இல்லையா?''

ஶ்ரீமத் பாகவதம் - 145

ஆறாவது ஸ்கந்தம் - பதினோறாவது  அத்தியாயம்

(வ்ருத்ராஸுரன் இந்த்ரனோடு ஸம்பாஷித்தல் (உரையாடுதல்))

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஓ, மன்னவனே! இங்கனம் ஸேனையில் தலைவனாகிய வ்ருத்ரன் தர்மத்தினின்றும் நழுவாத வார்த்தையைச் சொல்லிக்கொண்டிருப்பினும், பயந்து மன நிலைமையற்று ஓடிப்போக முயன்றிருக்கிற அஸூரர்கள் அவனுடைய வசனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பால் அஸுர ச்ரேஷ்டனாகிய அந்த வ்ருத்ராஸுரன் அஸுர ஸைன்யமெல்லாம் காலம் அனுகூலமாயிருக்கப் பெற்ற தேவதைகளால் பீடிக்கப்பட்டு நாதனற்றது (தலைவன், காப்பாற்றுபவன் இல்லாதது) போலப் பயந்தோடுவதைக் கண்டு இந்த்ர சத்ருவாகிய வ்ருத்ரன் அந்த வ்யஸனத்தைப் (கஷ்டத்தைப்) பொறுக்க முடியாமல் மிகவும் கோபித்துத் தன் பலத்தினால் தேவர்களின் ஸேனையைத் தடுத்து விரட்டித் தேவதைகளை நோக்கி இங்கனம் மொழிந்தான். “யுத்தத்தில் முன் நிற்கமாட்டாமல் பயந்தோடிப் பின்புறத்தில் அடிபடுகின்ற இவ்வஸுரர்கள் மாதாவின் விஷ்ட்டை (மலம்) போல் ஒன்றுக்கும் உபயோகப்படாதவர்கள். இவர்களை வதிப்பதனால் உங்களுக்கு என்ன ப்ரயோஜனம்? பயந்தவனை வதிப்பது சூரர்களால் புகழத் தகுந்ததன்று; ஸ்வர்க்கத்தையும் விளைக்காது. ஓ, அற்பர்களே! ஆகையால், உங்கள் மனத்தில் சண்டை செய்ய வேண்டும் என்னும் விருப்பமாவது தேஹ பலமாவது உள்ளதாயின், சப்தாதி விஷயங்களை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பமும் இல்லாதிருக்குமாயின், ஒரு க்ஷணகாலம் மாத்ரம் என்னெதிரில் நிற்பீர்களாக” என்றான். 

மஹாபலமுடைய வ்ருத்ராஸுரன் கோபமுற்றுத் தேவக்கூட்டங்களைத் தன் தேஹத்தினால் (சரீரத்தினால், உடல் உருவத்தினால்) பயப்படுத்திக்கொண்டு பலமுள்ளவளவும் ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்தான். அதனால் ஜனங்களெல்லாரும் பயந்து மூர்ச்சித்தார்கள். அந்த வ்ருத்ராஸுரனுடைய கர்ஜனையைக் கேட்டுத் தேவக் கூட்டங்களெல்லாம் வஜ்ராயுதத்தினால் அடிபட்டாற் போல் மூர்ச்சித்துப் பூமியில் விழுந்தன. யுத்த அரங்கத்தில் (போர்க்களத்தில்) தடுக்க முடியாத கொடிய மதமுடைய அந்த வ்ருத்ராஸுரன் சூலத்தைக் கையில் ஏந்திப் பூமியை நடுங்கச் செய்து கொண்டு நடந்து, மதங்கொண்ட மஹாகஜம் (பெரிய யானை) பனங்காட்டை அழிப்பது போல், அங்கனம் மூர்ச்சித்துக் கண் மூடிக்கொண்டிருக்கிற தேவ ஸைன்யத்தைப் பலமுள்ளவளவும் தன் பாதங்களால் தாக்கினான். தேவேந்த்ரன் அது கண்டு கோபித்து அவன் மேல் பெரிய கதையை ப்ரயோகிக்க, அவ்வஸுரன் வருந்தியும் பொறுக்க முடியாத அக்கதை தன்மேல் வருவதைக் கண்டு அதை அவலீலையாகவே (விளையாட்டாக) இடக்கையினால் பிடித்துக் கொண்டான். அவ்விந்த்ரனின் சத்ரு (எதிரி) பெருங்கோபத்துடன் விரைவாக அடியிட்டுச் சென்று உரக்க ஸிம்ஹநாதம் (சிங்க கர்ஜனை) செய்து அக்கதையினால் இந்த்ரனுடைய வாஹனமாகிய ஐராவதத்தின் தலையில் அடித்தான். யுத்தத்தைப் பார்க்க வந்தவர்கள் அனைவரும் அவன் செய்த கார்யத்தை வெகுமதித்தார்கள். அந்த ஐராவதம் வ்ருத்ராஸுரன் ப்ரயோகித்த கதையால் அடியுண்டு வஜ்ராயுதத்தினால் பிளக்கப்பட்ட பர்வதம் போல் சுழன்று, முகம் சிதறப்பெற்று, மிகவும் வருந்தி ரத்தம் கக்கிக்கொண்டு, இந்த்ரனுடன் ஏழு வில்லளவு தூரம் பின்னே நகர்ந்தது. அவ்வஸுரன் யுத்த தர்மத்தை உணர்ந்த மஹானுபாவன். ஆகையால், வாஹனம் வருந்தித் தானும் மனவருத்தமுற்றிருக்கிற அவ்விந்த்ரன் மேல் மீளவும் கதையை ப்ரயோகிக்காமல் வெறுமனே இருந்தான். 

ஞாயிறு, 28 ஜூன், 2020

கண்ணன் கதைகள் - 1 - திருப்பூர் கிருஷ்ணன்

அவர்களை ஒதுக்காதீர்கள்

உத்தங்க மகரிஷி அந்த வனாந்திரமான பிரதேசத்தில் கால்கடுக்க நடந்து கொண்டிருந்தார். தாகம் அவரை வாட்டி வதைத்தது.

"என்ன தாகம் இது! உயிரே போய்விடும்போல் அல்லவா இருக்கிறது? கண்ணன் அவரைச் சோதிக்கிறானா?

ஆம். உண்மையிலேயே அதுதானே நடக்கிறது!

முனிவர் அல்லவா அவர்? எப்போதாவது யாரேனும் அடியவர்கள் உபசரித்தால் கனிகள், பசும்பால் மட்டும் சாப்பிடுவதுண்டு. மற்றபடி காற்றும் நீருமே ஆகாரம்.

ஆனால், இன்றென்ன இப்படி ஒரு தாகம்! அங்கே ஒரு பொய்கை கூடத் தென்படவில்லை.

உத்தங்கர் தாகத்தின் கொடுமை பொறுக்காமல் காலோய்ந்து உட்கார்ந்து விட்டார். 

"கண்ணா! என் உணர்வுகளையெல்லாம் வென்று விட்டதாக மமதை கொண்டேன். ஆனால், இந்தப் பாழும் தாக உணர்வை வெல்ல முடியவில்லையப்பா! பிராணனே போய்விடும் போல் இருக்கிறதே? கண்ணக் கடவுளே! எங்கிருந்தாவது எனக்கு ஒரு குவளை நீர் கிடைக்க நீ அருளக் கூடாதா?" வாய்விட்டுக் கதறியும் கூட அந்தக் கதறல் ஏன் அவன் செவியை எட்டவில்லை?

அஸ்தினாபுரத்தில் பாஞ்சாலியின் கதறல் கேட்டு, துவாரகையிலிருந்து சேலை வழங்கியவன், இன்று தன் கதறலைக் கேட்டு ஒரு குவளை தண்ணீர் தருவதில் என்ன சிரமம்? 

கண்ணனின் கருணைக் கடல் வற்றிவிட்டதா?

பாஞ்சாலியைப் பற்றி நினைத்ததும் உத்தங்கருக்கு பாரதப் போரின் போது, கண்ணன் அவருக்கு வழங்கிய ஒரு வாக்குறுதி ஞாபகத்தில் வந்தது.

அதன்படி இப்போது கண்ணன் அவருக்குத் தண்ணீர் தந்ததாக வேண்டுமே? பரம்பொருள் வாக்கு தவறுமா என்ன?

ஶ்ரீமத் பாகவதம் - 144

ஆறாவது ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

(இந்திரன் ததீசியுடைய எலும்புகளால்  வஜ்ராயுதத்தை உருவாக்கிக்கொண்டு வ்ருத்ராஸுரனோடு யுத்தம் செய்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஜகத்ரக்ஷகனாகிய பகவான், இங்கனம் இந்திரனுக்குக் கட்டளையிட்டுத் தேவதைகள் பார்த்துக்கொண்டேயிருக்கையில், அவ்விடத்திலேயே மறைந்தான். பிறகு, தேவதைகள் பகவான் மொழிந்தபடியே ததீசி முனிவரிடம் போய், அவருடைய அங்கங்களைக் கொடுக்கும்படி வேண்டினார்கள். பாரதனே! அதர்வ முனிவருடைய புதல்வராகிய அந்தத் ததீசி முனிவர், மஹானுபாவர். அவர் செயல்களெல்லாம் தீர்ந்து ம்ருத்யுவை (மரணத்தை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆகையால், அவர் தேவதைகளின் வசனத்தைக் கேட்டு ஸந்தோஷம் அடைந்து புன்னகை செய்து “ஓ ,தேவதைகளே! ப்ராணிகளுக்கு மரணகாலத்தில் பொறுக்கமுடியாத வருத்தம் உண்டாகுமென்றும், அக்காலத்தில் அவர்க்குப் ப்ரஜ்ஞையும் (நினைவும்) தவறிப்போகும் என்றும் நீங்கள் அறியீர்களோ? ஜீவிக்க வேண்டுமென்று விரும்பும் ப்ராணிகளுக்குத் தேஹம் மிகவும் அன்பிற்கிடமாயிருக்குமல்லவா? அங்கனம் இஷ்டமான தேஹத்தை நேரே ஸ்ரீமஹாவிஷ்ணு வந்து யாசித்தாலும் எவன் தான் கொடுக்க உத்ஸாஹப்படுவான்? ஆகையால், நீங்கள் தான் என் தேஹத்தை வாய் கூசாமல் எப்படிக் கேட்கலாம்? நான்தான் எப்படி கொடுப்பேன்?” என்றார். அதைக் கேட்ட தேவதைகள், அம்முனிவரை நோக்கி  “ஓ, அந்தணர் தலைவரே! உம்மைப்போன்ற பெரியோர்கள் ப்ராணிகளிடத்தில் மன இரக்கமுடையவர்கள். அழகிய புகழுடைய அனைவராலும் உங்கள் நடத்தைகள் புகழத்தக்கவைகளாய் இருக்கின்றன. உங்களுக்கு எது துறக்க முடியாதது? தன் ப்ரயோஜனத்தை எதிர்பார்க்கிறவன், பிறனுடைய ஸங்கடத்தை (கஷ்டத்தை) உணரமாட்டான். உணர்வானாயின் யாசிக்கவே மாட்டான். பிறர் தன்னை யாசிப்பார்களாயின், கொடுக்க வல்லவன் இல்லையென்று சொல்லவே மாட்டான்” என்றார்கள். அதைக் கேட்ட மஹர்ஷியும், “தேவதைகளே, உங்களிடத்தில் தர்மத்தைக் கேட்க விரும்பி நான் உங்களிடம் அப்படி மொழிந்தேனன்றி வேறில்லை. இத்தேஹம் தனக்குக் காரணமான ப்ராரப்தகர்மம் (புண்ய பாப கர்மங்கள்) தீர்ந்தமையால் என்னை விட முயன்றிருக்கின்றது. உங்களுக்கு ப்ரியமான இத்தேஹத்தை நானும் அபிமானத்துடன் துறக்கிறேன். ஓ, நாதர்களே! நிலையற்றதாகிய இச்சரீரத்தினால் ப்ராணிகளிடத்தில் தயை செய்து, தர்மத்தையாவது, புகழையாவது ஸாதிக்கமாட்டானாயின் அவனைப்பற்றி ஸ்தாவரங்களும் சோகிக்கும். ப்ராணிகளின் வருத்தங்கண்டு வருந்துவதும், ஸந்தோஷம் கண்டு ஸந்தோஷிப்பதுமாய் இருக்கையாகிய இவ்வளவே அழிவற்ற தர்மமென்று புண்ய ச்லோகரான பெரியோர்கள் நிச்சயித்திருக்கிறார்கள். தேஹங்கள் நாய், நரி முதலியவற்றிற்கு ஆஹாரமாக வேண்டியவைகள்; பிறர்க்கு உபயோகப்பட வேண்டியவைகள்; நிலையற்றவைகள். அவற்றால் ஆத்மாவுக்கு ஆகவேண்டிய உபயோகம் எதுவுமே இல்லை. மனுஷ்யர்கள் அத்தகைய தேஹங்களாலும் பிள்ளை, பேரன் முதலிய பந்துக்களாலும் பிறர்க்கு உதவி செய்யாமல் இருப்பார்களாயின், அதைக்காட்டிலும் வேறு வருத்தமே இல்லை. ஆ! இப்படியும் செய்வார்களோ?” என்றார். உண்மையை உணர்ந்த அம்முனிவர், இங்கனம் நிச்சயித்துக்கொண்டு இந்திரியங்களையும், மனத்தையும், புத்தியையும் அடக்கி ஆத்மாவைப் பரமாத்மாவினிடத்தில் ஸமர்ப்பித்து கர்மபந்தங்களெல்லாம் தீரப்பெற்று, மேலான யோகமார்க்கத்தில் இறங்கித் தன் தேஹத்தைத் துறந்தார். 

ஶ்ரீமத் பாகவதம் - 143

ஆறாவது ஸ்கந்தம் - ஒன்பதாவது அத்தியாயம்

(இந்த்ரன் விச்வரூபனை வதித்தலும், த்வஷ்டா வ்ருத்ராஸுரனைப் பிறப்பிக்க அவனிடத்தில் தேவதைகள் பயந்து ஸ்ரீமஹாவிஷ்ணுவை ஸ்தோத்ரம் செய்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பரதவம்சாலங்காரனே அவ்விச்வரூபனுக்கு ஸோமபீதமென்றும், ஸுராபீதமென்றும், அன்னாதமென்றும் மூன்று தலைகள் இருந்தனவென்று வேதத்தில் கேட்டிருக்கிறோம். அவனுக்குத் தேவதைகள் தந்தை முறையில் சேர்ந்தவர்கள். அவ்விச்வரூபன் தேவதைகளுக்கு ஹவிர்ப்பாகம் (யாகங்களில் தேவதைகளுக்காக அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருள்) கொடுக்கும் பொழுது இந்திரனுக்கு இதுவென்றும், அக்னிக்கு இதுவென்றும் வணக்கத்துடன் ப்ரத்யக்ஷமாக உரக்க மொழிந்தான். அவனே மாதாவிடத்திலுள்ள ஸ்னேஹத்தினால் (நட்பினால்), மாமன்மார்களான அஸுரர்களுக்கும், தேவதைகளுக்குத் தெரியாதபடி ஏகாந்தமாகவே ஹவிர்ப்பாகம் கொடுத்து அதை அவர்களுக்குச் சேர்ப்பித்தான். அவன் கபடமாகத் தேவதைகளை வஞ்சித்துச் செய்த கார்யத்தை இந்திரன் கண்டு இவன் இன்னம் என் செய்வானோவென்று பயந்து சீக்கிரமாக அவன் தலைகளை அறுத்தான். அவனுடைய ஸோமபீதமென்னும் தலை அறுப்புண்டு கபிஞ்சலமென்னும் பக்ஷியாயிற்று. ஸுராபீதமென்னும் தலை கலவிங்கமென்னும் பக்ஷியாயிற்று. அன்னாதமென்னும் தலை தித்திரியென்னும் பக்ஷியாயிற்று. விச்வரூபன் ப்ராஹ்மணனாகையால் அவனைக் கொன்றமையால் ப்ரஹ்மஹத்யா (ப்ராஹ்மணனைக் கொன்ற) ரூபமான பாபம் உருவத்துடன் வந்து நிற்க, தேவேந்திரன் அதைப் போக்கிக் கொள்ள வல்லனாயினும் அஞ்சலியினால் அதை ஏற்றுக்கொண்டான். அவ்விந்தரன் ஸம்வத்ஸரம் வரையில் அப்படியேயிருந்து அதன் பிறகு ஜன அபவாதம் (மக்கள் சொல்லும் பழி) தீரும் பொருட்டுத் தன் பாபத்தை நான்கு பாகங்களாகப் பிரித்து பூமி, ஜலம், வ்ருக்ஷம், ஸ்த்ரீகள் ஆகிய நான்கு இடங்களில் ஒவ்வொன்றில் ஒவ்வொரு பாகமாக வைத்தான். அவற்றில் பூமி, பள்ளங்கள் தாமே மறைய வேண்டுமென்று வரம் பெற்று, ப்ரஹ்மஹத்யையின் (ப்ராஹ்மணனைக் கொன்றதன்) நான்கிலொரு பாகத்தை ஏற்றுக்கொண்டது. அந்த ப்ரஹ்மஹத்யையே (ப்ராஹ்மணனைக் கொன்றதே) பூமியில் களர்நிலமாய்ப் (ஒன்றும் விளையாத நிலமாகப்) புலப்படுகின்றது. வ்ருக்ஷங்கள் எத்தனை தரம் வெட்டினாலும் தளிர்க்க வேண்டுமென்னும் வரம்பெற்று அந்த ப்ரஹ்மஹத்யையில் (ப்ராஹ்மணனைக் கொன்றதில்) ஒரு பாகத்தை ஏற்றுக்கொண்டன. அதுவே அந்த வ்ருக்ஷங்களில் பிசின் (கோந்து) ரூபமாயப் புலப்படுகின்றது. ஸ்த்ரீகள், ப்ரஸவம் வரையிலும் ஸம்போகிக்கையாகிற (ஆணுடன் உடல் உறவு கொள்ளும்) வரத்தைப் பெற்று ப்ரஹ்மஹத்யையின் (ப்ராஹ்மணனைக் கொன்றதன்) ஒரு பாகத்தை ஏற்றுக்கொண்டார்கள். அந்தப் பாபமே அவர்களிடத்தில் மாதந்தோறும் ரஜோரூபமாய்ப் புலப்படுகின்றது. ஜலம் தான் எங்கும் நிறைந்திருக்கையாகிற வரத்தைப் பெற்று ப்ரஹ்மஹத்யையின் (ப்ராஹ்மணனைக் கொன்ற) ஒரு பாகத்தை ஏற்றுக்கொண்டது. அந்த பாபமே ஜலத்தில் நீர்க்குமிழியாகவும், நுரையாகவும் புலப்படுகின்றது. 

சனி, 27 ஜூன், 2020

ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாம மகிமை! - பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

“நம் பாரத இதிகாசச் செல்வங்களுள் ஒன்றான மகாபாரதம், ஐந்தாவது வேதமாகப் போற்றப் படுகிறது. தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம் என்னும் சதுர்வித புருஷார்த்த சாதனமாக இதை அளித்துள்ளார் வேத வியாச மகரிஷி” என்றார் தமது சொற்பொழிவில் பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா.

பிரஸ்தான த்ரயத்தில் ஒன்றாகப் புகழ்பெற்ற பகவத் கீதை கூறும் பரமார்த்தத்தையே ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்திரம் விளக்கமாகக் கூறுகிறது. இந்த ஆயிரம் நாமங்களின் படைப்பு இக, பர நலன்களை அளிக்கக்கூடிய ஒரு மஹா மந்திரப் பூங்கொத்து. மகாபாரதத்தின் அனுசாசனிக பர்வத்தின் உட்பகுதியான இந்த இரத்தின மஞ்சரி, பீஷ்மாச்சாரியார் மூலமாக யுதிஷ்டிரனுக்கு உபதேசிக்கப்பட்டது.

யுத்த முடிவில், யுதிஷ்டிரனுக்கு பட்டாபிஷேகம் செய்விக்கப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணனை தரிசிக்க, யுதிஷ்டிரன் சென்றான். அச்சமயத்தில் பரமாத்மா தியானத்தில் ஆழ்ந்திருக்கக் கண்டு, யோகீஸ்வரனை வணங்கி நின்றான் யுதிஷ்டிரன். ஸ்ரீகிருஷ்ணன் தியானத்திலிருந்து வெளிவந்த பின், தர்மபுத்திரன், அவரைப் பார்த்து “ஸ்வாமி! 'யோகி ஹ்ருத் த்யான கம்ய'மான நீர் தற்போது யாரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டான்.

அப்போது ஸ்ரீ கிருஷ்ணன், “அம்புப் படுக்கையில் அணையும் அக்னி போலிருக்கும் பீஷ்ம பிதாமகர் என்னை தியானிக்கிறார். அதனால் என் மனம் பீஷ்மரிடம் சென்று விட்டது” என்றான். மேலும், “குரு வம்சத்தின் பிதாமகரும், சத்சரித்திரம் கொண்டவருமான அந்த மகாத்மா, நான்கு வேதங்களுக்கும், கால ஞானத்துக்கும் நிதி. ஆகவே, அந்த மகானுபாவரிடமிருந்து சகல தர்மங்களையும் அறிந்து கொள்வது உன் கடமை” என்று எடுத்துக் கூறி, யுதிஷ்டிரனோடு சேர்ந்து ஸ்ரீ கிருஷ்ணன் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் சென்றான்.

பீஷ்மர், மகரிஷிகள் கூட்டத்தால் சூழப்பட்டு, பாணங்கள் ஏற்படுத்திய படுக்கையின் மேல் பிரகாசமான ஒளி போல் படுத்திருந்தார். முகுந்தனைக் கண்டவுடன் கங்கா புத்திரன் கைகூப்பினார். குசலம் விசாரித்தபின், “தர்ம விஷயங்களை உன் ஆசீர்வாத பலத்தால் யுதிஷ்டிரனுக்கு கூறுவதற்கு நான் தயார். ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். சர்வ வேதங்களுக்கும் ஜகத் குருவாகிய நீ இதை உபதேசிக்காமல் எனக்கு இந்தப் பொறுப்பை அளித்திருப்பதன் உட்பொருள் என்ன?” என்று வினவினார் பீஷ்மாச்சாரியார்.

ஶ்ரீமத் பாகவதம் - 142

ஆறாவது ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம்

(விச்வரூபன் மஹேந்திரனுக்கு நாராயண கவசத்தை உபதேசித்தல்)

மன்னவன் சொல்லுகிறான்:- ஆயிரங்கண்ணனாகிய தேவேந்திரன் எந்த வித்யையினால் பாதுகாக்கப்பட்டுச் சத்ரு ஸைன்யங்களை எல்லாம் விளையாடுவதுபோல் வென்று மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவாயிருக்கையாகிற ஐச்வர்யத்தை அனுபவித்தானோ, அப்படிப்பட்ட நாராயண கவசமென்னும் மந்திர வித்யையை எனக்கு உபதேசிப்பீராக. இதை ஜபித்தல்லவோ தேவேந்திரன் யுத்தத்தில் சத்ருக்களை வென்றான்?

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புரோஹிதனாய் வரிக்கப்பட்ட விச்வரூபன் சத்ருக்களை ஜயிக்க உபாயம் என்னவென்று வினவுகிற தேவேந்திரனுக்கு நாராயண கவசமென்னும் மந்திரத்தை உபதேசித்தான். அதை உனக்கு உபதேசிக்கிறேன். மனவூக்கத்துடன் கேட்பாயாக.

 [கீழே சொல்லப்படும் மந்த்ரம், அதை ஜபிக்கும் முறை, மந்த்ரத்தின் பொருள் ஆகியவற்றை ஸத்குரு மூலம் உபதேசிக்கப்பெற்று அதன்படி அனுஸந்திக்க வேண்டும்] 

விச்வரூபன் சொல்லுகிறான்:- ஸ்நானாதி கர்மங்களை முடித்துக்கொண்டு பரிசுத்தனாய்க் கைகால்களை அலம்பிக் கொண்டு கையில் தர்ப்ப, பவித்ரம் அணிந்து வடக்கு முகமாய் உட்கார்ந்து ஆசமனம் செய்து மௌன விரதத்துடன் திருவஷ்டாக்ஷரம், திருத்வாதசாக்ஷரி, விஷ்ணுஷடக்ஷரி இம்மந்த்ரங்களால் அங்கந்யாஸமும், கரந்யாஸமும் செய்து ஆத்யாத்மிகம் (சரீரத்திற்கு ஏற்படும் தலைவலி, சளி முதலிய நோய்கள் மற்றும் மன நோய்களான காமம், கோபம், பயம் முதலியன)  ஆதிதெய்விகம் (குளிர், சூடு, மழை முதலியவற்றால் ஏற்படும் துன்பங்கள்), ஆதிபௌதிகம் (ம்ருகம், பறவை, மனிதர் முதலியவற்றால் வரும் துன்பங்கள்) என்று மூன்று வகையான பயங்களில் (அச்சங்களில்) ஏதேனுமொன்று நேருமாயின், ஸ்ரீமந்நாராயணனை இடைவிடாமல் த்யானித்து அவனை விளங்க வெளியிடுகிற இந்த நாராயண கவசத்தை ஜபிக்க வேண்டும். பாதங்கள், முழந்தாள்கள், துடைகள், வயிறு, ஹ்ருதயம், மார்பு, முகம், தலை ஆகிய இவ்வெட்டு இடங்களிலும் பாதம் முதல் தலை வரையில் க்ரமமாகவாவது தலை முதல் கால் வரையில் மாற்றியாவது திருவஷ்டாக்ஷரத்தின் எட்டு அக்ஷரங்களையும், முதலில் ப்ரணவத்தையும், கடைசியில் நமஸ்ஸையும் கூட்டிக்கொண்டு ந்யாஸம் செய்யவேண்டும். பிறகு திருத்வாதசாக்ஷரியால் கரந்யாஸம் செய்யவேண்டும். ப்ரணவம் முதல் யகாரம் வரையிலுள்ள பன்னிரண்டு அக்ஷரங்களையும் இரண்டு கைகளிலுமுள்ள ஆள்காட்டிவிரல் முதல் நான்கு விரல்களும், கட்டை விரல்களின் இரண்டு கணுக்களும் ஆகிய பன்னிரண்டு ஸ்தானங்களிலும் ந்யாஸம் செய்யவேண்டும். பிறகு விஷ்ணு ஷடாக்ஷரியால் ந்யாஸம் செய்ய வேண்டும். ஹ்ருதயத்தில் ஓங்காரத்தையும், தலையில் விகாரத்தையும், சிகையில் ணகாரத்தையும், கண்களில் வேகாரத்தையும், ஸந்திகளெல்லாவற்றிலும் நகாரத்தையும், விஸர்க்கத்தோடு கூடின மகாரத்தைக் கிழக்கு முதலிய எல்லாத் திக்குக்களிலும் ந்யாஸம் செய்யவேண்டும். இம்மூன்று மந்திரங்களால் அங்கந்யாஸ, கரந்யாஸங்களைச் செய்த புருஷன் மந்திர மூர்த்தியாகி, மந்த்ர ஜபத்திற்கு உரியவனாவான். பிறகு ஷாட்குண்ய பூர்ணனான பரமபுருஷனை த்யானிக்க வேண்டும். எத்தகைய உருவத்துடன் த்யானித்தால் தன் மனம் தெளிவு பெறுமோ, அத்தகைய உருவத்துடன் த்யானிக்க வேண்டும். அனந்தரம் ஜ்ஞானம், ப்ரபாவம், நற்செயல் இவற்றிற்கு இருப்பிடமான இம்மந்திரத்தைப் படிக்க வேண்டும். ஓம்! தன்னைப் பற்றினாருடைய வருத்தங்களைப் போக்கும் தன்மையுள்ள பரமபுருஷன் என்னை எல்லா இடங்களிலும் காப்பானாக. கருத்மானுடைய (கருடனுடைய) முதுகின்மேல் பாதார விந்தங்களை வைத்துக்கொண்டு, சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை பாணம், தனுஸ்ஸு, பாசம் ஆகிய எட்டு ஆயுதங்களையும் எட்டுப் புஜங்களால் தரித்து யானையைக் காக்க வந்தவனும், எட்டுக் குணங்களுடையவனுமாகிய பரமபுருஷன் என்னைக் காக்க வேண்டும்.

வியாழன், 25 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 141

ஆறாவது ஸ்கந்தம் – ஏழாவது அத்தியாயம்

(ப்ருஹஸ்பதி தேவதைகளைத் துறந்ததின் காரணத்தையும், தேவதைகள் விச்வரூபனைப் புரோஹிதனாக ஏற்படுத்திக் கொண்டதையும் கூறுதல்)

மன்னவன் சொல்லுகிறான்:- ப்ருஹஸ்பதி, தேவதைகளுக்கு ஆசார்யனல்லவா? அவர் என்ன காரணத்தினால் தேவதைகளைத் துறந்தார்? சிஷ்யர்களான தேவதைகள் தமது ஆசார்யனாகிய ப்ருஹஸ்பதி விஷயத்தில் என்ன அக்ரமம் செய்தார்கள் (முறை தவறி நடந்தார்கள்) மஹானுபாவரே! அதைச் சொல்வீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மூன்று லோகங்களுக்கும் ப்ரபுவாகிய தேவேந்திரன் ஒருகாலத்தில் கொலுமண்டபத்திற்கு வந்தான். மன்னவனே! தேவதைகளும், அஷ்ட வஸுக்களும், ஏகாதச ருத்ரர்களும், த்வாதச ஆதித்யர்களும், ரிஷிகளும், விச்வதேவர்களும், ஸாத்யர்களும், அச்வினி தேவதைகளும் அவனைச் சுற்றிச் சூழ்ந்திருந்தார்கள். ஸித்தர்களும், சாரணர்களும், கந்தர்வர்களும் அவனைப் பணிந்தார்கள். வேதத்தை ஓதுகின்ற முனிவர்கள் அவனைத் துதித்தார்கள். வித்யாதரர்களும் அப்ஸரஸ்த்ரீகளும் கின்னரர்களும், பதகர்களும், உரகர்களும் அவனை அழகாகப் பாடினார்கள். சந்தர மண்டலம் போல் அழகிய வெண் கொற்றக்குடை அவனுக்குப் பிடித்தார்கள். சாமரம், விசிறி முதலிய மற்றும் பல மஹாராஜ சின்னங்களும் நிறைந்திருந்தன. அவன் தன் பக்கத்தில் பாதி ஆஸனத்தில் உட்கார்ந்திருக்கின்ற சசீதேவியுடன் மிகவும் திகழ்வுற்றிருந்தான். அப்பொழுது, ப்ருஹஸ்பதி அக்கொலுமண்டபத்திற்கு வந்தார். அவர் தேவதைகளுக்கும், தேவேந்திரனுக்கும் கௌரவிக்கத்தகுந்தவர்; மேலான ஆசார்யன்; தேவதைகளும், அஸுரர்களும் விழுந்து வணங்கும்படியான பெருமையை உடையவர்; முனிவர்களில் தலைவர். அத்தகைய ப்ருருஹஸ்பதி ஸபைக்கு வரும்பொழுது அந்த தேவேந்திரன் எழுந்திருப்பது, வணங்குவது, ஆஸனமளிப்பது முதலிய உபசாரங்கள் எவையும் செய்யாமல் ஸபையில் அவர் வந்திருப்பதைப் பார்த்தும் ஐச்வர்ய மதத்தினால் (ஆளுமை, செல்வச் செழிப்பு ஆகியவற்றால் உள்ள அகந்தையால்) பெரியோர்களின் மார்க்கத்தைக் கடந்து ஸிம்ஹாஸனத்தினின்று சிறிதும் அசையாமலேயிருந்தான். அப்பொழுதே, வித்வானும் ஸமர்த்தருமாகிய ப்ருஹஸ்பதி, இவன் ஐச்வர்ய மதத்தினால் (ஆளுமை, செல்வச் செழிப்பு ஆகியவற்றால் உள்ள அகந்தையால்) கலக்கமுற்றிருக்கிறான் என்பதை அறிந்து,  உடனே பேசாமல் புறப்பட்டுத் தன் க்ருஹத்திற்குப் போனார். அப்பொழுதே அந்த இந்தரன் ஆசார்யனை அவமதித்தோம் என்பதை அறிந்து ஸபையில் தன்னைத் தானே வெறுத்துக்கொண்டான் “ஆ எனக்கு என்ன கஷ்டம் நேர்ந்தது? நான் தப்புக் கார்யம் செய்தேனல்லவா? நான் ஐச்வர்யத்தினால் மதி இழந்து அற்ப புத்தியாகி (புத்தி குறைந்தவனாய்), ஸபையில் ஆசார்யனை அவமதித்தேன். விவேகமுடையவனாய் இருப்பானாயின், ஸத்யலோகாதிபதியான ப்ரஹ்மதேவனுடைய ஐச்வர்யத்தையும் எவன்தான் ஆசைப்படுவான்? நான் தேவதைகளுக்கு ப்ரபுவாயிருந்தும், ஐச்வர்ய மதத்தினாலல்லவோ (ஆளுமை, செல்வச் செழிப்பு ஆகியவற்றால் உள்ள அகந்தையால் அல்லவோ) அஸுரர்களுக்கு இயற்கையில் ஏற்பட்ட மோஹத்தில் (மயக்கத்தில்) தள்ளுண்டேன். ராஜ ஸிம்ஹாஸனத்தில் உட்கார்ந்திருக்கும் ப்ரபு ஒருவர்க்கும் எழுந்து மர்யாதை செய்ய வேண்டியதில்லை என்று சிலர் சொல்லுவார்கள். அவர்கள் தர்மஸூக்ஷ்மம் அறிந்தவரல்லர். அவர்கள் தவறான வழியை உபதேசிப்பவர்களே. ஆகையால், அவர்கள் நரகத்தில் விழுவார்களென்பது நிச்சயம். அவர்களுடைய வாக்யத்தை நம்புகிறவர்கள் கல் ஓடங்கள் (கல்லால் ஆன படகு) போல் அமிழ்ந்து போவார்கள். 

புதன், 24 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 140

ஆறாவது ஸ்கந்தம் – ஆறாவது அத்தியாயம்

(தக்ஷருடைய பெண்களின் வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தக்ஷப்ரஜாபதி மீளவும் ப்ரஹ்மதேவனால் ஸமாதானம் செய்யப்பெற்று, தன் பார்யையிடத்தில் அறுபது பெண்களைப் பெற்றார். அவர்களெல்லோரும் தந்தையிடத்தில் மிகுந்த அன்புடையவர்கள். அவர்களில் தர்மர்க்குப் பத்துப் பெண்களையும். கச்யப ப்ரஜாபதிக்குப் பதின்மூன்று பெண்களையும், சந்த்ரனுக்கு இருபத்தேழு பெண்களையும், ருத்ரன் அங்கிரஸ்ஸு க்ருபாயவர் இவர்களுக்கு இரண்டிரண்டு பெண்களையும், தார்க்ஷயனுக்கு மற்ற பெண்களையும் கொடுத்தார். இந்தத் தக்ஷரது பெண்களின் நாமங்களையும், அவர்களுடைய குழந்தைகளின் நாமங்களையும் சொல்லுகிறேன், கேள். 

இவர்களுடைய பிள்ளை பேரன் முதலிய ஸந்ததியால் மூன்று லோகங்களும் நிறைந்திருக்கின்றன. தர்மருடைய பத்னிகள் பானு, லம்பை, ககுபு, ஜாமி, வில்வை, ஸாத்யை, மருத்வதி, வஸு, முஹூர்த்தை, ஸங்கல்பை என்னும் பேருடையவர்கள். அவர்களுடைய பிள்ளைகளைச் சொல்லுகிறேன், கேள். 

பானுவுக்கு வேதனென்றும், ருஷபனென்றும் இரண்டு பிள்ளைகள். ருஷபனுடைய பிள்ளை இந்தரஸேனன். ஓ மன்னவனே! லம்பையின் பிள்ளை வித்யோதன். அவனுடைய பிள்ளை ஸ்தனயித்னு. ககுபின் பிள்ளை கீகடன். அவன் பிள்ளை ஸங்கடன். ஜாமியின் பிள்ளைகள் பூமியிலுள்ள துர்க்கங்களுக்கு (கோட்டைகளுக்கு) அபிமானி தேவதைகள். அவர்களுக்கு ஸ்வர்க்கனென்றும், நந்தியென்றும் இரண்டு பிள்ளைகள். விச்வையின் பிள்ளைகள் விச்வதேவர்கள். அவர்களுக்கு ஸந்ததி இல்லையென்று சொல்லுகிறார்கள். ஸாத்யையின் பிள்ளைகள் ஸாத்யரென்னும் தேவகணங்கள். அவர்களுடைய பிள்ளை அர்த்தஸித்தன். மருத்வதிக்கு மருத்வானென்றும், ஜயந்தனென்றும் இரண்டு பிள்ளைகள். ஜயந்தன் பகவானுடைய அம்சம். இவனை உபேந்தரனென்று சொல்லுகிறார்கள். முஹூர்த்தைக்கு மௌஹூர்த்திகரென்னும் தேவகணங்கள் பிறந்தன. அவர்கள் முஹூர்த்தாபிமானி தேவதைகள்; தத்தம் முஹூர்த்தத்திற்கு ஏற்பட்ட ஸுகதுக்காதி பலன்களை ப்ராணிகளுக்கு விளைக்கின்றார்கள். ஸங்கல்பையின் பிள்ளை ஸங்கல்பன். அவனுடைய பிள்ளை காமன். வஸுவின் பிள்ளைகள் அஷ்டவஸுக்கள். அவர்களின் நாமங்களைக் கேள். 

செவ்வாய், 23 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 139

ஆறாவது ஸ்கந்தம் – ஐந்தாவது அத்தியாயம்


(தக்ஷர் தன் பிள்ளைகளை நாரதர் கெடுத்தாரென்று அவரைச் சபித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- தக்ஷப்ரஜாபதி பகவானுடைய ஸங்கல்பத்தினால் தூண்டப்பட்டுப் பஞ்சஜனருடைய புதல்வியை மணம்புரிந்து அவளிடத்தில் ஹர்யச்வரென்னும் பேருடைய பதினாயிரம் பிள்ளைகளைப் பெற்றார். மன்னவனே! அந்தத் தக்ஷருடைய பிள்ளைகள் அனைவரும் கலந்து ஒரே தர்மத்தை ஆசரிக்கும் தன்மை உடையவர்கள். அவர்கள் தந்தையால் ப்ரஜைகளைப் படைக்கும்படி நியமிக்கப்பெற்று மேற்கு திக்குக்குப் போனார்கள். ஸிந்து நதி ஸமுத்ரத்தில் போய் கலக்குமிடத்தில் நாராயண ஸரஸ்ஸென்று ஓர் புண்யதீர்த்தம் இருக்கின்றது. அது மிகுந்த பெருமையை உடையது. முனிவர்களும், ஸித்தர்களும் அதை ப்ரீதியுடன் பணிகின்றார்கள். ஹர்யச்வர்கள் அந்தப்புண்ய தீர்த்தத்தைத் தொட்டமாத்திரத்தில் மன மலங்களெல்லாம் கழிந்து பரமஹம்ஸர்கள் ஆசரிக்கும் தர்மத்தில் மதி (புத்தி) செல்லப் பெற்றார்கள். ஆயினும், அவர்கள் தந்தையாகிய ப்ராசேஸருடைய கட்டளைக்கு உட்பட்டுக் கடுமையான தவத்தை நடத்தினார்கள். இங்கனம் ப்ரஜைகளின் அபிவ்ருத்திக்காக (மேன்மேலும் வளர) யத்னஞ் (முயற்சி) செய்கிற அந்த ஹர்யச்வர்களைத் தேவரிஷியாகிய நாரதர் கண்டார். அவர் அவர்களை நோக்கி “ஓ ஹர்யச்வர்களே! நீங்கள் பாலர்களாய் இருக்கின்றீர்கள். உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லையே. பூமியின் முடிவை அறியாமல் ஏன் ப்ரஜைகளைப் படைக்கத் தொடங்கினீர்கள். அதை அறிவீர்களாயின் நீங்கள் இச்செயலில் முயற்சி கொள்ள மாட்டீர்கள். ஜகத்திற்கெல்லாம் ஈச்வரனொருவனே நியாமகன் (நியமிப்பவன்) என்பதையும், ஹ்ருதய பிலத்தினின்று (இதய குஹையிலிருந்து) வெளிப்பட்டு வர உபாயம் ஏற்படாமையையும், புத்தியாகிற பெண்மணியின் பலவாறான தோற்றங்களையும், சபலமான (பலத்துடன் கூடிய) அப்புத்தியுடன் கலந்த ஜீவனுடைய நிலைமையையும், ஸ்ருஷ்டி (படைப்பு), ஸம்ஹாரங்களாகிற (அழிப்பு) இரண்டு கரைகளும் நிறைந்து பாய்கின்ற மாயையாகிற நதியையும், அற்புதமான இருபத்தைந்து தத்வங்கள் அடங்கினதும் ஜீவனோடு கூடியதுமாகிய சரீரமாகிற க்ருஹத்தையும், ஸம்ஸாரபந்தம் மோக்ஷம் இவைகளாகிற இரண்டு இறகுகளையுடைய ஸர்வேச்வரனாகிற ஹம்ஸத்தையும், சிறிய கத்திகளாலும், வஜ்ரங்களாலும் நிர்மிக்கப்பட்டுத் திடமும் (உறுதியானதும்) கூரியதும் சுற்றிக்கொண்டே இருப்பதுமாகிய காலசக்ரத்தையும், எல்லாம் உணர்ந்து ஜன்மங்கள் தோறும் தந்தையைப் போல் ஹிதத்தையே உபதேசிக்கின்ற சாஸ்த்ரத்தின் அனுகூலமான கட்டளையையும் அறியாமல் நீங்கள் ஸ்ருஷ்டிக்கு யத்னம் (முயற்சி) செய்கிறீர்கள். இப்படியும் செய்வார்களோ? ஆ!” என்று மொழிந்தார்.

திங்கள், 22 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 138

ஆறாவது ஸ்கந்தம் – நான்காவது அத்தியாயம்

(தக்ஷர் ப்ரஜைகளைப் படைக்க விரும்பி பகவானை ஆராதித்தல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹர்ஷி! ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் நடந்த தேவர்கள், அஸுரர்கள், மனுஷ்யர்கள், நாகர்கள், மிருகங்கள், பக்ஷிகள் இவர்களின் ஸ்ருஷ்டி க்ரமத்தைச் சுருக்கமாகச் சொன்னீர். பரமபுருஷனாகிய பகவான் ப்ராணிகளை எந்தச் சக்தியினால் எப்படி ஸ்ருஷ்டித்தானோ, அதை விரிவாக அறிய விரும்புகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ரசேதஸர்களென்கிற ப்ராசீனபர்ஹியின் பிள்ளைகள் பதின்மர் ஸமுத்ர (கடல்) மத்யத்தினின்று (நடுவிலிருந்து) கரையேறிப் பூமியெல்லாம் வ்ருக்ஷங்கள் (மரங்கள்) நிறைந்திருக்கக் கண்டார்கள். அவர்கள் வ்ருக்ஷங்களின் மேல் கோபித்துக்கொண்டு தவத்தினால் கோபம் ஜ்வலிக்கப்பெற்று அந்த வ்ருக்ஷங்களையெல்லாம் தஹிக்க விரும்பி முகத்தினின்று வாயுவையும், அக்னியையும் ஸ்ருஷ்டித்தார்கள். கௌரவச்ரேஷ்டனே! அந்த வாயுவும், அக்னியும் சேர்ந்து வ்ருக்ஷங்களையெல்லாம் தஹிக்கையில், மஹானுபாவனாகிய சந்தரன் அதைக் கண்டு அவரது கோபத்தை அணைக்க முயன்று “ஓ மஹாபாக்ய சாலிகளே! வ்ருக்ஷங்கள் மன இரக்கத்திற்கிடமானவை. இவற்றிற்கு நீங்கள் த்ரோஹம் (கெடுதி) செய்வது யுக்தமன்று (ஸரியன்று). நீங்கள் உலகங்களை வ்ருத்தி செய்ய வேண்டுமென்று விரும்புகிறவர்களல்லவா? ப்ரஜைகளைப் பாதுகாப்பதற்காக ஏற்பட்டவர்கள். ஸர்வேச்வரன், ப்ரஹ்மதேவன் முதலிய ப்ரஜாபதிகள் அனைவர்க்கும் ப்ரபு. அவன் நீங்கள் கொளுத்துகிற வ்ருக்ஷங்களிலும் அந்தராத்மாவாய் நிறைந்திருப்பவன். ஆயினும் அவற்றின் விகாரம் (மாறுதல்) தீண்டப் பெறாதவன். அப்படிப்பட்ட பகவான் பித்ருக்களையும்,  தேவதைகளையும் உத்தேசித்துக் கொடுக்கும் அன்னத்தை விளைவிப்பவைகளான வ்ருக்ஷங்களையும், ஒளஷதிகளையும் முதலில் ஸ்ருஷ்டித்தான். பாதங்களால் ஸஞ்சரிக்கின்ற ஜங்கம பூதங்களுக்குக் காலில்லாத ஸ்தாவர பூதங்கள் ஆஹாரமாக ஏற்பட்டிருக்கின்றன. கையுள்ள இரண்டு கால் ப்ராணிகளுக்குக் கையில்லாத நாற்கால் ஜந்துக்கள் ஆஹாரமாகின்றன. ஸ்தாவரங்களில் ஒன்று மற்றொன்றுக்கு ஆஹாரமாகிறதில்லை. அவை ஜனங்களுக்கே ஆஹாரமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன. அவை எவ்வகை அபாரதமும் இல்லாதவை. ஆகையால் அவற்றிற்கு த்ரோஹம் செய்வது யுக்தமன்று. நீங்கள் இத்தனை காலமாய் தவம் செய்து பாபமற்றிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் தந்தையான ப்ராசீனபர்ஹியாலும், தவத்தினால் ஸந்தோஷம் அடைந்த பகவானாலும் ப்ரஜைகளைப் படைக்கும்படி நியமிக்கப்பட்டீர்கள். அந்த ப்ரஜைகளுக்கு ஆஹாரமான வ்ருக்ஷங்களை எப்படி தஹிக்கலாம்? ஆகையால் பெரியோர்கள் நடக்கும்படியான வழியைக் கைப்பற்றுவீர்களாக. உங்கள் தந்தையும், பாட்டனும், முப்பாட்டன் முதலிய மற்ற உங்கள் பெரியோர்களும் இந்த ஸன்மார்க்கத்திலேயே (நல்வழியிலேயே) நடந்தார்கள். கொழுந்துவிட்டெரிகின்ற கோபத்தை அடக்கிக் கொள்வீர்களாக. மற்றும் குழந்தைகளுக்குத் தாய், தந்தைகள் போலவும், கண்ணுக்கு இமைபோலவும், மடந்தையர்க்குக் கணவன் போலவும், பரமாத்ம ரஹஸ்யத்தை அறிய விரும்புகிற ஸந்நியாஸிகளுக்குப் பண்டிதன் போலவும், ஜங்கம ஸ்தாவர ரூபமான பூதங்களுக்கு மன்னவனே பந்துவும், ரக்ஷகனும், நண்பனுமாவான். ஆகையால் நீங்கள் உங்களை அடுத்த, இந்த வருஷங்களுக்கு த்ரோஹம் (கெடுதி) செய்யலாகாது. மற்றும், பகவான் ஸமஸ்த பூதங்களுடைய ஹ்ருதயங்களிலும் உள் புகுந்து நியமித்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் ஜகத்தெல்லாம் அவனுக்குச் சரீரமென்று பாவிப்பீர்களாக. இப்படி செய்வீர்களாயின் அந்த பகவான் உங்கள் விஷயத்தில் ஸந்தோஷம் அடைவான். இங்கனம் பகவானுடைய சரீரங்களாகிய இந்த வ்ருஷங்களுக்கு நீங்கள் த்ரோஹம் (கெடுதி) செய்வது யுக்தமன்று (ஸரியன்று). மனத்தில் திடீரென்று கிளம்பின பெருங்கோபத்தை ஆத்ம விசாரத்தினால் அடக்குவானாயின், அவன் ஸத்வாதி குணங்களைக் கடந்து க்ரமத்தில் ஸம்ஸார பந்தத்தினின்று விடுபடுவான். ஆகையால் நிரபராதிகளான வ்ருக்ஷங்களைக் கொளுத்தினது போதும். மிகுந்த வ்ருக்ஷங்களுக்கு உங்களிடத்தினின்று க்ஷேமம் உண்டாகுக. இந்த வ்ருக்ஷங்கள் இப்பெண்மணியைப் பாதுகாத்து வந்தன. இவள் அழகிய லக்ஷணங்கள் அமைந்தவள். மாரிஷையென்னும் பேருடையவள். இவளை நீங்கள் பார்யையாக அங்கீகரிப்பீர்களாக” என்றான். 

ஶ்ரீமத் பாகவதம் - 137

ஆறாவது ஸ்கந்தம் – மூன்றாவது அத்தியாயம்

(யமதூதர்கள் யமனைக்கேட்க அவன் அவர்களுக்கு ஸமாதானம் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- ஸம்ஸாரத்திலுள்ள ஜனங்களெல்லாம் தன்வசமாயிருக்கப்பெற்ற யமதர்மராஜன் விஷ்ணு தூதர்களால் தன் தூதர்கள் நிராகரிக்கப்பட்ட வ்ருத்தாந்தத்தை (விஷயத்தை) அவர்கள் சொல்லக் கேட்டு என்ன மொழிந்தான்? மஹர்ஷீ! யமனுடைய ஆஜ்ஞை ஓரிடத்தில் பங்கப்பட்டதாக (தடைப்பட்டதாக) இதுவரையில் எப்பொழுதும் கேட்டதில்லை. இவ்விஷயத்தில் எல்லோர்க்கும் ஸம்சயம் (ஸந்தேஹம்) உண்டாகக்கூடியது. முனிவரே! இந்த ஸந்தேஹத்தைத் தீர்ப்பவர் உம்மைவிட மற்றொருவரும் இல்லையென்று நிச்சயித்திருக்கிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- விஷ்ணு தூதர்களால் தம் முயற்சி தடைபடப்பெற்ற யமதூதர்கள் தம் ப்ரபுவாகிய யமனிடம் சென்று விண்ணப்பம் செய்தார்கள். “ப்ரபூ! இவ்வுலகத்தில் புண்யகர்மம், பாபகர்மம், மிச்ர (இரண்டும் கலந்த) கர்மம் என்று மூன்று வகையான கர்மங்களைச் செய்கிற ஜீவலோகத்திற்குக் கர்மபலன்களைக் கொடுக்கும் ப்ரபுக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்? தண்டனை விதிக்கும் ப்ரபுக்கள் பலர் உளராயின், ஸுகதுக்கங்கள் எவனுக்கு உண்டாகும்? எவனுக்கு உண்டாகாது? அந்த ப்ரபுக்கள் ஒருவர்க்கொருவர் ஒற்றுமையின்றி ஒருவன் கட்டளையை மற்றொருவன் தடுப்பானாயின், ஜீவலோகத்தில் ஒருவனுக்கும் ஸுகமாவது துக்கமாவது உண்டாக மாட்டாது. தண்டனை விதிக்கும் ப்ரபுக்கள் பலராயினும், அவர்கள் ஒத்திருப்பார்களாயின், ஜீவலோகத்திற்கு ஸுகதுக்கங்கள் உண்டாகக்கூடும். ஆயினும் அவர்களுடைய ப்ரபுத்வம் (ஆளுமை, யஜமானத்வம்) சில தேசங்களுக்கு ப்ரபுக்களாகிய ராஜாக்களின் ப்ரபுத்வம் (ஆளுமை, யஜமானத்வம்) போன்று முக்யமாயிராது. உலகத்தில் சிலர் பல ப்ராணிகளைத் தம் வசங்கொண்டு ப்ரபுக்களாய் இருக்கின்றார்கள். நீ அந்த ப்ராணிகளுக்கும் அவர்க்கு ப்ரபுக்களான மற்றவர்க்கும் மேலான ப்ரபு. நீ நன்மை, தீமைகளை ஆராய்ந்தறிந்தவன்; அவற்றை ப்ரஜைகளுக்கும் அறிவிப்பவன்; பாபம் செய்தவர்களுக்குத் தண்டனை விதிப்பவன். உன் கட்டளை பூலோகத்தில் இதுவரையில் தடைப்பட்டதில்லை. இப்பொழுது அற்புதமான உருவமுடைய நான்கு ஸித்த புருஷர்கள் வந்து உன் கட்டளையைத் தடுத்து விட்டார்கள். நாங்கள் ஒரு பாதகனை (பாவம் செய்தவனை) நரகத்திற்கு இழுத்துக்கொண்டு வருகையில், அந்த ஸித்தர்கள் வந்து பாசங்களை அறுத்துப் பலாத்காரமாக அவனை விடுவித்தார்கள். நாராயணாவென்று சொன்ன மாத்ரத்தில் பயப்படாதேயென்று விரைந்தோடி வந்தார்கள். அவர்கள் யாரென்பதை நாங்கள் அறிய விரும்புகிறோம். அவர்களை எங்களுக்குச் சொல்லவேண்டும்” என்றார்கள். 

வெள்ளி, 19 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 136

ஆறாவது ஸ்கந்தம் – இரண்டாவது அத்தியாயம்

(விஷ்ணு தூதர்கள் விஷ்ணுநாமத்தின் மஹிமையைக் கூறி அவனை விடுவித்தலும், அவன் தான் செய்த பாபத்தைப்பற்றி வருந்தி வைராக்யம் பெறுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- விஷ்ணுதூதர்கள் அந்த வார்த்தைகளைக் கேட்டு ந்யாய நிபுணர்களாகையால் யம தூதர்களை நோக்கி “ஆ! என்ன கஷ்டம் நேர்ந்தது? தர்ம தர்சிகளின் (தர்மத்தை அறிந்தவர்களின்) ஸபையை அதர்மம் தீண்டுகின்றதே! பாபமற்றவரும் தண்டிக்கத் தகாதவருமான புருஷர்மேல் தர்ம தர்சிகளின் (தர்மத்தை அறிந்தவர்களின்) ஸபையிலுள்ள உங்களைப் போன்றவர் வீணாகவே தண்டனை விதிக்கிறார்களே. இதைக் காட்டிலும் வேறு அதர்மம் என்ன வேண்டும்? ப்ரஜைகளைத் (மக்களைத்) தண்டிக்கும் அதிகாரத்திலிருப்பவர்களும் பக்ஷபாதமின்றி (ஓரவஞ்சனையின்றி) ஸமமாயிருப்பவர்களும் பிறருடைய தோஷத்தைப் போக்குவதில் ஸமர்த்தர்களும் ப்ரஜைகளுக்குத் தந்தையைப்போல் ஹிதம் செய்பவர்களுமாகிய உங்களைப் போன்றவர்கள் வைஷம்யம் செய்தால் (ஸமநிலையின்றி அநீதி செய்தால்), ப்ரஜைகள் மற்ற யாரைச் சரணம் அடைவார்கள். எல்லாம் அறிந்த பெரியோர்கள் எந்தெந்தக் கார்யங்களைச் செய்வார்களோ அந்தக் கார்யங்களையே தெரியாத ஜனங்களும் செய்யப் பார்ப்பார்கள். ஆகையால் தமது அனுஷ்டானத்தினால் உலகத்தில் தர்மத்தை நடத்துகின்றவர்களும் வேதத்தை அனுஸரித்து நடப்பவர்களுமான பெரியோர்கள் தண்டிக்கத் தகாதவர்களைத் தண்டிப்பது யுக்தமன்று. ஒருவன் மடியில் ஜனங்கள் நம்பிக்கையுடன் தலையை வைத்துப் படுத்து ஸுகமாய் உறங்குவார்களாயின், அங்கனம் விச்வாஸ பாத்ரமாயிருப்பவனும் (நம்பிக்கைக்கு இடமாயிருப்பவனும்) மன இரக்கமுடையவனுமாகிய அவன் அந்த ஜனங்களுக்கு எங்கனம் த்ரோஹத்தை (கெடுதியை) நினைக்கலாம்? யமன் அபராதமுள்ள ஜனங்களைத் தண்டிப்பானேயன்றி நிரபராதிகளைத் தண்டிக்க மாட்டானென்று ஜனங்கள் அவனிடத்தில் விச்வாஸமுற்றிருக்கிறார்கள் (நம்பிக்கை கொண்டுள்ளார்கள்). அவனும் ப்ராக்ருதனைப்போல (ஸாதாரண, கல்வி அறிவு இல்லாதவனைப் போல) வைஷம்யத்தினால் (ஸமநிலையின்றி அநீதியால்) நிரபராதிகளைத் தண்டிப்பானாயின், அவனுக்கு விச்வாஸ காதக (நம்பிக்கை த்ரோஹம்) தோஷம் வரும். “இந்த அஜாமிளன் பாபிஷ்டனன்றோ? இவனைப் பற்றி என்ன விசாரம்?” என்கிறீர்களோ? கேளுங்கள். 

புதன், 17 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 135

ஷஷ்ட ஸ்கந்தம் (ஆறாவது ஸ்கந்தம்) முதல் அத்தியாயம்

அஜாமிளோபாக்யானம் (அஜாமிளன் சரித்ரம்)

விஷ்ணு தூதர்களுக்கும் யம தூதர்களுக்கும் ஸம்வாதம்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவரே ! வர்ணாச்ரமங்களுக்குரிய கர்மங்களை அனுஷ்டிக்கையாலும் ஆத்மஸ்வரூபத்தை உள்ளபடி அறிகையாகிற ஆத்மஜ்ஞான யோகத்தினாலும் உதவி செய்யப்பெற்ற பக்தியோகத்தினால் பரமபுருஷனுடைய அனுக்ரஹத்தைப் பெற்று ஸம்ஸாரத்தினின்று விடுபடுகையாகிற மோக்ஷத்தின் ஸ்வரூபத்தை முன்னமே விவரித்துச் சொன்னீர். ப்ரக்ருதி ஸம்பந்தம் தீரப்பெறாமல் ஸுகதுக்கங்களை அனுபவிப்பதற்காக ஸத்வ, ரஜஸ், தமோ குணமயமான தேஹங்களை அடிக்கடி பெறுகையாகிற ப்ரவ்ருத்தி மார்க்கத்தையும் மொழிந்தீர். அதர்மங்களைச் செய்கையால் விளையக்கூடிய பலவகை நரகங்களையும், முதன்மையான ஸ்வாயம்புவ மன்வந்தரத்தையும், அந்த ஸ்வாயம்புவ மனுவின் புதல்வர்களான ப்ரியவரதன், உத்தானபாதன் ஆகிய இவர்களின் வம்சத்தையும், அவரது சரித்ரங்களையும், த்வீபங்கள் அவற்றிலுள்ள வர்ஷங்கள், ஸமுத்ரங்கள், பர்வதங்கள், நதிகள், உத்யான வனங்கள், ஜம்பு முதலிய வ்ருக்ஷங்கள் பூமண்டலம் ஆகிய இவற்றின் நிலைமையையும், அவற்றின் பிரிவுகளையும், அடையாளங்களையும், அளவுகளையும், நக்ஷத்ரமண்டலம் முதலியவை அடங்கின த்யுலோகத்தின் ஸ்வரூபத்தையும், அதலம் முதல் பாதாளம் வரையிலுமுள்ள பூமியின் விவரங்களையும் ப்ரஹ்மதேவன் படைத்தபடியே விவரித்து மொழிந்தீர். பேரறிஞரே! கொடிய பல யாதனைகளுக்கு (நரக வேதனைகளுக்கு) இடமான நரகங்களை இப்பொழுதே மனுஷ்யன் எந்தக் காரணத்தினால் அடையாமல் தப்பித்துக்கொள்ள முடியுமோ அதை எனக்கு மொழிவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மனத்தினாலும், வாயாலும், காயத்தினாலும் செய்த பாபத்தை இவ்வுலகத்திலேயே ப்ராயச்சித்தாதிகளால் போக்கிக்கொள்ளவில்லை என்றால், அவன் மரணம் அடைந்த பின்பு என்னால் மொழியப்பட்டவைகளும் பொறுக்கமுடியாத பல யாதனைகளுக்கு (நரக வேதனைகளுக்கு) இடங்களுமாகிய நரகங்களை அவச்யம் அனுபவித்தே தீருவான். இது நிச்சயம். ஆகையால் மரணம் அடைவதற்கு முன்னமே மனோவாக்காயங்கள் என்கிற மூன்று கரணங்களும் வலிவுடன் இருக்கும் பொழுதே இவ்வுலகத்திலேயே தான் செய்த பாபத்திற்கு ப்ராயச்சித்தத்தைப் பற்றி யத்னம் (முயற்சி) செய்ய வேண்டும். ரோகங்களின் (வியாதிகளின்) நிதானத்தை (காரணத்தை) அறிந்த வைத்யன் அந்த ரோகங்களின் பலாபலத்தை அனுஸரித்து அவற்றிற்குச் சிகித்ஸை (வைத்யம்)  செய்வதுபோல் பாபங்களின் குரு (கொடியவை) லாகவங்களை (எளியன) ஆலோசித்து அவற்றிற்கு ஏற்பட்ட ப்ராயச்சித்தங்களில் முயற்சி கொள்ள வேண்டும்.

வியாழன், 11 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 134

ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்தாறாவது அத்தியாயம்


(அதற்குக் கீழுள்ள நரகத்தின் நிலைமையைக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹர்ஷி! இவ்வுலகங்கள் ஸுக துக்கங்களின் தாரதம்யத்தினால் (ஏற்றத்தாழ்வுகளால்) ஒன்றுக்கொன்று விலக்ஷணமாயிருக்கும் (வேறுபட்டிருக்கும்) என்று மொழிந்தீர். அது எப்படிப் பொருந்தும். ஜீவாத்மாக்கள் ஒருவாறாகச் செய்யும் புண்யகர்மங்களால் பூலோகம் முதலிய லோகங்களை அடைகையில், சிலருக்கு ஸுகமேயென்றும், சிலருக்கு துக்கமேயென்றும், சிலருக்கு இரண்டும் கலந்திருக்குமென்றும் சொன்னதற்குக் காரணமென்ன? தெரியவில்லை. அதை மொழிவீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அனைவரும் பூமி முதலிய லோகங்களைப் பெறுதற்காகச் செய்யும் தர்மங்கள் ஒரேவகையாய் இருந்தாலும், அவற்றைச் செய்யும் ஜீவாத்மாக்கள் ஸத்வம் ரஜஸ் தமஸ் என்கிற மூன்றுவகை குணங்கள் உடையவர்களாகையால், அவர்களுடைய ச்ரத்தைகளும் அக்குணங்களால் மூன்று வகைப்பட்டிருக்கும் ஆகையால் கர்மங்களின் பலன்களாகிய எல்லா லோகங்களும் எல்லோர்க்கும் தாரதம்யம் (ஏற்றத்தாழ்வுகள்) உடையவைகளாகவே உண்டாகின்றன அங்கனமே சாஸ்த்ரங்களில் இதைச் செய்யலாகாதென்று நிஷேதிக்கப்பட்ட கார்யங்களைச் செய்கையாகிற அதர்மமும் அதைச் செய்பவனும் அவனுடைய ச்ரத்தையும் பலவாறாயிருக்குமாகையால் அந்த அதர்மத்தின் பலனான துக்கமும் தாரதம்யத்தை (ஏற்றத்தாழ்வுகளை) உடையதாகவே இருக்கும். அநாதியான (ஆரம்பம் இது என்று சொல்ல முடியாமல் தொன்று தொட்டு வரும்) அஜ்ஞானத்தினால் பலன்களை விரும்பிச் செய்யும் பாபகர்மங்கள் பலவாகையால் அவற்றின் பலன்களான கதிகளும் எல்லையற்றிருக்கும். அவற்றில் முக்யமானவற்றைச் சொல்லுகிறோம் கேட்பாயாக.

ஶ்ரீமத் பாகவதம் - 133


ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்தைந்தாவது அத்தியாயம்

(பாதாளத்தினடியில் பூமியைத் தரித்துக் கொண்டிருக்கிற ஆதிசேஷனுடைய நிலைமையைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்தப் பாதாள விவரத்தின் (பிளவின்) அடிப்பாகத்தில் முப்பதினாயிரம் யோஜனைகளுக்கு அப்புறத்தில் தாமஸாஹங்காரத்தை (பகவான் ஸ்ருஷ்டி செய்யும்போது மூலப்ரக்ருதியை பலவாறாக மாறுபாடு அடையச் செய்கிறான். மூலப்ரக்ருதி முதலில் மஹத் என்னும் தத்வமாக மாறியது. மஹத் தத்வத்திலிருந்து அஹங்காரம் என்னும் தத்வம் உண்டாயிற்று. அஹங்காரம் ஸாத்விக அஹங்காரம், ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம் என்று மூன்று வகைப்படும். ஸாத்விக அஹங்காரத்திலிருந்து பதினோறு இந்த்ரியங்கள் தோன்றின; தாமஸ அஹங்காரத்திலிருந்து பஞ்ச பூதங்கள் தோன்றின. ராஜஸ அஹங்காரம் மற்ற இரண்டு அஹங்காரங்களுக்கும் உதவியாய் இருக்கும்) அதிஷ்டானம் (நியமனம்) செய்யும் பகவானுடைய அம்சமாகிய அனந்தன் இருக்கிறான். இந்திரியங்களுக்குப் புலப்படாத வஸ்துக்களைப் பற்றின அறிவையும் ஜீவாத்மாக்களுக்கு விளைப்பதாலும், ஆத்மாவினிடத்தில் “நான்” என்னும் சித்தவ்ருத்தியை (எண்ணத்தின் தொடர்ச்சியை) உண்டாக்குவதாலும் அவனை ஸங்கர்ஷணனென்று ஸாத்வதமென்கிற பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தை அறிந்த பெரியோர்கள் சொல்லுகிறார்கள். அவன் அளவிடமுடியாத பெரிய சரீரமுடையவன். ஷாட்குண்யபூர்ணன். ஆயிரம் தலைகளுடையவன். பூமண்டலமெல்லாம் அவனுடைய ஒரு சிரஸ்ஸில் தரிக்கப்பட்டுக் கடுகு போல் புலப்படுகின்றன. ஆகையால் அவனுக்கு அனந்தனென்னும் பேர் யதார்த்தமானது. அந்த ஸங்கர்ஷண பகவான் த்விபரார்த்தம் (இரண்டு பரார்த்தங்களும்) முடிந்து {ப்ரஹ்மாவின் ஆயுளின் அளவு த்விபரார்த்தம் எனப்படும். க்ருதயுகம் 1728000 மனித வருடங்கள் த்ரேதாயுகம் 1296000 மனித வருடங்கள் த்வாபரயுகம் 864000 மனித வருடங்கள் கலியுகம் 432000 மனித வருடங்கள். ஆக இவை நான்கும் சேர்ந்த ஒரு சதுர்யுகம் 4320000 மனித வருடங்கள். 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு பகல்; அது போல் மற்றுமொரு 1000 சதுர்யுகம் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு இரவு; ஆக 2000 சதுர்யுகங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். அதாவது 4320000 * 2000 = 864,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு நாள். 864,00,00,000 * 360 = 311040,00,00,000 மனித வருடங்கள் சதுர்முக ப்ரஹ்மாவின் ஒரு வருடம். ப்ரஹ்மாவின் ஆயுள் 100 வருடங்கள்; அதாவது 3,11,04,000 கோடி மனித வருடங்கள். இதுவே த்விபரார்த்தம் எனப்படும்.} 

செவ்வாய், 9 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 132

ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

(ஸூர்யனுக்குக் கீழுள்ள ராஹு முதலியவர்களின் நிலைமையையும், பூமிக்குக் கீழுள்ள அதலாதிலோகங்களின் நிலைமையையும் கூறுதல்) 

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸூர்யனுக்குக் கீழ் பதினாயிரம் யோஜனை தூரத்தில் ராஹு நக்ஷத்ரம் போல் ஸஞ்சரிக்கிறானென்று சிலர் சொல்லுகிறார்கள். இவன் பகவானுடைய அனுக்ரஹத்தினால் தேவத்வத்தையும் க்ரஹமாயிருக்கையையும் பெற்றான். இவன் ஸிம்ஹிகையின் புதல்வன். பாப புத்தியுள்ள அஸுரர்களிலும் அதமனாயிருப்பவன் (மிகக் கீழ்பட்டவனாயிருப்பவன்). இவன் அத்தன்மை பெறுதற்கு உரியவனல்லன். ஆயினும் பகவானுடைய க்ருபையினால் பெற்றான். இவனுடைய பிறவியையும் செயலையும் பற்றி மேல் சொல்லப் போகிறோம். நமக்கு ப்ரத்யக்ஷமாய் எரிகின்ற ஸூர்யனுடைய மண்டலம் பதினாயிரம் யோஜனை விஸ்தாரமுடையதென்றும், சந்த்ர மண்டலம் பன்னீராயிரம் யோஜனை விஸ்தாரமுடையதென்றும், ராஹுமண்டலம் பதின்மூவாயிரம் யோஜனை விஸ்தாரமுடையதென்றும் சொல்லுகிறார்கள். இந்த ராஹு அம்ருதபான ஸமயத்தில் ஸூர்யனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நுழைந்து மறைந்தான். ஆகையால் அவர்கள் அவனைக் காட்டிக்கொடுத்தார்கள். அதனால் அவன் அவர்களிடத்தில் மாறாத வைரம் (பகைமை) உடையவனாய் இருக்கிறான். 

ஶ்ரீமத் பாகவதம் - 131

ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(த்ருவமண்டலத்தின் ஸ்வரூபத்தைக் கூறுதலும், சிம்சுமார சக்ரஸ்வரூபனாகிய பரமபுருஷனுடைய நிலைமையை விவரித்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ரிஷி மண்டலத்திற்கு மேல் பதின்மூன்று லக்ஷம் யோஜனை தூரத்தில் ப்ரஸித்தி பெற்றதும் சிறப்புடையதுமாகிய ஸ்ரீமஹாவிஷ்ணுவின் ஸ்தானமென்று சொல்கிறார்கள். உத்தானபாதனுடைய பிள்ளையும் மஹாபாகவதனுமாகிய த்ருவன் அவ்விஷ்ணுவின் ஸ்தானத்தில் இருக்கிறான். அக்னி, இந்த்ரன், கச்யப ப்ரஜாபதி, யமன் ஆகிய இவர்கள் ஒரே காலத்தில் சேர்ந்து அவனை இப்பொழுதும் வெகுமதியுடன் ப்ரதக்ஷிணம் செய்கிறார்கள். அவன் கல்பாந்த ஜீவிகளான புருஷர்களுக்கு ஆச்ரயமாயிருப்பவன். அவனுடைய ப்ரபாவத்தை முன்னமே மொழிந்திருக்கிறோம். அவன், கண்கொட்டாமல் விழித்துக் கொண்டிருப்பதும் அறியக் கூடாத வேகமுடையதும் பகவத் ஸ்வரூபமுமாகிய கால சக்ரத்தினால் சுற்றப்படுகிற ஸமஸ்தமான ஸாதாரண நக்ஷத்ரக் கூட்டங்களுக்கும் ஸூர்யன் முதலிய க்ரஹங்களுக்கும் அச்வினி முதலிய விசேஷ நக்ஷத்ரங்களுக்கும் மற்றுமுள்ளவற்றிற்கும் மொட்டை மரம்போல் அசையாத ஆதாரமாய் ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டு ஸர்வகாலமும் விளங்குகிறான். 

சனி, 6 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 130

ஐந்தாவது ஸ்கந்தம் - இருபத்து இரண்டாவது அத்தியாயம்

(சந்த்ர சுக்ராதிகளின் ஸ்தானத்தைக் கூறுதல்)

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- பகவத் ஸ்வரூபனாகிய ஸூர்யன் மேருவையும் த்ருவனையும் ப்ரதக்ஷிணமாய்ச் சுற்றுகிறானென்றும், நக்ஷத்ரங்களுக்கு எதிர்முகமாய் ராசிகளில் ஸஞ்சரிக்கிறானென்றும் சொன்னீர். இவ்விரண்டும் ஒன்றோடொன்று பொருந்தவில்லை. இது பொருந்தும் விதத்தை அறிய விரும்புகிறேன்.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- குயவனுடைய சக்ரம் சுற்றும் பொழுது அதிலிருக்கிற எறும்பு முதலியவைகளும் அதனுடன் சுழலுகின்றன. அதுவன்றித் தாமும் போகின்றன. ஓரிடத்தில் இருக்கின்றவை சிறிது நேரத்துக்குள் மற்றோரிடத்தில் புலப்படுகின்றனவாகையால் சக்ரத்துடன் சுற்றுவது தவிர அவற்றிற்கு வேறு நடையாட்டமும் உண்டென்பதில் ஸந்தேகமில்லை. இங்கனமே நக்ஷத்ர ராசிகளோடுகூட த்ருவனையும் மேருவையும் ப்ரதக்ஷிணமாய்ச் சுற்றுகிற காலசக்ரத்துடன் அதிலுள்ள ஸூர்யன் முதலிய க்ரஹங்கள் சுற்றிக்கொண்டிருப்பினும் ஒரு நக்ஷத்ரத்திலும் ஒரு ராசியிலுமிருக்கிற அவை மற்றொரு நக்ஷத்ரத்திலும் மற்றொரு ராசியிலும் புலப்படுகின்றனவாகையால் அவற்றிற்கு வேறு கதியும் உண்டென்பதில் ஸந்தேஹமில்லை. ஷாட்குண்ய பூர்ணனும் ஆதிபுருஷனுமாகிய ஸாக்ஷாத் நாராயணனே இந்த ஸூர்ய ஸ்வரூபனாய் வேதங்கள் தன் ஸ்வரூப குணாதிகளை விவரித்துச் சொல்லவும் பண்டிதர்கள் தன்னை உபாஸிக்கவும் பெற்றுக் கர்மங்களின் சுத்திக்காகத் தன்னைப் பன்னிரண்டு விதமாகப் பிரித்து இவ்வுலகங்களின் க்ஷேமத்திற்காக வஸந்தம் முதலிய ஆறு ருதுக்களில் குளிர், வெய்யில், காற்று, மழை, முதலிய ருது குணங்களை விளைக்கின்றான். உலகத்திலுள்ளவர்கள் வேத சாஸ்த்ரத்தில் சொன்ன வர்ணாச்ரம ஆசாரங்களை அனுஸரித்து யஜ்ஞாதி கர்மங்களாலும் அத்தகைய உபாஸன விசேஷங்களாலும் இந்த ஆதித்ய ஸ்வரூபனாகிய பகவானை ஆராதித்து அனாயாஸமாகச் சீக்ரத்தில் ஸ்வர்க்க மோக்ஷாதி ரூபமான நன்மையைப் பெறுகிறார்கள். 

செவ்வாய், 2 ஜூன், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 129

ஐந்தாவது ஸ்கந்தம் – இருபத்தோராவது அத்தியாயம்

(ஸூர்யகதியை நிரூபித்தல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பூமண்டலத்தின் நிலைமை இவ்வளவுதான். த்யுலோகத்தின் பரிமாணமும் இவ்வளவேயென்று அதை அறிந்த பெரியோர்கள் சொல்லுகிறார்கள். கோதுமை முதலியவற்றை அறைக்கும் பொருட்டுச் செய்த கல் யந்திரத்தின் அடிப்பாகத்தின் அளவைச் சொன்னால் அதனோடொத்த அதன்மேல் பாகத்தின் அளவையும் அறியலாமல்லவா? இன்னமும் இரண்டு பாகமாயிருக்கின்ற உளுந்து பயறு முதலியவற்றின் அடிப்பாகம் இவ்வளவென்று தெரிந்தால் அதன் மேல்பாகமும் அவ்வளவென்று தெரிந்து கொள்ளலாமல்லவா? அங்கனமே ப்ரஹ்மாண்டத்தின் அடிபாகமாகிய பூமண்டலத்தின் அளவைச்சொன்ன மாத்ரத்தினால் அதன் மேல்பாகமாகிய த்யுலோகத்தின் அளவையும் சொன்னாற் போலவேயாகின்றது. அந்தப் பூமண்டலத்திற்கும் த்யுமண்டலத்திற்கும் இடையில் அந்தரிக்ஷலோகம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.